Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கண்களின் பாதுகாப்பு’ Category

எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டொக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார்.

அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் வைத்திருக்கிறார். சீனியின் அளவைப் பார்த்து திருப்தியடைந்துவிடுவார்.

அவரது HbA1C அளவானது 8.5 ல் இருந்தது. HbA1C என்பது ஒருவரது சீனியின் அளவு சென்ற மூன்று மாதங்களாக எந்ந நிலையில் இருந்தது என்பதைக் கணிக்கும் முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். இது 6.5 என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.

நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநீரகம் பாதிப்புறவதை பலரும் அறிவார்கள். அதேபோல தங்கள் பார்வைத் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை.

நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம்.

 

நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு

கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஒளியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve)  ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன.

other_retina_ill

உடவிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் பொருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவீர்கள்.அதுபோலவே விழித்திரைக் குருதிக் குழாய்களையும் பாதிக்கும்.

நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

அமெரிக்காவில் நீரிழிவு உள்ளவர்களில் 40 முதல் 45 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

எங்கள் நாட்டிலும் இதற்குக் குறையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தபோதும் இங்குள்ள பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் கண் மருத்துவரை அணுகுவதில் அக்கறை காட்டாது இருப்பதால் தாக்கத்தின் வீச்சு வெளிப்படையாகத் தெரியாது இருக்கிறது.

எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்

பாதிப்புற்ற விழித்திரை இரத்தக் குழாய்களிருந்து இரத்தம் கசியலாம்.. இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவற்றதாக்கும்.

இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியுலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கச் செய்யும்.

இதை macula edema    என்பார்கள். கூரிய பார்வைக்கு அவசியமான மக்கியுலாவில் இவ்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும்.

நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைபடலாம். அடைபட்டவற்றை ஈடுசெய்வதற்காக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy  என்பார்கள்.

அறிகுறிகள்

ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சற்று மங்கலாகலாகும்.

இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தானகவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும்.

எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம்.

இப்படி இருப்பது

 

நீரிழிவு விழித்திரை பாதிப்பு இருந்தால் இவ்வாறுதான் தெரியும்

 

சிகிச்சை

சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும்.

நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உப்புத் திரவத்தை மாற்றீடு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள்

நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள்

கற்றரக்ட்

கற்றரக்ட் என்பது கண்வில்லை வெண்மையடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் எவருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும்

குளுக்கோமா

குள்ககோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure)   அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்புறுவதாகும். இதுவும் யாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்படத்தக்கது

இறுதியாக

இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை; மேலும் மோசமடைவதைத் தடு.ப்பதாகவே இருக்கும். எனவேதான் காலக்கிரமத்தில் கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

“எனக்கு கண் நல்லாத் தெரியுது” என்று கூறியவருக்கும் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரம்ப நிலை என்பதால் பாரிய சிகிச்சைகள் தேவைப்படவில்லை.

நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் குருதியின் சீனி அளவை கணிப்பதுடன் திருப்தியடைந்து விடக் கூடாது. கொஞ்சம்தானே அதிகமாக இருக்கு என அசட்டையாக இருக்கவும் கூடாது. ஏனெனில் நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு என்பது வெறும் குருதிச் சீனியின் அளவு அல்ல. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவானது சிறுநீரகம், நரம்புகள், இரத்தக் குழாய்கள், இருதயம், கண் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகனையும் சதாகாலமும் பாதித்துக் கொண்டே இருக்கிறது.

தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை நேரகாலத்துடன் கண்டறிந்தால் அவை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையில் நீரிழிவைக கண்டுபிடிப்பதும் அதனை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0

 

Read Full Post »

கணனித் திரையோடு கம் (Gum) போல ஒட்டிக் கொண்டால்

கணனித் திரையோடு கண்மிக்காது
கம் என ஒட்டிக் கொண்டால்
கண் தசைகள் சோர்வுறுமே
பின் தொடர்ந்து தளர்வுற்று
தம் கடன் மறந்து தூங்கிடாது தடுப்பதற்கு
தொலைவுலிலுள்ள பொருளொன்றில்
பதித்திடுமே உம் பார்வையை

சிமிக்கிடும் கண்களை
இரு பத்துத் தரமேனும்
பாலைவனம் எனக் வரண்ட கண்களும்
நீர் நிறைந்த வாவியென
குளிர்ச்சிடைந்திடுமே
இனியென்ன தடை
இருந்திடுங்கள் கணனி முன்னே
இன்னமும் இரு பத்து நிமிடங்களேனும்
தொல்லையேதும் இல்லாமல்

After every 20 minutes of looking into the computer screen, turn your head and try to look at any object placed at least 20 feet away. This changes the focal length of your eyes, a must-do for the tired eyes.

Try and blink your eyes for 20 times in succession, to moisten them..

Time permitting of course, one should walk 20 paces after every 20 minutes of sitting in one particular posture. Helps blood circulation for the entire body.

They say that your eyes r mirror of your soul, so do take care of them, they are priceless… …

Read Full Post »

>

‘இவள் எந்த நேரமும் ரீவீக்கு முன்னாலைதான். கண்கெடப் போகுது எண்டு சொன்னாலும் கேக்கிறாளில்லை.’

‘மம்மல் இருட்டுக்கை கிடந்து கொண்டு படிக்கிறான். லைட்டையும் போடுறானில்லை. கண் பூந்தப் போகுது.’

இவை நாம் அடிக்கடி கேட்கும் வார்த்தைகள்தான். இவற்றில் எவ்வளவு தூரம் உண்மையுண்டு?

கண்கள் எமது புலன்களில் மிக முக்கியமான ஒன்றாகும். கட்புலன் எமக்கு பிறக்கும் போதே இயல்பாகக் கிடைத்து விடுகிறது. நாளாந்தம் அதனுடனேயே வாழ்வதால் அது இல்லாத வாழ்வு பற்றி எவரும் யோசிப்பதே இல்லை. ஆயினும் ஏற்கனவே இருந்த பார்வையை இழந்த பின்னான வாழ்வின் துயரம் அளவிட முடியாததாகும்.

வயதாகும் போது பார்வையின் கூர்மை குறைவதற்கும், கண்நோய்கள் ஏற்படுவதற்குமான சாத்தியம் அதிகமாகும்.

ஆயினும் பார்வை இழப்பிற்கு வயது மட்டும் காரணமல்ல. எமது கவலையீனமும், அக்கறையின்மையுமே முக்கிய காரணங்களாகின்றன. கண் வைத்தியரிடம் ஒழுங்கான கால இடைவெளியில் காண்பிப்பதன் மூலம் சுமார் 40 முதல் 50 சதவிகிதமான பார்வை இழப்புக்களை தடுக்க முடியும்.

எந்தவித வெளிப்படையான அறிகுறிகள் இல்லாவிடிலும் கூட 40 வயதிற்கு பின் கண் மருத்துவரிடம் காட்டி பரிசோதித்துக் கொள்வது அவசியமாகும். தமது குடும்பத்தில் அல்லது பரம்பரையில் கண் நோயுள்ளவர்களுக்கு இது மேலும் முக்கியமானதாகும்.

உங்கள் பார்வையில் குறைபாடு புலப்படும் மட்டும் கண் மருத்துவரை காண்பதைத் தள்ளிப் போட வேண்டாம். ஏனெனில் ஒரு கண்ணில் கோளாறு இருந்தாலும் மற்றைய கண் அதனை ஈடு செய்துவிடுவதால் நோயாளி அதனை உடனடியாக உணர மாட்டார். எனவேதான் கண்பார்வைக் கோளாறுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடிக்க ஒழுங்கான மருத்துவப் பரிசோதனை அவசியமாகும்.முதலில் மங்கலான வெளிச்சத்தில் வாசிப்பதை எடுத்துக் கொள்வோம். எம் பலரது நம்பிக்கைகளுக்கு முற்றிலும் எதிர்மாறாக குறைந்த வெளிச்சத்தில் வாசிப்பதால் பார்வைக்கு பாரிய பாதிப்பு எதுவும் ஏற்படுவதில்லை. ஆயினும் அவ்வாறு வாசிப்பதால் கண்கள் விரைவில் களைப்படைந்து விடும் என்பது உண்மையே.வாசிக்கும் போது படிக்கும் ஒளிவிளக்கின் வெளிச்சம் தாளின் மேல் நேரடியாக விழுவதே சிறந்ததாகும். முதுகிற்குப் பின்னிருந்து உங்கள் தோள்களுக்கு மேலாக வெளிச்சம் வாசிக்கும் தாளில் விழுவது சிறந்ததல்ல. அதேபோல ஒளிவிளக்கு உங்களுக்கு முன் இருப்பதும் நல்லதல்ல. சுற்றிவர ஒளி பரவ முடியா மறைப்பினால் (Shade) மூடப்பட்டு, வெளிச்சம் நேரடியாக உங்கள் புத்தகத்தின் மீது மட்டும் விழ வைக்கும் மேசை விளக்கே (Table Lamp) நல்லதெனலாம்.

பார்வைக்கு குறைபாட்டிற்காக கண்ணாடி அணிபவர்களில் பலர் அதனைத் தொடர்ந்து அணிந்தால் மேலும் விரைவாகப் பார்வை பழுதாகிவிடும் என எண்ணுகிறார்கள். இடையிடையே அதனைக் கழற்றி கண்ணுக்கு ஓய்வு அளிப்பது நல்லது என நினைக்கிறார்கள். இதுவும் ஒரு தவறான கருத்தே.

வாசிப்பதற்காக அல்லது தூரப் பார்வைக்காக உங்களுக்கு கண்ணாடி தரப்பட்டிருந்தால் அதனை அணியாதிருப்பது நல்லதல்ல. கண்ணாடி இல்லாது கண்ணைச் சுருக்கி, சிரமப்படுத்தி வாசிப்பதும், தூர உள்ள பொருட்களைப் பார்க்க முயல்வதும் (உதா- ரீவீ பார்ப்பது, பஸ் போர்ட் பார்ப்பது) உங்கள் கண்களுக்கு வேலைப்பளுவை அதிகரித்து சோர்வடையச் செய்யும்.

தொடர்ந்து கண்ணாடி அணிந்திருப்பது உங்கள் பார்வைக் குறைபாட்டை அதிகரிக்கச் செய்யாது. அதேபோல வேறு கண் நோய்களையும் கொண்டு வராது.கரட் சாப்பிடுவது கண்ணுக்கு நல்லது என்பது எல்லோரதும் நம்பிக்கையாகும். இது ஓரளவு மட்டுமே உண்மையாகும்.

கரட்டில் விட்டமின் A இருக்கிறது. இது விட்டமின் A குறைபாட்டினால் வரக் கூடிய கண் நோயைத் தடுக்கும் என்பது உண்மையே. கண்ணுக்கு வேறு பல விற்றமின்களும் தேவைப்படுகின்றன. கரும் பச்சை நிறமுடைய கீரை வகைகள், மற்றும் பழவகைகளில் விட்டமின் A யுடன்; ஒட்சினெதிரிகள் (Antioxidents) என்று சொல்லப்படுகின்ற விட்டமின் C, E யும் இருப்பதால் மேலும் நல்லதெனலாம். இவை கட்டரக்ட், வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் பாதிப்பு (cataract and age-related macular degeneration) ஆகியவற்றையும் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

ஆனால் பெரும்பாலும் கண்ணாடி தேவைப்படும் நோய்களான தூரப்பார்வை, கிட்டப்பார்வை போன்றவை வராமல் தடுக்கவோ அல்லது குணமாக்கவோ எந்த விட்டமினும் உதவாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

நீண்ட நேரம் கணினி முன் இருப்பது கண்களுக்கு நல்லதல்ல என்பது முழுமையாக உண்மையல்ல.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருப்பது கண்களைச் சோர்வடையச் செய்யும். சில பாதுகாப்புகளை எடுத்துக் கொண்டால் நீண்ட நேரம் கொப்பியூட்டர் பாவிப்பதால் பாதிப்பு எதுவும் ஏற்படாது. உதாரணமாக மேசையில் அல்லது அறையில் இருக்கும் ஒளிவிளக்கின் ஒளி கணனித் திரையில் பட்டுத் தெறித்து கண்ணில் படாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அத்துடன் நீண்ட நேரம் கணினி முன் இருக்க நேர்கையில், மணித்தியாலத்திற்கு ஒரு தடவையாவது திரையை உற்றுப் பார்பதைத் தவிர்த்து, பார்வையை சற்று நேரம் தூரப் பொருளுக்கு நகர்த்துவதன் மூலம் கண்ணுக்கான வேலைப்பளுவைத் தவிர்க்க முடியும்.

கணனித் திரையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கையில் கண் இமைப்பது எம்மை அறியாது குறைகிறது. இதனால் கண்கள் வரட்சியடைந்து உறுத்தல் ஏற்படக் கூடும். இதைத் தடுப்பதற்கு நாமாக நினைவு கூர்ந்து அடிக்கடி கண்களை இமைக்க வேண்டும். இதனால் கண்கள் ஈரலிப்பாக இருப்பதை உறுதிப்படுத்த முடியும்.உடலுக்கு பயிற்சி கொடுப்பது போல கண்களுக்கும் பயிற்சி கொடுப்பதன் மூலம் கண்பார்வை குறைவதைத் தடுக்க முடியும் எனப் பலர் எண்ணுகிறார்கள். யோகா போன்றவற்றில் கண் பயிற்சியும் அடங்குகிறது. ஆனால் பயிற்சிகள் மூலம் கண் பார்வை குறைவதைத் தடுக்க முடியும் என்பதற்கு எந்தவிதமான விஞ்ஞான பூர்வ ஆதாரங்களும் கிடையாது.

இதன் அர்த்தம் பயிற்சிகளால் உடலுக்கு நன்மை இல்லை என்பதல்ல. யோகா முதலான உடற் பயிற்சிகள் அனைத்துமே உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன, குருதிச் சுற்றோட்டத்தை மேம்படுத்துகின்றன, தசைகளைப் பலப்படுத்துகின்றன, மூட்டு நோய்களைத் தடுக்கின்றன என்பது உண்மையே.

ஆனால் பெரும்பாலான கண் நோய்கள் கண்ணின் வடிவமைப்பு, அதைச் சுற்றியுள்ள உறுப்புகளின் நலத்திலேயே தங்கியிருக்கின்றன. எனவேதான் கண் நோய்களைத் தடுக்கவோ குணமாக்கவோ பயிற்சிகளை மட்டும் நம்பியிருப்பதில் பிரயோசனமில்லை.ஆனால் நீங்கள் புகைப்பவராயின் அதனை நிறுத்துவதன் மூலம் கண்களுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் பலவற்றையும் தடுக்க முடியும். முக்கியமாக வயதாவதால் ஏற்படும் மக்கியுலர் சிதைவு நோயைத் தடுக்க முடியும்.சன் கிளாசஸ் அணிவதும், தொப்பி அணிவதும் உதவும். பழவகைகள், மரக்கறிகள் ஆகியவற்றை அதிகரிப்பதும், கொழுப்பு உணவுகளை முக்கியமாக ரான்ஸ் கொழுப்பு அமிலங்கள் சேர்ந்த உணவுகளைத் தவிர்ப்பதும் கண்களைக் காப்பாற்ற நிச்சயம் உதவும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

குடும்ப மருத்துவர்

Read Full Post »