Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘உட்புற வளி மாசடைதல்’ Category

அவருக்கு இருமல். கடுமையான இருமல் அல்ல. வேலைக்குப்; போகிறார். வேலைத் தளத்தில் ஏசீ உள்ளது. இவரால் அங்கு எவருக்கும் தொல்லை இல்லை. அங்கு இருமலே வருவதில்லை. ஆனால் வீடு திரும்பியதும் இருமல் தொடங்கிவிடும். படுக்கச் சென்றால் மிக அதிகம். இரவு இருமல் என்றால் ஆஸ்த்மாவா?

தீர விசாரித்தபோதுதான் காரணம் தெரிந்தது. அவர்களது வீட்டின் காற்றோட்டம் போதுமானது அல்ல. அத்துடன் அந்தக் காற்று மாசடைந்ததாக இருக்கும் என்பது புரிந்தது. வீட்டின் காற்று மாசடைத்தலுக்கு முக்கிய காரணம் புகைத்தலாகும். ஆனால் இவர் புகைப்பதில்லை. வீட்டில் வேறு யாரும் புகைப்பதும் இல்லை.

indoor-air-pollution-1

வீட்டின் உற்புறக் காற்று மாசடைவது என்பது உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சனையாக மாறியுள்ளது. உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் சுவாச நோய்களால் மரணமடைவது குறிப்பிடத்தக்கது.

இவற்றில் பெரும்பாலானவை

  • அடுப்புப் புகைகளால் ஏற்படும் மாசுக்களால் ஆகும்.
  • சுகந்த மணத்தை ஏற்படுத்தும் புகைகளும் அத்தகையவையே.

ஆய்வு

வீட்டிற்குள் சாம்பிராணிக் குச்சி போன்ற வாசனை ஊது பத்திகளைக் கொழுத்துவதானது வீட்டின் உற்புறக் காற்றை மாசுபடுத்தி சுவாசப்பையில் உள்ள கலங்களில் அழற்சியை ஏற்படுத்துகிறது என அண்மையில் செய்யப்பட்ட ஆய்வு ஒன்று கூறுகிறது.

அரேபிய நாட்டு வீடுகளில் அதிகம் கொழுத்தப்படும் இருவகை சாப்பிராணிகளைப் புகைக்க வைக்கும்போது வெளிவரும் துகள்ளையும் வாயுக்களையும் ஆய்வாளர்கள் இனங்கண்டார்கள்.

பின்னர் மனித சுவாசப் பையின் கலங்கள் வைக்கப்பட்ட அறையில் அவ் வாசனைப் பொருட்களை புகைக்க வைத்தார்கள். அப்பொழுது அந்தக் கலங்களில் ஏற்பட்ட மாற்றங்களானவை சிகரெட் புகைப்பதால் ஏற்படும் மாற்றங்களை ஒத்ததாக இருந்ததைத் கண்டறிந்தார்கள்.

article-1019115-0136A64800000578-617_233x344

Oudh,  Bahkoor  ஆகிய அந்த வாசனைப் பொருட்களில் அகர்வூட் மரத்திலிருந்து எடுக்கபட்டவையாகும். வாசனையைக் கொடுக்கும் சந்தன மரப்பிசின், சில எண்ணெய் வகைகள் போன்றவையும் கலந்திருந்தனவாம். அவற்றை எரிக்கும்போது carbon monoxide, formaldehyde, nitrogen oxides ஆகிய வாயுக்கள் வெளியேறி அறையின் காற்றை மாசடையச் செய்தன.

‘எனவே இவற்றை எரிக்கும்போது வீட்டின் ஜன்னல்களையும் கதவுகளையும் திறந்து வைத்து அப்புகையை வெளியேறச் செய்து வீட்டின் காற்றை மாசடையாது காப்பது அவசியம்’ என்கிறார்கள்

University of North Carolina at Chapel Hill சேர்ந்த ஆய்வாளர்கள்.
இவர்கள் முன்பு செய்த மற்றொரு ஆய்வானது இந்த சுகந்த மணப் புகைகளால் கண், காது தொண்டை, சருமம் போன்றவற்றில் எரிச்சல், ஆஸ்த்மா, வேறு சுவாச நோய்கள், தலைவலி, இருதய நோய்கள் போன்றவை ஏற்படலாம் என்றது.

உட்புற வளி மாசடைதல்

உட்புற வளி மாசடைதல் என்பது வீட்டு வளி மாத்திரம் அல்ல. வீடு, தொழில் செய்யும் இடம் அனைத்தையும் உள்ளடக்கும்.

உட்புற வளியின் தரம் குறைவடைவதால் கிருமித் தொற்றுகள் ஏற்படுகின்றன. சுவாசப்பை புற்று நோய் வருவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது. அத்துடன் ஆஸ்த்மா போன்ற நீண்டு தொடரும் சுவாச நோய்கள் வருவதற்கான சாத்தியமும் அதிகரிக்கிறது. மூக்கடைப்பு, கண் வரட்சி, ஓங்காளம், களைப்பு போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஏற்கனவே சுவாச நோய்கள் உள்ளவளுக்கு அது மோசமாகும்.

