>
அம்மாவுக்குத்தான் சரியான கவலை. பார்க்கும் எல்லோருமே “உன்ரை மகளுக்கு என்ன பிரச்சனை? ஏன் இப்படி இருக்கிறாள்.” என அக்கறையோடு விசாரிக்கிறார்கள்.
மருத்துவனான எனக்கும் இது அக்கறை எடுக்க வேண்டிய விடயம் எனப் புரிகிறது.
ஆனால் மகள் அதை சட்டை பண்ணுவதாகத் தெரியவில்லை.
வேறோன்றும் இல்லை. அவள் சாப்பிடுகிறாள் இல்லையாம். எல்லா அம்மாக்களும் தனது மகள்மாரைப் பற்றிச் சொல்வது போன்ற வெற்றுப் பேச்சல்ல இது. தாய் சொல்வது உண்மை என்பதற்கு ஒல்லிக்குச்சான அவளது உடல் மறுக்க முடியாத சாட்சியாக நிற்கிறது.
வெளிறிய முகம், குச்சியான உடம்பு, வளர்ச்சி குன்றிய தசைகள், மென்மையான நோஞ்சி முடி, வரண்டு மஞ்சள் பூசியது போன்ற சருமத்துடன் சோர்ந்திருந்தாள். வயதிற்கேற்ற துடியாட்டம் இல்லை. எப்பொழுதும் குளிராக இருப்பதாகவும், சாதாரண குளிரைக் கூடத் தாங்க முடியாதிருப்பதாகவும், மலச்சிக்கல் தொல்லை கொடுப்பதாகவும் சொன்னாள். ஓரளவு இரத்தசோகையையும் அவதானிக்க முடிந்தது.
இவை அவளில் மட்டுமல்ல, Anorexia Nervosa எனப்படும் உணவு உட்கொள்ளல் குளறுபடியில் உள்ள பலருக்கும் ஏற்படுகிறது. குளறுபடி என நான் பொதுப்படையாகச் சொன்னாலும் மருத்துவம் செய்ய வேண்டிய ஒரு நோய்தான் இது.
இதற்கு அடிப்படைக் காரணம் தமது உடல் சம்பந்தமான தவறான கருதுகோள்தான். இது பொதுவாக இளம் பெண்களிடையே காணப்படும் பிரச்சனையாகும். இளைஞர்களிடையே காணப்படலாம் என்ற போதிலும் பெரும்பாலும் பெண்களே பாதிப்படைவது அதிகம்.
![]() |
தனது உடல் பற்றிய தவறான கருதுகோள் – தான் கொழுத்துவிட்டதான மனப் பிராந்தி |
‘மெல்லிய உடலாக இருப்பதுதான் ஆரோக்கியமானது, அதுதான் அழகையும் கொடுக்கும். தான் கொழுக்கக் கூடாது. தனது உடை அதிகரிப்பது கூடாது. அதற்காகக் குறைவாக உண்ண வேண்டும். கண்ட சாப்பாடுகளையும் சாப்பிடக்கூடாது.’ என எண்ணுவதே அடிப்படைப் பிரச்சனையாகும்.
சிலர் உணவுக் கட்டுப்பாடுடன் எடையைப் பேணுவதாக எண்ணி கடுமையான உடற்பயிற்சிகளையும் செய்வர். உண்ட உணவை வெளியேற்ற தாமாக முனைந்து வாந்தி எடுப்பதும், மலங்கழிய மாத்திரைகள் உண்பதும், சிறுநீர் அதிகமாக அடிக்க மருந்துகள் சாப்பிடுவதும் என பல காரியங்களைச் செய்யவும் கூடும்.
தம்மை அடிக்கடி நிறுத்துப் பார்ப்பதும், தான் உண்ணும் உணவுகளின் நிறையை அளந்து பார்ப்பதும், எடையை அதிகரிக்காது எனத் தாம் கருதும் சில குறிப்பிட்ட வகை உணவுகளை மட்டுமே உண்பதும் மற்றவர்களுக்கு நகைப்பை ஊட்டினாலும் அவர்கள் கடமையுணர்வோடு செய்வர்.
இது நகைப்பிற்கு உரிய நோய் அல்ல. அலட்சியப்படுத்தக் கூடியதும் அல்ல. ஏனெனில் இவர்கள் இறப்பதற்கான சாத்தியம் சாதாரணமானவர்களைவிட 10 மடங்கு அதிகமாகும். இருதயம் திடீரென நிற்றல், உடலிலுள்ள நீர் மற்றும் கனிய உப்புகளின் அளவுகளில் ஏற்படும் கடுமையான மாற்றங்கள் காரணமாகின்றன. சிலர் தற்கொலை செய்து இறப்பதும் உண்டு.
மனச்சோர்வு, மனப்பதகளிப்பு நோய், மாற்ற இயலா எண்ணங்கள் போன்ற உளநோய்கள் இவர்களிடையே இருப்பது அதிகம். பெண்களிடையே மாதவிடாய் கோளாறுகளும் அதிகமாக காணப்படும். சிலர் போதைப்பொருள் பாவனையாளர்களாகவும் இருக்கக் கூடும். நரம்பு சம்பந்தமான நோய்கள், இருதய நோய்கள் போன்றவை இருக்கிறதா என்பதையும் மருத்துவர்கள் சோதித்துப் பார்ப்பர்.
மருத்துவத்தைப் பொறுத்தவரையில் அது மூன்று படிகளைக் கொண்டதாகும்
- நோயாளின் எடையை சாதாரண அளவிற்கு கொண்டுவருதல் முக்கியமானது.
- நோயாளியின் உணவு உண்ணல் குளறுபடி நிலைக்கு அடிப்படையான உளவியல் காரணத்தைக் கண்டறிந்து அதற்கு சிகிச்சையளித்தல்
- தவறான உணவுமுறைகளுக்கான பழக்கவழக்கங்கள், நம்பிக்கைகள் ஆகியவற்றை மாற்றுதலும், மீள வராமல் தடுத்தலுமாகும்.
மருந்துகள் மட்டும் இவற்றிற்கு உதவப் போவதில்லை. தனிப்பட்ட ரீதியிலும் குடும்பத்தினருடனும் கலந்துரையாடுவது, உளவளத் துணை ஆகியன நல்ல பலனைக் கொடுக்கும்.
உணவு உண்ணல் சம்பந்தமான வேறு நோய்கள்
உணவு உட்கொள்ளல் முறையோடு சம்பந்தமான வேறு இரு நோய்களைப் பற்றியும் குறிப்பிட வேண்டும்.
அதீதமாக உண்ண வேண்டும் என்ற அடக்க முடியாத அவா, இதனால் எடை அதிகரிப்பது, அது பற்றி குற்ற உணர்வுக்கு ஆளாவது. குற்ற உணர்விலிருந்து மீள மேலும் உண்பது என்பது (Binge eating) நோயாகும்
கட்டுப்படுத்த முடியாது அதீதமாக உண்பதும் பின் அதன் பாதிப்பை நீக்க தானாக வாந்தியெடுத்தல், பேதிபோக வைத்தல் (Bulimina nervosa) மற்றொரு நோயாகும்.
இவை யாவும் மருத்துவ ஆலோசனையுடன் குணப்படுத்தக் கூடியவையே.
உடையைக் குறைக்கும் அற்புத வழிகளுக்கு கீழே சொடுக்குங்கள்
வயதிற்கும் எடைக்கும் இடையிலான தொடர்பு பற்றி சிரித்துக்கொண்டு அறிய கீழே சொடுக்குங்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0