>காவடி ஆட்டங்கள் அதுவும் துலாக் காவடி போன்றவை மிகவும் ஆபத்தானவை. அண்மையில் காவடியாட்டத்திற்காக, கொக்கிகள் குத்திய இடத்தில் சீழ்ப் பிடித்துத் துன்பப்பட்ட ஒருவருக்கு மருத்துவம் செய்ய நேர்ந்தது.
அது ஏற்பு நோயாக மாறியிருந்தால் என்னவாகியிருக்கும்?
ஆயினும் அவர் அப்பொழுதும் அசுத்தமான ஊசிகளைக் குத்தியதால்தான்
புண் ஏற்பட்டது என நம்பவில்லை.
விளக்கிச் சொல்லியும் புரியவில்லை.
புரிந்து கொள்ள முயலவும் இல்லை.
நம்பி்க்கைகள் பலமானவை. அவை மூடநம்பி்கைகளாக இருந்த போதும்.
பஸ் பிரயாணம் செய்யும் போது அப் பகுதியானது இருக்கையில் அண்டியதால்தான் நோயுற்றதென நம்பினார்.
ஆயினும் தனது நேர்த்திக் கடனைப் பூர்த்தி செய்ததால் அவரது மனக்குறை தீர்ந்திருந்தால் அவர் ஏதோ ஒரு வழியில் பலன் பெற்றார் என அவருடன் பிணக்குறாது மகிழ வேண்டியதுதான்.
சமயச் சடங்குகள் பலவற்றிற்கும் ஏதோ பலன் இருக்கத்தான் செய்கின்றன. இருந்தபோதும் சடங்குகளை நம்புவர்கள் நினைப்பது போல அவை இறைவன் அருளால் கிட்டுபவை அல்ல.
ஆறறிவு மனிதருக்கு மேலான அறிவுடைய கடவுளர் இருக்கக் கூடுமேயானால், மனிதர்களுக்கு அறிவைக் கொடுத்தும் அதனைப் பயன்படுத்தத் தவறியதைக் கண்டு தலை கவிழ்ந்திருப்பார்.
பலன்கள் உளவியல் சார்ந்தவை. தான் விட்ட பிழைக்கு மன்னிப்புப் பெற்று மனச் சாந்தியடைய வைக்கின்றன. அல்லது தனக்குக் கிட்டிய, கிட்டப்போகிற ஆதாயங்களுக்கு நன்றிக் கடனாக லஞ்சமாகவும் இருக்கலாம்.
எதுவாக இருந்தபோதும் தன்நம்பிக்கையுடன், சுயமுயற்சியால் முன்னேறுபவனுக்கும் இதில் ஈடுபாடு இருக்க நியாயமில்லை.
ஆனால் அதனை ஒரு ஆடற் கலையாகக் கொள்வதில் தவறில்லை.
பாரம்பரியம் சார்ந்தவையாக இருந்தபோதும், சடங்குகள் சம்பிரதாயங்கள் உடல் நலத்திற்கு ஆபத்தானவை என்றால் தவிர்க்க வேண்டியவையே.
அவற்றில் பல இன்றைய அறிவு விஞ்ஞானப் பின்புலத்தில் மீள் மதிப்பீடு செய்ய வேண்டியவை. அல்லது சுகாதார ரீதியான திருத்தங்களுடன் ஆற்றப்பட வேண்டியவை.
காவடியாடுதல் என்ற சொல்லுக்கு வேறொரு அர்த்தமும் உண்டு.
கவிஞர் மப்றூக் கவிதை அதைப் பேசுகிறது.
காவடியாட்டம் பற்றிய அவரது ‘காற்று’ இணையப் பதிவுக் கவிதை படிக்க கிளிக் பண்ணுங்கள்.
அவர் கவிதை என் மனத்தை அலைத்தது.
சில வார்த்தைகள் சொல்ல வைத்தது.
கடவுளரைக் கட்டி வைக்குமோ
எச்சிலுக்கு வழிய வைக்குமோ
அறிந்திலேன்.
தன்னிலும் வலிந்தவன் முன்
அவரவர்
ஆடிக்கொண்டேயிருக்கிறார்கள்.
நிர்வாணமாக,
நம்பிக்கைகள் சூழ.
கடவுளரின்
சூழ்ச்சிகளும் கயமைகளும்
புரியாத வெண்
மனசுப் பேதையராக.
![]() |
துலாக் காவடி |
தாவாரம் இணைய தளத்தில் ஜெகன் அவர்களது காவடி பற்றிய சிறந்த சமூகவியல் கட்டுரையைத் தந்துள்ளார். படிக்க கீழே சொடுக்குங்கள்.
மேலும் சிந்திப்பதற்கும் உரையாடுவதற்குமான விடயம்.