>யாழ் மண் கல்விக்கு மட்டுமல்ல விவசாயத்திற்குப் பேர் போனது. அண்மைய யாழ் பயண கிளிக்குகளில் சில
நான் ஹாட்லிக் கல்லூரியில் கற்கச் சென்ற ஆரம்ப காலங்களில் ஒரு வருடமளவிற்கு பொடி நடையில் கல்லூரிக்குப் போவது வழக்கம். திருநாவலூர்ச் சந்தி தாண்டி மணல் வீடு அண்டியதும் பாதையை விட்டுவிலகி தோட்டக் காணிகளில் கால் பதிப்போம்.
![]() |
தரிசாகக் கிடக்கும் பழைய தோட்டப் பூமி |
சீசனுக்கு ஏற்ப மரவெள்ளி, வெங்காயம், மிளகாய், எள்ளு எனப் பலவகையான பயிர்கள் நிறைந்திருக்கும். கத்தரியும், பயிற்றங் கொடியும் ஆங்காங்கே பயிரடப்பட்டிருக்கும்.
ஆனால் இன்று பல நிலங்கள் கட்டாந்தரைகளாகக் கிடப்பதைக் காண வயிறு பற்றி எரிகிறது.
இருந்தபோதும் இன்றும் எமது விவசாயிகள் தோட்டச் செய்கையை முற்றாகக் கைவிடவில்லை என்பதையும் உணர முடிந்தது.
![]() |
வியாபாரிமூலை பிள்ளையார் கோவிலருகே |
தோட்டங்கள் வெங்காயம், மிளகாய், பீட்ரூட், வாழை எனப் பசுமை நிறைந்து கிடக்கின்றன. புகையிலைச் செய்கைக்கும் குறைவில்லை. முந்திரிகைக் கொடியும் பயிரடப்படுகிறது.
எனது ஊர் பிள்ளையார் கோவிலை அண்டிய தோட்டங்களில் வெங்காயச் செய்கை அமோகமாக நடக்கிறது.
எனது ஊரை விட்டுப் பயணித்து, அச்சுவேலி தாண்டி கீரிமலை நோக்கிப் பயணித்த போது கிளிக் செய்த படங்கள் தொடர்ந்து வருகின்றன.
![]() |
வாழைத்தோட்டம் |
வலிகாமச் செம்மண்ணில் பயிர்கள் செழித்து வளரும் காட்சிகளை படங்களில் காணலாம்.
![]() |
யாழ் மண்ணில் பீற்ரூட் |
விவசாயத்தின் அடிப்படை தேவை நிலம் என்றால் அடுத்து முக்கியமானது நன்னீர்க் கிணறுகள்.
பழைய விவாசயக் கிணறு ஒன்று பாழடைந்து கிடக்கிறது. தூலாக் கட்டி நீர் இறைத்துப் பாய்ந்த கல்வாய்க்கால் இடிந்து கிடக்கிறது.
தூலாவைத் தொடரந்து சக்கர யந்திர இறைப்பு பல இடங்களில் இருந்தது. இப்பொழுது அவற்றைக் காணவும் கிடைக்கவில்லை.
![]() |
இடிந்த வாய்க்காலும் கைவிடப்பட்ட கிணறும் |
ஆயினும் வாட்டர் பம் வைத்து நீர் இறைக்கிறார்கள். யாழ் மண் தோட்டக் காணிகள் பல செழித்துக் கிடக்கின்றன. நீர் உவர் நீராகிறது என்ற கவலை அறிஞர்கள் மத்தியில் கலங்க வைக்கிறது.
![]() |
வெங்காயம், வாழை, மிளகாய் எனச் செழித்த மண் |
மாடு இன்றேல் விவசாயம் இல்லாத காலம் ஒன்றிருந்தது.
உழவு மெசின்கள் வந்து விட்ட இன்றைய காலத்தில் காளை மாடுகளின் பயன் வண்டில் இழுப்பதுடன் நின்றுவிட்டது.
ஆயினும் பசுக்களின் தேவைக்கு என்றுமே மவுசு குன்றாது . நாற்புறமும் மரத்தூண் நாட்டி, பனயோலையால் கூரை வேய்ந்த மாடுகளின் வீடு.
அதற்குள் பனை மட்டைகளால் தொட்டி கட்டி மாடுகளுக்கு தீவனம் போடுவார்கள்.
மாடுகள் அருகே வெள்ளாடு ஒன்றும் படத்திருந்து அசை போடுகிறார்
![]() |
மாடுகள் இல்லாத விவசாயமா? |
மாடு என்றிருந்தால் அவற்றின் உணவுக்கு வைக்கோல் அவசியம்தானே.
![]() |
|
வைக்கல் போர் |
வைக்கல் போர்கள் ஆங்காங்கே தலை நிமிர்ந்து நிற்கின.றன.