Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஒவ்வாமை’ Category

கவலை இல்லாமலும் கண்ணீர் வரும்
கண்கடியுடன் கண்கள் சிவந்து கண்களால் நீர் வடிதல்

கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது.

Allergic conjuntivits 1

“எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு”

உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையால் தேய்த்துத்தான் அவ்வாறாகியிருந்தது.

Allergic conjuntivits

பாவம்! அவனைத் தூற்றுவதில் பிரயோசனம் இல்லை. அவனுக்கான பாரிகாரங்களைத் தாய் செய்து கொடுக்கத் தவறிவிட்டாள் என்றே எனக்குத் தோன்றியது.

ஓவ்வாமைக் கண்நோய்

இது பலருக்கும் ஏற்படுகிற பிரச்சனைதான். குழந்தைகளில் அதிகம். கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் என அவர்களுக்கு தங்கள் கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.

இவை எல்லாம் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமையின் நுலந யுடடநசபல பல அறிகுறிகளாகும்.

Allergic conjuntivits 3

மாறாக, கிருமித் தொற்றால் ஏற்படும் கண்நோய்கள் முதலில் ஒரு கண்ணில் தோன்றும் பின் மற்றக் கண்ணிற்கும் பரவலாம். ஆனால் ஒவ்வாமைக் கண்நோய் பொதுவாக இரு கண்களிலும் ஒரே நேரத்தில் தோன்றும். அத்துடன் கண் அரிப்பு நிச்சயம் இருக்கும். மடலைத் தாண்டி கண்களும் பாதிப்புறும்போது கண்ணிலிருந்து சற்றுத் தடிப்பான திரவம் சுரந்து கண் ஓரங்களில் ‘பீளையாக’ ஒட்டிக் கிடந்து பார்ப்பவர்களை அருவருக்கவும் வைக்கலாம்.

Allergic conjuntivits 4

ஓவ்வாமைகள்

இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமை அறிகுறிகளுடன் கைகோர்த்து வருவதுண்டு. சிலருக்குக் காதில் அரிப்பும் ஏற்படுவதுண்டு. இவை யாவுமே ஒவ்வாமைகளின் (Allergy) அறிகுறிதான்.

இவை முகத்தில் தோன்றுபவை. ஆனால் ஓவ்வாமைகள் உடல் முழவதும் தோன்றலாம், அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

Allergic conjuntivits 5

ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? உணவு முதற்கொண்டு தூசி புழதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பலவும் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம்.

ஒவ்வாமையால்

  • சருமத்தில் தடிப்புகள் வீக்கங்கள், அரிப்பு போன்றவை தோன்றுவது போலவே
  • கண்களிலும் மேற்சொன்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  • சிலரது வயிற்றுவலிக்கும் ஒவ்வாமை காரணமாவதுண்டு.

தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம்

வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.

சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். பருவகாலங்கள் துல்லியமாக மாறுபடும் மேலை நாடுகளில் இது பொதுவாக வசந்த காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிப்பதுண்டு.

தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

ஓவ்வாமைக் கண்நோயானது நோயாளியை அரியண்ணடப்படுத்தி எரிச்சலுற வைக்கும் என்றபோதும் ஆபத்தான நோயல்ல. மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதாயினும் கண்ணின் பார்வைத் திறனைப் பாதிக்காது. வேறு எந்த ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்படாது.

நீங்கள் செய்யக் கூடியவை

ஓவ்வாமைக் கண்நோய் ஏற்படாமல் தடுக்கவும், அது தோன்றினால் அதிலிருந்து நிவாரணம் பெறவும் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology   வழங்குகிறது.

lotion woman

  • வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
  • அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.
  • வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.
  • கொன்டக்ட் லென்ஸ் contact lenses போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.
  • எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள். கசக்குவதால் கண்களில் நுண்ணிய உரசல்களும் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பிரச்சனையை மோசமாக்கும்.

மருந்துகள்

மேற்கூறிய முறைகளில் குணமாகாவிடில் உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.

Allergic conjuntivits 6

ஒவ்வாமைக்கு எதிரான மருந்துகளை anti-histamines என்பார்கள். இலங்கையில் பிரிட்டோன் என்ற மாத்திரை பலருக்கும் பரிச்சயமானது. அது அம் மருந்தின் வர்த்தகப் பெயராகும். chlorpheniramineஎன்பதே அதன் பொதுவான பெயராகும். தும்மல், தடிமன், அரிப்பு என்றவுடன் பலரும் தாங்களாகவே இதை வாங்கிப் போடுவதை நாம் காண்கிறோம். இது சற்று சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்துவதுண்டு. எனவே பாடசாலைப் பிள்ளைகள் வேலைக்குச் செல்வோர் ஆகியோருக்கு ஏற்றதல்ல.

சிலர் தூக்கம் வரவில்லை என்றாலும் தாங்களாகவே இம் மருந்தை உட்கொள்கிறார்கள். அது தூக்க மாத்திரை அல்ல. இவ்வாறு மருந்துகளைத் துஷ்பிரயோகம் செய்வது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

loratadine, cetirizine, fexofenadine, desloratadine  போன்ற பல புதிய மருந்துகள் அந்தளவு தூக்க மயக்கத்தை ஏற்படுத்தாது. இவை யாவும் மருத்துவ ஆலொசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டியவையாகும்.

கண்ணிற்குள் விடும் துளி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில தொடர்ந்து உபயோகிக்க உகந்தவை. ஏனைய பல சில நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டியவை. எனவே அவை பற்றி இங்கு எழுதவில்லை. மருத்துவ ஆலோசனையுடன் அவர் சிபார்ச்சு செய்யும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »