Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எதனை வேண்டுவோம்’ Category

சுமதி குகதாசனின் ‘எதனை வேண்டுவோம்’ கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா இன்று நடைபெறுகிறது. சென்ற வருடம் தை மாதத்தில் அவரது முதல் நூலான தளிர்களின் சுமைகள் கவிதைத் தொகுதி நூல் வெளியீட்டு விழா இதே மண்டபத்தில் நடைபெற்றது. இப்பொழுது அவரது இரண்டாவது நூல் வாசகர்களின் கைகளுக்கு வருகிறது.

சுமதி குகதாசன் ஏன் எழுதுகிறார்? ஓன்று அல்லது ஒன்றரை வருட கால இடைவெளிக்குள் ஏன் தனது இரண்டாவது நூலைக் கொண்டு வருகிறார்.

DSC05987-001

காரணங்கள் பலவாக இருக்கக் கூடும். ஆனால் ஒரு வாசகன் என்ற நிலையில் இருந்து நோக்கும்போது அவர் தான் சார்ந்த சமூகத்திற்கு பலவற்றைச் சொல்ல அவாவுகிறார் என்றே எண்ணுகிறேன்.

இவரது முதலாவது நூலை நான் முழமையாக வாசித்திருக்கிறேன். அதைப் பற்றி இம் மேடையில் அப்பொழுது பேசும்போது  அவரது படைப்புகளில் இருந்த 5 முக்கிய விடயங்களைப் பற்றிப் பிரஸ்தாபித்திருந்தேன். அதை ஒட்டிய சில விடயங்களை இப்பொழுது மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.

தான் வாழும் சமூகத்தில் அவர்; பல்வேறுவிதமான பாத்திரங்களை வகிக்கிறார். அவ்வப் பாத்திரங்களுக்கு ஏற்ப தனது கருத்துக்களை முன்வைக்கிறார். அவரது பார்வையும் படைப்பாக்கத்தில் சொற் தேர்வுகளும் பாத்திரங்களுக்கு ஏற்றவாறு மாறுகின்றன.

  • ஒரிடத்தில் அவர் அன்பும் பாசமும் தெளிவான சிந்தனைகளும் உள்ள தாயாக இருக்கிறார்.
  • மற்றொரு புறம் கடமை உணர்வோடு பணியாற்றிய ஆசிரியையாக இருந்திருக்கிறார்.
  • தனது தந்தையான கார்த்திகேசு மாஸ்டர் ஊடாக முதிசமாகக் கிட்டிய சமத்துவ சமூகம் பற்றிய விரிந்த பார்வையும் முற்போக்கு கொள்கைகளும்; பொதுவுடமைவாதிப் பாத்திரத்தை வகிக்கக் செய்;கின்றன.
  • பெண்களைத் தெய்வமாகச் சொல்லிக் கொண்டே அவர்களை அடக்கி வைக்கும் சமூதாயத்தில் பெண்களின் அடையாளத்திற்காக போராட வேண்டியிருக்கும் பெண்ணியப் என்ற பாத்திரம் மற்றொன்று.
  • இவை எல்லாவற்றிக்கும் மேலாக வாக்கு வாங்கும் நேரம் தவிர்ந்த ஏனைய பொதுகளில் எல்லாம்  வாய் பொத்தப்பட்டு, கைகள் கட்டப்பட்டு, கண்கள் தாங்கள் காட்டுபற்றை அல்லாது வேறு எதையும் பார்க்காது மறைக்கப்பட்ட சுதந்திரம் ஒடுக்கட்டட பொதுசனமான வாழ நிர்பந்திக்கபட்டிருக்கிறார்.

இவ்வாறு அவர் வகிக்கும் பாத்திரங்களின் குரலை அவரது படைப்பகளுடே பயணிக்கும்போது அவதானிக் முடிந்ததை அந்த நேரத்தில் சொல்லியிருந்தேன்.

தளிர்களின் சுமைகள் என்ற அவரது முதல் நூலில் தாய்மைத்துவ நோக்கு, ஆசிரியத்துவ நோக்கு, பொதுவுடைமை நோக்கு, பெண்ணிய நோக்கு, சாதாரண பொதுமகன் நோக்கு போன்ற போக்குகளை அவதானிக்க முடிந்தது.

இந்த நூலிலும் அவ்வாறு காண முடியலாம். ஆயினும் இந்த நூலுக்குள் நான் முழுமையாக நுழைய போவதில்லை. கவிதை கவிதையாகப் பேசப் போவதில்லை. தலைமையுரைக்கு அது ஏற்றதல்ல. அத்துடன் இந்த நூல் பற்றிப் பேச மேலும் நான்கு பேச்சாளர்கள் இருக்கிறார்கள். நான் படைப்புகள் பற்றி அதிகம் பேசுவது அவர்களது பணிக்கு இடையூறாக இருக்கக் கூடும்.

அத்துடன் கேட்டவற்றை மீண்டும் ஒவ்வொரு பேச்சாளிரிடமும் கேட்க வேண்டிய அலுப்பான நிலையை உங்களுக்கு தர விரும்பவில்லை.
நூலினுடைய பெயர் ‘எதனை வேண்டுவோம்’ என அமைந்திருக்கிறது. அதைப் பற்றியே பேச எண்ணியுள்ளேன். மிக அருமையான தலைப்பு. ஆழமாகச் சிந்திக்கக் கூடியது. நூலின் தலைப்பாக ஏன் இதைத் தேர்ந்தெடுத்தார்.

இவரது ஒரு கவிதை இதே தலைப்பைக் கொண்டுள்ளது. 45 ம் பக்கத்தில் வருகிறது. தனக்குப் பிடித்த ஒரு கவிதையின் தலைப்பையே நூலுக்குக் கொடுத்திருக்கிறார் எனச் சொல்லலாமா? ஆதற்கு அக் கவிதையை நுணுகிப் படிக்க வேண்டும்.

ஆனால் அக் கவிதை என்ன சொல்கிறது என்பது பற்றி இங்கு எதுவும் சொல்லப் போதில்லை.ஆய்வுரை நடாத்த உள்ளவர்கள் தெளிவு படுத்துவார்கள்.

இருந்த போதும் நூல் முழுவதும் அவர் காண விரும்பும் சமூதாயம் பற்றியே நூலின் தலைப்பான எதனை வேண்டுவோம் பேசுகிறது எனக் கொள்ளலாம்.

நூலின் அட்டையில் ‘வேண்டுவோம்’ என்ற சொல்லைக் கண்டதுமே எனது உள்ளம் பாரதியை நோக்கியே ஓடியது. அவனது புகழ் பெற்ற கவி வரிகளில் நனைந்து நின்றது. மகிழ்ந்தது.

‘எண்ணிய முடிதல் வேண்டும் நல்லவே எண்ணல் வேண்டும்; திண்ணிய நெஞ்சம் வேண்டும்; தெளிந்த நல்லறிவு வேண்டும்; ….’ என்ற பாரதியின் வரிகள் உங்களுக்கும் நினைவில் வந்திருக்கவே செய்யும்.

வேண்டுதல் என்ற சொல் எமது வாழ்வில் நிதமும் பாவனையில் உள்ள ஒரு இனிய தமிழ் சொல்லாகும். அதனை நாம் பல்வேறு சந்தர்பங்களில் பல பொருள்படப் பயன்படுத்துகிறோம். பழம் தமிழ்க் கவிதைகளிலும் இச் சொல் இடம் பெற்றுள்ளது.

வள்ளுவரும் அச்சொல்லைக் குறளில் அதுவும் முதல் அத்தியாத்திலேயே பயன்படுத்தியிருக்கிறார்.

‘வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல’.

என்பது வள்ளுவர் வாக்கு. ஆனால் வள்ளுவர் சொல்வது மனிதர்களின் வேண்டுதல் பற்றியது அல்ல. கடவுளைப் பற்றியது. கடவுள் என்பவருக்கு வேண்டியது எதுவும் இல்லை. வேண்டாததும் எதுவும் இல்லை என்பது அவரது கருத்து. கடவுள் ஒருவர் இருக்கிறாரா? அவரைப் பின் பற்றினால் துன்பம் வருமா வராதா என்பவை பற்றி அவர் சொன்னவை இவ்விடத்தில் முக்கியமானவை அல்ல.

உண்மையில் வேண்டுதல் என்றால் என்ன?

ஆன்மீக விடயங்களை விடுத்து நாளாந்த வாழ்வை எடுத்துக் கொண்டால் வேண்டுதல் என்பதை இவ்வாறு விளக்கலாம்? எமக்கு ஒரு தேவை இருக்கிறது என வைத்துக் கொள்வோம். அல்லது பல தேவைகளாகவும் இருக்கலாம். அவற்றில் இலகுவாக பெற முடியாதவையாக இருக்கும். திட்டமிட்டு அவற்றைப் பெறுவுதற்கான உறுதியை நாம் எடுப்பதையே வேண்டுதல் எனக் கொள்ளலாம்.

திட்டமிட்ட திடமான உறுதி என வேண்டுதலைச் சுருங்கச் சொல்லலாமா?

வேண்டுதல்கள் ஆளுக்காள் வேறுபடும்.

ஞானியர்களுக்கு முக்தி பெறுவது வேண்டுதலாக இருக்கலாம், குழந்தையற்ற தம்பதிகளுக்கு மகப் பேறு வேண்டுதலாக இருக்கலாம், வேலையற்றவனுக்கு தொழில் வாய்ப்பு வேண்டுதலாக இருக்கலாம். உங்களுக்கு எனது தலைமையுரை விரைவில் முடிய வேண்டும் என்பது வேண்டுதலாக இருக்கலாம்.

வேண்டுதல்கள் பலவாக இருப்பது போலவே அதை நிறைவேற்றும் வழிகளும் பலவாகலாம்.

தமது தேவைகளைத் தாமே நிறைவேற்ற முடியும் எனத் தம்மில் நம்பிக்கை இல்லாதவர்கள் அர்ச்சனை செய்தும், காவடி, துலாக்காவடி, அங்கப் பிரதட்சனை போன்ற நேர்த்திக் கொண்டும் பெற முயல்வதும் வேண்டுதல்க்ளதாம். எனவே பெரும்பாலானவர்களுக்கு வேண்டுதல் என்பது இறைவனை அல்லது தங்களை மீறிய சக்தியை நாடுவதே வேண்டுவதாகவே இருக்கிறது.

பில்லா 2 வெற்றிக்காக அஜீத் திருப்பதியில் – வேண்டுதல் என்று ஒரு முறை பத்திரிகையில் படித்தேன். ரசிகர்கள் இன்னும் ஏடாகூடமாக பல வேண்டுதல்கள் வைப்பதை தமிழக பத்திரிகைகளில் பார்க்கலாம்.

இத்தகைய வேண்டுதல்கள் தர்க்கபூர்வமானவையா? அறிவியல் சார்ந்தவையா?  இல்லை என்பது பலரதும் நம்பிக்கை.

அறிவியலை ஒரு புறம் தள்ளுங்கள். ஒரு ஆன்மீகவாதியாக இருந்த கொண்டு இறைவனிடம் வேண்டுதல் செய்வது ஏற்புடையதா?

இல்லை என ஆணித்தரமாக விடை சொல்லியவர் பலராலும் மதிக்கப்படும் ஒருவர். இளைஞர்களின் புரட்சிக் கனவாக ஒரு காலத்தில் இருந்தவர். அவர் வேறு யாருமல்ல சுவாமி விவேகானந்தர் ஆகும். அவர் சொல்லியது என்ன?

‘கடவுளிடம் ஒன்றையும் வேண்டாதீர்கள்.
வேண்டுதல் ஒரு பலவீனம்.

இதனால், நாம் பிச்சைக்காரர்களாகி வருகிறோம்.
நாம் அனைவரும் ராஜகுமாரர்கள் என்பதை உணர்ந்து கொள்வோம்’;.

எவ்வளவு அற்புதமான ஆணித்தரமான தெளிவான வார்த்தைகள். மற்றவரிடம் வேண்டும்போது அது இறைவனாக இருந்தால் கூட எமது தன்னம்பிக்கையை இழந்து விடுகிறோம். கெஞ்சுகிறோம், இறைஞ்சுகிறோம், கை நீட்டுகிறோம். பிச்சைக்காரர்கள் ஆகிவிடுகிறோhம் என்கிறார் விவேகானந்தர்.

நவயுகக் கவியான பாரதி என்ன சொல்கிறான்?

பாரதியின் கவிதைகளைப் படித்தால் அவற்றில் பல இடங்களில் வேண்டுதல்கள் அடிநாதமாக இருப்பதை அவதானிக்கலாம். அவன் காலத்தில் அவன் வாழ்ந்த சூழலில் வேண்டுதல் அவனுக்கு பல வேண்டுதல்கள் தேவைப்பட்டிருக்கலாம். ஆனால் அவனது வேண்டுதல்கள் தனது சுய லாபத்திற்கதனவை அல்ல. பொருளாதராத் தேவைக்களுக்கனவை அல்ல.

‘..மதி
மூடும் பொய்மை இருள் எல்லாம் – எனை
முற்றும் விட்டு அகல வேண்டும். பாரதி

என்கிறான். மதியை மூடும் பொய்மையை வி;ட்டு விலகி அறிவொளி வேண்டிப் பாடுகிறான். அதுவும் தனக்கானதுதானே என்று நாம் எண்ணலாம். ஆனால் பாரதி அதற்கு அப்பாலும் செல்கிறான். தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களுக்காக மட்டுமின்றி ஏனைய பூச்சி புளுக்கள், விலங்குகளுக்காகவும் பாடுகிறான். அதற்கும் அப்பால் புல், பூண்டு, மரங்கள் யாவற்றிற்காகவும் வேண்டுகிறான்.

”பேசாப் பொருளைப் பேச நான் துணிந்தேன்
கேட்கா வரத்தைக் கேட்க நான் துணிந்தேன்
மண் மீதுள்ள மக்கள், பறவைகள்,
விலங்குகள், பூச்சிகள். புல், பூண்டு, மரங்கள்
யாவும் என் வினையால் இடும்பை தீர்ந்தே
இன்பமுற்று அன்புடன் இணங்கி வாழ்ந்திடவே
செய்தல் வேண்டும்’

என்கிறார் பாரதி.

வேண்டுதல்களில் இருவகை என்பதை ஆரம்பத்தில் சொன்னேன். ஓன்று தனக்கு அப்பால் உள்ள அல்லது தனக்கு மேம்பட் சக்தியை தனது தேவைக்காக வேண்டுவது. இரண்டாவது தானே அதைச் செய்து முடிப்பேன் என உறுதி கொள்வது. ‘என் வினையால் இடும்பை தீர்ந்தே..’ என்ற சொற்பிரயோகத்ததை கவனத்தில் வைத்திருங்கள்.

உண்மையில் இந்த இரண்டு வித வேண்டுதல்கள் யாவுமே ஒரு விதத்தில் நம்பிக்கைகள்தாம். ஓன்று நான் செய்து முடிப்பேன் என்பதாகும் மற்றது இறைவனின் துணையுடன் செய்து முடிப்பேன் எனபதுதானே. இருந்தாலும் நம்பிக்கைகள் மட்டும் எந்தக் காரியத்தையும் வெற்றி பெறச் செய்ய முடியாது. கடவுள் செய்வார் என வாழாதிருந்தால் எதையும் அடைய முடியாது. கடவுள் கைவிட்டார் என கடவுளையும் நோகவே நேரும்.

எனவே நம்பிக்கையால் மட்டும் எய்த முடியாது. எதற்கும் முயற்சி அவசியம். தனது ஆற்றலை நம்பி, தனது முழு முயற்சியையும் பிரயோகித்து வைராக்கியத்துடன் முயற்சி செய்பவனே வேண்டுதலை அடைய முடியும்.

பாரதி இறை நம்பிக்கை கொண்டவன். ஆனாலும் தனது ஆற்றலிலும் சற்றும் குறையாத உறுதி கொண்டவன். அது இந்த வரிகளில் வெளிப்படுகிறது.

‘..தேடிச் சோறுநிதந் தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து
நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?’
ஆம் பாரதி தெளிவாகவே சொல்லுகிறான். ‘வீழ்ந்து விட மாட்டேன் என உறுதியோடு சொல்கிறான்.

சுமதி குகதாசன் மகாகவி பாரதியில் பற்றுக் கொண்டவர். தனது கவிதையிலேயே பெருங்கவிஞன் என்று பாடுகிறார். அவரது வேண்டுதல் எவ்வாறு இருக்கிறது.

‘அகமது சொல்லின்’ என்ற தலைப்பிட்ட தனது உரையில் இவ்வாறு சொல்கிறார். ‘இங்கு மக்கள் சிந்தனையில் மாற்றம் தோன்றச் செய்யப்பட வேண்டும். இதற்காக கடவுள் விதியை நம்பாதவர்களாக இருப்பவர்கள் வல்லமை விதிப் பிரயோகத்தின் மூலம் மாற்றங்களை ஏற்படுத்தியே தீர்வுகளைக் கண்டறிய முடியும்’ என்கிறார். அதாவது எமது முயற்சிகளே முக்கியம் என்பது தெளிவாகிறது.

மற்றொரு இடத்தில் கவிதை வரிகளாகவும் எண்ணித் துணிந்த வாழ்வை வலியுறுத்துகிறார்.

எண்ணித்
துணிந்தவன்
வாழ்வு
ஏற்றம் நிறைந்ததாய்
ஆகும்.

சுமதி குகதாசனின் கவிதைகள் மேல் தட்டு கீழ் தட்டு எனும் வர்க்க பேதம் அழிய வேண்டும் என்பதை வலியுறுத்துகிறார். மக்களிடம் சிந்தனை மாற்றத்தை வேண்டி நிற்கிறார். அதை அடைய தன்னம்பிக்கையை வலியுறுத்துகிறார்.

அடக்கப்பட்ட மக்களின் குரலாக எழுகின்றார். அவர்களுக்கு நல்வாழ்வு கிடைக்க வேண்டும், எல்லோரும் எல்லாமே பெற வேண்டும் என்ற இலட்சியத்துடன் இவரது படைப்புகள் அமைகின்றன. படைப்புலகில் மேலும் பல நூல்களுடன் முன்னோக்கி நகர வேண்டும், வளமான எதிர்காலம் அமைய வேண்டும் என வாழ்த்தி எனது தலைமை உரையை நிறைவு செய்கிறேன்.

DSC05963-001

சுமதி குகதாசனின் ‘எதனை வேண்டுவோம்’ கவிதை நூல் வெளியீட்டு  விழாவில் (06.10.2013) நான் ஆற்றிய தலைமையுரை

0.0.0.0.0

Read Full Post »