கேள்வி- எனக்கு வயது 30. ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?
ஆர். குமார் கொழும்பு
பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.
ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.
கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்லாப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.
தூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.
உங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோடு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.
எமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.
இங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.
ஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.
உங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.
ஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.
ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.
ஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.
டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்