Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இருதய பை பாஸ் சர்ஜரி’ Category

>“இதுக்கு என்ன செய்யலாம் டொக்டர். பார்க்கவும் அசிங்கமாயிருக்கு. வலி சகிக்கேலாதாம். தொடர்ந்து தொல்லை தருகிறது”.

நான் அதிர்ச்சி அடையும் வண்ணம் சட்டென தனது மேல் சட்டையை பட்டெனக் கழற்றினார்.

அனுமான் நெஞ்சைக் கிழித்தபோது அங்கு இராமனும் சீதையும் இருந்தார்களாம். இவர் கழற்றிய போது கண்களை உறுத்தியது. வாளால் வெட்டி நெஞ்சைப் பிரித்தது போன்ற பாரிய மறு இருந்ததைக் கண்டேன்.

ஆம். அவர் இருதய பை பாஸ் சிகிச்சை செய்திருக்கிறார். ஒரிரு நாட்களில் மாரடைப்பால் இறைவனடி சேர வேண்டியவருக்கு 10 வருடமாவது லீஸ் கிடைத்திருக்கிறது. சந்தோசமான விடயம்தானே. அதை மறந்துவிட்டு வலியைத் தூக்கிப்பிடிக்கிறார்.

“உயிர் தப்பியதற்கு சந்தோசப்படாமல், இந்தச் சாதாரண வலிக்காகவும், மறுவின் அசிங்கத்திற்காகவும் கவலைப்படுகிறீரே” என என்னால் நக்கல் அடிக்க முடியவில்லை.

மனிதர்களின் மனஉணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டியது டொக்டர்களின் கடமை அல்லவா?

Dr.A.G.K.Gokhale

அண்மையில் இருதய சத்திரசிகிச்சை சம்பந்தமான கருத்தரங்குக் சென்றிருந்தேன். அங்கு மிகவும் தன்நம்பிக்கையோடும், ஆதாரங்கள், தரவுகளோடும் பேசிய இளம் இருதய சத்ரசிகிச்சை நிபுணர் Dr.A.G.K.Gokhale யின் பேச்சு எமக்கு நம்பிக்கை ஊட்டியது. Coronary bypass Surgery செய்வது இவர் போன்றவர்களின் கையில் சிக்கலற்றதென எண்ணத் தோன்றியது.

வழமையாக நெஞ்சுக்குக் குறுக்காக மார்பு எலும்புகளை சுமார் 20-25 செமீ நீளத்திற்கு வெட்டியே இந்த சத்திரசிகிச்சையை மேற் கொள்வார்கள். எலும்புகள் வெட்டுறுவதால் சத்திரசிகிச்சை செய்தவிடத்தில் நீண்ட நாட்களுக்கு வலி நீடிக்கும்.

ஆனால் இந்த முறையில் (Minimally invasive Coronary bypass Surgery)இடது பக்க மார்பில்; 5-6 செமீ அளவிற்கு மட்டுமே வெட்டுவார்கள். அத்துடன் நெஞ்சு எலும்புகள் வெட்டுப்படுவதில்லை. இதனால் வலி நீண்ட நாட்களுக்கு நீடிப்பதில்லை.

வழமையான சத்திரசிகிச்சையில் மிக நீண்ட வெட்டுக்காயம் ஏற்படுவதால் பெரியதாக மறு ஏற்படும். இது சட்டைகளுக்கு வெளியே எட்டிப் பார்க்கவும் கூடும். இதனால் பலருக்கும் மனரீதியான பாதிப்பும் தாழ்வுணர்ச்சியும் ஏற்படுவதை அவதானிக்க முடியும். ஆனால் இந்த முறையில் சிறிய வடு, அதுவும் ஓரமாக இடதுபுறத்தில் இருப்பதால் வெளியே தெரியாது.

வலி குறைவாக இருப்பதும் சிறிய மறுவும் மட்டுமே இந்த முறையில் கிடைக்கக் கூடிய அனுகூலங்கள் என எண்ணிவிடாதீர்கள்.

வழமையான சத்திரசிகிச்சையின் பின்னர் நோயாளி மருத்துவமனையிலிருந்து வீடு திரும்ப நீண்ட நாட்கள் எடுக்கும். குறைந்தது 10 நாட்களுக்கு அங்கு தங்கியிருக்க வேண்டியிருக்கும். சில பிரச்சனைகள் ஏற்பட்டால் இந்தக் காலம் மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு.

ஆனால் நவீன சத்திர சிகிச்சை முறையின் பின் நோயாளி 4 நாட்களிலேயே வீடு திரும்பக் கூடியதாக இருக்கும்.

அத்துடன் 3 வாரங்களுக்குள் பூரண குணம் அடைந்துவிடுவார்.

எனவே விரைவில் வேலைக்குத் திரும்பவும் முடியும். ஆனால் வழமையான முறையில் ஒருவர் குணமடைய குறைந்தது 2—3 மாதங்களாவது எடுக்கும்.

பொதுவாக பாரிய சத்திர சிகிச்சைகளின் போது இழக்கப்படும் அதிகளவு குருதிக்காக, குருதி மாற்றீடு (Blood transfusion) செய்ய வேண்டிய தேவை ஏற்படும். ஆனால் நவீன முறையில் குருதி மாற்றீடு செய்வதற்கான தேவை மிக அரிதே. எனவே அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகள் இல்லை.

இவர் ஹைதரபாத் நகரில் உள்ள குளொபல் மருத்துவ மனையில் இத்தகைய சிகிச்சைகளை மேற்கொள்கிறார். சென்னையிலும் பங்களுரிலும் கூட இவர்களது மிகப் பெரிய மருத்துவமனைகளில் இத்தகைய சிகிச்சைகளைச் செய்கிறார்கள்.

குளொபல் மருத்துவ மனைகள் சாதாரண மருத்துவமனைகள் போன்றவை அல்ல. அதிவிசேட சிகிச்சை (Super Speciality Hospitals) மருத்துவமனைகளாகும். மேற் கூறிய இருதய பை பாஸ் சிகிச்சைகளுக்கு மேலாக இருதய மாற்றீடு, சுவாசப்பை மாற்றீடு, சிறுநீரக மாற்றீடு எனவும் சிறந்த சேவைகளை வழங்குவதாக அறிய முடிந்தது.

மேலும் விபரங்கள் அறிய :- Global Hospitals

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நான் எழுதி தினக்குரல் பத்திரிகையின் ஹாய்நலமா பத்தியில் 18.10.2010 ல் வெளிவந்த கட்டுரை

0.0.0.0.0.0

Read Full Post »