Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இலக்கியம்’ Category

கவி மீனாவின் சிறுகதைத் தொகுப்பு

இது முடங்கல் காலம். கொரோனா தொற்று காரணமாக வெளியே திரிய முடியாது வீட்டுக்குள் முடங்க வேண்டிய காலமாயிற்று. சினிமா இல்லை. பூங்கா விஜயம் கிடையாது. உறவினர் வீடுகளுக்கும் போக முடியாது. வாசிப்பும், காணொளியும் மட்டுமே வாழ்வாயிற்று.

https://issuu.com/kavi.meena/docs/_________________

அதற்கு ஏற்றாற் போல, காலத்தின் தேவை போல கவி மீனா தனது முதலாவது சிறுகதைத் தொகுதியை வெளியிட்டிருக்கிறார்.

கூட்டம் இல்லை, வெளியீட்டு விழா இல்லை: எந்த வித ஆரப்பாட்டமும் இல்லாமல் தனது நூலை இணையத்தில் வெளியிட்டிருக்கிறார்.

இதே போலத்தான் ஜோதிகாவின் பொன் மகள் வந்தாள் சினிமாவும் கூட இணையத்தில்தான் வெளியாகியுள்ளது.

20 பக்கங்கள் நீளும் இந்த தொகுதியில் மொத்தம் 9 சிறுகதைகள் அடங்கியுள்ளன.

இந்தத் தொகுப்பில் உள்ள சிறுகதைகள் தாயக மண்ணின் மாந்தரின் வாழ்வைப் பேசும் அதே நேரம் புலம் பெயர் வாழ்வின் கோலங்களையும் வாசகர் பார்வைக்கு வைக்கின்றன.

முதல் கதை ஆத்ம திருப்தி என்பதாகும்.

பின் நோக்கிச் சொல்லப்படும் கதை இது.

வெளி நாட்டிற்கு சென்ற ஒருவன் (ரவி) அங்கு தங்கியிருக்க விரும்பாமல் மீண்டும் தாய் மண்ணுக்கு வந்து தந்தை உட்பட உறவுகள் நண்பர்களின் பேச்சுக்கும், ஏளனத்திக்கும் ஆளாகிறான்.

அவன் ஏன் திரும்பி வந்தான். அதைச் சொல்வதுதான் கதை. நிச்சயமாக சொல்லப்பட வேண்டிய கதை.

ஒரு பிரபல பாடசாலையில் மதிப்பு மிகு ஆசிரியராக இருந்த அவன் அங்கு, இங்கு செய்யவும் தயங்கும் பல வேலைகளை மனதைக் கடித்துக்கொண்டு செய்வதும், தங்குவுதற்கு ஆமான இடமின்றி துன்பப்படுவதும், இனத் துவேசத்திற்கு முகம் கொடுப்பதும்…. எத்தனை எத்தனை துன்பங்கள்.

யாழ் மண்ணில் தலைவிரித்தாடும் வெளிநாட்டு மோகத்திற்கு சாட்டை அடி கொடுக்கும் அவசியமான படைப்பு.

அடுத்த கதை ஏங்கித் தவிக்குது தாய் மனம் என்பதாகும். தலைப்பே பொருளை உணர்த்தி நிற்கிறது.

யாழ் மண்ணின் கட்டுப்பாடான பண்பாட்டு முறையில் வாழ்ந்த அவள் ஜேர்மனயில் இப்போது வாழும்போது வளர்ந்த தனது மகளும் அதே விதமான பாரம்பரிய முறையில் பண்பாக வாழ வைக்க வேண்டும் என விருப்புகிறாள்.
மகளும் அடங்கி நடக்கிறாள். ஆனால் திடீரென ஒருநாள் யாவும் தலைகீழாக மாறும் நிலைக்கு முகம் கொடுக்க நேர்கிறது.

வாழும் இடம்இ சூழல் போன்றவை எமது வாழ்க்கை முறையை எவ்வாறு பாதிக்கின்றன. அதிலும் முக்கியமாக இளம் தலைமுறையினர் அந்த மண்ணின் சூழலுக்கு ஏற்பவே வாழ்வார்கள். அதைக் கட்டுப்பாடுகள் விதித்து மாற்ற முயல்வது முடியாத காரியமாக ஆகிவிடும் என்பதைச் சொல்கிறது

யாழ் மண்ணின் சூழலில் வாழ்ந்தவர்களுக்கு இது அதிர்ச்சி தருவதாக அமையக் கூடும் ஆயினும் யாதார்த்தத்தை புரிந்து நடக்க வேண்டும் என்பதை மறைமுகமாகச் சொல்கிறது இக் கதை.

சித்திரையில் சிறுவன் என்பது அடுத்த கதை. சித்திரை மாசத்த்தில் ஆண் குழந்தை பிறந்தால் அது குடும்பத்திற்கு ஆகாது என்பது எமது மக்களின் நம்பிக்கை. இது போன்ற எத்தனையோ காலத்திற்கு ஒவ்வாத பல மூட நம்பிக்கைகளை எமது தமிழ் சமூகம்  இன்னமும் சுமந்து வருகிறது. சிறு வயது முதல் பலரும் பல தடவைகள் இவனது பிறப்பை ஒரு தோசமாகச் சொல்லி இவன் மனதைத் துன்ப்பப் படுத்துவதுடன் கோபத்திற்கும் குற்ற உணர்வுக்கும் ஆளாக்குவதை கதாசிரியை சம்பவங்கள் ஊடாக சொல்லிக் கதையை நகர்த்துகிறார்

கரு நாக்கு, நாகதோசம் என்ற பேச்சுக்களும் அவனைத் துன்புறுத்தியதை வாசிக்க மனது நோகிறது. இத்தகைய மூட நம்பிக்கைகளிலிருந்து என்றுதான் எமது சமூகம் விடுபடும் என்ற ஏக்கம் தொற்றுகிறது இக் கதையைப் படித்த போது.

ஒரு ஈழக் கறுப்பன் செய்த காதல் என்பது புகுந்து நாட்டில் வெளிறாட்டுப் பெண்ணை ஏமாற்றி வாழ்ந்து விட்டு கைகழுவிவிடும் நயவஞசகத்தை தோலுரித்துக் காட்டும் கதை.

இப்படியாக ஒவ்வொரு கதையும் எமது வாழ்வைப் பேசுகிறது. உன்னதங்களை மட்டும் பேசாமல் ஏமாற்றுகள் நயவஞ்சகங்களையும் பேசுகிறது.

யதார்த்தமான கதைகள். விழங்க முடியா முடிச்சுகள் கிடையாது. எம் மக்களின் மற்றுமொரு முகத்தைக் காட்டும் கதைகள் எனலாம்
நீங்களே படித்துப் பாருங்கள். உங்கள் கருத்தையும் பகிரலாமே

Read Full Post »

தமிழ்நதியின் ‘மாயக் குதிரை’

அண்மைய திருவிழாவின் போது ஆலயத்தில் அலை மோதிய தன் பக்தர்களுக்கு, நல்லூர் கந்தன் தங்குதடையின்றி அருள்பாலித்தார். கோயிலுக்குள் கால் வைக்காது வீதியோடு நின்றுவிட்ட எனக்கும் அந்த அருள்பாலிப்பின் மிச்சமீதி எச்சங்கள் சிந்தவே செய்தன. பல நூல்களை வாசித்துய்யும் படி கடைக்கண் அனுக்கிரகம் செய்தார்.

மாயக்குதிரையில் பயணம் செய்யும் சுவார்ஸமான அனுபவம் அதன் பயனாகக் கிட்டியது. பயணம் செய்தது என்று பட்டும் படாமலும் சொல்லிவிட முடியாது. மாயக்குதிரையின் காற்றளையும் சிறகுகளால் வாரி அள்ளப்பட்டு, கணகணப்பான அதன் அணைப்பில் இருநாட்காளகப் பயணித்தமை முன்னெப்போதும் சித்திக்காத சுகானுபவமாகும்.

பத்தே பத்து சிறுகதைகளைக் கொண்ட தொகுப்புத்தான் தமிழ்நதியின் மாயக்குதிரை. சுமார் 170 பக்கங்களைக் கொண்ட தொகுப்பு. தமிழ்நாடு டிஸ்கவரி புக்பலஸ் வெளியீடு.

ஓவ்வொரு சிறுகதையும் வாழ்வின் சுழல் நீரில் சிக்கித் தவிக்கும் நிஜ மாந்தரின் உள்ளங்களில் உறைந்து கிடக்கும் உணர்வுகளை ஆழ்ந்து அனுபவித்துபோல சித்தரித்து எம் அனுபவங்களாகவும் நீட்சி கொள்ள வைக்கின்றன. அடர்த்தி நிறைந்ததும் சந்றே அம்மலுமான கருமுகில்கள் மாறுபட்ட சித்திரங்களாக உருக்கொள்வது போல துயர் செறிந்த பிரச்சனைகளில் மூச்சடங்கத் திணறும் மாந்தர்களின் வாழ்வின் கோலங்களை அள்ளித் தெளிக்கின்றன. ஒவ்வொரு கதையும் எங்களை வித்தியாசமான அனுபவங்களுக்குள் மூழ்க வைக்கின்றன.

தமிழ்நதி திருகோணமலை மாவட்டத்தைச் சார்ந்தவர் என்று நினைக்கிறேன். புலம் பெயர்ந்து கனடாவில் வாழ்கிறார். பொதுவாக புலம்பெயர் எழுத்தாளர்கள் என்றாலே நினைவிடை தோய்தலில் திளைப்பவர்கள் என்ற எண்ணமே பெரும்பாலான தாயக வாசகர்களின் எண்ணம். தாம் மகிழ்ந்து வாழ்ந்ததும், போரின் அகோரத்தினால் ஏற்பட்ட பாதிப்பும், யதார்தத்திற்கு அப்பாலான அரசியல் சிந்தனைகளுமே மேலோங்கி நிற்கும். தப்பியோடியவர்களின் ஒப்பாரிகள் என சில விமர்சகர்களின் எள்ளலுக்கு ஆளாவதுமுண்டு. ஆனால் சமகாலத்தின் மிக அற்புதமான படைப்பாளிகள் புலம்பெயர்ந்தவர்களாகவே இருப்பதை மறுப்பதற்கில்லை.

20180929_1141211

தமிழ்நதியின் கதைகளிலும் தாயகத்தில் வாழ்ந்த வாழ்வின் இனிய நினைவுகளும் போரின் அவலங்களும் இடப்பெயர்வும், புலம் பெயர் வாழ்வின் போலி முகங்களும் பேசப்பட்ட போதும் அவை படைப்புகளில் முனைப்புப் படாமைக்கு காரணம் அவரது எழத்தின் வசீகரமாகும். பிரச்சாரத்தன்மை இடையூறு செய்யாத சொல்லாடலும் கவித்துவமான நடையும் ஏனைய பல புலம் எழுத்தாளர்களின் படைப்புகளிலிருந்து வேறுபட்டு தனித்துவமாக நின்று சுகமான வாசிப்பு அனுபவத்தைக் கொடுக்கின்றன.

ஒவ்வொரு படைப்புமே பேசப்பட வேண்டியவையே. ஆனால் அவ்வாறு செய்வது சிறிய அறிமுகக் கட்டுரையில் முடியாததாகும்.

தாழம்பூவின் காதல் ஒரு வித்தியாசமான படைப்பு. இதுவே இத்தொகுப்பின் முதற்கதையும் கூட. நூற்றாண்டு காலத்திற்கு முன்பு வாழ்ந்த பெண்ணை, நவயுகப் பெண் ஒருத்தி எதிர்பாரத கணத்தில் முகங்கொண்ட யுகசந்திப்பில் விலகும் திரையின் பின்னே காட்சிகளாக விரிகிறது. இருவருமே காதலில் வீழ்ந்த பெண்கள் என்பதைக் காண்கிறோம். திகிலும் மர்மங்களும் ஆச்சரியமூட்டும் கணங்களுமான மாய உலகிற்குள் சஞ்சரிக்க வைக்கும் உணர்வைக் கொடுக்கிறது.

மேலோட்ட வாசிப்பில் அந்தப் படைப்பானது அமானுசத்தன்மையும் புதிர் சூழ்ந்ததாகவும் தென்பட்டாலும் அது பேசாமல் பேசும் கருத்தானது பேசப்பட வேண்டியது. பெண்கள் மீது ஆண்வர்க்கம் கொண்டிருக்கும் மேலாதிக்க உணர்வையும் காதலின் பெயரால் பெண்கள் ஏமாற்றி வஞ்சிக்கப்படுவதையும் உணரும்போது எமது சமூகக் கட்டமைப்பின் போலிமுகங்கள் கிழிந்து சிதிலமடைந்து அம்பலமாகின்றன.

இச்சிறுகதையை படித்த பின்னர் யதேட்சையாகப் ‘பியர் பிரேம் காதல்’ திரைப்படத்தில் இதன் கரு மற்றொரு முகமாக வெளிப்படுவது கண்டு ஆச்சரியப்பட்டேன். உண்மைதான் காதல் கற்பு கலாசாரம் போன்ற பெயர்களால் பெண்களை மட்டும் கட்டிவைக்கும் கைங்கரியத்தை எமது சமூகம் நரித்தனமாக இறுகத்துடன் கட்டியமைத்திருப்பதை அப்படம் தெரியாத்தனமாக வெளிப்படுத்தியுள்ளது. தமிழ்நதியின் கதையில் அது தீர்க்கமாக ஆனால் குறியீட்டு ரீதியாக சொல்லப்படுகிறது.

போதை என்பது மதுவும் போதைப் பொருட்களுமாகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. அரசியல் வாதிகளுக்கு அதிகாரம் ஒரு போதை, ரசிகனுக்கு திரைப்படம் ஒரு போதை, பல பெண்களுக்கு அழகுசாதனப் பொருட்கள் ஒரு போதை. நித்திலாவுக்கும் ஒரு போதை உண்டு. உங்களுக்கும் எனக்கும் கூட சற்றே இருக்கலாம் என்ற அபாயச் சங்காகவும் ஒலித்தது நித்திலாவின் புத்தகங்கள் என்ற சிறுகதை.

நித்திலாவின் புத்தகங்களில் ஆழ்ந்திருந்த போது ‘கடதாசியின் மட்கிய மணமும் தூசியும் இருட்டும் குடியிருந்த’ நித்திலாவின் அறையில் நானும் கூடவே இருந்து புத்தகங்களின் ஸ்பரிசத்தில் சுயம் இழந்திருந்தேன்.

‘மழைகாலத்திற்கென எறும்புகள் தானியங்களைச் சேமிப்பதைப்போல, விவசாயி விதைநெல்லைச் சேமிப்பதைப்போல குழந்தைகள் பிரியமான தின்பண்டங்களப் பொதிந்து வைத்திருப்பதைப் போல புத்கங்களைச் சேகரித்தாள்’

மிக அற்புதமான கதை. அதை வாசிக்கும் போது ஆங்காங்கே என்னையும் இனங்கண்டேன். சில தருணங்களில் எட்டி நிற்கும் பார்வையாளனாகவும்; உணர்ந்தேன். நூல்களிலும் வாசிப்பிலும் ஆர்வம் உள்ளவர்கள் தப்பாமல் படிக்க வேண்டிய படைப்பு அது. அதில் நாம் வாசித்து கண்டுணரும் போதனைக்கு அப்பால் அழகாக வார்க்கப்பட்ட சித்திரமாக மனதை நிறைக்கிறது.

மாயக்குதிரை யும் அதே போல மற்றொரு போதையைப் பேசும் சிறுகதை. தொகுப்பின் சிறப்பான படைப்புகளில் இதுவும் ஒன்று. படிக்கும் போது தமிழ்நதியின் படைப்புகளில் போதை அடைந்தால் அதற்கு நான் பொறுப்பாளி அல்ல.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் படும் துயர் ஆற்றமுடியாதது. காத்திருப்பு கதையில் பாடசாலையால் வந்த பையனை விசாரணைக்காக இராணுவத்தினர் அழைத்துச் செல்கிறார்கள். தனது மகனுக்காக 32 ஆண்டுகளாக காத்திருக்கிறாள். ஞானம்மாவின் காலத்தால் வற்றாத காத்திருப்பின் தாய்பாசம் அவளுக்கானது மட்டுமல்ல. ஆயிரக்கணக்கான தாய்மாரின் துயர்ச் சாகரமாக அலை வீசுகிறது. தன் மகன் தன்னைக் கட்டாயம் வந்து தன்னைப் பார்ப்பான் என்ற நம்பிக்கையோடு காலதேவனை உதைத்துத்தள்ளிக் காத்திருக்கிறாள். எனது மகன் எங்கே என்ற அட்டையுடன் ஆர்பாட்டங்களில் கலந்து கொள்கிறாள். முடிவு ஆச்சரியமளிக்கிறது. அவன் வீரமரணம் அடைந்தான் என்ற பழைய செய்தித்தாள் கைக்கெட்டுகிறது.

அரசியல் ரீதியாக சர்ச்சையை ஏற்படுத்தக் கூடிய படைப்பு இது. அரசின் பொய்பிரசாரத்திற்கு துணை நிற்கிறது என இனப்பற்றாளர்கள் கூக்குரல் இடவும் கூடும். ஆயினும் காணமல் போனவர்கள் பற்றிய பிரச்சனையில் எம்மத்தியில் அதிகம் பேசப்பாத ஒரு உண்மையை வெளிப்படுத்திய துணிவிற்காக படைப்பாளியைப் பாராட்டலாம். அது சொன்ன விடயத்திற்கு அப்பால் தாயின் காத்திருப்பை அற்புதமாகப் பேசும் கதை. மிக அழகாகப் பின்னப்பட்டது.

மலைகள் இடம் பெயர்வதில்லை கதையின் சிதம்பரம் ஆச்சி மறக்க முடியாத பாத்திரம். சிங்கள மக்கள் சுற்றி வாழும் பன்குளம் பகுதி மக்கள் இனக் கலவரத்தில் பட்ட துன்பம் சொல்ல முடியாதது. ஓவ்வொரு இரவும் தங்கள் உயிர்களைக் காப்பாற்ற குழந்தை குட்டிகளுடன் காட்டிற்குள் ஒளிந்து மறைந்து கொள்ளும் அந்த மக்களின் அனுபவங்கள் யாழ்மக்களாகிய நாம் கனவிலும் அனுபவிக்காதவை.

‘வெட்டுறதெண்டா வெட்டட்டும். அவங்களுக்குபு; பயந்து என்ரை வீடான வீட்டை விட்டிட்டு காடு கரம்பையில் போய்ச் சாகோணுமோ’ இது சிதம்பரம் ஆச்சியின் குரல். நுணுக்கமான களச் சித்தரிப்புடன் அழகாகச் சொல்லப்பட்ட படைப்பு.

தோற்றப்பிழை என்ற சிறுகதை ஆரம்பத்தில் சொல்லப்பட்ட தாளம்பூ வைப் போலவே பெண்களுக்கு எதிரான அநீதிகளை சரித்திர பின்னணியுடன் நிகழ் வாழ்வைக் கலந்து புனையப்பட்ட படைப்பு. அதன் ஆயி மறக்க முடியாத பாத்திரம்.

இவருடைய படைப்புகள் வெறும் கதைகள் அல்ல. போரும் அகதி வாழ்வும் புலம்பெயர் அந்நிய கோலங்களுமாக சமகால வரலாற்றின் கதைகளாக அல்லாமல் வர்ண ஓவியங்களாக மனதை நிறைத்து நிற்கின்றன. தர்க்க ரீதியான சில முரண்களை ஓரிரு கதைகளில் காண முடிகிறது. படைப்பாளுமை அவற்றை மூடி நிரவிவிடுகிறது.

கவிதை கட்டுரை சிறுகதை என பலதளங்களில் இவர் இயங்குவதை அறிய முடிகிறது. நூல்களாகவும் வந்துள்ளன. ஆனால் அவற்றோடு உறவாட இன்னமும் வாய்ப்பு கனியவில்லை.

இவருடைய ஒரிரு படைப்புகளை ஏற்கனவே உதிரியாகப் படித்திருக்கிறேன். ஆயினும் இந்தப் பத்துக் கதைகளையும் ஒன்று சேர்த்து படிக்கும் போதுதான் தமிழ்நதியின் மனதை ஒன்ற வைக்கும் பாத்திரப் படைப்புகளும் களச் சித்தரிப்புகளும் கவித்துவ நடையும் என்னை ஈர்த்துக் கொண்டன. தேடிப் படிக்க வேண்டிய படைப்பாளி என்பதை சொல்ல வேண்டியதில்லை.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

ஏதனத்தின் ஊடாக சாதீய அடக்குமுறை- தெணியானின் புதிய நாவல்

 

தெணியானின் ஏதனம் நாவலைப் படித்து முடித்த போது பெரும் குற்ற உணர்வுக்கு ஆளானேன்.

scan_20170101

சுமார் 50 வருடங்களுக்கு முன்னர் எனது பதின்ம வயதுகளில் நான் எமது ஊர் எல்லையில் உள்ள வீரபத்திர கோவிலடியால் போகும் வேளைகளில் அந்தக் கோயில் வெளிவீதி கிணற்றடியில் சில பெண்கள் குடங்களுடன் நிற்பார்கள். சிலதருணங்களில் ஆண்களும் கூட நிற்பதுண்டு. தங்கள் நாளாந்த தேவைகளுக்கான நீரைப் பெறுவதற்காக. தண்ணீர் அள்ளித் தருமாறு பணிவாகக் கேட்பார்கள். தண்ணீருக்காக அவர்கள் படும்பாடு பரிதாபமாக இருக்கும்.

அவர்கள் பகுதியில் கிணறுகள் இல்லை. மிகவும் மேடான பகுதி என்பதால் ஆழமாக கிணறு வெட்ட வேண்டும். சொந்தக் கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதி அவர்களுக்கு இல்லை.

‘இதுகளோடை மினக்கட நேரமில்லை’ என்று சொல்லியடி விரைந்து ஓடும் பல பெரிய மனிதர்களைக் கண்டிருக்கிறேன். பலர் மணிக்கணக்காக தண்ணீருக்காக பரிதாபமாகக் காத்து நிற்கவும் நேரும்.

கேட்பார்களோ இல்லையோ யாராவது குடத்துடன் அக் கிணற்றடியில் நின்றால் தண்ணீர் அள்ளிக் கொடுக்காமல் நான் போனதில்லை. தண்ணீருக்காகத் துன்பப்படும் அவர்களுக்கு நான் ஒரு பெரிய சேவையை செய்கிறேன் என்ற மனத் திருப்தியுடன், பெருமிதத்துடன் தான் நான் அதைச் செய்திருந்தேன்.

அவர்களை நீர் அள்ளவி;டாது சமூக ரீதியாக தடுத்திருப்பதானது அவர்களது நாளாந்த வாழ்க்கையை எந்தளவு பாதித்திருக்கும், அதற்கு மேலோக அவர்களது சுயமரியாதiயை, தன்மான உணர்வை எந்தளவு புண்படுத்திருக்கும். அது தவறானது. அதற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் போராட வேண்டும் என்றெல்லாம் அக்காலத்தில் சிந்தித்து செயற்பட வில்லை என்பதை நினைக்கவே எனக்கு குற்ற உணர்வு ஏற்பட்டது.

அக்கால கட்டத்தில் வடமராட்சி மத்திய பகுதியில் இருந்த அரசாங்கப் பாடசாலையின் அதிபர் முற்போக்கு கருத்துகள் உள்ளவரான போதும், பாடசாலை கிணற்றில் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் தண்ணி அள்ளுவதற்கு, எழுதப்படாத சட்டம் தடையாக இருந்தபோதும் வெளிப்படையாக அவரால் குரல்கொடுக்க முடியாத சமூகச் சூழலே இருந்தது என்பதை தெணியானின் நாவலைப் படித்தபோது புரிந்து கொண்டேன். இந்நிலையில் சிறுவனான நான் என்ன செய்திருக்க முடியும் என்று மன ஆறுதல் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

தண்ணீர் அள்ள மட்டுமல்ல கிணற்றுப் பத்தலுக்குள் கூட அவர்கள் கால் வைக்க முடியாத நிலை அன்று நிலவியது.

தங்கள் மீது வன்முறை பாவிக்கப்படும் என்பதை அந்த அரசாங்கப் பாடசாலை மாணவர்கள் உணர்ந்தும் துணிவுடன் கிணற்றில் அள்ள முயன்று பெரும் இழுபறிகளின் பின்னரே தங்கள் உரிமையைப் பெற முடிந்தது.

தெணியானின் பெரும்பாலான படைப்புகள் போலவே இது சாதீயத்தை கருவாகக் கொண்ட ஒரு நாவல்தான். வடமராட்சி பிரதேசத்தின் ஒடுக்கபட்ட மக்களின் வாழ்வின் பாடுகளைக் பேசும் நாவல்.

ஈழத் தமிழர்களான தங்களுக்குள் ஒன்றான ஒரு சமூகப் பிரிவை அடக்கி ஒடுக்குவதற்கு யாழ்ப்பாண மேல்சாதி சமூகமானது தண்ணீரை எவ்வாறு ஒரு வலுமிக்க ஆயுதமாக பயன்படுத்தியது என்பதை இந்தப் படைப்பின் மூலம் உணர வைக்கிறார் தெணியான். பாதிக்கபட்டவர்களின் ஆக்கிரோசமான எதிர்குரலாக அல்லாது சமூகத்தில் நிலவுவதை உன்னிப்பாக அவதானித்து நிதானமாகவும் அழகாகவும் ஒழுங்கு ரீதியாகவும் பதிவு செய்வு செய்த நாவலாசிரியர் பாராட்டப்பட வேண்டியவராகிறார்.

சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னான காலகட்டத்தில் நாவல் ஆரம்பமாகிறது. தாழ்த்தப்பட சமூகத்தில் ஏழ்மையில் வாடும் சிறுவர்களின் வாழ்க்கை சித்தரிப்புடன் களை கட்டுகிறது. உண்மையில் நாவலின் ஆரம்ப பகுதிகள் மிகவும் சுவார்ஸமாகவும் சொல்லப்படுகிறது. தருமன் என்ற பாத்திரம் அற்புதமாக படைக்கப்பட்டு இருக்கிறது. நாவல் முடிந்த பின்னரும் மனதில் நிற்கிறான்.

தருமன் தான் பிரதான பாத்திரம் என்பதான உணர்வு நாவலின் அரைவாசிப் பகுதி வரையில் எனக்கு இருந்தது. ஆயினும் பின்னர் கோபாலன் கதையை ஆக்கிரமித்துக் கொள்கிறார். சமூகத்தில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை வெளிப்படுத்தவும், கதையின் அடிப்படைக் கருவிற்கு வலு சேர்க்கவும் இந்த மாற்றம் அவசியம் எனப் புரிந்து கொள்ள முடிகிறது. இருந்தபோதும் கதையின் உண்மையான நாயகன் கால மாற்றங்களுக்கு ஏற்ப வேறு வேறு முகங்களுடன் மேடையேறும் ‘ஏதனம்’தான்.

கற்றலில் ஈடுபாடற்று பணிசுக்காக மட்டும் பாடசாலை செல்லுமளவு தருமனை வறுமை வாட்டுகிறது. தகப்பன் நல்ல தொழிலாளியான போதும் குடியில் மூழ்கிவிடுவதால் தாய் கூலி வேலை செய்தே குடும்பத்தை ஓட்டுகிறாள். வயிற்றை நிறைக்க முடியாதளவு வறுமையில் குடும்பம் உழல்கிறது.

கோவிலில் சர்க்கரைத் தண்ணி ஊற்றுவதைக் அறிந்த தர்மன் பாடசாலையிலிருந்து கள்ளமாகக் கிளம்பி ஓடி வயிறுமுட்ட சர்க்ரைத் தண்ணீர் அருந்துகிறான். அவன் மாத்திரமின்றி இன்னும் பல மாணவர்கள் அவ்வாறு பாடசாலைக்கு டிமிக்கி கொடுத்துவிட்டு ஒடி வருவதைக் காணும் போது அந்தச் சமூகத்தில் அன்று நிலவிய வறுமையின் கோரமுகம் புரிகிறது.

அவர்களுக்குச் சர்க்கரைத் தண்ணீரை எந்தப் பாத்திரத்திலும் ஊற்றிக் கொடுக்கமாட்டார்கள். பானம் உள்ள பாத்திரத்தை இவர்களது கையில் படாதவாறு உயர்திப்பிடித்து சரித்து ஊற்றுவார்கள். இவர்கள் கையில் ஏந்திக் குடிப்பார்கள். கைமண்டை என்று தெணியான் சித்தரிக்கிறார்.

கைமண்டையே நீரருந்தும் ஏதனமாகிறது. சுர்க்கரைத் தண்Pர் மட்டுமே இவர்களுக்கு கிடைக்கும். மோர்த்தண்ணியும் ஊறுகாய்தண்ணியும் இவர்களுக்கு வழங்கப்படுவதில்லை.

‘தருமன் குடிக்கிறான். குடிக்கிறான். குடித்துக் கொண்டே இருக்கிறான்.’

‘டேய் .. நீ குடிக்கக் குடிக்க எங்கையடா போகுது! ஊதென்ன வயிறோ … பீப்பாவோ.’ என்று ஊற்றுபவர் ஏளனம் செய்கிறார்.

ஆயினும் அதைச் சட்டை செய்யாது மேலும் திட்டுகளை வாங்கிக் கொண்டு, ஒரு போத்தலில் சர்க்கரைத் தண்ணி எடுத்துப் போய் வெறுவயிற்றோடு கிடக்கும் தாய்க்குக் கொடுக்க அவன் மனம் அவாவுகிறது. இதைப்; பார்க்க எங்கள் மனம் வெம்பி அழுகிறது.

கால ஓட்டத்தில் சமூக மாற்றங்கள் ஏற்பட்டன, வேகமாக அல்ல மிக மிக மெதுவாக. அதுவும் வலாத்காரமாக மாற்றப்படும் சூழலில் ஏதனங்கள் மாறுகின்றன. கைமண்டை, பச்சோலைப் பிளா, பனஞ் சிரட்டை, சோடாப் போத்தல், அலுமினிய் பேணி, கிளாஸ், மாபிள் கோப்பை, எவர்சில்வர் டம்ளர் எனப் படிப்படியாக மாறவே செய்கிறது.

பருகுவதற்கான ஏதனங்கள் மாறிய போதும், மனித மனங்கள் மாறவில்லை. எவ்வாறு குடிக்க வேண்டும் என்பதை வலியுறுத்துவதன் மூலமும் தங்கள் மேலாதிக்கத்தை நிலைநிறுத்தவே உயர்சாதிச் சமூகம் முயல்கிறது.

‘தமிழ் நாட்டில் எல்லோரும் எவர்சில்வர் கப்பையே உபயோகிக்கிறார்கள். பாலலென்ன மோரென்ன, தேநீரென்ன கப்பிலை வாய் வைச்சுக் படிக்கும் பழக்கம் அங்கே இல்லை..’ என்று வீட்டுக்காரர் சொல்லி முடிக்க மகள் எவர்சில்வர் கப்பில் தேநீரோடு வருகிறாள்.

ஆம் நாகரீகமாக சாதீயத்தை காக்க முனைகிறார் வீட்டுக்காரர். வாய்வைத்துக் குடித்து எங்கள் ஏதனத்தை தீட்டுப்படுத்தி விடாதே என்பதை சொல்லாமல் சொல்கிறார்.

நல்ல சாதிக்காரனுக்கும் குறைந்த சாதிக்காரனுக்கும் ஒரே விதமான கோப்பையில் தேநீர் கொடுத்தாலும் குறைந்த சாதிக்காரர் குடித்த கோப்பைக்கு அவமானம் செய்வதன் மூலம் அவர்களை இழிவுபடுத்தி இன்றும் சாதீய உணர்வு செத்துவிடாது இருப்பதை நாவலின் கடைசி அத்தியாத்தின் இறுதிப் பகுதியில் காண்கிறோம். எவ்வாறு என்பதை நீங்களே வாசித்துப் பாருங்கள்.

நாவலின் ஆரம்பம் நன்கு ரசனையோடு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. சிறுவயது அனுபவங்கள் சொல்லப்பட்ட முறையானது வாசகனை அந்தச் சூழலுக்குள் நனைந்து ஊற வைக்கிறது. ஆயினும் மேலே செல்லச் செல்ல, சற்று வேகமாக கதையைச் சொல்லி முடிக்க வேண்டும் என்ற அவசரத்தில் சொல்லப்பட்டது போன்ற உணர்வு எழுகிறது. கருத்திற்கு கொடுக்கப்பட்ட முக்கியத்துவம் பாத்திர மற்றும் களச் சித்தரிப்பிற்கு கொடுக்கப்படவில்லை. செழுமை பிற்பகுதியில் தளர்ந்து விடுகிறது.

தெணியானது இந்த நாவலானது சுவையான நாவலாக மட்டும் இல்லை. அந்த காலகட்டம் பற்றிய பல செய்திகளையும் தகவல்களையும் கதை முழுவதும் தூவிச் செல்கிறது. ‘யாழ்ப்பாண நகரத்தில் தேநீர்க்கடைப் பிரவேசம் நடைபெற்று பதினொரு ஆண்டுகள் கழிந்த பின்னரும் வடமராட்சியில் உள்ள தேநீர்க்கடைகள் திறந்தவிடப்படவில்லை’ என்பது உதாரணத்திற்கு ஒன்று.

இடதுசாரிக் கட்சிகளின் அக்கறை, மக்கள் சபை தோற்றம், முடி வெட்டும் சலூன்களிலும் பாகுபாடு, ஆலயப் பிரவேசம், தேநீர் கடைகளை திறந்துவிடுதல், சாதியக் கொடுமைகளுக்கு எதிரான போராட்டங்கள் போர்ச் சூழல் காரணமாக பின்னடைவது போன்ற பலவேறு தகவல்கள் நாவல் முழுவதும் நிறைந்து கிடைக்கின்றன.

எனவே, இதை ஒரு வெறும் கதையாக, நாவலாக, படைப்பிலக்கியமாக மட்டும் பார்க்க முடியவில்லை.

வடமராட்சி பிரதேசத்தில் சாதி ஆதிக்கம் நிலவிய முறையையும் அது எவ்வாறு படிப்படியாக நீர்த்துப் போனது பற்றியும் பேசுpறது. நீர்த்தது போல மேலோட்டமாக சலனமின்றிக் கிடந்தாலும், நீறுபூத்த நெருப்பாக உள்ளுர அரித்துக்கொண்டிருப்பதை பேசுகிறது. இருளுக்குள் மறைந்திருக்கும் கள்வன் போல அசுமாத்தமின்றி சமூகத்தை அரித்துக் கொண்டே இருக்கிறது என்பதைப் பேசும் ஆவணமாகவும் கருத முடியகிறது.

ஊர் எல்லைகளைக் கடந்து மலையகத்திலும், ஆட்சி மாற்றங்களை மீறி போராளிகளின் காலத்திலும் எவ்வாறு சாதீ ரீதியான பாகுபாட்டைக் தமிழ் சமூகம் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தது, இருக்கிறது என்பதை பதிவு செய்யும் ஆவணமாக இருக்கிறது.

scan_20170101-2

தெணியான் சோர்வின்றி இயங்கும் ஒரு படைப்பாளி சிறுகதை, குறுநாவல், நாவல் இலக்கியக் கட்டுரைகள், மேடைப் பேச்சு என தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.

இது அவரது 22வது நூல் என நினைக்கிறேன். அட்டைப்படத்தை ஜீவநதி ஆசிரியர் பரணீதரன் அழகாக வடிவமைத்துக் கொடுத்துள்ளார். மறைந்த எழுத்தாளர் ராஜ சிறீகாந்தன் நினைவாக வெளிவந்திருக்கிறது.

பூபாலசிங்கம் புத்தகசாலை வெளியீடாக வந்திருக்கிறது. விலை ரூபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு

பூபாலசிங்கம் புத்தகசாலை

202,செட்டியார் தெரு

கொழும்பு 11.

எம்.கே.முருகானந்தன்

0.00.0

Read Full Post »

நண்பர் புலோலியூர் இரத்தினவேலோன் ஞாயிறு தினக்குரலிலின் பனுவல் பகுதியில் புலோலியூரின் இலக்கியகர்த்தாக்கள் என்ற தலைப்பில் ஒரு கட்டுரை தொடர் எழுதி வருகிறார்.

இன்றைய கட்டுரையில்புனைகதை சாரா இலக்கியம் படைப்பவர்கள் பற்றிய தகவல்களைத் தந்துள்ளார்.

இந்த வகையில் சில வாரங்களுக்கு முன்னைய இக் கட்டுரையில் எனது எழுத்துக்கள் பற்றிய தகவல்களை வழங்கியுள்ளார்.

இதைத் தவிர திரு.பேராசிரியன், வே.ஆறுதுகம், வேல்நந்தகுமார், பாலவயிரவநாதன், பேராசரியர் வேலுப்பிள்ளை, பேராசரியர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசரியர் சண்முகதாஸ் உள்பட பலரைப் பற்றிய தகவல்களையும் தந்துள்ளார்.

இதில் என்னைப் பற்றி எழுதியவற்றை ஸ்கான் பிரதி பண்ணி உங்களுடன் பகிர்கிறேன்.

என்னைப் பற்றி விரிவாக  எழுதியிருக்கும் புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களுக்கும் பிரசுரித்த தினக்குரல் பத்திரிகைக்கும் எனது நன்றிகள்

நன்றி இரத்தினவேலோன் அவர்களே

0.00.0

Read Full Post »

கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகள்.

என்னை இன்று எமது கதைகளின் கதையைத்தான் பேச அழைத்துள்ளார்கள். நான் கூட்டிலிருந்து சிறகடித்து வானளக்கும் எம் ஊர்க் கதைக்குருவிகளின் கதைச் சொல்கிறேன்.

ஊர்கள் சிறியன. பெருநாடுகளின் தள வள ஆளனி வலுக்குகளுடன் ஒப்பிடுகiயில் சிற்றூரிலும் சிறியது எமது நாடு. அதில் இலங்கை பூராவும் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தமிழ்பேசும் சமூகங்கள் ஏனைய உலக சமூகங்களுடன் ஒப்பிடுகையில் கணக்கில் கொள்ள முடியாதவை. நுணுக்குக் கண்ணாடிகளால் தேட வேண்டியவை.

இருந்தபோதும் நாற்திசைகளிலிருந்தும் உலகளாவ எமது குரல் ஓங்காரமாக ஒலிக்கிறது. அதுவும் இனிய தமிழில் ஒலிக்கிறது. கதைகளாக, கவிதைகளாக, ஒலிப்பேளைகளாக, ஒளிச்சித்திரங்களாக சிறகடித்து வலம் வருகின்றன. தமிழ் இலக்கியப் பரப்பில் ஒரு நீண்டகால வாசகன் என்ற முறையில் இது எனக்கு மகிழ்வைத் தருகிறது.

ஆனால் இதற்காக எமது எழுத்தாளர்கள் நெடும்பயணம் செய்ய வேண்டியிருந்தது. கிடுகு வேலிகளுக்குள் அடைபட்டுக் கிடந்த எமது சிறுகதைகள் பெருவீதி கடந்து வான்வெளி எட்ட பெரு முயற்சிகள் தேவைப்பட்டன.

கனடாவிலிருந்து முத்துலிங்கம், மறுபுறம் ஆஸ்த்திரேலியாவிலிருந்து ஆசி.காந்தராசாவும் ‘உயரப் பறக்கும் காகங்கள்’, மத்திய கிழக்கிலிருந்து ரிஸான் ஷெரிபும், ஜேர்மனியிலிருந்து பொ.கருணாகரமூர்த்தி, சந்திரவதனா செல்வகுமாரன் ம் இங்கிருந்து உமா வரதவாஜன்ரஞ்சகுமார் , ராகவன் போன்றோரும், இன்னும் ஏராளமான பலரும் எமது வாழ்வின் ஒளிந்து கிடந்த பக்கங்களை உலகிற்கு அலங்காரமாக வெளிச்சமிட்டுக் காட்டுகிறார்கள்.

இணையத்திலும், தமிழகம் உட்பட உலகளாவ அவர்களது படைப்புகளைச் சஞ்சிகைகள் வேண்டி வெளியிடுகின்றன.

ஆனால் எமது மூத்த எழுத்தாளர்கள் தங்கள் படைப்புகளை வெளியிட களம் தேடியலைய வேண்டியிருந்தது.

இலங்கையில் சிறுகதை இலக்கியத்தின் ஆரம்பம்

ஈழத்தின் முதற் சிறுகதையை எழுதியவர் யார் என்ற சர்ச்சை ரப்பர் நாடாபோல இழுபட்டுக்கொண்டே போகிறது. இருந்தபோதும் மூலவர்கள் மூவர் என்பதைப் பலரும் ஏற்றுக் கொள்ளவே செய்கிறார்கள்.

இலங்கையர்கோன்

இலங்கையர்கோன், சி.வைத்தியலிங்கம், சம்பந்தன் ஆகியவர்களே அவர்கள். இவர்கள் ஆளுமைமிக்க சிறந்த சிறுகதையாசிரியர்களாக இருந்தார்கள். சிறுகதை என்ற புதிய இலக்கிய வடிவத்தை எமது வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தினார்கள். புராண இதிகாசக் கதைகளை பெரும்பாலும் கருவாகக் கொண்டு கற்பனை ரதத்தில் பயணித்து சுவையான வாசிப்பு அனுபவத்தைத் தந்தார்கள். அவற்றைச் செப்பமாகவும் செய்தார்கள்.

இருந்தபோதும் போதும், எமது மண்ணின் பிரச்சனைகளை பெரிதாக தமது படைப்புகளை வெளிப்படுத்தவில்லை. சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தை தமிழ் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணி அவர்களுக்கானதாக இருந்ததால் அதன் வடிவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கபட்டதில் வியப்பில்லை. கரு, களம் ஆகியவற்றைப்பொறுத்த வரையில் தாம் சார்ந்த சமூகத்தை முன்னிலைப்படுத்தவில்லை எனலாம்.

“இம்மூவரதும் கதைகள் பெரும்பாலும்(1) வரலாற்று இதிகாச சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டிருந்தன. (11) தனிமனித அவலங்களையும் உணர்வுகளையும் (சமூக, யதார்த்த சூழலின்றி) வெளிப்படுத்தின. (111) மனோரதியப் பாங்கில் அமைந்திருந்தன.” எனப் பேராசிரியர் செ.யோகராசா ஒரு கட்டுரையில் குறிப்பிடுகிறார்.

இருந்தபோதும் மண்வாசனையுள்ள, சமூக விழிப்புணர்வை நோக்கிய படைப்புகள் அக்காலத்தில் எழதப்படவில்லை எனக் கூறமுடியாது.

ஆனந்தன் என்ற புனைபெயரில் எழுதிய சச்சிதானந்தன் சாதிப்பிரச்சனையை மிகச் சிறப்பாக அக்காலத்திற்கு ஏற்றவாறு தண்ணீர்த் தாகம் என்ற சிறுகதையில் சொல்லியிருந்தார். நமது பாராம்பரியக் கிராமங்கள், அங்கு பிற்புறத்தில் இருக்கும் கிணறு, சாதித் திமிருள்ள வெள்ளாள சமூக பெரியார், தண்ணீர்த் தாகத்தில் அதில் நீர் அள்ளிக் குடிக்கும் தாழ்த்தப்பட்ட சமூகப் பெண் என அக் கதையை யதார்த்தமாக நகர்த்தியுள்ளார்.

மூலவர்களினதும் அதைத் தொடர்ந்த மறுமலரச்சி சஞ்சிகை காலகட்டத்துப் படைப்புகளான இலங்கையர்கோனின் ‘வெள்ளிப் பாதரசம்’, சம்பந்தனின் துறவி, சி.வைத்தியலிங்கத்தின் ‘பாற்கஞ்சி’ கனகசெந்திநாதனின் ‘ஒரு பிடி சோறு’, அ.செ.முருகானந்தனின் ‘வண்டிச் சவாரி’ போன்றவை இன்றும் பேசப்படுமளவிற்கு மிகச் சிறந்த படைப்புகளாக இருக்கின்றன.

குடாநாட்டுக்கு அப்பாலான முயற்சிகள்

மேற் கூறிய முயற்சிகள் யாழ்ப்பாணத்தில் கருக்கட்டிய வேளையில் மலையகத்திலும் சிறுகதை படைப்பாக்க முயற்சிகள் தோன்ற ஆரம்பித்தது. மலைநாட்டுத் தோட்டத் தெழிலாளர்கள் பற்றி திரு.கோ.நடேசஐயர் சில சிறுகதைகளை எழுதியாக அறிய முடிகிறது. கே. கணேஷ், அவர்களும் இவ்வாறன முயற்சிகளில் எழுதியுள்ளார். ‘சத்திய போதி மரம்’ என்ற அவரது சிறுகதை அறம் வெல்லும் என்பதை உணர்த்தும் ஒரு நல்ல படைப்பாகும்.

மற்றொரு புறத்தில் கிழக்கு மாகாணத்தில் அதிலும் முக்கியமாக மட்டக்களப்பு பிரதேசத்திலிருந்தும் சிறுகதை எழுத்து விதைவிட ஆரம்பித்தது. வித்துவான் கமலநாதன், சிவா, மற்றும் புரட்சிக் கமால் ஆகியோரை முன்னோடிகளாக ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள். பித்தன் மற்றொரு சிறந்த சிறுகதையாசிரியர் ஆவார்.

வ.அ.இராசரத்தினம்

மூதூர் பிரதேசத்திலிருந்து எழுதியவரான வ.அ.இராரத்தினத்தின் ‘தோணி’ இன்றளவும் போற்றப்படும் படைப்பாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

1950 முற்பட்ட காலகட்டத்தில் அவ்வாறான சிறந்த சிறுகதைகள் ஈழத்துச் சுழலில் எழுந்தபோதும், அதற்குப் பிற்பட்ட காலத்தில்தான் எமது சிறுகதைத் துறையில் பாரிய துரித வளர்ச்சியைக் கண்டது எனலாம். இதற்கு இரண்டு காரணங்களைச் சொல்லலாம்.

புதிய வீச்சுகள் 50களின் பின்

உலகளாவிய ரீதியில் தொழிலாளர் நலம் சார்ந்த உணர்வுகளும், உள்நாட்டில் தேசிய உணர்வு வலுப்பட்டதையும் காரணங்களாகச் சொல்லலாம். உலகளாவிய ரீதியில் ஸ்பெயின், பிரான்ஸ், ஆஸ்திரியா, போன்ற தேசங்களில் தோன்றிய விடுதலை இயக்கங்களின் செயற்பாடுகள் அடக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையையும் உத்வேகத்தையும் அளித்தன. பாஸிசத்திற்கு எதிரான உணர்வு வலுப்பெற்றமையும்,
பொதுமக்களிடையேயான அரசியல் விழிப்புணர்ச்சியும் காரணமாக இருந்தன.

இலங்கையிலும் பொதுவுடமை சார்ந்த கருத்துக்கள் 40, 50களில் மக்களிடையே செல்வாக்குச் செலுத்தின. தொழிலாளர் எழுச்சிகள் தோன்றின. இடதுசாரிக் கட்சிகளின் செல்வாக்கு இளம் சமுதாயத்தினரிடையே பெரும் செல்வாக்கைச் செலுத்தியது. இவை படைப்புலகிலும் பிரதிபலித்தது.

உதிரி எதிரியாக எழுதிக் கொண்டிருந்து முற்போக்கு சிந்தனை கொண்ட எழுத்தாளர்களை இணைக்க முற்போக்கு எழுத்தாளர் சங்கம் உருவாகியது. வெறுமனே பொழுது போக்கிற்காக எழுதுவதை விடுத்து மக்கள் உள்ளங்களில் முற்போக்கு எண்ணங்களை விதைக்கும் எழுத்துக்களை எழுத வேண்டும் என்ற எண்ணம் வலுப்பெற்றது.

இதனால் இன்றுவரை ஈழத்தில் படைக்கபடும் சிறுகதைகள் சமூக உணர்வோடும் அதன் மேம்பாடு நோக்கியுமே படைக்கப்படுகின்றன. வெறுமனே புகழுக்காவும், பொழுதுபோக்கிறாகவும், பாலியல் கவரச்சிக்குமாக எழுதப்படுவதைக் காண்பது அரிது.

மற்றொரு புறத்தில், இலங்கை அரசியலிலும் தேசிய உணர்வு ஏற்பட்டமையும் எமது சிறுகதை வளர்ச்சிக்கு அளப்பரிய வாய்ப்பாக அமைந்தது. எமது மண்ணின் பிரச்சனைகளை மண்வாசனையுடன் எழுதவேண்டும் என்பதை எமது எழுத்தளர்கள் முற்று முழுதாக ஏற்றுக் கொண்டனர்.

இதற்கு மறுபக்கம் ஒன்று உண்டு. இலங்கைத் தேசியம் என எமது முற்போக்கு எழுத்தாளர்கள் எண்ணியும் எழுதியும் வந்த அதே நேரத்தில் சிங்கள தேசியம் எழுச்சி பெற்றது. அதன் பூதாகரத்தன்மை தமிழர் வாழ்வில் அச்சத்தை ஏற்படுத்தின. தமிழ், தமிழர் மீதான மாற்றாந்தாய் மனப்பான்மையும் புறக்கணிப்பும் தமிழ்தேசிய உணர்வை ஏற்றம் பெறச் செய்தன.

இவை எமது இலக்கியத்தில் பிரதிபலிக்க ஆரம்பித்தது.

எனவே முற்போக்குக் கருத்துள்ளவர்கள் ஒரு புறமாகவும், முற்போக்கு அணியினருக்கு எதிரானவர்கள் மற்றொரு அணியினராகவும் செயற்பட ஆரம்பித்தனர். இவ்வாறு எதிரணியில் நின்றவர்கள் முற்று முழுதாக முற்போக்கு கருத்தியலை எதிர்த்தவர்கள் எனப் பொருள்படாது. அவர்களது செயற்பாடுகளை எதிர்த்தவர்கள் எனச் சொல்லாம்.

ஈழத்து இலக்கியப் பரப்பில் முக்கிய விமர்சகர்களாக வெளிப்பட்ட பேராசிரியர்கள் சிவத்தம்பி, கைலாசபதி போன்றவர்கள் முற்போக்காளர்களாக இருந்த காரணத்தால் தம் அணிசார்ந்த எழுத்தாளர்களையும்; முற்போக்கு அம்சங்கள் கொண்ட படைப்புகளை பாராட்டிச் சிலாகித்ததை மறுக்க முடியாது. இதனால்; புறக்கணிக்கபட்ட பலரும் இதில் அடங்குவர்.

இவ்வாறு எதிராக நின்றவர்களில் பலர் எந்தக் கருத்தியல் கோட்பாடுகளுக்குள்ளும் தம்மைப் பிணைத்துக் கொள்ளவில்லை என்ற போதும், இவர்களில் பலர் தமிழ் தேசியம் என்ற கருத்தியலோடு எழுதியமை குறிப்பிடத்தக்கது.

நந்தி, சாந்தன் போன்றவர்கள் ஆரம்பத்தில் முற்போக்கு அணியுடன் இருந்தபோதும், தமிழ் தேசிய உணர்வுடன் படைப்புகளைத தருவதில் பின்நிற்கவில்லை என்பதையும் சுட்ட வேண்டும்.

அணிகளாகப்  பிரிந்து நின்று ஒருவர் மீது மற்றொருவர் எனக் கண்டனக் கணைகளைத் தொடுத்தபோதும் இரு பக்கங்களிலிருந்தும் நல்ல படைப்புகள் வெளிவரவே செய்தன.

மேற் கூறிய இரண்டிற்கும் மாற்றாக மு.தளையசிங்கத்தின் மெய்யுள் அல்லது ஆத்மார்த்தம் சார்ந்த அணியும் எண்ணிக்கை அளவில் குறைந்திருந்தாலும் தனது பலமான பங்களிப்பை ஈழத்துச் சிறுகதை வளர்;சிக்கு அளிக்கவே செய்தது.

இவ்வாறு பல்வேறு பிரிவுகளாக நின்று தங்களுக்குள் மோதியபோதும் எமது மண்ணின், தேசத்தின் இலக்கியம் வளர்ந்து சென்றது.

முற்போக்கு இலக்கியம்

கணேஸ், அ.ந.கந்தசாமி, டொமினிக் ஜீவா, டானியல், என்.கே.ரகுநாதன், நீர்வை பொன்னையன், ஈழத்துச் சோமு, தெணியான், செ.யோகநாதன் போன்ற பலரையும் முற்போக்கு அணி சார்ந்த முக்கிய படைப்பாளிகளாக குறிப்பிடலாம்.
ஈழத்துச் சோமு (நா. சோமகாந்தன்)

மண்ணின் மணத்தை தமது படைப்புகளில் முற்போக்கு அணிசார்ந்தவர்கள் எவ்வாறு கொண்டு வந்தார்கள் என்பதற்கு உதாரணமாக ஒரு படைப்பை நோக்கலாம். இன்று நாம் நினைவு கூரும் ஈழத்துச் சோமு எழுதிய நிலவோ நெருப்போ என்ற சிறுகதை அது. சுமார் 60-70 வருடங்களுக்கு முன்னான ஒரு தோட்டத் தொழில் சார்ந்த ஒரு கிராமத்தை அப்படியே கண்முன் கொண்டு வருகிறது. தோட்ட நிலங்கள், அங்கு மண்ணின் வளத்தைப் பெருக்குதற்காகப் போடப்படும் உரமாக இலை குழைகள், அதை வெட்டி கட்டிக்கொண்டு வரும் பெண்கள், அதை விற்பதற்கு உதவும் தரகர்கள், தரகர்களது தில்லுமுல்லுத்தனங்கள், பாலியல் மன வக்கிரங்கள் என மிகவும் யாதார்த்தமாகச் சொல்லப்பட்டுள்ளது.

தரகனது இச்சைக்கு இணங்காத பெண்ணை உதாசீனம் செய்து அவளது குழைக்கட்டை விற்காது தடுப்பவனுக்கு எதிராகப் ஏனைய பெண்கள் எவ்வாறு எதிர்கொண்டு வெல்கிறார்கள் என்பது வெற்றுக் கோசங்கள் இன்றி இயல்பாக மண்வாசனையோடு சித்தரிக்கப்பட்டுள்ளது. சோமகாந்தனின் ஆகுதி மற்றுமொரு நல்ல படைப்பாகும்.

ஆனால் இதற்கு மாறாக மார்க்சிய கருதியலுக்கு அழுத்தம் கொடுத்து, கலை நயத்தைத் தொலைத்த எழுத்தாளர்களும் உண்டு.

இரு வருடங்களுக்கு முன்னர் ‘ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள்’ என்ற தொகுப்பு நூல் வந்தது. அது பற்றி விமரசித்த லெனின் மதிவாணம் இவ்வாறு கூறுகிறார்.

‘இத்தொகுப்பில், முற்போக்கு நோக்கிலான சிறுகதைகளாக இரத்த உறவு (அ. ந. கந்தசாமி), ஒரு புதிய ஆயுதம் (சி. வி. வேலுப்பிள்ளை), தண்ணீர் (மொஹிதீன்), வாய்க்கரிசி (டொமினிக் ஜீவா), பிரசாதம் (எஸ். அகஸ்தியர்), மண்பூனைகளும் எலி பிடிக்கும் (மருதூர்க்கனி), 47 வருடங்கள் (கே. விஜயன்), தேவ கிருபையை முன்னிட்டு வாழும்…. (காவலூர் ராசதுரை), ஊர் நம்புமா? (நந்தி), ஒரு கிராமத்து பையன் கல்லூரிக்கு செல்கின்றான் (செ. கதிர்காமநாதன்), பெருமூச்சு (ஏ. இக்பால்), எப்படியம் பெரியவன் தான் (தெணியான்), மாறுசாதி (திக்குவல்லை கமால்), நிலவோநெருப்போ?(என்.சோமகாந்தன்), என் நண்பன் பெயர் நாணயக்கார (சாந்தன்), அந்தக் கிழவன் (அ.ஸ. அப்துஸ் ஸமது), பகவானின் பாதங்களில் (மு. கனகராசன்) ஆகியன காணப்படுகின்றன.
மார்க்ஸிய நோக்கிலான சிறுகதைகளாக தண்ணீர்,(கே டானியல்), போர்வை(என். கே ரகுநாதன), சங்கமம்(நீர்வை பொன்னையன்), நேற்றைய அடிமைகள்(செ.யோகநாதன்)ஆகியன காணப்படுகின்றன. இதற்கு மாறாக சாயம் (செ. கணேசலிங்கம்), இங்கெவர் வாழவோ (யோ. பெனடிக் பாலன்) முதலானோரின் கதைகளில் கோட்பாட்டு தளம் வலிந்து புகுத்தப்பட்ட அளவிற்கு அழகியல் அம்சம் பேணப்படவில்லை.’

நந்தினி சேவியர்

முற்போக்கு கருத்தியல் கொண்டபோதும் நந்தினி சேவியர் விமர்சகர்களால் பெரும்பாலும் கண்டு கொள்ளப்படுவதில்லை. மிகச் சிறந்த ஒரு முற்போக்குப் படைப்பாளியாக அவர் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த மார்க்ஸிய கொள்கைப் பிடிப்புக் கொண்டவர். ஆயினும் அவரது படைப்புகளில் எந்தக் கோசமும் முனைப்படுவதில்லை. மிகுந்த கலைநயம் வாய்ந்த படைப்புகளை அவர் தந்திருக்கிறார்.

அண்மையில் அவரது ‘நெல்லிமரப் பள்ளிக்கூடம்’ என்ற தொகுப்பு வெளி வந்தது. அதற்கு முன்னுரை எழுதிய ரவிக்குமார் அவர்கள் ‘குரலை உயர்த்தாமலே கொதிப்பை வாசகனுக்குக் கடத்த முடியும் என நிருபிப்பவை இவரது கதைகள்’ என்கிறார்.

முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர் எழுத்தாளர்களை முற்போக்கான கருத்துக்களை தமது படைப்புகள ஊடாக பரப்புவதை ஊக்குவிப்பதிலும் அவர்களை ஒன்றிணைப்பதிலும் மட்டும் ஈடுபடவில்லை. தமிழ் மரபுகளையும் அறிஞர்களையும் பாராட்டிக் கௌரவிப்பது போன்ற செய்றபாடுகளிலும் ஈடுபட்டது.

இவற்றில் சோமு ஆற்றிய பங்கiளிப்புகளை குறிப்பிடாமல் விட முடியாது. பாரதியாரின் ஞானகுருவென யாழ்பாணத்துச் சுவாமி என்று அழைக்கப்பட்ட அருளம்பல சுவாமிதான் என அ.ந.கந்தசாமி நிறுவியபோது அதனை பெருவிழாவாக அவர் பிறந்த வியாபாரிமூலையில் கொண்டாடியதில் சோமுவின் பங்களிப்பு பலமானதாகும். அதே வியாரிமுலைச் சார்ந்த நான் ஒரு பாடசாலை மாணவனாக அக் கூட்டத்தில் பார்வையாளனாகப் பங்கு பற்றியது எனக்கு நேற்று நடந்தது போல ஞாபகம் இருக்கிறது.

அதேபோல பாரதி நூற்றாண்டு மலர், ஆறுமுகநாவலர் நூற்றாண்டு மலர் ஆகியன வெளியிடுவதற்கான குழக்களில் செயலாளராக பங்காற்றி அளப்பரிய பணியாற்றியதையும் இங்கு குறிப்பிட வேண்டும்.

முற்போக்கு எழுத்தாளர் பலரது படைப்புகள் கருத்திற்கு அழுத்தம் கொடுப்பது என்பது வெறும் கருத்தாக மட்டுமின்றி கோசமாகவும் எழுந்தனால், படைப்புகளை செழுமைப்படுத்துவதில் அவர்களில் பலரும் அக்கறை காட்டாமல் காலத்திற்கு ஏற்ப கதை கட்டிக்கொண்டிருந்தனர்.

தமிழ் தேசியம்

இவற்றால் ஏமாற்றமும், அதிருப்தியும் அடைந்தவர்கள் மாற்றுக் குழுவினராக படைப்பின் செழுமையில் தங்களை ஈடுபடுத்த முயன்றனர். செம்பியன் செல்வன், செங்கைஆழியான், சொக்கன், தெளிவத்தை ஜோசப், சுதாராஜ், குந்தவை, கோகிலாமகேந்திரன், தாமரைச்செல்வி, போன்ற ஏரளமானோரை உதாரணம் காட்டலாம்.

குப்பிளான்.சண்முகம், சட்டநாதன், உமா வரதராஜன் (அரசனின் வருகை), ரஞ்சகுமார் (கோசலை), எஸ்.எல்.எம்.ஹனிபா (மக்கத்துச் சால்வை), ஓட்டாவடி அரபாத், திசேரா, திருகோவிலூர் கவியுகன். ராகவன், போன்றவர்களின் படைப்புகள் இவற்றுள் தனித்துவமான வாசிப்பு அனுபவங்களைத் தந்தவை.

                        எஸ்பொ

எஸ்.பொ எப்பொழுதும் தனித்துவமான படைப்பாளியாக இருந்த அதே நேரம் இலக்கியத்தில் தூய்மை பேணுபவர்களின் கடும் விமர்சனங்களும் ஆளாக நேர்ந்திருக்கிறது.

படைப்புகள் செழுமையாக வரவேண்டும் என்பதில் அக்கறையோடு செயற்பட்டவர் அ. யேசுராசா. தனது படைப்புகள் ஊடாகவும், அலை சஞ்சிகை ஊடாகவும் ஈழத்து படைப்பிலக்கியத்திற்கு ஆற்றிய பணி அளப்பரியது.

முனியப்பதாசன் மற்றொரு தனித்துவமான படைப்பாளி. ஆன்மீகத் தேடல், அழிவும் தேய்வும், ஆணிவேர், துறவி போன்ற பல படைப்புகளை எடுத்துக் காட்ட முடியும். ‘முனியப்பதாசனின் எழுத்துக்கு நிகரில்லை. நிகரெனக் குறிப்படுவதாயின் மௌனி, லா.சா.ராமாமிர்தம், பிச்சமூர்த்தி ஆகியோரையே குறிப்பட முடியும். ஆத்மிகத் துறவியாக வாழ்ந்து மறைந்த அறிஞன்’ எனச் செங்கையாழியான் இவரைப் பற்றிக் குறிப்பிடுகிறார்.

மு.தளையசிங்கம், மு.பொ, ஆகியோரின் ஆத்மார்த்தம் சார்ந்த தனித்துவமான பாதையில் பயணித்தனர். தளையசிங்கத்தின் கோவில்கள், அகல்யை, மு.பொ வீடும் பல்லக்கும், சீதை யுகங்களை விழுங்கிய கணங்கள், போன்ற பல சிறுகதைகளை உதாரணம் காட்ட முடியும். ஆத்மார்த்தத்தோடு தமிழ் தேசிய கருத்தியலோடு இணைந்தவை இவர்களது படைப்புகள்.

நன்றி http://ayalveedu.blogspot.com

ஆனந்தமயில் மற்றொரு சிறந்த படைப்பாளி. இவரது “படைப்புகள் அனைத்துமே சுய அனுபவத்தின் வெளிப்பாடுகள். நாளாந்தம் காணும் நிகழ்வுகள். அத்தோடு முகம் காட்டும் கண்ணாடிபோல எமது வாழ்வின் தெளிவான பிரதிபலிப்பாகவும் இருக்கின்றன. இவற்றால் மிகுந்த நம்பகத்தன்மை கொண்டவையும் கூட. இருந்தபோதும் தகவல் களஞ்சியம் போன்ற அனுபவக் குறிப்புகளாகக் கணிக்கக் கூடிய கதைகளும் அல்ல. ஆழ்ந்த ரசனையும், கூர்ந்த அவதானிப்பும், மானிட நேயமும் கொண்ட ஒரு சாதாரண குடிமகனது உணர்வுகளின் கலாபூர்வமான சித்தரிப்பு என்றே சொல்ல வேண்டும்.” என நான் இவரது ‘ஒரு எழுதுவினைஞரின் டயறி” என்ற நூலுக்கு எழுதிய விமர்சனத்தில் எழுதியதை இங்கு பகிர்வது பொருத்தமாக இருக்கும்.
ஒரு எழுதுவினைஞனின் டயறி’

மு.தளையசிங்கம்

மு.த வின் பாதை நம்பிக்கைக்கு உரியதாகவும், தமிழக எழுத்தார்களின் கணிப்பைப் பெற்றிருந்தபோதும், இவ்வழியில் பின்தொடர்ந்து படைப்பாக்க முயற்சிகளில் இறங்குபவர்கள் அரிதாகவே இருக்கிறார்கள். கருத்தியல் ரீதியாக இவர்களது ஆத்மார்த்த வீச்சு கவிதைகளில் வெளிப்பட்ட அளவிற்கு சிறுகதைகளில் இல்லை என்றே தோன்றுகிறது.

ஆயுதப் போராட்ட காலம்

தமிழர்களின் அரசியல் போராட்டம் பின்தங்கி, ஆயுதப் போராட்டம் முனைப்புற்றபோது படைப்பாளிகள் ஒட்டுமொத்தமாக தமிழ்தேசிய உணர்வில் தெக்கிநின்றனர். போரும், அதனால் சாதாரண மனிதர்களின் பாடுகளும் பேசுகதைகளாயின. போராளிகளின் வீரமும், இனப் பற்றும் படைப்பாக்கம் பெற்றன. சங்ககாலத்திற்குப் பின்னர் தமிழ் இலக்கியத்திற்கு கிடைத்த மிக வித்தியாசமான அனுபவங்கள் சிறுகதை, நாவல், கவிதை என யாவற்றிலும் பதிவாகின.

பார்வையாளர்களாகவும், பாதிப்புக்கு உள்ளாவர்களாகவும் இருந்தவர்கள் மட்டுமின்றி களத்தில் நின்று போராடியவர்களும் தம் அனுபவங்களை படைப்புலகில் விதைத்தனர். மாலதி மலரவன் போன்ற படைப்பாளிகள் கவனத்திற்குரியவர்கள்.

ஆனால் முற்போக்கு இலக்கியத்திற்கு நேர்ந்த அவலம் இங்கும் தன்கைவரிசையைக் காட்டியது. இது பற்றி திருக்கோயில் கவியுகன் ‘..ஆயுதப் போராட்டத்தின் பின் வந்த அவல வாழ்வை, அதாவது மரணம், கைது, ஊனம், காயம் இப்படியான அவல வாழ்வை தங்கள் படைப்புகளில் கருப்பொருளாய்க் கொண்டு, கதையில் வரும் பாத்திரங்களுக்குள்ளேயோ, கதை நகரும் புலத்திற்குள் நுழையாமல் எட்ட நின்று வெளிப்பார்வையில் பின்னிய பல அபத்தமான போலியான படைப்புகளும் வெளிவந்திருக்கின்றன.’

இப்படைப்புகள் பக்கம் சார்ந்தவையாக, அரசியலை விமர்சிக்க முயலாதவையாக இருந்தன என்பதை ‘இயக்கங்களை விமர்சிக்காத வரைக்கும் ஆயுதப் போராட்டம் வேறுபல வழிகளில் (இலக்கியத்தை வளர்ச்சியடையச் செய்துள்ளது’ என்கிறார் மு.பொ. ஆம் எந்தப் படைப்பும் நடுநிலையாக இருக்க முடியாது என்பதை இது சுட்டுகிறது. எமது பக்கத்தில் இல்லாதவற்றை பக்கம் சார்ந்தவை என ஒதுக்கித் தள்ளிப் பழகிவிட்டோம் நாம்.

பெண்ணியம்

பெண்ணியக் கருத்தியல் கொண்ட படைப்புகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டும். ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம், கோகிலா மகேந்திரன், பத்மா சோமகாந்தன், பாலேஸ்வரி, கவிதா, சந்திரா தியாகராஜா, அன்னலட்சுமி ராசதுரை, ரூபராணி ஜோசேப், ராணி சீதரன் எனப் பலரையும் கூறலாம்.

இருந்தபோதும் பெண்ணியம் கவிதையில் கண்ட எழுச்சியைச் சிறுகதைகளில் தரிசிக்க முடியவில்லை.

புலம் பெயர் படைப்புகள்

புலம் பெயர் படைப்புகள் பெரும்பாலும் தாம் இழந்த வாழ்வின் துயரங்களை இரை மீட்பனவாகவே இருந்தன.

ஆனால் அவர்களுள் அ.முத்துலிங்கம், ஆசி.காந்தராஜா, பொ.கருணாகரமூர்த்தி ஆகியோர் புதிய தரிசனங்களைத் தந்தார்கள். வித்தியாசமான படைப்புலகுடன் தொடர்ந்து பயணிக்கின்றனர். அவர்களது களங்கள் புதியன. அப் புதிய களங்குடன் எமது பாரம்பரியங்களை கலந்து படைப்பதில் வெற்றி பெற்றுள்ளார்கள்.

விமல் குழந்தைவேல், ராஜேஸ்வரி.பாலசுப்பிரமணியம், ஷோபா சக்தி, சுமதிரூபன், இரவி.அருணாசலம், சிறிதரன், ரமணீதரன்(சித்தாந்த சேகுவரா), சார்ல்ஸ் போன்றவர்களின் சிறுகதைகளும் அதிகம் கவனத்திற்குள்ளாயின.

தமிழ்நதி

தமிழ்நதி என்ற புனைபெயரில் எழுதிவரும் கலைவாணி கவனத்தில் எடுக்க வேண்டிய படைப்பாளி. சிறுகதை, கவிதை, நினைவுப் பதிவுகள், நூல் விமரிசனமென ‘இளவேனி’ல்’ என்னும் தன் வலைப்பதிவில் படைப்புகளைப் பகிர்ந்து கொள்கிறார். தமிழ்நதியின் ‘நந்தகுமாரனுக்கு மாதங்கி எழுதுவது’ சிறுகதை தொகுப்பு அண்மையில் வெளிவந்தது. ‘கவித்துவ மொழிதலுக்கு’ தமிழ்நதி என்றும், ‘அழகுத்தமிழில்  ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தும் படைப்புகள் எனவும் பாராட்டுக்களைப் பெற்றது இவரது தொகுப்பு.

சுமதி ரூபன் மற்றுமொரு அருமையான படைப்பாளி. யாதுமாகி என்ற சிறுகதைத் தொகுதி வந்துள்ளது. குணேஸ்வரன் இவை பற்றிக் கூறுகையில்

‘இத்தொகுப்பில் உள்ள ஒவ்வொரு கதையும் பெண்களின் ஒவ்வொரு பிரச்சினையை முன்வைக்கின்றது. சிறுவயதில் இருந்து பெண் என்ற காரணத்தினால் ஆணாதிக்க சமூகத்தின் ஒடுக்குமுறைக்கு ஆளாகும் பல பெண்களை கதைகளில் இனங்காண முடிகின்றது.’

நாடு விட்டு புதிய தேசம் நோக்கிய நம்மவர்களின் பயணங்கள் துயரம் தோய்ந்தவை, பனிவயல்களையும், ஆழ்கடல்களையும் தாண்டி, பொருள் காவிகளினுள் ஒளிந்து பயணித்தவற்றைக் கேள்விப்பட்டுள்ளோம். அதில் ஆவி பிரிந்து உடல் சிதைந்து எங்கென்று அறியப்படாதவர்கள் பலபேர். இவை பற்றி வாசித்திருக்கிறோம்.

அரசல் புரசலாகக் கேள்விப்பட்ட ஆனால் வெளிப்படையாகப் பேசப்படாத அவலத்தை ஆவணப்படுத்தியுள்ளார் சுமதி ரூபன். பயண இடைவெளியின்போது பெண் உடல் சிதைக்கப்படல் அதிர்ச்சியளிப்தாக உள்ளது. மிலேச்சத்தனமான இராணுவத்தினரிடமிருந்தும் ஆயுததாரிகளிடமிருந்தும் தன்னைக் காக்க புலம்பெயரப் புறப்பட்டவள், தன்னைப் பயண வழியில் இழக்கும் துயரம் இங்கு பேசப்பட்டுள்ளது.

போருக்குப் பின்னான புதிய பயணம்

பரந்த வானம் எம் முன் விரிந்து கிடக்கிறது. இதில் எமது படைப்பாளிகள் பயணிக்க வேண்டிய திசை எது?

பயணிக்க வேண்டிய திசை

இது போருக்குப் பின்னான காலம். மேனியெங்கும் வடுக்களைச் சுமந்த சமூகம் எம்மது.

 • நம்பிக்கையோடு புதுவாழ்வைத் தேடுபவர்கள் பலருள்ளனர்.
 • இவ்வாறிருக்க, ஆறின புண்ணை மீண்டும் நோண்டி வலியை தூண்டும் வண்ணமே இன்னமும் பலரும் எழுதுகிறார்கள்.
 • பலரது படைப்புகள் எங்கள் சமூகத்தை இன்னமும் இருண்ட வாழ்வை நோக்கித் திருப்புவனவாக உள்ளன.
 • எமது அனைத்துத் துன்பங்களுக்கும் மற்றவர்களையே குறை கூறி நிற்கிறோம்.
 • படைப்பாளிகள் மட்டுமின்றி பத்திரிகைகளும், இலத்திரனியல் ஊடகங்களும் அதையே செய்கின்றன.

இனிவரும் காலங்களில் எமது மக்களுக்கு நம்பிக்கை ஊட்டும் படைப்புகளைத் தாருங்கள்.

 • எமது இனத்திற்கு நீதி கேட்பதில் தவறில்லை. அது அவசியமானதும் கூட.
 • ஆனால் எம்மிடையே ஊறிப்போன சமூக ஏற்றத்தாழ்வுகளையும் பேச முன்வாருங்கள்.

இன்று ஏராளமான எழுத்தாளர்கள் தமது சிறுகதைகளைத் தருக்கிறனர். பலர் நம்பிக்கை உரியவர்களாக உள்ளனர். மூத்தவர்கள் மற்றும் புதியவர்களான அனைவரையும் இக் கட்டுரையில் குறிப்பிடுவது சாத்தியமல்ல. பதச்சோறு போல சில உதாரணங்களையே காட்ட முடிந்தது.

இறவாத புகழுடைய புது நூல்கள்  

மற்றொரு விடயம். எமக்குள்ளே பழங்கதைகள் சொல்வதிலோர் மகிமையில்லை. இறவாத புகழுடைய புது நூல்கள் நம் நாட்டில் இயற்ற வேண்டும். திறமான புலமையெனில் வெளிநாட்டோர் வணங்குதல் செய்வர்.

அவ்வாறு பார் புகழ வேண்டுமெனில் எம் படைப்புகள் செழுமையுற வேண்டும்.

 • கருத்தியலோடு அழகியலும் மேம்படவேண்டும்.
 • ஒரு சிலரின் படைப்புகளே நல்ல இலக்கியத்தரம் வாய்ந்தவையாக உள்ளன.
 • ஏனைய பலரும் பாட்டி கதை சொல்வது போலவும், பத்திரிகைக்குச் செய்திகள் போலவும் கதையாடல் பண்ணுகிறார்கள்.
 • மொழியை வசப்படுத்தி கருத்தை மறைபொருளாக்கி, படைப்பை செதுக்கித் தரும் ஆற்றலை எம் எழுத்தாளர்கள் வளர்க்க வேண்டும்.

அப்பொழுதுதான் எங்கள் கதைக் குருவிகளுக்கு வானமும் வையகமும் ஒன்றுசேர வசப்படும்.

0.0.0.0.0.0.0.0

நோக்கிய ஆக்கங்கள்
 1. முகங்கள் சிறுகதைத்த தொகுப்பு- ஜீவகுமாரன்
 2. சுதந்திரன் சிறுகதைகள்- செங்கை ஆழியான்
 3. நெல்லிமரப் பள்ளிக்கூடம் நந்தினி சேவியர்
 4. திறனாய்வின் புதிய திசைகள் மு.பொ
 5. ஈழத்து முற்போக்குச் சிறுகதைகள்
 6. கடலும் கரையும் மு.பொன்னம்பலம்
 7. மல்லிகை இதழ்கள்
 8. ஈழத்து இலக்கிய செல்நெறியில் முற்போக்குச் சிறுகதைகளின் சுவடுகள் லெனின் மதிவாணம்
 9. ஈழத்துச் சிறுகதை வளர்ச்சி கலாநிதி செ.யோகராசா
 10. ஈழத்துச் சிறுகதைகள் எனது பார்வை முல்லை அமுதன்
 11. ‘யாதுமாகி’ தொகுப்பிற்கான க.குணேஸ்வரனின் விமர்சனம் இணையத்தில்
நா.சோமகாந்தன் நினைவுப்பரவல் நிகழ்வில் நான் வாசித்த கட்டுரை.

மறந்து போகாத சில வலைப்பூவில் வெளியான கட்டுரை

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

‘..யுத்தம் முடிவடைந்து விட்டது. ஆனால் யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்கள் நிறுத்தப்படவில்லை..’ என்பதைத் தமிழ்தரப்பு எப்பொழுதும் கூறிக்கொண்டே வருகிறது.

ஆனால் இங்கே இதைச் சொல்லியது  ஒரு சிங்கள அறிவுஜீவியான திரு.எஸ்.ஜீ.புஞ்சிஹேவா ஆகும்.


‘மொழியும் மனிதநேயமும்’ என்ற நூலில் மேற் கூறிய வாசகங்களைக் கண்டேன். அதில் மேலும்

‘தமிழ்மொழிக்கு உரித்தான கௌரவத்தை வழங்காத எமது பழக்கதோஷம் காரணமாகவே நாம் முப்பது ஆண்டுகால துன்பியல் போரை எதிர்கொண்டோம்’ என்கிறார்.

மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் வெளியிடான இது, சிங்கள மொழியில் வெளியிட்டதின் மொழிபெயர்ப்பு நூலாகும். வாசிப்பு சுவார்ஸம் கெடாமலிருக்கும் வண்ணம் தெளிவாகவும் அழகுறவும் மொழிபெயர்த்தவர் திரு.எஸ்.சிவகுருநாதன் ஆகும்.

‘..எமது மொழி எமது தாயைப் போன்றது. நாம் பெற்ற அனைத்தும் மொழியை முதன்மைப்படுத்தியவையே…நாம் மொழியுடன் பிறந்து வளர்நதோம்….எமது மனிதத்துவத்தை நாம் மொழியின் மூலமே வெளிப்படுத்துகிறோம். எமது மனிதத்துவத்தின் பொதுத்தன்மை மொழி மூலம் வேறுபடுவதாகப்பட்டால் மற்றையவரின் மொழியை நாம் கௌரவிக்க வேண்டும்.

…. மேற்கண்டவாறு கௌரவிக்கப்படும் உரிமையை இழக்கும்போது குறிப்பிட்ட மொழியைப் பேசுபவர் எவ்வாறு உணர்வார். தனது தாயை, தனது ஆத்மாவை, தான் மனிதன் என்பதை புறக்கணிப்பதாகவே உணர்வார்…’ என்கிறார். ஏனைய மொழிகளை மதிக்கத்தக்க மனிதாபமுள்ள ஒருவரால்தான் அவ்வாறு கூறமுடியும்.

மொழி அதன் பண்பு, மனிதத்தன்மை, அதற்கான உரிமைகள் என மிக சுவார்சமாக மனதைத் தொடும் வண்ணம் நூல் ஆரம்பிக்கிறது. மொழி தொடர்பான சட்டங்கள் சுற்றறிக்கைகள் பற்றி நூல் விபரமாகச் சொல்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தனது கருமங்களை சிரமமின்றி ஆற்றுவதற்கு அவனது மொழியே வசதியானது.

 • ஆனால் எம்மொழி மூலம் ஆட்சி நடத்தப்பட வேண்டும் என்பது பற்றி  1815 கண்டி ஒப்பந்தத்தில் குறிப்படப்படவில்லை.
 • ஆயினும் ஆங்கிலமே நடைமுறையில் இருந்தது.
 • நிர்வாகத்தில் சுயமொழிப்பாவனை பற்றி 1939ல் திரு.பிலிப் குணவர்தன முதலில் குரல் எழுப்பினார்.
 • தமிழும் சிங்களமும் அரசகரும மொழியாக இருக்கவேண்டும் என்ற பிரேரணை 1945ல் கொண்டுவரப்பட்டது.
 • ஆனால் 1956ல் சிங்களம் மட்டும் அரசகரும மொழியானது.
 • 58ல் தமிழ் மொழி உபயோகச் சட்டம் கொண்டு வரப்பட்டபோதும், 1972ல் பௌத்தம் அரச மதமாகவும், சிங்களம் அரசகரும மொழியாகவும் ஆனது. பின்னர் தமிழும் நிர்வாக மொழியாக ஏற்கப்பட்டது.

சட்டங்கள் எவ்வாறு இருந்தபோதும் அவை என்றுமே சரியான முறையில் அமுல் செய்யப்டவில்லை என்பதை நூலசிரியர் சுட்டிக் காட்டுகிறார்.

அரசமைப்பு ரீதியாக ஏற்கப்பட்டவை அமுல் நடத்தப்படாவிட்டால் அதற்கு நீதி மன்றத்திலிருந்து நிவாரணம் கோருவுவதற்கு உதவியான சட்டங்கள் பற்றியும், ஒம்புட்ஸ்மன் இடமிருந்து நிவாரணம் பெறுவது பற்றிய விடயங்களும் இணைக்கப்பட்டுள்ன.

இறுதி அத்தியாயம் ‘மனித உரிமைப் பிரகடனமும், மொழியும்’ ஆகும். இனம், மொழி, மதம் சார்ந்த சிறுபான்மையினரின் உரிமைகள் பற்றிய ஐநா சாசனம் பற்றியும், அதில் இலங்கை கையெழுத்திட்டது பற்றியும் குறிப்பிடுகிறது.

“இன்று யுத்தம் இல்லை என்பது உண்மை. ஆனால் எவரும் அதில் வெற்றியடையவில்லை. மொழியை அடிப்படையாகக் கொண்டே நாம் வெற்றியை அடைய வேண்டும். தொடர்ந்தும் நிர்வாக நிறைவேற்று நடவடிக்கைகள் காரணமாக தமிழ் அல்லது சிங்கள மொழிக்கு பாகுபாடு காட்டப்படால், அது மேலும் வெடி மருந்து சேகரிப்பதற்கு ஒப்பாகும்..”

என்ற நூலாசிரியரின் கருத்து உரியவர்களின் காதில் விழ வேண்டும்.

பக்கம் சாராமல், ஒருவர் மீது குற்றம் சுமத்தாமல் ஆனால் மொழியின் பயன்பாட்டில் சட்ட ரீதியாகவும், நிர்வாக ரீதியாகவும் செய்யப்பட்ட தவறுகளை நூல் சுட்டிக் காட்டுகிறது. மொழி தொடர்பான விடயத்தை உணர்ச்சிகரமாக அல்லாமல் அறிவுபூர்வமாக அணுகுவது நூலின் சிறப்பாகும்.

இருந்தபோதும் சுவார்ஸமாக ஆரம்பித்த நூல் மொட்டையாக முடிவது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இதற்குக் காரணம் முடிவுரையாக ஒரு அத்தியாயம் இல்லாததேயாகும்.

எதையும் உணர்ச்சிவயமாக அணுகப் பழக்கிவிட்ட நாம் (சிங்களவர், தமிழர், முஸ்லீம்கள்) பிரச்சனையை அறிவு பூர்வமாக அணுக உதவக் கூடியது இந்நூலாகும். கட்டாயம் படிக்க வேண்டியதும், பாதுகாத்து வைக்க வேண்டியதுமாகும்.

வெளியீடு:-
மாற்றுக் கொள்கைளுக்கான நிலையம்
24/2, 28  வது ஒழுங்கை
ப்ளவர் வீதி
கொழும்பு 07.
தொலைபேசி- 94(11)12565304

இணைய தளம்-  www.cpalanka.org

மின் அஞ்சல்-  info@cpalanka.org
விலை குறிப்பிடப்படவில்லை.

எம்.கே.முருகானந்தன்.

மறந்துபோகாத சில புளக்கிலும், தினக்குரல் ஞாயிறு பத்திரிகையிலும் வெளியான எனது கட்டுரை

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>மூத்த முற்போக்கு எழுத்தாளரான நீர்வை பொன்னையனின் புதிய தொகுப்புத்தான் “நிமிர்வு”. அதன் வெளீயீட்டு விழா பற்றி சென்ற பதிவில் எழுதியிருந்தேன். அதில் குறிப்பிட்ட எனது முன்னுரை இதுதான்.

முன்னுரை

‘நிமிர்வு’ இது நீர்வை பொன்னையனின் புதிய சிறுகதைத் தொகுப்பு.

‘மேடும் பள்ளமும்’ முதல் ‘நீர்வை பொன்னையன் சிறுகதைகள்’ வரையான ஆறு தொகுதிகளை வாசகர்களுக்கு அளித்தவரின் ஏழாவது சிறுகதைத் தொகுப்பு இது. இதில் அடங்கியிருக்கும் அனைத்தும் கடந்த ஓரிரு வருடங்களுக்குள் எழுதிய புத்தம் புதிய படைப்புகள், முன்னைய தொகுப்புகளில் எவற்றிலும் இடம் பெறாதவை. ஒரே படைப்பை வெவ்வேறு தெர்குப்புகளில் சேர்த்து வாசகர்களின் தலையில் கட்டும் கயமை இல்லாதவர் நீர்வை.

உங்கள் கையில் இந்தச் சிறுகதைத் தொகுப்பு இருப்பதனை இன்றைய காலகட்டத்தின் வெளிப்பாடு எனலாம். நீங்கள் இன்றைய நவீன உலகின் ஒரு உதாரணப் புள்ளி. செயலூக்கம் கொண்ட ஒரு பாத்திரம். அதன் அவசர ஓட்டத்தின் பங்குதாரி. எதனையும் சுருக்கமாகவும், செறிவாகவும் செய்ய வேண்டியது காலத்தின் நியதி. இணைந்து ஓடாதவர்கள் ஓரங்கட்டப்படுவார்கள்.

ஆம்! காலத்தை வீணடிக்காது, சுருக்கமாகவும் செறிவாகவும் பேசி மனமகிழ்வு அளிப்பதுடன் நின்றுவிடாது, உள்ளத்துள் ஊடுருவவும் வைப்பது என்பதால் இன்றைய காலகட்டத்திற்கான இலக்கிய வடிவமாக சிறுகதை ஆகிவிட்டது. எனவே மக்களிடையே தமது கருத்துக்ளைப் பரப்புவதற்கான ஆயுதமாகவும் பயன்படுகிறது. கவிதை மேலும் சுருக்கமானதும் செறிவானதும் என்ற போதும் சற்று அதிக பிரயாசை தேவைப்படுவது. எனவேதான் சிறுகதையே இன்று அதிகம் வாசிக்கப்படும் ஒரு இலக்கிய வடிவமாக இருக்கிறது.

நீர்வை ஒரு படைப்பாளி. பிரதானமாக சிறுகதை எழுத்தாளர். சமூக முன்னேற்றத்தின் ஊடாக புத்துலகைக் காண்பதை நோக்கமாகக் கொண்டு எழுதுபவர். ஈழத்து இலக்கிய உலகில் படைப்பிலக்கியத்தில் தொடர்ந்து இலட்சிய வேட்கையுடன் செயற்பட்டு வரும் ஒரு மூத்த படைப்பாளி. கடந்த ஐந்து தசாப்தங்களுக்கு மேலாக படைப்பாளுமையிலும், அதன் தொடர்ச்சியை பேணுவதிலும் தேக்கமுறாது பயணிக்கிறார். ஆயினும் எழுதிக் குவிப்பவர் அல்ல. இதுவரை சுமார் 60-70 சிறுகதைகளையே தந்திருக்கிறார். மேலெழுந்த வாரியாக அவசரப்பட்டு எழுதப்பட்டவை அல்ல. மிகுந்த சமூகப் பொறுப்புணர்வுடன் எழுதப்பட்ட அவை யாவுமே பெறுமதி மிக்கவை. வயதின் காரணமாக தனது கையெழுத்தின் நேர்த்தியில் தளர்வு ஏற்பட்டுவிட்ட போதும் கலை ஊக்கத்தில் இளைஞனின் உற்சாகத்தோடு செயற்படுபவர்.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழ் இலக்கியப் பரப்பிற்கு புதியது அல்ல. வ.வே.சு ஐயர், புதுமைப்பித்தன், மௌனி போன்ற ஆளுமைகளால் ஊன்றப்பட்ட பதி இன்று ஆலமரம் போல வளர்ந்து விட்டது. மக்கள் மயப்பட்ட ஏனைய ஒரு இலக்கிய வடிவங்கள் போலவே இன்றும் வளர்சியுறுகிறது. அது தேங்கிய குட்டை அல்ல. கால ஓட்டத்திற்கு ஏற்ப தன்னை நிதம் நிதம் புத்தாக்கம் செய்து பொலிவுறுகிறது. அதன் அசைவியக்கதைப் புரிந்து கொண்ட படைப்பாளி தன்னையும் இற்றைப்படுத்தி, தனது ஒவ்வொரு படைப்பிலும் ஏதாவது புதுமையை, தனித்தன்மையை கொண்டு வரவே முயற்சிப்பார்கள்.

நீர்வையும் அத்தகைய ஒரு படைப்பாளியே. எழுத்தாளனாக காலடி எடுத்து வைத்த காலம் முதல் சிறுகதை இலக்கியம் படைத்து வருகிறார். சிறுகதை என்ற இலக்கிய வடிவத்தின் சூட்சுமங்களைப் புரிந்து அதனைத் தனது படைப்புகளில் லாவகமாகப் பயன்படுத்தும் நல்ல படைப்பாளி. அனுபவம் தந்த பாடங்களால் மட்டுமே அவரது படைப்புகள் மெருகூட்டப் படவில்லை. அவரது ஆரம்பத் தொகுப்பான ‘மேடும் பள்ளமும்’ நூலில் உள்ள படைப்புகளை மீள்நோக்கும் போது கலைநேர்த்தி, சொற்தேர்வு பரீட்சார்த்த வடிவங்களில் படைத்தல் போன்ற தேடலுறும் பண்புகளைக் அவரது கன்னிப் படைப்புகளிலேயே காண முடிகிறது. சொற் சிக்கனமும், பொருள் அடர்த்தியும், சின்னஞ் சிறியதான வாக்கியங்களும் அவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்களாகும்.

இந்தத் தொகுதியிலும் அவர் ஒரு வித்தியாசமான புது முயற்சி செய்துள்ளார். சிறுகதையின் வடிவம் சார்ந்த ஒரு பரீட்சார்த்த முயற்சி எனக் கொள்ளலாம். நான்கு கதைகளில் இந்த உத்தியைப் பயன்படுத்தியுள்ளார். இப் படைப்புகள் பந்திகளாகப் பிரிக்கக்படவோ, பகுதிகளாக வேறுபடுத்தப்படவோ இல்லை. ஆரம்பம் முதல் இறுதிவரை ஒரே மூச்சில் தொடர்ச்சியாகச் சொல்லி முடிக்கப்படுகின்றன. ஒரு சில வார்த்தைகளையே கொண்ட மிகச் சிறிய வாக்கியங்கள், அவையும் வரிகள் எனும் கட்டுக்குள் அடங்காது பிரிந்து நிற்பது அழகு சேர்க்கிறது. புதுக் கவிதையோ என மயங்க வைக்கும் நடை. ஆனால் நெடுங் கவிதையாகவும் இல்லை. வாசிக்கும் போது கண்களுக்கு இதமாகவும், மனசுக்கு நெருக்கமாகவும் இருப்பதே அதன் சிறப்பு எனலாம். இதில் அடங்குகின்ற நிமிர்வு, மீட்பு, மீறல், கர்வம் ஆகிய நான்கும் இந்த வகையைச் சார்ந்தவையாக எனக்குப் படுகிறது.

ஆயினும் புதியன செய்ய வேண்டும் என்பதற்காக எழுதுவதில்லை. பேரும் புகழும் பெறுவதற்காகப் படைப்பதில்லை. பாறை போன்ற உறுதியான கொள்கைப் பிடிப்பும், பூப் போன்ற மென்மையான உள்ளமும் கொண்டவர். லட்சிய வேட்கை கொண்டவராக இருப்பதனால் அவரது படைப்புகள் அடக்கப்பட்ட அல்லலுறும் மக்களையும், தொழிலாளர்களையும், அவர் தம் போராட்டங்களையும் வீறுகொண்டு சித்தரிக்கும். சமூகக் கொடுமைகளையும், சாதீயம் போன்ற ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து நிற்கும். அதே நேரம் மிருதுவான மனம் கொண்டவராதலால் தனிமனித உணர்வுகளையும் பதிவு செய்யத் தவறுவதில்லை. நட்பையும் காதலையும், குடும்ப உறவுகளையும் கவனத்தில் கொள்ளவே செய்யும்.

மனித உணர்வுகளைப் பேசும் நீர்வையின் கதைகளில் கூட நிச்சயம் சமூக நோக்கு இருந்தே தீரும். ‘மீறல்’ காலத்தை மீறிய உறுதியான காதலைப் பேசும் கதை. ஆயினும் சாதிப் பிரச்சனையும் சேர்ந்தே வருகிறது. சாதீயத்தின் கொடுங் கரங்களை ஒதுக்கி துணிவோடு காதலித்தவளை கைப்பிடிக்கும் கதை.

முற்போக்கு அரசியலில் நேரடியாக ஈடுபட்டவராதலால் பல அரசியல் கதைகளும் அவரது படைப்பில் அடங்கும். இந்த நூலில் அவ்வாறான நேரடி கட்சி அரசியல் கதைகள் இல்லாதபோதும், தமிழ் அரசியலில் ஆயுதப் போராட்டம் முனைப்புக் கொண்ட காலத்தில் எழுதப்பட்டவையாதலால் அதனை உள்ளடக்கத் தவறவில்லை. தமிழ் அரசியலில் முக்கிய அங்கமாகிவிட்ட ஆயுதப் போராட்டத்தின் மறு பக்கத்தையும் நேர்மையுடன் பதிவு செய்கிறது. அவ்வாறு எழுதிய ஓரிருவரில் நீர்வையும் இடம் பெறுகிறார்.

தமிழ் அரசியலில் ஆயுத போராட்டம் அரும்பத் தொடங்கும் காலக் கதைகள் இரண்டு இடம் பெறுகின்றன.

‘நிமிர்வு’ என்பது கறுப்புக் கோட்டுகாரர்கள் தமிழ் அரசியலில் கோலாச்சிய காலக் கதை. அறம் பிழைக்கின் அரசியலும் பிழைக்கும். அவ்வாறே அங்கு பிழைத்தது. இன்று தெற்கிலும் கறுப்புக் கோட்டுக்காரர்களுடன் கழுத்தில் மாலைக்காரர்கள், ஸ்டெதஸ்கோப்காரர்கள், முனைவர்கள், தெருச்சண்டியர்கள் என எல்லோருமே குட்டை குழப்பி அரசியலைக் கெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இக்கதை தமிழ் அரசியல் போலிகளின் சரிவையே எடுத்துக் கூறுகிறது. குறுகிய வசனங்களுடன் 15 பக்கங்கள் நீளுகிறது. புதிர் போன்ற சிறப்பான முடிவு. மிக வித்தியாசமான ஒழுங்கில் சொல்லப்படுகிறது. நொன் லீனியர் பாணியில் சொல்லும் சாயல் தெரிகிறது.

‘வீழ்ச்சி’ தேசிய அரசியலின் மற்றொரு பக்கத்தைப் பேசுகிறது. அரசுசார் நிறுவனங்களின் உயர் பதவிகள் அரசியல் மயப்படுவதும், அந்த நியமனங்களுக்கான குத்துவெட்டுகளும், தில்லு முல்லுகளும் இவ்வளவு அப்பட்டமாக இலங்கைத் தமிழ் இலக்கியத்தில் பதியப்பட்டதாக ஞாபகம் இல்லை. ஒரு சிறு பாத்திரமாக வரும் பாலா மனத்தில் உயர்ந்து நிற்கிறான்.

நீர்வையின் கதைகளின் உள்ளடக்கம் இவ்வாறு இருக்க அவற்றில் உள்ள கலையம்சங்களை நோக்குவதும் அவசியமாகும். சிறுகதை இலக்கியத்தின் பண்புகளை நீர்வை எவ்வாறு தனது படைப்புகளில் உள்வாங்கியிருக்கிறார் என நோக்குவது சுவார்ஸமாக இருக்கக் கூடும்.

சிறுகதை ஒரு படைப்பிலக்கியம். ஆனாலும் நாவல், குறுநாவல், கவிதை, நாடகம், கட்டுரை போன்ற ஏனையவற்றை விட பல விதத்திலும் மாறுபட்டது. நாவல், குறுநாவல் போன்று கதையைச் சொல்லிச் செல்லும் ஒரு இலக்கியமே இதுவென்ற போதும் இதற்கான பல தனித்துவங்கள் உள்ளன.

சிறுகதை, நாவல் போன்ற எந்தப் படைப்பிலக்கியமாக இருந்தாலும் அதற்கு ஒரு கரு இருக்க வேண்டும். அதாவது அதனுடைய மையக் கருத்து. நாவல் போன்றவற்றில் அந்த மையக் கருவை தீர்க்கமாக வெளிக்கொண்டு வருவதற்காகவே கதை முழுவதும் சொல்லப்படுகிறது. அந்த மையத்தை வலியுறுத்துவதற்காகவே கதையில் சம்பவங்களைக் கோர்த்தும் தொகுத்தும் செல்வார்கள். அல்லது அக் கருவைச் சுற்றியே கதை படர்ந்து செல்லும். இதனால் கதையை அக்கறையோடு படிக்கும் வாசகனுக்கு அப் படைப்பின் கருவை சுலபமாகப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறே எந்த ஒரு படைப்பிலக்கியத்தையும் வாசிக்கும் போது அது ஒரு விடயத்தைச் சொல்லிக் கொண்டு செல்வதாக வாசகன் உணர்வான். அதற்கேற்ப அவனும் தன்னுள் அதனை எழுதிக் கொண்டே செல்வான். இதுவே வாசகப் பங்கேற்பு. நவீன இலக்கிய வடிவங்கள் அனைத்துமே அவனது பங்களிப்பை வரவேற்கின்றன. ஊக்குவிக்கின்றன. வாசகப் பங்களிப்பு இல்லையேல் இன்றைய சூழலில் எந்தப் படைப்புமே வெற்றி பெற முடியாது.

சிறுகதையிலும் அவ்வாறே. ஆனால் சிறுகதையின் வார்ப்பு முறை நாவலை விட முற்றிலும் எதிர்மாறானது. சிறுகதையின் முக்கியம் அது தரும் எதிர்பாராத திருப்பத்தில் மட்டுமே தங்கியுள்ளது. வாசகன் கதையின் முடிவைப் பற்றி என்ன நினைக்கிறோனோ, எதனைத் தன்னுள் எழுதிச் செல்கிறானோ அதற்கு நேர் எதிராக அல்லது வாசகன் நினைத்தே இருக்க முடியாத புதிய கோணத்தில் கதாசிரியர் கதையை திருப்புவார். வாசகன் மலைத்து நிற்பான். அவ்வாறானதே சிறந்த சிறுகதையாகத் தேறும்.

உண்மையில் சிறுகதையின் முடிவே அந்த திடீர்த் திருப்பத்தில்தான் உள்ளது. திருப்பம் வெளிப்பட்டதும் கதை முடிவதே சாலச் சிறந்தது. அதற்கு மேலும் விளக்கம் கூறி கதையை வளர்த்துச் செல்வது வாசகனை சோர்வடையச் செய்யும். தெரிந்த பாடத்தை மீண்டும் கேட்கும் மாணவன் போலச் சலிப்படைய வைக்கும்.

அந்த முடிவானது மிகக்குறைவான சொற்செட்டுடன் கருத்துச் செறிவான வார்த்தைகளாக வெளிப்பட வேண்டும். அப்பொழுதுதான் வாசகன் தனது கற்பனையைச் சிறகடித்துப் பறக்க விட்டு மிகுதியை தனது உள்ளத்துள் புனைந்து செல்ல முடியும். அதனால் வாசகன் பங்கேற்பு மிகவும் பலமாகிறது. படைப்பாளியே அதிகம் சொல்வது வாசகனுக்கு பாரம்.

‘வெறி’ என்ற சிறுகதையின் முடிவானது திடீர்த் திருப்பமாக வருகிறது. சரியாகச் சொன்னால் அக் கதையின் கடைசி வசனமாக வருகிறது. நீண்ட வசனம் கூட அல்ல. மூன்றே மூன்று சின்னஞ் சிறிய சொற்களைக் கொண்ட சிறிய வசனம். அந்த குறுகிய வசனத்தினதும் கடைசி வார்த்தையாகவே இந்தக் கதையின் திருப்பம், முடிவு இரண்டும் இணைந்தே வருகின்றன. சிறுகதை என்ற படைப்பிலக்கியத்தின் பண்புகளை நன்கு புரிந்து கொண்டதால்தான் நீர்வை பொன்னையனால் இவ்வாறு இப்படைப்பை நிறைவு செய்ய முடிந்திருக்கிறது.

குடி ஏறுவதால் மட்டும் வருவது வெறி அல்ல. பணம், பொருள், சொத்து போன்றவையும் சேரச்சேர அவற்றின் மீதான வெறியும் ஏறிக்கொண்டே செல்லும். ஆனால் சொத்து ஆசைக்காக தனது மகளின் வாழ்வையே பணயம் வைக்கும் அளவிற்கு கூட வெறி ஏறுவதை இக்கதையில் படிக்க மனம்நோகிறது. முக்கிய பிரச்சனையாக மனைவியை அவளது பெற்றோர்கள் முன்னிலையிலேயே துன்பப்படுத்துவதும், அவளைச் சோரம் போனவள் எனக் குற்றம் சாட்டுவதுமாக இருக்கிறது. இருந்தபோதும் இந்த சிறுகதையின் மிகச் சிறந்த அம்சம் அதன் முடிவுதான். எந்த ஒரு சிறந்த சிறுகதையின் முடிவும் அதன் திடீர்த் திருப்பத்தில்தான் இருக்க முடியும். ஆண்மைக் குறைபாட்டால் வரும் மனப்பாதிப்பை, அந்தச் சொல்லைப் பயன்படுத்தாமலே மிக சிறப்பாகச் சொல்லியுள்ளார்.

சிறுகதையின் முடிவு பற்றிப் பேசும் இந்த இடத்தில் ‘உடைப்பு’ சிறுகதையும் நினைவு வருகிறது. கீரை விற்கும் ஏழைத் தமிழ் தம்பதிகளுக்கும் சிங்கள நிலவுடைமைக் காரிக்கும் இடையேயான உரசலை மீறிய உறவைப் பேசிச் செல்கிறது. கதையின் கருவானது இனவேறுபாடுகளை மீறிய மனிதநேயமாக இருந்த போதும், பொருளாதார நன்மைகளுக்காக இனமத உணர்வுளைத் தூண்டிவிடும் சூழ்ச்சி பற்றியும் சொல்கிறது. தமிழர்களை பொருளாதார ரீதியாக சுரண்ட முடியும் சுரண்ட வேண்டும் என்ற உணர்வு உயர் அரசியலில் மட்டுமின்றி சாதாரண சிங்கள மக்களிலும் ஊறியுள்ளதை வெளிக் கொண்டு வரும் பதச்சோற்றுப் படைப்பாகவும் கொள்ளக் கூடிய கதை.

ஆனால் அந்தக் கதையின் முடிவு மிக அற்புதமாக அமைந்துள்ளது. ‘பாப்பாத்தி எண்டைக்கும் என்னுடையவள் தான்.’ என ஒரு வசனத்தில் நிறைவுறும் கதையின் முடிவானது திடீர்த் திருப்பத்துடன் வெளிப்படுவது மட்டுமின்றி அதன் கடைசி வரிகள் கவித்துவமாகவும் அமைந்துள்ளதைக் குறிப்பிடலாம். பல நல்ல சிறுகதையாசிரியர்கள் தமது உன்னத படைப்புகளை கவித்துவமான வரிகளால் நிறைவு செய்து அற்புதமாக மனத்தில் விதைத்துச் சென்றுள்ளார்கள்.

சிறுகதை ஆக்கத்தின் மற்றுமொரு முக்கிய அம்சம் படைப்பாளிக்கும் வாசகனுக்கும் இடையில் இருக்க வேண்டிய இடைவெளியாகும். தானாகத் தேர்ந்தெடுத்துப் படைப்பில் விட்டு செல்லும் மௌனம் ஆகும். தௌ்ளத் தெளிவாகச் சொல்வது சிறுகதையின் பண்பு அல்ல. கட்டுரைகள் தான் சந்தேகம் ஏற்படாதவாறு முழுமையாகவும் தெளிவாகவும் சொல்ல வேண்டியவை. படைப்பாளி சொல்வதற்கும் வாசகன் உணர்வதற்கும் இடையில் உள்ள மௌனம்தான் வாசகனைச் சிந்திக்க வைக்கும். அதுதான் படைப்பாளி விட்டுச் சென்ற இடைவெளிகளை தனது கற்பனைகள் மூலம் நிரப்ப வைக்கும். வாசகனையும் படைப்பில் பங்காளி ஆக்கும்.

‘கர்வம்’ சிறுகதையில், தம்பித்துரையின் நாய் ஏழு பேரைக் கடித்து விட்டது. அதை விசாரிக்க ஏரியா பொறுப்பாளர் வருகிறார். விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவில் தம்பித்துரையின் நாயைக் கொண்டு வரும்படி பொறுப்பாளர் கூறுகிறார். அப்பொழுது கூட வந்த போராளி ‘எங்கடை காம்பிலை சமைக்கிற தம்பித்துரையின் நாய் இது’ எனப் பிரஸ்தாபிக்கிறான். இதன்போது எழுகின்ற இடைவெளி எம்மை கற்பனைக்குள் ஆழ்த்துகிறது எம்முள் புனைந்து செல்கிறோம். இதுபோல பல இடங்களில் தனது படைப்பு வெளியில் இடைவெளிகளை விட்டு வாசகனை நிரப்பத் தூண்டுகிறார்.

எந்த ஒரு சிறுகதையும் நினைந்தூற வைத்து மனத்தில் நிலைத்து நிற்க செய்வது அதன் முடிவு என்ற போதும் அதன் ஆரம்பம் சுவார்ஸமாக இல்லையேல் வாசகன் அதனுள் நுழையவே மறுத்து ஒதுக்கி விடுவான். ‘ஒரு ஊரில் தொழிலாளி ஒருவன் இருந்தான்’ என ஆரம்பித்தால் இன்று எவனாவது அப் படைப்பை வாசிக்க முன் வருவானா?

இன்று படைப்பாளிகள் தமது படைப்புகளை பல்வேறு முறைகளில் ஆரம்பிக்கிறார்கள். பலர் தமது படைப்பின் சுவார்ஸமான சம்பவத்துடன் ஆரம்பிப்பார்கள். வேறு சிலர் பீடிகையாக ஆரம்பிப்பார்கள். ‘அவன் பித்தனா? இல்லை. அவன் சித்தனா?’ என்ற பீடிகையுடன் இந் நூலின் முதற் கதையான ‘நிமிர்வு’ ஆரம்பிக்கிறது. இவ்வாறு ஆரம்பிப்பது வாசகனின் ஆவலைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை.

ஆயினும் வாசகனை நேரடியாகவே அப்படைப்பினுள் ஆழ்த்துவதற்கு மிகச் சிறந்த வழி மையக் கருவிலிருந்தே படைப்பை ஆரம்பிப்பதேயாகும்.
‘துரோகி! ஏமாத்திப் போட்டியேடி? பொன்னம்மா பாட்டி கோபாவேசமாயக் கத்துகிறாள்’ என ‘மாயை’ என்ற படைப்பை ஆரம்பிக்கிறார். கதையின் மையக் கருவிலிருந்து, அதனை ஆவேசமாக வெளிப்படுத்தும் உரையாடலுடன் கதை தொடங்குகிறது. 20 பக்கங்கள் வரை நீளும் மிக நீண்ட வித்தியாசமான கதை. ஆயுதப் போராட்டதின் மறுபக்கம், குடும்ப கௌரவம், பெண்களின் மனம் எனப் பலவற்றைப் பேசுகிறது. ஆயினும் அக் கதையின் மையப் பாத்திரமான பெண், தான் சிறுவயது முதல் விரும்பி இருந்தவனை சொத்துக்கு ஆசைப்பட்டு கை விட்டு விட்டுவிட்டாளா என்பதே மையக் கரு. அதனையே முதல் வசனமாகக் கொண்டு நீர்வை கதையை ஆரம்பித்ததில் வாசகனை ஆர்வத்தோடு கதைக்குள்; நுழைய வைக்க முடிகிறது.

இதே சிறந்த படைப்பாக்க முறையை ‘புதிர்’ கதையிலும் காண முடிகிறது. ‘என்ரை அவரை இன்னும் காணேல்லையே’ என ஆரம்பிக்கும் போதே கணைவனைக் காணது ஏங்கும் பெண்ணின் உணர்வை முனைப்படுத்தி படைப்பின் மையத்திற்குள் எம்மை ஆழ்த்திவிடுகிறார்.

இவ்வாறு படைப்பை மையத்திலிருந்து கதையை ஆரம்பிக்கும் போது அதன் முன்கதையை பின்நோக்கு உத்தியில் சொல்லுதல் அவசியமாகிறது. நீர்வையின் பல படைப்புகளில் பின்நோக்கு உத்தி சிறப்பாக பயன்பட்டிருப்பதைக் காண முடிகிறது. பின்நோக்கு உத்தியையும் பல் வேறு முறைகளில் எடுத்தாள முடியும். ஆசிரியர் தானே சொல்லிச் செல்ல முடியும். கதையை கதாபாத்திரங்களின் வாயிலாக ஆங்காங்கே சிதறவிட்டு சொல்லுதல் மற்றொரு முறையாகும்.

நீர்வை பெரும்பாலும் கதா பாத்திரங்களின் உரையாடல்கள் மூலம் கதையை நகர்த்திச் செல்வது வழக்கம். அவரது உரையாடல்கள் இயல்பாக அமைந்திருக்கும். அத்துடன் கதை ஓட்டத்தின் ஒழுங்கு சிதையாது கவனமாக அமைக்கப்பட்டு வாசகனை என்ன நடந்தது எனச் சிந்திக்கவும் வைக்கும். இருந்த போதும் உணர்ச்சிச் சிக்கல்களை வெளிப்படுத்துவதற்கு உரையாடல்களை விட கதாசிரியரின் சித்தரிப்பு முறைமை உதவ முடியும்.

பாத்திர வார்ப்பில் கூடிய கவனம் செலுத்துபவர் நீர்வை. ஓவ்வொரு படைப்பிற்கும் அவசியமான பாத்திரங்களே உலவுகின்றன. தேவையற்ற பாத்திரங்கள் கிடையாது. மையப் பாத்திரங்களைப் பொறுத்த வரையில் பாப்பாத்தியும், சுந்தரமும், வெண் மாதவனும் மறக்க முடியாதவர்கள்.

ஒரு கதையின் களமும் நிச்சயமாக படைப்பினைப் புரிந்து கொள்ள அவசியமே. ‘கொழும்பு மாநகரம் மாலை நேர மழையில் சிலிர்த்து நின்றது’ என ஆரம்பித்தால் களம், நேரம் எல்லாம் தெளிவாத் தெரியும். ஆனால் இது சுவார்ஸம் கெட்ட முறை. வாசகனை கதையில் உள்வாங்காது அலுப்படைய வைக்கும்.

மாறாக களத்தை கதையோடு கதையாக சொல்லி ஆர்வம் கூட்டும் விதத்தில் வாசகனுக்கு அறிமுகப்படுத் முடியும் என்பதற்கு ‘மீட்பு’ கதையை உதாரணமாகக் கூற முடியும். கதை ஆரம்பித்து ஒரு பக்கம் கடந்த பின்னர் ‘எமது ஒன்றித் தலைவன் அணிஷ் றாய் சௌத்ரி’ என்கிறார் நீர்வை. எமது புருவம் உயரக்கிறது. இன்னும் சற்று கடந்து செல்ல ‘ கங்கை நதிக்கிளை ஹில்ஸா மீன்வளையும் ஹீகிளி நதி’ எனும் போது ஆச்சிரியத்தில் மிதக்கும் எமக்கு ‘வங்க … சரம்பூர் கல்லூரி’ எனும் போது களம் பற்றிய தெளிவு கிடைக்கிறது. ஆனால் அதற்கு முன்னரே படைப்புக்குள் முழுமையாக இணைந்து விடுகிறோம்.

சிறுகதையைப் பொறுத்தவரையில் அதன் தலைப்பு என்பது ஒரு அடையாளம் மட்டுமே. சில தலைப்புகள் வாசகனைக் கவர்ந்து வாசிக்கத் தூண்டும். ஆயினும் நல்ல தலைப்பானது கதையை வாசித்து முடிந்த பின்னரும் படைப்போடு இணைத்து அசைபோட வைக்கும். நல்ல கதையோடு மட்டுமே சேர்ந்திருப்பதால் மட்டுமே தலைப்பு பேசப்படக் கூடியது என்பதுடன் அதனை நினைவில் வைத்திருக்கவும் உதவும். நீர்வையின் சிறுகதைத் தலைப்புகள் சுருக்கமானவை, ஒரு சொல்லிற்கு மேற்படாதவை. பொருள் புதைந்தவை. நிமிர்வு, மாயை, பலிஆடு, போன்ற பல தலைப்புகள் நினைவில் நிற்கின்றன. இவை எதுவுமே கதையின் மையக் கருத்தையோ, சாராம்சம் முழுவதையுமோ புட்டுக்காட்டுவது போல வெளிப்படையாக இருந்து வாசகனின் கற்பனைக்கு தடையாக இருக்கவில்லை.

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழுக்கு அறிமுகமான ஆரம்ப கட்டத்துப் படைப்புகள் வாசகனுக்கு ஆர்வத்தையும் கிளர்ச்சியை ஊட்டி இறுதியில் மகிழ்வூட்டும் பணியை மட்டுமே செய்து வந்தன. இன்றும் கூட பல சஞ்சிகைகளில் வெளியாகும் சிறுகதைகள் அத்தகையனவாகவே இருக்கின்றன. ஆனால் அவற்றிற்கு ஒரு சமூக நோக்கு இருப்பது அத்தியாவசியமானதே.

நீர்வை தனது படைப்புகளை சமூகத்தை முன்நிறுத்தியே எழுதுகிறார். சமூக ஏற்றத் தாழ்வுகள் ஒழிந்து எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் உன்னத நிலை ஏற்பட வேண்டும் என்பதே அவரது இலட்சியம். இதற்காக சமூகத்தில் நிலவும் தவறான கருத்துக்களையும், மூட நம்பிக்கைகளையும் கேள்விக்கு உள்ளாக்குகிறார். சமூகப் படிநிலைகளாலும், பாரபட்சங்களாலும், சமூக அநீதிகளாலும் மனிதனை மனிதன் ஒடுக்க முனைவதை எதிர்க்கிறார்.

தனது படைப்புகள் ஊடாக புதிய பார்வையை, புதிய கோணத்தை மக்கள் முன் வைக்க முனைகிறார். அதன் மூலம் சமூக மாற்றம் ஏற்படும் என உறுதியாக நம்பியே படைப்பாக்க முயற்சிகளில் ஈடுபடுகிறார். யோசித்துப் பார்க்கையில் அவரது படைப்பாக்க முயற்சிகள் முழுவதுமே, சமூக மேம்பாட்டை நோக்கிய அவரது போராட்டத்தின் ஓர் அங்கமே எனலாம்.

அறத்தோடு கூடிய வாழ்க்கை முறை கொண்ட நீர்வையின் படைப்புகள் இவை. சாதி, இன, மத, தேசிய, பொருளாதார அடக்கு முறைகள் நீங்கி, ஒடுக்கப்பட்ட மக்களின் விடிவும், சமூக மேம்பாடும், வாழ்வில் அறமும் நிலவ அவாவும் படைப்புகளைக் கொண்ட நூல் இது. இத்தகைய சிறுகதைத் தொகுப்பிற்கு முன்னுரை வழங்க கிடைத்தமை மகிழ்வளிக்கிறது.

எம்.கே.முருகானந்தன்.
27.11.2008

Read Full Post »

>நீர்வை பொன்னையனின் சிறுகதைத் தொகுப்பான ‘நிமிர்வு’ கொழும்பு தர்மாராம வீதியில் உள்ள WERC மண்டபத்தில் மே 10ம் திகதி 2009ல் நடைபெற்றது.

செல்வி திருச்சந்திரன் தலைமை ஏற்று கூட்டத்தை நெறிப்படுத்தினார்.

நூல் பற்றிய முன்னீட்டை எம்.கே.முருகானந்தன் வழங்கினார்.

இது ஒரு வி்த்தியாசமான வெளியீட்டு விழா. இங்கு மாலைகள் போடப்படவில்லை. பொன்னாடைகள் போர்த்ப்படவில்லை. நூல்கள் விற்பனைக்கு விடப்படவில்லை. பிரமுகர் ஒருவருக்கு முதற் பிரதி வழங்கப்படவில்லை. விசேட பிரதிகள் வழங்கப்படவில்லை

ஆனால் கூட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலானவர்களுக்கு (சுமார் 30 பேருக்கு) இரண்டு வாரங்களுக்கு முன்னரே நூல் பிரதி வழங்கப்பட்டு அவர்கள் முழுமையாக அவற்றைப் படித்து தமது மனப் பதிவுகளை ஏற்படுத்திக் கொள்ள கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

அவர்கள் தமது கருத்துக்களை அக் கூட்டத்தில் வெளிப்படையாக, சுருக்கமாக சுமார் 5 முதல் 10 நிமிடங்களுக்குள் வெளிப்படுத்த அவகாசம் கொடுக்கப்பட்டது.

செல்வி திருச்சநதிரன், தெளிவத்தை ஜேசப், பேராசிரியர் சபா ஜெயராஜா, மதுசூதனன், கே.விஜயன்,ந ரவீந்திரன், மு.பொன்னம்பலம், மகப் பேற்று மருத்துவர் நஜீமுடீன், நாடக் கலைஞர் முத்துலிங்கம், இந்து கல்லூர் உபஅதிபர் இராஜரட்ணம் உட்பட பலரும் தமது கருத்துக்களை வெளியிட்டனர்.

மிக வித்தியாசமான இக் கூட்டம் மிகவும் வரவேற்கப்பட வேண்டிய முன்னோடி முயற்சியாகும். முகத்திற்கு முன் பாராட்டி முதுகுப் பக்கமாகத் தூற்றும் வழமைமைக்கு மாறாக இது நடை பெற்றது. நூல் பற்றிய ஆய்வே முதன்மை பெற்றது.

கூட்டத்தில் கருத்துத் தெரிவித் த பலரும் நீர்வை பென்னையன் தொடர்ந்து 5 தசதப்தங்களாக இலக்கியப் பங்களிப்பு செய்வதுடன் சிறுகதை எழுதுவது பற்றிப் பாராட்டினர்.

இலங்கையில் முற்போக்கு எழுத்தாளர்கள் பலரும் கருத்திற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்து கலையழமை கவனத்தில் எடுக்காத நிலையில் இவர் ஆரம்ப காலம் முதல் கலைநேர்த்தியை கவனத்தில் கொண்டது பற்றி பாராட்டுத் தெரிவித்தனர்.

கட்சி சார்ந்த கதைகளை எழுதிய போதும் அதிலும் கலைநயம் இணைந்திருந்ததைக் குறிப்பிடனர்.
புதிய வடிவங்களைத் தேடும் போக்கும் இவரிடம் ஆதி முதல் இருந்ததமை சுட்டிக் காட்டப்பட்டது.

இத்தொகுப்பில் உள்ள நான்கு சிறுகதைகள் மிக வித்தியாசமான வடிவில், நடையில் எழுதப்பட்டதைப் பலரும் பாராட்டினர்.

நான் அவரது நூலுக்கு எழுதிய முன்னுரை சில சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

மிக நல்ல முன்னுரை எனப் பலரும் பாராட்டிய போதும், முன்னுரை இந்தளவு விரிவாக இருக்கக் கூடாது. இது வாசகனுக்கும் நூலுக்கும் இடையே நந்தியாக இடையூறு செய்கிறது என வேறு சிலர் கருத்துத் தெரிவித்தனர்.இது முன்னுரையாக இன்றி விமர்சனமாக இருக்கிறது என்றனர் இன்னும் சிலர். சிறுகதை எப்படி இருக்க வேண்டும் என்பதை இம் முன்னுரை எடுத்துக் காட்டுவதாகவும் சொன்னார்கள்.

நான் இந்நூலுக்கு எழுதிய முன்னுரையை இன்னொரு பதிவாக வெளியிட உள்ளேன். அப்பொழுது நீங்களும் உங்கள் கருத்துக்களைக் கூறலாம்.

இக் கூட்டம் பற்றிய விரிவான செய்திகளை வீரகேசரி. தினக்குரல், தினகரன் போன்ற பத்திரிகைகளும் ஞானம், மல்லிகை போன்ற சஞ்சிகைகளும் விரிவாக வெளியிட்டிருந்தது. குறிப்பிடத்தக்கது.

தனிநபர் புகழ்ச்சியையும் நூல் விற்பனையையும் மட்டுமே நோக்கமாக கொண்டு புத்தக வெளியீடுகள் நடைபெறும் சூழலில் பார்வையாளர்களின் கருத்துக்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிக்கும் இத்தகைய கூட்டங்கள் வரவேற்கப்பட்வேண்டியன என்றே சொல்லத் தோன்றுகிறது. இது இலக்கிய வளர்ச்சிக்கு ஆரோக்கியமான சூழலை வளர்க்கும்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »