Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘இளநரை’ Category

>

‘இவனுக்கு இளநரையாக இருக்கிறது. என்ன செய்யலாம்’ கேட்டவர் அவனது தகப்பனார்.

அவனுக்கு 13வயதுதான் ஆகிறது.வெளிப்படையாகப் பார்க்கும் போது நல்ல கருமையாகத்தான் தெரிந்தது.

ஆயினும் உற்றுப் பாரத்த போது ஆங்காங்கே வெள்ளிக் கம்பிகளாக சில தெரிந்தன. மகன் முகத்தில் சற்று வெட்கத்தின் சாயல் மெழுகியிருந்தது.

மற்றொருத்தியின் தலையில் பட்டை பட்டையாக வெள்ளை முடிகள் கருமுடிகளை அடாத்திப் பெரும்பான்மையாக நின்றன. சரும மருத்துவர் ஈடாக பலரிடம் மருத்துவம் செய்துவிட்டாராம். வயது 28 மட்டுமே.

அழைத்து வந்தது காதலன்.

எப்படிக் கழற்றி விடலாம் என வாய்புக்காகக் காத்திருப்பவன் போல அந்தரப்பட்டுக் கொண்டிருந்தான்.

பெண் முகத்தில் இயலாமையும் சோகமும் கருமேகங்களாக அப்பிக் கிடந்தன.

உண்மைதான் அகத்தை விட முகத்தையும் தோற்றத்தையும் மட்டுமே கவனத்தில் எடுக்கும் இன்றைய சமுதாயத்தின் பார்வையில் நரையும் பின்னடைவுதான்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

முடி நரைப்பது ஏன்?

முடி ஏன் நரைக்கிறது?

எமது முடியின் வளர்ச்சியானது படிப்படியாக நடக்கிறது.

எல்லா முடியும் ஒரே நேரத்தில் ஒரே வீச்சில் வளரும் என்றில்லை.

சில முனைகளிலுள்ள முடிகள் வளராது, வேறு சில ஓய்விலும் இருக்கும்.

சில உதிரும்.

ஓய்வில் இருந்தவை வளரும்.

எமது சருமத்தின் அடியில் இருக்கும் வேர் போன்ற கலங்களிலிருந்து (hair follicles); வளர்கிறது. அங்குதான் முடிக்கு கருமை நிறத்தைக் கொடுக்கும் மெலனின் (melanin) என்ற சாயம் உள்ளது.

அதில் மெலனின் உற்பத்தி நின்றுவிட்டால் அந்த வேரிலிருந்து வளரும் முடிக்கு கருமை நிறம் இருக்காது. அது வெள்ளை முடியாகவே இருக்கும்.

ஆனால் அதே நேரம் வேறு முளைகளிலிருந்து கருமையான முடி வளரக் கூடும்.

படிப்படியாக ஏனைய முளை வேர்களிலும் மெலனின் உற்பத்தி அற்றுப் போக வெண் முடிகள் அதிகரிக்கும்.

மருத்துவ ரீதியாக 40 வயதிற்கு உட்பட்ட ஒருவரது தலைமுடிகளில் பாதிக்கு மேல் வெண்மை அடைந்தாலே அதனை இளநரை premature greying என்பார்கள்.

ஆனால் பேச்சு வழக்கில் நாம் சில முடிகள் நரைத்தால் கூட இளநரை என்கிறோம்.

பிரதான காரணம்

இளநரைக்குக் காரணம் என்ன?

பொதுவாக இது பரம்பரை சம்பந்தமானது. உங்கள் இரத்த உறவினர்களில் பலர் ஏற்கனவே நரைத் தலையினர் எனின் உங்கள் முடியும் பெரும்பாலும் அந்தத் திசையிலேயே செல்ல நேரிடும்.

தலைமுடி வேகமாக வளர்கின்ற காரணத்தால் அதுவே முதலில் நரைக்கத் தொடங்கும்.

உடல் முடிகள் நரைக்கச் சற்றுக் காலம் செல்லும்.

வேறு காரணங்கள்

  1. ஒரு சிலருக்கு இவை
  2. தைரொயிட் சுரப்பி நோய்கள்,
  3. வெண் குஷ்டம், இரத்தசோகை,
  4. விட்டமின் பீ 12 gP 12 vitamin B12 deficiency குறைபாடு

ஆகியவற்றாலும் நேரலாம். ஆயினும் இவை அரிது.

‘மெலனின் உற்பத்தியை அதிகரிக்கும் மருந்துகள் கிடையாதா?’ என நீங்கள் வினவுவது எனக்கும் கேட்கிறது.

தினமும் பத்திரிகைகளில் நரைமுடிக்கு மருந்துவம் என விளம்பரங்கள் வருகின்றன.

உண்மையில் அப்படி ஒரு மருந்து இருந்திருந்தால் இன்று மருந்துக்கடைகளை மக்கள் மொய்த்திருப்பார்கள்.

நரை முடியுடன் உலகில் எவருமே இருக்க மாட்டார்கள்.

வெளிப்படையாகச் சொல்வதானால் இதற்கான முயற்சிகளை பலரும் செய்திருக்கிறார்கள். ஆனால் வென்றவர் எவரும் இல்லை என்பதே.

ஏமாறுபவர்கள் இருக்கும் வரை அத்தகைய விளம்பரங்கள் வந்து கொண்டே இருக்கும்.

‘எனக்கும் பத்து வயதிலேயே இளநரை வந்தது.. என ஆரம்பித்தார் தனது மகனுடன் வந்த அந்த 50வயதுத் தகப்பனார்.

நிமிர்ந்து அவரது தலையைப் பார்த்தேன்.

கன்னங்கரேல் எனக் கருமையாக இருந்தது.

காரணம் என்ன? கேட்காமலே அதற்கான விடை என்னிடம் இருந்தது.

‘அப்போதிருந்தே நான் டைதான் பாவிக்கிறேன்’ கண்ணைச் சிமிட்டிக் கொண்டே சொன்னார்.

உலகை வென்றுவிட்ட பெருமிதம் அவர் முகத்தில் தெரிந்தது.

புத்தியுள்ளவர். மாயையில் இருக்கும் உலகை சுலபமாக வென்று விட்டார்.

இயற்கையின் நியதியையும் மற்றவர்கள் மனநிலையையும் புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி தன்னை மாற்றிக் கொண்டார்.

ஆம்! இன்றைய நிலையில் உங்களது இளநரைக்கு ஒரே விடை தலை முடிச்சாயம் மட்டுமே.

ஆனால் நான் கூறிய அவ்வளவு விளக்கங்களையும் கேட்ட மற்ற இளம் பெண் அடுத்த மருத்துவரை தேடிச் செல்ல ஆயத்தமானார்.

ஆசைக்கு அளவேது. இன்னும் சிலகாலம் மருந்திற்கு பணத்தைத் தண்ணீராகச் செலவழித்துவிட்டு டை (Dye) க்கு இறுதியில் வருவார்.

ஆனால் இன்னொரு வழியும் உண்டு. “Grey hair is a crown of Glory”

என்கிறது பைபிள்.

முதிர்ந்த அனுபவத்தின் வெளிப்பாடு என நரைமுடியை மதிப்பவர்களும் உளர்.

நீங்கள் உங்கள் முடிக்கு சாயம் பூச விருப்பம் அற்றவராயின் மேற் கூறிய அந்தப் பெருமையைப் பெற்று மகிழ்வாக வாழ முடியும்.

தலைமுடிச் சாயம் இடும்போது அவதானிக்க வேண்டியவை பல உண்டு. அவை பற்றி மற்றொரு கட்டுரையில் பார்ப்போம்.

இளநரை பற்றி மேலும் வாசிக்க இங்கே கிளிக் பண்ணுங்கள்

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »