Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இலக்கிய நிகழ்வு’ Category

>இலங்கை இடதுசாரி இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் தோழர் கார்த்திகேசன். தமிழ் மக்கள் மத்தியில் முதல் முதலாக கம்பூனிஸ்ட் இயக்க விதைகளை ஊன்றியவர்களில் அவர் ஒருவர்.

முற்று முழுதாக இன்றைய தமிழ் அரசியல் முதவாளித்துவாதிகளின் கைகளில் சிக்கியிருந்தாலும், இன்னும் எம்மிடையே சிறிதளவாவது முற்போக்கு சிந்தனைகள் மிஞ்சியிருக்கிறது என்றால் அதற்கு அவரும் அவரது அரசியல் வாரிசுகளும் செய்த முன்னோடி முயற்சிகளே காரணம் எனலாம்.

அவரது நினைவாக திரு சண்முக சுப்பிரமணியம் தொகுத்த ‘கம்யூனிஸ்ட் கார்த்திகேசன் நகைச்சுவை, ஆளுமை, தீரக்கதரிசனம்’ என்ற நூல் வெளியிடப்பட உள்ளது.

எதிர்வரும் 19.09.2010 ஞாயிறு மாலை 3.30 மணிக்கு யாழ் பலநோக்கு கூட்டுறவுச் சங்க கேட்போர் கூடத்தில் (யாழ் பிரதம தபாலகத்திற்கு அருகில்) நடைபெற இருக்கிறது.

தலைமை :- திரு. ரெங்கன் தேவராஜன் (வழக்கறிஞர்)

நினைவுரைகள்:- திரு.எஸ.ஜி.புஞசிகேவா (வழக்கறிஞர்)
                            திரு.எம்.ஜி.பசீர் (யாழ் மாநகர முன்னாள் துணை முதல்வர)
                            கலாநிதி செல்வி திருச்சந்திரன் (பெண்கள் கல்வி ஆய்வு                  நிறுவன   பணிப்பாளர்)
                            திரு.வீ.சின்னத்தம்பி (இளைப்பாறிய ஆசிரியர்)

ஏற்பாட்டாளர்கள்

இந்த நூலை

  1. இலங்கை முற்போக்குக் கலை இலக்கிய மன்றம், 
  2. கம்யூனிஸ்ட் கார்த்திகேசன்அறக்கட்டளை நிதியம் 

ஆகியன இணைந்து வெளியிடுகின்றன.

Read Full Post »

>தெளிவத்தை ஜோசப் அவர்கள் சென்ற 18.10.2009 ஞாயிறு தகவத்தின் மூத்த எழுத்தாளர் எனக் கௌரவிக்கப்பட்டார்.

இதற்கு மிகவும் பொருத்தமான நபர். எல்லோரும் மகிழ்ச்சியடைகிறார்கள்.

இலங்கையின் முழுத் தமிழ் எழுத்துலகமும் மகிழ்வுறுகிறது. காரணம் அவர் ஒரு சிறந்த எழுத்தாளர் என்பதால் மட்டுமல்ல
ஒரு அருமையான மனிதர். பண்புள்ளவர்.
பழகுவதற்கு இனியவர்.

எனது இனிய நண்பரான இவருக்கு வாழ்த்துரை வழங்குவதில் மகிழ்கிறேன். இன்று அவர் எனது நண்பர்.

ஆனால் நான் இலங்கைத் தமிழ் இலக்கியங்களைப் படிக்கத் தொடங்கிய காலம் முதல் இவரது வாசகனாக இருந்தவன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறேன்.

கலைச்செல்வி, மல்லிகை, சிரித்திரன், அஞ்சலி என வாசிக்கத் தொடங்கிய காலம் எமது எழுத்தாளர்கள் மீதான ஈர்ப்பு எனக்கு இருந்திருக்கிறது.


70-75 காலப் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது ஜஸீமா தியேட்டரில் படம் பார்க்கப் போகும்போது வழியில் உள்ள ஸ்டார் டொபி தொழிலகம் கண்ணில்படும்.

“இங்குதான் தெளிவத்தை கணக்காளராக தொழில் பார்க்கிறார்” எனப் பெருமையோடு நண்பர்களுக்கு சொல்லுவேன். அவர்கள் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். அக்காலத்தில் சிவாஜி எனது அபிமான சினிமா நட்சத்திரமாக இருந்தார். அதுபோலவே இவர் எனது அபிமான எழுத்தாளர்களுள் முக்கியமானவர்.

தெளிவத்தை ஜோசப் (சந்தனசாமி ஜோசப், பி. பெப்ரவரி 16, 1934) பிறந்தது பதுளை ஹாலி எல்ல விற்கு அருகில் உள்ள ஊவாக்கட்டவளை என்ற ஊரில் பிறந்தார். அல்ல என்ற மிக அழகான நீர்வீழ்ச்சி அருகில் இருப்பதாக ஞாபகம். மருத்துவப் பணிக்காக பதுளையில் இருந்தபோது அங்கு செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. ஆனால் அப்பொழுது இவர் அங்கு பிறந்த செய்தி தெரியாது. தெரிந்திருந்தால் அவரில்லம் போயிருப்பேன்.

ஆரம்பக் கல்வி கற்றது தோட்டப் பாடசாலை தகப்பனாரிடம். பாடசாலைக்கு செல்ல பஸ் வசதி இல்லாததால் மூன்று வருடங்கள் தமிழ் நாட்டில் கும்பகோணம் லிட்டில் பிளவர் ஹை ஸ்கூல் படித்துவிட்டு மீண்டும் இங்கு வந்து பதுளை சென் பீட்டஸ் கல்வியைத் தொடர்ந்தார்.

தனது ஆதர்ஸ மனிதனாக தனது ஆஞா வைக் குறிப்பிடுகிறார்.

ஆஞா என்றால் இவரது குடும்ப வழக்கப்படி தந்தை. அவர் ஒரு ஆசிரியர். தோட்டப்பள்ளி ஆசிரியர். வித்திசாசமானவர். கடமைக்காக தொழில் செய்யாது அதை ஒரு சமூகப்பணிபோல அர்ப்பணிப்போடு செய்தவராவார்.

அவரிடமிருந்துதான் இவருக்கு நேர்மை, தன்னடக்கம், சமூகநோக்கு போன்ற பல நற்பண்புகள் கிட்டியிருக்கிறது எனத் தெரிகிறது.

ஞானம் சஞ்சிகையில் இவரது நேர்காணல் பல மாதங்களாக வந்து கொண்டிருக்கிறது. மிகவும் சுவார்ஸமான நேர்காணல்.

இவரைப் பற்றி ஏதாவது குறிப்புகள் சொல்ல அதிலிருந்து தகவல்களைப் பெறலாம் என்று பார்த்தால், மிகக் குறைவாகவே அவரது சுயதகவல்கள் வருகிறது. சுயதம்பட்டமன்றி ஒரு நேர்காணல் வருகிறது என்றால் அது இவருடையதாகவே இருக்கும். ஆனால் மலையகச் சமூகம் பற்றி, அதன் துன்ப நிலை பற்றி, அதன் முன்னேற்றங்கள் பற்றி, அதன் படைப்புகள் பற்றி, இலக்கிய சூழல் பற்றி மிக சிறப்பாகச் சொல்லியிருக்கிறார்.

முக்கிய படைப்பாளி

சிறுகதையாளர், நாவலாசிரியர், விமர்சகர், இலக்கிய ஆய்வாளர். இலங்கையின் மலையகப் படைப்பாளிகளில் முக்கியமான ஒருவர்.

அறுபதுகளில் இலங்கையில் ஏற்பட்ட கலை இலக்கிய அரசியல் மாற்ற காலத்தில் எழுதத் தொடங்கியவர். ஆனால் முற்போக்கு அணியைச் சார்ந்தவர் என்று சொல்ல முடியாது. எழுபதுகளில் இலக்கிய உலகில் தனித்துவம் மிகுந்த படைப்பாளியாக மலர்ந்தவர். தனக்கென ஒரு அடிப்படை இலட்சியத்தைக் கொண்டவர்.

அதுதான் மலையகம் என்ற மண்ணுக்கு, அதன் தனித்துவத்திற்கு, அந்த உணர்வுக்கு உருவம் கொடுத்தவர். சாதாரணத் தோட்டத்தொழிலில் அல்லாடிக்கொண்டிருக்கும் தொழிலாளிகளின் வாழ்வை படம் பிடித்துக் காட்டும் வல்லமை கொண்டவை இவரது படைப்புகள். கோகிலம் சுப்பையா முதல் இன்று வரை எழுதிக் கொண்டிருக்கும் நூற்றுக் கணக்கான படைப்பாளிகளில் தனித்துவம் ஆனவர்.

காலங்கள் சாவதில்லை என்பது இவருடைய முக்கியமான நாவல்.

நாமிருக்கும் நாடே சிறுகதைத் தொகுதிக்காக இலங்கைச் சாகித்திய விருது பெற்றுள்ளார்.

சிறுகதை, குறுநாவல், நாவல், விமர்சனக் கட்டுரைகள் என இவரது பணி நீள்கிறது

முக்கியமாக சிறுகதை ஆசிரியர்

அண்மையில் தயாபரன் இவ் விழாவில் தெளிவத்தையை கௌரவிக்கும் உரையை செய்யும்படி கேட்டபோது மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால் எதைப்பற்றிப் பேசுவது? தகவல்களை எங்கே தேடுவது என யோசித்துக் கொண்டிருந்தபோது பட்டென இவரது ஒரு கதைதான் ஞாபகத்திற்கு வந்தது.

மிக அருமையான கதை.

அது இவரது வீட்டு பூந்தோட்டம் பற்றியது. எனக்கும் பூந்தோட்டங்களில் விருப்பம் இருக்கிறது. அதற்கு மேலாக அவர் எழுதிய அவரது அந்த வீட்டுப் பூந்தோட்டத்தை நான் பார்த்திருக்கிறேன்.

சகமனிதர்களில் பற்றுக் கொள்வது பண்புள்ள மனிதர்களின் இயல்பு.

ஆனால் அது இல்லாதவர்கள்தான் இன்று பெரிய மனிதர்களாக வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். அரசியலில், எழுத்துலகில், ஆன்மீகத்தில் …..
உதாரணங்களை நீங்களே தேடிக் கண்டுபிடியுங்கள். தேட வேண்டிய அவசியம் இருக்காது எங்கும் நீக்கமற நிறைந்து நிற்கிறார்கள்.

ஆனால் இவர் மனிதர்கள் மட்டுமின்றி மிருகங்களிலும், செடி கொடிகளிலும் அன்பு காட்டுகிறார்.

மண்ணைக் கிண்டிவிடுகிறார். செடிகளுக்கு மண் அணைக்கிறார். ஊரமிடுகிறார், நீர் ஊற்றுகிறார். ஆனால் அதற்கு மேல் அவைகளுடன் நிற்றல், பேசுதல், சுற்றிவரல், சுகம் கேட்டல் என பொழுது போவதே தெரியாமல் நெருக்கமாக உறவாடுகிறார்.

அக் கதையில் பூஞ்செடிகளை வர்ணிக்கும் அழகு அபாரமாக இருக்கிறது.
“வெடித்துச் சிரிக்கும் வெள்ளை வெள்ளைப் பூக்களுடன் பந்தல் கொள்ளாமல் படரந்து கிடக்கும் மல்லிகை”, என்கிறார்.

மற்றொரு இடத்தில் “எஸ்.பொ வை நினைவுபடுத்தும் ஆண்மை வெடிக்கும் அந்தூரியம்” இவைபோல நிறையவே சொல்லாம்.

தண்ணீர் ஊற்றும்போது அவர் சிந்தனை கலைந்து நீர் வெறுந்தரையில் ஓடுவது. செடியில் ஏக்கம் தெரிவது. இவர் சொறி சொல்வது, பரவாயில்லை எனச் செடிகள் தலையாட்டி மகிழ்வது…..

மிக அருமையாக ரசித்து, அனுபவித்து எழுதிய படைப்பு. வெறும் கற்பனையில் வருவதில்லை. உண்மையில் மரம் செடிகளுடன் உறவாடுபவர்களுக்குத்தான் அவர் சொல்வதின் யதார்த்தம் புரியும்.

ஆனால் அக்கதை பூச்செடிகள் மட்டும் பேசவில்லை. அதற்கு மேலும் பேசுகிறது.

‘இறுமாப்பு’ என்ற இக்கதை மல்லிகை 2008 ஆண்டு மலரில் வெளியானது.


நாவல்

இலங்கையின் பொருளாதாரத்திற்கு தோட்டத் தொழில் அத்திவாரமாக இருந்தது. அதன் மூலவேர்கள் மலையகத் தொழிலாளர்களே.
ஆயினும் அவர்களின் சோகக் குரல் தேசிய அளவில் பேசப்படவில்லை, கேட்கப்படவில்லை, பதியப்படவில்லை.

முதல் பாராளுமன்றத்தில் அவர்களுக்கு போதிய பிரதிநிதித்துவம் கிடைத்தபோது பேரினவாதிகள் அச்சம் அடைந்தனர், எரிச்சலுற்றனர். வாக்குரிமையைப் பறித்தனர்.

தொடர்ந்து எழுந்த தேசிய அலை தமிழிலும் தீவிரம் அடைந்தது. முற்போக்கு சிந்தனைகள் எழுச்சியுற்றது. சமூக பொருளாதார புரட்சி மூலமே தீர்வு காணமுடியும் என்ற எண்ணம் திவிரமடைந்தது. இதன் பெறுபேறாக பெருந்தோட்டப் பகுதிகளில் நிலவிய தொழிலாளர்களுக்கு எதிரான பிரச்சினைகள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்காமை, ஏனைய சுரண்டல்கள், அடக்குமுறை, வீடின்மை, குடியுரிமைச் சிக்கல் போன்றவற்றையும் நாவல்கள் பேசத் தொடங்கின.

இது ஈழத்து தமிழ் நாவல் இலக்கியத்திலும் பிரதிபலித்தது. தெளிவத்தை
ஜோசப்பின் ‘காலங்கள் சாவதில்லை’ இதில் முக்கயமானது. அதேபோல கோகிலம் சுப்பையாவின் ‘தூரத்துப் பச்சைகள்’, பெனடிற்பாலனின் ‘சொந்தக்காரன்’, தி.ஞானசேகரனின் ‘குருதிமலை’, சி.வேலுப்பிள்ளையின் ‘இனிப் பாடமாட்டேன்’, செ.கணேசலிங்கனின் ‘சூரியன் கிழக்கில் உதிப்பதில்லை’ போன்ற பல நாவல்கள் மலையகத்தைக் களமாகக் கொண்டு பல இடர்பாடுகளை முன்னிலைப்படுத்தி எழுந்தன.

வெளியான நூல்கள்

1. காலங்கள் சாவதில்லை (1974, நாவல், வீரகேசரி வெளியீடு)
2. நாமிருக்கும் நாடே (1979, சிறுகதைகள், வைகறை வெளியீடு)
3. பாலாயி (1997, மூன்று குறுநாவல்கள், துரைவி வெளியீடு)
4. மலையக சிறுகதை வரலாறு (2000, துரைவி வெளியீடு)

வரவிருக்கும் நூல்கள்

1. குடைநிழல் நாவல்
2. நாங்கள் பாவிகளாக இருக்கிறோம்
3. மலையக நாவல் வரலாறும் வளரச்சியும்
4. இருபதாம் நூற்றாண்டு ஈழத்து இதழியலலும் இலக்கியமும்

படைப்பாளி என்பதற்கு மேலாக

ஆவண சேகரிப்பாளர்

இவரிடம் இல்லாத நூல்கள் சஞ்சிகைகள் இருக்கமாட்டா என்று சொல்லுமளவு நிறையச் சேர்த்து வைத்திருக்கிறார்.
அதை மற்றவர்களுடன்பகிர்வதில் நிறைவு காணுபவர்
தனது சேரிப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்பவர்
தனிப்பட்ட முறையில் பலரும் அவரை அணுகுவர்.
நானும் அவரிடம் எனது சிறுகதை ஒன்றைத் தேடி எடுக்கச் சென்றுள்ளேன்.

நூலகம் திட்டத்திற்கு

ஈழத்து நூல்களை இணையத்தில் வெளியிடும் அளப்பரிய சேவையை நூலகம்
கிளிக் பண்ணவும் செய்து வருகிறது. பலரது நூல்களும் பல சஞ்சிகைகளும் இதில் வெளியிடப்பட்டு எவரும் படிக்கும் வசதி செய்யப்பட்டுள்ளது.

இதன் மின்பிரதியாக்கற் திட்டத்திற்கு நூல்களையும் நூற்றுக்கணக்கான அரிய சஞ்சிகைகளையும் வழங்கியமை இவர் வழங்கியமை மிகவும் பாராட்டத்தக்க பணியாகும்.

இவரைப் பற்றி

இவரைப் பற்றி ஜெயமோகன் ஒரு கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்.


‘காலையில் முருகபூபதி மீண்டும் விமானநிலையம் சென்று மலையக எழுத்தாளர் தெளிவத்தை ஜோசப்பை கூட்டிவந்தார். தெளிவத்தை ஜோசப் சிறிய உற்சாகமான கரிய மனிதர். கொழும்புவில் ஒரு சாக்லேட் நிறுவனத்தின் கணக்கெழுத்தாளர். எழுபது வயது தாண்டிவிட்டது. சமீபத்தில் நான் மானசீகமாக எந்த மூத்த எழுத்தாளரிடமும் இந்த அளவுக்கு நெருங்கவில்லை.

மிகமிக உற்சாகமான சிரிப்பு, உரத்த குரல், அழுத்தம் திருத்தமானபேச்சு. மலையகத்தில் ஆரம்பத்தில் கொஞ்சநாள் ஆரம்பபள்ளி ஆசிரியராக இருந்திருக்கிறார். ஆரம்பப்பள்ளி ஆசிரியராக இருந்தவர்களை கூப்பிடு தூரத்திலேயே கண்டுபிடித்துவிடலாம். தெளிவத்தை ஜோசப்பின் காலங்கள்சாவதில்லை என்னும் நாவலையும் சில சிறுகதைகளையும் நான் வாசித்திருந்தேன்.’

இறுதியாக

தகவம் என்கிற தமிழ்க் கதைஞர் வட்டமானது சிறந்த சிறுகதைகளைத் தேர்ந்தெடுத்து பரிசளிப்பு வழக்குவதை தொடர்ந்து செய்வது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இராசையா மாஸ்டர் முன்னின்று எடுத்த பணியை அவரது மகள் வசந்தி, மருமகன் தயாபரன் மற்றும் மாத்தளை காரத்திகேசு உட்பட்ட தகவம் அமைப்பினர் தொடர்ந்து செய்வது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும்.

பொதுவாக எமது சிறுகதைகளில் உள்ளடக்கம் சிறப்பானதாக, சமூக நோக்குள்ளதாக இருப்பதை எவரும் மறுக்க முடியாது.

அது சொல்லப்படும் விதத்தில் இன்னும் வளரவேண்டிய அவசியம் பொதுவாக உள்ளது.

மிகச் சிறப்பான கதைசொல்லிகள் எம்மிடையே சிலர் இருக்கிறார்கள். இருந்தபோதும் பலருக்கு அக்கலை இன்னமும் இங்கு கை கூடவில்லை.

அந்த வகையில் நோக்கும்போது இத்தகைய பரிசளிப்புகள் அவர்களை வளர்த்து ஊக்குவிப்பதாக அமையும் என நம்புகிறேன். இந்த அரிய பணியைச் செய்யும் அவர்களைப் பாராட்டுவதில் மகிழ்கிறேன்.

பொன்விழாக் கண்ட எழுத்தாள நண்பரான தெளிவத்தை இன்னும் பல்லாண்டுகளுக்கு தனது அரிய பணியைத் தொடர வேண்டும் என வாழ்த்தி அமைகிறேன்.

எம்.கே.முருகானந்தன்.

தகவம் பரிசளிப்பு விழாவில் பேசியதன் குறிப்பு

Read Full Post »

>“வாயடைத்துப் போனோம்;
வராதாம் ஒரு சொல்லும்.
‘திக்’ கென்ற மோதல் –
திடுக்கிட்டுப் போனோமே!”

என்ற முருகையனின் கவிதை வரிகளுடன் முற்போக்குக் கவிஞன் முருகையன் அஞ்சலிக் கூட்டத்தை ஆரம்பித்தார் தேவகெளரி. இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட இக் கூட்டம் 58,தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் நடை பெற்றது. சென்ற ஞாயிறு ஆகஸ்ட் 2 ம் திகதி 4.30 மணியளவில் கூட்டம் ஆரம்பமானது.

திருமதி முருகையன், அவரது மகன், மகள், மருமக்கள் மற்றும் பேரக் குழந்தைகள் இக் கூட்டத்தில் கலந்து கொண்டது மனத்தைத் தொடும் சம்பவமாக இருந்தது. அவர்களுடன் பேசவும், முருகையன் இழப்பினால் ஏற்பட்ட சோகத்தை பகிர்ந்து கொள்ளவும் கிடைத்தது மனதிற்கு ஆறுதல் அளித்தது.


தலைமை வகித்துப் பேசிய தேவகெளரி அவரின் ஆடம்பரமற்ற மிக எளிமையான போக்கை சிலாகித்துக் கூறினார். யாழ் பல்கலைக் கழகத்தில் உயர்நிர்வாகப் பதவியை வகித்த காலத்தில் கூட தனது வழமையான குடையுடன் நடந்து செல்லும் தன்மையை நினைவு படுத்தினார்.

சமூகத்தை நையாண்டி செய்து இயல்பான பேச்சு மொழியில் அவரைப் போல கவிதை ஆக்கியவர்கள் வேறெவரும் இல்லை. இரண்டாயிரம் ஆண்டு பாரம்பரியம் எமக்குத் தந்துள்ள சுமையை அவர் கவிதையில் கொண்டு வந்தது நல்ல உதாரணம்.

மரபுக் கவிதைகளையே ஆரம்பத்தில் எழுதிய முருகையன் பின்னர் புதுக் கவிதையிலும் தனது வீச்சை அற்புதமாக வெளிப்படுத்தினார். கவிதை, பாநாடகம் போன்ற படைப்புலகி்ற்கு அப்பால் மொழிபெயர்ப்புத் துறைக்கு ஆற்றிய பங்களிப்பையும் தேவகெளரி விதந்து பேசினார்.

அடுத்துப் பேசிய ஈழத்து முற்போக்கு எழுத்தாளர்களில் மூத்த ஒருவரான நீர்வை பொன்னையன் முருகையனை பல்துறை ஆளுமை கொண்டவர் எனக் குறிப்பிட்டார். கவிதை, நாடகம், விமர்சனம், மொழிபெயர்ப்புத் துறைகளில் முருகையன் ஆற்றிய பங்களிப்பைப் பற்றி பேசும் போது மொழிபெயர்ப்பு நுட்பங்கள் என்றதொரு அருமையான நூல் எழுதியதையும் குறிப்பட்டார்.


முருகையன் படைப்புகளில் மனிதநேயம், மனித முன்னேற்றம், போர்க்குணம் ஆகியன எப்பொழுதும் நிறைந்திருக்கும். அவர் தனிமனிதர் அல்ல கூட்டு இயக்கத்தில் நம்பிக்கை கொண்ட ஒருவர். அவ்வாறே முற்போக்கு அணியில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் தீவிரமாக இயங்கியதையும் குறிப்பட்டார். அவரது கவிதைகள் வாள்வெட்டுப் போல கூர்மையானவை என்றார். சாதீய ஒடுக்குமுறைக்கு எதிரான தீவிர குரல் அவரது கவிதைகளில் ஒலித்ததாகவும் சொன்னார்.

மும்மொழி ஆற்றல் பெற்றவராகவும் குறிப்பட்டார். விஞ்ஞானப்பட்டதாரியான அதே நேரம் கலைப்பட்டதாரியும் கூட என வியந்து பேற்றினார். அதனால் அவரது கவிதைகளில் விஞ்ஞானத்தின் கூர்மையும், கலையழகும் சேர்ந்திருந்தது என்றார்.

முன்னொரு தடவை முருகையனின் கவிதைகளை பேராசிரியர் நுஃமான் இதே மேடையில் ஆய்வு செய்ததும் பின்னர் அக்கட்டுரை ‘முற்போக்கு இலக்கியத்தில் கவிதைச் சுவடுகள்’ என்ற நூலில் இடம் பெற்றதையும் குறிப்பிட்டார்.

இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையினால் ஒழுங்கு செய்யப்பட்ட தொடர் கருத்தரங்குகளில் வாசிக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பான இது குமரன் புத்தக இல்லத்தால் வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இதில் முருகையன், சில்லையூர் செல்வராசன், பசுபதி, இக்பால், சுபத்திரன் மற்றும் நுஃமானின் கவிதைகள் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் அடங்குகின்றன.

முருகையனின் கவிதைகளை ஆய்வு செய்தது போதுமானது அல்ல. அவரது படைப்புகள் அனைத்ததையும் தொகுப்பதும், அவரது படைப்புகளை முழுமையாக ஆய்வு செய்வதும் எமக்கு முன் உள்ள பணி என்றார் நீர்வை பொன்னையன்.

விரிவுரையாளரும் முக்கிய விமர்சகர் மற்றும் ஆய்வறிஞரான த.இரவீந்திரன் நீண்டதொரு சிறந்த உரையை ஆற்றினார்.

நினைவஞ்சலிக் கூட்டமான இதில் தனது உரை முருகையனின் பங்களிப்பின் ஆளுமை பற்றியதே அன்றி படைப்புகள் பற்றிய ஆய்வு அல்ல என ஆரம்பித்தார். எழுபதுகளில் ‘கவிஞர்களின் கவிஞர்’என அறியப்பட்வர்.அக்கால மாணவனான தனக்கு கவிதை அறிமுகமாகிய போது பேசுவதுபோலும் கவிதை எழுத முடியும் என்பதை அவரது கவிதைகளில் கண்டு ஆச்சரியத்தில் மூழ்கினேன் என்று குறிப்பிட்டார்.

முருகையன் பேச்சோசையை கவிதையில் பயன்படுத்திய போது இலக்கியத்தில் பயன்படு்தாத சொற்களை இப்பொழுது கவிதையில் பயன்படுத்துகிறார்களே என்ற சர்ச்சை எழுந்தது. அப்பொழுது ஒருவர் முருகையனிடம் சில பேச்சுவழக்குச் சொற்களைக் கூறி இவை “முன்பு இலக்கியத்தில் பயன்படுத்தாச் சொற்கள் இப்பொழுது பயன்படுத்துகிறார்களே?” எனக் கேள்வி எழுப்பினார்.

“இல்லை பயன்படுத்தப்பட்டுள்ளது” என்றார் முருகையன்

“யார் பயன்படுத்தியது” என அவர் கேட்டார்.

“நான்” எனப் பெருமையோடு கூறினார்.

இது தற்புகழ்ச்சி அல்ல.

எந்த ஒரு படைப்பாளிக்கும் தனது படைப்பு பற்றிய உயர் மதிப்பு இருக்க வேண்டும்.

அது அவரிடம் இருந்தது. தனது படைப்பை தானே ரசிப்பது கூட ஒருவிதத்தில் ஆளுமைதான் என்றார் ரவீந்திரன்.

“முருகையன் தனது இறுதிக்காலத்தில் பல விடயங்களை மறந்திருந்தார், ஆயினும் தனது இலக்கியப் பங்களிப்பை மறக்கவில்லை. அவை பற்றிப் பேசும்போது அவர் முகம் மலர்ந்தது. பலவற்றை ஞாபகப்படுத்திச் சொன்னார். அத்துடன் சமத்துவ சமூகம், சமூக ஒற்றுமை, மேம்பாடு போன்ற அடிப்படைக் கோட்பாடுகளை அவர் இறுதிவரை மறக்கவில்லை. சுயமதிப்பீட்டையும் இழக்கவில்லை” என்று கூறிய ரவீந்திரன் தான் அவர் நோயுற்ற காலத்தில் சென்று சந்தித்தபோது நடந்த சம்பவங்கள் கூடாக அவற்றைத் தெளிவுபபடுத்தினார்.

சுமார் 6 மணியளவில் கூட்டம் நிறைவுற்றது.

ஈழத்து கவிதை இலக்கியத்திற்கு புது வீச்சும் புதுப் பார்வையும் கொடுத்த ஒரு அற்புதமான கவிஞனின் நினைவுகள் மனத்தை அழுத்த மண்டபத்திலிருந்து வெளியேறினோம்.

Read Full Post »

>நீர்வை பொன்னையன்: இலக்கியத்தடம் நூல் விமர்சன அரங்கு இன்று 20.01.2008 ஞாயிறு கொழும்பு வெள்ளவத்தை 58, தர்மாராமா வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடத்தில் செல்வி திருச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. தெளிவத்தை ஜோசப், ந.காண்டீபன் ஆகியோர் கருத்துரைகள் வழங்க, எம்.கே.முருகானந்தன் தொகுப்புரை நிகழ்த்தினார்.

உருவமா உள்ளடக்கமா முக்கியமானது என முன்பு நடந்த சர்ச்சையைக் குறிப்பிட்டு பேசிய செல்வி திருச்சந்திரன் “படைப்பு சிந்தனையைத் தூண்ட வேண்டும், மனத்தில் வடுவை ஏற்படுத்த வேண்டும். அது செலூக்கத்திற்கு தூண்டவேண்டும். அதுவே நல்ல இலக்கியத்திற்கான தன்மை” என்றார்.

தெளிவத்தை தனது கருத்துரையில் “நாம் எமது படைப்புகள் பற்றிப் பேசுவதில்லை. ஆய்வுகளும் செய்வதில்லை. ஆனால் தமிழகத்தில் செய்கிறார்கள். அவ்வாறு செய்தால்தான் எமது படைப்புகளையும் படைப்பாளிகளையும் வாசக மட்டத்தில் பரவலாகக் கொண்டு செல்ல முடியும். அத்தோடு படைப்புகள் பற்றி ஆய்வுகள், விவாதங்கள், சர்ச்சைகள் நடந்தால்தான் எமது இலக்கியம் மேல்நோக்கி நகர முடியும். தனது படைப்புகள் மூலம் வாசகர்களை அணுகுவதில் நீர்வை பொன்னையனுக்கு எவ்வித தயக்கமும் இருக்கவில்லை.” என்றார்.

காண்டீபன் தனது உரையில் “நீர்வை ஆழமான இறுக்கமான முற்போக்குவாதி. இது அவரது படைப்புகளில் துலக்கமாக வெளிப்பட்டது. ஆயினும் தமிழர் வாழ்வு போராட்ட காலத்தில் கால்பதித்த போது அவர்கள் பட்ட இன்னல்களையும். இனரீதியான அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதையும் பதிவு செய்யத் தவறவில்லை. இந்த விதத்தில் ஏனைய பல முற்போக்கு எழுத்தாளர்களிடம் இருந்து இவர் மாறுபட்டார். ஆனால் அப்பொழுதும் கூட தனது முற்போக்கு கொள்கைகளைக் கைகழுவி விடாது பற்றுதியுடன் எழுதினார்” என்றார்.

மேலும் “ நடப்பியலை பொறிமுறையாக மீளாக்கம் செய்தல் சீர்வையால் நிராகரிக்கப்படுகிறது. பொறிமுறையான மீளுருவாக்கம் கலையின் இழப்புக்குப் பெயர்ச்சி கொள்ள வைக்கும்” எனவும், “இந்தப் பன்முகமாகிய தெறிப்பில் பிரசார விசை தாழ்தலும், கலைப்பண்பமைவு எழுதலுமாகிய ஊசல் விசைகளைக் காணக் கூடியதுமாக இருந்தது” எனப் பேராசிரியர் சபா.ஜெயராசா தனது கட்டுரையில் குறிப்பிட்டதைச் சுட்டி, அதற்கு ஆதரவாக நீர்வையின் படைப்புகளை உதாரணம் காட்டி தனது கருத்துரையைக் காண்டீபன் தொடர்ந்தார்.

எம்.கே.முருகானந்தன் தனது தொகுப்புரையில் “எந்த ஒரு படைப்பாளியின் ஒட்டுதொத்த படைப்புகளையும் ஒருங்கு சேர்த்துப் பார்த்து, அவரின் படைப்பாற்றலையும் சமூக அரசியல் பங்களிப்புகளையும் முழுமையாக விமர்சிக்கும் ‘படைப்பாளுமை விமர்சனக் கலை’ ஈழத் தமிழ் இலக்கியப் பரப்பில் இன்றுவரை கை கூடத நிலையில் நீர்வை பொன்னையனின் இலக்கிய பங்களிப்பு முழுவதையும் கூறுகூறாக பரிசீலிக்க முயல்கின்ற இந்நூல் முக்கியமான, முன்னோடி வரவாக அமைகிறது” என்றார்.

கே.விஜயன், இக்பால் ஆகியோர் சபையிலிருந்து சில குறிப்புரைகளைச் சொன்னார்கள்.

224 பக்கங்களைக் கொண்ட இந்நூல் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவையால் வெளியிடப்பட்டுள்ளது. விலை ருபா 300 மட்டுமே.

தொடர்புகளுக்கு:-
இலங்கை முற்போக்கு கலை இலக்கிய பேரவை11,
இராஜசிங்க வீதி,
வெள்ளவத்தை. கொழும்பு 06.
இலங்கை.

கட்டுரையாக்கம்:-எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

« Newer Posts