Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கட்டுரை’ Category

எமது யாழ் மண்ணின் செழுமைக்கு கை கொடுத்தவர்கள் பலர். கல்வி, வாணிபம், அரசியல் கலை இலக்கியம் என எத் துறையை எடுத்துக் கொண்டாலும் அவற்றில் கால் பதித்து அளப்பரிய பணிகள் செய்து மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக வாழ்ந்தவர்கள் பலர்.

அந்த விதத்தில் எமது மண்ணின் ஆத்ம ஞானிகள் பலரும் மண்ணில் பலமாக ஆழ வேரூன்றி அகலச் சடைபரப்பி எம்மை ஒத்த சாதாரணர்களின் ஆன்மீக மேம்பாட்டிற்கு உள்ளொளி பாய்ச்சியதை மறக்க முடியாது. சித்தர்கள், யோகிகள், ஞானிகள், சுவாமிகள் எனப் பலவாறு எம்மக்களால் அழைக்கப்பட்டு உயர் பீடத்தில் வைத்து கௌரவிக்கப்பட்டார்கள்.

கடையிற் சுவாமிகள், யோக சுவாமி முதற்கொண்டு ஜேர்மன் சுவாமி என அறுகுபோல் வேரூண்டிப் படர்ந்த ஞானப் பரம்பரியம் இம் மண்ணில் இருந்திருக்கிறது. அவர்களின் ஞானத் தேறலில் ஒரு சிறு பங்காவது எம் எல்லோரிலும் இன்றுவரை ஒட்டிக் கொண்டிருப்பது நாம் செய்த பாக்கியம்தான்.

Chemparuthi_0001_NEW

வடமராட்சி வடக்கு பிரதேச கலாசார பேரவை பருத்தித்துறை வெளியிட்ட செம்பருத்தி’ என்ற பிரதேச மலரில் இடம் பெற்ற கட்டுரை இது.

“குவலயத்தின் விழி போன்ற” என மகாகவி பாரதி போற்றிய அற்புத ஞானி ஒருவர் வடமராட்சியில் அதுவும் நான் பிறந்த ஊரான வியாபாரிமூலை மண்ணில் விளைந்திருக்கிறார். அவர்தான் தான் அருளம்பல சுவாமிகள் ஆவார். யாழ்பாணத்துச் சுவாமி என பாரதி அவரை விழித்தபோதும் மௌன சுவாமி எனத் தன்னைத்தான் ஓரிடத்தில் குறிபிட்டிருக்கிறார். ஊரவர்களும் அருளம்பல சுவாமி, மௌன சுவாமி ஆகிய பெயர்களில் அவரைப் போற்றித் துதித்திருக்கினறனர்.

ஆயினும் அவரைக் காணும் பாக்கியம் எனக்குக் கிட்டவில்லை. எனது தந்தையார் பாட்டனார் ஆகியோர் அவரைப் காணும் பாக்கியம் பெற்றிருக்கின்றனர். 1942 மார்கழி மாதம் மகாசமாதியடைந்த அவரை வியாபாரிமூலை பேந்தாள் வளவிலிருந்து நிஷ்டையிலிருந்த அதே நிமிர்ந்த கோலத்தில் வாகனத்தில் ஏற்றி ஊர்வலமாக எடுத்துச் சென்று வியாபாரிமூலை வீரபத்திர கோயிலுக்கு அண்மையாக, ஈசான மூலையில் சமாதி வைக்கபட்டார். தானும் சிறுவனாகக் அதில் கலந்து கொண்டதை எனது தந்தையார் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.

வியாபாரிமூலையைச் சேர்ந்த வேலுப்பிள்ளைக்கும் வதிரியைச் சேர்ந்த இலட்சிமி அம்மாள் ஆகியோரின் மகனாக 1980 ஆண்டு அருளம்பலம் பிறந்தார். அவர் பிறந்த தினம் 1880 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் திகதி என அவரைப் பற்றி ஆய்வு செய்த பேராசிரியர் நா.ஞானகுமாரன் ‘பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்’ என்ற நூலில் ஆய்வு ரீதியாகக் குறிப்பிடுகிறார்.

எமது ஊரில் பிறந்து, எமது பகுதிப் பாடசாலையான மேலைப்புலோலி சைவப் பிரகாச வித்தியாலயத்தில் கல்வி கற்றபோது அவர் சதாவதானி நா.கதிரவேற்பிள்ளை அவர்களின் மாணாக்கனாக இருந்தார் என்பதையும் அறிய முடிகிறது. 5ம் வகுப்புவரை அங்கு கல்வி கற்ற அவர் பின்னர் குடும்ப பொருளாதார நிலைகாரணமாக் தொழில் நிமித்தம் கம்பளை சென்றார்.

5ம் வரை மட்டுமே கல்வி கற்ற போதும் இராமாயணம் மகாபாரதம் திருமூலர் திருக்குறள் முதலான பழந்தமிழ் இலக்கியங்கள் முதல் பட்டினத்தார் பாடல்கள் அருகிரிநாதர் பாடல்கள் வரையானவற்றில் தேர்ச்சி பெற்றிருந்ததை அவரது படைப்புகள் ஊடாக அறிய முடிகிறது என பேராசிரியர் நா.ஞானகுமாரன் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

உலக வாழ்வில் நாட்டங் குறைந்து ஆன்மீக ஆர்வம் மீதௌ 1910ம் ஆண்டளவில் இந்தியா சென்ற அவர் நாகை நீலலோசனி அம்மன் ஆலயத்தில் நிஷ்டை நிலை கற்றார் என அவரது படைப்புகள் மூலம் அறிய முடிகிறது. 1910 முதல் 1914 வரை நான்கு ஆண்டுகள் உணவு மறுத்து கடுமையான நிஷ்டையில் ஆழ்ந்தார். அந் நிலையில் புலித்தோலில் அவர் அமர்ந்திருக்கும் உடல் மெலிந்த ஞானத் தோற்றமுடைய புகைப்படம் ஒன்று கிட்டியுள்ளது. அவரது மேலும் இரு புகைப்படங்கள் கிடைத்துள்ளன.

நிஷ்டையில் இருந்த நேரத்தில் இவரது உண்மையான ஞானநிலையைப் புரியாத ஆலய நிர்வாகி போலிக் குற்றச்சாட்டு செய்தபோது பொலிசார் இவரை ஒரு அறையில் அடைத்து வைத்தனர். சற்று நேரத்தில் பார்த்தபோது அறை பூட்டிய படியே இருக்க இவர் காணாமல் போயிருந்தார். தேடியபோது இவர் கடற்கரையில் நிஷ்டையில் இருப்பதைக் கண்டனர். இதைக் கண்ட நீதிபதி அவரது ஆன்மீக மகிமையை உணர்ந்து, எவரும் அவரைத் தொந்தரவு செய்யக் கூடாது என ஆணையிட்டதாகத் தெரிகிறது.

சித்து வல்லமை பெற்ற அருளம்பல சுவாமி அவர்கள் வரப்போவதை எதிர்வு கூறல், மக்களின் பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தல், ஒரு நேரத்தில் பல இடங்களில் தன் உருவம் காட்டல் போன்ற பலவற்றை செய்யும் ஆற்றல் பெற்றிருந்திருக்கிறார். ஆனாலும் சித்து வேலைகளில் அதிக நாட்டம் கொண்டதில்லை.

அருளம்பல சுவாமிகள் ஞானந் தெளிந்த சித்தர். அதற்கு மேலாக அற்புதமான படைப்பாற்றல் கொண்ட கலைஞனாகவும் காணப்படுகிறார். நுணுக்கமும் நேர்த்த்pயும் கொண்ட அவரது பல கைவினைப் பொருட்களான மண்விளக்கு, சட்டி, செம்பு போன்றவற்றை அவரின் பரம்பரையினர் வதிரியில் பேணி வந்ததை நேரில் கண்டுள்ளேன்.

அத்துடன் அவர் சிறந்த ஓவியராகவும் விளங்கியுள்ளார். எமது ஊரான வியாபாரிமூலை விநாயகர் ஆலய களஞ்சியசாலைக்கு முன்பாகவுள்ள வாகனசாலைச் சுவரில் செங்காவி கோட்டோவியமாக பக்த அடியார் ஒருவரின் சித்திரம் ஒன்றைச் சிறுவயதில் கண்டது மங்கிய கனவாக நினைவில் நிற்கிறது. அதேபோல வசந்த மண்டப சுவரிலும் அவர் வரைந்த தெய்வ ஓவியங்கள் இருந்திருக்கின்றன.

பேணப்பட வேண்டிய பெறுமதி வாய்ந்த பொக்கிஷங்கள் அவை. “..பாவியரைக் கரை சேர்க்கும் ஞானத் தோணியான”  அருளம்பல சுவாமிகளின் உள்ளுணர்வுகளைப் பிரதிபலிக்கும் கைவண்ணமான அவற்றை வெள்ளை அடித்து  மறையச் செய்த எமது பேதமையை எண்ணி மனங் கலங்குவார் எமது மண்ணின் பிற்கால ஓவியரான திரு.ஏ.கே. நடராஜா.

சித்தராக, கலைஞனாக, ஓவியனாக தன்னை வெளிப்படுத்திய அருளம்பல சுவாமிகள் தன்னை கவிஞனாகவும் எழுத்தாளனாகவும் வெளிப்படுத்தவும் தவறவில்லை. தான் தெளிந்த ஆன்மீக அறிவையும் உணர்வையும் மக்களுக்கு ஊறச் செய்யும் முயற்சியாக கவிதையாகவும் உரைநடையிலும் அவர் படைத்தவை பல. பதின்னான்கிற்கு மேற்பட்ட இத்தகைய ஆக்கங்கள் உள்ளதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் கூறுகிறார். இவை படித்துப் பயன்பெற ஏற்றவை என்பதற்கு மேலாக ஆய்விற்குரிய ஆவணங்களாகவும் திகழ்கின்றன.

அருளம்பலம் சந்தேக நிவிர்த்தி, கற்புநிலை, அருவாச தேவ ஆரம், நாகை நீலலோசனி அம்மன் பேரில் தோத்திரம், நாகை நீலலோசனி அம்மன் ஊஞ்சல், கற்பு நிலைச் சுருக்கம், பழைய வேற்பாட்டுடன் படிக்கை, ஆதிபுராணம், ஆதிநீதி ஆகியவை கிடைக்கப் பெற்றதாக பேராசிரியர் நா.ஞானகுமாரன் குறிப்படுகிறார். ஆநாதி போதம், சங்க வினாவிடை, சைவ வினாவிடை, தர்க்க சாஸ்திரம் ஆகியவை கிடைக்கப் பெறவில்லை.

இருந்தபோதும் எம்மிடையே விளைந்த அந்த ஞான ஒளியை நாம் உணரச் தாமதித்தபோது, தமிழகப் பாரதி எம் கண்ணைத் திறக்கத் தேவைப்பட்டான். நாகையிலிருந்த சுவாமிகள் வேதாரணியம், அகத்தியாம் பள்ளி, மாயாவாரம், சிதம்பரம்,  காரைக்குடி, புதுச்சேரி ஆகிய இடங்களிற்கும் சென்றிருக்கிறார். பாரதி புதுவையில் மறைந்திருந்த காலத்திலேயே சுவாமிகளைச் சந்தித்துள்ளார்.

“..மங்களம் சேர் திருவிழியால் அருளைப் பெய்யும்

வானவர்கோன் யாழ்ப்பாணத்தீசன் தன்னைச்

சங்கரனென் றெப்போது முன்னே கொண்டு

சரணடைந்த . . .”

என்று பாரதி அவரைப் பாடுகிறான். வேறு இரு பாடல்களிலும் இவரைத் தனது ஞானகுருவாகச் சுட்டிக் காட்டுகிறான்.

பாரதியின் ஞானகுருவான யாழ்ப்பாணத்துச் சுவாமிகள் இவர்தான் என 1960 களில் இ.மு.எ.ச ஆரவாரமாக விழா எடுத்துக் கொண்டாடியதன்; பின்னர் வெளியுலகில் மறக்கப்பட்டிருந்த அருளம்பல சுவாமிகளை, ஒரு பல்கலைக்கழகத்தின் அறிவாண்மையுடன் ஆய்வு செய்து ‘பாரதி போற்றிய அருளம்பல சுவாமிகள்’ என நூலுருவில்; நிலை நிறுத்தியவர் பேராசிரியர் நா.ஞானகுமாரன்.

அவரின் தொடர்ந்த சலிக்காத தேடலும், தன்னலமற்ற பணியும் காரணமாக அருளம்பல சுவாமிகளின் சில படைப்புகள் இப்பொழுது நூல் வடிவில் ஆவணப்படுத்தப்படுகின்றன.

எம்.கே.முருகானந்தன்.

Chemparuthi_0002_NEW

செம்பருத்தி பிரதேச மலரின் பின் அட்டைப்படம் இது

0.00.0

 

Read Full Post »

எனது ஊர் வியாபாரிமூலை ஆகும். பருத்த்திததுறையில் இருந்து மேற்குப்புறமாக சுமார் ஒரு மைல் தூரத்திலிருந்து இருக்கிறது.அருகே கடற்கரை. ஆழமற்ற பாக்குத் தொடுவாய்.முருங்கைக் கற்கள் கடலில் வேலியடைத்தது போலப் பரந்திருக்கும்.

எமது ஊரையும் கடற்கரை வீதியையும் பிரித்து நிற்கும் தோட்டக் காணிகள். வெங்காயம், புகையிலை, மிளகாய் எனப் பசுமை போர்த்தியிருக்கும். தோட்டக் காணிகளின் நடுவே நின்று பார்த்தால் அதன் கிழக்கு எல்லையில் தெணியம்மன் கோவில் தெரியும்.

இளமைக்காலம் முழுவதும் ஆடிப்பாடித் திரிந்த தாய் மண் அது.

தொழில் நிமித்தமாக நீண்ட காலம் பருத்தித்துறை நகரிலும், பின்னர் கொழும்பில் வசிக்க நேர்ந்தபோதும் எமது சொந்த மண்ணின் நினைவுகளில் மூழ்குவது மகிழ்ச்சியளிக்கிறது.

இன்று திடீரென எனது ஊர் பற்றிய எண்ணவும் அது பற்றி எழுதவும் நேர்ந்ததற்குக் காரணம் வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்தான்.

அண்மையில் நடைபெற்ற வருடாந்தப் பொதுக் கூட்டத்தில் புதிய நிர்வாக சபை தெரிவாகியுள்ளதாக நண்பர் ஒருவர் தெரிவித்தார்.

தலைவர் திரு.V.K.இரத்தினவடிவேல்
செயலாளர் திரு கயானந்தன் குணாதரன்
பொருளாளர் திரு செ.இரகுநாதன்

ஆகியோர் உட்பட செயற்திறன் மிக்க செயற்குழு தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிந்தேன்.

அனுபவ முதிர்ச்சியுள்ள தலைமையும், செயலூக்கம் கொண்ட இளைய தலைமுறையினரான பொருளாளர் செயலாளர் ஆகியோரைக் கொண்ட புதிய நிர்வாகக் குழு சிறப்பாக எமது நிலையத்தைக் வழி நடாத்துவதற்கு திடசங்கற்பம் கொண்டிருக்கிறார்கள்.

புதிய தலைவருக்கும் நிர்வாக சபையினருக்கும் எனது மனம் நிறைந்த வாழ்த்துக்கள். அவர்களது அர்ப்பணிப்புடன் கூடிய சேவைக்கு எமது ஊர் மக்கள் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்பது திண்ணம்.

சென்ற 24.02.2013 அன்று பாடசாலையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் கலந்து கொள்ளச் சென்ற போது எமது சனசமூக நிலையப்பக்கம் செல்ல நேர்ந்தது.

அதிகாலை 7-7.30 மணியளவில் வீதிக்குசென்ற போது நிலையத்தின் வாயில் திறக்கப்படவில்லை. ஆயினும் அன்று நடைபெற இருந்த மருத்துவ முகாம் பற்றிய அறிவித்தல் அங்கு பார்வைக்கு வைக்கபட்டிருந்தமை மகிழ்ச்சியளித்தது.

மீண்டும் அரை மணி நேரத்தில் அதே வழியால் திரும்பி வரும்போது வாயிற் கதவு திறந்திருந்தது.

உள்ளே சென்று பார்த்தபோது அன்றைய பத்திரிகைகள் வந்திருந்தன. அவை ஒழுங்கான முறையில் வாசிப்பு மேசையில் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன.

பழைய நினைவுளில் மூழ்குவது இன்பம். மாணவப் பருவத்தில் நீண்ட காலமாக அதன் செயற்குழுவில் இடம்பெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருந்தது.

திரு வைத்திலிங்கம், திரு.வே.க.கந்தையா, திரு.மகாதேவன்பிள்ளை போன்ற பல பெரியோர்கள் தலைமைப் பொறுப்பை ஏற்று வாசிகசாலையை சிறப்பாக இயங்க வைத்தனர்.

புதிய மேல்மாடி கட்டிடத் திறப்பு விழா நேற்று நடந்தது போல பசுமையாக மனதில் நிறைந்து இருக்கிறது. இன்றும் அதே கட்டிடம் சிறப்பாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

வசதியான வாசிப்பறை. வாசலில் மணல் பரப்பிய தரை. காலாற அமர்ந்திருக்க ஏற்றது. வெயிலி்ன் கொடுமையைத் தணித்து குளிர்மை வீசும் பெரு மரம். கிளை விரித்து பரந்த அது கொடுக்கும் தண்மை பத்திரிகை படிக்க வருபவர்களை ஆசுவாசப்படுத்தும்.

ஊரிலுள்ள 10-12 இளைஞர்கள் முறை வைத்து மாறி மாறி வாசிகசாலைக்கு
பத்திரிகைகளை அன்பளிப்பாக வாங்கித் தருகிறார்களாம். அவர்களது தன்னலமற்ற பணி மகிழ்ச்சியளிக்கிறது

தற்காலிகமாக மூடிக் கிடக்கும் நூலகத்தின் lending பகுதிக்கு புதிதாக நூல்களைச் சேர்க்கவும் அங்கத்துவர்களுக்கு மாறி மாறி வாசிக்கக் கொடுக்கவும் முயற்சிக்கிறார்கள். வேறு பல திட்டங்களும் உள்ளதாகத் தெரிகிறது.

ஊரவர்கள், அன்பர்கள், ஆதரவாளர்கள், புலம் பெயர்ந்தவர்கள் என அனைவரும் புதிய நிர்வாகக் குழுவிற்கு ஒத்துழைப்பு வழங்கி நிலையம் சிறப்பாக இயங்க உதவுவார்கள் என்பது திண்ணம்.

‘மறந்து போகாத சில’ புளக்கில் வெளியான கட்டுரை வியாபாரிமூலை கலைமணி சனசமூக நிலையம்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

எண்பது வயதிலும் மனிதநேய எழுத்துப் பணி துறக்காதவர் 
சாகித்தியப் பரிசு கிடைக்காத சிறந்த மூத்த படைப்பாளி
எழுத்தாளர்கள் ஏன் எழுதுகிறார்கள்? தமது ஆத்ம திருப்திக்காக எழுதுபவர்கள் பலர் இருக்கிறார்கள். தாங்கள் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். சமூகத்தில் தனது அடையாளத்தை பதிக்க வேண்டும் என்பதற்காக எழுதுபவர்களும் இருக்கிறார்கள். 
எல்லோரும் எழுதுகிறார்களே நானும் முயன்று பார்க்கலாம் என முயற்சிப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். பலரும் இவ்வாறான எண்ணத்துடன் எழுத்துத்துறைக்குள் நுழைகிறார்கள். ஆனால் கால வெள்ளத்தில் பொறுப்புணர்வு அதிகரித்து, சமூக அக்கறையும் மேலோங்க அவர்களது பார்வை விரிவடைகிறது.
‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்று தனது எழுத்துலகப் பாதையை வெளியுலகிற்கு துல்லியமாக வெளிச்சம்போட்டுக் காட்டி எழுதுபவர்கள் ஒரு சிலராகத்தான் இருக்க முடியும். உள்ளத்தில் கள்ளமில்லாத படைப்பாளியால்தான் அவ்வாறு எழுத முடியும். 
அண்மையில் 80 வயதை எட்டிய ஒருவர் 
  • தனது இளமைப் பருவம் முதல் கடந்த சுமார் 5 தசாப்தங்களாக கொள்கைப் பிடிப்போடு சிறுகதைகளைப் படைத்து வருகிறார். 
  • கலைத்துவமாகவும் வாசகர்களுக்கு பயனுள்ளதாக சிறப்பாகவும் எழுதி வருகிறார். 
  • அடக்கப்பட்ட எல்லா மக்களுக்காகவும் அவரது படைப்புகள் குரல் கொடுக்கின்றன. 
  • முற்போக்கு இலக்கியத்தில் அவருக்கெனத் தனியிடம் உண்டு. 
  • இலங்கையின் பெரும்பாலான பத்திரிகைகள் அவரது படைப்புகளை விருப்போடு பிரசுரிக்கின்றன. 
  • வாசகர் மட்டத்திலும் எழுத்தாளர் மத்தியிலும் மதிக்கப்படுபவர். 
  • ஆயினும் இன்றுவரை அவருக்கு இலங்கைத் தேசிய சாஹித்தியப் பரிசு கிடைக்கவில்லை. 
இவரது முதல் சிறுகதைத் தொகுதி 1961 ஆண்டு சிறந்த சிறுகதைத் தொகுதியாக அவ்வாண்டின் நடுவர் குழுவால் தெரிந்தெடுக்கப்பட்டதாக அறிகிறேன். ஆனால் அன்றைய சாஹித்திய குழுத் தலைவரான ஒரு பேராசிரியர் ‘சிறுகதை என்பது ஒரு இலக்கிய வடிவம் அல்ல அதற்குப் பரிசு கொடுக்க வேண்டியது அவசியமில்லை’ எனத் தடுத்துவிட்டதாக தெரிகிறது. 
அந்த ஒரே ஒரு வருடம் மட்டும் சிறுகதைக்கென சாஹித்தியப் பரிசு வழங்கப்படவில்லை. இதனால் சிறந்த சிறுகதைத் தொகுதியாக பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு கிடைக்காமல் போய்விட்டது.

இது ஆச்சரியமான செய்தி மட்டுமல்ல. பரிசளிப்புகளின் போது திறமைகளைவிட வேறு விடயங்களும் கவனத்தில் எடுக்கப்படுகின்றன, தனிப்பட உள்நோக்கம் கொண்ட செயற்பாடுகளுக்கும் குறைவில்லை என்பது தெளிவாகப் புலப்படுகிறது. 

அவர் பரிசுகளைத் தேடி ஒருபோதும் ஓடியதில்லை. முற் கூறிய சாஹித்திய மண்டலம் உட்பட எந்தப் போட்டிக்கும் தனது நூலை அனுப்பியதில்லை. 
‘ஒரு எழுத்தாளனுக்கான அங்கீகாரம் மக்களிடம் இருந்தே வரவேண்டும். பாரதிக்கும் கார்க்கிக்கும் யார் பரிசு கொடுத்தார்கள்’

எனக் கூறி போட்டிகளையும் பரிசுகளையும் நிராகிரிக்கிறார் அவர். 

  • இருந்தபோதும் கொழும்பு பல்கலைக் கழகம் 1998 லும், 
  • போராதனைப் பல்கலைக்கழகம் 2009லும் 

அவரது படைப்புப் பணிகளைச் சிலாகித்து இலக்கிய விருதுகள் வழங்கிக் கௌரவிக்கத் தவறவில்லை.

அவர்தான் நீர்வை பொன்னையன். சிறந்த தொகுப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் பரிசு பெறாத சிறுகதைத் தொகுதி ‘மேடும் பள்ளமும்’ ஆகும்.
எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும். இல்லாமை இல்லாது ஒழிய வேண்டும் என்ற மனிதநேயக் கொள்கையை தனது கல்விப் பிராயத்திலேயே வரித்துக் கொண்டவர் அவர்.

தனது ஊரில் ஆரம்பக் கல்வியைப் பெற்றாலும் பட்டப் படிப்பை மேற்கொண்டது வங்காளத்தில். போராட்ட உணர்வும் முற்போக்குக் கொள்கைகளும் இவரது உள்ளத்தில் பதிவதற்கு அங்கிருந்த சூழலும் முக்கிய காரணங்கள் ஆகின்றன. 

இளமைப் பிராயத்திலேயே முற்போக்கு எண்ணங்கள் தனதுள்ளத்தில் ஆழப் பதிந்த அவர் தான் கொண்ட இலட்சியத்தை மக்களிடையே பரப்ப வேண்டும் என்பதற்காகவே எழுதுகிறார். எழுத்து இவரைப் பொறுத்த வரையில் ஒரு சமூகப் பணி. தன்னை ஒரு சமூகப் போராளியாகவே மாற்றிக் கொண்டார். சாதி, மதம், பிரதேசம், பொருளாதாரம் ஆகியவற்றின் பெயரால் ஒடுக்கப்படும் சகல மக்களின் விடுதலைக்காகத் தொடர்ந்து தன் எழுத்தாணியை கூர்மையாகப் பயன்படுத்துகிறார்.
மண்ணின் மீது பற்றுக் கொண்டவர் இவர்;. இதனால் தனது பிறப்பிடமான நீர்வேலியை தனது பெயரோடு நீர்வை என இணைத்து கொண்டார். ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் தான் நிற்கிறேன் என்பது தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக பொன்னையா என்ற தனது பெயரையே பொன்னையன் எனச் சுருக்கிக் கொண்டவர். இருந்தபோதும் நீர்வை பொன்னையனான அவர் நண்பர்கள் பலருக்கும் நீர்வை மட்டுமே. 
நீர்வை பிரதானமாக ஒரு சிறுகதைப் படைப்பாளி. இலக்கியம் சார்ந்த கட்டுரைகளை அவர் எழுதியபோதும், அவற்றில் சில ‘நாம் ஏன் எழுதுகிறோம’; என்ற கட்டுரைத் தொகுப்பாக வெளிவந்தபோதும், அவர் தன்னை சிறுகதையாளனாகவே முனைப்புப் படுத்தியுள்ளார். 
ஈழத்து முற்போக்கு சிறுகதை எழுத்தாளர்களின் மூத்த தலைமுறையைச் சார்ந்த இவரது ஆரம்பகாலப் படைப்புகளே மிகுந்த கலைத்துவம் மிக்கவையாக அமைந்தது ஆச்சரியமிக்கது. இவரொத்த பலரும் சூழலுக்கு ஒவ்வாத நிகழ்வுகள் கொண்ட, கற்பனை வரட்சியான, பிரச்சார வாசனையால் வெறுக்க வைக்கும், கலைவரட்சியுடனான போர்முலா ரீதியான கதைகளாகக் கட்டிக்கொண்டிருந்த நேரத்திலேயே மண்மணம் மிக்க கலைத்துவப் படைப்பகளைத் தந்துள்ளார். 
எமது நாடு ஒரு விவசாய நாடு. ஆனால் பெரும்பாலான விவசாயிகள் சொந்தக் காணியற்றவர்கள். குத்தகைக் காணிகளில் பயிர் செய்பவர்கள். வயல்கள் மாத்திரமின்றித் தோட்டப் பயிர்களும் குடாநாடெங்கும் செழித்தருந்தன. ஆனால் விவசாயிகள் வறுமையில் வாடினர். இவர்களைப் பற்றி தமது படைப்புகளில் பேசாது கற்பனையான தொழிலாள வர்க்கப் பிரச்சனைகள் பற்றி பெரும்பாலான முற்போக்கு எழுத்தாளர்கள் பற்றிப் பேசிக் கொண்டிருந்தபோது நீர்வை மட்டும் விவசாயிகள் பிரச்சனையை தனது படைப்பகளில் முதன்மைப் படுத்தினார். குடாநாட்டு விவசாயிகளைப் பற்றி மட்டுமின்றி வன்னிப் பிரதேச விவசாயிகள் பற்றியும் ஆரம்ப காலம் முதல் எழுதத் தவறவில்லை. 
முக்கியமாக மேடும் பள்ளமும் என்ற இவரது முதற் தொகுப்பில் உள்ள சிறுகதைகளில் கிராமிய மணம் ரம்யமானது. அத்துடன் பல்வேறுவிதமான பாணியில் படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கலைநேர்த்தியில் அவை மிகச் சேர்ந்தவை. 
வங்காளத்தில் படிக்கும்போது மாணவர் எழுச்சிப் போராட்டங்களில் பங்கு பற்றியதால் அடக்குமுறை எதிர்ப்பு, மக்கள் எழுச்சி, போராட்டம், போன்றவற்றில் பரந்த அனுபவம் கிட்டியது, அத்துடன் அங்கு கற்கும் காலத்தில் ஆங்கிலம் முதல் இந்தியாவின் பல்வேறு மொழி இலக்கியங்களைப் படிக்கும் வாய்ப்புக் கிட்டியதாலும் இவருக்கு நவீன இலக்கியங்களுடனான பரிச்சியம் கிட்டியது. இவற்றின் ஊடாக  படைப்புகளில் கருத்தாளம் இருக்கும் அதே நேரம் உருவ நேர்த்தியும் கலையழகும் சேர்ந்திருக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிந்திருக்கிறார். இதனால்தான் நீர்வையால் தனது சமகால எழுத்தாளர்கள் பலருக்கும் இல்லாதவாறு சிறுகதைப் படைப்பின் சூட்சுமம் பிடிபட்டிருக்கிறது. யதார்த்தம், நனவோடை, குறுங்கதை போன்ற மாறுபட்ட வடிவங்களை பரீட்சித்து அவற்றில் வெற்றியும் பெற்றிருக்கிறார்.
கல்வி கற்று இலங்கை திரும்பிய நீர்வை தீவிர அரசியல் ஈடுபாடு கொண்டு கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். முழு நேர அரசியல் பணியாளராக இருந்ததால் தொழிலாளர்களுடனும், உழைக்கும் மக்களினதும் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அவர்களது பிரச்சனைiயை அனுபவபூர்வமாக அறிந்தார். அவர்களது பிரச்சனைகளுக்காக அவர்களுடன் இணைந்து போராட்டங்களில் பங்கெடுத்தார். 
இதனால் இவர் எழுதிய கட்சி அரசியல் சிறுகதைகளிலும் செயற்கைத்தன்மை இருக்கவில்லை. பிரச்சார வாடை அவற்றில் இருந்தபோதும் பட்டறிவும் அனுவமும் இணைந்ததால் அவற்றில் உண்மைத்தன்மை வெளிப்பட்டது. 
இவர் அதிகம் எழுதுபவரல்ல. இதுவரை சுமார் 70-80 சிறுகதைகள் மட்டுமே எழுதியுள்ளார்.
  • மேடும் பள்ளமும், 
  • உதயம், 
  • பாதை, 
  • ஜன்மம், 
  • வேட்கை, 
  • நீர்வை பொன்னையன் சிறுகதைகள், 
  • நிமிர்வு 

ஆகியன இவரது ஏழு சிறுகதைத் தொகுப்புகளாகும். 

இவரது படைப்புகளின் சிறப்பு அம்சங்கள் என்ன என யோசிக்கும்போது பல விடயங்கள் முக்கியமாகப் படுகின்றன. நீர்வையின் படைப்புகள் கருத்தாளம் நிறைந்தவை. எப்பொழுதும் அவை சமூகத்திற்கு வழிகாட்டக் கூடிய அவசியமான கருத்துக்களை முன்வைப்பவையாக இருக்கும். தேர்ந்தெடுத்த சொற்கள், சுருக்கமான வசன அமைப்பு, தெளிவான நடை, உரையாடல்கள் ஊடாக கதை சொல்லும் பாணி, சிறப்பான முடிவு, செறிவான குறும் தலைப்புகள் எனப் பலவாகும்.
பல்வேறு வித்தியாசமான வடிவங்களில் கதை சொல்லும் கலையை நீர்வை பரீட்சித்திருக்கிறார். இவற்றில் பல அவரது படைப்புலகின் ஆரம்ப கட்டங்களில் இடம் பெற்றன. தனக்கென ஒரு பாணி உருவாகியதும் அதன் வழியிலேயே நீண்ட காலம் பயணித்தார். 
ஆயினும் அண்மைக் காலங்களில் அதன் வடிவம் சார்ந்த மற்றொரு புது முயற்சியில் இறங்கியுள்ளதை அவதானிக்க முடிகிறது. கதை முழுவதையும் தனித்தனி வாக்கியங்களாக பந்தி பிரிக்காமல் எழுதி வருகிறார். சிறிய வசனங்கள். கவிதையாக இல்லாமல் அதே நேரம் புதுக்கவிதை போன்ற தோற்றத்துடன் படைக்கப்படுகின்றன. அண்மையில் வெளிவந்த ‘நிமிர்வு’ தொகுதியில் இத்தகைய படைப்புகளைக் காண்கிறோம்.
ஏற்கனவே குறிப்பட்ட ‘நாம் ஏன் எழுதுகிறோம்’ என்பது இவரது கட்டுரைத் தொகுதியாகும். 
‘உலகத்து நாட்டார் கதை’ என்பது இவரால் மீள மொழியப்பட்ட நாட்டார் கதைத் தொகுப்பு. உலகின் பல்வேறு பகுதிகளிலும் வழக்கிலுள்ள நாட்டார் கதைகளின் தொகுப்பு இது பல பதிப்புகள் கண்ட ஒரு சிறந்த நூலாகும்.
விபவி கலாசார மையத்தின் தமிழ் மொழி இணைப்பாளராக நீண்ட காலம் கடமையாற்றியதுடன், ‘இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்ற’த்தின் முக்கிய அங்கத்தவராகவும் செயற்படுகிறார். ஆயினும் தாய்ச் சங்கமான ‘முற்போக்கு எழுத்தாளர் சங்க’த்தின் ஆரம்ப காலம் முதல் அதன் செயற்பாடுகளில் முக்கிய பங்கெடுத்தவர். அதன் வளரச்சிக்கு உதவியவர். அதன் மகாநாடுகள் சிறப்பாக நடைபெற முக்கிய பணியாற்றியவர். 
அவ்வாறு இருக்க எதற்காக இப்பொழுது இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் எனப் பிரிந்து நின்று செயற்படுகிறீர்கள் எனக் கேட்டபொழுது, 
“முற்போக்கு எழுத்தாளர் சங்கம் செயலிழந்து போய் பல வருடங்களாகிறது. அதற்கு புத்துயிர் கொடுக்க பல முயற்சிகள் செய்தும் முடியாமல் போயிற்று. அதன் நீண்ட காலச் செயலாளரான பிரேம்ஜி கனடாவிலிருந்து வந்து முயன்றும் முடியாமல் போயிற்று. எனவே முற்போக்கு கருத்துகளை உடைய படைப்பாளிகளை ஒன்று சேர்த்து பணியாற்ற வேண்டியது காலத்தின் தேவையாக இருந்தது” 
என்கிறார்.
“சிறுகதை, கவிதை நூல் வெளியீடுகளுக்கு அப்பால், மூத்த முற்போக்கு சிறுகதையாளர்களையும் கவிஞர்களையும் இன்றைய சமுதாயத்தினருக்கு அறிமுகப்படுத்தும் வண்ணம் தொகுப்பு நூல் வெளியீடுவது, தோழர் காரத்திகேசன், பேராசிரியர்.க.கைலாசபதி போன்றோரது நினைவுச் சொற்பொழிவுகள் நடாத்துவது, இலக்கியச் செல்நெறிகள், இலங்கையின் கல்வி முறை, சூழலியல், சேதுசமுத்திரத் திட்டம், புவிவெப்படைதல், உலகமயமாதல் போன்ற சமூதாய மேம்பாடு நோக்கிய விடயங்களில் கருத்தரங்குகளும் நூல்வெளியீடுகளும் என இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் முழு மூச்சுடன் செயலாற்றி வருகிறது.” 
என அதன் செயற்பாடுகளை விளக்கினார். 
இவர் பிறந்தது 1930 ம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதியாகும். யாருக்கும் தெரியாமல், எந்தவித ஆர்ப்பாட்டமுமின்றி அவரது 80 பிறந்த தினம் கடந்த மார்ச் மாதத்தில் கடந்துவிட்டது. மணிவிழா, பவளவிழா என எழுத்தளார்கள் பலரும் (நான் உட்பட) தம்மை வெளிச்சம் போட்டுக் காட்டும் எழுத்து உலகில் இவர் வித்தியாசமானவர். தன்னை முதன்மைப்படுத்தாதவர். கொள்கைகளுக்காக வாழ்பவர். 
வயதில் முதிர்ந்தாலும் சோர்வின் சாயல் படியாது, இளமைத் துடிப்புடன் இன்றும் தொடர்ந்து செயற்படும் நீர்வை பொன்னையன் பல்லாண்டு காலம் வாழ்ந்து எழுத்துப் பணியில் ஈடுபட வேண்டி வாழ்த்துகிறேன்.

வீரகேசரி ஞாயிறு இதழில் இவ்வருட ஏப்ரல் மாதத்தில் வெளியான எனது கட்டுரையின் மீள்பிரசுரம் 
எம்கே.முருகானந்தன்
0.0.0.0.0.0

Read Full Post »

>

நான் பிறந்து வளர்ந்த ஊர் வியாபாரிமூலை ஆகும். அந்தக் கிராமம் பற்றி சில ஆண்டுகளுக்கு முன் மரத்தடி.கொம் இல் விஜயாலயன் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பல தகவல்கள் அடங்கிய அக்கட்டுரையை நன்றியறிதலுடன் இங்கு மீளப் பதிவிடுகிறேன்.

வியாபாரிமூலை (சில தசாப்தங்களுக்கு முன்) விஜயாலயன்

இலங்கைத்தீவின் வடமுனையாக விளங்கும் பருத்தித்துறையிலிருந்து மேற்காக காங்கேசன்துறை நோக்கி நீளும் கடற்கரையோர வீதியில் ஒரு கிலோமீற்றர் தூரம் சென்று மாலிசந்தி நோக்கி கிளைவிடும் தார்வீதியில் திரும்ப வருவது வியாபாரிமூலையெனும் அமைதியான கிராமம்.

கடற்கரையிலிருந்து வீரபத்திரர் கோவில் வளைவு வரை வீதியின் இருமருங்கும் கிளைவிடும் சிறு சிறு ஒழுங்கைகளும் வீதிகளும், அங்கு வசிக்கும் அனைவருக்குமிடையிலான உறவுமுறைகளும், வியாபாரிமூலையெனும் கிராமத்தினை ஒருங்கிணைக்கும். ஆலய மணியோசைகள் துயிலெழுப்பும், உப்புக்காற்று இதமாய் வீசும்.

கிராமத்தின் ஒவ்வொரு குறிச்சியும் (சிறு பகுதிகளும்) தனித்துவமான பெயர்களைக்கொண்டது. வெள்ளையற்றணி, சிப்பிமணலடி, பெயர்ந்த ஆலடி, விராவளை, சின்னக்கிளானை, பெரியகிளானை, வாரியார்வளவு, கம்பளியப்பான், பலாப்பத்தை என்று பல்வேறுபட்ட காரணப்பெயர்களுடன் நீளும் குறிச்சிகளின் பட்டியல். அநேகமாக குடும்பப்பெயர்களுடன் குறிச்சிகளின் பெயர்களும் சேர்ந்தே பலரையும் இனங்காண உதவும்.

சில பத்தாண்டுகளிற்கு முன்னர் ஒரே பெயரை பலருக்கும் வைத்ததால் ஏற்பட்ட குழப்பங்கள் இவ்வாறே தீர்க்கப்பட்டன. இதேபோல ஒருவருக்கு இரண்டு (அதற்குமேலும் கூட) பெயர்களுமிருக்கும். தந்தைவழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் தாய்வழி உறவுகளை திருப்திப்படுத்த ஒரு பெயரும் என்று பெயர்களை வைத்து எல்லாரையும் திருப்திப்படுத்தினார்கள். அதனால் ஏற்பட்ட பல்வேறு சிக்கல்களிற்காக சத்தியக்கடதாசிகளிற்காக பலரும் அலைந்தது வேறு கதை.

குறிச்சிப்பெயர்களை விட அடைமொழிகளும், பட்டப்பெயர்களும் கூட பலரை குறிப்பிட உதவின. ஜப்பான் (குறுகிய காலத்தில் வியாபாரத்தில் முன்னேறியவர்), சக்கடத்தார், மனேச்சர், சவுடால், ஹொல்டோன் (hold-on), முயல், அதாவது (எப்பொழுதும் ‘அதாவது’ என்று கதைக்கத்தொடங்கும்) போன்ற அடைமொழிகளும் கருமுனி, குறுமுனி, சருகுமுனி போன்ற பட்டப்பெயர்களும் பிரபலமாக இருந்தன.

பதினைந்து அடி உயரமான கோட்டைச்சுவர் போன்ற கற்சுவர்களுடனும் மிகப்பெரிய வாயிற்கதவுகளுடனும் பளிங்குக்கல் பதித்த தரைகளுடனும் எஞ்சியிருக்கும் சில சுண்ணாம்புக் கட்டடங்கள் கூட்டுக்குடும்பங்களாக வாழ்ந்த கிராமத்தின் பணக்கார குடும்பங்களின் கதைகள் சொல்லும். இலங்கைத்தீவின் வடமுனையிலிருந்து தென்முனைவரை வியாபாரத்தில் முத்திரை பதித்த அந்தக் குடும்பங்கள் தேடிய செல்வத்தின் அளவு அந்த வீடுகளில் காணப்படும் தரையுடன் சேர்த்துக்கட்டப்பட்ட பெரிய இரும்புப்பெட்டகங்களில் தெரியும். இப்படியாக வியாபரிகளின் கையோங்கியிருந்த கிராமத்திற்கு வியாபரிமூலையென்ற பெயர் வைத்ததில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.

இன்றைக்கு 50 ஆண்டுகளிற்கு முன்னர், பெற்றோர்கள் தங்கள் ஆண்பிள்ளைகளை சிறுவயதில் வியாபாரம் செய்யும் உறவினர்களுடன் அனுப்பிவிடுவார்கள். அவர்கள் வியாபார நுணுக்கங்கள் பழகும்வரை நீண்டகாலம் ஊதியமில்லாது வேலைசெய்வார்கள். பின்னர் அந்த முதலாளி (உறவினர்) மற்றும் பெற்றோரின் உதவியுடன் சொந்தமாக வியாபாரம் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இப்படி அநுபவத்துடன் வியாபாரம் தொடங்குவதால் அநேகம் பேர் தங்கள் தொழிலில் நட்டமடைவதில்லை. இன்றுகூட சில குடும்பங்களில் இந்தவழக்கம் தொடர்கிறது.

வியாபாரம் செய்பவர்கள் தவிர்ந்த ஏனையோர் விவசாயம் செய்பவர்களாக இருந்தார்கள். ஊரின் வடக்காக கடற்கரையோரமாக இருந்த வளங்குறைந்த தோட்டநிலங்களில் உழைப்பை உரமாகவும் வியர்வையை நீராகவும் பாய்ச்சி குரக்கன், தினை, மரவள்ளி, காய்கறிகள் என்று பயிர்செய்தார்கள். துலா ஓடி நீரிறைத்த அந்த நாட்களின் எச்சங்களாக ஆடுகால்களிற்கு நடப்பட்ட சில பூவரச மரங்கள் இன்றும் அந்த தோட்டக்கிணறுகளிற்கருகில் தனித்து நிற்கின்றன. விஞ்ஞானத்தைப் பாடமாகப் படிக்காத அந்தக்காலத்திலும் மழைநீரை சேமிக்கக் குளங்கள் இருந்தன. கடலிற்கருகில் இருப்பதால் கடல்நீர் உட்புகுவதைத்தடுக்க (நிலத்தடி நன்னீருடன் கலப்பதைத் தடுக்க) ஒற்றுமையாக சரியான நேர இடைவெளியில் நீரிறைத்தார்கள். மழைபெய்த அளவிற்கேற்ப பயிர்நட்டார்கள்.

வீதிகளில் ஆவுரோஞ்சிக்கற்களும் (ஆடு, மாடுகள் தங்கள் உடம்புகளை உரசிக்கொள்ள), சுமைதாங்கிகற்களும் (தலையில் சுமையுடன் செல்பவர்கள் அவற்றை இறக்கிவைத்து இளைப்பாற), குடிநீர்ப்பானைகளும் இருந்தன.

ஆன்மிகம் வளர்க்க ஊரின் நான்கு திசைகளிலும் கோயில்களும் அவற்றுடன் ஒன்றிவாழும் பண்புமிருந்தன. கோயில்களில் சைவக்குருக்கள் பூசைகள் செய்தனர். வேற்றூர்களில் வியாபாரம் செய்பவர்கள் கோவில் திருவிழாக்காலங்களில் ஊர்திரும்புவர். இயற்கை கற்பூரம் விளைந்த சித்தி விநாயகர் ஆலயமும், விரபத்திரர் ஆலயமும், சித்திராபௌர்ணமியில் இராப்பொங்கல் நடக்கும் நாச்சிமார் கோவிலும், அருளம்பல சுவாமிகளின் (மகாகவி பாரதியாரின் குரு) சமாதியும், காலனித்துவ ஆட்சியில் கல்விக்காக மதம்மாறுவதைத் தடுக்க ஆரம்பித்த சைவப்பிரகாச வித்தியாசாலையும் ஊர்மக்களின் ஆன்மீக ஈடுபாட்டிற்கு சான்றுகளாயுள்ளன.

ஆயுர்வேத மருத்துவத்தில் சிறந்த பாம்புப் பரியாரியாரும் (விசக்கடிக்கு சிறந்த மருத்துவம் செய்ததால் ஏற்பட்ட பெயர்), எலும்பு முறிவுற்றவர்களை ஒட்டகப்புலத்திற்கு ஏற்றிச்செல்ல மாட்டுவண்டிக்காரரும் இருந்தார்கள்.

இப்படி சுயநிறைவுடனும் வளமாகவும் மக்கள் வாழ்ந்த கிராமம் வியாபாரிமூலை. இன்றும்கூட வியாபாரிமூலையான் என்று பெருமையாக என்று எங்களூரார் தங்களைச் சொல்லிக்கொள்வார்கள்.

http://www.maraththadi.com/article.asp?id=317

Read Full Post »