Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘காதல்’ Category

இளைஞர்களே உங்களுக்காக
காதலும் காமமும் சாதலும்
மனிதனிலும் மிருகங்களிலும்

‘..காதல் காதல் காதல்
காதல் இன்றேல் சாதல்…’ என்று பாடினான் மாகவிஞன். அதைக் கேட்டு வயது வேறுபாடின்றி மானிடர்களாகிய நாம் புளகாங்கிதம் அடைகிறோம்.

Bharathy

ஆம் வாழ்வின் இன்றியமையாத அம்சம்தான் காதல். எனவேதான் மனித வாழ்வில் காதலை முதன்மைப்படுத்திய அவனது கவியுள்ளத்தைப் போற்றுகிறோம். அந்தக் காதலின் உச்சமான கட்டம் கூடல் (புணர்ச்சி) எனச் சொல்லலாம். ஆனால் கூடல் காதலின் புனிதத்தை மாசுபடுத்துகிறது என மறுப்பாரும் இல்லாமல் இல்லை. இருந்தபோதும் போதையில் மயங்கியது போன்ற இன்பத்தை உளமும் உடலும் ஒன்றிய இருவரின் கூடல் கொடுக்கிறது என்பதில் சந்தேகம் இல்லை.

111 08

ஆனால் காதல் என்பது மனித இனத்திற்கு மட்டும் சொந்தமானது அல்லவே. விலங்குகள், பறவைகள், பூச்சி புழுக்கள் யாவுமே காதலில் மகிழவே செய்கின்றன.

காதல் கூடல் அதற்கும் அப்பால் அடுத்து என்ன?

‘கூடல் கூடல் கூடல்

கூடல் உச்சத்தில் சாதல்…’ என்கிறார் அன்ரகைனஸ் (antechinus mouse) சுண்டெலியார்.

Antechinus mouse

அன்ரகைனஸ் சுண்டெலி எனப்படும் இனத்தினர் அவுஸ்திரேலியாவைச் சார்ந்தவர்கள். நியூகினியா, டஸ்மேனியா ஆகிய இடங்களிலும் காணப்படுகிறார்கள்.

இவர் பிறந்து 11 மாதங்களாகும்போது பாலியல் ரீதியாகப் பருவமடைகிறார். அப்பொழுது அவரில் பாலியல் ஹோர்மோன்கள் சுரக்கின்றன. இதனால் புணர்ச்சி வேட்கை பிறந்து உச்சநிலையை அடையும். சீண்டிப் பார்த்து வேட்கை தணிக்க எமது பையன்கள் தெருக்களிலும், சந்திகளிலும் தேடியலைவதுபோல இவரும் இரவானதும் தனது ஏரியாவில் அலைந்து திரிவார். அடக்க முடியாதபடி கிளர்ந்தெழும் தனது பாலியல் பசியைத் தீர்க்க சோடி தேடி தவிப்புடன் திரிவார்.

Searching Lovers (Ben Heine)

இதற்குக் காரணம் அவரது உடலில் உச்ச நிலையில் சுரக்கும் பாலியல் ஹோர்மோன்கள்தான்.

மனிதர்களிலும் அவ்வாறே. ஆண்களில் testosterone பெண்களில் oestrogen ஆகிய ஹோர்மோன்கள் முக்கிய பங்களிக்கின்றன. இருந்தபோதும் மனிதர்களின் பாலியல் வேட்கைகளுக்கு ஹோர்மோன்கள் மட்டுமே காரணம் எனச் சொல்ல முடியாது. உடற் தொழியில் ரீதியான, சமூக பண்பாட்டு ரீதியான, உளவியில் ரீதியான பலவும் பங்களிக்கின்றன.

பருவமடைந்த சுண்டெலியாரின் பாலியல் செயற்பாடு தினமும் இரவில் 12 மணிநேரங்களுக்கு நீடிக்கும். ஒரு நாளில் முடியாது. பாலியல் ரீதியான உடல் நெருக்கமும் உடலுறவும் நான்கு நாட்கள் வரை தொடரும். ஊண் இன்றி, உறக்கம் இன்றி நீராகாரம் கூட இல்லாது துணையோடு இணைந்து பிணைந்து திரிவார்.

இப்படியும் ஒரு காமப் பிசாசா என எள்ளிச் சிரிக்காதீர்கள்.

