Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எயிட்ஸ்’ Category

புகைத்தலா HIV யா? எயிட்ஸ்  நோயாளிகள் உயிரை விரைவில் பறிக்கும்?

smoking

இது பற்றிய ஆய்வு அண்மையில் நடைபெற்றது. அத பற்றிய தகவல் Journal Watch மருத்துவப் பக்கத்தில் வெளியாகியுள்ளது.

அவர்களைப் பொறுத்த வரையில் புகைத்தலானது அவர்களது வாழ்நாளில் பெருமளவை HIV விட அதிகம் பறிக்கும் எனத் தெரிகிறது.

இது எங்களுக்கான விடயம் அல்ல என எண்ணாதீர்கள்.

எயிட்ஸ் இல்லாத சாதாரண மனிதர்களிலும் புகைப்பவர்களின் வாழ்வானது புகைக்காதவர்களை விட 10 முதல் 17 வருடங்கள் வரை குறைவு என்பதை முன்னைய ஆய்வுகள் எடுத்துக் கூறியிருக்கின்றன.

மற்றொரு ஆய்வின் பிரகாரம் 30 வயதுள்ள புகைப்பவர் மேலும் 35 வருடங்கள் வாழக் கூடும். அதே நேரம் 30 வயதுள்ள புகைக்காதவர் மேலும் 53 வருடங்கள் வாழ முடியும் என்கிறது.

தீர்மானம் உங்கள் கையில்..

HIV-infected smokers lose more life-years to smoking than to HIV, according to a study in Clinical Infectious Diseases.

In an HIV-infected cohort, analyses adjusted for HIV-related and other clinical variables revealed that all-cause mortality was more than fourfold higher, and non–AIDS-related mortality was more than fivefold higher, among current smokers than among never smokers. Some 12.3 life-years were lost from smoking, compared with 5.1 life-years lost from HIV infection.

For HIV-Infected Patients, Smoking Is Deadlier Than HIV

Read Full Post »

>அண்மையில் எனது ஹாய் நலமா? இணைய புளக்கில் ஒரு படம் போட்டிருந்தேன். இளைஞனும் யுவதியும் உதட்டோடு உதடு சேர்த்து முத்தமிடும் படம். அது தொடர்பாக எனக்குப் சில ஈ மெயில்கள் ஒரு சில பின்னூட்டுகளும் கேள்விகளாக வந்திருந்தன.

காரணம் வேறொன்றும் இல்லை நான் அதற்குக் கொடுத்த விளக்க வாசகம்தான். அது பலரையும் யோசிக்க வைத்துவிட்டது.

எதிர்மாறாக மற்றொரு மரியாதைக்குரிய மனிதர் மருத்துவ ஆலோசனைக்காக வந்திருந்தார்.
அவரது கையில் ஒரு மருத்துவ ஆய்வுகூடப் பரிசோதனை
ரிப்போட் இருந்தது.
நல்ல காலம் இது நெகட்டிவ் ஆக இருந்தது.

இரண்டுமே எயிட்ஸ் பற்றியவைதான்.

அவருக்கு மணஉறவுக்கு அப்பால் ஒரு பெண் தொடர்பு இருந்தது. அவளின் கணவன் ஊரோடு இல்லாதது இவருக்கு வாசியாகிவிட்டது.
இடையிடையே தாகம் தணித்துக் கொள்வார்.

ஆயினும் மிகவும் எச்சரிக்கையாகவே இருந்தார். ஆணுறை உபயோகிக்கத் தவறுவதேயில்லை.

நண்பர் ஒருவர் சந்தேகத்தைக் கிளப்பிவிட்டார். முத்தமிடும் போதும் தொற்றுமென!

“நெறிக்கட்டிக் காய்ச்சல் மட்டுமின்றி எயிட்ஸ் நோயும் முத்தமிடுவதால் தொற்றும்” என இணையப் படத்தில் வாசகம் எழுதியதற்காகவே என்னிடம் சந்தேகம் தீர்க்கப் பலர் தொடர்பு கொண்டார்கள்.

அக் கட்டுரையைப் படிக்க இங்கே கிளிக்குங்கள்

உண்மையில் முத்தமிடுவதால் எயிட்ஸ் நோயை ஏற்படுத்தும் கிருமி (HIV) தொற்றமா?

அதற்கு விடை கூறுவதற்கு முதல் HIV எவ்வாறெல்லாம் தொற்றும் என்பதைப் பார்க்கலாம். முக்கியமாக முன்று விடயங்கள் பாதகமாக இருக்க வேண்டும்.

•    HIV தொற்றுள்ளவரின், கிருமி செறிந்திருக்கும் உடற்திரவங்களான இந்திரியம், பெண்ணுறுப்பிலிருந்து சுரக்கும் திரவம், இரத்தம், போன்றவற்றுடன் மற்றவர் தொடர்புற வேண்டும்.
•    அவை நேரடியாக தொடர்புற்றவரின் இரத்தத்தில் கலக்க வேண்டும். வெட்டுக்காயம், புண், தோல் அரிப்பு, உரசற் காயங்கள் போன்றவை சில உதாரணங்களாகும்.
•    வேறு ஊடகங்களின் ஊடாக இன்றி, நேரடியாக அதுவும் மிக விரைவாக நோயாளியிலிருந்து மற்றவருக்கு கிருமி கடத்தப்பட வேண்டும்.
மனித உடலுக்கு வெளியே HIV கிருமியால் ஒரு சில நிமிடங்கள் மட்டுமே உயிர் வாழ முடியும் என்பதாலேயே மிக விரைவாகக் கடத்தப்பட வேண்டும்.

H1N1 புதிய இன்புளுவன்சா காய்ச்சலைப் பரப்பும் வைரஸ் கிருமி இதற்கு மாறாக மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்றவற்றில் கூட நீண்டநேரம் உயிர் பிழைத்திருந்து நோயைப் பரப்பும் வல்லமை வாய்ந்தது. எனவே வேகமாகத் தொற்றும்.

ஆனால் HIV கிருமி அவ்வாறல்ல. மனித உடலுக்கு வெளியே, தான் நீண்ட நேரம் வாழாதிருந்து மனிதனைக் காப்பாற்ற முயல்கிறது. ஆனால் மனிதன் முறை தவறிய காம இச்சையால் நோயைத் தேட முன்னிற்கிறான்.

HIV கிருமி தொற்றும் முக்கிய வழிமுறைகளாவன.

1.    நோயுற்றவருடன் பாதுகாப்பற்ற முறையில் பாலுறவு வைத்தல்
2.    நோயுற்றவருக்குப் போட்ட ஊசியை மற்றவர்கள் உபயோகிப்பது (Needles and Syringes). இது முக்கியமாக போதை ஊசி ஏற்றுபவர்களிடையே பரவுவதற்குக் காரணமாகிறது.
3.    தாயிலிருந்து குழந்தைக்கு. பிறக்கும் நேரத்திலும் பின் பாலூட்டுவதாலும்.
4.    இரத்த மாற்றீடு முன்பு ஆபத்தானதாக இருந்த போதும் இப்பொழுது எல்லா

இரத்தமும் முழுமையாக சோதிக்கப்பட்ட பின்னரே கொடுக்கப்படுவதால் பெரும்பாலும் பாதுகாப்பானதே.

ஏனைய உடற் திரவங்களான எச்சில், வியர்வை, சிறுநீர், கண்ணீர் போன்றவற்றில் மிகக் குறைந்தளவு HIV கிருமியே இருக்கிறது.

இதனால் இவற்றின் ஊடாக தொற்றுவதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகும். இதனால்தான் பலரும் என்னிடம் சந்தேகம் எழுப்பினார்கள்.

எச்சிலால் தொற்றாது என்பதை விவாதத்திற்காக ஏற்றுக் கொள்வோம்.

ஆனால் எச்சிலில் இரத்தம் கலந்திருந்தால் என்ன நடக்கும்?

எனவே முத்தமிடுவதால் தொற்றாது என நிச்சயமாகக் கூற முடியாது.

இப்படி ஒரு உதாரணத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.

நோயுள்ளவர் தனது நோயானது பங்காளிக்குத் தொற்றக் கூடாது என்பதற்காக அல்லது தனது வாய் நாற்றத்தை மறைப்பதற்காக,
உறவுக்கு முன் குளித்து தன்னைச் சுத்தம் செய்து கொள்கிறார்.
அத்துடன் வாயையும் பிரஸ் பண்ணிக் கொள்கிறார்.

ஆனால் அவருக்கு முரசு கரைதல் நோயிருக்கிறது.
அதனால் பிரஸ் பண்ணும்போது சிறிது இரத்தம் கசிகிறது.
உடனடியாகவே உறவுக்குச் செல்கிறார்.

அவரது பங்காளிக்கும் முரசு கரைகிறது. அல்லது வாய்ப் புண் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நோயுற்றவரின் இரத்தத்தில் உள்ள HIV கிருமி மற்றவரது புண் ஊடாகத் தொற்றி விடும்.

உண்மையில் அவ்வாறு நடந்ததற்கான ஆதாரம் ஒன்று மருத்துவ கோவைகளில் பதியப்பட்டுள்ளது.

HIV தொற்றும் முறைகள் பற்றி மேலும் விபரமாக அறிய  இங்கே கிளிக்குங்கள்

மற்றொரு சாத்தியத்தையும் கவனியுங்கள். நோயுற்றவர் உறவின் போது உணர்ச்சி வேகத்தில் மற்றவரது உதட்டைக் கடித்துவிடுகிறார்.
நுண்ணிய சிறுகாயம்தான்,
ஆனால் அதன் ஊடாக கிருமி பரவிவிடலாம் அல்லவா?

இவ்வாறு உறவின் போதல்ல, ஆனால் கோபத்தில் கையில் கடித்ததால் HIV தொற்றியதற்கும் ஆதாரம் உண்டு.

மற்றொருவர் வந்தார்.
அவர் அடிக்கடி மேயப் போவார்.
ஆனால் அவரும் ஆணுறை அணியத் தவறுவதேயில்லை.
ஆனால் அவருக்கு மற்றொரு பழக்கம் இருந்தது.

அதுதான் வாய்ப் புணர்ச்சி. மிக ஆபத்தானது.
நல்ல காலம்! இரத்தப் பரிசோதனையில் ஏற்கனவே தொற்றியிருக்கவில்லை.

விளக்கி அனுப்பியதால் பிறகு அவதானமாக இருந்திருப்பார் என நம்பலாம்.

பாலுறவால் அன்றி வேறு காரணங்களால் கிருமி தொற்றியிருந்தாலும் அது இரத்தப் பரிசோதனையில் வெளிக்காட்ட 2 முதல் 8 வாரங்கள் வரை தாமதமாகலாம். சிலருக்கு 3 மாதங்களுக்கு மேலும் செல்வதுண்டு. அவ்வளவு காலமும் நிச்சமான முடிவு தெரியாது பதற்றத்திலும் பயத்திலும் மூழ்கியிருப்பதிலேயே பலருக்கு பாதி உயிர் போய்விடுவதுண்டு.

இருந்தபோதும், பலரும் பயப்படுவதுபோல
தொட்டுப் பேசுவதாலோ,
அருகில் இருப்பதாலோ,
உடைகள், சோப், கப், கோப்பை ஆகியவற்றைப் பகிர்ந்து கொளவதாலோ HIV தொற்றுவதில்லை.

காற்றினாலும் நீரினாலும் தொற்றுவதில்லை. நுளம்பு போன்ற பூச்சிக் கடிகளாலும் தொற்றாது.

இவ்வாறேல்லாம் இலகுவில் இந்த நோய் தொற்றாமலிருக்க இயற்கை எங்களுக்கு வாய்ப்பளித்துள்ளது. எமக்குக் கிட்டிய வரம் போன்றது. ஆனால் அடங்காத இச்சையால் முறை தவறி நடந்து தேடித் தேடி நோயைத் தொற்ற வைக்க முயல்கிறோம்.

முத்தமிடுவதால் தொற்றுமா தொற்றாதா என்ற ஆரம்பக் கேள்விக்கு வருவோம்.

“உலகில் ஒரே ஒரு தடவைதான் இவ்வாறு தொற்றியதற்கான ஆதாரம் இருக்கிறது. எனவே நம்பத்தகுந்தது அல்ல என்றோ அல்லது அது போதிய ஆதாரம் அல்ல” என்று நீங்கள் கருதினால் உங்கள் தேர்வை நீங்களே தீர்மானித்துக் கொள்ளலாம்.

சந்தோசமாக, ஆசைப்பட்டவருக்கு,
விரும்பியவருக்கு எல்லாம்
வாயால் ஆழ்
முத்தம் கொடுங்கள்.
கொடுத்துக் கொண்டேயிருங்கள்.

அதிர்ஸ்டம் உங்கள் பக்கமிருந்தால் தப்பிவிடுவீர்கள்.

இல்லையேல் ஒரு சில வருடங்களில் பாலுறாவால் தொற்றும் நோய்களுக்கான (STD) கிளினிக்கில் உங்களைக் காண வேண்டியிருக்கும்.

மேற் கூறிய ஆரம்ப அறிகுறிகள் சாதாரணமான பல காய்ச்சல்கள் வரும்போதும் தோன்றுபவை. இவற்றை வைத்து ஒருவருக்கு எச்ஐவீ தொற்றியிருக்கிறதா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது.

இரத்தப் பரிசோதனைகள் மூலம் கண்டறிய 2 வாரங்கள் முதல் 3 மாதங்கள் வரை கூட செல்லலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- இருக்கிறம் – 01-15 ஏப்ரல் 2010.

0.0.0.0.0.0

Read Full Post »

>தடுப்பூசி இருந்தால் எவ்வளவு நல்லது. பயப்பட வேண்டியது இல்லைதானே! பலரின் அங்கலாய்ப்பு இது. முக்கியமாக அங்கும், இங்கும் எங்குமாக பாலுறவுக்கு ஆள் தேடுபவர்களின் நப்பாசைக் குரல் தான் இது.

எந்த நோயைப் பற்றிக் கேட்கிறார்கள் என்கிறீர்களா?

எயிட்ஸ் நோய்க்குத்தான்!

ஆம் மக்களை மிகவும் பீதி கொள்ள வைக்கும் நோயாக எயிட்ஸ் இருக்கிறது.

ஏன்?

விரைவாகத் தொற்றுவதால் கொள்ளை நோய் எனவும், குணப்படுத்த முடியாதது என்பதால் மிக ஆபத்தான நோய் எனவும் பலரையும் கலங்க வைக்கிறது. பாலியல் தொடர்புகளில் கட்டுப்பாடாக இருப்பவர்கள் தப்பிவிடுவார்கள். சபல புத்தியுள்ளவர்கள் பாடு திண்டாட்டம் தான். பாலியல் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள் நிலையோ மிகவும் பரிதாபம். பணமிருந்தால் இன்று மருந்துகள் மூலம் நோயை ஓரளவு கட்டுப்படுத்த முடியும் என்பது உண்மையே.

“இரண்டு வருடங்களுக்குள் தடுப்பூசி தயாராகிவிடும்”என்றார்கள் 1984 ஆம் ஆண்டில்.

அதாவது, எயிட்ஸ் நோயை உண்டாக்கும் வைரஸ் கிருமியை முதலில் கண்டுபிடித்தவுடன். 23 ஆண்டுகள் கழிந்து விட்டன. உலகெங்கும் 32 மில்லியன் மக்கள் எயிட்ஸ் நோயுடன் போராடிக் கொண்டிருக்கிறார்கள். அதேநேரம், ஒவ்வொரு நிமிடமும் 4 பேர் இந்நோயால் மரணிக்கிறார்கள். இந்நிலையில் தடுப்பூசி பற்றி நம்பிக்கைக் கீற்று தென்படுகிறதா என்றால் இல்லை என்று தான் இன்றும் சொல்ல வேண்டியிருக்கிறது.

அண்மையில் ஒரு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. அது மனிதர்களில் கள ஆய்வுக்கும் விடப்பட்டது. ஆனால், அதன் முடிவுகள் தடுப்பூசி ஆய்வில் ஈடுபட்டிருக்கும் அனைவரையுமே அதிர்ச்சித் திகிலில் ஆழ்த்திவிட்டது. காரணம் என்னவென்றால் தடுப்பூசி போட்டவர்களுக்கு தடுப்பூசி போடாதவர்களை விட அதிகமாக எயிட்ஸ் நோய் தொற்றியுள்ளது.

காரணம் என்ன?

தடுப்பூசி தரம் கெட்டதா, அல்லது அதன் வீரியம் போதாதா, அல்லது தடுப்பூசியினுள் எயிட்ஸ் கிருமி தவறுதலாக இருந்ததா?

எதுவுமே இல்லை!

இத் தடுப்பூசியானது மனித உடலில் ரி செல் கலங்களின் செறிவை அதிகரிக்க வைப்பதை அடிப்படையாகக் கொண்டது. ரி. செல் என்பது எமது உடலின் நோயெதிர்ப்புச் சக்தியின் ஒரு அங்கமாகும். இது எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களைக் கண்டறிந்து அழிக்க வல்லது. எனவே, இதன் உற்பத்தியை அதிகரித்தால் ஒருவரது உடலில் எயிட்ஸ் கிருமி தொற்றிய கலங்களை அழித்து நோய் ஏற்படாமல் தடுக்கும் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அவ்வாறு தான் இவ்வளவு காலமும் நம்பப்பட்டது. ஆனால், அவ்வாறு நடக்கவில்லை. மாறாக ரி செல் அதிகரித்த போது கிருமி தொற்றுவதற்கான வாய்ப்பு அதிகரித்தது.

எனவே, தடுப்பூசி தயாரிப்பு என்பது மீண்டும் ஆரம்ப கட்டத்திற்கே போய்விட்டது. ஏனெனில், இந்தத் தடுப்பூசி மட்டுமின்றி இதுவரை தயாரிப்பு நிலையில் இருந்த தடுப்பூசிகள் யாவுமே இந்த நம்பிக்கையின் அடிப்படையிலேயே (அதாவது ரி செல் அதிகரித்தால் நோய் தொற்றாது) தயாரிக்கப்பட்டன. ஆனால், கள ஆய்வு முடிவு எதிர்மாறாக அமைந்து விட்டது. இதனால், இந்த நம்பிக்கையின் அடிப்படையில் தயாரிப்பில் இருந்த அனைத்துத் தடுப்பூசி ஆய்வுகளையும் தயாரிப்புகளையும் கிடப்பில் போட வேண்டியதாயிற்று.

ஆம் தடுப்பூசிக்குள் அகப்படமாட்டேன் என முரண்டு பிடிக்கிறது. எயிட்ஸ் வைரஸ்.

இந்தக் கள ஆய்வின் போது தடுப்பூசி போட்டும் நோய்க் கிருமி தொற்றிய அனைவருமே ஆண்கள் என்பது இன்னுமொரு முக்கியமான விடயமாகும். பெண்களில் பெரும்பாலானோர் பாலியல் தொழிலாளர்கள் ஆன போதும் அவர்கள் எவருக்குமே எயிட்ஸ் கிருமி தொற்றவில்லை என்பதும் மிக முக்கியமாக அவதானிக்கபட வேண்டியதாகும்.

இது எதனைக் குறிக்கிறது?

பெண் பாலியல் தொழிலாளர்கள் தங்கள் வாடிக்கையாளர்களை ஆணுறை அணியாமல் உறவு வைக்க அனுமதிப்பதில்லை. இதனால், அவர்களுக்கு தொற்றவில்லை. ஆனால், தடுப்பூசி போட்ட ஆண்கள் கவலையீனமாக இருந்திருக்க வேண்டும். அதாவது, உறவின் போது பாதுகாப்பாக இருக்க வில்லை. அதனால் தான் தொற்றியது எனலாம். இது அனுமானம் மாத்திரமே. நிச்சயமான ஆய்வு முடிவல்ல.

இவற்றிலிருந்து நாம் பெறக் கூடிய செய்தி என்ன? தடுப்பூசி வரலாம், வராமல் விடலாம். அல்லது அது வருவதற்கு நீண்ட காலம் எடுக்கலாம். அதற்காக காத்திருக்க வேண்டியதில்லை. உடலுறவின் போது பாதுகாப்பாக இருக்க வேண்டியது அவசியம். அதாவது, திருமண உறவுக்கு வெளியே பாலியல் தொடர்பு வைக்க வேண்டாம். அப்படி வைக்க வேண்டிய நிலை ஏற்பட்டால் ஆண் பங்காளியானவர் ஆணுறை அணிய வேண்டியது மிகமிக அவசியம்.

பிற்சேர்க்கை

ஆல்பேர்டா பல்கலைக்கழக (University of Alberta) விஞ்ஞானிகள் எச்.ஐ.வி வைரஸ் பரவுவதைத் தடுக்கும் ஆற்றல் கொண்ட TRIM22 என்ற ஒரு பரம்பரை அலகைக் (Gene) கண்டுபிடித்துள்ளதாக அண்மையில் அறிவித்துள்ளார்கள். இது பற்றிய செய்தி scienceblog.com ல் வெயியாகியுள்ளது.

இந்த பரம்பரை அலகானது எச்.ஐ.வி வைரஸ் மனித கலங்களில் பெருகுவதைத்த தடுக்கும் ஆற்றல் கொண்டது என்பதை அவர்கள் ஆய்வுகூடப் பரிசோதனைகளிலேயே கண்டுள்ளனர். ஆயினும் எச்.ஐ.வி வைரஸ் தொற்றிய மனிதர்களில் இது ஏன் செயற்பட்டு கிருமி பெருகுவதைத் தடுக்க முடியவில்லை என்பதை அவர்களால் இன்னமும் அறியவில்லை. அதனை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுக் கொண்டு இருக்கிறார்களாம்.

இந்த ஜீனைக் கண்டுபிடித்ததன் மூலம் எதிர்காலத்தில் எயிட்ஸக்கு எதிரான புதிய இன மருந்தையோ அல்லது தடுப்பு மருந்தையோ கண்டு பிடிக்க முடியும் எனவும் நம்புகிறார்கள்.

நம்பிக்கையோடு காத்திருப்போம்! ஆயினும் இன்னும் எத்தனை தசாப்தங்கள் காத்திருக்க வேண்டுமோ?

– டாக்டர் எம்.கே. முருகானந்தன்-

Read Full Post »