Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மறந்து போகாத சில’ Category

“படைப்பொன்றின் ஒவ்வொரு எழுத்திலும் அதை எழுதியவனுடைய மரபணு ஊர்ந்து செல்லும்” என்கிறார்கள். முருகானந்தன் அவர்களை வெளிப்படுத்தும் ஒரு முழுமையான நூல் வெளிவந்திருப்பது குறித்து மகிழ்ச்சி.

2004ம் ஆண்டு வெளியான எனது கலை இலக்கிய விமர்சனக் கட்டுரை நூலான  “மறந்து போகாத சில…” ற்கு வெளியீட்டு விழா அன்று நண்பர் சிதம்பரப்பிள்ளை சிவகுமார் ஆற்றிய விமர்சன உரையின் கட்டுரை வடிவம்.

இந்த நூலின் பெயரில்தான் எனது இலக்கிய விடயங்களுக்கான புளக்கான மறந்து போகாத சில 2007 வாக்கில் ஆரம்பித்தேன்.

Maranthu pogatha sila Front

முன் அட்டைப் படத்தில் உள்ள சிலை சிற்பக் கலைஞர் விஸ்வலிங்கம் செய்த மரச் சிற்பம்
இன்றும் எனது பருத்தித்துறை வீட்டில் இருக்கிறது

“மறந்து போகாத சில…” என்ற நூலின் தலைப்பே, அவரது தெரிவின் வகையைச் சொல்கிறது. அவரளவில் மறந்து போகாத அனுபவங்களைச் சுமக்கும் சில கட்டுரைகள் தொகுக்கப்பட்டிருக்கின்றன. இதைவிட வேறும் அதிகமான கட்டுரைகளை, விமர்சனக் குறிப்புகளை அவர் எழுதியிருக்கிறார். நானே வாசித்தும் கேட்டுமிருக்கிறேன்.

எல்லாவற்றினுள்ளுமிருந்து தன் நினைவில் தங்கிய, எழுதப்பட்ட காலத்தின் பின்னான ஒரு பார்வையில், வெளிப்படுத்தத் தகுந்தவை என்று கருதிய கட்டுரைகளைத் தொகுப்பாக்கியிருப்பதும், அவற்றையே வாசகப் பார்வைக்குத் தருவதென்பதும் ஓர் அக்கறை மிகுந்த செயற்பாடே. ஒரு படைப்பாளிக்கு அவசியம் இருந்தாக வேண்டிய சுயமதிப்பீட்டின் அடையாளம் இது.

வாசக நோக்கில், எம்.கே.முருகானந்தன் என்கிற இலக்கியவாதியின் அருமையான பல கருத்துக்கள் சரியானபடி நினைவில் கொள்ளப்படவில்லை என்று சொல்லலாம். வைத்தியராக நினைவில் நிற்குமளவுக்கு இலக்கியவாதியாக நிறுத்தப்படாமல் மறக்கப்படுபவராகவே தெரிகிறார். இன்றைய வாசக உலகுக்கு மிகத் தேவையான, காத்திரமான விமர்சனக் கருத்துக்களை அவ்வப்போது தந்திருக்கும் முருகானந்தன் அவர்களை, இங்கு எழுதப்படும் இலக்கிய வரலாற்றுக் குறிப்புகள் எதிலும் காணமுடிவதில்லை என்பது இந்த மறதியின் விளைவுதான். அல்லது, தன் கட்டுரைகளையோ, கதைகளையோ, கவிதைகளையோ ஒருவர் நூலாகத் தொகுத்துப் போடாவிட்டால் அவர் கண்டு கொள்ளப்பட மாட்டார் என்ற பொதுப் போக்கின் விளைவுதான்!ஈழத்தமிழிலக்கிய வளர்ச்சியில் மற்றும் வாசக ரசனைச் சூழலை மேம்படுத்துவதில் அக்கறை கொண்டோரின் அவதானத்தில் இந்நூலின் வருகை, சிறப்பான வரவேற்புக்குரியது.இலக்கிய வாசிப்பு அல்லது கலைகளை ரசிப்பதென்பது மனிதனின் அகவயமான செயற்பாடுதான். ஒரு கலைப் படைப்பு எனக்கு அளிக்கும் அனுபவம் எனக்கு மட்டுமே சொந்தமானது. என் ரசனையை நான் எவரிடமும் பகிர வேண்டிய அவசியம் இல்லைதான். ஆனால் அப்படைப்பு மீது ஒரு ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாக வேண்டும் என்று எண்ணும் போதும், என் ரசனையையும் மதிப்பீட்டையும் சமூகத்தில் உரைத்துப் பார்த்துக்கொள்ள விரும்பும் போதும் நான் அவற்றைப் பிறருக்குச் சொல்கிறேன். மற்றவர்கள் தங்கள் ரசனையையும் மதிப்பீட்டையும் வெளிப்படுத்துகிறார்கள். அவற்றை அறிந்து கொள்வதிலும் எனக்கு ஆர்வம் இருக்கிறது. ஒரு பொது விவாதத் தளம் உருவாகிறது. அதன் விழைவாக ஒரு படைப்பைப் பற்றிய சமூக வாசிப்பு, ஒட்டுமொத்த மதிப்பீடு உருவாகிறது.இந்த மதிப்பீட்டில் சில படைப்புகள் முக்கியமாவதும், சில முக்கியத்துவமிழப்பதும் நடைபெறுகிறது. இவ்வாறு படைப்புகளின் தரம் உருவாகிறது. முற்றிலும் அகவயமாக, கலை, அவரவருக்கு அளிக்கும் அனுபவம் மட்டுமே போதுமானதாக இருந்திருந்தால் தரம் பற்றிய கேள்விக்கு இடமில்லை. ஒருவருக்கு பிச்சமூர்த்தி பிடிக்கலாம். இன்னொருவருக்கு வைரமுத்து பிடிக்கலாம். அவரவருக்குப் பிடித்ததை அவரவர் கொண்டாடுவதுடன் நின்றுவிடலாம். இவ்வாறெனில், கலையில் ஏற்றத்தாழ்வு இருக்க வாய்ப்பில்லை ஆனால் நடைமுறையில் அப்படியில்லை. பாரதியையும் பழனி பாரதியையும் நாம் ஒரே தரத்தில் பார்ப்பதில்லை. இவ்வாறான சமூகத்தின் கூட்டு ரசனையை வடிவமைப்பதில் விமர்சனங்கள் மிக முக்கிய ஒரு பங்கை ஆற்றுகின்றன.

“மாங்குடி மருதனைத் தலைவனாகப் பெற்ற, உலகம் உள்ளதுவரை நிலைபெற்ற புகழினை உடைய புலவர் அவை|யும் அன்று இப்பணியைத்தான் செய்திருக்க வேண்டும்.

இந்த விமர்சனங்களின் அல்லது ஒரு படைப்பின் மீது வாசக கவனத்தைக் கொண்டு வருபவர்களின் வலிமையையும் அந்தப் படைப்புகள் மீது அவர்கள் கொண்டிருக்கும் அதிகாரத்தையும் நாம் அறிவோம்.

தளையசிங்கம் இன்று முக்கியமானவராக வருவதற்கும், ப.சிங்காரம் முப்பது நாற்பது ஆண்டுகள் கழித்துக் கண்டுபிடிக்கப்படுவதற்கும் இதுவே காரணம். தமிழ்ச் சமூகத்தைவிட இலக்கிய விழிப்புணர்வு கொண்ட சமூகங்களில் கூட இத்தகைய புறக்கணிப்புகள் நிகழ்ந்துள்ளன.

ஒரு படைப்பின் உயர்வு – தாழ்வு என்பதெல்லாம் அதை மதிப்பிடும் மனிதமனம் சார்ந்ததாகவே அமைகிறது. ஒரு விமர்சகர் குறிப்பிட்ட காரணங்களை முன்னிறுத்தி ஒரு படைப்பின் உயர்வைச் சொல்லக்கூடுமானால், இன்னொருவர் வேறு காரணங்களை முன்னிட்டு அதன் தாழ்வை இனங்காட்டக்கூடும். இங்கு உயர்வு அல்லது தாழ்வு என்பதில்லை, படைப்பின் மீதான விவாதம்தான் முக்கியம். இதுதான் வாசக கவனத்தைப் படைப்பிற்குப் பெற்றுத் தருகிறது. இதை உணர்ந்து கொண்டால் விமர்சகன் – படைப்பாளி முரண்பாட்டிற்கு இடமில்லை. ஆனால், வாசக கவனத்தை எதிர்பார்த்திருக்கும் படைப்பாளிகள், விமர்சன அதிகாரத்திற்கு ஓரளவு அஞ்சுபவர்களாகவே இருக்கிறார்கள். விமர்சகனுக்கும் படைப்பாளிக்குமான முரண்பாடும் இங்கு சகஜமாக இருக்கிறது. இந்த முரண்பாட்டை விரும்பாதவர்கள் அல்லது முரணினால் வீண் லாபமிழப்புதான் என்று கருதுபவர்கள், முருகானந்தன் குறிப்பிடுகிற அந்த விமர்சன வகைகளுக்குள் நின்று வட்டாடுகிறார்கள்.

மற்றவர்களுக்கு நோகாமல், விமர்சனம் செய்வதை ஒரு கலையாக அல்லது கட்டாயக் கடமை போலச் செய்து கொண்டிருக்கும் நமக்கு, எந்தப் பெரிய இலக்கிய ஐஊழு§ ஐயும் எடுத்தெறிந்து அபிப்பிராயங்களை உதிர்த்துவரும் ஜெயமோகன் போன்றவர்கள் வியப்பூட்டுகிறார்கள்.

ஒருவேளை, நம் இலக்கிய ஜாம்பவன்கள் எல்லோரும் இப்படி ஒரு குறுகிய அறைக்குள் எதிரெதிரே அடிக்கடி முகம் பார்த்துக் கொள்ள வேண்டியிருப்பதால் ஒரேயடியாக எடுத்தெறிந்து முகத்தை முறித்துக்கொள்ள முடியாமலிருக்கிறதோ, என்னவோ! அவர்களுக்கு, சமுத்திரத்தில் மூத்திரம் பெய்கிற சுதந்திரம்!

இங்கேயும் இன்றிருப்போரில் மு.பொ.கறாரான சில விமர்சனங்களைச் செய்திருக்கிறார். கவித்துவத்தில் மஹாகவியை விட நீலவாணனை உயர்வாய் நிறுவியதும், சோலைக்கிளிக்கு வைத்த விமர்சனமும் குறிப்பிட்டுச் சொல்லாத்தக்கன. இருந்தாலும் இளையவர்களின் படைப்புக்கள் என்று வருகிறபோது அவரும் ஊக்குவிப்பு விமர்சனத்தில்தான் இறங்குகிறார். இது எங்கள் இலக்கியச் சூழலின் வறுமை சார்ந்ததும் கூட. சக்கட்டைகளுக்குள் சண்டை வேறென்னத்துக்கு?

இந்த இடத்தில் – முருகானந்தன் வகைப்படுத்திக் காட்டுகிற விமர்சனப் போக்குகளைச் சொல்லிவிடலாம்.

போரும் நெருக்கடியுமிருந்த வெளிநாடுகளில் எல்லாம் ஏற்பட்ட கலாசார விழிப்புணர்ச்சியையும், பிறந்த உயிர் இலக்கியங்களையும் அறிந்த ஆதங்கத்தில் நம்நாட்டு நிலமை அவருக்கும் கவலையளிக்கிறது. சடங்குகளாக நடக்கும் நூல் வெளியீடுகளும், வெற்றுப் பாராட்டுரைகளும், விமர்சனங்கள் பற்றிய அவரது உரத்த சிந்தனையை வெளியிட வைத்திருக்கின்றன.

இன்றைய விமர்சனப் போக்குகளைக் குறிப்பாக ஐந்து வகைகளுக்குள் அடக்கியிருக்கிறார்.

1)தெரிந்தவர்கள், பழக்கமானவர்கள் என்பதற்காக, அவர்களைச் சங்கடப்படுத்தாத விமர்சனம்.

2)பிரபலஸ்தர்கள், செல்வாக்கு மிக்கவர்களுக்காகச் செய்யும் முதுகெலும்பில்லாத அசட்டு விமர்சனம்.

3)எனக்கு நீ செய், உனக்கு நான் செய்கிறேன் என்றவாறான பரஸ்பர முதுகுசொறியும் – நன்றிக்கடன் விமர்சனம்.

4)பிடிக்காதவர்களின் படைப்புக்களைப் பூதக்கண்ணாடி கொண்டு குறை கண்டுபிடித்துக் கொக்கரிக்கும் விமர்சனம்.

5)இளைய சந்ததியைத் தட்டிக் கொடுக்கிறோம் என்ற பாவனையில் அல்லது இன்றைக்கு இதுதான் எடுபடும் என்ற எண்ணத்தில் படைத்தவர் மனம் நோகாமல் தட்டிக் கொடுக்கும் ஊக்குவிப்பு விமர்சனம்.

Maranthu pogatha sila Back

இவையெல்லாம் நமது நலிவுக்குக் காரணமான போக்குகள் என்று குறிக்கிறார் முருகானந்தன். மு.பொ.முன்னுரையில் குறிப்பிடுவது போல இவற்றையெல்லாம் ஒரு பிரகடனமாக நாம் ஏற்றுக்கொள்வதுகூட சிறப்பானதே!

மறுபுறம், புத்தகங்களை வெளியிடுபவர்கள், படைப்பாளிகளின் எதிர்ப்பும் ஒன்றும் சகிப்புத்தன்மையுடையதாக இல்லை. விமர்சனம் என்ற வேண்டுதலின் பின்னாலுள்ள விருப்பம் புகழ்மொழிகள்தான்! விமர்சனம் வேண்டுமென்று கேட்கிறார்கள்@ ஆனால் எல்லோரும் பாராட்டைத்தான் எதிர்பார்க்கிறார்கள் என்று சொல்வதில் உண்மை இருக்கிறது.

நம்மை ஒருவருக்குப் பிடிக்காமல் போக ஏராளம் காரணங்கள் இருக்கின்றன. விமர்சனம் செய்வது மிக எளிய வழிகளில் ஒன்று. காலம் முழுக்க ஒருவரின் முகத்தை ஒருவர் பார்க்க முடியாமல் அவஸ்தைப்படுவதை விட, ~~இவர் விமர்சனத்தை ஏற்பவர்@ புகழ்மொழிகளை விரும்பாதவர்|| என்று கவிழ்த்து விடுவது மகிழ்ச்சிகரமான உறவுக்கு உத்தரவாதம்.

துறவிகள் தவிர்ந்த – மனிதர்களின் இயல்பான குணமாகவே இதைப்பார்க்க வேண்டியிருக்கிறது.

ஒவ்வொருவரும் தான் சிறந்தது என்று கருதுவதையே தன்னிலிருந்து படைப்பாக வெளித்தருகிறார்கள். அவரவர்க்கு அவரவர் ரசனைகளும் தெரிவுகளும் உயர்வானவையாகவும் நியாயமானவையாகவுமே தோன்றுகின்றன. இதை மற்றொருவர் சிதறடிக்கும்போது, அது ஒன்றும் முக்கியமானதில்லை என்று புறந்தள்ளி விடும் போது, அல்லது தரமற்றது என்று சொல்லிவிடும்போது பெரும்பாலும் அதைத் தாங்கிக் கொள்ளக்கூடியதாக இருப்பதில்லை.

விமர்சனத்தை வைப்பவரிலும் உள்நோக்கம் காணத்தோன்றுகிறது. தன் படைப்பைப் பாராட்டிய வேறு பலரையும் துணைக்கழைத்து தன் படைப்பின் தரத்தையும், தன் படைப்பின் மீதான விமர்சகர்களின் அடாவடியையும் நிறுவ முற்பட வேண்டியிருக்கிறது. சமீபத்தில் வைரமுத்துவுக்கு சாகித்ய விருது கிடைத்தது பற்றிய விமர்சனங்களையும் அதற்கு வைரமுத்துவின் எதிர்வினைகளையும் நாம் பார்த்துக் கொள்ளலாம்.

வைரமுத்து தம்மை நோபல் பரிசுக்கும் தகுதியானவர் என்றெண்ணுவது குறிப்பிடத்தக்கது. அந்தளவுக்கு இல்லாவிட்டாலும் நாம் ஒவ்வொருவரும் நமது படைப்பின் தரம் குறித்து நம்மளவிலேனும் திருப்தியான எண்ணமே கொண்டிருக்கிறோம்.

முப்பது நாற்பது வருடங்களுக்கு முன் எழுதப்பட்டிருக்கக்கூடிய சிறுகதை, நாவல் வடிவங்களையே இன்னமும் நாம் பிரசுரித்துக் கொண்டிருப்பதும், அவற்றுக்கு வெளியீட்டு விழாக்கள் நடத்திப் பேசிக் கொண்டிருப்பதும் வேறு எதைக் காட்டுகிறது?

ஒன்றிரண்டு விதிவிலக்கான முயற்சிகளை இங்கு சிலாகிப்பதற்கில்லை. யதார்த்தச் சித்தரிப்பின் சாத்தியங்களையே நாம் இன்னும் முயன்று பார்த்து முடிக்கவில்லை.

இந்த யதார்த்தச் சித்தரிப்பு, வாழ்வின் யதார்த்தத்தைத் துலக்குவதில் சரிவடைவதை உணர்வதும், பின்னர் யதார்த்தமற்ற சித்தரிப்புகளினு}டாக வாழ்வின் யதார்த்தத்தை துலக்கும் முயற்சியில் ஈடுபடுவதும், அது இங்கு பொதுப் போக்காக மாறுவதுமான காலம் ஊழஅ¢ரவநச மாற்றங்கள் இங்கு பரவும் பத்திலொரு பங்கு வேகத்தில் கூட வந்து சேரக்காணோம்.

தெணியானின் ‘காத்திருப்பு’ நாவலுக்கு எழுதிய அணிந்துரையில் “தமிழகத்தின் அண்மைய வளர்ச்சிகளோடு ஒப்பிடுகையில் எமது நாவல்கள் எந்த நிலையில் நிற்கின்றன என்பது யோசிக்கப்பட வேண்டிய விஷயம்” என்கிறார் முருகானந்தன்.

விரிவான பரந்த அனுபவங்களை அலை அலையாக வீசிவரும் நாவல் முயற்சி இன்னமும் இங்கு உதயமாகவில்லை, குறுநாவல்களே இங்கு நாவல்களாக நாமம் சூட்டப்படுகின்றன என்கிறார். இதற்கான பின்னணியை – காரணத்தையும் நேரிடையாகத் தொட்டுச் சொல்லிவிடுகிறார்.

“விமர்சகர்கள் முக்கியத்துவப்படுத்திய சமூக அரசியல் வரலாற்று சூழலுக்கு அமைவாக கற்பனை உலகத்திலிருந்து வரட்டுத்தனமாக எழுதித் தம்மையும் விமர்சகர்களையும் மட்டுமே திருப்திப்படுத்தினார்களே அன்றித் தம்மைச் செழுமைப்படுத்தவோ, வாசகர்களின் உணர்திறனை விருத்தி செய்யவோ முனையவில்லை.”| என்ற தம் விமர்சனத்தை வைக்கிறார். நம் கருத்துக்களுக்கிசைவாக வாழ்வை நிரூபித்துக் காட்டிவிட முற்படும் போக்காகவே நமது எழுத்துக்கள் இன்னமும் வட்டமடித்து நிற்கின்றன. சித்தாந்தச் சட்டகங்களுக்குள் அடைபட மறுக்கும், அத்துடன் இதுவரைக்குமான கதை சொல்லல் முறைகளினால் அள்ள இயலாத வாழ்வின் நட்பங்களை எழுத்தினால் அள்ளுவதற்கு நமது எந்த மரபு இன்னமும் தடையாக நிற்கிறது என்று பார்க்க வேண்டியுள்ளது. குறைந்தபட்சம் நமது போதாமைகள் குறித்த பிரக்ஞையுடனாவது இருக்கிறோமோ என்று அறிய வேண்டியுள்ளது. அந்தவகையில், முருகானந்தன் மறந்துபோகாத சிலவற்றைத் தொகுத்திருக்கும் இந்த நூல் நமக்கு முக்கியமானது.

“ஈழத்தைப் பொறுத்தவரையில், நாம் பெரும்பாலும் படைப்பாக்க முறைகளில் பழமை பேணுபவர்களாகவே இருந்துள்ளோம்” என்கிறார். இது நவீனத்துவத்தின் படைப்பாக்க நட்பங்களை நாம் நிறைவாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பதே. சில படைப்புகள் உள்ளனதான். ஆனால், எமது போக்காக, தேவையாக அது உணரப்பட்டதாகத் தெரியவில்லை.

இந்தியத் தமிழ்ப்படைப்புலகம் அறுபதுகளின் பிற்பகுதியிலே யதார்த்தப் போக்கின் போதாமைகளை உணர்ந்து, நவீனத்துவத்தை நோக்கி நகர்ந்துவிட்டது. நாம் இன்றைக்கும்கூட உதாரணம் சொல்வதற்கு ஓன்றிரண்டு படைப்புகளையே வைத்திருக்கிறோம்.

யதார்த்தச் சித்தரிப்புக்களைப் போலல்லாது நவீனத்துவப் படைப்புகள் வாசகப் பங்களிப்பினைக் கோரிப் பெறுபவை@ வாசகப் பங்களிப்பிலேயே முழுமையடைபவை@ வாசக மனதில் சுயமாக விரியும் பண்பு இவற்றுக்கு இருக்கும். இதனால்த்தான் வெவ்வேறு விதமான வாசிப்புகளுக்கு எப்போதும் நவீனத்துவப் படைப்புகளில் இடமிருந்து கொண்டே இருக்கும்.

வாழ்வின் யதார்த்தத்திற்கும், கதையில் உருக்கொள்ளும் யதார்த்தத்திற்குமிடையிலான இடைவெளியை நமது படைப்பாளிகளில் பெரும்பாலானோர் இன்னும் கண்டுகொள்வதில்லை என்றே தோன்றுகின்றது.

இதனோடு தொடர்பாக முருகானந்தன், படைப்பாற்றல் என்பது குறித்துச் சொல்லும் கருத்துக்கள் முக்கியமானவை.

“வெறும் அனுபவம் மட்டும் படைப்பாகி விடுவதில்லை. அதேசமயம் அனுபவத்தை இனங்காண்பதும் புரிந்து கொள்வதும் கூட இலகுவானதில்லை…. அனுபவம் – அசடுகள், அசமந்துகள் உட்பட எல்லோருக்கும்தான் வருகிறது. ஆனால் அதை அறியப் புரிய, கலையாக்கமாகப் புனைய தனி ஆற்றல் வேண்டும்” என்று இதை விளக்குகிறார்.

அதுமட்டுமில்லை. “தான் வாழ்கின்ற காலத்தில் தானும் உள்ளிட அடங்கியுள்ள சமூகத்தில் ஏற்படுகிற மாற்றங்களை ஏற்கனவே தானும் தனது சமூகமும் வரித்துக்கொண்ட முன் முடிவுகளுக்கு ஆட்படாமல் திறந்த மனதோடு ஏற்கவும் புரியவுமான மனப்பக்குவமும் அவனுக்கு வேண்டும்” என்றும் தெளிவுபடுத்துகிறார்.

தன் சிந்தனைக்கிசைவாக படைப்பைச் சிறுமைப்படுத்தாது வாழ்வின் உண்மைகள் குறித்தான தேடலுக்கு முக்கியத்துவமளிக்க வேண்டியதைச் சொல்கிறார்.

இதன்பொருள், கோட்பாட்டின் தளத்தில் நின்று படைப்புகளை ஆக்க முற்படக்கூடாது என்பதில்லை. தான் நம்புகிற தத்துவத்தை நத்தைக்கூடாக முதுகில் சுமந்தபடி இருப்பதுதான் அந்தப்படைப்புக்கு ஊறு ஏற்படுத்துகிறது. மாறாக, அந்தக் கோட்பாடு படைப்பாளியினுள் கரைந்துவிடும்போது, அதனை நியாயப்படுத்துவதற்கான தந்திங்கள் அவனுக்கு அவசியமற்றுப் போய்விடும்.

அப்படியல்லாமல், கோட்பாட்டினை ஒரு முகமூடியாக, ஒரு சுமையாக சுமந்து திரிபவனுக்குச் சதாகாலமும் அதை நியாயப்படுத்தியபடியே இருக்க வேண்டும்.

இதுதவிர தான் பெற்ற அனுபவத்தை படைப்பிலக்கியமாக்கும் செய்நேர்த்தி ஆற்றலையும் வலியுறுத்துகிறார். வெறும் களிமண்ணை கவினுறு மட்பாண்டங்களாக மாற்றும் குயவன் கை நேர்த்தியுடன் ஒப்பிடுகிறார்.

மூன்றாவாதாக, படைப்பு முழுமையடைவது வாசகப் பங்களிப்பில் என்பதைச் சொல்கிறார். மேலும் மேலும் வாசிப்பினால் ரசனைப் பரப்பை விரிவுபடுத்தியிருத்தலும், வாழ்வூடான அனுபவங்களால் செறிவடைந்திருத்தலும் படைப்புடன் உறவுகொள்ள முக்கியம் என்கிறார். இவ்வாறு படைப்பாளி – வாசக அனுபவங்களின் உறவு மூளையின் நரம்புக் கலங்களில் போதையை விட அற்புதமான உணர்வுகளை உற்பவித்துவிடும் சாகசம் நடந்தேறும் என்கிறார்.

முருகானந்தன், மருத்துவப் பணியோடு இலக்கியத் துறையிலும் ஈடுபாடு காட்டி வருவது குறித்து ஆச்சரியம் கொள்பவர்களுக்கு, மேலும் வியப்பூட்டக்கூடியது, கலையின் பல்வேறு வடிவங்களிலும் அவருக்கிருக்கும் ஆளுமையும் ஆற்றலும், அவற்றிலிருக்கும் ரசனைப் பயிற்சியும். சிறுகதை, கவிதை, நாவல் என்று மட்டுமில்லாது சினிமா பற்றி நுண்ணிய விசேடமான பார்வைகளை முன்வைக்கிறார். அப்படியே ஓவியம் பற்றி, சிற்பக்கலை பற்றி, நாடகங்கள் பற்றி, நடிப்புப் பற்றி, வரலாறு பற்றி, விமர்சனங்கள் பற்றி, உளவியல் பற்றி எல்லாம் கறாரானதும், காலத்தோடு முன்னகர்ந்து வந்ததுமான கருத்துக்களைக் கொண்டவராக இருக்கிறார்.

கே.எஸ்.சிவகுமாரனின் நூலுக்கான அறிமுகத்தில் நல்ல சினிமா என்றால் என்ன, அதனுடைய அம்சங்கள் எவை, அவற்றை நாம் எப்படி ரசிக்க வேண்டும் போன்ற விடயங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் பணியை சலிக்காமல் தன்னந்தனியாகத் தொடர்ந்து ஆற்றிவந்த முன்னோடி என்று குறிப்பிடுகிறார்.

இது மட்டுமன்றி, பத்தி எழுத்துக்கள்கூட எப்படி இருக்கவேண்டும் என்று சீரியஸாக யோசித்திருக்கிறார்.

முருகானந்தன் அவர்களின் சினிமா ரசனைக் கட்டுரைகளைப் பார்க்கும்போது, உண்மையில் அந்தப் பணியையும் சிறப்பாகவே தொடரக்கூடியவர் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். தொலைக்காட்சியில் தற்செயலாகப் பார்க்க நேர்ந்த ஒரு படத்தைக்கூட மற்றவர்களுக்கு அழகுற அறிமுகப்படுத்துகிறார்.

“உங்களுக்கு ஒரு நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற ஆவல் எப்பொழுதாவது இருந்திருக்கிறதா? அதுவும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் கனவுக் கன்னியான அழகும் கவர்ச்சியும் நளினமும் நிறைந்த நடிகையின் கணவனாக வரவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதா? இன்றில்லாவிட்டாலும் விசிலடித்துத் திரிந்த கட்டிளம் பருவத்திலாவது இருந்திருக்கிறதா? அப்படியாயின் ஆல றகைந ளை ய¦ யுஉவசநளள என்ற ·பிரெஞ்சுத் திரைப்படத்தை ஒருதடவை பாருங்கள். அது உங்கள் மனத்தைத் தயார்ப்படுத்த உதவும்”| என்று ஆரம்பிக்கிறது அந்தக் கட்டுரை.

மரத்தைச் செதுக்கிச் சிற்பமாக்கும் கலையிலும் மனம் தோய்கிறார். அதையே அட்டைப்படமாகவும் தந்திருக்கிறார். அரூப பாணியிலான சிற்பங்களைக் குறிப்பிடுகின்ற போது, “ஒரு நிகழ்வின் தோற்றத்தை மாத்திரமன்றி, அக்கணத்தில் கிளர்ந்தெழுகின்ற உணர்வலைகளையும் சித்தரிக்கும் அற்புதம்” என்கிறார். “மனதிற்குப் பிடிபட மறுத்து, புரிந்துகொள்ள முடியாது நிற்கும் ஒரு சிந்தனையோ காட்சியையோ கருத்தையோ ஒரு படைப்பிற்குள் அடக்க முயலும் கலைஞனின் தேடலிலும் முயற்சியிலும்தான் உன்னதமான கலைப்படைப்பு உருவாகிறது” என்கிறார்.

சிறந்த கவிதை, சிறந்த ஓவியம், சிறந்த நாவல் என்று ஒன்றை நிறுவும் திட்டவட்டமான விதிகள் எதுவும் முழுமையாக இன்றுவரை உருவாகவில்லை. இலக்கிய விமர்சனத்தின் பலநூறு வருட வரலாற்றில், இலக்கியம் என்பது தொடர்ந்து மாறிமாறிப் பலரால் பலவிதமாக விளக்கப்பட்டு வருவதைக் கண்டுவருகிறோம். அதேபோல் ஓவியம் என்ற வரையறையைத் தொடர்ந்து மீறிய படியே உள்ளது ஓவியக்கலை. இதேபோலவே ஏனைய கலைகளும். ஆனாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒருவரோ பலரோ வைக்கும் விளக்கத்தின் மூலமாக, அந்தக் கலைகுறித்த விளக்கத்தை மேலும் நெருக்கிவிட்டதாக உணர்கிறோம்.

உதாரணமாக, விளக்கத்திற்குப் பிடிபடாமல் நழுவும் ‘கவித்துவம்’ என்பதை முருகானந்தன் இப்படி விவரிக்கிறார். “கவித்துவம் என்பது எந்தக் கட்டுகளுக்குள்ளும் சிறைப்படாத அற்புத அனுபவம். அது வார்த்தைகளால் வரையறுத்துச் சொல்ல முடியாத, வார்த்தைகளின் சேர்க்கை நேர்த்தியால் வாசகனை வசப்படுத்தும் உயர் பண்பாகும். நல்ல கவிதையென்பது, வாசகனின் அக மென்னுணர்வில் எதையாவது, எப்படியாவது, எங்கேயாவது தொட்டுவிட வேண்டிய அனுபவப்பகிர்வாக அமைய வேண்டும். மலருக்கு மணம்போல கவிதைக்கு கவித்துவம் இருக்கிறது…” என்று அதை விளக்கப்படுத்துகிறார்.

அதேசமயம், எல்லா இடங்களிலும் நமது போதாமைகளை வெளிப்படுத்த முருகானந்தன் தயங்குவதில்லை.

நாம் சரியாக இருக்கிறோம் என்ற தன்முதுகுத் தட்டல்கள் ஒருபோதும் நம்மைச் சரிவிலிருந்து எழுப்பப் போவதில்லை. பாராட்டாக எழுதும் முன்னுரைகள் அணி;நதுரைகளில் கூட தன் விமர்சனப் பார்வையையும் அதிருப்தியையும் ஆழுத்திச் சொல்லிய பிறகே பாராட்டைத் தொடர்கிறார்.

தகவத்தின் பரிசுக் கதைகள் பற்றி குறிப்பில் – இக்கதைகளைத் தேர்ந்தெடுக்க உபயோகிக்கப்படும் அளவுகோல்கள் என்ன? அவை யாவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவுகோல்கள் தானா? தேர்வாளர்கள் எல்லாருமே எல்லா இலக்கியக் குழுக்களின் படைப்புகளையும் திறந்த மனதோடு பார்க்கக்கூடிய நடுநிலையாளர்கள் தானா? போன்ற சந்தேகங்களை எழுப்புகிறார்.

தெணியான் பொதுவாக ஏதாவது ஒரு நல்ல கருத்தை வலியுறுத்துவதற்காகவே கதை எழுதுபவர். அவரது வெற்றிக்கும் தோல்விக்கும் இதுவே காரணம் என்கிறார். தோல்வி என்று முருகானந்தன் கருதுவது பற்றி யோசிக்க வேண்டும்.

கே.ஆர்.டேவிட், வாசகர்களுக்கு எதிர்பாராத, அதிர்ச்சியூட்டும் முடிவைக் கொடுக்க வேண்டும் என்ற தவிப்பில் கதைகளின் உண்மைத் தன்மையைச் சிதைத்து விடுவதாகக் குறிப்பிடுகிறார்.

மக்களின் அவல வாழ்க்கையை மட்டுமல்லாமல் அவர்களின் அறியாமையை, அசட்டுத்தனங்களை, அசிங்கங்களையும் கூட கதையாக்கியிருப்பதற்காக ந.சண்முகரத்தினத்தைப் பாராட்டுகிறார்.

மொத்தத்தில் முருகானந்தன் அவர்களின் ஆதங்கங்களும், ஈழத்து இலக்கியம் – நம்மை நாமே ஊதிப் பெருப்பித்துப் பேசிக் கொண்டிருக்குமளவுக்கு உன்னதங்களைத் தொட்டிருக்கிறதா என்னும் கேள்வியும் முக்கியமானவை. எங்கள் போதாமைகள் குறித்து அவர் கவனப்படுத்துகின்ற குறிப்புகள் நம் தீவிர சிந்தனைக்குரியவை.

இன்றைய வாசக மனதின் தேடல்களுக்கு திசைகாட்டி உதவுவதாகவும், கலையின் நுட்பங்களுக்குள் ஊடுருவிச் செல்ல பயிற்சிதரும் அறிமுகமாகவும் இந்தநூல் பயன் கொண்டிருக்கிறது. மிக மென்மையாகவும் மனதைக் கவரும் விதமாகவும் பல விஷயங்களை மனதில் பதிய வைத்துவிட முடிகிறது முருகானந்தன் அவர்களுக்கு.

“நானே அறிந்தவன், பிறருக்கு நிர்ணயிக்கக்கூடியவன், நானே மேலானவன் என்னும் மனப்போக்கு கொண்ட எழுத்தாளர்களோ, அவனது பாத்திரங்களோ சந்தேகத்திற்கு இடமானவர்கள்” என்பார் அமெரிக்க எழுத்தாளரான லெஸ்லி ·பீட்லர். தன்முனைப்புத் தவிர்த்த எழுத்தைக் காண்பது சிரமசாத்தியமான ஒரு சூழலில் னுச. முருகானந்தனின் எழுத்துக்கள், அதிகாரமற்ற நடையாலும், அழகாகச் சொல்லும் முறையாலும் வாசக மனதை மலர்வித்து ஆசுவாசம் தருகின்றன. மென்மை, நுட்பம், இனிமை என்று விரிந்து, உண்மையே கலையின் அழகினை தீர்மானிப்பதென்று வாதிடுகின்றன. இலக்கியம் வெறும் சாய்வுநாற்காலியல்ல, அதேசமயம் நெம்புகோல் ஆவதுமில்லை என்பதை உணர்த்துகின்றன. இலக்கியத்தின் நோக்கம், மானுடவாழ்வு குறித்த உண்மையைச் சென்று தொடுவதாகத்தான் இருக்கும் என்று வலியுறுத்தி நம்பிக்கையளிக்கின்றன. புத்தகமாக்கி அளித்திருக்கும் மீரா பதிப்பகத்தினருக்குப் பாராட்டைச் சொல்ல வேண்டும்.

முன்னட்டை- விஸ்வலிங்கத்தின் “காவடியாட்டம்” மரச்சிற்பத்தின் புகைப்படம். இச்சிற்பம் நூலாசிரியரின் வீட்டை அலங்கரிக்கிறது. பின்னட்டை- தீருவிலில் அமைந்திருந்த போராளிகளின் சிலை. ஓவியரும் சிற்பியுமான ரமணியின் படைப்பு. இது 1996 இலங்கை இராணுவத்தால் நிர்மூலமாக்கப்பட்து.

விமர்சனம்:- சிதம்பரப்பிள்ளை சிவகுமார்.
நூலாசிரியர்:- டொக்டர் எம்.கே.முருகானந்தன்.
0.00.0

Read Full Post »