Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கறுவா’ Category

அண்மையில் ஒரு ஆய்வுக் கட்டுரையைப் படித்தபோது நினைவுகள் என் குழந்தைப் பருவத்தை நோக்கித் துள்ளிச் சென்றது. சின்னப்பையனாக மஹரகஹவில் வாழ்ந்த போது நாங்கள் இருந்த வீட்டின் வளவிற்குள் சிறிய செடிகள் அரும்பி நிற்கும். நானும் எனது தங்கையும் அவற்றின் தளிர்களை முறித்து வாயில் போட்டுச் சப்புவோம். சற்றுக் காரணமும் நறுமணம் சேர்ந்து வரும்.

ஆம் அவை கறுவாக் கன்றுகள்தாம்.

Roscoea purpurea 'Cinnamon Stick'

பொலி சிஸ்டிக் ஓவரிப் பிரச்சனை

Polycystic ovary syndrome நோயால் பாதிக்கப்படும் இளம் பெண்களை இப்பொழுது அதிக அதிகமாகக் காண்கிறோம். மகப்பேற்றுப் பருவத்தில் உள்ள இளம் பெண்களிடையே அதிகமாகக் காணப்படுகின்ற ஒருவகை ஹோர்மோன் குறைபாட்டு நோய் இதுவாகும். இந்நோயால் பாதிக்கப்படும் பெண்களின் சூலகத்தின் வெளி ஓரமாக பல சிறிய நீர்க்கட்டிகள் தென்படுவதை ஒட்டியே இந்தப் பெயர் வந்தது.

PCOS-diagnosis

ஸ்கான் பரிசோதனையில் கண்டறியப்படும் நீர்க்கட்டிகளுக்கு இருப்பதற்கு அப்பால் வெளிப்படையான பல்வேறு அறிகுறிகளையும் பிரச்சனைகளையும்; பெண்களிடத்தில் ஏற்படுத்துகிறது. அதற்குக் காரணம் அத்தகையவர்களது உடலில் இன்சுலின் செயற்பாடு சரியாக இல்லாமையே ஆகும்.Insulin Insensitivity  என்பார்கள்.

polycystic-ovary-syndrome-symptomswhat-is-pcos------southern-belle-magazine-tspcpern

அவர்களில் பொதுவாக மாதவிடாய் ஒழுங்காக வருவதில்லை. நீண்ட இடைவெளிகளில் வரும். வந்தாலும் நீண்ட நாட்களுக்கு குருதிப் பெருக்கு தொடரலாம். இவர்கள் அதீத எடையுள்ள பெண்களாக இருப்பர். முகப்பருக்கள் தோன்றுவது அதிகமாக இருக்கும். அத்துடன் ஆண்களைப்போல இவர்களது முகத்திலும் வயிற்றிலும் முடி அரும்புவதையும் காணலாம். மிக முக்கிய பாதிப்பு ஒழுங்கற்ற மாதவிடாயும் குழந்தை தங்குவதில் ஏற்படும் பிரச்சனையும்தான்.

இப் பிரச்சனைகளால் பல பெண்கள் தொல்லைப்படுகிறார்கள். தாங்கள் என்றென்றும் மலடாக வாழ நேருமோ என அஞ்சுகிறார்கள். எதிர்காலத்தில் நீரிழிவையும் இது கொண்டு வருக் கூடும் என்பதால் மேலும் அக்கறை எடுக்க வேண்டியுள்ளது.

upper-body-fat

இதற்கும் கறுவாவிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?

கறுவா ஆய்வு

New York  நகரிலுள்ள Columbia University Medical Center ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு செய்யப்பட்டது. அதன்படி கறுவாவைத் தூள் செய்து குறிப்பிட்ட அளவுகளில் உட்கொள்ளக் கொடுத்தபோது அவர்களுக்கு மாதவிடாய் சற்று ஒழுங்கானது. இதை எடுக்காத பெண்களைவிட இருமடங்கு ஒழுங்காக மாதவிடாய் வந்ததாம்.

இன்றைய காலகட்டத்தில் மகப் பேற்றுப் பருவத்தில் உள்ள பெண்களில் சுமார் 5 முதல் 10 சதவிகிதமானவர்களுக்கு இப் பிரச்சனை இருக்கிறது. அமெரிக்காவில் மாத்திரம் 5 மில்லியன் பெண்களுக்கு இப் பிரச்சனை இருக்கிறது. இலங்கையிலும் பல இளம் பெண்களை இப் பிரச்சனையோடு காண்கிறோம்.

சிகிச்சையைப் பொறுத்த வரையில் இப் பெண்களது எடையைக் குறைத்தல், சூலகத்தில் முட்டை உருவாவதைத் தூண்டும் மருந்தான குளோமிபீன்; கொடுத்தல, இன்சுலின் செயற்பாட்டு தன்மையை அதிகரிப்பதற்காக Metformin ன்ற மருந்தை உபயோகித்தல் போன்றவை பயன்படுகின்றன.

‘டொக்டர் மருந்தை மாறித் தந்து போட்டாரோ’ எனச் சில பெண்கள் பதறியடித்துக் கொண்டு ஓடி வருவார்கள். காரணம் Metformin என்பது நீரிழிவு நோயாளருக்கும் கொடுக்கப்படும் பிரபல மருந்து என்பதால் ஆகும்.

0

‘கறுவாவின் எந்தச் செயற்பாடானது பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பெண்களில் மாதவிடாயை ஒழுங்காக்வதற்கு உதவியது என்பது தெளிவாகப் புரியில்லை’ என்கிறார் ஆய்வின் தலைமை ஆய்வாளரான Dr. Daniel Kort  அவர்கள். ‘அது குளுக்கோஸ் மற்றும் இன்சுலினின் ஆகியவற்றை திறமையாகக் கையாள்வதில் எமது உடலின் செயற்திறனை அதிகரிக்கும் என்கதால் என நம்புகிறேன்’ என மேலும் சொல்லியிருக்கிறார்.

கறுவாவும் நீரிழிவும் மற்றொரு ஆய்வு

இதேபோல முன்பு செய்யப்பட்ட மற்றுமொரு 60 பேரை உள்ளடக்கிய ஆய்வானது கறுவாவிற்கு குருதியில் சீனியின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இருக்கிறது என்று சொல்லியிருந்தது. அத்துடன் மொத்த கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதுடன் கெட்ட கொலஸ்டரோலான டுனுடு கொலஸ்டரோல் மற்றும் ரைகிளிசரைட் அளவுகளையும் குறைக்கும் என்றது. ஆனால் வேறு சில ஆய்வுகள் அதை மறுதலித்திருப்பதால் திடமான முடிவு இல்லை எனலாம்.

இப்பொழுது செய்யப்பட்டது மேலும் சிறிய ஆய்வு ஆகும். தெரிவு செய்யப்பட்ட 16 பெண்களில் 11 பேருக்கு தினமும் 1500 மில்லி கிராம் கறுவாத் தூள் மாத்திரை வழங்கப்பட்டது. மிகுதி 5 பேருக்கும் அதே போன்ற தோற்றமுள்ள போலி மாத்திரைகளை கொடுத்தார்கள். தொடர்ந்து ஆறு மாதங்களுக்கு கொடுத்தபோது கறுவாத் தூள் கொடுக்ப்பட்ட பெண்களில் மாதவிடாய் பெருமளவு ஒழுங்காகியது.

அது மாத்திரமல்ல அவர்களில் இரண்டு பெண்கள் மேலதிக சிகிச்சைகள் ஏதும் இpன்றிக் கர்ப்பமானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே மகப் இல்லாத எல்லாப் பெண்களுக்கும் இது உதவுமா என்று கேட்டால் இல்லை என்றே சொல்ல வேண்டும். ஆனால் தேர்ந்தெடுத்த பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பல பெண்களுக்கு உதவக் கூடும். நிச்சயம் உதவும் என இன்றைய நிலையில் கூறமுடியாது.

இது ஒரு இயற்கையான முறை. அதிக செலவற்றது. சாதாரணமாகக் கிடைக்கும் கறுவாவை அதுவும் அதீதமான அளவில் இல்லாமல் கொடுப்பதால் பாரிய பக்க விளைவுகள் ஏற்படாது என நம்பலாம். ஆனால் அவற்றைத் தான் தோன்றித்தனமாகச் செய்யாது ஒரு மருத்துவரின் கவனிப்பின் கீழ் செய்வதே விரும்பத்தக்கது.

இயற்கை மருத்துவத்தில் கறுவா

சாதாரண வீட்டு வைத்தியத்திலும் இயற்கை மருத்துவத்திலும் கறுவா பயன்படுத்தப்படுகிறது. வயிற்றோட்டம், வயிற்றில் வாய்வு, மாதவிடாய்க் குத்து, தசைப் பிடிப்பு போன்றவற்றிற்கும் உதவும் என நம்புகிறார்கள். பசியைத் தூண்டுவதற்கும் தடிமன், காய்ச்சல் போன்றவற்றிகும் உதவுமாம். கிருமித் தொற்றுக்கு எதிரான ஆற்றலும் இருக்கிறது என சொல்கிறார்கள்.

ஆனால் உற்பத்தியார்கள் இந்த நம்பிக்கைகளையும், முற்றுப் பெறாத ஆய்வு முடிவுகளையம் பாவனைப் பொருள் தயாரிப்புகளில் பயன்படுத்தி தங்கள் வியாபாரத்தை அமோகமாகப் பெருக்குகிறார்கள். பற்பசை, சோப், வாய் கொப்பளிக்கும் மருந்துகள், ஓயின்மென்ட், சரும கிறீம்கள், அழகு சாதன பொருட்கள போன்றவற்றில் கறுவா ஏற்கனவே கலந்திருக்கிறார்கள்

கறுவாவை வேறு மருந்துகளுடன் கலந்து கிறீமாகத் தயாரித்து விந்து முந்துதலுக்கு வெளிப் பூச்சு மருந்தாகப் பயன்படுததியதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன. விந்து முந்துவது குறைந்ததா அல்லது கறுவாவின் காரத்தால் ஆண்குறியில் எரிவு ஏற்பட்டு சோர்ந்து வீழ்ந்ததா என்பது எனக்குத் தெரியாது.

நீரிழிவு நோய்க்கு உதவும் என்பதால், தங்கள் வழமையான மருந்துகளுடன் கறுவாவை அதிக அளவில் உண்பது ஆபத்திலும் முடியலாம். கறுவாவிற்கு உண்மையில் இரத்த சீனியின் அளவைக் குறைக்கும் ஆற்றல் இருந்தால் அவ்வாறு அதிக அளவில் உண்ணும்போது திடீரென சீனியின் அளவு அதீதமாகக் குறைந்து மயக்கமும் ஏற்படலாம் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். எவ்வளவு கறுவா சாப்பிட்டால் எந்தளவிற்கு சீனியின் அளவு குறையும், மருந்துகளுடன் சேர்த்து உண்பதால் பக்கவிளைவுகள் ஏற்படாதா போன்ற விடயங்களில் தெளிவான விடைகள் கிடையாது.

எனவே கறுவாவை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு மருத்துவர்கள் சிபார்சு செய்வது முடியாது.

பக்க விளைவுகள்

சாதாரண அளவில் சமையலில் பயன்படுத்தும்போது பக்க விளைவுகள் ஏற்படுவதாகத் தெரியவில்லை.

ஆயினும் அதிக அளவில் உபயோகித்தால் வாய் நாக்கு உதடு போன்றவற்றை உறுத்தி சிறு புண்களை ஏற்படுத்தக் கூடும். தோலில் கிறீமாக உபயோகிக்கும்போது தோல் சிவந்து எரிவு ஏற்படலாம்.

கறுவாவை அதிக அளவில் உட்கொண்டால் அது நச்சுத்தன்மையாகலாம். முக்கியமாக ஈரல் நோயுள்ளவர்கள் அதிகம் பாதிப்படைவர்.

நீரிழிவு உள்ளவர்கள் கறுவாவை மருந்துபோல அதிகம் உண்பதால் குருதியில் சீனியின் அளவு குறையலாம் என்பதை ஏற்கனவே கூறினோம்.

ஹோர்மோன அளவுகளில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதால் மார்பக புற்று நோயுள்ளவர்கள் உட்கொள்வது நல்லதல்ல.

அன்ரிபயோடிக், நீரிழிவு மருந்துகள், இருதய நோய் மருந்துகள், குருதி உறைதலைக் குறைக்கும் மருந்துகள் போன்ற எந்த மருந்துகளையும் தினமும் உட்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி மேலதிக கறுவா உட்கொளவது நல்லதல்ல.

இறுதியாக

முடிவாகச் சொல்வதானால் கறுவா நல்லது. அதை உணவோடு சேர்த்துக் கொள்ளலாம். ஆனால் அதை மேலதிகமாக ஆக (cinnamon suppliment)  உபயோகிப்பதில் அவதானம் தேவை. மருத்துவரின் ஆலோசனை இன்றி மேலதிகமாக உண்பது நல்லதல்ல. சாதாரண அளவில் உணவில் சேர்த்துக் கொள்வதில் தவறல்ல.

பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனை உள்ள பெண்கள் வேறு நோய்கள் இல்லாதவிடத்து மேலதிக கறுவாவை உட்கொள்வதில் பிரச்சனை இருக்காது. ஆனால் பொலி சிஸ்டிக ஓவரிப் பிரச்சனைக்கும் குழந்தைப் பேறின்மைக்குமான நிச்சயமாகப் பயனளிக்கும் மருந்து என எண்ணி உபயோகிக்க வேண்டாம்.

10260401-christmas-spices-cooking-ingredients-cinnamon-sticks-clove-and-star-anise

மேலும் தெளிவான ஆய்வு முடிவுகள் வரும்வரை உதவக்கூடும் என்று மட்டுமே கூற முடியும். எதற்கும் மருத்துவரின் ஆலோசனையுடன் செயற்படுங்கள்.

மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது வெண்டைக் காய் வெள்ளைக் கறியில் இரு கறுவாத் துண்டுகள் தென்பட்டன. சின்ன வயதில் கறுவா சப்பிய அதே மகிழ்ச்சியுடன் அவற்றை வாயில் போட்டுச் சப்பிக் கொண்டேன். அதை உணவில் சேர்க்கும் மனைவியின் கைப் பக்குவத்தை மனதார வாழ்த்தினேன்.

சாப்பாட்டுப் பிரியனாக மட்டுமல்ல. மருத்துவனாகவும் வாழ்த்தியது அதுவாகும்.

எனது ஹாய் நலமா புளக்கில் 20th December 2013 வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0..000

Read Full Post »