Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கழுத்து எலும்புத் தேய்வு’ Category

தோள்மூட்டு, புஜம், கைகளில் ஏற்படும் வலி உளைவு எரிவுகளுக்குக் காரணம் கழுத்து எலும்புத் தேய்வாக இருக்கலாம்

அழுதுவிடுவாள் போலிருந்தது. சில இரவுகளில் ஒழங்கான தூக்கம் இல்லாததால் கண்கள் கரு வளையம் சூழ்ந்திருந்தன. முகம் சோர்ந்தது மாத்திரமின்றிப்  பூசிணிப்பழம்போல ஊதியும் கிடந்தது.

சோர்வுக்குக் காரணம் மனத்துயரம் அல்ல என்பது அவள் பேசத் தொடங்கியதும் புரிந்தது.

வலி!

MINOLTA DIGITAL CAMERA

தாங்க முடியாத வலி. முதுகின் சீப்புப் பகுதியில். உளைவா வலியா என்று பிரிதறிய முடியாத வேதனை. அங்கிருந்த வலி மேலும் நகர்ந்து இடது கை முழுவதும் பரவி உளைந்து கொண்டிருந்தது. நான் துருவித் துருவிக் கேட்ட போது அக் கை நுனியில் சற்று விறைத்து மரத்திருப்தும் தெரியவந்தது.

ஒரிரு மாதங்களாக வலி இருக்கிறதாம். உளைவா, எரிவா, வலியா என்று பிரித்துச் சொல்ல முடியாத ஏதோவொரு கடுமையான வேதனை. ஆரம்பத்தில் ஓரளவாக இருந்தது, வர வர அதிகரித்துக் கொண்டே வருகிறது.

கை வைத்தியம், நாட்டு வைத்தியம் எதுவும் சுகம் கொடுக்கவில்லை. அருகிலிருந்த மருத்துவரிடம் காட்டியபோது தசைப்பிடிப்பாக இருக்கும் எனச் சொல்லி அவ்விடத்தில் ஊசி ஏற்றியிருக்கிறார். ஆயினும் அந்த ஊசியிலும் எந்தச் சுகமுமில்லை.

கழுத்து எலும்புத் தேய்வு நோய்

அனுபவப்பட்ட மருத்துவர்களுக்கு அத்தகைய வலிக்கான காரணம் வலிக்கும் அதே இடத்தில் இல்லை. வேறு இடத்திலிள்ள நோய்க்கான வலி இங்கு பிரதிபலிக்கிறது என்பது தெரிந்திருக்கும். பெரும்பாலும் கழுத்து எலும்புடன் சேர்ந்த Cervical spondylosis என ஊகிப்பதில் பிரச்சனை இருக்காது.

நிச்சயப்படுத்த பரிசோதனைகள் தேவைப்படும்.

நோய் ஓரிடத்தில் இருக்க வலி வேறு ஒரு இடத்தில் பிரதிபலிப்பதை தொலைவிட வலி (Referred Pain) என்பார்கள்

  • இதனைக் கழுத்து எலும்புத் தேய்வு நோய் என்று சொல்லலாம். வயதாகும்போது ஏனைய எலும்புகளில் தேய்மானம் ஏற்படுவதுபோலவே கழுத்தின் முண்ணெலும்பிலும் ஏற்படுவதுண்டு. 40 வயதிற்கு மேல் இத்தகைய பிரச்சனை ஏற்படுவதற்கான சாத்தியம் அதிகமாகும்.
  • பொதுவாக வலி தொடர்ச்சியாக இருப்பதில்லை. விட்டுவிட்டு வரும்.
  • அத்துடன் கழுத்துத் தசைகள் இறுக்கமாகவும் இருக்கும்.

கழுத்து எலும்புகளின் அமைப்பும் பாதிப்பும்

A00332F06

கழுத்து எலும்புகள் ஏனைய முதுகெலும்புகள் போலவே ஒன்றென்மேல் ஒன்றாக அடுக்கபட்டிருக்கினறன. அவை தம்மிடையேயான அசைவாட்டத்திற்காக வட்டுகள் எனப்படும் Intervertebral disc யால் இணைக்கப்பட்டுள்ளன.

5566157_orig

  • முள்ளெலும்புகள் தேய்வதாலும்,
  • தேய்ந்த எலும்புகள் இடையேயுள்ள வட்டுகளை அழுத்துவதாலும்,
  • சிறு எலும்புத் துணிக்கைகள் வளர்வதாலும்,
  • முண்ணான், அதிலிருந்து வெளியேறும் நரம்புகள் அழுத்தப்படுதாலும்தான்

வலி, வேதனை நரம்புப் பாதிப்புகள் ஏற்படுகின்றன.

நரம்புகள் அழுத்துண்டால்

  • ஆனால் இது மோசமாகி, அவற்றிடையே உள்ள இடைவெளி சுருங்கி அதனூடாக வெளிவரும் நரம்புகளை அழுத்துவதால் வலி ஆதிகமாகும். இதன் அறிகுறிகளாக பின்வருவனவற்றைக் கூறலாம்.கழுத்தில் வலியும், அதன் தசைகளில் இறுக்கமும் பிடிப்பும்.
  • இவ் வலியானது தோள் மூட்டு, புஜம், நெஞ்சு போன்ற இடங்களுக்குப் பரவக் கூடும்.
  • புஜங்கள், கை, கால்கள், பாதம் போன்ற இடங்களில் ஊசியால் குத்துவது போன்ற வலி, உளைவு, எரிவு போன்ற அறிகுறிகள் தோன்றலாம்.
  • கைகள், விரல்கள், பாதம் போன்ற இடங்கள் மரத்தது போன்ற உணர்வு ஏற்படலாம். சிலவேளை அங்குள்ள தசைகள் பலமிழப்பதுமுண்டு. விரல்களால் பற்றுவது சிரமமாக இருக்கலாம்.
  • நடப்பதில் சிரமம் ஏற்படக் கூடும். நிலைதளரக் கூடும்.
  • மலம், சிறுநீர் கழிப்பதில் உள்ள கட்டுப்பாடு குறைந்து, தன்னுணர்வின்றி அவை வெளியேறக் கூடும். இது சற்றுத் தீவிரமான நிலையில் தோன்றும்.

நோயை எப்படிக் கண்டறிவது?

r7_cervicalspondylosis

  • ஆரம்ப நிலையில் கழுத்தினது அசைவு, வலியுள்ள இடங்கள் ஆகியவற்றைப் பரிசோதிப்பதுடன், நரம்புப் பாதிப்புகள் இருக்கிறதா என மருத்துவர் உடற்பரிசோதனை செய்வதுடன் நோயைக் கண்டறிவார்.
  • X Ray பரிசேதனை செய்வதன் மூலம் கழுத்து எலும்புகளின் நிலை பற்றி அறிந்து கொள்ள முடியும்.
  • தேவை ஏற்படின் CT scan, MRI போன்ற பரிசோதனைகள் செய்வார்.
  •     நரம்புகள் எந்தளவு வேகமாகவும், திறமையாகவும் செய்லாற்றுகின்றன என அறிய Nerve conduction study பரிசோதனையும் உதவலாம்.

சிகிச்சை

  1. சாதரண வலிகளுக்கு சுடுநீர் ஒத்தடம் கொடுப்பது, வலி நிவாரணி ஜெல் பூசுதல், தசைகளைப் பிடித்துவிடுதல், மெதுமையான மசாஜ் போன்றவை உதவும்.
  2. சற்றுக் கடுமையான வலியெனில் வலிநிவாரணி மாத்திரைகள் தேவைப்படும்.
  3. கழுத்திற்கு கொலர் (Cervical Collar) அணிவது உதவும்.
  4. கடுமையெனில் சத்திரசிகிச்சையும் தேவைப்படலாம்

நீங்கள் செய்யக் கூடிய ஏனையவை

  • தலையக் குனிந்து செய்யும் வேலைகளைக் குறையுங்கள். புத்தம் படிப்பது, சமையல் வேலை போன்றவற்றின்போது கவனம் எடுக்கவும்.
  • குறைந்த தடிப்பமுள்ள தலையணையை மாத்திரம் உபயோகியுங்கள்.
  •     கழுத்தை ஒரே பக்கமாக நீண்ட நேரம் திருப்பி வைத்திருப்பதைத் தவிருங்கள்.
  • நடுவில் பள்ளமுள்ள விசேட தலையணைகள் நல்லது.
  • முகம் குப்புறப்படுக்க வேண்டாம்.

•    தலையில் பாரங்கள் சுமக்க வேண்டாம்.

bart2-BB

முண்ணான் எலும்புகள், அவற்றை இணைக்கின்ற வட்டுகள் ஆகியவற்றின் அமைப்புயும்பையும் அவற்றில் ஏற்படுகின்ற சில நோய்களையும் மேலே உள்ள படம் காட்டுகிறது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

ஹாய் நலமா புளக்கில் 2012 ஆகஸ்ட் மாதம் வெளியான கட்டுரை

0.0.0.0.0.0.0

Read Full Post »