Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘ஒஸ்டியோபொரோசிஸ்’ Category

இடுப்பு எலும்பு முறிவு (Hip Fracture) என்பது ஒரு பாரதூரமான பிரச்சனை. இது பொதுவாக வயதானவர்களிடையேதான் அதிகம் காணப்படுகிறது.

பொதுவாக 65 வயது முதல் 80 வயது வரையானவர்கள் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள்.

elderly-falling

அதிலும் பெண்கள் பாதிப்படைவது அதிகம்.

விழுகைகளே அத்தகைய எலும்பு உடைவுகளுக்கு பெரும்பாலும்  காரணமாகிறன.

18026_4736_5

இடுப்பு எலும்பு உடைவு எனப் பொதுவாகச் சொன்னாலும் உண்மையில் உடைவது தொடை எலும்பின் மேற் பகுதிதான்.  இடுப்பு மூட்டுப் பகுதிக்குள் இருக்கும் எலும்பின் பகுதியே அதிகம் உடைவதுண்டு.

முதியவர்களில் இது அதிகம் வருவதற்குக் காரணம் அவர்களது எலும்புகள் நலிவடைந்திருப்பதே. அவ்வாறு எலும்பு நலிவடைவதை ஒஸ்டியோபொரோசிஸ் osteoporosis என்பார்கள்.

ஒஸ்டியோபொரோசிஸ் பற்றிய எனது முன்னைய பதிவைப் பார்க்க

பானை வயிற்றோர்களின் எலும்பு முறியாமல் காத்தல்

falls_elderly_prevention

முதுமையில் விழுகைகள் அதிகமாவதற்கு காரணங்கள் என்ன?

 • பலவிதமான மருந்துகளை உட்கொள்வதால் ஏற்படும் பக்க விளைவுகள்,
 • முதுமையின் பார்வைக் குறைபாடு,
 • அவர்கள் சமநிலையைப் பேணுவதில் படும் சிரமம்

ஆகியனவே அவர்களது விழுகைகளுக்கு காரணமாகின்றன.

fallcouple

கடுமையான வலி ஏற்படுவதும் அவர்களது நடமாட்டத்தை மட்டுப்படுத்துவதுமே இடுப்பு எலும்பு முறிவின் முக்கிய பாதிப்புகளாகும்.

எத்தகைய அறிகுறிகள் இருந்தால் நீங்கள் அதை இடுப்பு எலும்பு உடைவு எனச் சந்தேகப்பட முடியும்.

 • இடுப்புபு் பகுதியில் வீக்கமும் கண்டலும் தோன்றலாம்
 • இடுப்பின் அந்தப் பகுதியால் உங்கள் உடற் பாரத்தை சுமக்க முடியாததால் எழுந்து நிற்க முடியாது போய்விடும்.
 • நடக்க முடியாது போகும்
 • இடுப்பில் மட்டுமின்றி அந்தப் பக்க காலிலும் வலி பரவலாம்.
 • ஒருங்கே வைத்துப் பார்த்தால் அந்தக் கால் மற்றக் காலை விடக் கட்டையானது போலத் தோற்றமிளிக்கும்.

உடைவினால் படுக்கையில் கிடக்க நேர்ந்தால் படுக்கைப் புண்கள் ஏற்பட வாய்ப்புண்டு. சிறுநீர்த் தொற்று நோய், நியூமோனியா போன்ற பிரச்சனைகள் தொடரலாம்.

மிக ஆபத்தானது குருதி நாளங்களில் இரத்தம் (Deep Vein thrombosis) கட்டிபடுவதாகும்.

சிகிச்சையாக பெரும்பாலும் சத்திரசிகிச்சையே தேவைப்படும் என்பதால் விழுந்து விடாமல் தங்களைப் பாதுகாக்க முதியவர்கள் அதிக கவனம் எடுக்க வேண்டும்.

படத்தின் மீது கிளிக் பண்ணி பெரிதாக இப்படத்தைப் பார்க்கவும்.

Falls_Prevention_Infographic (1)

விழாமல் பாதுகாப்பாக இருப்பது பற்றி மேலும் அறிய எனது முன்னைய பதிவைப் பார்க்கவும்

வயதானவர்களின் விழுகை!

மேலதிக கல்சியம் ஆண்களுக்கும் தேவையா?

0.0.0.0.0.0

Read Full Post »

பானை வயிற்றோனே பக்தர்களைக் காப்போனே என யானை முகத்தானைப் பக்தர்கள் துதித்து மகிழ்வது வழக்கம்.

ஆனால் பானை வயிறுள்ளவர்கள் மற்றவர்களைக் காப்பது முடியாது என்பது மட்டுமல்ல தம்மையும் காப்பது கடினம் என நவீன மருத்துவம் கூறுகிறது.

பானை வயிறு என்றால் என்ன?

எமது உடலில் கொழுப்பு உள்ளது. உடலின் எடை அதிகரிப்பிற்கு இந்தக் கொழுப்பு மிக முக்கிய காரணமாகிறது. எடை அதிகரிப்புக்கு முக்கிய காரணமான கொழுப்பானது எமது சருமத்தின் கீழ் இருக்கிறது.

அதே போல எமது வயிற்றறையிலும் இருக்கிறது. வயிற்றறையில் இருக்கும் கொழுப்பு, தசைகளுக்கும் கிழே உள்ளுறுப்புகளுடன் சேர்ந்திருக்கும்;போதே வயிறு அதிகம் பருமனாகிறது. தொந்தி விழுகிறது. ஆபத்து மிக அதிகமாகிறது.

அதீத எடை ஆபத்தானது
அதீத எடையின் ஆபத்துக்கள் பலவாகும்.

அதீத எடையானது பல ஆபத்தான நோய்களுக்குக் காரணமாகிறது என்பதை அறிவீர்கள்.

அதீத எடை என்பது உடற் திணிவுக் குறியீடு (BMI-30) 30ற்கு மேல் என மதிப்பிடுகிறார்கள்.

பணச் செழிப்பும் உணவு அதிகம் நிறைந்ததுமான அமெரிக்காவில் மட்டும் 72 மில்லியனுக்கு மேற்பட்டவர்கள் அவ்வாறான அதீத எடை கொண்டவர்களாகும்.

 • நீரிழிவு
 • குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் அளவு
 • உயர் இரத்த அழுத்தம்
 • ஆஸ்த்மா
 • முழங்கால் தேய்வு உட்பட்ட மூட்டு நோய்கள்
 • தூக்கத்தில் மூச்சுத் திணறல்

போன்ற பல நோய்களுக்குக் அடிப்படைக் காரணமாகிறது. எனவே தான் எடையைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

 ஒரே ஒரு நன்மையா?

பாதிப்புகள் பல இருந்தபோதும் ஒரே ஒரு நன்மை அவதானிக்கப்பட்டுள்ளது. அதுவும் பெண்களில் மட்டும். அதிக எடையுள்ள பெண்கள் மெலிந்த பெண்களைவிட குறைந்தளவே எலும்புத் தேய்வுக்கு ஆளாவதாக அறியப்படுள்ளது.

இருந்த போதும் இது பற்றி இப்பொழுது மேலும் நுணுக்கமான ஆய்வுகள் செய்யப்பட்டுள்ளது. அதீத எடை கொண்ட பெண்களில் கொழுப்பானது வயிற்றறையில் இருந்தால் அவர்களது எலும்புகளின் அடர்த்தி குறைவாக இருப்பதுடன் எலும்பிலும் கொழுப்பு அதிகம் இருப்பது கண்டறியப்பட்டது.

இது காலகதியில் இடுப்பு எலும்பு முறிவு, முள்ளதண்டு எலும்புகளில் உடைவு ஆகியவற்றைக் கொண்டு வரும்.

அதாவது கொழுப்பு சருமத்தின் கீழ் இருப்பதை விட வயிற்றறையில் இருந்தால் பாதிப்பு அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஒஸ்டியொபொரோசிஸ்

அமெரிக்காவில் மட்டும் 10 மில்லியன் மக்கள் எலும்பு அடர்த்தி குறைந்த ஒஸ்டியொபொரோசிஸ் (Osteoporosis) நோயினால் துன்பப்படுகிறார்கள். மேலும் 10 மில்லியன் மக்களின் எலும்புகள் நலிவுற்று அந்நோய் வருவதற்கான ஆரம்ப நிலையில் இருக்கிறார்கள்.

எமது நாட்டிலும்  இந் நோயினால் பலர் இடுப்பு எலும்பு முறிந்து சிரமப்படுகிறார்கள்.

இதற்கான சத்திர சிகிச்சைகள் இருந்தபோதும் அது செலவானதும் சிரமமானதும் ஆகும். முள்ளத்தண்டு எலும்பு உடைவு மற்றும் சிதைவு காரணமாக முதுகுவலி, கால்வலி, குனிந்து வேலை செய்ய முடியாமை எனப் பல தொல்லைகளுக்கு ஆளாவோர் எண்ணிக்கை பற்றிய தரவுகள் இங்கு கிடையாது. ஆனால் இதில் பெரும்பாலானோர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

வயிற்றறைக் கொழுப்பின் ஏனைய பாதிப்புகள்

வயிற்றறைக் கொழுப்பு அதாவது தொந்தி வண்டியானது எலும்புப் பாதிப்பை ஏற்படுத்துவதுடன் இருதய நோய்கள், நீரிழிவு ஆகியன ஏற்படுவதற்கும் மிக முக்கிய காரணங்களாகும்.

அதனால்தான் பல மருத்துவர்கள் பிரஸர், கொலஸ்டரோல், நீரிழிவு, எடை ஆகியவற்றை அளவிடுவதுடன் வயிற்றின் சுற்றளைவையும் அளந்து பார்க்கிறார்கள்.

அளந்து பாருங்கள்

உங்கள் வயிற்றில் கொழுப்பு அதிகமிருப்பதை அறிவது எப்படி? வயிற்றின் சுற்றளவை அளந்து பார்ப்பதுதான் ஒரே வழி.

கீழே உள்ள அட்டவணையைப் பாருங்கள். நாங்கள் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்தவர்கள். எங்களுக்கு இருக்க வேண்டிய அளவுகளாவன

ஆண்களுக்கு 90 செமி அல்லது 35.4 அங்குலங்கள் குறைவாக
பெண்களுக்கு 80 செமி அல்லது 31.5 அங்குலங்கள் குறைவாக

இதற்கு  மேல் அதிகரிக்க விடாதீர்கள்.


வயிற்றறைக் கொழுப்புக்குக் காரணங்கள்

வயிற்றில் கொழுப்பு அதிகரிப்பதற்குக் காரணங்கள் என்ன? பொதுவான எடை அதிகரிப்பிற்குக் காரணமான அதே தவறான உணவுமுறைகளும், போதிய உடற் பயிற்ச்சி இல்லாததுமே ஆகும். ஆனால் அத்துடன் பரம்பரைக் காரணங்களும் உள்ளன. இயற்கையாகவே மேலை நாட்டவர்களை விட ஆசிய நாட்டவர்களுக்கு வயிறு வைப்பது அதிகம்.

முயற்சி செய்யுங்கள்

ஆரோக்கியமான உணவுமுறைகளுடன் தினசரி உடல் உழைப்பு அல்லது பயிற்ச்சி மூலம் உங்கள் எடையையும் முக்கியமாக வயிற்றில் கொழுப்பையும் குறைத்து உடல் நலத்தை அக்கறையுடன் பேணவேண்டும்.

இரத்தத்தில் கொழுப்பு

இரத்தத்தில் கொழுப்பு என்பது முற்றிலும் வேறு விடயம். அது கொலஸ்டரோல் பற்றியது. அதீத எடையுள்ளவர்களுக்கு அது வருவதற்கான வாய்ப்பு அதிகமாயினும் மெலிந்த எடை உடையவர்களுக்கு வராது என்று சொல்ல முடியாது.

Source: Radiological Society of North America, December 2010

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »