Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இலக்கிய நிகழ்வு’ Category

தகவம் சிறுகதை பரிசளிப்பு விழாவில் கலந்து கொள்ள வந்திருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது இனிய மாலை வணக்கங்கள். பல மாத உழைப்பிக்கிற்கு பின்னர் இன்று தகவம் குழவினர் நிம்மதிப் பெருமூச்சு விடுகின்றனர்.

DSC_0642

தகவம் அமைப்பானது இலங்கையில் சிறுகதை வளர்ச்சியை உக்குவிப்பதை நோக்கமாகக் 1975 களில் உதயமானது. தமிழ்ச் சிறுகதைகள் பற்றிய கலந்துரையாடல்களை மேற்கொள்ளுதல், தமிழ்ச் சிறுகதை எழுத்தாளர்களை ஊக்குவிப்பது, தமிழ்ச் சிறுகதைகளை நூலாக வெளியிடுவது போன்ற நோக்கங்களைக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்று வரை அதன் பணிகளைத் தொடர்கிறது. நாட்டு நிலமைகள் காரணமாக இடையிடையே தொய்வுகள் எற்பட்டபோதும் தனது பணியினை இயன்றவரை செவ்வனே நிறைவேற்றி வருகின்றது

DSC_0661

இலங்கையில் ஏராளமான தினசரிகள், சஞ்சிகைகள் வந்துகொண்டிருக்கின்றன. சிற்றிதழ்களும் வருகின்றன். இவற்றையெல்லாம் தேடி எடுத்து அவற்றில் கடந்த இரு வருடங்களாக வந்த சிறுகதைகளைப் படித்து, மதிப்பீடு செய்து, தேர்வு செய்வது இலேசான விடயம் அல்ல.

கிடைத்தவற்றை வைத்துக் கொண்டு செய்யப்பட்ட மதிப்Pடு இது. வசந்தியும் தயாபரனும் முழு முயற்சி செய்து தேடி எடுத்த சில நூறு சிறுகதைகள் இவை. கண்ணில் படாது தப்பியிருக்கச் சாத்தியங்கள் இல்லை. இருந்தபோதும் எங்காவது தவறு நேர்ந்திருக்கக் கூடும என்பதை மறுக்க முடியாது.

முழுக்கதைகளும் வாசிக்கப்பட்டு அவற்றில் ஓரளவு நல்ல கதைகள் முதல் கட்டத்தில் வடிகட்டி எடுக்கப்பட்டன. இரண்டு வருடத்தில் சுமார் 400 சிறுகதைகள் வெளிவந்திருக்கும். அவற்றில் ஒவ்வொரு காலண்டிற்கும் சுமார் 10 கதைகள் வரை தேர்ந்தெடுக்கப்பட்டன. இவை மீண்டும் தீவிர பகுப்பாய்விற்கு உட்படுத்தப்பட்டன.  கதையின் கரு, சித்தரிப்பு முறைமை, கலைத்துவ வெளிப்பாடு, மொழி நடை, ஒட்டுமொத்த தாக்கம் போன்ற அம்சங்கள் புள்ளிகள் இடப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன. இறுதியில் பெற்ற புள்ளிகளுக்கு எற்ப படைப்புகள் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்கள் அளிக்கபட்டன.

இருந்தபோதும் வளர்ந்து வரும் இளம் எழுத்தாளர்களை ஊக்குவிக்க வேண்டும் என்பதை தகவம் கவனத்தில் கொள்கிறது. இதன் காரணமாக சாஹித்திய பரிசு பெற்றவர்கள், வேறு பல போட்டிகளில் பரிசுகள் பெற்றவர்கள், தகவத்தில் முன்பு பரிசுகள் பெற்றவர்கள் எனத் தேசிய ரீதியாக அங்கீகாரம் பெற்று, தங்களை எழுத்துலகில் நிலை பெறச் செய்தவர்களுக்கு பரிசுகள் கொடுப்பதைத் தவிர்க்கிறது. அவர்கள் சிறப்புப் பராட்டு வழங்கப்படுகிறது. இந்த நடைமுறை அமரர் இராசையா மாஸ்டர் காலம் முதல் பின்பற்றப்படுகிறது

உதாரணம் சொல்வதானால் இம்முறை ‘மாறுதல்’ என்ற சிறுதைக்காக சிறப்புப் பாராட்டுப் பெறும் தேவமுகுந்தனைச் சொல்லலாம். இளம் எழுத்தாளர் என்றபோதும் தனது எழுத்தாளுமையை சிறுகதை உலகில் பதித்து பரவலான பாராட்டுப் பெற்றவர் தேவமுகுந்தன்.

DSC_0738

ஆரம்பக் காலத்திலேயே தகவம் அவருக்கு பரிசு அளித்து கௌரவித்திருக்கிறது. 2008ம் ஆண்டு இவர் எழுதிய ‘வழிகாட்டிகள’; சிறுகதைக்கு தகவம் பரிசளித்திருக்கிறது. சாஹித்திய பரிசு, வடக்கு மாகாண சபையின் பரிசு, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த பரிசு, அவுஸ்திரேலிய தமிழ் கலை இலகிய சங்கப் பரிசு எனப் பல. இவ்வாறு அங்கீகாரம் பெற்ற எழுத்தாளர் என்பதால் அவருக்கு பரிசு கொடுக்கபப்படாது சிறப்புப் பாராட்டை தகவம் வழங்கியுள்ளது.

இவற்றைத் தவிர மூத்த எழுத்தாளர்களை கௌரவிக்கவும் செய்கிறது. தெளிவத்தை ஜோசப், எஸ்.எல்.எம் ஹனீபா, இன்று கோகிலா மகேந்திரன் எனப் பலர் இவ்வாறு சிறுகதைத் துறைக்கு அவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்களிப்பிற்காக கௌரவிக்கப்ட்டுள்ளார்கள்.

DSC_0637

இதைத் தவிர மறைந்த எழுத்தளரான அமரர்.சி.வி.வேலுப்பிள்ளை பற்றிய நினைவுரை நடைபெற்றதும் அத்தகைய அங்கீகாரத்தில் அடங்கும்.

DSC_0617

இருந்தபோதும் புதிய எழுத்தாளர்களை இனங் கண்டு அவர்களுக்கு பரிசு கொடுத்து ஊக்குவிப்பதையே தகவம் தனது முக்கிய பணியாகக் கருத்துகிறது. அதன் மூலமே ஈழத்துச் சிறுகதைகள் சிறப்பானவையாக, உலக அங்கீகாரம் பெறத்தக்கவையாக வளர முடியும். சினிமா, சீரியல் நாடகம், கணனி, ஐபோன் என வேறு வழிகளில் மூழ்கிக் கிடப்பவர்களை சிறுகதையின் பக்கம் திருப்ப முடியுமாயின் அதுவே மகத்தான பணியாக இருக்கும்.

திருமதி இந்திராணி புஸ்பராஜா எனக்குப் புதிய படைப்பாளி. இம்முறை தனது படைப்பு ஒன்றிற்காக முதல் முறையாக பரிசு பெறுகிறார். செங்கதிர் சஞ்சிகையில் அவர் எழுதிய ‘கற்பெனப்படுவது’ என்ற சிறுகதை 2012ம் ஆண்டின் மூன்றாம் காலாண்டிற்கு பரிசு பெறுகிறது. அது எமக்கு மகிழ்ச்சியளிக்கிறது. பரவலாக அறியப்படாத அவர் தனக்குப் பரிசு கிடைத்தமை பற்றி அறிந்தபோது மிகவும் மகிழ்ச்சியடைந்து ஊக்கம் பெற்றிருக்கிறார். இதை அவருடன் தொலைபேசியில் கதைத்தபோது தான் உணர்ந்ததாக வசந்தி தயாபரன் கூறினார். தகவம் தனது குறிக்கோளை எட்டிவிட்டது என என்னால் உணர முடிந்தது.

DSC_0674

அதேபோல வல்வை நெற்கொழுதாசன், கிரிஸ்டி முருகுப்பிள்ளை, எஸ்அரசரத்தினம் போன்றவர்களும் அண்மைக் காலத்தியே எமது வாசிப்புப் பரப்பில் வந்திருக்கிறார்கள். இவர்கள் பரிசு பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது. ‘ரகசியத்தின் நாக்குகள்’ என்ற தனது கவிதைத் தொகுதி மூலம் அண்மையில் வாசகர்கள் பார்வையை தன் பக்கம் இழுத்தவர் நெற்கொழுதாசன். வேளிநாட்டில் வசிக்கும் வல்வை ஊர் படைப்பாளி அவர்.

அதே நேரம் ஏற்கனவே சிறுகதைப் படைப்புலகில் ஏற்னவே தமது இருப்பை புலப்படுத்தியிருக்கும் சிவனு மனோகரன், ராணி சீதரன், முருகேசு இரவீந்திரன், இராஜேஸ் கண்ணன், சமரபாகு சீனா உதயகுமார், கே;.எஸ்.சுதாகர், கிண்ணியா சபருள்ளா, ஆகியோரும் தலா ஒவ்வொரு பரிசு பெற்றுள்ளார்கள.

DSC_0686

இருந்தபோதும் சிலர் பல பரிசுகள் பெறுவதையும் அவதானிக்க முடிகிறது. உதாரணமாக வி.ஜீவகுமாரன் 4 பரிசுகளையும். தாட்சாயணி 2 பரிசுகளையும். சமரபாகு சீனா உதயகுமார் 2 பரிசுகளையும் பெற்றுள்ளமை குறிப்படத்தக்கது.

DSC_0683

இது தவிர்க்க முடியாததாக இருக்கிறது. அவ் அவ் காலாண்டுகளில் தேர்ந்தெடுக்கக் கூடிய சிறந்த கதைகளை எழுதியிருந்தமையால் அவ்வாறு நேர்ந்தது. இவர்களுள் மேலை நாட்டில் வசிக்கும் நம்மவரான வி.ஜீவகுமாரன் அதிகமாக எழுதுவது மட்டுமின்றி கவனித்து வாசிக்கப்பட வேண்டியவராகவும் இருக்கிறார்

சிறுகதைகளைப் பொறுத்தவரையில் ஜீவகுமாரனின் வித்தியாசமான எமக்கு அந்நியமான புலத்தைச் சேர்ந்தவை. சூழல் வேறு, பிரச்சனைகள் வேறு, அத்துடன் கலாசார முரண்பாடுகளில் சிக்கித்தவிக்கும் மாந்தர்கள் பற்றிவை என்பதால் ரசிக்க முடிகிறது. நிறைய எழுதுகிறார். சிலவேளைகளில் ஒவ்வொரு மாதமும். ஆயினும் சலிப்புத்தட்டாமல் வாசிக்க முடிகிறது.

மாறாக தாட்சணியின் படைப்புகள் எமக்குப் பரிச்சயமான புலத்தில் நடப்பவையாகும். ஆயினும் அவை வெறும் கதைகள் அல்ல பாத்திரங்களின்  உணர்வுகள் ஊடாக நகர்த்தப்படுபவை. கூர்மையான அவதானிப்பும் ஆழமான நடையும் அவரது சிறப்பு.

DSC_0702

சீனா உதயகுமாரும் எமக்குப் பரிச்சமான சூழலில் எழுதினாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார். அடிக்கடி படிக்கக் கிடைத்தாலும் சற்று வித்தியாசமாக எழுதுகிறார்.

DSC_0720

ராஜேஸ் கண்ணனும் அவ்வாறே. மரணவீட்டில் சுன்னப் பாட்டு எமது பாரம்பரிய வழக்கம் எவ்வாறு இன்று மறைந்தழிந்து போகிறது என்பதை உணர்வு பூர்வமான படைப்பாகத் தனது பரிசுக் கதையில் தந்திருந்தார்

DSC_0717

மிகக் குறைவாக எழுதுபவர் சித்தாந்தன். கவிஞனான அவரது ‘நூறாயிரம் நுண்துளைகளால்..’ கதை மிகவும் வித்தியாசமானது. கலைமுகத்தில் வெளியான அப் படைப்பு ஒரு படைப்பாளி பற்றிப் பேசுகிறது. அதன் கருவை விட அது சொல்லப்பட்ட விதம் அற்புதமானது. வழமையான இலங்கைப் சிறுகதை படைப்பாக்க முறையில் இருந்து மாறுபட்டு, கவித்துவமமான நடையில் எழுதப்பட்டுள்ளது.

இவ்வாறு ஒவ்வொரு படைப்பைப் பற்றியும் கூற முடியுமானாலும் கால அவகாசம் இல்லாததால் மற்றைய படைப்புகள் பற்றி பேசவில்லை.

பரிசு பெற்ற 21 கதைகளில் 10 சிறுகதைகள் ஞானம் சஞ்சிகையிலும், நான்கு சிறுகதைகள் ஞாயிறு தினக்குரலிலும்  வெளியாகியுள்ளன. கலைமுகம,; வீரகேசரி ஆகியவற்றில் தலா இரண்டு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன. ஜீவநதி, சுடரொளி, செங்கதிர், ஆகியவற்றில் தலா ஒவ்வொரு பரிசு பெற்ற சிறுகதைகள் வெளியாகியுள்ளன.

இவற்றையெல்லாம் இங்கு கூறுவதற்குக் காரணம் தகவம் பரிசுகள் படைப்புகளின் தரத்தை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்படுகின்றனவே ஒழிய யார் எழுதினார, எதில் எழுதினார்; ஆகியவற்றை நோக்காகக் கொண்டு அல்ல என்பதை வலியுறுத்தவே.

இதன் காரணமாகவே பொருத்தமான பரிசு பெறக் கூடிய சிறந்த சிறுகதைகள் கிடைக்காத காரணத்தால் 2012 காலாண்டில் இரண்டு பரிசுகளும் 2013ல் ஒரு பரிசும் கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இருந்தபோதும் சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சிறப்பாக இருப்பதும் வேறு சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் சொல்லும்படியாக இல்லாதிருப்பதையும் உணரக் கூடியதாக இருக்கிறது. சில விமர்சகர்கள் இதைச் சுட்டிக் காட்டவும் செய்கிறார்கள்.

இதற்குக் காரணம் என்ன? பத்திரிகைகளில் வெளியாகும் அனைத்து சிறுகதைகளின் தரமும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. சில காலாண்டுகளில் பரிசு பெறும் கதைகள் அற்புதமாக இருக்க ஏனைய காலாண்டுகளில் அவை சாதாரண தரத்தில் இருந்தால் இது பரிசுத் தேர்விலும் தாக்கத்தை ஏற்படுத்தவே செய்யும். அமரர் இராசையா அவர்கள் தகவம் பரிசளிப்பு சிறுகைத் தொகுப்பிற்கான முன்னுரையில் இதை ‘மதிப்பீட்டு விழு’ எனச் விளக்குவதை அவதானிக்க முடிகிறது.

DSC_0607

தகவத்தின் பரிசு வழங்கும் இந்தச் செயற்பாட்டால் கிடைக்கப் போகும் பெறுபேறுகள் எவை?

வந்த படைப்புகள் பற்றிய பொது மதிப்பீட்டைச் செய்ய முடியும். அவற்றில் இருந்து சில அவதானங்களை மேற்கொள்ள முடியும். அதன் தொடர்ச்சியாக சிறுகதை இலக்கியம் வளரச்சியடைவதை நோக்கமாகக் கொண்டு செய்ய வேண்டியவற்றைச் சிந்திக்க வேண்டும்.

இலங்கைச் சிறுகதைகளின் தோற்றம் 30களில் ஆரம்பிக்கிறது. பல்வேறு ஆளுமைகள் வருகிறார்கள்

60களில் நவீனத்தன்மையுடைய சிறுகதைகள். பன்முக பரிமாணத்துடன் எழுதப்பட்டன.

இப்பொழுது பெரும்பாலும் ஒற்றைப் பரிமாணக்க கதைகள் பெரும்பாலானவை யுத்தத்தைப் பேசுபவை மற்றவை வறுமையைப் பேசுபவை. வாழ்வின் பல்வேறு பரிமாணங்களை கொண்டு வருவது குறைவு

இன்றைய பல புதிய எழுத்தாளர்களுக்கு கடந்தகாலப் படைப்புகளுடனான பரிச்சயம் குறைவு. தானும் தன்னைச் சுற்றிய 4 பேருடைய படைப்புகள் தவிர்ந்த பரந்த வாசிப்பு அதிகம் இல்லை. எமது இலங்கையர்கோனையும் சம்பந்தனைப் பற்றியும் தெரியாது. தமிழக்கத்தின் புதுமைப்பித்தனையும் மௌனியையும். லாசாராவையும் ஜெயகாந்தனையும் படித்தது கிடையாது.

இதனால் சிறுகதை ஆக்கம் பற்றிய பரந்த அறிவும் பரந்துபட்ட அனுபவமும் குறைவு. அவுஸ்திரேலியாவிலிருந்து ஆ.சி.காந்தராஜாவும் கனடாவிலிருந்து அ.முத்துலிங்கமும் உலகம் சுற்றியதால் தங்களுக்கு கிடைத்த வித்தியாசமான அனுபவங்களை தமிழில் சிறுகதைகள் ஊடாகத் தருவதும் நாங்கள் அவர்களது எழுத்துக்களை ஆர்வத்தோடு படிப்பதற்கு காரணமாகின்றன.

ஆ.சி.காந்தராஜா தனது தாவரவியல் அறிவைக் கொண்டு மாம்பழத்தை பற்றி எழுதும் போது அங்கு சீனா ஆபிரிக்கா என பல கண்டங்களைத் தாண்டும் ஆச்சரியமான அனுபவங்களைத் தருகிறார். மிருக வைத்தியரான நடேசன் சிறுகதை நாவல் போன்ற தனது படைப்புகளில் தனது துறை சார்ந்த அனுபவங்களையும் ஆங்காங்கே கலந்து தந்து ஆர்வமாகப் படிக்க வைக்கிறார். இருந்தபோதும் பல புலம் பெயர்ந்த எழுத்தாளர்கள் ஈழத்துடனான தங்கள் பழைய நினைவுகளைவிட்டு விலக முடியாது திணறுகிறார்கள்.

அத்துடன் இலக்கியம், சமூகவியல், உளவியல் என பரந்தும் கூர்ந்தும் பல படைப்பாளிகளால் பார்க்க முடியாதுள்ளது. சிறுகதை என்பது வெறுமனே கதை சொல்வது அல்ல என்பதைப் பலரும் புரிந்து nhகள்வதில்லை. புதிய மொழி புதிய கரு புதிய நடை என தமக்கென ஒன்றை உருவாக்க பலராலும் முடியாதிருக்கிறது

அச்சுப் பதிவிலிருந்து இணையத்தில் வாசிக்கும் பழக்கமாக மாறியதும் மற்றொரு காரணம். நிறையக் கிடைப்பதால் எதை வாசிப்பது எதை விடுவது என்பது புரியாமல் பலரும் நுனிப்புல் மேய்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் ஊடகம் பெறுமதிமிக்கது. அதைச் சரியாகப் பயன்படுத்தினால் உலக இலக்கிய அறிவை பெறக் கூடிய வாய்ப்பு உள்ளதை மறக்கக் கூடாது.

எமது சிறுகதை இலக்கியம் வளராதிருப்பதற்கு ஆரோக்கியமான விமர்சனங்கள் இல்லாதிருப்பது முக்கிய காரணமாகிறது.

எழுதுவது சிலர். அதைப் பற்றி விமர்சிப்பதும் அந்த ஒரு சிலரே என்ற சூழலில் ஒருவருக்கு ஒருவர் முதுகு சொறியும் விமர்சனமே இங்கு இருக்கிறது. மாறாக ஒருவர் கறாராக விமர்சித்தால் அதைத் தனிப்பட்ட தாக்குதல் என்ற ரீதியிலேயே படைப்பாளிகள் அணுகுகிறார்கள். பேராசிரியர்கள் கைலாசபதியும் சிவத்தம்பியும் விஞ்ஞான ரீதியாகவும் கோட்பாட்டு ரீதியாகவும் படைப்புகளை அலச வழிகாட்டித் தந்தார்கள். ஆனால் அதிலிருந்து மேலெழுந்து கலைத்துவமான படைப்புகளுக்கு வழிகாட்டும் விமர்சகர்கள் எழவில்லை என்றே சொல்ல வேண்டும். மு.பொ., தளையசிங்கம் ஆகியோர் புதிய அணுகுமறையைக் காட்டியபோதும் அது பரவலாகக் கண்டுகொள்ளப்படவில்லை.

ஆரோக்கியமான நல்ல விமர்சனங்கள் இல்லாததால் வாசிக்கத் தூண்டும் ஆர்வம் எழுவதில்லை. நண்பர் கே.எஸ்.சிவகுமாரன் நல்ல படைப்புகளை கோடி காட்டுகிறார் என்பது உண்மை. பலரும் அவற்றால் பயன்பெறுகிறோம். ஆனால் அக்குவேறு ஆணி வேறு பிரித்து விரிவாக எழுதுவதில்லை என்பதால் அவற்றின் ஆழத்தை பலராலும் கண்டுகொள்ள முடிவதில்லை.

எம்மிடையே தேடல் உள்ள எழுத்தாளர்கள் இல்லை என்பதற்கு இங்கு முழுநேர எழுத்தளார் என எவருமே இல்லை என்பது முக்கிய காரணமாகும். ராமகிருஷ்ணனும் ஜெயமோகனும் தங்கள் படைப்புகளுக்காக நேரடி அனுபவங்களைப் பெறப் பயணப்படுவதுபோல எம் எழுத்தாளர்களால் முடியாது. குறுகிய வாசக எல்லையைக் கொண்ட எமது எழுத்தாளர்கள் எழுத்தை முழுநேர வேலையாகக் கொள்வது பொருளாராத ரீதியாகச் சாதிதியமற்றது. ஏனெனில் இங்கு பலரும் தங்கள் தொழிற் கடமைகளுக்கு அப்பால் எழுத்தை ஒரு பொழுதுபோக்காகவே கொள்ள முடிகிறது.

தங்கள் படைப்பை செழுமைப்படுத்த வேண்டும் என்ற எண்ணம் இங்கு எவருக்கும் கிடையாது. நான் ஒரே முறையில் தட்டச்சில் எழுதுவேன் எனப் பீற்றிக்கொள்பவர்கள் தான் இங்கு உண்டு. எழுத வேண்டும். ஆறப் போட்டு திரும்ப வாசித்து மீள எழுத வேண்டும் என்ற உணர்வு வளரவில்லை. நேரமின்மை காரணம் என்று சொல்வார்கள். மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கேட்டு திருத்தும் பண்பு இங்கு கிடையாது. புளக்கில் எழுதும்போது கூட பிரசுரிக்க முன்னர் அபிப்பிராயம் கேட்பதற்கான வசதியைத் தருகிறார்கள். அனால் யாரும் அதைப் பயன்படுத்துவதாகத் தெரியவில்லை.

DSC_0609

செய்ய வேண்டியவை

வாசிப்புப் பழக்கத்தை அதிலும் முக்கியமாக சிறுகதை வாசிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்த வேண்டும்.

வாசிப்பை இயக்கமாக கொண்டு செல்ல வேண்டும்

பாடசாலை மட்டத்தில் மாணவர்களிடையே சிறுகதை வாசிப்பு எழுத்து பற்றிய பிரக்ஞையை ஏற்படுத்த வேண்டும்.

படைப்பாளிகள் தங்கள் படைப்புகளை அச்சு ஊடகத்திற்கு அப்பால் கணனி மற்றும் ஊடகத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.

வித்துவான் வேலன், று.ஆ.ளு சாமுவல் போன்ற எனது ஹாட்லிக் கல்லூரி ஆசிரியர்களை  உதாரணமாக கொள்கிறேன்.

இங்கு நான் பேசியவை பொதுவாக தகவத்தின் கருத்தாக இருக்கிறது.

ஆயினும் எழுத்து மற்றும் உரை வடிவம் என்னது. எனவே இதில் சர்ச்சைக்குரிய விடயங்கள் ஏதாவது இருக்குமாயின் அதற்கான தார்மீகப் பொறுப்பு என்னுடையது.

தகவம் பரிசளிப்பு பரிசளிப்பு விழாவில் நான் ஆற்றிய உரை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

 

Read Full Post »

அண்மையில் நான் படித்த சிறுகதைத் தொகுதிகளில் மிகவும் ஆர்வத்தோடு படித்த தொகுதி ‘ உறையும் பனிப்பெண்கள்’. என்ற சுமதி ரூபனின் நூல்.

Book Covers_0004-001

இலங்கையில் உள்ள வாசகர்கனாகிய எங்களுக்கு ஒரு பெரும் துன்பம் உண்டு. மிக மோசமான, அல்லது சராசரியான நூல்களை அடிக்கடி வாசிக்க வேண்டியிருக்கிறது. இது நாம் விழும்பிச் செய்வது அல்ல. நிர்பந்தத்தினால் செய்ய வேண்டிய நிலை. நண்பர்களும் தெரிந்தவர்களுமான எழுத்தாளர்கள் தலையில் கட்டுவதை வாசிக்க வேண்டும். வாசித்தோம் என்று பொய் சொல்ல முடியாது. இவை பற்றிய கருத்துக்களையும் வெளிப்படுத்த வேண்டிய நிலை.

இது விரும்பிப் படித்த நூல். மிகவும் சுவார்ஸமாக இருந்தது. சொல்லும் மொழி அற்புதமானது. அழகான நேர்த்தியான வசனங்கள்.

இந்த நூலின் மிக முக்கியத்துவமான அம்சம் இது புலம்பெயர்வு வாழ்வு பற்றிய ஒரு பதிவாக இருப்பதுதான். அவர்களது இயந்திரமான வாழ்வு, போலித்தனங்கள், தங்கள் தாயகம் பற்றியும் அங்குள் உணர்வுகள் பற்றியதுமான குற்ற உணர்வின் வெளிப்பாடுகள், பெண்ணியம், ஆண்கள் பற்றிய பார்வைகள்.

ஆண்கள் அனுபவ ரீதியாகச் சொல்ல முடியாத பெண்கள் மட்டமே சொல்லக் கூடிய விடயங்கள். பெண் மொழி என்கிறார்கள். இவை சுமதியின் படைப்புகளிலும் இருக்கின்றன

இதிலும் இரண்டு வகைகள்

 1. வழiமாயன விடயங்கள் ஆயினும் அதிலும் வித்தியாசமான பார்வை தாய்மை திருமணம் போன்ற விடயங்களில்
 2. மற்றைய பெண் எழுத்தாளர்கள் சொல்லத் தயங்கும் விடயங்கள். பெண் எழுத்தளார்கள் மட்டுமின்றி ஆண்கள் எழுதத் தயங்கும் விடயங்கள் இவரால் வெளிப்படையாக ஆனால் ஆபாசம் தொனிக்காது, அழகுணர்வுடன் படைக்கப்படுகின்றன.

உதாரணமாக சுயஇன்பம். இரண்டு கதைகளில் வருகிறது. ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’ மற்றும் 4010.

பெண்களின் விடயங்களைப் பற்றி மட்டுமல்ல ஆண்களின் உணர்வுகள் உணர்ச்சிப் பெருக்குகள் பற்றியும் மிகச் சிறப்பாக வெளியிட இவரால் முடிகிறது.

அமானுஸ்ய சாட்சியங்கள், 40 பிளஸ், ரெக்ஸ் எண்டொரு நாய்க்குட்டி, நட்டஈடு, சூட் வாங்கப் போறன் போன்றவை ஆண்கள் பற்றின. ஆவர்களது உணர்வுகளை மட்டுமின்றி அவர்களின் ஆணவப் போக்கு போலித்தனங்களைப் பேசுகின்றன.

மாறாக இருள்களால் ஆன கதவு, மூளி, எனக்கும் ஒரு வரம் கொடு உறையும் பனிப் பெண்,  ஆகியன பெண்களின் உணர்வுகளைப் பேசுபவை.

சுரீரென வெளிப்படும் விடயங்கள்

“ஆண்களின் உடல்களில் அந்தப் பகுதியில் கண்கள் நிலைத்து நின்றது.”

ஆண்களின் சில்லு முல்லுத்தனங்கள்.

யன்னல் சாத்திய முழங்கை நளாவின் மார்போடு தேய்த்துச் சென்றது’, ‘அத்தானின் பார்வைகள் நிறம் மாறிப்போயிருந்தன’,

‘ஸ்டியரிங்கை மாற்றும்போது அத்தானின் செய்கைகள் – நளாவின் துடையை விரல்கள் உரிசிச் செல்லுதல்,

‘சாரத்தைத் தளர்த்தி மறுகையால் புடைத்து நிற்கும்..’

ஒரே விடயம் பற்றி முற்றிலும் எதிர்மiறாயன பார்வை ‘அமானுஸ்ய சாட்சியங்கள்’, ‘இருள்களால் ஆன கதவு’

கணவன் மனைவி என கனடாவில் வசிக்கும் வீட்டில் விதவையான அக்கா வருவதால் ஏற்படும் பிரச்சனைகள் இரு கதைகளிலும் வருகிறது. ஆனால் இரண்டும் முற்றிலும் மாறான பார்வைகள். ஒரே விடயத்தை இருண்டு கோணங்களில் பார்ப்து சன்றாக இருக்கிறது

“உறையும்; பனிப் பெண்” கன்னி கழியாத பெண்கள் என்று ஊரில் பெசுகின்ற விடயம் பற்றி

தாய்மை மகத்துவமானது. அது கிட்டாத ஏக்கம் சொல்ல முடியாதது. இதைப பற்றிச் சொல்லாத எழுத்தார்களே கிடையாது எனலாம். எழுதியும் வாசித்தும் அலுத்துவிட்ட கரு.  ‘எனக்கும் ஒரு வரம் கொடு’ மிகவும் அற்புதமான கதை. அதன் உள்ளடக்கம் பற்றியதல்ல. அது சொல்லப்பட்ட விதத்தால்

இவரது படைப்புகளின் வெற்றிக்குக் காரணம் என்ன? அவர் எடுத்துக் கொள்கிற கருவா, அவை சொல்லப்படும் விதமா. நிச்சமாக இவரது எழுத்து நடைதான் என்பேன். நல்ல பல எழுத்தாளர்களின் கதைகளில் அது சொல்லும் கதைக்கு மேலாக அந்தப் பாத்திரங்களின் மன உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பiவாயக இருக்கும். உளமன யாத்திரை எனலாமா? உள்ளத்து உணர்வுகளுக்கு வார்த்தை வடிவம் கொடுக்கும் மொழி ஆட்சி அவர்களிடம் இருக்கும்

சுமதி ரூபனின் கதைகளும் உள்ளத்தின் உணர்வுகளை வெளிப்படுத்த முயல்பவைதான். ஆனால் இவற்றை எண்ணற்ற சிறு சுவார்ஸமான சம்பங்களின் ஊடாக கட்டியமைக்கிறார். இவற்றில பல நுணக்கமான அவதானிப்பின அடிப்படையில் வந்தவை. இது உண்மையில் காட்சிப்படுத்தல் போன்றது.  ஒரு திரைப்படத்தில் காண்பது போலிருக்கிறது. இறுக்கமாகச் சொல்லப்படுவதால் குறும்படத்தை உவமை கூறலாம். சம்பவங்களின் தொகுப்பு போல இருப்பதால் இலகுவாக எங்களால் படைப்புக்குள் புக முடிகிறது. கீழை வைக்க முடியாமல் படிக்க முடிகிறது.

அதற்கு வலு சேர்ப்பது அவரது படைக்கும் அற்புதமான வசனங்கள். இவை கவிதை போல ஒருபுறம் மனத்தோடு இணங்கி வருகின்றன. மற்றொரு புறம் அவை படக் கூடாத இடத்தில் விழுகின்ற அடி போல அதிர்ச்சியளிக்கின்றன.

பாத்திரப் படைப்பில் மிகுந்த அவதானம் கொண்ட கதைகள். ஓவ்வொரு பாத்திரமும் கதை முடிந்த பின்னரும் எம்மோடு உலா வருக்னிறன.

“மூளி” கதையின் முடிவு எதிர்பாராத அதிர்ச்சியைக் கொடுத்தது. கணவனை இழந்த துயரில் இருக்கும் பெண் பற்றியது. ‘சும்மா மரக்கட்டை மாதிரி மூலையில் கிடந்தார் எண்டா நாய் கோயிலக்கு  பூவும் பொட்டோடையும் போய் மூசையில் கலந்துவிடுவேன். இனி ஐயா என்னைத் தட்டுத் தூக்க விடமாட்டார்’

இது அந்தப் பெண்ணின் போல உணர்வை வெளிப்டுத்துகிறதா அல்லது சடங்கு சம்பிரதாயங்கள் ஊடாக மறைமுகமாக ஆண்கள் பெண்களை அடக்க முயல்வதைக் காட்ட வருகிறது என்பதைக் காட்டுகிறதா?

பெண்களின் வாழ்வின் அர்த்தம் என்ன? கல்யாணம் குழந்தை பெறுதல் குடும்மபமாக வாழத்தல் இவை மட்டுடா?

“ஏன் கலியாணம் கட்டினனீ பிளளைகளைப் பொத்தனி எண்டு எப்பவாவது உன்னட்டைக் கேட்டனானா?”

“ஒரு நீண்ட நேர  இறப்பு” கதைக்குள் என்னால் புக முடியவில்லை. அரைவாசியில் நிறுத்pவிட்டேன். மீண்டும் வாசிக்க எண்ணினேன். முடியவில்லை. என்னால் இலகுவாக வாசிக்க முடியாத ஒரே ஒரு படைப்பு இதுதான்.

எங்கள் பிரச்சனைகள் வேறானவே அவர்களது நாளந்த பிரச்சனைகள் வேறானவே. ஆனால் அவற்றிகுள் இருக்கும் அடிப்படை உணர்வுகள் ஒன்றுதான். ஆகதி அந்தஸ்து கோருதல், சிறிய வீடுகளுக்குள் இருக்கும் இடப்பிரச்சனை. முக்கியமாக விருந்தினர்கள் வரும்போது. இப்பொழுது நாங்களும் அனுபவிக்கத் தொடங்கிவிட்டோம். ‘வெளிநாட்டு ஆக்கள வந்து நிக்கினம். நுpலத்தில் படுத்ததால் நார் விலி, சமையல் Nலை தூக்கம் இல்லலை என ஆண்கள்.

இவை வெறும் புனைவுகள் கதைகள் அல்ல. வாழ்வின் நிதர்சனங்கள். நாளந்தப் பிரச்சனைகள். ஏற்கனவே சொல்லப்பட்டது போல வெளிப்iடாயகப் பேசப்படாத பிரச்சனைகள் உள்ளன. ஆயினும் அவற்றில் அதீதங்களும் இல்லை. போலிதனங்களும் இல்லை. தான் கண்டதே கேட்டதை மிகுந்து அழகுணர்வுடன் தருகின்ற சிறுகதைகள் இவை.

சுமதி ரூபனின் நூல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வு வெள்ளவத்தை பெண்கள் ஆய்வு மையத்தில்  நடைபெற்றபோது நான் முன்வைத்த சில கருத்துக்கள். 

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.

Read Full Post »

>

புலோலியூர் இரத்தினவேலோன் அவர்களது சிறுகதை தொகுப்பான “புதிய பயணம்“  நூல்  அறிமுக விழாவும் கருத்தரங்கும் எதிர் வரும் ஞாயிறு 27.03.2011 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற இருக்கும் இக் கூட்டத்திற்கு எழுத்தாளர் திருமதி. ராணி சீதரன் தலைமை வகிக்க உள்ளார்.

முதற்பிரதியை புரவலர் அல்ஹாஸ் ஹாசிம் உமர் அவர்கள் பெற்றுக் கொள்வார்கள்.

நூல்  நயவுரை ஆற்ற இருப்பவர்கள்

 1.  திரு.ஜி.இராஜகுலேந்திரா (சட்டத்தரணி) அவர்கள்
 2. தம்பு சிவா (தம்பு சிவசுப்பிரமணியம் எழுத்தாளர் அவர்கள்)

புதிய பயணம் அவரது மீரா பதிப்பகத்தின் வெளியீடாக சுமார் 15 ஆண்டுகளுக்கு முன் வெளி வந்நதது. இப்பொழுது மீள் பதிப்பாக வெளிவர இருக்கிறது.

நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் ஏற்கனவே தனது படைப்புகளான 5 சிறுகதைத் தொகுதிகளையும், 3 விமர்சன நூல்களையும் வெளியிட்டுள்ளார்.

பதிப்பாளர் என்ற முறையில் அவர்களது சொந்த முயற்சியான மீரா பதிப்பகத்தினது வெளியீடு இது. ஏற்கனவே 91 நூல்களை வெளியிட்டுள்ளார். 

புலோலியூர் இரத்தினவேலோன் எனது இனிய நண்பர். ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சிறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இவரது எழுத்துப் பணயம் மேலும் சிறப்புற வாழ்த்துகிறேன்.

Read Full Post »

>

கார்த்திகாயினி சுபேஸ் அவர்களின் ‘தாய் மடி தேடி..’வெளியீட்டு விழா சென்ற ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெற்றது.

வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற்ற அவ் விழாவில் நான் கலந்துகொண்டு ஆற்றிய தலைமையுரையை இங்கு முழுமையாகப் பகிர்ந்துகொள்கிறேன்.

விழா நிகழ்வில் எடுக்ப்பட்ட புகைப்படங்கள் சிலவற்றையும் காணலாம்.

தலைமையுரை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

 திருமதி கார்த்திகாயினி சுபேஸ் எழுதிய தாய்மடி தேடி.. என்ற சிறுகதைத் தொகுதி வெளியீட்டிற்காக இங்கு கூடியிருக்கிறோம்.

தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்களிமிருந்து முதற் பிரதி பெறும் பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கே.தர்மராஜா

 தாய்மடி மீது அமர்ந்திருப்பதின் சுகத்தைச் சொல்ல வார்த்தைகள் இல்லை.
நாம் இன்று வளர்ந்த மனிதர்கள். உங்களில் பலரும் சிறிய பிள்ளைகளின் தாய் தகப்பனகவோ அல்லது பேரன் பேத்தியாகவோ இருப்பீர்கள். அவர்களை அணைத்து பாதுகாப்பும், ஆறுதலும் தரும் நிலையில் இருப்பீர்கள். ஆனால் பின்நோக்கிப் பார்க்கும் எமக்கு ஆறதல் தந்த, ஆசுவாசம் காட்டிய, தேறுதல் கூறிய அம்மாவின் மடியில் கிடக்க வேண்டும் என்ற தாபம் எழுவதை மறுக்க முடியாது. தாயின் அன்பு அத்தனை விசாலமானது.

கார்த்திகாயினியின் கதைகள் பல விடயங்கள் பற்றிப் பேசுகின்றன. சாதீயம், பெண்ணியம், மானிட நேயம், ஆசிரியர்களின் பாலியல் அத்துமீறல்கள், குழந்தையின்மை, சுனாமிப் பாதிப்பு. மிருகங்கள் மீதான பிரியம், இவ்வாறு பலவற்றைப் பேசினாலும், அடிப்படையாக இருப்பது போரினால் சிதைந்த எமது வாழ்வுதான்.

விழாத் தலைவர் எம்.கே.முருகானந்தனிடமிருந்து சிறப்புப் பிரதி பெறும் தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள்

போர் சார்ந்த இந்தப் படைப்புவெளி கார்த்திகாயினிக்கு மட்டும் பிரத்தியேகமானது அல்ல. எழுபதின் பிற்கூறுகளில் கவிதையில் வெளிப்படத்த தொடங்கிய இந்த அம்சம் பிற்பாடு சிறுகதை, நாவல், கட்டுரைகள் என எமது படைப்பிலக்கியம் அனைத்தையும் ஆக்கிரமித்துக் கொண்டது.

தாய்மை

கூட்டத்தில் கலந்துகொண்டவர்களில் சிலர்

 வெளிப்படையாகப் பார்க்கும்போது கார்த்திகாயினியின் படைப்புகள் போரினால் தமிழ் சமூகம் சந்தித்த துன்ப துயரங்களை, அவர்கள் எதிர் கொண்ட அவமானங்களை, உயிர் இழப்புகளை, அங்கயீனங்களை, சமூக அவலங்களைப் பற்றியே பேசுகின்றன.

ஆனால் இவற்றையெல்லாம் இணைத்துக் கோர்க்கும் நார்போல அமைந்திருப்பது அன்புதான். அவற்றின் அடிநாதமாக ஒலித்துக்கொண்டிருப்பது, அளப்பற்ற அன்பு, அள்ள அள்ள வற்றாமல் சுரந்துகொண்டே இருக்கும் அன்பு, கைமாறு எதிர்பார்க்காது வழங்கிக்கொண்டே இருக்கும் அன்பு.

மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரை வழங்குகிறார்

அதிலும் சிறப்பாக அவரது படைப்புகளில் வெளிப்படும் அன்பானது, தாயன்பு என்றே எனது மனத்திற்குப் படுகிறது. அத்துடன் போரினால் தாயை மாத்திரமின்றி தனது குடும்பத்தை இழந்து தனிமரமாகிவிட்டதுடன், அங்கங்களையும் இழந்து வேதனைப்படும் ஒரு குழந்தை தாயன்பிற்காக ஏங்குவதும் மற்றொரு படைப்பாக அமைந்துள்ளது.

திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை) வாழ்த்துரை வழங்குகிறார்

எந்த ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக இருந்தாலும், அது வாசகனது உள்ளத்தில் கள்ளமாகப் புகுந்து கொள்ள வேண்டும், குறுணல்களாக இருக்கும் சீனியைத் தேநீரில் கலந்தால் அது எவ்வாறு தனது உருவத்தை இழந்துவிடுகிறதோ அவ்வாறு தனது வெளிப்படை உருவை முற்றாக மறைந்துவிட வேண்டும். ஆனால் எவ்வாறு தேநீரின் ஒவ்வொரு துளியிலும் அதன் சுவை செறிந்துள்ளதோ அவ்வாறே எழுத்தாளனின் படைப்புகளும் வாசகனின் உள்ளமெங்கும் படர வேண்டும். அதற்கு மேலாக அவனது மூளையின் நரம்புகளை இதமாகச் சுண்டிவிட வேணடும்.

  ஞானம் ஆசிரியர் தி.ஞானசேகரன் வாழ்த்துரை வழங்குகிறார்

தேநீரில் சினி மறைந்து இனிப்புச் சுவை கலந்திருப்பது போல, கார்த்திகாயினியின் படைப்புகளைப் படித்தபோது எனது உள்ளத்தில் கலந்துவிட்ட சுவை அந்த அன்புதான், அதிலும் முக்கியமாக தாயன்பு என்பதாகவே உணருகிறேன்.

வெளியே சென்ற கணவனின் வருகையைக் காத்திருக்கிறாள் மனைவி என்பதை நாம் எமது பழம்தமிழ் இலக்கியங்களில் படித்திருக்கிறோம். “அந்தி சாயும் வேளை அத்தான் வருவான்..” என எமது நாயகிகள் காத்திருந்ததையும் நாம் திரைப்படங்களில் பார்த்திருக்கிறோம். இவை அன்புக்கு ஏங்கி, அரவைணைப்பின் சுகத்திற்கான காத்திருத்தல்கள் ஆகும்.

திருமதி தேவகெளரி சுரேந்திரன், திருமதி கார்த்திகாயினி சுபேஸ், திருமதி ராணி ஸ்ரீதரன்

ஆனால் பயத்தினால் காத்திருப்பு நிகழ்கிறது. இலங்கைவாழ் தமிழ்ச் சமூகம்தான் பீதி கலந்த காத்திருப்பை நன்கு அறிந்திருக்கிறது. வெளியே சென்ற கணவன் திரும்பி வருவானா? பள்ளிக்கும் போன மகன் திரும்பி வருவானா?, ரியூசனுக்குப் போன மகள் திரும்பி வருவாளா என தெருமேல் விழி வைத்துக் காத்திருந்தது எமது சமூகம் பல வருடங்களாக.

வெளியிலிருந்து ஆவேசமாக வந்த வல்லுறுகளும், உள்ளிருந்து நசுக்கிடாமல் ஓசையின்றி நகர்ந்த அரவங்களும் எமது பிள்ளைகளைக் கவர்ந்து சென்ற கதைகளைச் சொல்லி அழுதவர்கள் பல பேர். சொல்லவும் முடியாது, கண்ணீர் சிந்தவும் முடியாது மனதிற்கள் மறுகிப் பித்துப் பிடித்தவர்கள் ஏராளம்.

பிரபல விமர்சகர் திரு.கே.எஸ்.சிவகுமாரன் சிறப்புப் பிரதி பெறுகிறார்.

தன் வீட்டில் இல்லாவிட்டாலும் கூட பக்கத்துவீட்டில், உறவுகளில் இவை நடப்பதைப் பார்த்து கையறு நிலையில் நாம் இருந்திருக்கிறோம்.
இத்தகைய ஒரு சூழலில் தாய் படும் மன உளைச்சலை கார்த்திகாயினி தனது சிறுகதைகளில் அழகாகக் கொண்டு வந்துள்ளார்.

தினக்குரல் பிரதம ஆசிரியர் திரு.வீ.தனபாலசிங்கம் வாழ்த்துரை வழங்குகிறார்

“போனவளைக்காணேல… வாசலுக்கும், வீட்டுக்குமாக மாறிமாறி நடந்தாள். நெருப்பு மேல் நிற்பது போலத் தவித்தாள். அவள் உள்ளம் பிள்ளையாரையும் பலமுறை வேண்டிக் கொண்டது. இது ஒரு கதையில்.

மற்றொரு கதையில்..

“காலம்பிற எட்டு மணிக்கு பள்ளிக்கூடம் போனவள் ஆறுமணி மட்டும் என்ன செய்கிறாளே, ஊருலகம் கெட்டுக் கிடக்குற கேட்டுக்கு இவளும் யோசனை இல்லாமல் நிக்கிறாளே” என்று சலித்தபடி வீட்டு வாசற்படியில் அமர்ந்து கொண்டாள்.

“தாயில்லாப் பிள்ளை எண்டு பொத்திப் பொத்தி வளர்த்தேனே. எந்தப் பாடையிலை போவாரின் கண்பட்டதோ…” என தாயில்லாப் பிள்ளையைத் தாயைப் போல வளர்க்கும் ஆச்சியின் பாசம் தாய்ப்பாசமாக மற்றொரு இடத்தில் வெளிப்படுகிறது.

திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்) வாழ்த்துரை வழங்குகிறார்

குழந்தையைத் தன்னிடமிருந்து பிரித்து எடுத்துச் செல்ல கணவன் முயன்றபோது, “சத்தியமாக நீ இந்தப் பிள்ளைக்கு அப்பன் இல்லை.. உன்னாலை நல்ல அப்பனாக இருக்கவும் முடியாது” என்று முழக்கமிட்டு, தாலி கட்டிய கணவனையே உதறித் தள்ளிவிட்டு கெட்டவள் என்ற அவப் பேரையையும் பொறுக்கத் தயங்காத தாயாக மற்றறொரு கதையில்..

கோழி குஞ்சைப் பாதுகாப்பது போல மற்றொருதாய். வானத்திலிருந்து குண்டு பொழியும் நேரத்தில் பாதுகாப்புக்காக பதுங்கு குழி, மறைவிடம் எதுவும் இல்லாத சூழல். தன் உயிர் போனாலும் பரவாயில்லை, தன் குழந்தையைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில்,  குழந்தையைக் கீழே கிடத்திவிட்டு அதன் மேல் தனது உடலைப் போர்வை போலப் போர்த்திப் பாதுகாக்கும் தாய் என தாயன்பு நூல் முழவதும் பரவிக்கிடக்கிறது.

தாயன்பு போன்ற உணர்வு ஆண்களிடமும் வெளிப்படலாம் என்பதை தெருநாய்கள் மீது ஒருவர் கொண்ட பாசத்தின் ஊடாக எடுத்துக்காட்டுகிறார்.

மருத்துவன் என்ற ரீதியில்

மருத்துவன் என்ற ரீதியில் இத் தொகுப்பில் சொல்லப்பட்ட கதைகளில் இரு சம்பவங்கள் என்னைக்; கவர்ந்தன.

ஊடகவியல் கல்லூரி விரிவுரையாளர் திருமதி தேவகெளரி சுரேந்திரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

சுட்டெரிக்கும் நெருப்பின் மீது நடப்பது போலிருந்தது என ஒரு கதையை ஆரம்பிக்கிறார். மணல் நிறைந்த  ஒழுங்கையில் அவ்வாறு நடக்கிறார். ராணுவ நடவடிக்கைகளால் மரங்கள் அழிந்து, மரநிழல்கள் இல்லாத ஒழுங்கையில் வெய்யில் தகிக்கும் வேளையில் அவர் நடக்கிறார். 70 வயதான அந்த முதிர்ந்த மனிதன். வெறுங்காலோடு நடக்கிறார்.

ஏன் அவ்வாறு நடக்கிறார். செருப்பு அணிய வசதி அற்றவரா? இல்லை. வசதியுள்ளவர்தான். வழியில் தொலைத்துவிட்டாரா அதுவும் இல்லை. அப்படியாயின் ஏன் அவ்வாறு நடக்கிறார்.
காரணம் அடுத்த வரியில் வருகிறது.

திருமதி கார்த்திகாயினி சுபேஸ் அவர்களது ஏற்புரை

கால்கள் கல்லைப் போல விறைத்திருந்தன. சரி கால் விறைத்தால் ஏன் செருப்பு அணியாமல் இருக்க வேண்டும்? பாதங்களில் விறைப்பு ஏற்பட்டதால் காலிலிருந்து செருப்புக் கழன்றுவிடுவது அவருக்குத் தெரிவதில்லை. காலிலிருந்து விடுபட்டு அவை தெருவில் கிடப்பதற்கு அடம் பிடித்ததால் செருப்பிற்கு பிரியாவிடை கொடுத்துவிட்டார் எனச் நகைச்சுவையாகச் சொல்கிறார்.

நகைச்சுவையாகச் சொன்னாலும் மருத்துவ ரீதியில் உண்மையானது. பாதங்கள் விறைத்து உணர்வு தெரியாமல் இருப்பதை மருத்துவத்தில் Peripheral Neuropathy என்போம். வயதான காலத்தில் பலருக்கும் இது ஏற்படுவதுண்டு. இவ்வாறு விறைப்பு ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கிய காரணம் நீரிழிவு நோய்தான். ஆனால் இவருக்கு நீரிழிவு இருந்ததாக எவ்விடத்திலும் ஆசிரியர் கூறவில்லை.

திரு.மு.தயாபரன் ஆய்வுரை நிகழ்த்துகிறார்

மூட்டு வாதம், மது அதீத பாவனை, போதைப் பொருள் போன்றவையும் அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை. எனவே அவரது கால் விறைப்பிற்குக் காரணம் என்ன என்று மருத்துவனான எனது மூளை ஆராயத் தொடங்கியது.

இராணுவ வடவடிக்கைகளால் அப்பகுதியில் உள்ள தாவரங்கள் அழிந்ததாக ஓரிடத்தில் சொல்லியிருந்தார். எனவே போசாக்கான காய்கறி, கீரை வகைகள் அவருக்குக் கிடைக்காமல் இருந்திருக்கலாம். அத்துடன் மனைவி இறந்து இரண்ட வருடங்களாகிவிட்டது. எனவே வாய்க்கு இதமாகவும், உடலுக்கு ஆரோக்கியதுமான உணவு கிட்டியிருக்காது. எனவே விட்டமின் குறைபாட்டால்தான் அவரது காலில் விறைப்பு ஏற்பட்டது என்ற முடியவுக்கு வந்தேன்.

இரண்டாவது விடயம் கை வைத்தியம், வீட்டு வைத்தியம் பற்றியது. பொதுவாக எல்லோருக்கும் மேலைத் தேய மருத்துவ முறைகளில் பிடிக்காத விடயம் அந்த மருந்துகளின் பக்க விளைவுகள்தான். தாவரங்களிலிருந்து அதாவது மூலிகைகளிலிருந்து பெறப்படும் கை மருத்துவம் மற்றும் சுதேசிய மருந்துகள் ஆபத்தற்றவை, பக்கவிளைவுகள் அற்றவை என்ற நம்பிக்கை இருக்கிறது. ஆனால் இது உண்மையானதா?

இக் கதையில் இராணுவத்தினாரால் ஒரு பெண் கெடுக்கப்படுகிறாள். அவளுக்கு கர்ப்பம் தங்கிவிடக் கூடாது என்பதற்றகாக மூலிகைகளிலிருந்து காசாயம் செய்து கொடுக்கிறாள் ஆச்சி. ஆனால் அதையும் மீறி கரு தங்கிவிடுகிறது. குழந்தை ஊனமாகப் பிறக்கிறது.

வரவேற்புரையை நிகழ்த்தியதுடன் விழாவிற்கு முழுப்பொறுப்பா க இருந்து நடாத்திய காரத்திகாயினியின் கணவர் திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்)

கருத் தங்கியிருக்கும்போது தேவையற்ற மருந்துகளை உபயோகிக்கக் கூடாது என்பது எல்லோருக்கும் தெரியும். அவற்றின் பக்கவிளைவுகளால் கரு அழிந்துவிடவோ ஊனமாகப் பிறக்கவோ வாய்ப்பிருக்கிறது என்பதும் தெரியும். இங்கு ஆச்சி அவளுக்குக் கொடுத்திருப்பது மூலிகைகள் மட்டும்தான். ஆனால் குழந்தை ஊனமாகிவிடுகிறது.

மூலிகைகளாலும் பக்கவிளைவுகள் ஏற்படலாம் என்பதை இது காட்டுகிறது. மேலைத்தேய மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகளை மருத்துவர்கள் நன்கு அறிவர். இவை பற்றி ஒவ்வொரு மருந்துப் பெட்டியிலும் தெளிவாகப் பிரசுரங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே அவை பற்றிய விழிப்புணர்வு பொது மக்களிடமும் இருக்கிறது. ஆயினும் மூலிகை மருந்துகளால் ஏற்படக் கூடிய பக்கவிளைவுகள் பற்றி யாருக்கும் எதுவும் தெரியாது. அவை பற்றிய ஆய்வுகள் கிடையாது.

ஆயினும் கதாசிரியர் இந்த கருத்தை வலியுறத்த கதையை எழுதவில்லை. கருத்தைத் திசை திருப்புவது நான்தான். ஆக்கிரமிப்பு இராணுவத்தால் ஏற்படுகிற தாக்கங்களை சொல்ல வருகிறது அக்கதை. ஆனால் மூலிகை மருந்துகளினாலும் ஆபத்தான விளைவுகள் ஏற்படலாம் என்ற விளக்கம் என்னுடையது.

கார்த்திகாயினி இயற்கை வளம் கொளிக்கும் கிராமத்ததைப் பிறப்படமாகக் கொண்டவர். உசன் என்பது அழகான கிராமம். பண்புள்ள மக்கள். எனது மருத்தவ படிப்புக்கால நண்பன் டொக்டர் செல்வராசா என்பவர் அவ்வூரைச் சேர்ந்தவர். 70களில் அவ்வூருக்குச் சென்றிருக்கிறேன். பின்பு ஒரு கருத்தரங்கில் பங்குகொள்ளவும் சென்றுள்ளேன்.

அந்த ஊர். வயல்கள். ஊரை அண்மத்திருக்கும் சிறு காடு. அங்கு பெண்கள் விறகு பொறுக்கப் போதல் என ஒரு அழகான சித்திரத்தை நூலாசிரியர் தந்திருக்கிறார். சூதுவாதற்ற அந்த மக்களின் வாழ்வு எவ்வாறு ஆக்கிரமிப்பினால் சிதைவுறுகிறது என்பதை அழகாகச் சுட்டிக் காட்டியுள்ளார்.

கார்த்திகாயினியின் படைப்பாற்றல் பற்றி

சிறுகதை என்ற இலக்கிய வடிவம் தமிழில் வந்து சுமார் 150ஆண்டுகள் ஆகின்றன. உலகில் எப்பொழுது தோன்றியது? ஆயிரத்து ஒரு இரவுகள் சிறுகதை வடிவின் முன்னனோடி எனக் கருதலாம். ஆயினும் 19ம் நூற்றாண்டின் முற்பகுதியில் அமெரிக்காவில்தான் முதல் முதாலாக சிறுகதை என்று இலக்கிய வடிவம் கொடிகட்ட ஆரம்பித்தது. தமிழில் சுமார் 150 வருடகால சரித்திரம் இருக்கும்.

சிறுகதையின் வடிவமும், சொல்லும் முறைகளிலும் பாரிய மாற்றங்களைக் கண்டுவிட்டோம். ஆரம்பம், மத்திய பகுதி, முடிவு என ஒழுங்கான அமைப்பில் கதை சொல்வதைக் கடந்து பல வருடங்களாகிவிட்டது. ஆயினும் இன்றும் எமது பல எழுத்தாளார்கள் பழைய குட்டைக்குள்ளேயே குடைந்து சேறு பூசிக் கொண்டிருப்பதைக் காண்கிறோம்.

திடீரென கதையின் மையப்பகுதியிலிருந்து கதையை ஆரம்பிப்பது, பின்னோக்கிச் சொல்வது, சம்பவங்களை விட உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுத்தல், சிறுகதையை முடிக்கும்போது இன்னமும் ஏதோ மறைந்திருப்பது போல எண்ண வைத்து வாசகனை படைப்பிலிருந்து விடுபட முடியாமல் மேலும் ஆழச் சிந்திக்க வைத்தல் போன்ற சிறந்த அம்சங்களின் கீற்றுகளை கார்த்திகாயினியின் படைப்புகளில் காணக் கடைக்கிறது.

கார்த்திகாயினி தனது படைப்புகளை மிகுந்த பொறுப்புணர்வுடன் எழுதுகிறார். வெறும் பொழுதுபோக்கிற்கான அவர் எழுதவில்லை. ஆழ்ந்த சமூக நோக்கோடு எழுதுகிறார். தனது மண்ணைப் பற்றி எழுதுகிறார். அந்த மக்களின் உணர்வுகளை துல்லியமாக வெளிப்படுத்துகிறார். அந்த மக்களின் பேச்சு மொழியை அழகாகக் கையாண்டு மண்ணின் மணம் பாரெங்கும் பரவும் வகையில் எழுதுகிறார்.

இவை பற்றி நிறைய உதாரணங்களைக் கூறலாம். நான் கூறுவதை விட நூல் வெளியீட்டுரையை நடாத்த இருக்கும் நண்பர் தெளிவத்தை ஜோசப் அவர்களும், ஆய்வுரை நடாத்த இருக்கும் தேவமனோகரியும், தயாபரனும் தெளிவாகவும் நுணக்கமாகவும் சொல்லுவார்கள்.

ஆயினும் மூத்த எழுத்தாளரான நீர்வை பொன்னையன் இவரது படைப்புலகம் பற்றிக் தனது முன்னுரையில் எழுதியதை இங்கு கூறுவது பொருத்தமாக இருக்கும் என நம்புகிறேன்.

“பாத்திரப் படைப்பு, கதை நகர்த்தல், மொழிவளம், கதை சொல்லும் எத்திகள், கற்பனை வளம், பிரதேச மண்வாசனை, சித்தரிப்பு, உள்ளடக்கமும் உருவகமும் சங்கமிப்பு, கதை;துவம் போன்ற அம்சங்கள் சிறப்பாக அமைந்துள்ளன. மேலும் உவமான உவமேயங்கள், குறியீடுகள் பொருத்தமான முறையில் கையாளப்பட்டுள்ளன” என்கிறார்.

அவரது கருத்தோடு நானு; உடன்படுகிறேன். நூலைப் படித்து முடித்ததும் நீங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என நம்கிறேன்.

நூலாசிரியர் பற்றி

தனது சொந்தக் கிராமத்து ஆரம்பப் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர், 9ம் ஆண்டுக்குப் பின்னர் இராமநாதன் கல்லூரியில் கல்வி கற்று பல்கலைக் கழகத்திற்கும் தேர்வானார். ஆயினும் நாட்டு நிலைமை காரணமாக பொற்Nhறாரைப் பிரிந்து தனியே சென்று படிக்கக் கூடிய சூழல் இல்லததால் பட்டப்படிப்பை மேற்கொள்ள முடியாது போயிற்று.

கார்த்திகாயினிக்கு இளவயதிலேயே இலக்கிய ஆர்வம் ஏற்பட்டுவிட்டது. ஏ.எல் படிக்கும் காலத்திலேயே யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் உதயன் பத்திரிகையில் கவிதைகள் எழுத ஆரம்பித்துவிட்டார். ளுடுடீஊ யில் இசையும் கதையும் எனத் தொடர்ந்தது இவரது இலக்கியப் பயணம். இது இவரது முதலாவது சிறுகதைத் தொகுப்பு என்ற போதும் சிறுவர்களுக்கான இரண்டு கதை நூல்களை ஏற்கனவே வெளியிட்டு உள்ளார்.

மாணவப் பருவத்தில் தனது படைப்பாற்றலை வளர்க்க உதவியாக இருந்தது தனது சித்தப்பா எனப் பெருமை கொள்கிறார். இப்பொழுது எழுத்துப் பணிக்கு உற்சாகம் ஊட்டி உதவி வருவது இவரது கணவன்தான்.

பல இலங்கைத் தமிழ் பெண் எழுத்தாளர்களுக்கு இவ்வாறாக கணவன்மார் ஒத்தாசையாக இருப்பதை எனது நட்பு வட்டத்தில் கண்டிருக்கிறேன். பத்மா சோமகாந்தன், கோகிலா மகேந்திரன், தமிழ்ச்செல்வி, பவானி சிவகுமாரன், ராணி சீதரன், சந்திரகாந்தா முருகானந்தன் எனப் பலருக்கு இலக்கிய உணர்வு உள்ள கணவன்மார் கிடைத்தது அதிஸ்டம் என்றே சொல்லத் தோன்றுகிறது

தினக்குரல் பற்றி

தமிழ் தேசிய உணர்வை வெளிப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்டது. இதனால் மக்களின் மனத்தில் இடம் பெற்றுவிட்டது. இக்கட்டான சூழலில் இத்தகைய ஒரு பத்திரிகையை முக்கியமாக தமிழில் ஆரம்பித்து தொடர்ந்து நடத்துவதற்கு அசாத்திய துணிச்சல் தேவை. ஆதைனைச் செய்து காட்டிய எஸ்.பி.சாமி சாமி ஐயா அவர்கள் பாராட்டுக்கு உரியவராவார். தினக்குரல் விரைவில் கட்டிளம் பருவமான 15 வயதில் நுழைய இருக்கிறது. அதற்கு எமது வாழ்த்துக்களை இப்பொழுதே சொல்லி வைப்போம்.

தினக்குரல் ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் தினமும் நான் அதன் வாசகனாக இருக்கிறேன். அதன் ஆரம்பகால ஆசிரியர் மறைந்த ராஜகோபால், பின்பு சிவநேசச்செல்வன், இப்பொழுது தனபாலசிங்கம், ஞாயிறு ஆசிரியர் பாரதி அனைவரும் எனது நண்பர்களாக இருக்கிறார்கள்.

கடந்த 5 வருடங்களாக தொடர்ந்து ஹாய் நலமா மருத்துப் பத்தியை தினக்குரலில் எழுதிவருவது மகிழ்ச்சியைத் தருகிறது. மருத்தவத்தில் பத்தி எழுத்து பற்றிய முதல் அனுபவம் யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவந்த முரசொலி பத்திரிகையுடாகக் கிட்டியது. மருத்துவக் கலசம் என்ற தலைப்பில் 90களில் சுமார் இரண்டு வருடங்கள்  எழுதியுள்ளேன். அது பின்னர் நூலாகவும் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்ச்சியாக இவ்வளவு நீண்டகாலம் எழுதுவதற்கு நண்பர் தனபாலசிங்கம்தான் காரணம். தலையீடுகளும் இடையூறுகளும் செய்யாத நல்ல மனிதர். கட்டுரைகளை நான் நேரத்திற்குக் கொடுக்கத் தவறும்போதும் கரைச்சல் கொடுக்காதவர்.

மீரா பதிப்பகம் பற்றி

இந்த நூலை மீரா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. அழகான அட்டைப்படத்துடன் சிறப்பாக வெளியிடப்பட்டுள்ளது.

நிகழ்ச்சிகளைத் தொகுத்தளித்ததுடன் மீரா பதிப்பகம் சார்பாக நுர்லை வெளியிட்ட புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

மீரா பதிப்பகம் நண்பர் புலோலியூர் ஆ.இரத்தினவேலோன் அவர்களது சொந்த முயற்சி. அவரது அயராத முயற்சியின் அறுவடையாகும். தினக்குரலில் விளம்பர உதவியாளாரக இணைந்த அவர் தனது கடும் உழைப்பின் மூலம் இன்று வணிக ஊக்குவிப்பு முகாமையாளராக உயர்ந்துள்ளார். தினக்குரலில் எவ்வாறு உயர்நிலைக்கு வந்தாரோ, அதே போல தனது ஓய்வு நேரத்தையும் உழைப்பு நேரமாக்கி, துயில் தொலைத்து உடல்வலி நோக்காது செய்த முயற்சி காரணமாகவே மீரா பதிப்பகம் இன்று இலங்கைப் பதிப்பத்துறையில் முன்னோடியாக நிற்கிறது.

புலோலியூர் இரத்தினவேலோன் ஒரு எழுத்தாளர். அருமையான சிறுகதை ஆசிரியர். சுpறந்த நூல் விமர்சனங்களைத் தருபவர். இளைஞனாக எழுத ஆரம்பித்த காலத்திலிருந்து எனது நண்பராக இருக்கிறார். எழுத்தாளன், பத்திரிகை உயர் அதிகாரி இவற்றிறக்கு மேலான மற்றொரு பர்மாணம்தான் பதிப்பாளர் என்பது ஆகும்.

96ல் புதிய பயணங்களுடன் ஆரம்பித்த இப் பதிப்பகம்  கடந்த 15 வருட காலவெளயில் 9 நூல்களை வெளியிட்டுள்ளது. இது அவர்களின் 91வது வெளியீடு.

பல் துறை சார்ந்த நூல்களை வெளியிட்டு மிகச் சிறப்பாக இயங்கிவருகிறது. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நூல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயல்கிறது. விரைவில் 100வது வெளியீட்டை எட்டிவிடும். இன்னும் பல நூறு நூல்களை வெளியிட்டு எமது எழுத்தாளர்களது திறமைகளை வெளிக் கொண்டுவர வேண்டும் என வாழ்த்துகிறேன்.

எனது பல நூல்களும் மீரா பதிப்பகம் ஏடாகவே வெளிவந்துள்ளன. நீங்கள் நலமாக, உடையைக் காத்து நலத்தைக் காப்போம், மறந்து போகாத சில ஆகியவையே அவை. இதில் நீங்கள் நலமாக 4 பதிப்புகளைக் கண்டதும், சாகித்தியப பரிசையும் பெற்றது. அதற்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும் உரித்தாகுக.

தலைமையுரை நீண்ட உரையாகிவிட்டது. மன்னித்துக் கொள்ளுங்கள். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பை எனக்கு அளித்த காரத்திகாயினி, அவரது கணவன் சுபேஸ் மற்றும் விழாக் குழவினருக்கு நன்றிகள்

வணக்கம்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

அண்மையில் அடிக்கடி படிக்கக் கிடைக்கிற நல்ல எழுத்துக்களைத் தருகின்ற இளைய எழுத்தாளர்களில் ஒருவர்தான் கார்த்திகாயினி சுபேஸ். கடந்த ஒரு தசாப்தமாக எழுத்து உலகில் கவனிப்பைப் பெற்ற எழுத்தாளர். பல நல்ல சிறுகதைகளதைத் தந்துள்ளார்.
அமரர் சதாசிவம் நினைவுச் சிறுகதைப் போட்டி, செம்பியன் செல்வன் ஞாபகார்த்த சிறுகதைப் போட்டி ஆகியவற்றில் முதற் பரிசுகளைத் தட்டிக்கொண்டவர். மேலும் பல பரிசுகளையும் பெற்றுள்ளார்.
தினக்குரல் பத்திரிகையில் உதவி ஆசிரியராக பணியாற்றும் இவரதுமுதல் சிறுகதைத் தொகுதியான ‘தாய் மடி தேடி..’ வெளிவர இருக்கிறது.
எதிர்வரும் ஞாயிறு (06.03.2011) மாலை 5 மணிக்கு  வெளியீட்டு விழா நடைபெறுகிறது. வெள்ளவத்தை உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க சங்கரப் பிள்ளை மண்டபத்தில் நடைபெற இருக்கிறது.
தலைமை :- டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
மங்கல விளக்கேற்றல் தமிழ்த்தாய் வாழ்த்து ஆகியவற்றைத் தொடர்ந்து வரவேற்புரையை திரு.அ.சுபேஸ் ( ஆர்த்திகன்- ஆசிரியர்) நிகழ்த்துவார்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன் அவர்களின் தலைமையுரையைத் தொடர்ந்து மூத்த எழுத்தாளர்.திரு.தெளிவத்தை ஜோசப் வெளியீட்டுரையை நிகழ்த்துவார்.
தினக்குரல் நிறுவுநர்.திரு.எஸ்.பி.சாமி அவர்கள் நூலை வெளியிட்டு வைப்பார்
பிரசித்த நொத்தரிஸ், சட்ட உதவியாளர் திரு.எம்.கேதர்மராஜா முதற் பிரதியைப் பெறுவார்
வாழ்துரைகள் 
1. திரு டொமினிக் ஜீவா (ஆசிரியர் மல்லிகை)

2. திரு.வீ.தனபாலசிங்கம் (பிரதம ஆசிரியர் தினக்குரல்)
3. டொம்டர்.தி.ஞானசேகரன் (ஆசிரியர் ஞானம்)
4. திருமதி.புஸ்பராணி நவரட்ணம் (ஆசிரியர்)

ஆய்வுரைகள்

1. திருமதி தேவகெளரி சுரேந்திரன்(விரிவுரையாளர் ஊடகவியல் கல்லூரி)
2. திரு.மு.தயாபரன்

ஏற்புரை:
திருமதி கார்த்திகாயினி சுபேஸ்

நிகழ்ச்சித் தொகுப்பு:- புலோலியூர் ஆ.இரத்தினவேலோன்.

அனைவரையும் அன்புடன் கலந்து கொள்ளுமாறு அழைக்கிறார்.

Read Full Post »

>

சென்ற தை மாதம் 6,7,8,9  திகதிகளில் கொழும்பில் நடை பெற்ற சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 மிகச் சிறப்பாக நடைபெற்றது.

பல சலசலப்புகள் எழுந்தபோதும் அவற்றை மேவி மிகச் சிறப்பாக நடைபெற்ற மாநாடு அதுவாகும். பல பயனுள்ள கட்டுரைகள் படிக்கப்பட்டன.

இது விழாவின் நிகழ்சிநிரல் நூலாக..

பல எழுத்தாளர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திக்கக் கிடைத்தமை மிக அரிய அனுபவமாகும்.

தெணியான், செங்கை ஆழியான் மேடையில்

 அதிலும் வெளியூர்களில் இருந்து வந்திருந்த பல இளம் எழுத்தாளர்கள் தங்கள் முன்னோடிகளைக் கண்டும் அவர்களுடன் நேரில் பேசியும் மகிழ்ந்ததை நேரில் காணக் கூடியதாக இருந்தது.

கூட்டத்தில் இரண்டாம் நிகழ்வு ஒன்றின்போது பார்வையாளர் சிலர்

ஒரே நேரத்தில் மூன்று அரங்குகளில் எனப் பல ஆய்வரங்குகள் நடைபெற்றன. அனைத்தும் சிறப்பாக இருக்கும் என்றபோதும் எதில் கலந்து கொள்வது எனத் தீர்மானிக்கப் பலராலும் முடிவெடுப்பதில் சிரமம் இருந்தது. இத்தகைய மநாடுகளில் இது தவிர்க்க முடியாததே.

நிகழ்வுகள் நேரத்திற்கு ஆரம்பமாகி குறித்த நேரத்தில் முடிவுற்றமைக்கு அமைப்பாளர்களையும் பங்கு பற்றியோரையும் ஒரே நேரத்தில் பாராட்ட வேண்டும்.

விழாவை ஒட்டி பல நூல்கள் வெளிடப்பட்டன.

1. கட்டுரைக் கோவை

2. விழா தொடர்பான சிறப்பு மலர்.

3. பேராளர்களுக்கு வழங்கப்பட்ட நூல்களில் முகங்கள் என்ற தலைப்பிலான புலம் பெயர்  பற்றிய சிறுகதைத் தொகுதி.

3. டொக்டர் சிவதாஸ் எழுதிய மகிழ்வுடன் என்ற உளவியல் நூல்.

பல சஞ்சிகைகள் தங்கள் அம்மாத இதழ்களை மாநாட்டுச் சிறப்பிதழ்களாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது.

1. மல்லிகை ஆண்டு மலர் விழாச் சிறப்பிதழாக

2. ஞானம் சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்.

 நூல் விற்பனை நிலையம் வாயிலருகே அமைந்திருந்தது. பலரும் அவற்றைப் பார்ப்பதும், தமக்குப் பிரியமானவற்றை வாங்குவதுமாக இருந்தனர்.

3. ஜீவநதி சர்வதேச எழுத்தாளர் மாநாட்டு சிறப்பிதழ்

இதற்காக அயராது உழைத்த திரு.ஞானசேகரன், அஸ்ரப் சிஹாப்தீன், ஜின்னாஹ் ஷரிபுத்தீன், முருகபூபதி போன்ற அனைவரும் பாராட்டுக்கு உரியவர்களாவர். ஆனால் இவர்களைத் தவிர ஒரு பெரும் படைப்பாளி உலகமே அவர்கள் பின் நின்று ஒத்தாசை வழங்கியதை மறக்க முடியாது.

மாநாட்டில் நானும் கலந்து கொண்டேன்.எஸ்.டி.சிவநாயம் அரங்கில் முதல் நாள் நடைபெற்ற ‘கணினியும் வலைப்பதிவுகளும்’ என்ற ஆய்வரங்கில் இணைத் தலைவராக.

இணைப்பேராசிரியை மு.சு.தங்கம்(இந்தியா) என்னுடன்  இணைத் தலைமையை  ஏற்றிருந்தார்.

அதற்காக ஒரு சான்றிதழ் எனக்கும் வழங்கப்பட்டது.

இணைத்தலைமை, கட்டுரை படித்தல் என பங்கு பற்றிய அனைவருக்குமே அவ்வாறான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

கூட்டம் நடந்த உருத்திரா மாவத்தையில் உள்ள தமிழ் சங்க வாயில் முன்னே நான்.

0.0.0.0.0.0

Read Full Post »

>

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் என்றும் மறக்க முடியாத தடங்களை விட்டுச் சென்றவர்  பேராசிரியர் கைலாசபதி ஆகும். அவரது நினைவாக, நினைவுப் பேருரைகளை வருடா வருடம் கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  நடாத்தி வருகின்றனர்..

இவ்வருட கைலாசபதி நினைவுப் பேருரையைச் செய்தவர், கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பேராசிரியர் க.கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துணைவேந்தராகவும் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய பெரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இன்று பல்கலைக்கழகங்களின் தர மேம்பாடு பற்றிப் பேசப்படுகிறது. ஆயினும் பேராசிரியர் கைலாசபதிபணியாற்றிய காலங்களில் யாழ் பல்கலைக்கழகம் உயர்தரத்தில் இருந்தது என்றார். அத்துடன் ராமநாதன் நுண்கலைக் கல்லூரியாக இருந்ததை யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைத்தது மிகப் பெரிய சேவையாகும். இன்று பலர் B Fine arts பட்டம் பெற்று இருக்கிறார்கள் எனில் அதற்கு அத்திவாரம் இட்டவர் அவரே ஆவர் என்றார்.

தான் அதன் தலமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலங்களில் இவை தொடர்பான பல்கலைக் கழக ஆவணங்களைப் பார்த்த போது ராமநாதன் நுண்கலைக் கல்லூரியை தரம் உயர்த்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் தெரிய வந்தது என்றார்.

இன்று யாழ்பல்கலைக்கழக நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகம் எனப் போற்றப்படுகிறது. இதற்கும் முக்கிய பங்கு வழி வகுத்தவர் அவர்தான்.

முக்கியமாக மாற்றுவழிச் சிந்தனையுள்ள நூல்களை அதற்குக் கொண்டு வந்தார். உளவியல் என்பது தனிமனிதம் பற்றிய விடயமாக இருந்த போது அதற்கு சமூக வலுக் கொடுக்கும் சகத்தியாக மார்க்சிய  உளவியல் வந்தது. மார்க்சிய  உளவியல் தொடர்பான நூல்களை யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டுவர வழி வகுத்தார்.

தனிப்பட்ட ரீதியில் தான் பணம் கொடுத்து வாங்கிய நூல்கள் பலவற்றைத் தான் படித்து முடித்த பின்னர் யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பு செய்வது அவரது வழக்கமாக இருந்தது என்றார். மிக வித்தியாசமான முறையில் இயங்கி தமிழில் ஆழ்ந்த பற்றும் அதன் வளர்ச்சியில் பங்காளியாகவும் இருந்து அழியாத சுவடுகளைப் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி என விதந்து போற்றினார்.

நினைவுப் பேருரை ஆற்ற வந்த செல்வி பவித்ரா கைலாசபதி பற்றிக் குறிப்பிடும் போது மனித வள அபிவிருத்தி (Human resource development – HRD)துறையில் புலமையாளர் எம் மத்தயில் மிகக் குறைவு. இவர் அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.கொழும்பு பல்கலைக் கழகத்தில் செல்வாக்குப் பெற்ற விரிவுரையாளராக இருக்கிறார்.

கலாநிதி பவித்ரா கைலாசபதி ‘இலங்கையின் மனித வள அபிவிருத்தி :- இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற பொருளில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இலாப நோக்குள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி சேவை நிறுவனங்கள், அரச நிறுவனம் போன்ற அனைத்திற்கும் அவற்றின் செயற்பாட்டிற்கு மனித வளம் அவசியம்.

தொழிலில் வெற்றி பெற்றோருக்கு மனிதவளத்தின் முக்கியத்துவம் புரியும். அதனால்தான் முன்னாள் தொழிலதிபரான கென் பாலேந்திராவிடம் உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் யார் என்று கேட்டபோது “மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் மக்கள், இரண்டாவது காரணம் மக்கள், மூன்றாவது காரணம் மக்கள்” என்றார். மக்கள் என அவர் குறிப்பிட்டது தனது நிறுவனங்களில் பணிபுரியும் மனித வளத்தையே ஆகும்.

அதே போல மைக்கிரோ சொப்ட் நிறுவன பில் கேட்சிடம் கேட்ட போது அவர் கூறினார் “Greatest asset is the people who out of the building daily after their work” அவர் குறிப்பிட்டது தனது நிறுவன ஊழியர்களான மனித வளத்தையே.

மனிதனானவன் தன் மீது கவனிப்பு இருக்கும் போது அவனது செயலூக்கமும் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. Hawthorne Effect ஆளணி முகாமைத்துவத்தில் கவனிப்புப் பெறுகிறது. மனிதனை இயந்திரமாகக் கணியாது உணர்வுள்ள மனிதனாக மதிக்கும்போது தொழில் திறன் அதிகரிக்கிறது. 


அரசுகளும் வேலை நேரக் கட்டுப்பாடு, ஓய்வு நேரம், மகப் பேற்று லீவு, போன்ற பலவற்றையும் சட்டங்கள் மூலம் அங்கீகரித்துள்ளன. இவை யாவும் மனித வளத்தை சரியான முறையில் முகாமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே என்றார்.


தொடர்ந்து பேருரையின் முக்கிய பகுதியான இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய பகுதி சுவார்சமானது. இன்று குடும்பங்களில் கணவன், மனைவி என இருவர் உழைப்பாளிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருவர் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கான காரணங்கள் என்ன?

 • பெண் கல்வி விருத்தியடைந்ததால் கல்வி கற்ற பெண்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 • இன்றைய வாழ்வுக்கு அதிக பொருளாதாரம் தேவை. இதனால் ஒருவர் உழைப்பது போதாது. இருவரும் உழைக்க வேணடியது அவசியமாயிற்று.

ஆயினும் இதனால் பல புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

 • இருவரும் வேலைக்கு செல்வதால் குடும்ப வேலைககளைச் செய்வதற்கு நேரம் குறைந்து விட்டது. 8 மணி நேர வேலை, போக்குவரத்து நேரம், தூக்கம் போக குறைந்தளவு நேரமே வீட்டு வேலைகளுக்கு ஒதுக்க முடிகிறது.
 • அதிலும் குழந்தைகள் உள்ள குடும்பம் எனில் வீட்டு வேலையின் கனம் அதிகரிக்கிறது. பாடசாலைக்கு கூட்டிச் செல்லல், பாடம் சொல்லிக் கொடுத்தல், அவர்களுக்கு துணையாக இருப்பது, அவர்கள் நலனைக் கவனிப்பது எனப் பல
 • இதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் பெரும்பாலான வீட்டு வேலைகள் பெண்கள் தலையிலேயே விழுகிறது.
 • சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு, வீடு கூட்டுதல்  போன்ற பலவும் அவளின் பணியாக இருக்கிறது. இருவரும் வேலையால் வீடு வந்ததும் கணவன் ரீவீ அல்லது கணனி முன் உட்கார அவளே தேநீர் தயாரிப்பு முதல் அனைத்து வேலைகளிலும் ஈடுபட நேர்கிறது. கணவனுக்கு வீட்டில் சில திருத்த வேலைகள், தண்ணீர் கரண்ட் பில் கட்டுதல், வாகனப் பராமரிப்பு என சிலவே இருக்கின்றன.
 • பாலியல் ரீதியான வேறுபாடு ஏற்படுகிறது. அதிக சுமை பெண் தலையிலேயே.
 • அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 • கலியாணம், மரணச் சடங்கு போன்ற பல சமூகக் கடன்களை நிறைவேற்றுதில் சிரமம் ஏற்படுகிறது.
 • அதிருப்தி நிலை தேன்றுகிறது. 
 • போதைப் பொருள் பாவனை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிக்கு இட்டுச் செல்கிறது.
 • வேலையில் அதிருப்பதி ஏற்பட்டால் திடீரென வேலைக்குச் செல்லாமை, அடிக்கடி லீவு எடுப்பது போன்ற சிக்கல்கள் தோன்றுகினறன.
 • பாலியல் பாத்திரம் தொடர்பான நம்பிக்கையீனம் ஏற்படலாம்.

கொழும்பு பல்கலைக் கழக Business administration Cource தொடர்பான ஆய்வில் பட்டப் படிப்பிற்கான நிலையில் (under graduate level) பெண்களே அதிகளவில் கற்க வந்தார்கள். ஆனால் பட்ட மேற்படிப்பு (Post Graduate level) என வரும்போது மிகக் குறைந்தளவு பெண்களே தோற்றினார்கள்.

காரணம் வெளிப்படையானது. பெண்கள் வேலைக்குப் போனாலும் தமது தொழிலில் தம்மை மேம்படுத்த கல்வி கற்க முடியாத சூழலே நிலவுகிறது. ஏனெனில் இத்தகைய பட்ட மேற்படிப்புகள் பொதுவாக வார இறுதி நாட்களிலேயே நடைபெறுகின்றன. வீட்டு வேலைகளுக்கு அப்பால் தமது மேற் படிப்பிற்கு பெண்களால் நேரம் ஒதுக்க முடியாது உள்ளது.

பெருந்தோட்ட துறையில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் உள்ள தோட்டங்களில் பெண்கள் வேலைக்கு வராமல் இருப்பது குறைவு என்பது தெரிய வந்தது. ஏனெனில் குழந்தை பராமரிப்பின் ஒரு பகுதியை அத்தகைய நிலையங்கள் பொறுப்பேற்றதால் அவளால் தனது வேலையில் கூடியளவு ஈடுபட முடிந்தது.

எவ்வாறு உதவலாம்

இருவரும் தொழில் செய்ய நேரும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

 • கணவன் மனைவி இடையே நெருங்கிய உறவின் மூலம் பல பிரச்சனைகளதைத் தீர்க்கலாம். முக்கியமாக வேலையால், கணவன் மனைவிக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக அவளிடம் கேட்டறிந்து உதவி செய்யலாம். உதாரணமாக பாத்திரம் கழுவுதல் வீடு கூட்டுதல் போன்று சில பணிகளையாவது தான் செய்து கொடுத்து அவளது வேலைப் பளுவைக் குறைக்க உதவுவது அவசியம்.
 • திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சாத்திரப் பொருத்தம் தேவையில்லை. கருத்தியல் (Ideology) பொருத்தம் எப்படி என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களிடம் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதாவது குடும்ப வாழ்வில் கணவன் மனைவியின் பங்குகள் பற்றி திறந்த மனப்பான்மை உள்ள கணவன் விரும்பத்தக்கது.
 • பெற்றோரின் உதவி. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூட இருந்தால் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் இருவரும் உழைக்கும் குடும்பத்தின் சுமுகமான நடப்பிற்கு உதவும். ஒரு ஆய்வின்போது இத்தகைய குடும்பங்களில் 75% பெற்றோர் கூட இருப்பது நன்மையளித்ததாகத் தெரிகிறது.
 • குழந்தை பராமரிப்பு நிலையங்கள். இது இருந்தால் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் பொறுப்பை அங்கு விட்டுவிட்டு நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.
 • நெகிழ்வு நேரம். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குப் போய் குறிப்பட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் என இல்லாமல் நெகிழ்வு நேரம் உதவும். உதாரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் போய் மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்வதின் மூலம் உதவலாம்.
 • கூடுதலான நேரம் வேலை செய்பவர்தான் உண்மையான ஊழியர் என்ற எண்ணம் பல மேலதிகாரிகளுக்கு இருக்கிறது.ஆயினும் குறைந்த நேரத்தில் அவ்வேலையை நிறைவு செய்து விட்டு மிகுதி நேரத்தை குடும்பத்துடன் செலவளிக்க உதவலாம். இதன் மூலம் அவர்களின் பணித் திறனை அதிகரிக்கவும் முடியும்.
 • சாதகமான சட்டங்கள். உதாரணமாக maternity leave, Paternity leave, Family leave போன்றவை உதவும்
 • பகுதி நேர வேலை. பெண்களால் முழு நேர வேலைக்குப் போக முடியாத நிலையில் அவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுப்பதன் மூலம் வேலைக்குப் போகும் மனநிறைவைக் கொடுப்பதுடன் குடும்பத்தைக் கவனிக்கவும் முடியும்.
 •  அவுஸ்திரேலியாவில் பல இவ்விடயத்தில் பல முற்போக்கான நடைமுறைகள் உள்ளன. பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு நிதியுதவியை அரசாங்கம் செய்கிறது. ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் அவற்றின் செயற்பாடுகள் பற்றி கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவு பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.

இறுதியாக கலாநிதி பவித்ரா கைலாசபதி இந்த நினைவுப்பேருரை பற்றிக் குறிப்பிடும்போது தான் இதில் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

” உங்கள் எல்லோருக்கும் கைலாசபதி ஒரு நண்பர், தோழர், அல்லது விமர்சகராக இருக்கிறார். ஆனால் அவர் எனக்கு அப்பா. இந்த வகையில் நான் அவரது நினைவுப் பேருரையை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பெருமைக்குரிய, மனநிறைவை அளிக்கும் சம்பவமாகக் கருதுகிறேன்”

உள்ளத்தைத் தொடும் இந்தச் சிறுகுறிப்புடன் அவர் தனது உரையை நிறைவு செய்த போது கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு கணம் மன நெகிழ்வுற்றதை உணரக் கூடியதாக இருந்தது.  அவரோடான தம் உறவை மீளநினைந்து உறவின் புத்துயிர்ப்பின் ஈர்ப்பில் இருக்கையிலிருந்து எழ மறந்து நினைவுகளில் ஆழ்ந்தனர்.

Read Full Post »

>சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியம் நடத்தும் சர்வதேச தமிழ் எழுத்தாளர் மாநாடு 2011 கொழும்புவில் நடைபெற இருக்கிறது.

வெள்ளவத்தை உருத்திரா மாவததையின் 57 ஆம் ஒழுங்கை 7ம் நம்பரில் உள்ள கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் எதிர் வரும் 2011 ஜனவரி, 06, 07, 08 திகதிகளில் நடை பெறும்.

ஆய்வரங்குகள் கொழும்பு தமிழ்ச் சங்க மண்டபத்தில் காலை 8.30 மணி முதல் பி்.ப 01.00 மணிவரை நடைபெறும்.
ஆய்வரங்கம் பின்வரும் விடயங்களில் நடைபெறு இருக்கின்றன.

 • கணினி வலைப்பதிவு
 • ஈழத்து தமிழ் இலக்கியம்
 • ஆவணப்படுத்தல்
 • சிறுவர் இலக்கியம்
 • மொழிபெயர்ப்பு
 • சிற்றிதழ்
 • மகளிர் அரங்கு
 • உலகத் தமிழ் இலக்கியம்
 • செவ்விதாக்கம்
 • நிகழ்த்து கலைகள்
 • பல்துறை

கலை நிகழ்வுகள் மாலை 05.00 மணியிலிருந்து இரவு 08.00 மணிவரை நடை பெறும்.

நிறைவு நாள் நிகழ்வு 09.01.2011 ஞாயிறு மாலை 4.30 மணி முதல் 08.00 மணிவரை வெள்ளவத்தை இராமகிருஷ்ண மிஷன் மண்டபத்தில் நடைபெறும்.

Read Full Post »

>தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவுச் சொற்பொழிவும் எதிர்வரும் 19.12.2010 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேற்படி பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடை பெற இருக்கிறது.

இந்த அரங்கம் 57/1/15, காலி வீதியில் (ரொக்ஸி திரையரங்கிற்கு முன்னால் உள்ள  ஒழுங்கையில்) அமைந்துள்ளது.

தலைமை வகிப்பவர் பேராசிரியர்.சி.தில்லைநாதன் அவர்களாகும்

நினைவுப் பேருரையை நிகழ்த்த இருப்பவர் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்ந்த பேரசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களாகும். “இலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை” என்ற பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.

பெதுச் செயலாளர் சோ.தேவராஜா “தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவுரை” ஆற்றுவார்.

அதைத் தொடர்ந்த கவிதை அரங்க ஆற்றுகையில்  தலைமைக் கவியாகச் திரு.ச.சுதாகர் அவர்களும் ஏனைய கவிஞர்களும் “புதிதாய் மீள உயிர் கொண்டெழுவோம்” என்ற தலைப்பில் கலந்து கொள்வர்.

Read Full Post »

>பேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 28வது ஆண்டு இது.

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் அழிக்க முடியாத தடங்களை விட்டுச் சென்ற அவரது நினைவாக இது நடை பெற உள்ளது.

இவ்வருட நினைவுப் பேருரையைச் செய்ய இருப்பவர் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

‘இலங்கை மனித வள அபிவிருத்தி: இரு உழைப்பாளிகள் குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் இது நடைபெற இருக்கிறது.

காலம்:- டிசம்பர் 12, 2010. ஞாயிறு. மாலை 4.30மணி

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
               58,தர்மாராம வீதி
               கொழும்பு 0.6

Read Full Post »

Older Posts »