Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கவிதை’ Category

எறி குண்டு வீசி
நீசர்களை அழிப்பதில்
ஏன் இன்னும் தயக்கம்
அரச யந்திரத்துடன்
வம்பு ஏனெனத் தயக்கமோ?

ஒடுக்கபட்டுக் கொண்டே
இருப்பவர்களின்
ஈனக் குரல் கேட்கவில்லையா
அன்றி
கேட்காதது போல
பாவனையோ !

சம்பந்தரும் சுந்தரரும்
பாடினர் பதிகம்
சரித்திர நாயகன் இராவணன்
துதித்த தலமும் அதன்
சூழலும்,
கிழக்கு மண்ணும்
கபளீகரமாகிறதே
மாற்று இனத்தவரிடம்..
அரச அனுசரணையுடன்..

மண்ணின் அரசியல்வாதிகளும்
கண் பொத்தி காதடைத்து
வாழா மடந்தையானரே
கடைசி மனிதனும்
ஓரடி நிலமும் பறிபோன பின்தான்
வாய் திறப்பாயோ.

பொறுத்து போதும்
வீசி எறி
கணைகளை
நீசர்களை அழி
மண்ணின் மைந்தர்களை
வாழ வை
தலை நிமிர்ந்து முன் செல்ல
பாதையைத் திற…
நீசர்களை அழித்து…..

( கோணேசர் கோவிலுக்கு செல்லும் வழியில் கோட்டை வாயிலில் எடுத்த படம்.)

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

என்ன சொல்ல என்ன சொல்ல
இந்தப் புத்தாண்டில்
வருடா வருடம்
சொல்லி சொல்லி
கேட்டு கேட்டு
அலுத்தே போனது
இன்னும் என்ன
சொல்ல இருக்கு
சொல்லாததையா
சொல்லப் போறன்.

 

DSC05675-001 

கற்பனைக் கோட்டைகள்
கனவுகள் புலரும் வரை
புலர்ந்த பின்
வாழ்க்கை ஓடும்
வழமைபோல
சிரிப்புகள் அழுகைகள்
சீண்டல்கள் சினப்புகள்
நம்பிக்கைகள் அவலங்கள்
வெற்றிகள் தோல்விகள்
பெருமைகள் பொறாமைகள்
புதிதாக என்ன இருக்கிறது
எல்லாமே தொடரத்தான் போகிறது

 DSC05651-001

இருந்தும் ஒரு நம்பிக்கை
நாளை மறுநாள்
ஒவ்வொரு நாளும்
ஒவ்வொரு வருடமும்
புலர்வதும் பொலிவதும்
எமது கைகளில்தான்
எதிர்கொள்வோம் நம்பிக்கையுடன்
இந்த 2014 லையும்

SDC12511-001

எம்.கே.முருகானந்தன்

00.0.0.0.00

Read Full Post »

பட்டிப் பூ
‘உதவாக்கரை.
உதையேன் வளர்க்கிறாய்
உள் வீட்டில்.’

புறுபுறுத் தாங்கவில்லை!

“அப்பாவி போல வெள்ளை நிறம்
அதெல்லாம் வெளிவேசம்.
உள்ளெல்லாம் பெரு நஞ்சு.
குடல் பிரட்டும்
பெரு நாத்தம்
புடுங்யெறி”
பொக்கையால்
எச்சில் பறக்கப்
பொரிகின்றாள்.

கேட்க மனம் பதறுகிறது
இதன் பெருமை தெரியாது அவளுக்கு.
பயனுள்ள சிறு செடி
மறைந்திருந்து உயிர் காவும்
பெருநோயாம் குருதிப் புற்றுக்கு
இதன் சாற்றில் பொடித்தெடுத்த
வின்கிரிஸ்டின் அருமருந்தாம்
வெளிநாட்டார் கண்டறிந்தார்.
நீரிழிவுக்கு சொன்ன மருந்தென
எம்மூர்ப் பரியாரியும்
பகருகிறார்.

பட்டிப்பூ

குறுஞ்செடியாய் பரந்திருந்து
பால்நிறமும் ஊதாவுமாக
மலர் சொரிந்தது
என் வீட்டு முற்றத்தில்.
சிறுவயதில் அளைந்ததில்
என்னுடலும் உரமாயிற்று
நோய்நெடி அணுகாது.

பீநாறி, சுடுகாட்டு மல்லியென
இழித்தாலும்
நித்திய கல்யாணியென
மங்களமாயும் விழிப்பர்;
மலையாளச் சோதரர்கள்.

பட்டப்பூ

என்னளவில் என்றென்றும்
பட்டிப்பூ
அழித்தொழிக்கவொண்ணாது.
பட்டி தொட்டியெங்கும்
பரப்ப வேண்டிய
சிறப்பான மூலிகைதான்.

எம்.கே.முருகானந்தன்

வீரகேசரி ஞாயிறு இதழிலும் எனது ‘மறந்து போகாத சில’ புளக்கிலும் வெளிவந்த கவிதை.

0.0.0.0.0.0.

Read Full Post »

தீபாவளி நல்வாழ்த்துக்கள்

மங்களம் நிறைய, மகிழ்வொடு வாழ்த்துவம்!

எங்கெணும் பசியினில் துடியா வாழ்வும்
எம்மிடை பேதங்கள் கூறாப் பிணைவும்
கருத்தினில் மோதலை கைலாகுடன் மதித்தலும்
ஒன்றிணைந்து ஒரு கரமாய்ப் பிணையும் நேசமும்
என்றென்றும் இனிது வாழ வழி காட்டும்.
நன்றி ta.sarugu.com
எங்கள் இடரினை மறக்க
எதிரியென எண்ணித் தூற்றலும்
தூற்றலில் களி கொண்டெழலும்
இத்தனைக்கும் இவர்தாம் காலென
இகழ் ஒலிப்பதும்
வேண்டாம் ஒரு போதும்.
சாபமிட்டுச் சாந்தியடைதல்
ஒருபோதும் ஒண்ணாது

இன மத மொழி பேதமற்ற இணக்கமான வாழ்வு மலரட்டும்.

எங்களை அழிக்கும் நீசன்
வேறெங்கும் இல்லை.
உள்ளத்துள்உறைகிறான்.
உள்ளுறையும் அசுரனை ஒழிக்க
எள்ளளவும் வேண்டாம் கத்தி, குண்டு,
துப்பாக்கியெதுவும் .
கபடமற்ற கனிவான உள்ளம்
காந்தமாய் ஒளி பரப்பும் வதனம்
கனிவான மொழி
இவை போதும்.

எரித்துப் சினத்து அழிக்காது சிரித்து கூடி வாழ்வோம்.

வேறென்ன ஆயுதம் வேண்டும்?
எரித்துப் சினத்து அழிக்காது
சிரித்து கூட வழி வகுக்கும்
நல்லாயுதம் தன்னைக் கைப்பிடித்தால்
நிதமும் தீபாவளி எம் வாழ்வில்.
எம்.கே.முருகானந்தன்
0.0.0.0.0
சென்ற வருடம் மறந்து போகாத சில வலைப்பூவில் எழுதிய வாழ்த்து

Read Full Post »

எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்

 

எதிரிக்கும் மங்காத புன்னகை
அவரது ஆயுதம்.
பூவிற்கும் நோகாத மென்மை
எழுத்திலும்..
மென்மையை நோகடிக்கும்
உள்ளத்தின் மென்மை.

படைப்பினைக் கொல்லாத
பதமான விமர்சனம்
பிறமொழிப் புத்தாக்கங்களை
தமிழுக்குப் பரிமாறும் வித்தையில் வல்லவன்.

சீரிய சினமா இதுவெனக் காட்டியவர்
சினமா ரசனையைச் சிக்கெனப் புகட்டியவர்
சினமா பார்க்கச் சென்னைக்கும் பறப்பவர்.
எல்லோர்க்கும் இனியவர் சிவகுமாரன்
என்றும் அவர் இளங்குமரன்

நீண்டு நிறையணும் அவரது வாழ்வு
நாளும் ஒளிவிளக்காக
வழிகாட்டணும் எமக்கெல்லாம்
வாழி வாழி.

0.0.0.0.0.0.0

இது எமது இனிய நண்பர் கே.எஸ்.சிவகுமாரன்
அவர்களின் பவளவிழா ஆண்டு.
01.10.2011 ல் அவர் தனது 75 வயதில்
காலடி எடுத்து வைத்தபோது எழுதியது

Read Full Post »

கூடிக் களிப்பதில்

குழந்தையர்க்கின்பம்

நடன மாடிப் பரவலில்

நர்தனியர்க்கு இன்பம்

பாடிப் பரவசமாதலில்

பாவலர்க்கின்பம்- வெயிலில்

ஆடிக்களிப்பதில்

அணிதுணிகளுக்கு

அளவிலா ஆனந்தம்

கூடவே பசுங்கொடி தழுவலில்

தாண்டவமாடும்

ஆனந்தம் பேரானந்தம்.

ஆட்சியிலிருப்பது அரசியலர்க்கின்பம்

எதோட்சிகாரம் செய்தல்

அதிலும் இன்பம்.

எதிரணியர் சிறையடை படல்

கடையணித் தொண்டனுக்கும்

பரவச இன்பமாகும்.

மறுகுழு எழுத்தனைத்தும்

பழிப்பதில் இன்பம்.

கவைக்குதவாது

காலவதியாகிடுமென

இழித்துரைத்தல்

அதனிலும் இன்பம்.

ஒட்டக் கூத்தன் பரம்பரையின்

இன்பம் இனியொறொன்றிலும்

கிட்டவே கிட்டாது.

படைப்புலகில்

மற்றெல்லாம்

துச்சம் துச்சமே!

0.0.0.0.0.0.

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>

அனல் காற்றில் விசவாயு
கலந்தெரித்த பூமி
அதில் விளைந்த இளந்துளிர்கள்
தீய்ந்தழிந்து
கனகாலம் ஆகவில்லை.

முதுமரங்கள் விழிவரளச்
சுரசரக்கும் காவோலையாகும்.
துயர்வாய்வில்
மணல் கூடத்
தீய்ந்தெரிந்து
கரியாகச் சாகும்.

பிணம் தின்னிக் கரும்பறவை
கரைந்தழுது
தேனொழுகப் பேசும்.
பொய்யான உறுதி பலவுதிர்த்து
உள்ளரங்கில்
தலை நுளைக்கப் பார்க்கும்.
தரை தின்ன கறையானாய்
அரித்தரித்துப் பரவும்.
பிறர் மண்ணை ஏப்பமிடும்
வழியனைத்தும் நாடும்.

துயர் சிந்தி வாழ்வொடுங்கி
தலை சாய்க்கும்
சேற்றெருமை அல்ல.
துளிநீரும் கடலாகப்
பரந்தெழுப் படகாகி மிதப்பர்.

பனங்கொட்டை முளைவிட்டு
வடலியென வளரும்.
இவர் வாழ்வு கருகாது
வளவெங்கும் நிமிரும்.

ஜீவநதி இதழ் 33 (ஆனி 2011) இதழில் வெளியான என் கவிதை

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

மலை நகரின் சிறுகுன்றில்
தனிமரமொன்று வான் முட்ட
கால் உன்னி கிளர்ந்தெழுந்து
பாய்ந்தெழத் துடிக்கிறதோ!

கால்கட்டு விட்டொழித்து
கட்டற்ற சுதந்திரத்தை
நெஞ்சாழச் சுவாசிக்கும்
பெருவாழ்வு எட்டிடவா?

இல்லை!

காலடி பின்வைத்து
கண்சுருக்கி, தலை சரித்து
விழி கூர்த்துப் பாருங்கள்.
பெண் துணையை கைநீட்டி
அருகணைத்து முத்தமிட
முகம் நெருங்கி வருகிறதா?.

கண்மூடிக் கற்பனையை
சிறகடித்துப் பறக்கவிடுங்கள்.
சில் மனத்தில்
பொல்லாத காட்சிகள்
பொச்சடித்து விரிந்து வரும்.
நிறைவாழ்வு அதுவல்ல.

தன் சுகம் இழப்பதும்
தன் வலி மறப்பதும்
தாராள மனதுடன்
தயங்காது விட்டொழித்து
துணைக்காக வாழ்வதும்
தன்னைத் தொலைத்ததில்
மகிழ்வதும்  இழப்பல்ல.

அது சுதந்திரத்திலும் மேலானது.

0.0.0
மற்றொரு கவிதை மலையகம், இழப்பு, புகைப்படங்கள்

களிகொண்டு எழுந்த சூரியன் துயர் மூழ்கி ஒளிந்தான்

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0.0

Read Full Post »

>

மதிலோர சிறுகம்பில்
மாநகர மின்விளக்கு அதன்
ஒளிவெள்ளம்
மறுகம்பம் நீளாது
அரைத் தொலைவில்
வலுவொடுங்கி மங்கிவிடும்.

ஆனாலும்
வானோங்க உயர்ந்திருந்து
வையமெல்லாம் கதிர் சிதறும்
மதியொழியை,
நாணவைக்கும்
தன் அருகிருப்பால்.

நள்ளிரவில் துயில் கலைந்து
நரக்குருதி தீய்ந்தெழ
மூச்சடங்கிப் பறவையினம்
சிறகடித்து விலகி ஓடும்.
நடுவெயில் சுட்டெரிக்க
நிறைவிழிகள் உறைந்திருக்க
சுடுகுழல் பேச்சொடுக்கிப் பெற்ற முதல்
சுளுவாக மடி சேரும்.

பனைமட்டை, பெரும் கொட்டன்
சுடுகம்பி இவையனைத்தும்
பெருந்திமிரில்
உள்வீதி உலாவரும்;.
கடிவாளப் பிடியிறுக்கி
தளராது அரசோச்ச.

அதிகார நடுப்புள்ளி நழுவாது
அழுங்காகப் பிடித்தாள
அருகாக வந்து ஒளிசெறியக் 
கற்றிடுவாய் வான்மதியே.

எம்.கே.முருகானந்தன்.

ஜீவநதி பங்குனி 2011 இதழில் வெளியான எனது கவிதை.

Read Full Post »

>

முன் வீட்டு அயல் வீட்டு
தெருவோரப் பூவெல்லாம்
பறித்தெடுத்து இறைவனுக்கு
அர்ப்பணித்தல் அடாத செயலென்பர்.
அதனையே மொபைல் போனில்
அமுக்கி வைத்து இணையத்தில்
பகிர்ந்து கொண்டால்
கலைப் படைப்பெனத்
திமிர் கொள்வர்.

வெண்மையும் இளம் சிகப்பும்
இன்னும் பெயர் தெரியா நிறமனைத்தும்
தெருவோரம் தான்தோன்றி புன்னகைக்கும்
செடிகளில் விதவிதமாய்
இதழ் விரிக்கும்.

மதராசப் பட்டினத்தில்
படகோட்டும்
கூவம் நதியல்ல
கொழும்பு நகரின் கனால் (Canal)
கழிவு நீரின் நாற்றம்
காத தூரம் ஓட வைக்கும்
ஆயினும் அதன் போசாக்கு
அதன் கரை ஜனனிக்கும்
கொடி செடியைப் போசிக்கும்.

கதிரவனின்  கரம் வாட்ட
சென்ட் பீற்றர்ஸ் மாணவர்கள்
நீண்டுழைத்து
நீரிழப்பால் உடல் தளர்வர்.
விளையாடும் மைதானத்தில்.

மறுகரையில்
நீரோரம் நிதமிருந்தும்
சிறு செடிகள் அனல் காற்றில்
அலையாடி சருகாவர்.

தடைபோட்ட தாழ்வாரத்தில்
அடைந்திருக்க மனதின்றி
கொட்டும் மழையில்
குதித்துக் கும்மாளமிட
தெருவோரம் தலை நீட்டி
உடல் நனைக்கும் ஆனந்தம்
தொடர்மாடி வீட்டு
முகப்போர அலங்காரச் செடிக்கு
சிலவேளை கை கூடும்..

வானத்தின் நீலத்தை
தன்னிதழில் வர்ணமிட்டு
கோலம் வரைந்திருக்கும்,
வானத்தைத் தன்வாழ்வில்
சிறுபொழுதும் காணாத
உள்வீட்டு குறும் செடி.

ஆண்டி, ஆண்டகை
இழிசனர், உயர்சாதி
உழைப்பவன், சுரண்டல்காரன்
என வர்க்க பேதமில்லா
பூக்களின்
சாம்ராஜ்யம் இது.

பூக்கள், செடிகள் பற்றிய கவிதையுடனான முன்னைய புகைப்படப் பதிவுகளுக்கு கீழே கிளிக்குங்கள்.:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

Older Posts »