Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கண் நோய்’ Category

பார்வைப் பாதிப்பு

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய்

அந்தக் காட்சி ஒரு புறத்தில் ஆச்சரியம் தருவதாக இருந்தாலும் மறுபுறத்தில் ஏற்கனவே தெரிந்த விடயத்தை உறைக்கும்படி மீள சொல்வது போலவும் அமைந்திருந்தது.

இரு கைபிடிக்களுக்கும் இடையில் அகப்பட்டு பிதுங்கி சளிந்து விழுமாப்போல அவரது உடல் நாற்காலியில் திணிக்கப்பட்டிருந்தது. இது ஆச்சரிமல்ல. இலங்கையிலும் தமிழகத்திலும் உள்ள இலக்கியவாதிகளும் கல்விமான்களுமான அவரது அபிமானிகளுக்கு,  அவரது அதீத எடை எப்பொழுதுமே கண்களை உறுத்திக்கொண்டே இருந்திருந்தது.

அருகேயுள்ள நாற்காலியில் இருந்தபடி இளம் பெண்ணொருத்தி ஒரு புத்தகத்தை வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்தாள். இவர் ஊன்றிக் கவனத்திக்குக் கொண்டிருந்தார். இதுவே ஆச்சரியம் அளிப்பதாக இருந்தது.

அவருக்கு ஏற்பட்டிருந்த பார்வைக் குறைபாடுபாடு பற்றி ஏற்கனவே அரசல் புரசலாகக் கேள்விப்பட்டிருந்தபோதும் இந்தளவு மோசமாக இருக்கும் என எண்ணியிருக்கவில்லை. படித்தும் எழுதியும் இன்னும் எவ்வளவோ தமிழ்ச் சமூகத்திற்குச் செய்ய வேண்டிய பெருங் கல்விமானின் நிலை கவலை அளித்தது.

வயதாகும்போது பார்வைக் குறைபாடுகள்

வயதாகும்போது பெரும்பாலானோருக்கு ஏற்படும் பார்வைக் குறைபாடுகளுக்கு பல்வேறு நோய்கள் காரணமாக உள்ளன. கற்றரக்ட் எனப்படும் கண்புரை நோய் சத்திரசிகிச்சை மூலம் பூரணமாகக் குணப்படுத்தக் கூடியதாகும்.

slide_3

கண்ணில் பிரஷர் எனப்படும் குளுக்கோமா, நீரிழிவினால் ஏற்படும் விழித்திரைப் பாதிப்பு மற்றும் இங்கு தொடர்ந்து பேச இருக்கும் வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோய் ஆகியன அவ்வாறல்ல. அவற்றை முற்று முழுதாகக் குணமாக்குவது சாத்திமல்ல.

glaucoma-vision-loss

ஆனாலும் ஆரம்ப கட்டத்தில் கண்டு பிடிப்பதாலும் தொடர்ச்சியான சிகிச்சைகளாலும் ஓரளவு குணமாக்குவதுடன், நோய் மேலும் மோசமடையமல் தடுக்கவும் முடியும்.

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு (age related macular degeneration- ARMD)

மக்கியூலா என்பது எமது கண்ணில் உள்ள ஓரு சின்னஞ்சிறு பகுதியாகும் இதன் விட்டம் 5 மில்லிமீற்றர் அளவு மட்டுமே. இருந்தபோதும் எமது பார்வைக்கு அவசியமான கலங்களான  rods and cones  மிகவும் செறிவாக நிறைந்துள்ள பகுதி இதுவாகும். நுணுக்கமான பார்வைக்கு மிகவும் அவசியமான பகுதி இதுவாகும். வாசிப்பது எழுதுவது முகங்களை இனங் காண்பது போன்ற நுண்ணிய விடயங்களுக்கு அவசியமானதாகும்.

amd

விழித்திரையின் மிகுதிப் பெரும் பகுதி பரந்த பார்வைக்கு உரியதாகும். குறித்த ஒரு பகுதியை என்றல்லாது முழுக் காட்சியையும் உள்வாங்குவதாகும். எனவே மக்கியூலா சிதைவு நோயின் போது பார்வை முழமையக இல்லாது போகாது.

 

மக்கியூலா பகுதியில் உள்ள கலங்கள் சேதமடைவதற்குக் காரணம் விழித்திரை மற்றும் மக்கியூலாவின் பின் பகுதியில் இருந்து அதற்கான போசனைப் பொருட்களை வழங்குவதுடன் அதிலிருந்து கழிப்புப் பொருட்களையும் அகற்றும் பகுதியான retinal pigment epithelium (RPE) சேதமடைவதே ஆகும்.

இதனால் வெளியோறாத கழிவுப் பொருளான drusen என்பது விழித்திரையில் படிந்து விழித்திரைக் கலங்களான rods and cones  ற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இதுவே பார்வை பாதிக்கப்படக் காரணமாகும்.

தடுப்பது எப்படி

இவ்வாறு பாதிப்புகள் ஏற்படாதிருக்க தடுப்பது எப்படி என்ற கேள்வி எழுகிறது. இதற்குத் தெளிவான காரணங்கள் இல்லை.

புகைத்தல் ஒரு முக்கிய  காரணமாகச் சொல்லப்படுகிறது. புகைத்தானது சுவாசப்பையை பாதிப்பதும் புற்றுநோய்களுக்கு காரணமாக இருப்பதும் ஏற்கனவே தெரிந்ததே. எனவே புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான சாத்தியம் அதிகம் எனச் சொல்லப்படுகிறது. எனவே பிரசர் இருக்கிறதா என்பதை கண்காணிப்பதும், பிரஷர் வந்துவிட்டால் அதைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதும் அவசியமாகும்.

பழவகைகள்;, விதைகள் உட்பட ஆரோக்கியமான உணவு முறையைக் கடைப்பிடிப்பது அவசியம்

குடும்பத்தில் ஒருவருக்கு இருந்தால் மற்றவர்களுக்கு ஏற்படக் கூடிய சாத்தியத்தை அதிகரிக்கும். இருந்தபோதும் இது பரம்பரை நோயாகக் கொள்ள முடியாது.

யாருக்கு வரும்

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயை 60 வயதிற்குக் கீழ்பட்டவர்களில் காண்பது அரிது. 65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 20 பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் வருவதாகச் சொல்லப்படுகிறது. வயது கூடக் கூட இது அதிகரிக்கும். 80 வயதிற்கு மேற்பட்டவர்களில் நான்கு பேரில் ஒருவருக்கு என்ற ரீதியில் பாதிப்பை ஏற்படுத்துவதாகத் தெரிகிறது.

75 வயதிற்குப் பின்னர் ஆண்களை விட பெண்களுக்கு அதிகமாகத் ஏற்படுகிறதாம்.

அறிகுறிகள்

மிக மெதுவாகவும் படிப்படியாகவும் ஏற்படுகிற நோய் என்பதால் நோயாளிகளின் கவனத்தை ஈர்ப்பதில்லை.

இருந்தபோதும் 60 வயதை அண்டியவர்கள் சில சாதாரண அறிகுறிகளைக் கவனத்தில் எடுப்பது அவசியம். வாசிப்பதற்கு வழமையை விட அதிக வெளிச்சம் தேவைப்படுவது, பத்திரிகை மற்றும் புத்தகங்களில் உள்ள எழுத்துக்கள் தெளிவற்றதாகத் தோன்றுவது, வண்ணங்கள் வழமையைவிட மங்கலாகத் தோன்றுவது, முகங்களை அடையாளங் காண்பது சிரமமாக இருப்பது போன்ற அறிகுறிகள் ஆரம்பத்தில் இருக்கலாம்.

அலட்சியம் பண்ணாதீர்கள்

மற்றொரு அறிகுறி முக்கியமானது. பொருட்களைப் பார்க்கும் போது அவற்றில் மாற்றங்கள் தெரியலாம். முக்கியமாக நேர் கோடுகள் வளைவாகவோ தாறுமாறாகவோ தோன்றலாம். உதாரணமாக நிலத்தில் பதித்துள்ள மாபிள் கல்லுகளுக்கு இடையே உள்ள கோடுகள் நெறிந்து முறிந்தோ வளைவாகவோ தோன்றுவது பிரத்தியேக அறிகுறியாகும்.

macular_degeneration_600x255

பார்வையில் கரும்புள்ளிகள் தோன்றலாம். மக்கியூலாவில் உள்ள கலங்கள் தொடர்ந்து சிதைவடையும்போது அவை அளவில் பெரிதாகும்.

பார்வை மோசமாகப் பாதிக்கப்படும்போது மாயத் தோற்றங்கள் ஏற்படலாம். இல்லாத பொருள்கள் இருப்பது போன்ற பிரமைத் தோற்றங்கள் வேறெந்த நோயால் பார்வை பாதிப்புற்றாலும் தோன்றலாம். இந்த நிலை பொதுவாக 18 மாதங்கள் வரை செல்லும்போது படிப்படியாக இல்லாது ஒழிந்துவிடும்.

சிகிச்சை

வயது சார்ந்த மக்கியூலா சிதைவு நோயில் இரண்டு வகைகள் உண்டு ஈரலிப்பான மக்கியூலா சிதைவு நோய் (Wet ARMD ).  வரட்சியான மக்கியூலா சிதைவு நோய் (னுசல யுசுஆனு) என்பனவே அவை.

பெரும்பாலானவர்களைப் பாதிப்பது Dry ARMD ஆகும். இது படிப்படியாக மோசமாகிப் பார்வையைக் கடுமையாகப் பாதிக்க பல வருடங்கள் செல்லலாம். இதற்கெனச் சிறப்பான சிகிச்சை முறைகள் இல்லை. ஆயினும் பாதிப்பு அதிகமாகாதவாறு தடுப்பதற்கு சிகிச்சை அளிக்கபடும்.

மாறாக Wet ARMD  மிகக் குறைந்தவர்களையே பாதிக்கிறது. ஆயினும் ஒரு சில மாதங்களுக்குள் பார்வையை கடுமையாகப் பாதிக்கும். இருந்தபோதும் இதற்கான பல சிகிச்சை முறைகள் உள்ளன. புதிய மருந்துகளும் அறிமுகமாகின்றன. ஆயினும் அவற்றை இங்கு விபரிப்பது சாத்தியமானதல்ல.

இறுதியாக

மக்கியூலா சிதைவு நோயிற்கு தெளிவான அறிகுறிகள் ஆரம்ப கட்டத்தில் இல்லை என்பதை ஏற்கனவே கண்டோம். எனவே ஒழுங்கான கால இடைவெளியில் கண் மருத்துவரைக் காண்பதன் மூலமே அதை ஆரம்ப நிலையில் கண்டுபிடிக்கலாம்.

அதிலும் முக்கியமாக 60 வயதிற்கு மேற்பட்டவர்களும், குடும்பத்தில் இந்த நோயுள்ளவர்களும் இரு வருடங்களுக்கு ஒரு முறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம். நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்த நோயுள்ளவர்களுக்கும் இது பொருந்தும்.

வருமுன் உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

Read Full Post »

எனக்கு கண் நல்லாத் தெரியுது. நான் ஏன் கண் டொக்டரட்டை போக வேணும்” என அவர் ஆச்சரியப்பட்டார்.

அவர் ஒரு நீண்டகால் நீரிழிவு நோயாளி. வீட்டில் குளுக்கோமீற்றர் வைத்திருக்கிறார். சீனியின் அளவைப் பார்த்து திருப்தியடைந்துவிடுவார்.

அவரது HbA1C அளவானது 8.5 ல் இருந்தது. HbA1C என்பது ஒருவரது சீனியின் அளவு சென்ற மூன்று மாதங்களாக எந்ந நிலையில் இருந்தது என்பதைக் கணிக்கும் முறை என்பதை நீங்கள் அறிவீர்கள். இது 6.5 என்ற அளவிற்குள் இருக்க வேண்டும்.

நீரிழிவானது பல்வேறு உறுப்புகளையும் பாதிக்கிறது. நீரிழிவினால் சிறுநீரகம் பாதிப்புறவதை பலரும் அறிவார்கள். அதேபோல தங்கள் பார்வைத் திறனையும் மோசமாகப் பாதிக்கக் கூடியது என்பதைப் பெரும்பாலானோர் உணர்ந்து கொள்ளவதில்லை.

நீரிழிவு நோயால் பார்வை பல்வேறு வழிகளில் பாதிப்புறலாம்.

 

நீரிழிவினால் விழித்திரைப் பாதிப்பு

கண்களின் விழித்திரையில் (Retina) ஏற்படும் பாதிப்பு மிக முக்கியமானது. விழித்திரையானது Rod and cones ஆகிய கலங்களால் நிறைந்திருக்கிறது. நாம் பார்க்கும் போது எமது விழித்திரையில் ஒளியாக விழும் பிம்பத்தை மின்அதிர்வுகளாக மாற்றி, பார்வை நரம்பு (Optic Nerve)  ஊடாக மூளைக்கு அனுப்பும் பணியை இவை செய்கின்றன.

other_retina_ill

உடவிலுள்ள எல்லாக் கலங்களும் போலவே விழித்திரைக் கலங்களுக்கும் ஒட்சிசனும் போசனைப் பொருட்களும் தேவை. இவை இரத்தக் குழாய்கள் ஊடாக வரும் இரத்திலிருந்தே கிடைக்கிறது. நீரிழிவு நோயானது இரத்தக் குழாய்களைப் பாதிப்பதை அறிவீர்கள்.அதுபோலவே விழித்திரைக் குருதிக் குழாய்களையும் பாதிக்கும்.

நீரிழிவு நோயுள்ள எவருக்கும் விழித்திரைப் பாதிப்பு ஏற்பட வாய்ப்புண்டு. இருந்தபோதும் நீண்ட காலமாக நீரிழிவு உள்ளவர்களுக்கு பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.

அமெரிக்காவில் நீரிழிவு உள்ளவர்களில் 40 முதல் 45 சதவிகிதமானவர்கள் இதனால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

எங்கள் நாட்டிலும் இதற்குக் குறையாது என்றே சொல்லத் தோன்றுகிறது. இருந்தபோதும் இங்குள்ள பெரும்பாலான நீரிழிவு நோயாளர்கள் கண் மருத்துவரை அணுகுவதில் அக்கறை காட்டாது இருப்பதால் தாக்கத்தின் வீச்சு வெளிப்படையாகத் தெரியாது இருக்கிறது.

எத்தகைய பாதிப்புகள் ஏற்படும்

பாதிப்புற்ற விழித்திரை இரத்தக் குழாய்களிருந்து இரத்தம் கசியலாம்.. இது கண்ணின் நடுப் பகுதிக்குள் பொசிந்து வந்து பார்வையைத் தெளிவற்றதாக்கும்.

இரத்தம் போலவே திரவக் கசிவும் ஏற்படுவதுண்டு. இது பொதுவாக மக்கியுலா என்ற பகுதியில் சேர்ந்து அதை வீங்கச் செய்யும்.

இதை macula edema    என்பார்கள். கூரிய பார்வைக்கு அவசியமான மக்கியுலாவில் இவ்வாறு வீக்கம் ஏற்பட்டால் பார்வை மங்கும்.

நீரிழிவு நோய் மற்றும் கொலஸ்டரோலால் இரத்தக் குழாய்கள் அடைபடலாம். அடைபட்டவற்றை ஈடுசெய்வதற்காக புதிய இரத்தக் குழாய்கள் வளரும். இதுவும் பார்வைப் பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு நடப்பதை Proliferative retinopathy  என்பார்கள்.

அறிகுறிகள்

ஆரம்ப கட்டத்தில் நீரிழிவு விழித்திரை நோயானது எந்த ஒரு அறிகுறிகளையும் வெளிப்படுத்தாது. வலியோ வேதனையோ பார்வைக் குறைபாடோ நோயாளிக்கு இருக்காது. ஆயினும் நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது பார்வை சற்று மங்கலாகலாகும்.

இரத்தக் கசிவு ஏற்படும்போது கரும்புள்ளிகள் பார்வையில் தோன்றலாம். அவை தானகவே மறையவும் கூடும். ஆயினும் மீண்டும் வரும். கடுமையாக குருதிக் கசிவு இருந்தால் பார்வையில் பெரும் பகுதி படத்தில் காட்டியபடி கருமை படர்ந்து மூடக் கூடும்.

எனவேதான் நீரிழிவு நோயுள்ளவர்கள் அறிகுறிகள் தோன்றும் வரை காத்திருக்காது வருடம் ஒருமுறையாவது கண் மருத்துவரைக் காண்பது அவசியம்.

இப்படி இருப்பது

 

நீரிழிவு விழித்திரை பாதிப்பு இருந்தால் இவ்வாறுதான் தெரியும்

 

சிகிச்சை

சிகிச்சையைப் பொறுத்தவரையில் நீரிழிவை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதே மிக முக்கியமானது. நீரிழிவை கண்காணிக்கும் தனது மருத்துவரை 1 முதல் 3 மாதத்திற்கு ஒரு முறையும், கண் மருத்துவரை வருடம் ஒருமுறையாவது கலந்து ஆலோசிக்க வேண்டும்.

நோயின் தாக்கம் அதிகமாகும்போது லேசர் சிகிச்சை அளிப்பார்கள். இரத்தம் அதிகம் கண்ணினுள் கசித்திருந்தால் அங்குள்ள இரத்தம் கலந்த திரவத்தை அகற்றிவிட்டு வேறு உப்புத் திரவத்தை மாற்றீடு செய்வதுண்டு. இதனை vitrectomy என்பார்கள்

நீரிழிவால் வேறு கண் பாதிப்புகள்

கற்றரக்ட்

கற்றரக்ட் என்பது கண்வில்லை வெண்மையடைந்து பார்வையைக் கெடுப்பதாகும். வெண்புரை நோய் என்றும் சொல்லப்படுகிறது. இந்த வெண்புரை நோயானது வயதாகும் காலத்தில் எவருக்கும் வரக் கூடிய ஒன்றே. இருந்தபோதும் நீரிழிவு நோயாளர்களுக்கு குறைந்த வயதிலேயே வந்து பார்வையை மறைக்கும்

குளுக்கோமா

குள்ககோமா என்பது கண்ணின் உட்புறம் உள்ள அழுத்தம் (pressure)   அதிகரித்து அதனால் பார்வை நரம்பு பாதிப்புறுவதாகும். இதுவும் யாருக்கும் ஏற்படக் கூடுமாயினும் நீரிழிவு உள்ளவர்களை ஏனையவர்களை விட இரு மடங்கு அதிகமாகப் பாதிக்கிறது என்பது குறிப்படத்தக்கது

இறுதியாக

இந்த நோய்கள் எல்லாம் ஒருவருக்கு வந்தால் கண் பார்வையை முழமையாகப் பழைய நிலைக்குக் குணமாக்குவது சிரமம். பெரும்பாலும் பார்வை; மேலும் மோசமடைவதைத் தடு.ப்பதாகவே இருக்கும். எனவேதான் காலக்கிரமத்தில் கண்மருத்துவரைச் சந்தித்து கண் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

“எனக்கு கண் நல்லாத் தெரியுது” என்று கூறியவருக்கும் விழித்திரையில் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. ஆரம்ப நிலை என்பதால் பாரிய சிகிச்சைகள் தேவைப்படவில்லை.

நீரிழிவு உள்ளவர்கள் தங்கள் குருதியின் சீனி அளவை கணிப்பதுடன் திருப்தியடைந்து விடக் கூடாது. கொஞ்சம்தானே அதிகமாக இருக்கு என அசட்டையாக இருக்கவும் கூடாது. ஏனெனில் நீரிழிவால் ஏற்படும் பாதிப்பு என்பது வெறும் குருதிச் சீனியின் அளவு அல்ல. கட்டுப்பாட்டில் இல்லாத நீரிழிவானது சிறுநீரகம், நரம்புகள், இரத்தக் குழாய்கள், இருதயம், கண் என உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்புகனையும் சதாகாலமும் பாதித்துக் கொண்டே இருக்கிறது.

தங்களுக்கு ஏதாவது பாதிப்பு இருக்கிறதா என்பதை நேரகாலத்துடன் கண்டறிந்தால் அவை மேலும் மோசமடைவதைத் தடுக்க முடியும். ஆரம்ப நிலையில் நீரிழிவைக கண்டுபிடிப்பதும் அதனை பூரண கட்டுப்பாட்டிற்குள் வைத்திருப்பதால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது தவிர்த்துக் கொள்ளலாம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0

 

Read Full Post »

கண் நோய்கள் பலவாகும். இருந்தாலும் எமது பகுதியில் கண்நோய் என்றால் கண்சிவந்து பீளை வடிகிற தொற்று நோயையே கண்நேய் என்பர்கள்.

Thanks:- commons.wikimedia.org

தமிழகத்தில் மட்ராஸ் அய் என்பார்கள்.

இது கண்ணின் வெளிப் புறத்தில் உள்ள கொன்ஜன்ராவில் ஏற்படுகின்ற ஒரு தொற்று நோயே ஆகும். ஆங்கிலத்தில் (conjunctivitis) என்பார்கள். அதாவது கண்ணின் வெண்மடலில் ஏற்படுகிற நோயாகும்.

வெயிலும் வெக்கையும் தீவிரமாக இருக்கும் இந்தக் காலம் இந்நோய் தொற்றுவதற்கு ஏற்ற காலம் ஆகும்.

அறிகுறிகள் எவை?

  • கண் சிவந்திருக்கும்
  • கண்ணால் அதிகம் நீர் வடியலாம்.
  • கண்ணிற்குள் எதோ விழுந்து அராத்துவது போன்ற உணர்வு ஏற்படலாம்.
  • கண்மடல்கள் வீங்கியிருக்கும்.
  • பீளை வடிவதுடன்,
  • சற்று அரிப்பும் இருக்கும்.
  • காலையில் கண்வழிக்கும்போது கண்மடல்கள் ஒன்றோடு ஒன்று ஒட்டியிருக்கலாம்

இது பொதுவாக வைரஸ் கிருமியால் தொற்றுவதாகும். ஆனால் பக்றீரியா கிருமியாரல் தொற்றுகின்ற கண்நோய்களும் உண்டு. தூசி மகரந்தம் போன்றவற்றிற்கு ஒவ்வாமையால் ஏற்படுகின்றவையும் உண்டு.

பொதுவாக இது ஆபத்தானது அல்ல. தானாகவே சில நாட்களில் குணமாகிவிடும்.

மருத்துவரை எப்பொழுது காண வேண்டும்?

ஆயினும் கீழ் கண்ட அறிகுறிகள் இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.

  • ஒரு கண்ணில் அல்லது இரு கண்களிலும் ஓரளவு அல்லது தீவிரமான வலி இருந்தால் மருத்துவரைக் காண்பது அவசியமாகும்.
  • வெளிச்சத்தைப் பார்க்க முடியாதபடி கண் கூச்சம் இருந்தால் அவசியம் காண வேண்டும்.
  • அதே போல பார்வை மங்கலாக இருந்தாலும் மருத்துவரைக் காணுங்கள்.
  • சாதாரண கண்நோயின்போது கண்கள் கடுமையான சிவப்பாக இருப்பதில்லை. மங்கலான சிவப்பு அல்லது பிங்க் கலரிலேயே இருக்கும். எனவே கண் கடுமையான சிவப்பாக இருந்தால் மருத்துவரைக் காண வேண்டும்.
  • நோயெதிர்பு சக்தி குறைவாக உள்ளவர்கள் அவசியம் காண வேண்டும். உதாரணமாக HIV தொற்றுள்ளவர்கள், பிரட்னிசொலோன் போன்ற ஸ்டீரொயிட் மருந்து பாவிப்பவர்கள், நாட்பட்ட சிறுநீரக நோயால் பாதிக்கப்பட்டவர்கள்.
  • நோயின் அறிகுறிகள் படிப்படியாகக் குறையாது வர வர தீவிரமாபவர்கள்.
  • வேறு கண் நோயுள்ளவர்களும்; அதற்கான மருந்துகளை கண்ணிற்கு இடுபவர்களும் உட்கொள்பவர்களும்.

தொற்றுவதைத் தடுப்பது

ஒவ்வாமையால் ஏற்படும் கண் நோயகள் தொற்றுவதில்லை

ஆனால் வைரஸ் மற்றும் பக்றீரியா கிருமிகளால் ஏற்படுபவை வேகமாகத் தொற்றும்.

சுகாதார முறைகளைக் கையாள்வதன் மூலம் தொற்றுவதைத் தடுக்கலாம்.

ரிசூ உபயோகித்தால்  அதனை உடனடியாக கழித்து அகற்றிவிட வேண்டும்.

Thanks www.pharmacytimes.com

கண்ணிற்குள கை வைக்காதிருத்தல், கண்ணைத் தொட்டால் கைகளையும், துணியால் துடைத்தால் அதையும் உடனடியாகக் கழுவிடுதல் முக்கியமாகும்.

Thanks – www.sophisticatededge.com

கண் மருந்துகள் விடும்போது அவை கண்ணில் முட்டாதபடி சற்று உணரத்தில் பிடித்து விட வேண்டும்.

Thanks :- www.doctortipster.com

கண்நோய்கள் பற்றிய எனது முன்னைய பதிவுகள்

கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி? 

கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை

கண்களின் பாதுகாப்பு பற்றிய சில தவறான நம்பிக்கைகள்

எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

0.0.0

Read Full Post »

உங்கள் பார்வைத் திறன் எவ்வாறு இருக்கிறது

பார்வை குறைந்து செல்வதை ஆரம்பத்திலேயே கண்டறிவது சற்று சிரமமானதுதான். இருந்தபோதும் சற்று அவதானமாக இருந்தீர்களேயானால் தாமதமின்றிப் புரிந்து கொள்ளலாம். 

கீழ் காண்பவற்றில் ஏதேனும் ஒன்று உங்கள் பார்வை பாதிப்புறுவதின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம்.

மங்கிய வெளிச்சத்தில் எழுத்துக்கள் தெளிவில்லாது இருப்பது, கைக்கடிகாரத்தில் நேரம் தெளிவின்றி இருப்பது, புத்தகங்களையும் பத்திரிகைகளையும் வழமையை விடச் சற்றுத் தூரத்தில் வைத்துப் படிக்க நேர்வது, ரீவீயை சற்று நெருக்கத்தில் இருந்து பார்த்தால்தான் மிகத் தெளிவாக இருப்பது, இரவில் வாகனம் ஓட்டும்போது எதிரே வாகனத்தின் லைட் வெளிச்சம் கண்களைக் கூசவைப்பது. இப்படிப் பலவற்றை சொல்லிக் கொண்டே போகலாம்.

உங்கள் பார்வை குறைந்து செல்வதை உணர்ந்தால் அது வயசுக் கோளாறு என்று சொல்லி வாழாது இருந்து விடாதீர்கள். இதற்கான காரணங்கள் பல. அவற்றில் பல தீவிரமானவை

மக்கியூலர் டிஜெனரேஜன் (Macular degeneration) என்பது விழித்திரையில் உள்ள மக்கியூலா பாதிப்புறுவதால் ஏற்படுவது. பொதுவாக வயது அதிகரிக்கும்போது ஏற்படுவது. கண்வைத்தியர் பரிசோதித்தே கண்டறிய முடியும்.

குளுக்கோமா(Glaucoma)  என்பது பார்வை நரம்பு பாதிப்புறவதால் வரும். முக்கியமாக கண்ணில் உள்ள திரவத்தில் பிரஸர் அதிகரிப்பதால் அத்தகைய தாக்கம் ஏற்படும்.

கட்டரறக்ட் (Cataract)  என்பது கண்வில்லைகளில் வெள்ளையாகப் படிவது. வயது காரணமாக மட்டுமின்றி நீரிழிவாலும் விரைவில் தோன்றும்.

நீரிழிவு விழித்திரை நோய் (Diabetic retinopathy) நீரிழிவு நோயால் ஏற்படுவது. விழித்திரையில் உள்ள சிறு குருதிக் குழாய்கள் சேதமடைவதால் திரக மற்றும் குருதிக் கசிவுகள் ஏற்படும். குருதியில் சீனி அதிகமாக இருப்பதாலும் அது கட்டுப்பாட்டில் இல்லாதிருப்பதாலும் வரும் பிரச்சனை இது.

இவற்றில் கட்டரக்ட் நோயிருந்தால் சத்திர சிகிச்சை மூலம் இழந்த பார்வையை முழுமையாக மீளப் பெறலாம்.

ஏனையவற்றில் பார்வையை முழுமையாக மீளப் பெற முடியாதிருக்கும். உடனடியாக மருத்துவம் செய்தால் பார்வை இழப்பு மோசமாகாமல் காப்பாற்ற முடியும். எனவே பார்வையில் பாதிப்பாக இருக்கும் என்று தோன்றினால் உடனடியாக கண் மருத்துவரைச் சந்தியுங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »

காரிருளில் சப்தமின்றி கன்னமிடும் திருடன் போல நோயாளிக்கு எந்த வித அசுமிசமும் காட்டாது படிப்படியாகப் பார்வையைப் பறிப்பதுதான்  குளுக்கோமா நோயாகும்.

இன்று குளுக்கோமா தினமாகும். இன்று அதன் அடிப்படை விடயங்களை அறிவதற்கு ஏற்ற நாளாகும்.

உலகளாவிய ரீதியில் கண் பார்வை இழப்பிற்கு இரண்டாவது முக்கிய காரணம் குளுக்கோமாதான். முதற் காரணம் வெண் புரை என்று சொல்லப்படும் கற்றரக்ட் cataract ஆகும்.

கற்றரக்ட்டால் ஏற்படும் பார்வை இழப்பை சத்திர சிகிச்சை மூலம் குணப்படுத்தலாம். ஆனால் குளுக்கோமாவின் பார்வை இழப்பு மாற்ற முடியாதது ஆகும்.

இது கண்ணின் பார்வையைக் கொடுக்கும் பார்வை நரம்பைப் (optic nerve) பாதிப்பதால் பார்வை இழப்பைக் கொண்டுவருகிறது. நரம்பைப் பாதிப்பதால் பார்வை இழந்தால் அதை சிகிச்சைகள் மூலம் திரும்பக் கொண்டுவருவது இயலாத காரியமாகும்.

கண்ணில் உள்ள நுண்ணிய வடிகால் குழாய்கள் சற்று தடைபடுவதால் கண்ணின் திரவமான அக்வஸ் கியூமர் (aqueous humour) தேங்குகிறது.

இதனால்  கண்ணினுள் உள்ள திரவத்தி்ன அழுத்தம் (fluid pressure) அதிகரிக்கிறது. இந்த அழுத்தத்தை கண் பிரஷர் (Intraocular pressure) என்பர்.

ஆரம்ப நிலைகளில் வெளிப்டையான எந்த அறிகுறிகளும் இல்லாதிருப்பதே இதன் மிக ஆபத்தான அம்சமாகும்.

எனவேதான் இந்த நோயைக் கண்டு பிடிப்பதற்கு ஒழுங்கான கண் மருத்துவப் பரிசோதனை அவசியமாகிறது.

இந் நோய் வருவதற்கான சாத்தியம் உள்ளவர்கள் குறைந்தது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை கண் மருத்துவப் பரிசோதனை செய்வது அவசியமாகும்.

யாருக்கு குள்கோவிற்கான கண்பரிசோதனை அவசியம்

  • பரம்பரையில் குளுக்கோமா நோய் உள்ளவர்கள்
  • அதே போல 45 வயதிற்கு மேல் சாத்தியம் மிக அதிகம்.
  • வெள்யைர்களைவிட கறுப்பு இனத்தவரிடையே அதிகம்.
  • நீரிழிவு இருந்தாலும் வாய்ப்பு அதிகம்.
  • ஸ்டிரோயிட் வகை மருந்துகளை மாத்திரைகளாக, ஊசியாக அல்லது கண்துளிகளாக அதிகம் உபயோகித்தவர்களுக்கும்.
  •  கண்ணில் ஏதாவது அடிகாயங்கள் ஏற்பட்டிருந்தாலும் வாய்ப்பு அதிகம்.

ஆரம்பத்தில் கண்டு பிடித்தால் கண்ணுக்குள் விடும் துளி மருந்துகளுடன் நோய் மோசமாவதைத் தடுக்க முடியும்.

கடுமையான பாதிப்பு ஏற்படுமாயின் சத்திர சிகிச்சை, லேஸர் சிகிச்சை போன்றவை தேவைப்படும்.

குளுக்கோமா பற்றிய மற்றொரு பதிவு  :- கண்ணில் பிரஸர் குளுக்கோமா Glucoma

0.0.0.0.0.0.0

Read Full Post »

கவலை இல்லாமலும் கண்ணீர் வரும்
கண்கடியுடன் கண்கள் சிவந்து கண்களால் நீர் வடிதல்

கண்ணைக் கசக்கிக் கொண்டுவந்த பையனைக் கூட்டிக் கொண்டு வந்த அம்மாவின் முகத்தில் சலிப்பு. பையனின் முகத்திலும் சோர்வு தட்டியிருந்தது.

Allergic conjuntivits 1

“எவ்வளவு சொன்னாலும் கேக்கிறானே? எந்த நேரம் பார்த்தாலும் கண்ணைக் கசக்கிக் கொண்டிருக்கிறான். கண் வீங்கிப் போச்சு. போதாக்குறைக்கு மூக்கையும் குடையிறான். வெளியிலை கூட்டிக் கொண்டு போகவே வெக்கமாகக் கிடக்கு”

உண்மைதான் அந்த அழகான பையனின் கண்மடல்கள் வீங்கிக் கிடந்தன. கண்களின் கீழே கருவளையம் தெரிந்தது. முகமும் கண்களும் செம்மை பூத்துக் கிடந்தன. மூக்கு வீங்கி அதன் துவாரங்கள் மேல்நோக்கிப் பார்த்தன. மூக்கை உள்ளங்கையால் தேய்த்துத்தான் அவ்வாறாகியிருந்தது.

Allergic conjuntivits

பாவம்! அவனைத் தூற்றுவதில் பிரயோசனம் இல்லை. அவனுக்கான பாரிகாரங்களைத் தாய் செய்து கொடுக்கத் தவறிவிட்டாள் என்றே எனக்குத் தோன்றியது.

ஓவ்வாமைக் கண்நோய்

இது பலருக்கும் ஏற்படுகிற பிரச்சனைதான். குழந்தைகளில் அதிகம். கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல், கண்ணைக் கசக்குதல், கண்மடல் வீங்குதல், வெளிச்சத்தைப் பார்க்கக் கூச்சம் என அவர்களுக்கு தங்கள் கண்களே தொல்லையாகி விடுவதுண்டு.

இவை எல்லாம் கண்ணில் ஏற்படும் ஒவ்வாமையின் நுலந யுடடநசபல பல அறிகுறிகளாகும்.

Allergic conjuntivits 3

மாறாக, கிருமித் தொற்றால் ஏற்படும் கண்நோய்கள் முதலில் ஒரு கண்ணில் தோன்றும் பின் மற்றக் கண்ணிற்கும் பரவலாம். ஆனால் ஒவ்வாமைக் கண்நோய் பொதுவாக இரு கண்களிலும் ஒரே நேரத்தில் தோன்றும். அத்துடன் கண் அரிப்பு நிச்சயம் இருக்கும். மடலைத் தாண்டி கண்களும் பாதிப்புறும்போது கண்ணிலிருந்து சற்றுத் தடிப்பான திரவம் சுரந்து கண் ஓரங்களில் ‘பீளையாக’ ஒட்டிக் கிடந்து பார்ப்பவர்களை அருவருக்கவும் வைக்கலாம்.

Allergic conjuntivits 4

ஓவ்வாமைகள்

இவை பொதுவாகத் தனியாக வருவதில்லை. தும்மல், மூக்கால் வடிதல், மூக்கடைப்பு போன்ற வேறு ஒவ்வாமை அறிகுறிகளுடன் கைகோர்த்து வருவதுண்டு. சிலருக்குக் காதில் அரிப்பும் ஏற்படுவதுண்டு. இவை யாவுமே ஒவ்வாமைகளின் (Allergy) அறிகுறிதான்.

இவை முகத்தில் தோன்றுபவை. ஆனால் ஓவ்வாமைகள் உடல் முழவதும் தோன்றலாம், அல்லது உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றலாம்.

Allergic conjuntivits 5

ஒவ்வாமைகளுக்குக் காரணம் என்ன? உணவு முதற்கொண்டு தூசி புழதி, வாசனைத் திரவியங்கள் போன்ற பலவும் ஒவ்வாமையைத் தோற்றுவிக்கலாம்.

ஒவ்வாமையால்

  • சருமத்தில் தடிப்புகள் வீக்கங்கள், அரிப்பு போன்றவை தோன்றுவது போலவே
  • கண்களிலும் மேற்சொன்ன அறிகுறிகள் ஏற்படுகின்றன.
  • சிலரது வயிற்றுவலிக்கும் ஒவ்வாமை காரணமாவதுண்டு.

தூசி, புழுதி, போன்றவை காரணமாகலாம்

வாசனைத் திரவியங்கள், அழகுசாதனப் பொருட்கள், கடுமையான மணங்கள் காரணமாகலாம்.

சிலருக்கு சீதோசன காலநிலைகளும் காரணமாகலாம். பூக்கள் மகரந்தங்கள் போன்றவையும் காரணமாகலாம். பருவகாலங்கள் துல்லியமாக மாறுபடும் மேலை நாடுகளில் இது பொதுவாக வசந்த காலத்தில் பெரும்பாலானவர்களைப் பாதிப்பதுண்டு.

தூசிப் பூச்சி, ஒட்டடை, பூனை நாய் போன்ற வளர்ப்பு மிருகங்களின் ரோமம் போன்றவையும் சொல்லப்படுகிறது.

ஓவ்வாமைக் கண்நோயானது நோயாளியை அரியண்ணடப்படுத்தி எரிச்சலுற வைக்கும் என்றபோதும் ஆபத்தான நோயல்ல. மீண்டும் மீண்டும் தோன்றக் கூடியதாயினும் கண்ணின் பார்வைத் திறனைப் பாதிக்காது. வேறு எந்த ஆபத்தான பின் விளைவுகளும் ஏற்படாது.

நீங்கள் செய்யக் கூடியவை

ஓவ்வாமைக் கண்நோய் ஏற்படாமல் தடுக்கவும், அது தோன்றினால் அதிலிருந்து நிவாரணம் பெறவும் நீங்கள் செய்யக் கூடியவை எவை?
கீழ்கண்ட ஆலோசனைகளை The American Academy of Allergy Asthma and Immunology   வழங்குகிறது.

lotion woman

  • வீட்டைவிட்டு வெளியே போகும் போது தூசி, மகரந்தம் போன்றவை கண்ணில் விழாமலிருக்க பரந்த விளிம்புள்ள தொப்பிகளை அணியுங்கள். தொப்பி தலையில் வெயில் மழை படாமலிருக்க மட்டுமின்றி இந்த வகையிலும் உதவுகிறது என்பதை பலரும் மறந்து விடுகிறார்கள்.
  • அதே போல கண்ணாடி, கருப்புக் கண்ணாடி அணிவதாலும் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்கள் கண்ணில் நேரடியாகதத் தாக்காது காப்பாற்றலாம்.
  • வெளியில் போய் வந்ததும் கண்களை நீரினால் கழுவுங்கள். நன்கு அலசிக் கழுவினால் ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருட்களை அகற்ற முடியும். சோப் போட வேண்டியதில்லை.
  • கொன்டக்ட் லென்ஸ் contact lenses போடுவராயின் அதனை அகற்றுவதும் உதவும்.
  • எவ்வளவு அரித்தாலும் கண்களைக் கசக்குவதைத் தவிருங்கள். கசக்குவதால் கண்களில் நுண்ணிய உரசல்களும் கிருமித் தொற்றும் ஏற்பட்டு பிரச்சனையை மோசமாக்கும்.

மருந்துகள்

மேற்கூறிய முறைகளில் குணமாகாவிடில் உங்கள் மருத்துவரைக் காணுங்கள்.

ஒவ்வாமையைத் தணிக்கும் மாத்திரைகளை அல்லது, அதற்கான கண் துளி மருந்துகளையும் அவர் தருவார். சில தருணங்களில் இரண்டையும் சேர்த்தும் தரக் கூடும்.

Allergic conjuntivits 6

ஒவ்வாமைக்கு எதிரான மருந்துகளை anti-histamines என்பார்கள். இலங்கையில் பிரிட்டோன் என்ற மாத்திரை பலருக்கும் பரிச்சயமானது. அது அம் மருந்தின் வர்த்தகப் பெயராகும். chlorpheniramineஎன்பதே அதன் பொதுவான பெயராகும். தும்மல், தடிமன், அரிப்பு என்றவுடன் பலரும் தாங்களாகவே இதை வாங்கிப் போடுவதை நாம் காண்கிறோம். இது சற்று சோர்வையும், தூக்கத்தையும் ஏற்படுத்துவதுண்டு. எனவே பாடசாலைப் பிள்ளைகள் வேலைக்குச் செல்வோர் ஆகியோருக்கு ஏற்றதல்ல.

சிலர் தூக்கம் வரவில்லை என்றாலும் தாங்களாகவே இம் மருந்தை உட்கொள்கிறார்கள். அது தூக்க மாத்திரை அல்ல. இவ்வாறு மருந்துகளைத் துஷ்பிரயோகம் செய்வது ஆபத்தான பின்விளைவுகளை ஏற்படுத்தலாம் என்பதால் மருத்துவ ஆலோசனையின்றி உட்கொள்ளக் கூடாது.

loratadine, cetirizine, fexofenadine, desloratadine  போன்ற பல புதிய மருந்துகள் அந்தளவு தூக்க மயக்கத்தை ஏற்படுத்தாது. இவை யாவும் மருத்துவ ஆலொசனையுடன் மட்டுமே பயன்படுத்த வேண்டியவையாகும்.

கண்ணிற்குள் விடும் துளி மருந்துகளிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் சில தொடர்ந்து உபயோகிக்க உகந்தவை. ஏனைய பல சில நாட்களுக்கு மட்டுமே உபயோகிக்க வேண்டியவை. எனவே அவை பற்றி இங்கு எழுதவில்லை. மருத்துவ ஆலோசனையுடன் அவர் சிபார்ச்சு செய்யும் மருந்துகளை அவர் குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே உபயோகிக்க வேண்டும்.
எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை கண்ணில் அரிப்பு, கண்ணால் நீர்வடிதல் தடுப்பது எப்படி?
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0.0

Read Full Post »

>

கவலை வந்தால் கண்ணீர் வரும். ஆனால் கவலை இல்லாமலும் கண்ணீர் வருகிறது. உண்மையில் எந்த நேரமும் கண்களிலிருந்து கண்ணீர் சுரந்து கொண்டே இருக்கிறது. இது இயல்பானது. ஆனால் சிலருக்கு சிலவேளைகளில் கண்ணிலிருந்து நீர் அதீதமாக வழிகிறது. இது ஏன்?

கண்ணீரின் கடமைகள்

காரணம் என்னவென்றால், கவலையை வெளிக்காட்டுவதை விட கண்களுக்கு மேலும் பல கடமைகள் உள.

  • கண்களை ஈரலிப்பாக வைத்திருப்பது முக்கிய கடமையாகும். கண்கள் ஈரலிப்பாக இருப்பதால்தான் கண்களை நாம் மூடித் திறக்கும்போதும், பார்வையைத் திருப்புதற்காக கண்களை ஆட்டும் பொழுதும் உராய்வு இன்றி வழுவழுப்புடன் அதனால் இயங்க முடிகிறது.
  • கண்களுக்கு தேவையான போசணையில் ஓரளவு அதனூடகவும் கிடைக்கிறது. 
  • தூசி மற்றும் உறுத்தக் கூடிய பொருள்களிலிருந்து கண்களைப் பாதுகாக்கிறது.
  • கண்கள் மாசு மறுவின்றி பளிங்கு போல கண்ணீரினால் பேணப்படுவதால்தான் எமது பார்வை தெளிவாக இருக்கிறது.
  • கண்ணில் தொற்று நோய்கள் ஏற்படாமல் காப்பதும் கண்ணீர்தான்.

எமது கண்களின் மேல் மடலுக்கு கீழே பல சிறிய கண்ணீர் சுரப்பிகள் உள்ளன. அவற்றிலிருந்து நாசிக்கு அருகே கண்களில் இருக்கும் நுண்ணிய துவாரங்கள் ஊடாகவே கண்ணீர் வருகின்றது.

இந்தக் கண்ணீரின் ஒரு பகுதி ஆவியாகி மறைந்துவிட, மீகுதி கண்ணீர்க் குழாய்களுடாக நாசியினுள் வழிந்து விடும். இது தொடர்ச்சியாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் வழமையான செயற்பாடு. இக் குழாய் அடைபடுவதாலும் கண்ணீர் அதிகமாக வழியலாம்.

திடீரென அதிகமாக கண்ணீர் வடிதல்

ஆனால் நாம் உணர்ச்சி வசப்படும்போதும், கண்களுக்குள் ஏதாவது விழுந்து உறுத்துப்படும்போதும் அதிகமாகக் கண்ணீர் வடிகிறது. இது வித்தியாசமான செயற்பாடு. இது கண்ணீர்ச் சுரப்பியிலிருந்து வெளியேறுகிறது. இது தற்காலிகமாக நடைபெறுவதாகும்.

தொடர்ந்து ரீ.வீ பார்க்கும்போது அல்லது கணனியில் வேலை செய்யும்போது கண்ணீர் வடிகிறது எனப் பலர் சொல்வதைக் கேட்கிறோம். இதற்குக் காரணம் என்ன?

வழமையாக எமது கண்கள் அடிக்கடி இமைக்கிறது. அதாவது தானாகவே வெட்டி மூடுகிறது. இச் செயற்பாட்டின்போது மேலதிக கண்ணீர் கண்ணீர்குழாய் ஊடாக வெளியேறிவிடுகிறது.

ஆனால் தொடர்ந்து உற்றுப் பார்க்கும்போது கண்களை  வெட்டி மூடும் செயற்பாடு குறைகிறது. இதனால் கண்ணீர் குழாய் ஊடாக வடிவது குறைந்து தேங்குவதாலேயே கண்ணீராக வடிகிறது.

கண்ணில் கிருமித்தொற்று (Conjuntivitis) ஏற்படும்போதும் கண்களிலிருந்து நீர் போல வடிவதுண்டு.

  கண்களின் பாதுகாப்பு சில தவறான நம்பிக்கைகள்    பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள் 


தொடர்ச்சியாக கண்களிலிருந்து நீர் வழிதல்

ஆனால் இதைத் தவிர நீண்டகாலத்திற்கு தொடரும் அதிக கண்ணீர் சுரப்பதை chronic epiphora என்பார்கள்.

இவ்வாறான நீண்டகாலம் தொடரும் கண்ணீர் சுரப்பதற்கு மருத்துவ ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

தொடர்ந்து கண்ணீர் வழிதலின் காரணங்கள்.
  • சூழல் காரணமாகலாம். இரசாயனப் பொருட்கள், புகை, வெங்காய மணம் போன்ற கண்களை உறுத்தக் கூடிய ஏதாவது ஒன்று காரணமாகலாம்.

  • ஓவ்வாமை காரணமாகலாம். சுழலிலுள்ள தூசி, மகரந்தம் போன்றவற்றால் ஏற்படும் ஒல்வாமை (Kernal Conjunctivitis) காரணமாகலாம். குளுக்கோமா போன்ற ஏதாவது கண் நோய்களுக்கு தொடர்ந்து கண்களுக்கு ஊற்றும் துளி மருந்துகள் கூட சிலருக்குக் காரணமாகலாம்.
  • கண்நோய் எனப்படும் கண்களில் ஏற்படும் கிருமித் தொற்று infective conjunctivitis மற்றொரு காரணமாகும். வைரஸ் கிருமித் தொற்று எனில் நீர்போலவும், பக்றீரியா தொற்று எனில் சற்றுத் தடிப்பாக பூளையாகவும் வரும். காலையில் கண் விழிக்கும்போது அதனால் கண்கள் ஒட்டிக்கொண்டிருக்கும். அன்ரிபயடிக் கண்துளிகளை மருத்துவர் தருவார்.
  • ஓரிரு இமை முடிகள் உட்பக்கமாக சிலருக்கு வளர்வதுண்டு. Entropion என்பார்கள். இதுவும் மற்றறொரு காரணமாகும். 

  • வரட்சியான கண்கள் முக்கிய காரணமாகும். வயதாகும்போது பொதுவாக ஏற்படும் பிரச்சனை இதுவாகும். அடிக்கடி கண்களை வெட்டி மூடுதல், கடுமையாக காற்று வீசுமிடங்களைத் தவிர்த்தல், புகைத்தலை நிறுத்தல் போன்றவை உதவும். செயற்கைக் (Artificial tears) கண்ணீரை உபயோகிப்பதும் உதவும்.
  • கண்ணீர்க் குழாய் ஏற்படும் அடைப்புகளால் வழமையாக நாசிக்குள் வழிவது தடைப்படுவதால் கண்ணீராக ஓடக் கூடும். இதற்கு சிறிய சத்திரசிகிச்சை உதவும். மாறாக நுண்துவாரங்களில் ஏற்படும் அடைப்பு மருத்துவர் நீரினால் கழுவுவதன் மூலம் அகற்றுவார். சில குழந்தைகள் பிறக்கும்போது அக்குழாய் முழுமையாக வளர்ச்சியடையாததால் கண்ணீர் தொடர்ந்து வரும். சில வாரங்களில் அக் குழாய் முழுமையாக வளர்ந்ததும் கண்ணீர் பெருகுவது குறைந்துவிடும்.

கண் மருந்திடுபவர்கள் அவதானிக்க வேண்டியவை  பற்றிப் படிக்க மேலை கிளிக் பண்ணுங்கள்

தினக்குரல ஹாய் நலமா? பத்தியில் நான் எழுதிய கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »