‘காலை எழுந்தவுடன் படிப்பு’ என்றான் பாரதி. காலை எழுந்தவுடன் குளிசை என்று பல முதியவர்கள் மருந்துப் போத்தல்களைத் திறக்கிறார்கள். மிகுதிப் பேர் ‘மாலையில் படுக்கையில் சரியும் முன்னர் மாத்திரை’ என முணுமுணுக்கிறார்கள்.
நீரிழிவு கொலஸ்டரோல், தைரெயிட் நோய்களைப் போன்ற பல நோய்கள் போலவே பிரஸர் நோய் உள்ளவர்களும் தொடர்ந்து மருந்து சாப்பிடுவது அவசியம். மருத்துவர் சிபார்சு செய்யத குறிப்பிட்ட மருந்தைக் குறிப்பட்ட அளவில் குறிப்பட்ட நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அலுக்காமல் சலிக்காமல் தொடர்ந்து சாப்பிட வேண்டும்.
பிரஸர் மருந்துகளை உட்கொள்வதற்கான சிறந்த நேரம் எது. காலையா, இரவா, மதியமா?
பிரசரால் ஆபத்துகள் எவ்வேளையில்
இதற்கான விடையைத் தேடு முன்னர் பிரஸர் பிரச்சனையால் ஏற்படுகின்றன ஆபத்தான பின் விளைவுகள் எவை அவை எந்த நேரத்தில் ஏற்படகின்றன என்பதை அறிந்து கொள்வது மிக அவசியமாகும்.
இருதய நோய்களால் ஏற்படும் மரணங்களை ஆராய்ந்த போது அவற்றில் 70 சதவிகிதமானவை காலை 7 மணி முதல் 9 மணிக்குள் நிகழ்வதாக மிகப் பிரபலமான குசயஅiபொயஅ ஆய்வு கூறியது. மற்றொரு ஆய்வானது மாரடைப்புகளில் 40 சதவிகிதமானவை காலை 6 மணியிலிருந்து 12 மணிக்கிடையில் நிகழ்வதாக எடுத்துக் காட்டியிருந்தது. அதே போல பக்கவாதம் மற்றும் இருதயத் துடிப்பு ஒழுங்கீனங்கள் ஆகியவையும் காலையிலேயே நிகழ்வதாக தரவுகள் கூறுகின்றன.
இவ்வாறு நிகழ்வதற்குக் காரணம் என்ன? எமது உயிரியல் கடிகாரத்தில் ஏற்படும் சில மாற்றங்களால் பிரஸரானது காலையில் விழித்து எழும் போதும், அதைத் தொடரும் காலை நேரத்திலும் சற்று அதிகரிக்கிறது. அத்துடன் காலை விழித்தெழும் நேரத்தில் இரத்தக் குழாய்கள் இறுக்கமடைகின்றன குருதியின் அளவிலும் சற்று ஏற்றம் தென்படுகிறது.
மருந்துகளைப் பயன்படுத்தல்
அதே நேரம் இன்று பொதுவாகப் பயன்படுத்தப்படும் பெரும்பாலான பிரஷர் மருந்துகளை ஒரு தடவை உட்கொண்டாலே போதுமாக இருக்கிறது. அதற்கு ஏற்றவாறே அவை தயாரிக்கப்படுகின்றன. அதாவது அவற்றை ஒரு தடவை உட்கொண்டால் அடுத்த 24 மணிநேரத்திற்கு பிரஷரைக் குறைக்கக் கூடியவையாக இருக்கின்றன.
உட்கொண்ட ஒரு மணி நேரத்தின் பின் அவை செயற்படத் தொடங்கும், 4 முதல் 15 மணிநேரத்தில் அவற்றின் செயற்பாடு உச்சநிலையில் இருக்கும். அதன் பின் அதன் தாக்கம் படிப்படியாகக் குறையத் தொடங்கும்போது அடுத்த நேர மருந்தை எடுக்கின்ற வேளை வந்துவிடும்.
எந்த வேளை நல்ல வேளை
எனவே இரவில் பிரஸர் குளிசைகளைப் உட்கொண்டால் பிரஷர் அதிகரிக்கும் தருணமான அதிகாலையில் மருந்தின் செயற்பாடு உச்ச கட்டத்தில் இருக்கும் அதனால் மேலும் பிரஷர் அதிகரிக்காமல் தடுத்துவிடும்.
எனவேதான் இரவில் பிரஸர் குளிசைகளைப் போடுவது சிறந்தது எனச் சிலர் கருதுகிறார்கள்.
ஆனால் இரவு நேரத்தில் எடுப்பதைவிட காலையில் எடுத்தபோது மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றை குறைத்தன என சில ஆய்வுகள்; கூறின. இவை பிரஷருக்கான சிகிச்சை பற்றிய பொதுவான ஆய்வுகள் ஆகும். காலையா மாலையா மருந்தப் போடப் பொருத்தமானது என்பதை இலக்காகக் கொண்டு செய்யப்பட்டவை அல்ல.
இருந்தபோதும் quinapril என்ற மருந்தை கொடுத்து செய்யப்பட்ட ஆய்வானது இரவில் கொடுப்பது நல்லது என்ற முடிவைத் தந்தது. அதே நேரம் atenolol, nifedipine , amlodipine.போன்ற மருந்துகளைக் கொடுத்து செய்யப்பட்ட ஆய்வுகள் காலையா இரவா என்பது பற்றி எந்தத் தெளிவான முடிவையும் தரவில்லை.
எனவே மருத்துவ ஆய்வுகளின் முடிவுகளின் படி எந்த முடிவையும் இப்பொழுது எடுக்க முடியாதிருக்கிறது.
வேறு காரணங்கள்
பிரஷர் மருந்துகளைத் தினந்தோறும் தவறாது எடுப்பது முக்கியமானது. காலையில் மாலையில் அல்லது எந்த ஒரு குறிப்பட்ட நேரத்தில்தான் தப்பாமல் எடுக்க வேண்டும் என்று எண்ணி வேளை தப்பினால் போடாமல் விட்டு விடக்கூடாது.
தவற விடுவதைவிட அவருக்கு உசிதமான நேரத்தில் போடுவதால் ஓரளவேனும் பலன் அளிக்கும். சிலருக்கு காலையில் தேநீருடன் போடுவது மறக்காத தருணமாக இருக்கும். வேறு சிலருக்கு வேலை எல்லாம் முடித்து இரவில் படுக்கப் போகும் நேரமே தவறாமல் எடுக்கக் கூடியதாக இருக்கும்.
எனவே ஒருவரது வாழ்க்கை முறை மற்றும் விருப்புகளுக்கு ஏற்றபடி எடுப்பதே உசிதமாகப் படுகிறது.
இருந்தபோதும் அவ்வாறு எடுப்பதையிட்டு மருத்துவருடன் பேசி முடிவெடுத்துச் செய்வதே நல்லது.
உதாரணமாக புரசசீன் போன்ற அல்பா புளக்கர் வகை மருந்துகள் கிடை நிலையிலிருந்து எழுந்திருக்கும்போது திடீரெனப் பிரசரைக் குறைத்து தலைசுற்றை ஏற்படுத்தலாம். முக்கியமாக வயதானவர்கள் இரவில் சிறுநீர் கழிக்க அல்லது வேறு காரணங்களுக்காக படுக்கையை விட்டு எழ நேர்ந்தால் தலைச்சுற்று ஏற்பட்டு விழுந்துவிடவும் கூடும். எனவே அவர்கள் அத்தகைய மருந்துகளை இரவில் போடுவதைவிட காலையில் போடுவது நல்லது.
பிரஷருக்கான சில மருந்துகள் சிறுநீரை அதிகம் கழியச் செய்யும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க நேருவதுடன் தூக்கத்தையும் குழப்பும். அத்தகைய மருந்துகளை இரவில் உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.. hydrochlorothiazide, amiloride, furosemide போன்றவை சில உதாரணங்களாகும். மருத்துவர்கள் அவற்றை காலையில் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.
குருதிச் சீனியின் அளவை அதிகமாகக் கூட்டவோ கடுமையாகக் குறைக்கவோ செய்யக் கூடிய சாத்தியம் இருப்பதால் அற்றனலோல், போன்ற டீ டிடழஉமநச வகை பிரஷர் மருந்துகளை இரவில் போடாது தவிர்ப்பது நல்லது.
இறுதியாக
ஆனால் எல்லா பிரஷர் மருந்துகளும் ஒரு வேளை மட்டும் உட்கொளள்ளப்படுபவை அல்ல. இரண்டு நேரம் அல்லது மூன்று தடவைகள் போடப்படுபவையும் உண்டு.
பலருக்கு ஒன்றிற்கு மேற்பட்ட வகை பிரஷர் மருந்துகளை உபயோகிக்க வேண்டி நேரலாம். பிரஷரைக் கட்டுப்படுத்துவதற்கு மட்டுமே மூன்று அல்லது நான்கு வேறு வகையான மருந்துகளை உட்கொள்வது அவசியமாகலாம்.
அவ்வாறு போடப்படும்போது அவற்றை பொதுவாக ஒரே நேரத்தில் சேர்த்துப் போடுவதில்லை. பிரித்துப் உட்கொள்ளுமாறு அறிவுறுத்துவார்கள்.
அத்தகைய தருணத்தில் எதை எதை எந்த நேரத்தில் போட வேண்டும் என்பதையிட்டு மருத்துவர் தெளிவான அறிவுறுத்தல்களைத் தருவார்கள். அதன்படி செய்யுங்கள்
ஒரு மருந்தை மட்டும் தரும்போது பொதுவாக பிரஷர் மருந்துகளை இரவில் மட்டும் உட்கொள்ளக் கொடுப்பதையே அதிகம் காண்கிறோம்.
எனவே நீங்களாக முடிலெடுக்காமல் மருத்துவ ஆலொசனையுடன் பிரஷர் மருந்துகள் போட வேண்டிய நேரங்களைத் தேர்ந்தெடுங்கள்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0