மனிதர்களில் இது ஏற்படுவதில்லையா? கனவில் கண்டதுபோல ஒரு பெண்ணைக் கணநேரம் காணக் கிடைத்தால்போதும் ஏதோ ஒரு ஈர்ப்பு அவளில் ஏற்படும். தற்செயலாக அவளைச் சந்திக்கவும் பேசவும் கிடைத்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு அளவுகணக்கே கிடையாது.

அந்தத் தொடர்பு மிகச் சுருக்கமானதாக இருக்கலாம். வெறுமனே கண்களால் பேசியதாகவோ, கரங்களைப் பற்றியதாகவோ அல்லது அதிகபட்சம் ஒரு முத்தம் கொடுத்ததாகவே இருக்கலாம். மேலைநாட்டுக் கலாச்சாரத்தில் இது புணர்ச்சி வரையும் போகலாம். களவுப் புணர்ச்சி பற்றி சங்க இலக்கியங்கள் பேசவில்லையா?

‘வெறும் கண நேரத் தொடர்பு. இது தொடரப்போதில்லை’ என உங்களுக்குள் நீங்கள் நினைத்தாலும் அவ்வாறாவதில்லை. இவள்தான் எனக்காக பெண் எனத் தோன்றும். அந்த நிகழ்வுகளின் நினைவுகளில் ஆழ்வீர்கள்.

உங்களில் மாற்றங்கள் ஏற்படும். நீங்கள் அவற்றை அவதானிக்காவிட்டாலும் ரகசியப் பொலிசாரின் நுட்பத்துடன் நண்பர்கள் கண்டறிந்திருப்பார்கள். மற்றவர்களுடன் பேசிக் கொண்டிருக்கும்போது திடீரென கனவுலகில் ஆழ்ந்துவிடுவீர்கள். நண்பர்களுடன் கூடி உணவு விடுதிக்குச் செல்லும்போது வழமைக்கு மாறாக விரைவில் முடித்துக் கொண்டு புறப்பட ஆயத்தமாவீர்கள். பொதுவான வேலைகளில் முன்னைய ஈடுபாட்டை இழந்திருப்பீர்கள்.

‘நான் காதலில் ஆழ்ந்திருக்கிறேனா?’ எனவும் எண்ணத் தோன்றும். இந்த உறவை மேலும் வளர்த்துக்கொள்ள வேண்டும் என நினைவு ஏற்படும்.

உணர்வுகளின் முன் பகுத்தறிவு மண்டியிட்டு மறைய ‘அன்றிலும் பேடும் போல’ என்றுமே இவளே என்துணை என அறுதி முடிவுகட்டவும் முயல்வீர்கள்.

ஆனால் உங்கள் ஆழ் மனத்துடன் நீங்கள் மனம் திறந்த உரையாடலை செய்ய முனையும்போது ஏதோவொரு தருணத்தில் நெருடல் ஏற்படும்.

  • அவளது நினைவுகளில் மூழ்கும்போது தூண்டப்படுவது உங்கள் மென்னுணர்வுகள் அல்ல,
  • உங்கள் உடல், அதுவும் உங்கள் ஆணுறுப்பு மட்டுமே என்பது கசப்பான உண்மையாகப் புரியும்.
  • உங்களை அலைக்கழித்தது பால் உறவு நாட்டமே அன்றி காதல் அல்ல என்பது உறைக்கும்.

உண்மையில் பாலியல் ஆர்வம் (Sexual Desire) அல்லது வேட்கை என்பது இரு நிலைப்பட்டதாக இருக்கலாம். உடலுறவு அல்லது புணர்ச்சியை நாடுதல் என்பது ஒரு வகை. ஒருவர் மீதான பாலியல் ரீதியான ஆரவமும் கவர்ச்சியும் ஈடுபாடும் மற்றது. ஒன்று மற்றதில் முடியலாம் என்பதையும் மறுப்பதற்கில்லை.

sexual desire

அண்ணலும் நோக்க அவளும் நோக்க ஆழ்ந்த காதல் பிறப்பது பெரும்பாலும்  காவியங்களிலும், கதைகளிலும்தான் நடக்கிறது.

TN_173236000000

திரைப்படங்களிலும் இந்தப் புனித உணர்வு காட்சிப்படுத்தப்பட்ட காலம் ஒன்று இருந்தது. அத்தகைய அமர காவியங்கள் கல்லாப் பெட்டிகளை நிறைத்தன. இன்று ஒருவன் பல பெண்களைக் காதலிப்பதும், திருமணத்தின் பின் வேறொருத்தியில் மோகம் கொள்வதும் பார்வையாளரிடத்தில் சர்ச்சைகளை ஏற்படுத்தாமல் ரசிக்கப்படுகின்றன.

மீண்டும் அன்ரகைனஸ் சுண்டெலிகளின் கதைக்கு வருவோம். அவரது ஹோர்மோன்கள் அவரை விட்டு வைக்காது. புணர்ச்சி புணர்ச்சி புணர்ச்சி. வேறெந்த நினைவுமில்லாமல் அந்த நான்கு நாட்களும் ஓய்வின்றித் தொடரும். இத் தொடர் செயற்பாட்டிற்கு நிறையச் சக்தி தேவை. ஆனால் அது போதியளவு அவரிடம் இல்லாததால் ஒவ்வொரு தடவையும் வலிமை படிப்படியாக நீர்த்துக் கொண்டேபோகும். நோயெதிரப்புச் சக்தி நலிவடையும். பலவீனமடைவார்.

இறுதியில் வரண்ட உடல் சருகோடு சருகாக கலக்க காட்டுத் தரையில் சாய்ந்து விழுவார்.

‘என்ன மடைத்தனம்’ ‘தனது உடலின் நிலையை உணராத மடைமையா? தற்கொலைக்கு ஒப்பான அப்படியொரு காமவேட்கையா’ என எண்ணத் தோன்றுகிறது அல்லவா?

என்ன செய்வது!!

அதுதான் அவர்களுக்கு இயற்கை விதைத்த விதி.

எண்ணிக்கை அடங்காத ஏராளமான ஆண் அன்ரகைனஸ் சுண்டெலிகள் அவ்வாறு மரணத்தைத் தழுவுகின்றன.

அவ்வாறான விதியை அச் சிறிய மிருங்கங்களுக்கு இயற்கையானது ஏற்படுத்தியது ஏன்? கூர்ப்பு வளர்ச்சியின் நோக்கம் என்ன? தமது உயிரை அந்த ஆண் அன்ரகைனஸ் சுண்டெலிகள் அர்ப்பணிப்பதற்கான தேவை என்ன?

தமது எதிர்காலச் சந்ததியினர் வாழ்விடத்திற்காகவும், உணவிற்காகவும் தம்மோடு போட்டியிடுவதைத் தடுப்பதற்காக எனக் கொள்ளலாம்.

புணர்ச்சியின் பின் ஆண்கள் மரணிப்பது வேறு உயிரனங்களிலும் அறியப்பட்டுள்ளது. ஒரு வகைச் சிலந்தியினத்தில் Australian Redback Spider பெண் சிலந்தியானது தன்னுடன் கூடும் ஆண் சிலந்தியைத் தின்று தீர்த்துவிடுகிறது.

அதேபோல வெட்டுக்கிளியை ஒத்த praying mantises   தன்னுடன் கூடும் ஆணைக் கொன்று தின்றுவிடுகிறது.

Praying_Mantis_Mating_European-51

தேனீயில் ஆண் உறவு கொண்டு விந்து வெளியேறும்போது அதன் ஆண்குறியானது பெண்ணின் யோனிக்குள் வெடித்துச் சிதறி மரணம் நிகழ்கிறது.

ஆழ்கடலில் வாழும் angler fish மீனின் கதை மிகவும் வித்தியாசமானது. ஆண் மீனானது மிகவும் சிறியது. புணர்ச்சியின்போது அது பெண்ணின் உடலைக் கடித்து அதன் உடலுக்குள் நுழைந்துவிடுகிறது. அதற்கான போஷனை நீர் ஆகிய பெண்ணின் உடலில் இருந்தே கிடைக்கும். ஆனால் அது வாழ்வு அத்தோடு முடிந்துவிடும். பெண்ணின் உடலுக்குள்ளேயே சிதைந்து அழிந்து போய்விடும்.

anglerfish-and-male

‘காதலிக்காமலே இருப்பதை விடக் காதலித்துத் தோல்வியுறுவது மேலானது’

It is better to have loved and lost than never to have loved at all என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இந்த ஆண் ஜீவராசிகளின் கதைகளைக் கேட்கும்போது It is better to have loved and died than never to have loved at all என மாற்றிச் சொல்லலாம் போலிருக்கிறது.

நல்ல காலம் மனித இனத்தில் ஆண்களுக்கு, அன்ரகைனஸ் (antechinus mouse) சுண்டெலி போல தமது வாரிசுகளுடன்  அவ்வாறானதோர் போட்டியிட வேண்டிய தேவை இல்லாமல் போய்விட்டது. இல்லையேல் புணர்ந்தவுடன் கதிமோட்சமடையும் அவலம் ஆண்களுக்கும் நேர்ந்திருக்கும்.

  • உலகளாவிய ரீதியில் சனத்தொகைப் பெருக்கம் துரிதமாக நிகழ்கிறது.
  • பராமரிப்பு அதிகம் தேவைப்படும் முதியோர்களின் தொகையும் ஆரோக்கியமான விகிதாசாரத்தை மீறி வேகமாக அதிகரிக்கிறது. இவை கவனத்தில் கொள்ள வேண்டியவையாகும்.
  • அதே நேரத்தில் இயற்கை வளங்கள் அருகிக்கொண்டே போகின்றன.
  • இந்நிலையில் கிடைக்கும் வளங்களைப் பகிர்வதில் தங்களிடையே நாடுகள் சர்ச்சைப்படுவது போலவே குடும்பங்களிலும் பரவுவதற்கான சாத்தியங்கள் அதிகம். தந்தையும் மகனும் உணவிற்காக மூர்க்கமாகச் சண்டையிட்டு மடிவதைக் கற்பனை  பண்ணிப் பாருங்கள்.

பரிதாபம்தான்!

ஆனால் பிறக்கப்போகும் தன் மகனின் நலத்திற்காக, தான் புணர்ந்தவுடனேயே தன்னைப் பலிகொடுக்கும் தாராள சிந்தனை எந்த மனிதனுக்காவது வருமா?

தன்னுயிரைப் பலி கொடுக்க வேண்டும் என்றில்லை. தன் உறவுகளை, தனது சமூகத்தை, சூழலை, இயற்கையை அழிக்கும் செயற்பாடுகளில் இறங்காமல் இருத்தலே போதுமானது.

அதன் முதற்படியாக ஆண் பெண் உறவுகளை வெறும் காமக் கண்ணோட்டத்துடன் அணுகாமல் புரிந்துணர்வுடன் கூடிய உறவுகளாக வளர்ப்பது நல்லதாக இருக்கும்.

அத்தகைய உறவு காதலாக மட்டுமே இருக்க வேண்டும் என்றில்லை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

>’…காதலிக்க நேரமுண்டு
காதலிக்க ஆளுமுண்டு…”

எனப் பாடித் திரிந்த காலங்கள் இனிமையானவை. மறக்க முடியாத அந்த நினைவுகள் மனத்துள் துள்ளிக் குதிக்கின்றன.

‘காதலிக்க நேரமில்லை’  என்ற அந்தப் படம் நான் மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்தபோது பார்த்தது.

கஷ்மீர் அழகும், இளமையின் துள்ளலும், கமெடியும் இணைந்த வித்தியாசமான படம். ஸ்ரீதர் நெறியாள்கை. ரவிச்சந்திரன் ஆடிப்பாடுவார்.

சுற்றுலாக்கள் செல்லும்போது பஸ்சில் எங்கள் வாயில் அப் பாடல் ஓங்கி ஒலிக்கும். சகமாணவிகளும் இருப்பார்கள் அல்லவா? சேர்ந்து பாடும் துணிவும் அவர்களில் சிலருக்கு இருந்தது எம் அதிர்ஷ்டமே.

பின்னோக்கிய பார்வை

அன்று அது கிளுப்பூட்டும் வெறும் காதல் பாடலாகத்தான் இருந்தது. ஆனால் இன்று மருத்துவனாக யோசிக்கும்போது காதலுக்கும் உடல்நலத்திற்கும் இடையே ஆன நெருங்கிய தொடர்பை நினைக்க வைக்கிறது.

ஈருடலும் ஓருயிரும் என்பது போல உண்மையான அல்லது ஆழமான காதல் உடல் நலத்துடன் பின்னிப் பிணைந்ததாகும்.

“காதல் இனிமையான உணர்வுகளைத் தருகிறது, காற்றில் மிதப்பது போன்ற அற்புதமாக உணர வைக்கிறது. மனக்கிளர்ச்சியைத் தருகிறது.” என்றெல்லாம் காதலர்கள் சொல்லுவார்கள்.

‘..அவ்வுலகம் சென்று வந்தேன்
அமுதமும் குடித்து வந்தேன்..’

என்று பாடவும் செய்வார்கள். ஆம் காணாத புது உலகெல்லாம் காண வைப்பது அல்லவா காதல். மோட்சமும் இந்திரலேகமும் கிட்டவும் வராது.

ஆனால் எல்லாக் காதலும் உடல் நல மேம்பாட்டுடன் சம்பந்தப்பட்டதா?

எத்தகைய காதல்

கண்டவுடன் காதல் போன்ற திடீரென எழும் கவர்ச்சியும், காமமும் கலந்த உணர்வுகள் அத்தகைய ஆரோக்கிய நன்மைகள் தருவதாக ஆய்வுகள் சொல்லவில்லை.

புதிதாக ஏற்படும் திடீர்க் காதல் அற்புதமான அனுபவமாக தோன்றினாலும்,

  • சிக்கலானதாகவும்,
  • தேவைகளுக்கு ஈடுகொடுக்க முடியாததாகவும்,
  • தொல்லைப்படுத்துவதாகவும் சில வேளைகளில் இருப்பதுண்டு.

இதனால் மனஅமைதியும் ஆரோக்கியமும் கெடவும் வாய்ப்புண்டு.
ஆனால்

  • ஒருவரை ஒருவர் புரிந்து
  • மனதால் நெருங்கி
  • படிப்படியாக வளர்த்து வரும் உறவுகள் மனதிற்கு மட்டுமின்றி உடலுக்கும் நிறைய நன்மைகளைச் செய்கின்றன.
  • ஆர்ப்பாட்டமில்லாத, அமைதியான, மனத்திருப்தியுடன் கூடிய, நீண்ட நாள் தொடரும் காதல் உணர்வுகள் நிச்சயமாக நன்மை பயக்கின்றன என்பது அறிஞர்கள் கருத்தாக இருக்கிறது.

காதல் என்பது பாலியல் ரீதியானதாகவே இருக்க வேண்டும் என்பதில்லை.

மற்றவர்களுடன் மன ரீதியாக சாதகமான தொடர்புகளைக் கொண்டிருக்கும் போது,

  • நீங்கள் மதிப்புக்கு உரியவராக உணர்வீர்கள்.
  •  வேண்டப்பட்டவராக உணர்வீர்கள்,
  •  பாதுகாப்பு உணர்வு கிட்டும்.

இவை ஆண் பெண் காதலால் மட்டும் கிட்டுவதில்லை.

  • பெற்றோர் பிள்ளைகள்,
  • நண்பர்கள்,
  • நெருங்கிய உறவினர் மூலமும் கிடைக்கலாம்.
  • திருமண உறவின் பின் மனமொத்த தம்பதிகள் இடையே நிறையவே கிடைக்கிறது.
மருத்துவரிடம் ஓட்டம் குறையும்

காய்சல், தலையிடி, உழைவு இப்படி எத்தனையோ பிரச்சனைகளக்கு மருத்துவரிடம் பலரும் ஓட வேண்டியிருக்கிறது.

  • மருத்துவரிடம் ஓடுவதும்,
  • மருத்துவமனைகளில் அட்மிட் பண்ணி நிற்க நேருவதும்

மணமுடித்து மகிழ்ச்சியாக இருக்கும் தம்பதிகளிடையே குறைவு என ஒரு ஆய்வு கூறுகிறது.

மனவிரக்தி

மனவிரக்திக்கு ஆளாவதும், உள நெருக்கடிகளால் துன்புறுவதும் காதல் சூழலில் வாழ்பவர்களிடையே குறைவாகும்.

மாறாக தனியே வாழும் பலரும் விரக்தியுறுவதும், மது, போதை போன்றவற்றை நாடுவதும், அவற்றிற்கு அடிமையாவதும் அதிகம். அதே போல தனிமைப்பட்டவர்கள் மனவிரக்திக்கு ஆளாவது அதிகம் என்பதை பல ஆய்வுகள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றன.

மனப்பதற்றம்

அண்மையில் காதல் வயப்பட்டவர்களைவிட நீண்ட காலமாக நேசமான உறவில் இருப்பவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவது குறைவு என நியூ யோர்க் ஸ்டோனி புறுக் பல்கலைக்கழக ஆய்வு கண்டறிந்துள்ளது. MRI பரிசோதனைகள் மூலம் மூளையின் பகுதிகளை பரிசோதித்ததில் கண்டறிந்த முடிவு இது.

வலிகளைத் தாங்கும் தன்மை

127,000 தம்பதிகளைக் கொண்டு செய்த ஆய்வின் படி மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளுக்கு நாரிவலி, தலைவலி ஆகியன ஏற்படுவது குறைவாம். MRI பரிசோதனைகள் மூலம் வலிகளைத் தாங்கும் மூளையின் பகுதி அதிகமாகச் செயற்பட்டு வலி தோன்றுவதைக் குறைக்கிறது என்பதைக் கண்டறிந்தார்கள்.

நெருக்குவாரங்களுக்கு முகம் கொடுத்தல்
  • வேலை இழப்பு,
  • வாழும் சமூகத்தில் ஏற்படும் நெருக்கடி,
  • அல்லது வேறு ஏதாவது நெருக்குவாரங்கள் எற்படும்போது,

உங்களில் அன்பாக இருக்கும் ஒருவரது ஆதரவு கிடைக்குமாயின் அதற்கு முகம் கொடுத்து தாண்டி முன்நகர்வது சுலபமாக இருக்கும்.

இரத்த அழுத்தம்
  • மணமுடித்து மகிழ்ச்சியாக வாழும் தம்பதிகளின் இரத்த அழுத்தம் மற்றவர்களைவிடக் குறைவாக இருக்கிறது.
  • தனியாக இருப்பவர்களுக்க சற்று அதிகமாகவும்,
  • மணமுடித்து பிரச்சனைகளுடன் மகிழ்ச்சியற்று வாழ்பவர்களிடையே கூடுதலாகவும் இருந்ததாக

Annals of Behavioral Medicine மருத்துவ இதழில் வெளியான மற்றொரு ஆய்வு கூறியிருக்கிறது.

அதன் முக்கியத்துவம் என்னவெனில் மணமுடிப்பதால் மட்டும் இரத்த அழுத்தம் குறைந்து விடுவதில்லை. மகிழ்ச்சியாக வாழ்வதே முக்கியம் என்பதைச் சுட்டுகிறது

சாதாரண காய்ச்சல் அதிகம் வராது

காதல் உணர்வினால் மனவிரக்தி, மனப்பதற்றம், நெருக்குவாரங்கள் போன்றவை அடிக்கடி ஏற்படாது என அறிந்தோம். அவ்வாறு நிகழும்போது எமது நோயெதிர்பு சக்தி ஆற்றல் பெறும். அதனால் வழமையாக ஏற்படும் தடிமன் காய்;சல் போன்ற தொல்லைகள் அடிக்கடி ஏற்படாது ஒதுங்கிக் கொள்ளும்.

சாதாரண காயங்கள் விரைவில் குணமாகும்

காதலுணர்வுடன் வாழும் தம்பதிகளிரிடையே செய்யப்பட்ட ஒரு சிறிய ஆய்வானது சிறிய காயங்கள் தாமாகவே விரைவில் குணமாகிவிடும் என்று சொல்கிறது.

நீண்ட ஆயுள்

தனித்து இருப்பவர்களை விட திருமணம் முடித்தவர்கள் நீண்ட காலம் வாழ்கிறார்கள் என்ற தகவலை முன்பும் ஒரு கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறேன். திருமண உறவால்

  • பரஸ்பர ஆதரவும்,
  • பிள்ளைகளின் உதவியும்,
  • நிதி தட்டுப்பாடின்மையும் காரணமாக இருக்கலாம்.

ஆனால் அதற்கு மேலாக தாம் காதலிக்கப்படுகிறோம், ஆதரவுள்ளவர்கள் என்ற உணர்வு அவர்களுக்கு உடல்நலத்தையும் நீடித்த வாழ்வையும் கொடுக்கிறது.

அதே நேரம் மணமுறிவுகள் ஏன் என்ற எனது முன்னைய கட்டுரை மணவாழ்வின் துயர்மிகு பக்கத்தை ஆராய்கிறது

மகிழ்ச்சியான வாழ்வு
ராதையும்கிருஸ்ணனும் காதலுக்கு அடையாளம்

காதலின் மிகப் பெரிய கொடை

  • சந்தோசம், மகிழ்ச்சி, மனநிறைவு என்பது தெரிகிறது.
  • குடும்ப வருமானத்தையும் வாழ்க்கை வசதிகளையும் விட பரஸ்பர அன்பும், நெருக்கமான உறவும், மனமொத்த காதலும் முக்கியமானது.
  • அது ஆரோக்கியத்துடனும் தொடர்புடையது.

இவை வெற்று வார்த்தைகள் அல்ல விஞ்ஞானபூர்வமாகவும் நிறுவப்பட்டுள்ளது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்.

ஆதலினால் காதல் செய்வீர்.

ஆழமான காதலினால் உடல்நலம் பெறுவீர்.

நான் எழுதி, ‘இருக்கிறம்’ சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் மீள் பதிவு

எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »