Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இருதய நோய்’ Category

“இதென்ன புது நோயாக இருக்கு”

வந்தவர் தனது கையில் இருந்த ரிப்போட்டை என்னிடம் நீட்டினார். இருதய நோய் மருத்துவ நிபுணருக்கு கொடுத்த கடிதத்திற்கு பதிலாக அவர் கொடுத்திருந்த சிட்டை அது.

வழமையாக உயர் இரத்த அழுத்தத்திற்கு மருந்துகள் சாப்பிட்டு வருகிறார். அண்மையில் செய்த ஈசிஜி பரிசோதனையில் சில மாற்றங்கள் தெரிந்ததால் இருதய நோய் மருத்துவ நிபுணரிடம் அனுப்ப நேர்ந்தது. ECHO Cardiogram உட்பட பரிசோதனைகள் செய்த பின்னர் அவர் கொடுத்த குறிப்பில் Hypertensive heart disease என எழுதியிருந்தது. உயர் இரத்த அழுத்த இருதய நோய் என நாம் தமிழில் சொல்லலாம்.

பிரசரால் வரும் ஹாட் வருத்தம் என்று பேச்சுத் தமிழிலும் சொல்லலாம்.
Black tonometer and heart isolated on white

உயர் இரத்த அழுத்த இருதய நோய்

பிரஷர் எனப்படும் உயர் இரத்த அழுத்தம் பற்றி எல்லோரும் அறிவார்கள். ஆனால் உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி தெரிந்திருக்குதோ தெரியாது.

உண்மையில் இது ஒரு தனியான நோய் அல்ல. உயர் இரத்த அழுத்தத்தினால் இருதயத்தில் ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளை உள்ளடக்குகிறது. அவற்றில் முக்கியமானவை மூன்று ஆகும்.

இருதயத்திற்கான இரத்த ஓட்டத்தில் பாதிப்பும் அதனால் நெஞ்சு வலி மாரடைப்பு போன்றவை ஏற்படுவது, இருதயத் தசைநார்கள் தடிப்படைவது, இருதயத்தின் செயற்திறன் பாதிப்படைவது ஆகியவையே அவை.

உயர் இரத்த அழுத்த இருதய நோய் பற்றி மருத்துவர்கள் இப்பொழுது அதிகம் கவனம் எடுப்பதற்குக் காரணம் என்ன? உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் மரணத்தத்தைத் தழுவுவற்குக் காரணமாக இருப்பது இந்த உயர் இரத்த அழுத்த இருதய நோய் என்பதாலேயே ஆகும்.

வயதானவர்களை எடுத்துக் கொண்டால் அவர்களில் 68% மானவர்களுக்கு இருதய வழுவல் ஏற்படுவதற்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய்தான் காரணம் என ஆய்வுகள் கூறுகின்றன.

உயர் இரத்த அழுத்தம்

உயர் இரத்த அழுத்தம் என்பது அறிகுறிகளற்ற நோய். வெளிப்படையாக எந்த அறிகுறிகளையும் ஏற்படுத்தாது. அதனால் பாரதூரமான பாதிப்புகள் ஏற்படும்போதுதான் நோயாளிக்கு தெரிய வரும்.  ஆனால் அது உயர் இரத்த அழுத்த இருதய நோயை மட்டும் கொண்டுவருவதில்லை. கண் பாதிப்பு, சிறுநீரகப் பாதிப்பு, பக்கவாதம் போன்ற வேறு பிரச்சனைகளையும் கொண்டு வருகிறது.

எனவே ஒவ்வொருவரும் தங்கள் பிரசரை அறிந்து வைத்திருப்பது அவசியம். சாதாரண பிரஷர் என்பது 120/80 mmHg ஆகும். இவ்வாறு சாதாரண அளவில் பிரஷர் உள்ளவர்களும் தங்கள் பிரஷரை குறைந்தது 2 வருடங்களுக்கு ஒரு முறையாவது அளந்து பார்ப்பது அவசியமாகும். சற்று அதிகம் உள்ளவர்கள் (120/80 – 139/89) தங்கள் பிரஷரை வருடத்திற்கு ஒரு முறையாவது அளந்து பார்க்க வேண்டும்.

அதைவிட அதிகம் எனில் மருத்துவ ஆலோசனையுடன் சிகிச்சை தேவைப்படும். பிரஷருக்காக மருத்துவர்கள் சிபாரச்சு செய்யும் மருந்துகளை ஒழுங்காக உபயோகிப்பது அவசியம். தாங்களாவே அளவைக் கூட்டவோ குறைக்கவோ கூடாது. தலையிடி எனச் சொல்லி மருந்துகளின் அளவைக் கூட்டுபவர்களும், தலை உலாஞ்சுகிறது எனக் குறைப்பவர்களும் இருக்கிறார்கள். அவ்வாறு செய்வது தவறு.

மருத்துவர்கள் பிரசரை அளந்து பார்த்து அதற்கு ஏற்பவே மாற்றங்கள் செய்வார்கள்.

நீரழிவு, கொலஸ்டரோல் பிரச்சனைகளும் சேர்ந்திருப்பவர்கள் மேலும் அக்கறையோடு தங்கள் பிரஷரைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது முக்கியமாகும்.

இருதயத்திலும் இரத்தக் குழாய்களிலும் ஏற்படும் பாதிப்புகள்

பிரஷரால் இருதயத்தில் பாதிப்புகள் ஏற்படுவது எவ்வாறு?
பிரஷர் அதிகரிக்கும் போது இருதயத்திற்கான வேலைப் பளு அதிகரிக்கிறது. அதிக அழுத்தத்தில் இரத்தத்தை பம் பண்ணுவதற்காக இருதயத்தின் தசைகள் அதிக பிரயாசை எடுக்க நேர்கிறது. இதனால் அதன் தசைகள் விரிவடைந்து தடிக்கின்றன. இதனால் முதலில் பருமனடைவது இடது கீழ் அறையான வென்ரிக்கில் (Ventricle) ஆகும். இதை LVH என மருத்துவத்தில் சொல்வோம். இருதயத்தின் ஏனைய பகுதிகளிலும் காலகதியில் பாதிப்புகள் ஏற்படவே செய்யும்.

ans7_lvh

இவ்வாறு இருதயத்தின் தசைநார்கள் தடிப்படையும்போது பலவித பாதிப்புகள் ஏற்படுகின்றன. முக்கியமானது இருதயத்தின் தசைகளுக்கு இரத்தத்தை வழங்கும் குருதிக் குழாய்களில் தடிப்பு ஏற்படுவதாகும்.

அதனால் இருதயத்தின் தசைகளுக்கு போதிய இரத்தம் கிடைக்காது. இது நெஞ்சில் வலி, அழுத்தம், களைப்பு போன்ற அறிகுறிகளைக் கொண்டு வரலாம். இவை அஞ்சைனா மற்றும் மாரடைப்பை ஒத்த அறிகுறிகளாகும்.

இதைத் தவிர இருதயத்தின் தசைகள் தடிப்படையும்போது இருதயத்தின் நரம்புகளும் பாதிப்படையும். இதனால் இருதயத்தின் துடிப்பு லயத்தில் மாற்றங்கள் ஏற்படலாம்.

இருதய  அறைகளின் வால்வுகளிலும் பாதிப்பு ஏற்படலாம்
உயர் அழுத்த நோயானது எவ்வாறு வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லையோ அதே போல உயர் இரத்த அழுத்த இருதய நோயும் ஆரம்ப நிலையில் துல்லியமான அறிகுறிகளை காட்டுவதில்லை.

ஆனால் காலம் செல்லச் செல்ல கீழ்கண்ட பாதிப்புகள் ஏற்படும்.

இருதய செயலிழப்பு

இந்நோயால் இருதயத்தின் தசைகள் தடிப்படையும் என்பதைப் பார்த்தோம். இது தீவிரமாகி இருதயத்தின் செயற்பாடு பாதிப்புறும் வரை வெளிப்படையான அறிகுறிகளைக் காட்டுவதில்லை.

CVS_heart_failure

இருதயத்தின் செயற்பாடு குறைவதை இருதய செயலிழப்பு எனவும் சொல்வார்கள். பெதுவாக ‘ஹார்ட் பெயிலியர்’ (heart failure)  என்பார்கள்.

இதன் முக்கிய அறிகுறியானது மூச்சு விடுவதில் சிரமம் ஆகும். இத்தகைய இளைப்பு அல்லது மூச்சுத் திணறல் ஆனது பொதுவாக ஏதாவது வேலை செய்யும்போது ஏற்படும். நடக்கும்போது, படியேறும்போது, பாரம் தூக்குவது போன்ற உடலுக்கான முயற்சிகளின் போது ஏற்படும். ஆனால் நோய் தீவிரமடையும்போது எதுவித உடல் முயற்சிகள் இல்லாது படுத்திருக்கும்போது கூட இளைப்பு ஏற்படும்.

ஆரம்ப நிலையில் நோயாளிகள் இதனை இளைப்பு என்று நினைக்கமாட்டார்கள். சாதாரண களைப்பு என்றுதான் நினைப்பார்கள். போசாக்கு இல்லாததால் ஏற்பட்ட களைப்பு என்றும் எண்ணுவார்கள். ஆனால் களைப்பு என்பது உடல் நோய்களால் மட்டும் வரும் என்றில்லை. மனம் சோர்ந்திருந்தாலும் களைப்பு ஆகவே உணர்வார்கள். நோயாளிகள் களைப்பு என்று சொன்னால் அது எதனால் ஏற்படுகிறது என்பதை மருத்துவர்கள் ஆராய்ந்து கண்டறிய நேரும்.

சாய்ந்து படுத்திருக்க முடியாது எழுந்து படுக்கையில் உட்கார வேண்டிய நிலையும் சிலருக்கு ஏற்படுவதுண்டு. இதனால் தலையணைகளை வைத்து தலையையும் நெஞ்சுப் பகுதியையும் உயர்த்திப் படுப்பார்கள்.

Elderly Woman in Hospital Bed

ஆனால் ஆஸ்த்மா நோயிலும் இத்தகைய நிலை ஏற்படலாம் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

ஆயினும் காலம் செல்லச் செல்ல கால் வீக்கம், உடல் எடை அதிகரித்தல், ஈரல் வீக்கம் அதன் காரணமாக வயிற்று வலி போன்ற அறிகுறிகளும் இருதய செயலிழப்பினால் தோன்றும்.

இருதய வலிகள்

அஞ்சைனாவை ஒத்த நெஞ்சு வலியானது உயர் இரத்த அழுத்த இருதய நோயாலும் ஏற்படும். நெஞ்சில் பாரம், அழுத்துவது அல்லது இறுக்குவது போன்றவை அத்தகையவையாகும். இந்த வலியானது கழுத்திற்கு, தாடைக்கு, இடது புஜத்திற்கு அல்லது முதுகின் மேற்புறத்திற்கு பரவுவது போல இருக்கலாம். மாரடைப்பு போல் அல்லாமல் அஞ்சைனா வலியானது 10-15 நிமிடங்களுக்குள் தணிந்துவிடும்.

Angina

ஆனால் வலி இல்லாமல் நடக்கும்போது இளைப்பு, கடுமையான களைப்பு போன்ற அறிகுறிகளுடனும் அஞ்சைனா வலி வரக் கூடும். பெண்களிலும், நீரிழிவு உள்ளவர்களிலும் வலி இல்லாது இத்தகைய அறிகுறிகளுடன் வருவது அதிகம்.
மாரடைப்பும் வரக் கூடும்.

இருதயத் துடிப்பின் ஒழுங்கின்மை.

இருதயமானது ஒரு லயத்தில் தொடர்ந்து துடித்துக் கொண்டிருக்கும். ஆனால் அவற்றின் லய ஒழுங்கு மாறுவதும், தாறுமாறாக அடிப்பதும் நிகழக் கூடும். மருத்துவத்தில் Cardiac arrhythmias    என்பார்கள். இது நெஞ்சுப் படபடப்பு, திடீர் மயக்கம், நெஞ்சு வலி போன்ற பல்வேறு அறிகுறிகளுடன் வெளிப்படக் கூடும். திடீர் மரணம் ஏற்படுவதும் உண்டு.

cardiac-arrhythmiasfig1_large

உயர் இரத்த அழுத்த இருதய நோயால் இவ்வாறான பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன.

205257

தடுக்கும் வழிகள் எவை?

ஒருவருக்கு உயர் இரத்த அழுத்த இருதய நோய் ஏற்படுவதற்குக் காரணம் அவர் தனது பிரஸரை கட்டுப்பாட்டில் வைத்திருக்காமையே. எனவே ஒவ்வொருவரும் உயர் இரத்த அழுத்த நோய் (பிரஷர்) என்றால் என்ன? அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் யாவை என்பது பற்றி அறிந்திருக்க வேண்டும்.

இந் நோயால் பல ஆபத்தான விளைவுகள் ஏற்படுகின்ற காரணத்தால் அடுத்த வருடத்தை உயர் இரத்தம் தொடர்பான ஆண்டாக உலக சுகாதார ஸ்தாபனம் அறிவித்து இருக்கிறது.

ஒழுங்கான போசாக்கான உணவு முறைகள் மூலமும் தினமும் உடற் பயிற்சி செய்வதன் மூலமும் உயர் இரத்த அழுத்தம் ஏற்படாமல் தடுக்க முயல வேண்டும்.

jch497725.tab3
உயர் இரத்த அழுத்த நோய் ஏற்கனவே இருப்பவர்கள் பின்வரும் நடைமுறைகள் மூலம் தங்கள் நோயைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும்

  • கொழுப்பு, உப்பு போன்றவற்றை தங்கள் உணவில் குறைத்து, பழவகைகளையும் நார்ப்பொருள் உள்ள உணவுகளையும் அதிகம் உண்ண வேண்டும்.
  • தினமும் உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். அல்லது தினமும் குறைந்தது 30 நிமிடங்களுக்கு உடற் பயிற்சி செய்ய வேண்டும்.
  • தங்கள் எடையைச் சரியான அளவில் பேண வேண்டும்.
  • தங்களுக்கு சிபார்சு செய்யப்பட்ட மருந்துகளை தவறாது ஒழுங்கான முறையில் உட்கொள்ள வேண்டும்.
  • புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »