Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எதிரொலி கேள்வி பதில்’ Category

கேள்வி- வயது கூடக் கூட உணவில் ஆர்வமில்லாமல் போவது ஏன்?

ச. பொன்னம்பலம், பரந்தன்

பதில்:- பசி குறைவதும், உணவில் நாட்டம் குறைவதும் வயது முதிர்வதின் ஒரு அம்சம் என்றே nhசல்லலாம். உடலியல் காரணங்களும் உளவியல் காரணங்களும் இருக்கலாம். இருந்தபோதும் இது எல்லா முதியவர்களையும் ஒரே விதமாகப் பாதிக்கிறது என்றும் சொல்ல முடியாது.

வயது முதிரும் போது அவர்கள் இளவயதில் இருந்ததுபோல ஓடியாடித் திரிவதில்லை. அவர்களது வேலைகள் குறைகின்றன. வேலைகள் செய்தாலும் அது இளவயதில் இருந்ததுபோல துடியாட்டமாக இருப்பதில்லை. இதனால் அவர்கள் செலவழிக்கும் சக்தியின் (கலோரி) அளவு குறைந்துவிடுகிறது. இதனால் பசி குறைந்துவிடுகிறது. புடிப்படியாக உண்ணும் உணவின் அளவு குறைந்துவிடும்.

முதுமையில் பலருக்கு பற்கள் விழுந்துவிடுகின்றன. இதனால் சப்பிச் சாப்பிட முடியாமல் போகிறது. பல்லுக் கட்டியிருந்தாலும் அவை பெரும்பாலும் உறுதியாக இருப்பதில்லை. இடைஞ்சலாகவே பல முதியவர்களால் பாரக்கப்படுகிறது.  இவற்றினால் உணவை இரசித்துச் சாப்பிட முடியாமல் போவதாலும் பலருக்கும் உணவில் ஆர்வம் கெட்டுவிடுகிறது.

உணவுக் கூறுகளை சிறுசிறு துண்டுகளாக வெட்டிக் கொடுப்பது, மென்மையான உணவுகள், ஈரலிப்பான உணவுகள் போன்ற நடைமுறைகள் பற்பிரச்சனைக்கு தீர்வாக அமைய முடியும்.

வேறு சிலருக்கு வயதாகும் போது உணவு சமிபாடடைவதில் சில பிரச்சனைகள் ஏற்படுகின்றன. உதாரணமாக பாலிலும் பாற்பொருட்களிலுமுள்ள லக்டோஸ் என்ற பொருள் ஒத்துக்கொள்வதில்லை. பால், பால்மா, பால் நேர்ந்த பொருட்களான கேக், ஐஸ்கிறீம், பிஸகட் போன்றவற்றை அவர்களது உணவுக் கால்வாயால் ஏற்றுக் கொள்ள முடிவதில்லை. இதனால் வயிற்றோட்டம், வயிற்றுப்; பொருமல் போன்ற அசௌகர்யங்கள் ஏற்படுகின்றன. சிலருக்கு ரொயிலட்றுக்கு போவற்கு முன்னரே மலம் கசிந்துவிடுவதுண்டு. பலருக்கு பிரச்சனைக்கான அடிப்படைக் காரணம் விளங்குவதில்லை. எனவே ‘சாப்பிட்டால் வயிற்றால் போகிறது’ என்று எண்ணி உணவுகளைத் தவிர்க்க முயல்வார்கள்.

‘அம்மா சாப்பிடிறா இல்லை. சத்துமா எழுதித்தாங்கோ என்று கேட்காத பிள்ளைகளே இல்லை. வேவையில்லாமல் சத்து மாக்களை கரைத்துக் கொடுத்தால் அவர்களது பசி மேலும் குறைந்துவிடுறது. ஏடை அதிகரித்து விடுகிறது. இதனால் அதிகரித்த உடையுடன் அவர்களால் அதிகம் நடக்க முடியாது கூடுதலாக உட்கார்ந்து விடுகிறார்கள். இது மேலும் எடையை அதிகரிக்கச் செய்வதுடன் பராமரிப்பவர்களுக்கு அவர்களது அதிகரித்த எடை சிரமத்தைக் கொடுகக்கிறது.

மற்றொரு முக்கிய காரணம் வயதாகும் மணம் சுவை போன்ற உணர்வுகள் மங்கிப் போவதாகும். உண்மையில் நாவில் உள்ள சுவையரும்புகளுக்கும் மணத்தை நுகரும் ஆற்றலுக்கும் நிறையத் தொடர்பிருக்கிறது. இவற்றின் நுகரும் ஆற்றல் வயதாகும் போது குறைவடைவதால் உணவுகளை இரசித்து ருசித்து உண்ண முடியாமல் போகிறது. இதனால் உணவில் நாட்டம் குறைவடைகிறது.

எனவே கூடுதலான மணம் சுவை போன்றவை சேர்த்து உணவு தயார்ப்பது உதவக் கூடும். இருந்த போதும் சுவைக்கென மேலதிக இனிப்பு உப்பு போன்றவற்றைச் சேர்ப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை அவர்களது வயதில் ஏற்படக் கூடிய பிரஸர், நீரிழிவு எடை அதிகர்ப்பு போன்ற பிரச்சனைகளைத் தீவிரமாக்கலாம். பதிலாக மணமும் சுவையுமுள்ள இவைவகைகள், பழங்கள், போன்றவற்றைச் சேர்க்கலாம், எலுமிச்சம் பழத்தின் புளிப்பு அவர்களுக்கு ஏற்றதாக இருக்கக் கூடும்.இயற்றையான சுவையூட்டிகளான ஏலம், கராம்பு கறுவா போன்றவையும் உதவலாம்.

இவற்றோடு பார்வைக் குறைபாடும் உணவுகளை ரசித்து உண்பதற்கு தடையாகலாம். வயதாகும் கற்றரட், மற்றும் விழித்திரைப் பாதிப்பு ஆகியவற்றால் பல முதியவர்களின் பார்வை தெளிவாக இருப்பதில்லை. இதனாலும் உணவில் ஆர்வம் குறைந்துவிடுகிறது.

முதியவர்கள் பெரும்பாலும் பல் வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருப்பர். உதாரணமாக நீரிழிவு, பிரஸர், மூட்டுவாதங்கள், அல்சைமர் நோய், மனச் சோர்வு போன்ற பலவிதமான பாதிப்புகள் இருக்கக் கூடும். இவற்றிற்காக பல மருந்துகளை தினமும் உட்கொள்வார்கள். இவற்றில் சில வாய்க்கசப்பு, ஓங்காளம், வாந்தி, வயிற்றுப்பொருமல், மலச்சிக்கல், வயிற்றோட்டம் போன்ற சிக்கல்கள் இருக்கலாம். இவையும் பசியின்மை, உணவில் ஆர்வமின்மை போன்றவற்றிற்னு காலாகலாம்.

‘ சரியான மலச்சிக்கல். சாப்பிடவே முடியுதில்லை’ என்று என்னிடம் பல முதியவர்கள் முறையிடுவார்கள். உண்மைதான் பல முதியவர்களுக்கு மலச்சிக்கல் இருக்கிறது. மலச்சிக்கலால் வயிறு பொருமலாக இருப்பதால் உண்ண முடிவதில்லை. மலச்சிக்கலுக்குப் பல காரணங்கள் இருக்கலாம். உணவு விரைவில் சமிபாடடையாமல் இருத்தல், போதிய உணவு உட்கொள்ளாமை, உண்ணும் உணவுகளிலும் நார்ப்பொருள் உள்ள உணவுகளைத் தவிர்த்து மென்னையான உணவுகளை நாடுதல், சில மருந்துகளும் காரணமாகலாம். மருந்து காரணமா என்பதையிட்டு மருத்துவருடன்  ஆலோசனை பெறவும்.

உணவு வேளையில் கூட இருந்து கதைத்துப் பேசி உண்பதற்கு யாருமில்லாததும் சிலருக்குப் பிரச்சனையாக இருக்கிறது. குடும்பமாக கூடியிருந்து சாப்பிட்டவருக்கு தனிமையில் இருந்து சாப்பிடுவது சலிப்படைய வைத்துவிடுகிறது. ‘சாப்பிட்டு என்ன..’ என ஆற்றாமை சூழ்ந்துகொள்கிறது. எதைச் சாப்பிட்டோம் எப்படிச் சாப்பிட்டோம் என்ற நினைவின்றி ஏதோ விழுங்கினோம் என்ற நிலை ஏற்படுகிறது சிலருக்கு.

தனிமை சிலருக்கு மனச்சோர்வு நோயை ஏற்படுத்தலாம். இதுவும் பசியை மழுங்கடிக்கும். எனவே கூடியிருந்து உணவு உட்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுப்பதும் உதவக் கூடும்.

பசியைத் தூண்டுவதற்கான சில மருந்துகள் உள்ளன. ஆனாலும் அவற்றை விட மேலே சொன்ன அடிப்படைக் காரணங்களைக் கண்டறிந்து நிவர்த்திப்பதே கூடுதலான பலன் அளிக்கும் என நம்புகிறேன்.

உண்ணும் உணவின் அளவு குறைந்தாலும் அது போசாக்குள்ளதாக இருப்பதில் அக்கறை போதிய கவனம் வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கேள்வி- சத்திரசிகிச்சைக் கூடத்துக்குச் செல்வதற்கு 12 மணித்தியாலத்துக்கு முன் நீர் அருந்தக் கூடாது என மருத்துவர்கள் சொல்கின்றார்களே. இது எதனால்?

எஸ். கயூரன் யாழ்ப்பாணம்

பதில்:- சத்திரசிகிச்சை செய்வதற்கு முன்னர் மயக்க மருந்து கொடுப்பார்கள். சில விதமான சத்திரசிகிச்சைகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதில்லை. குறிப்பிட்ட பகுதியை மட்டும் மரக்கச் செய்துவிட்டு சத்திரசிகிச்சை மேற்கொள்வார்கள். மயக்க மருந்து கொடுத்தால் அவர் நினைவிழப்பார். தனக்கு என்ன நடக்கிறது என்பதை சற்றேனும் அறிய முடியாத நிலையில் இருப்பார்.

மயக்க மருந்து கொடுத்திருக்கும்போது எமது இச்சை செயற்பாடுகள் மட்டுமின்றி அனிச்சை செயற்பாடுகளும் தற்காலிகமாகச் செயற்படாது.

இதன்காரணமாக இரைப்பையில் உணவு அல்லது நீராகாரம் இருந்தால் அது வாந்தியாக வெளியேறலாம். அல்லது தொண்டைப் பகுதிக்குள் அல்லது களப்பகுதிக்குள் மேலெழுந்து வரக் கூடும். அவ்வாறு மேnலுழுந்து வரும் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சிந்திவிடக் கூடும்.

உணவானது அவ்வாறு மேnலுழுந்து வரும்போது, அது சுவாசக் குழாய்களுக்குள் சென்று அவற்றை அடைத்துவிடும் ஆபத்து உண்டு. இதனால் சுவாசம் தடைப்பட்டு மூச்சடைக்கும் ஆபத்து உண்டு. அத்துடன் உணவு அல்லது நீராகாரம் சுவாசப்பையினுள் சென்றுவிட்டால் சுவாசப்பையில் கிருமித்தொற்று ஏற்பட்டு நியூமோனியாவாக மாறக் கூடிய ஆபத்து உண்டு. இவை இரண்டுமே உயிராபத்தைக் கொண்டுவரக் கூடியவை.

இத்தகைய ஆபத்துகள் ஏற்படுவதைத் தடுப்பதற்பாகவே மயக்க மருந்து கொடுக்கும் வேளையில் இரைப்பை வெறுமையாக இருக்க வேண்டும். எனவேதான் வெறும் வயிற்றில் இருக்கவேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் நவீன மயக்க மருந்து கொடுக்கும் முறைகள் பாதுகாப்பனவை. சுவாசக் குழாய்களுக்குள் உணவு அல்லது திரவம் செல்வதற்கான சாத்தியங்கள் மிகக் குறைவேயாகும்.

எவ்வாறாயினும் வெறும்வயிற்றில் இருக்க வேண்டிய தேவை இருக்கவே செய்கிறது. ஆனால் எவ்வளவு நேரத்திற்கு இரைப்பையை வெறுமையாக வைத்திருக்க வேண்டும் என்பதில் வேறுபாடுகள் மட்டுமின்றி மாற்றுக் கருத்துகளும் உண்டு.

நீங்கள் சொல்லியபடி 12 மணிநேரம் எதுவும் உட்கொள்ளக் கூடாது என்று கட்டுப்பாடு விதிப்பது பழைய காலத்தில். இதுவே ஆண்டாண்டு காலமாக நிலவிவந்த முறையாகும். இன்றும் ஒருசிலர் இதைச் சொல்லக் கூடும்.

காலையில் 9 மணியளவில் சத்திரசிகிச்சை நடக்கும் என எதிர்பார்ப்பதால் இரவு உணவு உட்கொண்ட பின்னர் எதுவும் உண்ணவோ குடிக்கவோ வேண்டாம் எனச் சொல்லப்பட்டது.

ஆனால் இப்பொழுது அவ்வளவு நீண்டநேரம் வெறும் வயிற்றில் இருக்க வேண்டியதில்லை என்ற கருத்தே நிலவுகிறது. பொதுவாக 6 மணிநேரம் வெறும் வயிற்றில் இருந்தால் போதும் என்பதே தற்போதைய நடைமுறையாகும்.

குழந்தைகளின் இரைப்பை விரைவாகச் செயற்படுவதால் அவர்களுக்கு 4 மணித்தியாலயங்கள் வெறும் வயிற்றில் இருப்பது போதும் என்ற நடைமுறை உள்ளது.

நீண்ட நேரம் ஆகாரம் இன்றி வெறும் வயிற்றில் இருந்தால் பல பாதிப்புகள் ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. உதாரணமாக மயக்க மருந்தின் வேகம் தணிந்து நினைவு திரும்பும்போது தலையிடி, தலைச்;சுற்று, ஓங்காளம் போன்ற உடல் சற்று அசௌகர்யங்கள் ஏற்படலாம்.

அத்தோடு நீண்ட நேரம் நீராகரமும் அருந்தாமல் இருப்பதால் உடலில் நீரிழப்பு நிலை (Dehydration) ஏற்படக் கூடிய சாத்தியம் உண்டு. இதனால் நாளங்களைக் கண்டுபிடித்து அதனூடாக ஊசி ஏற்றுதல்,  பரிசோதனைகளுக்காக இரத்தத்தை எடுத்தல் போன்ற செயற்பாடுகள் மருத்துவர்களுக்கும் தாதியர்களுக்கும் சிரமமாகலாம்.

இவற்றைக் கருத்தில் கொண்டு அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்கள் பல முன்னேற்றமான சிபார்சுகளைச் செய்துள்ளார்கள்.

அதன்படி மயக்க மருந்து கொடுப்பதற்கு இரண்டு மணித்தியாலயங்கள் முதல் வரை நீர், பால் சேர்க்காத வெறும் தேநீர்,பழநார்கள் அற்ற வெறும் பழச்சாறு, மென்பானம் போன்றவற்றை அருந்தலாம் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

வரட்டிய பாண், பால் தேநீர் போன்ற ஆகாரங்களை சத்திரசிகிச்சைக்கு ஆறு மணிநேரத்திற்கு முன்வரை உட்கொள்ளலாம்.

ஆனால் சற்று கனதியான உணவுகளை சத்திரசிகிச்சைக்கு எட்டு மணிநேரத்திற்கு முன்னரே நிறுத்திவிட வேண்டும். கனதியான உணவு என்னும்போது இறைச்சிரூபவ் பொரித்த வதக்கிய உணவுகள்ரூபவ் எண்ணெய் பட்டர் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.

மேற்கூறிய அமெரிக்க மயக்க மருந்தூட்டும் மருத்துவ நிபுணர்களின் வழிகாட்டல்கள் எமக்கும் பொருந்தும் என்ற போதும் ஒவ்வொருவரும் அவரவரது மருத்துவர்கள் சொல்லும் கட்டுப்பாடுகளையே கடைப்பிடிப்பது அவசியம். ஒவ்வொரு தனிநோயாளரது தேவைகளை கருத்தில் கொண்டு; அந்து மருத்துவ சூழலுக்கு எற்றவாறே கட்டுப்பாடுகளை விதிக்கிறார்கள்.

இருந்தபோதும் அவற்றில் ஏதேனும் இடைஞ்சல்கள் அசௌகர்யங்கள் இருக்குமாயின் மருத்துவருடன் கலந்தாலோசித்து மாற்றங்கள் செய்வதும் சாத்தியமே.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு 30 வயது. புகைப்பிடிக்கும் பழக்கதுக்கு அடிமையாகிவிட்டேன். அதிலிருந்து மீள எவ்வளவு முயற்சித்தாலும் முடியவில்லை. இதற்கு என்ன செய்யலாம்?

கே. கவின் நெல்லியடி

புதில்:- உங்கள் கேள்வியில் உள்ள இரண்டு விடயங்கள் முயற்சி நீங்கள் வெற்றி பெறும் என்பதற்கு சான்றாக இருப்பதாக நான் நினைக்கிறேன்.

முதலாவது புகைத்தலுக்கு அடிமையாகிவிட்டதாக நீங்களே உணர்ந்து அதிலிருந்து மீள வேண்டும் என தீர்மானித்ததாகும். புகைத்தலைக் கைவிடமுடியுமா என்ற அவநம்பிக்கையுடன் பலர் தயங்கிக் கொண்டிருக்கும் போது விடுபட வேண்டும் என்ற தீர்மானமானமானது நிச்சயம் நம்பிக்கை ஊட்டுவதாகும். உங்கள் பாதிப்பிலிருந்து விடுபடுவதற்கான முதல் வெற்றி அதிலேயே நிச்சயமாகிவிட்டது.

புகைத்தலிருந்து விடுபட வேண்டும் என்ற தீர்மானாமானது மீள்வதற்கான முதற்படி மட்டுமல்ல உங்கள் உடல் நலத்தை மேம்படுத்துவதை நோக்கிய முக்கிய அடி எனலாம். நீங்கள் மட்டுமல்ல உலகளாவிய ரீதியில் வருடாந்தம் ஒரு மில்லியனுக்கு மேலானவர்கள் அத்தகைய முதலடியுடன் ஆரம்பித்தே புகைத்தலைக் கைவிடுகிறார்கள்.

இரண்டாவது விடயம் நீங்கள் பலமுறை முயன்றும் விடுபட முடியவில்லை என்பதாகும். நீங்கள் மட்டுமல்ல இன்னும் பலரும் மீண்டும் புகைக்க நேர்வதால் கைவிட முடியவில்லை என நினைக்கிறார்கள். அதையிட்டு அவநம்பி;கை கொள்கிறார்கள். ஆனால் முக்கியமான விடயம் என்வென்றால் இவற்றையெல்லாம் தாண்டியே பெரும்பாலானவர்கள் முற்றாகக் கைவிடுகிறார்கள் என்பதாகும்.

எனவே அவநம்பி;க்கை கொள்ளாதீர்கள். நிச்சயம் கைவிடுவீர்கள் உங்கள் தீர்மானம் உறுதியாக இருந்தால்.

முதலில் செய்ய வேண்டியது யாதெனில் நீங்கள் புகைத்தலை நிறுத்துவதற்கென ஒரு குறிப்பிட்ட தினத்தைத் தீர்மானித்துக்கொள்ள வேண்டும். அவ்வாறு செய்வதால் அந்தக் கால இடைவெளிக்குள் புகைத்தல் இல்லாத காலத்தை பற்றிய ஒரு மனநிலையை உங்களால் உருவாக்க முடியும். சிலர் குறிப்பிட்ட அந்த தினத்தில் புகைத்தலை திடீரென நிறுத்துவார்கள். வேறு சிலர் இந்தக் கால இடைவெளிக்குள் தினமும் தாங்கள் புகைக்கும் சிகரட்டின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைத்து அத் தினத்தில் முற்றாகக் கைவிடுவார்கள்.

நீங்கள் பொதுவாக எந்த நேரத்தில் புகைப்பீர்கள். பலருக்கு மது அருந்தும் போது புகைக்க வேண்டும். வேறு சிலருக்கு சாப்பிட்ட பின்னர் தம் அடித்தால்தான் சரிப்படும். சிலருக்கு கோப்பி குடிக்கும்போது கூட புகைக்க வேண்டியிருக்கும். டென்சனாகும் போது, மன அழுத்தம் ஏற்படும் போது புகைப்பவர்கள் பலர். வாகனம் செலுத்தும்போது புகைப்பவர்கள் இருக்கிறார்கள்.

இப்பொழுது; சிந்தித்துப் பாருங்கள். பொதுவாக எத்தகைய தருணங்களில் நீங்கள் பெரும்பாலும் புகைப்பீர்கள் என்பதை நினைவுபடுத்துங்கள். புகைத்தலை நிறுத்திய பின்னர் உங்களுக்கு புகைத்தலை தூண்டும் அத்தகைய சந்தர்ப்பங்களுக்கு முகம் கொடுப்பதைத் தவிர்க்க முயலுங்கள். ஆனால் பல சந்தர்ப்பங்கள் தவிர்க்க முடியாதவை என்பதையும் கருத்தில் கொள்ள வேண்டும். சாப்பிட்ட பின்னர் புகைக்கத் தோன்றுபவர் சாப்பிடாமல் இருக்க முடியுமா? அவ்வாறு எனின் அந்த நேரத்தில் உங்கள் மனதுக்கு இதமான வேறு ஏதாவது ஒரு விடயத்தில் ஈடுபட முனையுங்கள்.

புகைத்தலை நீங்கள் கைவிட இருப்பதை இரகசியமாக உங்களளவில் செய்யாதீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஒருவர், உங்கள் அன்புக்கு உரிய ஒருவர் அல்லது நீங்கள் மதிக்கும் ஒருவரிடம் நீங்கள் கைவிட இருப்பதை சொல்லுங்கள். இந்த ஆலோசனையை நான் ஒருவருக்கு கூறியபோது அவர் தன் பாசத்திற்குரிய மகளின் தலையில் கைவைத்து சத்தியம் செய்து கைவிட்டார். 20 வருடங்களாகப் புகைத்த அவர் அதன் பின்னர் புகைக்கவே இல்லை. இப்பொழுது 75 வயதிலும் ஆரோக்கியமாக இருக்கிறார்.

புகைக்கும் சிலர் ஒன்று சேர்ந்து கூட்டாக புகைத்தலை நிறுத்துவதும் உண்டு. அதுவும் நல்ல பலனைத் தரக்கூடிய முறையாகும்.

ஒரு சிலருக்கு புகைத்தலை நிறுத்துவதற்கு மருத்துவ உதவி தேவைப்படும். அது பல வகைப்படலாம்.

புகையிலையில் உள்ள நிக்கரின் என்ற பதார்த்தமே புகைத்தலுக்கு அடிமையாக்குகிறது. எனவே அதை மூக்கில் அடிக்கும் ஸ்ப்ரேயாக. தோலில் ஒட்டும் மருந்தாக, வாயில் போடும் லொசென்சாக என ஏதாவது ஒரு விதத்தில் மருத்துவர்கள் கொடுத்து அதையும் படிப்படியாக நிறுத்துவதன் மூலம் கைவிட வைப்பார்கள்.

வாயினால் உட்கொள்ளும் மருந்துகளும் உள்ளன. இவற்றை மருத்துவரின் நேரடிக் கண்காணிப்பின் கீழேயே செய்ய வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு வயது 25 . நான் ஒரு பெண்.  அதிகமாக தலைமுடி உதிர்கின்றது. தீர்வு என்ன?

வி. கஜானி கண்டி

பதில்- எமது முடிகள் நிரந்தரமானவை அல்ல அவை உதிராமல் இருப்பதற்கு. தினமும் 50 முதல் 100 வரையான முடிகள் உதிரவே செய்கின்றன. அதே நேரம் புதிதாக முளைக்கவும் செய்கின்றன. ஓவ்வொரு முடியும் 5- 6 ஆண்டுகள் வளர்ந்து வாழ்ந்து பின்னர் உதிர்கின்றன. வேறு முளைக்கின்றன. இது இயற்கையானது. ஆனால் வயதாகும்போது உதிர்வதற்கு ஏற்றளவு புதிதாக முனைப்பதில்லை.

ஆனால் நீங்கள் இளம் வயதுக்காரி. எனவே உதிர்வாற்கு ஏற்ப புதிதாக முளைக்க வேண்டும். ஆனால் நீங்கள் சொல்வதைப் பார்த்தால் உங்களுக்கு வழமையைக் விடக் கூடுதலாக உதிர்வது போலத் தெரிகிறது. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உங்கள் தந்தை அல்லது தாயிடமிருந்து வந்த பரம்பரை அம்சங்கள் காரணமாக இருக்கலாம். உங்களது வாழ்க்கை முறைகளில் ஏதாவது தவறு இருக்கலாம். சில தருணங்களில் சில நோய்களும் காரணமாக இருக்கலாம்.

ஏனைய விடயங்களைப் பற்றிப் பேச முன்னர் உங்கள் வயதில் வரக் கூடிய இரண்டு முக்கிய நோய்கள் இல்லை என்பதை நிச்சயப்படுத்த வேண்டும்.

உங்கள் தைரொயிட் சுரப்பி சரியாக வேலை செய்யவில்லை எனில் முடி அதிகமாக உதிரக் கூடும். தைரொயிட் என்பது எமது கழுத்துப் பகுதியில் உள்ள ஒரு சுரப்பி. தைரொக்சின் ஹோர்மோனை சுரக்கும். இது குறைவாக சுரந்தால் எடை அதிகரிப்பு, மாதவிடாய்க் குழப்பங்கள், சோம்பேறித்தன்மை, முடி உதிர்தல் போன்ற பல அறிகுறிகள் தோன்றலாம். சிலருக்கு வேறு எந்த அறிகுறிகளும் இன்றி முடி ஐதாவதே ஒரே ஓரு அறிகுறியாக இருக்கும். TSH என்ற இரத்தப் பரிசோதனையைச் செய்வதன் மூலம் உங்களுக்கு இந்தக் குறைபாடு இருக்கிறதா என்பதை சுலபமாகக் கண்டறியலாம்.

பொலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ரோம் (PCOS) என்ற நோயும் உங்கள் வயதில் இருக்க வாய்ப்புண்டு. எடை அதிகரிப்பு மாதவிடாய்க் குழப்பங்கள் முகப் பருக்கள் போன்ற அறிகுறிகள் இருக்கலாம். மருத்துவ ஆலோசனை மூலம் இந்தப் பிரச்சனை இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும்.

வேறு பல காரணங்களையும் சொல்லலாம்.

அண்மையில் ஏதாவது உளவியல் தாக்கங்கள் இருந்திருந்தாலும் முடி அதிகமாக உதிரக் கூடும். அண்மையில் குழந்தை பிறந்திருந்தாலும் அக் காலத்தில் ஏற்படுகிற ஹோர்மோன் மாற்றங்களாலும் முடி உதிரக் கூடும். மாறாக கர்ப்பமாக இருந்த காலத்தில் முடி மிகவும் அடர்த்தியாக இருந்ததை நீங்கள் நினைவு கூரக் கூடும். தலையில் பங்கஸ் தொற்று நோய் போன்ற சரும நோய்கள் இருந்தாலும் அதிகமாக முடி உதிரும். தொற்று நோயல்லாத வேறு சரும நோய்களாலும் முடி உதிரலாம்.

எனவே உங்கள் முடி கடுமையாக உதிர்கிறது எனில் அது வேறு நோய்கள் காரணமாக இல்லை என்பதை மருத்து ஆலோசனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகளை உட்கொளு;ளும் பெண்களுக்கும் அதிகமாக முடி உதிர வாய்ப்பு உள்ளது என்பதை கவனத்தில் கொள்ளவும். அதே போல உயர் இரத்த அழுத்தம், இருதய நோய்கள், மூட்டு நோய்கள், மனச்சோர்வு போன்ற நோய்களுக்கு உபயோகிக்கும் சில மருந்துகளும் முடி உதிர்தலை அதிகரிக்கும். நீங்கள் அவ்வாறு உபயோகித்தால் அதுதான் காரணமா என அறியவும் மாற்று மருந்துகளுக்கான ஆலோசனைக்காகவும் உங்கள் மருத்துவரை அணுகுங்கள்.

முடி உதிர்வதற்கு உங்கள் தவறான வாழ்க்கை முறைகளும் காரணமாகலாம். மிக நெருக்கமான பற்களை உடைய சீப்புகளைத் தவிர்த்து சற்று அதிக இடைவெளி உடைய பற் சீப்புகளை உபயோகியுங்கள். இறுக்கமான பற்கள் உடைய சீப்புகள் முடிகளை இழுத்து பிடுங்கிவிடவும் வாய்ப்புண்டு. அதேபோல முடியை அலங்கரிக்கும் போது மிக இறுக்மாக முடியைக் கட்டுவதும் கூடாது. இறுக்கமான பின்னல் இறுக்கமான போனி ஸ்டைல் போன்றவற்றை தவிர்த்து சற்று தொளதொளப்பாக முடியைச் சீவிக்க கட்டுவது நல்லது.

இரத்த சோகை போசாக்கு குறைபாடு போன்றவையும் காரணமாகலாம். எனவே விற்றமின்கள், இரும்புச் சத்து, புரதம்  போன்றவை உள்ள மீன், கீரை, பருப்பு பயறு வகைகள், காய்கறி பழவகைகள் உள்ளடங்கிய போசாக்கு உணவுகளை உண்பது அவசியம்.

முடி மீண்டும் வளர்வதைத் தூண்டுவதற்கான தலைக்கும் பூசும் சில மருந்துகள் இருக்கின்றன. உங்கள் முடி உதிர்விற்கு வேறு நோய்கள் காரணம் இல்லை எனில் மருத்துவர் அதை உங்களுக்கு சிபார்சு செய்வார்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

கர்ப்பகால உடல் நிறையை எவ்வாறு குறைப்பது?
புனிதா மட்டக்களப்பு

பதில்:- கர்ப்ப காலத்தில் எடை அதிகரிப்பது என்பது இயற்கையானது. கட்டாயம் அதிகரிக்கவே வேண்டும். நிறைமாதத்தில் ஒரு கர்ப்பணியின் எடையானது சுமார் 10-11 கிலோ அதிகரிக்கும். ஆனால் அதைவிட அதீதமாக அதிகரிப்பது கூடாது.

அவ்வாறு அதீதமாக அதிகரித்தால் அதற்கான காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தே சிகிச்சை செய்ய வேண்டும்.

எடை அதிகரிப்பானது படிப்படியாக அமையும். முதல் மூன்று மாதங்களில் எடை அதிகரிப்பானது சுமாராகவே இருக்கும். அக் காலப்பகுதியில் சுமார் 1-2 கிலோ அதிகரிப்பே காணப்படும். அதன் பின்னர் வாராவாரம் சுமார் 0.5 கிலோ அதிகரிக்கக் கூடும்.

இந்த எடை அதிகரிப்பில் 2 முதல் 2.5 கிலோவானது கருப்பையில் உள்ள குழந்தை மற்றும் நச்சுகொடிக்கானதாகும். சுமார் 2 கிலோ கர்ப்பிணியின் மார்பக மற்றும் ஏனைய ஏனைய திசுக்கள் அதிகரிப்பதால் ஏற்படுவதாகும். மிகுதி 1.25 கிலோவானது அம்னியோடிக் திரவம் மற்றும் அதிகரித்த ஏனைய நீர்களிலானதாகும்.

கர்ப்பத்தின் குறித்த காலத்தில் ஏற்படும் எடை அதிகரிப்பானது எதிர்பார்த்ததை விட அதிகமாக இருந்தால் காரணத்தைக் கண்டறிய வேண்டும்.

ஆனால் கருவறையில் இருப்பது இரணைக் குழந்தைகளானால் அதிகரிப்பு சற்று அதிகமாக இருக்கும்.

கர்ப்பகாலத்தில் திடீரென கூடுதலாக எடை அதிகரிப்பது நீரிழிவு நோயின் ஆரம்ப அறிகுறியாகவும் இருக்கலாம்.

அத்துடன் பிரஸர் அதிகரிப்போடு கூடிய (Pre eclampsia) பிறீஇக்கொலம்சியாவின் அறிகுறியாகவும் இருக்கலாம். இரத்த சிறுநீர் மற்றும் இரத்த அழுத்தப் பரிசோதனைகளை மருத்துவர் அல்லது தாதி உடாக செய்து காரணத்தைக் கண்டறிந்து அதற்கான பரிகாரம் தேடவேண்டும்.

நோய்கள் காரணமல்லாத எடை அதிகரிப்பு என்று அறிந்தால் அவர் தனது உணவு முறையில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வதுடன் சற்று உடற் பயிற்சியும் செய்து தேவைக்கு அதிகமான எடை அதிகரிப்பை சரி செய்ய வேண்டும்.

உதாரணமாக எண்ணெயில் பொரித்த, வதக்கிய உணவுகளைத் தவிர்க்க வேண்டும். தினமும் பால் அருந்த வேண்டும். அதை ஆடை நீங்கிய பாலாக அருந்த வேண்டும்.

சீனி அதிகம் சேர்ப்பதையும் இனிப்பான பானங்களையும் தவிர்க்க வேண்டும். லட்டு, கேசரி,தொதல்,கேக், சொக்ளட், டோநட் போன்ற போன்ற இனிப்பான உணவுகளைத் தவிர்க்க வேண்டும்.

அதீத எடை உள்ளவர்கள் உப்பையும் குறைப்பது நல்லது. ஏனெனில் உப்பானது உடலில் மேலதிக நீர் தேங்கிநிற்கச் செய்யும். அது எடையை அதிகரிக்கும்.

உடலில் தேங்கியுள்ள மேலதிக கொழுப்பைக் குறைப்பதற்கு உடற் பயிற்சியம் அவசியம். பொதுவாக நீந்துவது கர்ப்ப காலத்திற்கு ஏற்றதாகும். ஆயினும் எத்தகைய உடற் பயிற்சி நல்லதென்பதை இட்டு மருத்துவரோடு கலந்தாலோசிப்பது நல்லது.

கலோரி வலுக் கூடிய உணவுகளை மட்டுமே அதிக எடையுடைய கர்ப்பணிகள் தவிர்க்க வேண்டும். ஆயினும் போசாக்கு நிறைந்த உணவுகளான பால் முட்டை இறைச்சி காய்கறிகள் பழவகைகள் பருப்பு பயறு வகைகள் போன்றவற்றை போதியளவு உட்கொள்வது அவசியம்.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

அடிக்கடி நெட்டி முறிக்கக் கூடாது  என பாட்டி சொல்கிறார். உண்மையில் அது தவறா டொக்டர்?

எஸ். பிரணவி, சாவகச்சேரி

பதில்:- நெட்டி முறிப்பது தீங்கானது என்பது உங்கள் பாட்டியினது மட்டுமின்றி உலகளாவிய ரீதியிலும் பாட்டிகள் சொல்லி பரம்பரை பரம்பரையாக நம்பப்படுகிறது. ஏன் பல மருத்துவர்கள் கூட அது தீங்கானது எனச் சொல்லக் கூடும். மாற்றுக் கருத்துகளும் உள்ளன.

அண்மையில் அதாவது 2017 ல் செய்யப்பட்ட ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பாதிப்பு இல்லை என்கின்றன.

நெட்டி முறிக்கும்போது என்ன நடக்கிறது என 400 பேரை அல்டரா சவுண்ட் ஸ்கான் பரிசோதனை செய்து பார்த்தார்கள். அந்நேரம் சடுதியாக தனித்துவமான ஒளிப்பாய்ச்சல் போன்று மூட்டிற்குள் ஏற்பட்டது. நெட்டி முறிக்கும்போது மூட்டிற்குள் ஒன்றோடு ஒன்று முட்டிக் கொண்டிருக்கும் இருக்கும் இரு எலும்புகளினதும் மேற்பரப்புகள் இழுப்பட்டு விலகுகின்றன.

மூட்டிற்குள் இருக்கும் எலும்புகள் ஒன்றுடன் ஒன்று உராயாது சுலபமாக அசைவதற்கு உதவியாக அதற்குள் சிறிது திரவம் இருக்கிறது. அதை synovial fluid  என்பார்கள். இது கிறீஸ் போன்று செயற்படும். நெட்டி முறிக்கையில் எலும்பு மேற்பரப்புகள் சற்று விலகும். அப்போது போது மூட்டிற்குள் இருக்கும் அழுத்தம் குறைவதனால் அதற்குள் மேலதிக திரவம் வேகமாக உள்ளிழுக்கப்படும். இதன் போதே நெட்டி முறியும் சத்தம் உண்டாகிறது.

இவ்வாறு நெட்டி முறிக்கும் போது மூட்டினது உள்ளவு தற்காலிகமாக சற்று அதிகரிக்கிறது. அதனால் மூட்டினது செயற்பாட்டு வீதம் அதிகரிக்கிறது. அதாவது கூடியளவு வளையவும் நிமிரவும் முடிகிறது. எனவே நல்லது என்றுதானே சொல்ல வேண்டும்.

ஆனால் பல ஆண்டுகளுக்கு முன் அதாவது 1990 ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வானது நெட்டி முறிப்பதால் கைகள் சற்று வீங்குவதுடன் பிடிக்கும் வலிமையும் குறைகிறது என்றது. ஆனால் அந்த ஆய்வானது சரியான முறையில் நடைபெறவில்லை என இப்பொழுது சுட்டிக் காட்டப்படுகிறது. அத்துடன் 2017 ல் செய்யப்பட்ட இரு ஆய்வுகள் நெட்டி முறிப்பதால் பிடிக்கும் வலிமை குறையவில்லை எனத் தெளிவாகச் சொல்லின.

எனவே நெட்டி முற்பதால் பாதிப்பு இல்லை என்றே சொல்லத் தோன்றுகிறது. மாறாக சற்று சுகமான உணர்வு ஏற்படுகிறது. அதாவது சுலபமாக வளையவும் நிமிரவும் முடிவதால்.

சவ்வுகள் மாட்டு;படுவதாலும், எலும்புகள் தேய்ந்து ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் சில வகை சத்தங்கள் கழுத்து, தோள்மூட்டு, முழங்கால் போன்ற மூட்டுகளில் கேட்பதுண்டு. இவை முற்றிலும் வோறன சப்தங்கள். நெட்டி முறித்தல் சத்தங்கள் அல்ல. அவை கவனத்தில் கொள்ளப்பட வேண்டியவையாகும். ஏனெனில் அவை நோய்கள் காரணமாக ஏற்படலாம் என்பதால் அடிப்படைக் காரணம் கண்டறியப்பட வேண்டும்.

நெட்டி முறித்தவருக்கு அதன் பின்னர் அந்த மூட்டானது சுகமாக இருப்பது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறது என்பதை நாம் அறிவோம். எனவேதான் அவர் அவ்வாறு செய்கிறார். ஆந்த சுக உணர்வானது நாம் எற்கனவே கூறிய விளக்கங்களின் அடிப்படையில் உண்மையும் கூட.

ஆனால் நெட்டி முறிப்பதைப் பார்த்தும் கேட்டும் கொண்டிருப்பவருக்கு அந்த சத்தமானது எலும்புகள் முறிவது போன்ற உணர்வை ஏற்படுத்தும். அதைச் கேட்கச் சகிக்க முடியாதிருக்கிறது. அதனாலேயே அது ஆபத்தானது என்ற உணர்வைக் கொடுக்றது. அதுவும் வயதானவர்களுக்கு அது நரகாசமாக ஒலிக்கலாம். அதனால்தான் காலம் காலமாக அது ஆபத்தானது என்று சொல்லப்படுகிறது என நினைக்கிறேன்.

நீண்ட காலம் நெட்டி முறித்தவர்களுக்கு எலும்பு தேய்வு ஏற்படுமா என்பதற்கான ஆதாரங்களும் ஆய்வுகள் ஊடாக கண்டு பிடிக்கப்படவில்லை என்பதையும் குறிப்பட வேண்டும்.

எனவே இன்றுள்ள தரவுகளின் அடிப்படையில் நெட்டி முறிப்பது ஆபத்தானது அல்ல என்றே சொல்ல முடியும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது 
எதிரொலிக்கு கேள்விகள் அனுப்ப (ethirolimedia@gmail.com), Tel 0212243818

0.00.0

Read Full Post »

கேள்வி- எனக்கு வயது 30.  ஆஸ்துமா நோய் உள்ளது. மழை, பனி காலங்களைவிட , வெயில் காலங்களிலேயே  ஆஸ்துமா அதிகமாக உள்ளது. இது எதனால் ?
ஆர். குமார் கொழும்பு

பதில்:- ஆஸ்த்மா என்பது சுவாசத் தொகுதியோடு சம்பந்தமான நோய். வுழமையாக நாங்கள் தொடர்ச்சியாக மூச்சை உள்ளெடுப்பதும் வெளிவிடுவதுமான செயற்பாட்டை எந்நேரமும் செய்து கொண்டே இருக்கிறோம். ஆனால் நாம் அதை உணர்வதில்லை. தன்னிச்சையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஆஸ்த்மா நோயின் போது நாம் மூச்சை உள்ளெடுப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் வெளிவிடுவது மிகவும் கடினமாக பிரயாசையுடன் கூடியதாக இருக்கும்.

ஆஸ்த்மா பொதுவாக பரம்பரையாக வருவதுண்டு. அப்பா அம்மா சகோதரங்களுக்கு இருந்தால் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். ஆத்துடன் ஒவ்வாமை, எக்ஸிமா போன்ற நோயுள்ளவர்களுக்கும் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்.

கரப்பன் பூச்சியும் அதன் எச்சங்களும் சிகரட் புகை, விறகெரிக்கும் புகை, நுளம்புத்திரிப் புகை போன்ற எல்லாப் புகைகளும் ஆஸ்த்மாவைத் தூண்டக் கூடும்.

தூசு, கடுமையான மணங்கள், சுவாத்திய மாற்றங்கள், சுவாசத் தொற்றுநோய்கள் போன்றவற்றால் தூண்டப்படுவதுண்டு.

உங்களுக்கு வெயில் காலத்திலேயே அதிகம் வருவதுண்டு எனக் குறிப்பிட்டிருந்தீர்கள். உங்களைப் போலவே குளிர் அதிகமாயுள்ள மேலைநாட்டவர்கள் பலருக்கு வசந்த காலத்திலேயே ஆஸ்த்தா அதிகம் வருவதுண்டு. அதற்குக் காரணம் அங்கு வசந்த காலத்தில் ஏராளமான பூக்கள் மலரும். அவற்றின் மகரந்தம் உதிர்ந்து காற்றோடு கலந்து சுவாசத்தோடு உட்செல்வதால் சுவாசக் குழாய்கள் தூண்டப்பபட்டு ஆஸ்த்மா வருகிறது.

எமது நாட்டில் அவ்வாறில்லை. சகல காலங்களிலும் பூக்கள் மலர்கின்றன. மகரந்தம் காற்றோடு கலந்துநோயை ஏற்படுத்துவதானால் அது எப்பொழுமே நிகழும். வெயில் காலத்தில் மட்டுமல்ல.

இங்கு குளிர் காலத்தி;லேயே ஆஸ்த்மா அதிகம் காணப்படுகிறது. அதற்குக் காரணம் குளிர் காற்றானது உடலில் ஹிஸ்டமின் என்ற இரசாயனத்தை எமது உடலில் அதிகம் சுரக்கச் செய்கிறது. இதுவே எல்லாவித ஒவ்வாமைகளின் போதும் அதிகம் சுரக்கிறது. அது ஆஸ்த்மாவை தூண்டுகிறது.

ஆனால் உங்களுக்கு ஆஸ்த்மா வெயில் காலங்களிலேயே அதிகம் வருகிறது. உங்களுக்கு மட்டுமல்ல வேறு பலருக்கும் இங்கு அவ்வாறு வருவதை அவதானிக்க முடிகிறது. அதற்குக் காரணம் வெக்கையான காலத்தில் தூசி, புழுதி, பூஞ்சணம், மகரந்தம் மணங்கள் யாவும் வெக்கையில் காய்ந்து உலர்ந்து காற்றோடு கலந்து விரைவில் எங்கும் பரவுகின்றன.

உங்களுக்கு ஒவ்வாத ஏதோ ஒரு பொருள் வெயில் காலத்தில் உங்களைத் தாக்குவதாலேயே அக்காலத்தில் ஆஸ்த்மா வருகிறது என நம்புகிறேன்.

ஆஸ்த்மா என்பது நீண்ட காலத்திற்கு தொடரக் கூடிய தொல்லையாகும் என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். தொடர்ச்சியாக இல்லாவிடினும் விட்டு விட்டு வரக் கூடிய நோய் இது. அடியோடு குணமாகியது போலிருக்கும். எங்கிருந்து வந்நது என அதிசயிக்கும் வண்ணம் திடீரென மீண்டும் பிரசன்னமாகும்.

ஒரு சிலருக்கு முற்றாக மறைந்துவிடுவதுண்டு. ஆனால் அது சூழல்கள் மாறுவது, புகைத்தலை நிறுத்துவது போன்ற நோயைத் தூண்டும் காரணிகள் அற்றுப் போவதால்தான் இருக்கும்.

ஆனால் இப்பொழுது நல்ல மருத்துவம் இருக்கிறது. இன்ஹேலர்களை உபயோகிக்கிறீர்கள் என நம்புகிறேன் அவற்றை சரியாகப் பயன்படுத்தி, நோயை நன்கு கட்டுப்படுத்தி, ஏனையவவர்கள் போல மகிழ்ச்சியோடு சுகமாக வாழலாம்.

டொக்டர். எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது
0.00.0

Read Full Post »

கேள்வி-  நான் ஒரு பெண். எனது வயது 55. எனக்கு நீரிழிவு (Type 11 )உள்ளது.  எனக்கான உணவுக் கட்டுப்பாடு எவ்வாறு இருக்க வேண்டும்.

ஆர். சுமதி வவுனியா

பதில்:- நீரிழிவாளர்களுக்கான உணவுக் கட்டுப்பாடு என்று சொல்லாதீர்கள் நீரிழிவாளர்களுக்கான உணவுத் திட்டம் என்று சொல்லுங்கள். ஏனெனில் நீரிழிவாளர்களுக்கான நவீன உணவுத் திட்டமானது ஓரளவு சுதந்திரமானது. நெகிழ்ச்சித்தன்மை கொண்டது. பசியிருக்க வேண்டியதில்லை. பட்டினி அறவே கூடாது. வயிறு நிறையச் சாப்பிடலாம்.

ஆனால் எதனால் நிரப்ப வேண்டும் என்பதைப் தெளிந்து கொள்ள வேண்டும். அறிவு பூர்வமாகச் சிந்தித்து உட்;கொண்டால் எதையும் முற்று முழுதாகத் தவிர்க்க வேண்டியதில்லை.

நீரிழிவாளர்களுக்கான உணவுகளை விரும்பிய அளவு உண்ணக் கூடியவை, இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டியவை, மிகக் குறைவாக உண்ண வேண்டியவை என வகுத்துக் கொள்ளலாம்.

விரும்பிய அளவு உண்ணக் கூடியவை

விரும்பிய அளவு உண்ணக் கூடிய  உணவுகள் என்று எவற்றைக் குறிப்படலாம்.

பொதுவாக எல்லா காய்கறிவகைகளும் விரும்பிய அளவு உட்கொள்ளக் கூடியவைதான். கத்தரி, பூசணி, தர்ப்பூசணி, வெண்டி, வெள்ளரி, புடோல், பாகல், கரட், முள்ளங்கி, நோகோல், கோகிலத் தண்டு, போஞ்சி, பயிற்றை, முருங்கைக் காய், எல்லா இலை மற்றும் கீரை வகைகள், லீக்ஸ், போன்றவை.

ஒருவர் உண்ணும் ஒரு கோப்பை உணவில் அரைவாசி காய்கறிகளாக இருக்க வேண்டும். கோப்பையில் முதலில் காய்கறி உணவு வகைளால் அரைவாசி நிரப்பிவிட்டு அதன் பின்னரே சோறு இடியப்பம் புட்டு பாண் அப்பம் போன்ற உணவுகளை வைக்க வேண்டும்.

ஆனால் அதிக மாச்சத்துள்ள காய்கறிகளை (கிழங்கு வகைகள்) ஓரளவே உண்ண வேண்டும்.

இடைப்பட்ட அளவில் உண்ண வேண்டியவை

வேறு சில உணவுகளை இடைப்பட்ட அளவிலேயே உண்ண வேண்டும். பொதுவாக மாப்பொருள் உணவுகளும் புரத உணவுகளும் இந்த வகையில் அடங்கும்.

முக்கியமாகச் சொல்ல வேண்டியது சோறு தவிர்க்க வேண்டிய உணவு அல்ல என்பதே. விரும்பினால் மூன்று வேளைகளும் சாப்பிடலாம். தவிட்டுடன் கூடிய சிவத்த அரிசிச் சோறு விரும்பத்தக்கது.  ஆனால் சோற்றின் அளவானது ஒருவர் செய்யும் வேலைக்கு ஏற்பவும் நிறைக்கு ஏற்பவுமே இருக்க வேண்டும். தோட்ட வேலை போன்ற உடல் உழைப்புடன் கூடிய வேலை செய்பவர்கள் உண்ணும் அளவை விட நாற்காலியில் இருந்தபடி சொகுசு வேலை செய்பவர்களுக்கு குறைவான அளவே இருக்க வேண்டும்.

தீட்டாத சிவத்த அரிசிச் சோறு நல்லது. புளுங்கலை விட பச்சையரிசி நல்லது. தவிடு குறைந்த அல்லது வெள்ளை அரிசிச் சோறு சாப்பிட நேர்ந்தால் அதற்கு ஏற்ப காய்கறிகளை மேலும் சற்று அதிகம் சேர்த்து உண்ண வேண்டும்.

இதனால் காய்கறிகளில் உள்ள நார்ப்பொருளானது உணவு ஜீரணமடைவதைத் தாமதமாக்கி குருதியில் சீனியின் அளவு திடீரென எகிறுவதைத் தடுக்கும்.

இடியப்பம், புட்டு, தோசை போன்ற உணவுகள் தயாரிப்பதற்கும் தவிடு நீக்காத அரிசியில் தயாரித்த மாவே நல்லதாகும். சோயா மா, குரக்கன் மா போன்றவையும் நல்லவையே, கோதுமை மாவானது தவிட்டுச் சத்து குறைவானது என்பதால் சிறந்தது அல்ல.

இவற்றையும் சொதி சம்பல் போன்றவற்றுடன் உண்பது நல்லதல்ல. பருப்பு, சாம்பார் அல்லது காய்கறிகளால் ஆன கறிகளுடன் சேர்த்து உண்பதே நல்லது. பாண் அல்லது கோதுமை உணவு உண்ண நேர்ந்தால் பட்டர் ஜாம் போன்ற வற்றைத் தவிர்த்து பருப்பு போன்றவற்றுடன் உண்ண வேண்டும்.

பயறு, பருப்பு, சோயா, அவரை, கொண்டைக் கடலை, பச்சைப் பட்டாணி போன்றவற்றில் புரதமும் நார்ப்பொருளும் உள்ளதால் தினமும் உணவில் சேர்ப்பது அவசியம். ஒருநேர உணவிற்கு இவற்றை அவித்துப் பயன்படுத்தலாம். அல்லது ஏனைய உணவுகளுடன் சேர்த்தும் உண்ணலாம்.

உருளைக் கிழங்கு, வத்தாளைக் கிழங்கு, மரவள்ளி, பலாக்காய், ஈரப்பலா, வாழைக்காய், போன்றவை மாச்சத்து அதிகமுள்ளவையாகும். இவற்றை அதிகம் உட்கொண்டால் அதற்கு ஏற்றளவு சோறு இடியப்பம், பிட்டு போன்ற பிரதான மாப்பொருள் உணவின் அளவில் குறைக்க வேண்டும்.

பழவகைகளும் கட்டாயம் உணவில் சேர்க்க வேண்டியவையே. பழங்களில் நார்ச்சத்து அதிகம் என்பதால் அவை முக்கியத்துவம் பெறுகின்றன. பழச்சாறாக அருந்தும்போது நார்ச்சத்து நீங்கிவிடுகிறது. எனவே முழுமையாகச் சாப்பிடுவதே நல்லது. வாழைப்பழம், மாம்பழம், கொய்யா, பப்பாசி, அன்னாசி என யாவும் நல்லவையே. பலாப்பலம் கூட ஓரிரு சுளைகள் சாப்பிடலாம். பேரீச்சம்பழத்தில் சீனிச் சத்து அதிகம் என்பதால் தவிர்ப்பது நல்லது.

ஒவ்வொரு உணவோடும் ஏதாவது பழம் சாப்பிடுவது நல்லது. ஆயினும் குருதியில் சீனி அளவு மிக அதிகமாக உள்ளவர்கள் சற்றுக் குறைவாகவே பழங்களைச் சாப்பிட வேண்டும். அதேபோல சிறுநீரக செயலிழப்பு உள்ளவர்களும் கட்டுப்பாட்டுடன் உண்ண வேண்டும்.

மீன் நல்லது. கோழியிறைச்சில் கொழுப்பு குறைவு. இருந்தாலும் அதன் தோல் பகுதியில் உள்ள கொழுப்பை சமைக்க முன் அகற்ற வேண்டும்.

மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, பன்றி இறைச்சி போன்றவை கொழுப்பு அதிகமுள்ளதால் தவிர்ப்பதே நல்லது. முட்டையைப் பொருத்தவரையில் அது ஒரு பூரண உணவு. இருந்தபோதும் அதன் மஞ்சற் கருவில் கொழுப்பும் கொலஸ்டரோலும் அதிகம் என்பதால் நீரிழிவு உள்ளவர்கள் வாரத்தில் 3-4 முறை மட்டும் உண்ணலாம்.

மிகக் குறைவாக உண்ண வேண்டியவை எவை

இனிப்புள்ள எதையும் மிகக் குறைவாகவே உண்ண வேண்டும். சீனியானது மிக விரைவாக குருதியில் சீனியின் அளவை அதிகரிக்கும். குளுக்கோஸ் அதைவிட வேகமாக அதிகரிக்கும். எனவே கோப்பி, தேநீர் போன்றவற்றைச் சீனி போடாமல் அருந்துவது நல்லது. இளநீரிலும் இனிப்பு இருக்கிறது. அதீதமாக அருந்துவது கூடாது. வாரத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு கிளாஸ் அளவு அருந்தலாம்.

இனிப்பின் அளவானது சில உணவுகளில் வெளிப்படையாகத் தெரியாது மறைந்திருக்கும் ஒரு துண்டு கேக்தான் சாப்பிட்டேன். ஒரு கிளாஸ் சோடாதானே குடித்தேன் என நினைப்பீர்கள். ஆனால் அவற்றில் எவ்வளவு அதிகமாக சீனி இருக்கிறது என அறிவீர்களா?

100 கிறாம் அளவுள்ள ஒரு சொக்கிளட் துண்டில் 14 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது என்பதை அறிந்திருக்கிறீர்களா?

100 கிறாம் அளவுள்ள சொக்கிலட் பிஸ்கற்றில் 11 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. அத்தகைய தனி பிஸ்கட் ஒன்றில் சுமார் ஒன்றரைத் தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

அதேபோல 50கிறாம் அளவுள்ள ஒரு சாதாரண அல்லது பழக் கேக்கில் சுமார் 5 தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது. ஐஸ்கிறீம் 100 கிராமில் 4 ½ தேக்கரண்டி அளவு சீனி இருக்கிறது.

‘உணவு செமிக்கயில்லை சும்மா ஒரு கிளாஸ் லெமனேட் மாத்திரம் குடித்தேன்’ என்பார்கள் சிலர். 200 மில்லி லீட்டர் அளவுகள் லெமனேட் குடித்திருந்தால் அது 3 தேக் கரண்டி சீனி குடித்ததற்கு சமனாகும்.

களையாகக் கிடக்கு என்று சொல்லி மோல்டற் மா வகைகள் குடிப்பவர்கள் பலருண்டு. நெஸ்டமோலட். ஹோர்லிக்கஸ், விவா எனப் பல வகை மா வகைகள் இருக்கின்றன. இவற்றில் எதையாவது குடித்தால் அதில் 2 தேக்கரண்டி சீனி சேர்ந்திருக்கிறது.

எனவே சீனி அதிகமுள்ள உணவுகளான ரின்பால், கேக், புடிங், ஜாம், ரொபி, சொக்கிளற், தகரத்தில் அடைக்கப்பட்ட பழங்கள், போத்தலில் அடைக்கப்பட்ட பழச்சாறுகள், மென்பானங்கள், பிஸ்கற் வகைகள், ஐஸ்கிறீம், ஜெலி போன்றவற்றறைத் தவிர்ப்பது நல்லது. நீரிழிவாளர்களுக்கு என ஜாம், கொக்கிளட் போன்றவை தயாரிக்கிறார்கள். இவையும் பொதுவாக நல்லதில்லை.

உணவில் எண்ணெய் வகைகளை மிகக் குறைவாகவே உபயோகிக்க வேண்டும். அது தேங்காயெண்ணயாக இருந்தாலும் சரி, சோயா, சூரியகாந்தி அல்லது நல்லெண்ணை எதுவாக இருந்தாலும் சரி குறைவான அளவே உட்கொள்ள வேண்டும். அறவே எடுக்கக் கூடாது என்றில்லை.

ஆனால் எண்ணெயில் பொரித்த வதக்கிய உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. ரோல்ஸ், பற்றிஸ், வடை, முறுக்கு, மிக்ஸர் போன்ற நொறுக்குத் தீனிகள் அனைத்திலும் மாப்பொருளும், கொழுப்பும் மிக அதிகமாக உள்ளன. அவை நீரிழிவை மோசமாக்கும். கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கும் எடை அதிகரிப்பதற்கும் காரணமாகும்.

இனிப்புப் போலவே கொழுப்பு அதிகமுள்ள உணவுகளிலும் கலோரி அளவு மிக அதிகம் என்பதால் நல்லதல்ல.

எதிரொலி பத்திரிகையின் சொல்லுங்கோ டொக்டர் கேள்வி பதில் பகுதியில் வெளியானது

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

பகலில் உறங்கினால் உடல் நிறை அதிகரிக்குமா?
சுதன் முல்லைத்தீவு

பதில்:- தூக்கத்திற்கும் எடை அதிகரிப்பிற்கும் நேரிடையான தொடர்பு ஏதும் கிடையாது.

பொதுவாக பகல் தூக்கத்தை நாம் சோம்பேறித்தனத்தின் அடையாளமாகப் பார்க்கிறோம். சோம்பேறியாக இருந்து உடல் உழைப்பில் ஈடுபடாதிருந்தால் உடல் எடை அதிகரிப்பிற்கு வாய்ப்பிருக்கிறது என்பதை மறுப்பதிற்கில்லை.

அதாவது பகலில் தூங்கினாலும் சரி தூங்காவிட்டாலும் சரி உடலுழைப்பற்ற வாழ்க்கையானது எடையை அதிகரிக்கவே செய்யும் என்பதையும் மனதில் கொள்ள வேண்டும்.

மாறாக கடுமையான உடல் உழைப்பில் ஈடுபடுபவர் உடல் அசதி நீங்க, உணவின் பின் சில நிமிடங்கள் தூங்குவதால் எடை அதிகரிக்கப் போவதில்லை. மாறாக அவர் தொடர்ந்தும் கடுமையாக வேலை செய்வதற்கான உந்துசக்தியாக அந்த சிறு தூக்கம் அமையும்.

ஒருவர் குண்டாக இருக்கிறாரா மெல்லியவராக இருக்கிறாரா என்பதற்கு முக்கிய காரணங்களாக இருப்பது அவரது பரம்பரை அம்சமும், அவரது உணவுமுறை மற்றும் உடலுழைப்பு போன்ற வாழ்க்கை நடைமுறைகளேயாகும்.

உண்மையில் நாம் உண்ணும் உணவிலிருந்து பெறப்படும் சக்தியில் பெருமளவிலானது (60 முதல் 75 சதவிகிம் வரையானது) எமது உடலின் செயற்பாட்டிற்காக பயன்படுத்தப்படுகிறது. அதாவது மூளை,  இருதயம்,  உணவுக் கால்வாய், அங்கங்கள் உட்பட அனைத்து உறுப்புகளின் செயற்பாட்டிற்கு இது பயன்படுத்ப்படுகிறது. நாம் தூங்கினாலும் தூங்காவிட்டாலும் சரி இவை தொடர்நது செயற்பட்டுக்கொண்டே இருக்கின்றன.

10 முதல் 25 சதவிகிதமே நமது நாளாந்த நடவடிக்கைகளான நடப்பது, வேலை செய்வது போன்றவற்றிக்கு பயன்படுதப்படுகிறது.

நாம் தினமும் உண்ணும் உணவின் சக்திப் பெறுமானமானது எமது உடலில் நாளாந்த செயற்பாட்டிற்காக நாம் செலவழிக்கும் சக்தியின் அளவை விட அதிகமாக இருந்தால் அது கொழுப்பாக மாறி எமது உடலில் சேமிக்கப்படும். அது எடையை அதிகரிக்கச் செய்யும்.

இன்று பலரும் நம் பாரம்பரிய உணவுகளான சோறு இடியப்பம் புட்டு போன்றவற்றை கைவிட்டு கலோரிப் பெறுமானம் அதிகமுள்ள ஏனைய உணவுகளை அதிகம் உள்ளெடுகிறார்கள். ரோல்ஸ் பற்றிஸ் போன்ற பொரித்த உணவுகள், தேநீர்,  சோடா ஜீஸ் போன்ற இனிப்புப் பானங்கள்,  சொக்கிளற் ஜஸ்கிறீம் போன்ற யாவுமே அதிக கலோரிப் பெறுமானம் கொண்டவை. இதுவே அவர்களது எடை அதிகரிப்பிறகு காரணமாகிறது. பகல் தூக்கம் அல்ல.

அத்துடன் உடல் உழைப்பின்றி தொலைக்காட்சி பெட்டி முன் வாளாவிருப்பதும் காரணம்தான்.

அண்மையில் செய்யப்பட்ட ஒரு ஆய்வு சுவார்சமானது. உங்கள் கேள்விக்கு எதிர்மாறானது

தூக்கக் குறைபாட்டு பிரச்சனை உள்ளவர்களும் போதியளவு நேரம் தூங்கக் கிடைக்காதவர்களும், போதியளவு நேரம் தூங்குhவர்களை விட அதிக எடை அதிகரிப்பிறகு ஆளாகிறார்களாம். இதற்குக் காரணம் லெப்டின் (Leptin) என்ற
ஹோர்மோன் குறைவாகச் சுரப்பதும் கிறெஹ்லின் (Grehlin) என்ற ஹோர்மோன் அதிகமாகச் சுரப்பதும் ஆகும்.

இதனால் வயிறு நிறையாத உணர்வும் கூடுதலான பசியும் ஏற்படுகிறதாம். அதாவது தூங்காவிட்டால்தான் எடை அதிகரிக்க வாய்ப்பு உண்டு என்று அர்த்தப்படுகிறது.

முடிவாக என்ன ஆலோசனை சொல்லலாம்?

பகல் தூக்கம் என்பது நீண்டதாக இருக்கக் கூடாது. உடலுக்கு புத்துணர்ச்சியைக் கொடுக்குமளவிற்கு குறுகியதாக இருக்க வேண்டும்.
உணவுகள் போசாக்கானதாக இருக்க வேண்டுமே ஒழிய அதிக கலோரிச் சத்துள்ளதான இருக்க கூடாது.

இவற்றைக் கடைப்பிடித்தால் எடையை சரியான அளவில் பேண முடியும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

மார்பகப் புற்றுநோய் எதனால் ஏற்படுகிறது?

கவிதா, பளை

பதில்: மார்பகப் புற்றுநோய்க்கு இதுதான் காரணம் என்று ஒன்றைச் சுட்டிக் காட்டுவது என்பது இயலாத காரியம். மார்பகப் புற்றுநோய்க்கு மட்டுமல்ல ஏனைய புற்று நோய்களுக்கும் அவ்வாறுதான்.

ஆனால் அந்த ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய காரணிகள் எனப் பலவற்றை சொல்லலாம். இத்தகைய ஆபத்தான காரணிகள் உள்ள எல்லோருக்கும் புற்றுநோய் எதிர்காலத்தில் நிச்சயம் புற்றுநோய் வரும் என அர்த்தப்படுத்தக் கூடாது. வுரக் கூடிய ஆபத்து அல்லது சாத்தியம் அதிகம் என்றே கொள்ள வேண்டும்.

முக்கிய காரணியாக பரம்பரை அம்சத்தைக் கூறலாம். பரம்பரையில் யாருக்காவது மார்பகப் புற்றுநோய் இருந்தால் அவர்களது வழித்தோன்றல்களுக்கு வரக் கூடிய சாத்தியம் அதிகம்.

அத்தகையவர்களுக்கு பரம்பரை அலகு பரிசோதனை மூலம் இது வரக் கூடிய ஆபத்து இருக்கிறதா என்பதை இப்பொழுது கண்டறிய முடியும்.

மார்பகத்தில் புற்றுநோயல்லாத வேறு சில வகை கட்டிகள் ஏற்கனவே வந்தவர்களுக்கும் எதிர்கலத்தில் மார்பகப் புற்றுநோய்க்கான சாத்தியம் அதிகம்.

மிகக் குறைந்த வயதில் (12க்கு முதல்) பெரியவளானவர்களுக்கும், 55 வயதாகியும் மாதவிடாய் முற்றாக நிற்காதவர்களுக்கும் மார்பகப் புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

குழந்தைகள் பெறாத பெண்களுக்கும் முதற் குழந்தையை 30 வயதிற்கு பின்னரே பெற்றவர்களுக்கும் இதற்கான ஆபத்து அதிகமாகும்.

அதீத எடை உள்ள பெண்களுக்கும் மார்பக புற்றுநோய் வரக் கூடிய ஆபத்து அதிகம்.

அதேபோல வேறு நோய்களுக்காக மார்பில் ரேடியம் கதிர்சிகிச்சை செய்தவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

கடந்த பத்து வருட காலத்திற்குள் குடும்ப கட்டுப்பாட்டு மாத்திரைகள் உபயோகித்தவர்களுக்கும் மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் சற்று அதிகமாகும்.

மாறாக குழந்தைக்கு ஒன்றரை முதல் இரண்டு வருடங்கள் வரை பாலூட்டிய தாய்மாருக்கு மார்பக புற்றுநோய் வருவதற்கான சாத்தியம் குறைவாகும். தினசரி உடற்பயிற்சி செய்பவர்களுக்கும் அவ்வாறே குறைவாகும்.

மமோகிராம் பரிசோதனையின் போது மார்பக திசுக்களின் அடர்த்தி அதிகமாக இருப்பதாக காணப்பட்டவர்களுக்கும் ஆபத்து ஆதிகம் எனப்படுகிறது.

எனவே இத்தகைய சாத்தியக் கூறுகள் உள்ளவர்கள் செய்ய வேண்டியது என்ன? ஒழுங்கான முறையில் சுய மார்பகப் பரிசோதனை செய்ய வேண்டும்.

சிறிய சந்தேகம் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

Older Posts »