Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘அவசரகால கருத்தடை’ Category

“‘இலங்கை ஆண்களில் பத்தில் ஒருவர் தமது வாழ்வில் ஒரு தடவையாவது பெண்களை வல்லுறவுக்கு ஆளாக்கி இருக்கிறார்கள்.” இதுதான் இந்த வாரத்தின் மிகவும் சுவார்ஸமான செய்தி எனலாம்.

ScRoQdbWioboHGx-556x313-noPad

எமது ஆண்களின் வக்கிரத் தன்மையையும் பெண்களின் உணர்வை மதிக்காத மேலாதிக்க உணர்வையும் காட்டுகிறது என்று சொல்லிவிட்டு மறக்கக் கூடிய விடயம் அல்ல. இதன் பின்னாலுள்ள ஆபத்துக்கள் எண்ணிலடங்காதவை. சமூகத்தால் ஏளனப்படுத்தல், ஒதுக்கி வைக்கப்படுத்தல், பாலியல் தொற்று நோய், மன விரக்தி எனப் பல. வேண்டாத கர்ப்பம் மிக முக்கிய விடயமாகும்.

வேண்டாத கர்ப்பம் தங்குவதைத் தடுப்பதற்கு அவசரகால கருத்தடை (Emergency contraception) முறை கைகொடுக்கலாம். ஆனால் இது வல்லுறவின் பின்னான கருத்தடையை மட்டும் இலக்காகக் கொண்டது அல்ல.

unwanted-pregnancy-girlfriend-is-pregnant

அவசர கருத்தடை என்றால் என்ன?

இதை உடலுறவுக்கு பின்னாலான கருத்தடை ((post-coital contraception) எனவும் கூறுவர். Morning after pill எனவும் சொல்லப்படுவதுண்டு.

உடலுறவு கொண்ட ஓரிரு நாட்களுக்குள் கருத் தங்காமல் இருப்பதற்காக செய்யப்படும் கருத்தடை முறை இதுவாகும். கரு தங்குவதைத் தடுப்பதற்கான எத்தகைய கருத்தடை முறையையும் உபயோகித்து வராத பெண் ஒருத்தி எதிர்பாராத விதமாக உடலுறவு கொள்ள நேர்ந்தால் கரு தங்காமல் தடுப்பதற்கானது.

இது கருக்கலைப்பு அல்ல என்பது குறிப்பிடத்தக்கது.

dt.common.streams.StreamServer

பாதுகாப்பற்ற உடல் உறவு, கருத்தடை முறை தவறிவிட்டமை (மாத்திரை போடாமை, ஆணுறை அணியாமை போன்றவை), அல்லது ஒழுங்கான முறையில் உபயோகிக்காமை, விரும்பாத உறவு அதாவது வல்லுறவு போன்றையே முக்கிய காரணங்களாகும்.

எத்தகைய சந்தர்ப்பங்களில் இது உதவும்?

எதிர்பாராத உடல் உறவு கொண்டால் என ஏற்கனவே சொன்னோம். அத்தகைய தருணங்கள் எவை?.

 • வேறு எந்தவிதமான கருத்தடை முறைகளையும் பயன்படுத்தாத தருணங்களில்
 • வழமையான உடலுறவின் போது ஆணுறை (Condom) உடைந்திருந்தால், வழுகிகியிருந்தால் அல்லது சரியான முறையில் அணியாதிருந்தால்.
 • வழமையாக உட்கொள்ளும் கருத்தடை மாத்திரைகளை மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட தடவைகள் தொடர்ச்சியாக உட்கொள்ளாதிருந்தால்.
 •  டீப்போ புறவிரோ எனப்படும் கருத்தடை ஊசி மருந்து ஏற்றப்படுவது நான்கு வாரங்களுக்கு மேல் தாமதித்திருந்தால்.
 • பின்வாங்கல் முறையின் (Withdrawal method) போது ஆணுறுப்பை சரியான தருணத்தில் வெளியே எடுக்கத் தவறி, அதனால் விந்து யோனியினுள் அல்லது பெண் உறுப்பின் வாயிலில் சிறிதேனும் சிந்தியிருக்கக் கூடிய நிலையில்.
 • பாதுகாப்பான நாட்களில் மட்டும் உறவு வைக்கும் முறையில் (abstinence method) தினங்களைக் கணிப்பதில் தவறுகள் ஏதாவது ஏற்பட்டிருந்தால்.
 • நீங்கள் பயன்படுத்தும் வேறு எந்தக் கருத்தடை முறையாயினும் (diaphragm or cervical cap, spermicide tablet etc) அது தவறியிருக்கும் என எண்ணினால்.
 • லூப் எனப்படும் கருத்தடை வளையம் (intrauterine contraceptive device (IUD) வைத்திருந்து போது அது வழுகியிருந்தால்.
 • ஒருவர் உடலுறவு வைப்பதற்கு நிர்பந்திக்கப்பட்டிருந்தால். வன் முறைகள் நிறைந்த எமது நாட்டில் ஆயுதந் தரித்தோரால் மட்டுமின்றி, பாடசாலையில் பிள்ளையைச் சேரப்பதற்கும், பல்கலைக் கழகங்களில் ஆய்வுக் கட்டுரையை ஏற்றுக் கொள்வதற்கும், அலுவலகங்களில் தவறான முறைகளிலும் நடைபெறுவதாக ஊடகங்கள் அடிக்கடி சொல்கின்றன. அவசர கருத்தடை மாத்திரை பற்றிய அறிவு இல்லாததாலும், கருக்கலைப்பு சட்ட விரோதமாக இருப்பதாலும் பல பெண்கள்  சோகக் கண்ணீர் வடிப்பது மட்டுமின்றி சட்ட விரோத கருக்கலைப்புகளால் பல உயிர்கள்  பலி கொள்ளப்படுவதும் இரகசியம் அல்ல.

அவசர காலக் கருத்தடை முறைகள்
அதில் இரண்டு வகைகள் உண்டு.

 1. அவசர கருத்தடை மாத்திரைகள்.
 2. கருப்பையினுள் வைக்கும் லூப் என சொல்லப்படுவது. உண்மையில் இது கருப்பையினுள் வைக்கும் ஒரு வளையம் (உழிpநச ஐருனு) ஆகும்

அவசர கருத்தடை மாத்திரைகள்

மிகவும் பிரபலமானதும் சுலபமானதும் இதுதான். இதில் பெண்களின் உடலில் இயற்கையாகச் சுரக்கும் ஹோர்மோன் ஆன levonorgestrel   இருக்கிறது. இது பல பெயர்களில் கிடைக்கிறது. இலங்கையில் பிரபலமானது POSTINOR-2  என்ற பெயரில் மருந்துக் கடைகளில் வாங்கிக் கொள்ளலாம். மருத்துவரின் பிரிஸ்கிரிப்சன் இன்றியே வாங்கக் கூடியதாகும். ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும். இரண்டும் ஒரு தடவைக்கு தேவையானதாகும்.

மூன்று வழிகளில் இது செயற்படுகிறது என்கிறார்கள். சூலகத்திலிருந்து முட்டை வெளியேறுவதைத் தடுக்கலாம். அல்லது ஆணின் விந்திலுள்ள உயிரணுக்களும், பெண்ணின் முட்டையும் இணைந்து கருக்கட்டுவதைத் தடுக்கக் கூடும். அல்லது கருவானது கருப்பையில் தங்குவதை தடுக்கலாம்.

எவ்வாறு உபயோகிப்பது

எதிர்பாராத பாலுறவு கொண்ட பின் எவ்வளவு விரைவாக எடுக்க முடியுமோ அவ்வளவு கெதியில் எடுக்க வேண்டும். ஆயினும் 72 மணி நேரத்தின் பின்னர் எடுத்தால் அது நிச்சயமாகச் செயற்படும் என்று சொல்ல முடியாது.

ஒரு பைக்கற்றில் இரண்டு மாத்திரைகள் இருக்கும் என்றோம். இரண்டையும் ஒரே நேரத்தில் உட்கொள்ள வேண்டும். அல்லது ஒரு மாத்திரையை உடனடியாகவும் இரண்டாவது மாத்திரையை 12 மணி நேரத்திற்குள்;ளும் எடுக்க வேண்டும். ஆயினும் 16 மணித்தியாலத்திற்கு மேல் தாமதிப்பது கூடாது.

ஒரு வேளை நீங்கள் மாத்திரையை உட்கொண்ட பின் மூன்று மணி நேரத்திற்குள் வாந்தி எடுத்தால், மருந்து வாந்தியுடன் வெளியே போய்விட்டது என்றே கருத வேண்டும். அவ்வாறெனில் மீண்டும் மாத்திரையை எடுப்பது அவசியம்.

கருத்தடை வளையம்

கருத்தடை வளையம். கொப்பரால் ஆன கருத்தடை வளையமானது (copper-bearing IUD) வழமையான கருத்தடை முறைகளில் ஒன்று. ஆனால் இதனை அவசரகாலத் கருத்தடையாகவும் பயன்படுத்தலாம். உடலுறவு கொண்ட 5 நாட்களுக்குள் இதை கருப்பையiனுள் வைத்தால் கரு தங்காது.

Mirena_IntraUterine_System

இதை நீங்களாக வைக்க முடியாது. மருத்துவரே வைக்க வேண்டும்.

இறுதியாக

ஒரு பெண் தனக்கு அடிக்கடி குருதிப் போக்கு ஏற்படுவதாக மருத்துவரிடம் சென்றாள். அதற்கான காரணத்தை அறிய பல கேள்விகள் கேட்டும் பரிசோதித்துப் பார்த்தும் தெளியவில்லை.

“கருத்தடை முறைகள் ஏதேனும் கடைப்பிடிக்கறீர்களா” என்று வினவிய போது அவசரகால கருத்தடை மாத்திரைகள் உபயோகிப்பதாகக் கூறினாள்.

“எப்படி உபயோகிப்பீர்கள்” எனக் கேட்டார்.

“வாரத்திற்கு இரண்டு மூன்று தடவைகள் பாவிப்பேன்” என்றாள். அவசர காலத்திற்கு மட்டும் உபயோகிக்க வேண்டியதை நாளந்தம் பாவித்தால் வேறு என்ன நடக்கும் ?.

அவசர கருத்தடை மாத்திரை என்பது எதிர்பாராத தருணத்திற்கு மாத்திரமே ஆனது. வழமையான கருத்தடை முறை அல்ல. இதனையே தொடர்ந்தும் உபயோகிக்கலாம் என எண்ணுவது தவறாகும்.

வழமையான முறைகளாக கருத்தடை மாத்திரைகள், கருத்தடை ஊசி, இமபிளான்ட், ஆணுறை, பெண்ணுறை, இயற்கை முறை எனப் பலவும் உண்டு.

தவாறக உபயோகித்ததால் அத்தகைய பக்கவிளைவு ஏற்பட்டது.

அவசர காலத்திற்கு மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய அவசர காலச்சட்டம் தேசத் தலைவர்களால் ஆட்சிக் காலம் முழுவதும் பயன் படுத்தப்படுத்தப்படுவது ஞாபகத்திற்கு வருகிறதா? முந்தியது காப்பாற்றும். பிந்தியது கொல்லும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »