Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கழிப்பறைகள்’ Category

>அவள் ஒரு பள்ளி மாணவி. பதினைந்து வயதிருக்கும்.

“யூரின் பாஸ் பண்ணக்கை எரியுது” என்றாள் ‘மொட்’ தமிழில்.


அடிக்கடி சிறுநீர் கழிவதாகவும், அடக்க முடியாமல் அடிக்கடி போக வேண்டியிருக்கு என்பதாகவும் மேலும் சொன்னாள். இதனால் ஸ்கூல் போக முடியவில்லை என்பது அவளது கவலை.

உடனடியாகச் சோதித்துப் பார்த்ததில் அவளது சிறுநீரில் பக்டீரியா கிருமித் தொற்று (Urinary Tract Infection) இருப்பது நிச்சயமாயிற்று.

இதனால் அம்மா கடுமையாகக் கலவரமடைந்தாள்.

இந்தப் பிள்ளைக்கு எப்படி கிருமி தொற்றியது, யாரிலிருந்து தொற்றியது எனத் தடுமாறத் தொடங்கினாள்.

இது ஒருவரிலிருந்து மற்றவர்களுக்கு தொற்றும் பாலியல் நோய் போன்றதல்ல என்பதை அவளுக்கு நாசூக்காகப் புரியவைக்க நேர்ந்தது.

மற்றவன் இன்னும் சிறிய பையன்.

“சூ செய்யக்கை சரியா சுடுற மாதிரிக் கிடக்கு” என்றான்.

சுத்தம் பார்ப்பதில் விண்ணன்.
மருத்துமனைக் கட்டிலில் சோதிப்பதற்காப் படுக்கவே மிகவும் அசூசைப்பட்டான். இவனுக்கும் சிறுநீரிப் பரிசோதனையில் கிருமி தொற்றியிருப்பது நிரூபணமாயிற்று.

“இவ்வளவு சுத்தம் பார்க்கிற இவனுக்கு எப்படி கிருமி தொற்றியது?”
என அம்மா அதிசயித்தாள்.

சிறுநீரக கிருமித் தொற்று

சிறுநீர்த் தொகுதி கிருமித் தொற்று என்பது அடிக்கடி காணும் நோயாகும்.


பெண்களில் அதுவும் மாதவிடாய் நின்ற பெண்களில் அதிகம் காணப்படுகிறது. இருந்த போதும் இளவயதிலும் ஏற்படுகிறது.
பள்ளிச் சிறுவர்களிலும் வருகிறது.

ஏன் பள்ளிக் செல்லும் பிள்ளைகளில்

பள்ளிச் சிறார்களில் வருவதற்குக் காரணம் என்னவாயிருக்கும்?

சிறுநீர் கிருமித் தொற்று ஏற்படுவதற்கு பல விடயங்கள் காரணமாயிருப்பதை அறிகிறோம்.

  1. நீரிழிவு, கர்ப்பமாயிருத்தல்,
  2. சிறுநீரகக் கற்கள்,
  3. பிறப்பிலேயே சிறுநீரகத் தொகுதியல் உள்ள குறைபாடுகள்,
  4. ஏற்கனவே கதீட்டர் போடப்பட்டிருத்தல். வேறு நோய்களால் நீரிழப்பு நிலை ஏற்படுதல்,
  5. முன்னர் சிறுநீர் கிருமித் தொற்று ஏற்பட்டிருத்தல்,
  6. பாலுறவு,
  7. மாதவிடாய் முற்றாக நிற்பதால் ஹோர்மோன் மற்றும் தசைத் தொகுதிகளின் பலவீனம் என அடுக்கிக் கொண்டே போகலாம்.

ஆனால் இவற்றைத் தவிர அதிகம் பேசப்படாத ஒரு விடயமும் உண்டு.

சிறுநீரானது நீண்ட நேரம் சலப்பையில் தேங்கி நிற்பதும் தொற்று ஏற்படுவதற்கு காரணமாகிறது.

உதாரணமாக புரஸ்ரேட் சுரப்பி வீக்கம், மற்றும் கட்டிகள் காரணமாக சிறுநீர் முழுமையாக வெளியேறாது சலப்பையில் தேங்கி நிற்பதாகும்.

“இறைத்த கிணறு ஊறும் இறையாத கிணறு நாறும்” என்பது போல சலப்பையிலிருந்து வெளியேறாது நிற்கும் சிறுநிரில் கிருமி தொற்றுவதற்கு வாய்ப்பு அதிகமாகும்.

மேற் கூறிய இருவருக்கும் சிறுநீர் தேங்கி நிற்பதுதான் நோய்க்குகான காரணம் என்பது தெரிய வந்தது.

கழிப்பறை சுத்தம் இல்லை என்பதால் அருவருப்படைந்து அந்தப் பக்கமே போவதில்லை.

இலங்கையில்

பள்ளி மாணவர்கள் அதிகாலை முதல் மதியம் 2 – 2.30 மணிவரை அடக்கி வைத்திருக்கிறார்கள்.

வீடு திரும்பிய பின்னரே வெளியேற்ற முடிகிறது.

சில பிள்ளைகள் பாடசாலை முடிந்ததும் நேராக ரியூசனுக்கு செல்ல நேர்கிறது. அப்படியானால் சலப்பையைக் காலியாக்க மேலும் காலதாமதமாகிறது.

ஏனைய நாடுகளில் பாடசாலை நேரங்கள் வேறு விதமாக இருக்கும்.

இவர்கள் மாத்திரமில்லை நான் தினமும் சந்திக்கும் பிள்ளைகள் பலரும் பெரும்பாலும் பாடசாலையில் சிறுநீர் கழிப்பதில்லை.

“ஏன்?” எனக் கேட்டால்,

“அதுக்குள்ளை எப்படி போறது?” எனத் திருப்பிக் கேள்வி எழுப்புகிறார்கள்.


அசுத்தமான அருவருக்க வைக்கும் கழிப்பறைகள்தான்.

பெரும்பாலான பாடசாலைகளின் கழிப்பறைகளுக்கு அருகே சென்றால் மூக்கைப் பொத்திக் கொண்டு விரைந்து கடக்க வேண்டியிருக்கும்.

கீழே காலணி அணிந்திருந்தாலும் கால் வைக்கக் கூசும். அவ்வளவு நரகம்.


அரசாங்கப் பாடசாலைகளை மட்டும் குற்றம் சாட்ட முடியாது.

பல தனியார் மற்றும் சர்வதேசப் பாடசாலைகளும் இதில் அடங்கும்.

அசுத்தத்திற்கு பிள்ளைகள் காரணமா?

பொறுபில்லாத பிள்ளைகள் அசுத்தம் செய்துவிடுகிறார்கள் என்று சாட்டுச் சொல்லுவார்கள்.

உண்மையில் அவ்வாறு சொல்வதுதான் பொறுப்பற்ற தன்மையாகும்.

அதிகம் பேர் உபயோகிக்கும் இடங்களில் எல்லோரும் சுத்தம் பேணுவதில் அக்கறை எடுப்பார்கள் என்று சொல்ல முடியாது.

அசுத்தப்படுத்தினாலும் அவற்றை உடனடியாக சுத்திகரிக்க போதிய பணியாளர்களும், நீர் வசதியும் செய்யப்படுவது அவசியம்.

கற்கைச் சூழல்

பாடசாலை வகுப்பறைகளையும் சுற்றாடலையும் அழகுபடுத்துவதில் இப்பொழுது அதிக கவனம் செலுத்தப்படுகிறது. நிறையப் பணமும் செலவாகிறது.

கற்கைக்கான சூழலை அது எற்படுத்துகிறது என்பது உண்மையே.

அதற்கு மேலாக அங்கு வரும் பெற்றோர்களையும் பிரமுகர்களையும் மகிழ்ச்சி கொள்ள வைத்து பாடசாலையின் பொருண்மிய மேம்பாட்டிற்கு உதவத் தூண்டுகிறது என்பது வெளியே சொல்லப்படாத செய்தியாகும்.

பாடசாலையின் சூழல் சுற்றாடல்களில் கழிப்பறைகளும் அடங்கும் அல்லவா?

அது ஏனையவற்றை விட முக்கியமானது என்றும் சொல்லாம்.

அவற்றைச் சுத்தமாக வைத்திருபபது மட்டுமின்றி, பிள்ளைகள் அவற்றை நாடிச் செல்லும் வண்ணம் அழகாகப் பேணவேண்டும்.

சிறுநீரை அடக்காமல் கழிக்க வேண்டியதின் அவசியத்தைப் புரிய வைக்க வேண்டும்.

வேறு நோய்கள்

வாந்தி, வயிற்றோட்டம், டைபொயிட், செங்கண்மாரி போன்ற வேறு பல தொற்று நோய்களும் அசுத்தமான கழிப்பறைகள் காரணமாகத் தொற்றலாம் என்பதாலும் அவற்றைச் சுத்தமாக வைத்திருப்பது முக்கியமாகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- தினக்குரல்

Read Full Post »