இதைத் தடுப்பதற்கு வழி என்ன?

மிக முக்கியமான விடயம் வளியை மாசடையச் செய்யும் காரணங்களைக் கண்டறிந்து அவற்றைத் தடுப்பதுதான். அத்துடன் காற்றோட்டத்தை அதிகரித்து சுத்தமான காற்று உள்ளே வருவதற்கான வழிகளை மேம்படுத்த வேண்டும்.
உட்புறக் வளி மாசடைவதற்கான சில முக்கிய காரணங்களைப் பார்க்கலாம்.

உயிரியல் மாசுகள்

பக்றீரியா, வைரஸ், பூஞ்சணம், விலங்கு எச்சங்கள், தூசிப் பூச்சி மற்றும் கரப்பொத்தானின் எச்சங்கள், போன்றவை உயிரியல் மாசு என்பதில் அடங்கும். இவற்றினால் உடலில் கிருமித் தொற்று ஏற்படுகிறது. ஒவ்வாமையை ஏற்படுத்துகிறது. அத்துடன் ஆஸ்த்மா தூண்டப்படுவதற்கும் காரணமாகிறது. இவை சிறிய பிரச்சனை எனச் சிலர் எண்ணினாலும் இவற்றால் வேலை நாட்களில் இழப்பு ஏற்படுகிறது. அத்துடன் பிள்ளைகளின் கல்வியும் பாதிப்படைகிறது.

நாய் பூனை போன்றவற்றை உள்ளே நுளையாது தடுப்பது முக்கியம். அத்துடன் தூசிப் பூச்சியின் தாக்கத்தைத் தடுப்பதற்கு படுக்கை விரிப்பு, தலையணை உறை, துணியாலான கால் மதிகள், மேசை கதிரை விரிப்புகள் ஆகியவற்றை அடிக்கடி தோய்ப்பதுடன் வெயிலில் உலர வைப்பது அல்லது ஸ்திரி போடுவது அவசியமாகும். குப்பை கூளங்களை அகற்ற வேண்டும்.

மறைமுகப் புகைத்தல்

மறைமுகப் புகைத்தல் (Secondhand Smoke)    என்பது ஒளித்திருந்து புகைப்பது என்பதல்ல. தான் புகைக்காவிட்டாலும் சுற்றாலில் மற்றவர்கள் புகைப்பதால் ஏற்படும் பாதிப்பையே குறிக்கிறது. கார்பன் மொனோ ஒட்சைட், போர்மல்டிஹைட் உட்பட சுமார் 200 மேற்பட்ட புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய நச்சுப் பொருட்கள் மறைமுகப் புகைத்தலால் காற்றில் கலக்கின்றன.

tumblr_m514tdcx0K1rwr4hho1_400

அமெரிக்காவில் மட்டும் இவ்வாறு வீட்டு வளியில் கலக்கும் புகையிலைப் புகையினால் 3000 மேற்பட்டவர்கள் சுவாசப்பை புற்று நோயல் இறக்கின்றனராம். அத்துடன் 50000 பேர் இருதய நோய்களால் இறக்கின்றனர்.

குழந்தைகளிலும் இதனால் பாரிய பாதிப்பு ஏற்படுகிறது. நியூமோனியா, சளிநோய்கள், காதில் கிருமித் தொற்று போன்றவை ஏற்படுகின்றன. சிறியவர்களிலும் பெரியவர்களிலும் ஆஸ்த்மா தோன்றுவதற்கும் ஏற்கனவே இருக்கும் ஆஸ்த்மா மோசமடைவதற்கும் மறைமுகப் புகைத்தல் காரணமாகிறது.

இதைத் தடுக்க ஒரே வழி புகைக்காதிருப்பதுதான். அத்துடன் குழந்தைகளுக்கு அருகிலும், வீடு, தொழிலகம், உணவு சாலைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களிலும் புகைக்காதிருக்க வேண்டும்.

எரிப்பதால் வரும் மாசுபாடுகள்

விறகு, காஸ், எண்ணெய், நிலக்கரி, போன்ற எதை எரிப்பதாலும் வெளியாகும், புகை மற்றும் வாய்வுகள் வளியை மாசடையச் செய்யும். அடுப்பு, விளக்கு, குளிர் காயும் இடம் போன்றவற்றிலிருந்து வெளியாகும் புகைகள் உதாரணங்களாகும்.

வெளிப்படையாகத் தெரியும் புகையை விட நிறமும் மணமும் அற்ற வாய்வான கார்பன் மொனோ ஒட்சைட், நைதரன் டை ஒட்சைட் போன்றவை ஆபத்தானவை. தலையிடி, மாறாட்டம், ஓங்காளம், தலைச்சுற்று, களைப்பு போன்ற அறிகுறிகளை கார்பன் மொனோ ஒட்சைட் கொண்டு வரும்.

அதன் செறிவு அதிகமாயின் ஆர்பாட்டமின்றி மரணத்தையும் கொண்டு வரலாம். நைதரன் டை ஒட்சைட் வாயுவால் கண், காது தொண்டை ஆகியவற்றில் அரிப்பு, மூச்சு எடுப்பதில் சிரமம் ஏற்படும். அத்துடன் கிருமித் தொற்றுகளுக்கும் வித்திடும்.

ரேடன் (Radon)

ரேடான் என்பது கதிரியக்கத்தின் சிதைவால் உண்டாகும் வளி வடிவக் கதிரியக்கத் தனிமமாகும். இது வீட்டின் சுவர், நிலம், அத்திவாரம், வடிகால்கள் போன்றவற்றில் ஏற்படும் வெடிப்புகளிலிருந்து வெளியேறுகிறது.

Wall-Cracked

இதனால் அமெரிக்காவில் மாத்திரம் வருடாந்தம் 21,000 பேர் சுவாசப் புற்றுநோயால் நோயால் மரணமடைகிறார்கள் என அறிக்கைகள் கூறுகின்றன. எமது நாடுகளில் இது பற்றிய பிரக்ஞையே கிடையாது

ஆஸ்பரோஸ் அல்லது கல்நார்

கூரைத் தகடுகளாக உபயோகிக்கும் ஆஸ்பரோஸ் ஆனது நுண்ணிய நார்களாலானது. இதன் தூசியிலிருந்து ஆஸ்பரோசிஸ் (asbestosis ) எனப்படும் சுவாசப்பை அழற்சி, சுவாசப் புற்றுநோய் போன்றவை ஏற்படுகிறது.

asbestos-sheets

இதை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளில் வேலை செய்பவர்களுக்கு பாதிப்பு அதிகம் ஏற்டலாம் என்பதால் அவற்றை ஆரம்ப நிலையில் கண்டறிவதற்காகவே காலக்கிரமத்தில் மருத்துவப் பரசோதனைகள் செய்யப்படுகின்றன.

Asbestosis, Cancer Asbestos, Mesothelioma Symptoms, Information damage

இன்னும் ஏராளம்

இவற்றைத் தவிர நாளாந்தம் நாம் உபயோகிக்கும் இன்னும் பல பொருட்கள் காற்றை மாசுபடுத்துகின்றன.

ஓட்டுப் பலகை, தளபாடங்கள், தரைக்கம்பளம் போன்றவற்றை ஒட்டுவதற்கு பயன்படுத்தும் திரவத்திலிருந்து வரும் போர்மல்டிஹைட் ஆனது கண்கடி, இருமல், தொண்டை அரிப்பு, சரும அழற்சி, தலையிடி, தலைப்பாரம் போன்ற பல பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.

வீடு, கழிப்பறை, சமையலறை போன்ற இடங்களை சுத்தப்படுத்தும் பொருட்கள் Detergents, disinfectant cleaners) கரப்பொத்தான் எலி போன்றவற்றிற்கான கிருமிநாசினிகள், பெயின்ட் வகைகள் போன்றவையும் சூழலை மாசுபடுத்துகின்றன. அவற்றை உபயோகிக்கும் போது பயன்படுத்தும் முறை பற்றி தயாரிப்பாளர் தந்த குறிப்புகளை சரியாகக் கடைப்பிடிக்க வேணடும்.

இறுதியாக

இன்று ஒவ்வாமை எனப்படும் அல்ர்ஜியுடன் தொடர்புடைய நோய்கள் அதிகரித்துள்ளன. கண் கடி, காதுக் கடி, தும்மல், மூக்கால் ஓடுதல், தொண்டை அரிப்பு, இருமல், ஆஸ்த்மா. சருமநோய்கள் யாவும் அதிகரித்துள்ளன. ‘சூழுல் மாசடைகிறது, கவனிப்பார் இல்லை’ என அரசையும் மற்றவர்களையும் குறை கூறுகிறோம்.

எமது சூழலை, எமது வீட்டை, அதன் காற்றை சுத்தமாக வைத்திருக்க நாம் என்ன செய்திருக்கிறோம் என எம்மை நாமே கேட்பது பயனுள்ளது.

வெடிப்புள;ள சுவர்கள். ஜன்னல் பொருத்திய இடத்துப் பிரிவுகள், அழுக்கான பூஞ்சணம் படிந்த சுவர்கள், புகை அடுப்பு, நுளம்புத் திரி, சாம்பிராணிக் குச்சு, கரைந்து உதிரும் பெயின்ட் எனப் பலவற்றையும் அலட்சியம் செய்துவிடுகிறோம். எமது வீட்டின் உட்புற வளியை சுத்தமாக வைத்திருக்காவிட்டால் அதற்கு விலையாக நோய்களை வாங்க வேண்டி நேரும்.

ஆரம்பத்தில் குறிப்பிட்டவருக்கு அதுதான் நடந்தது. படுக்கை அறையும் சுவாமி அறையும் அவர் வீட்டில் ஒன்றே. அங்கு சாம்பிராணி தினமும் கொழுத்திய புகையால் அலர்ஜியாகி இருமல் வந்தது. ஆஸ்த்மாவாக மாறிவிட்டது.
நீங்களும் அவதானமாக இருங்கள்.

எனது ஹாய் நலமா புளக்கில் Nov 19, 2013 வெளியான கட்டுரை

 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0..0.0.0

Read Full Post »