Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குறிப்புப் பார்த்தல்’ Category

>கணவனும் மனைவியுமாக வந்திருந்தனர்.
ஐம்பதுக்கு சற்று மேலாக வயதிருக்கலாம்.
புதியவர்கள்.
இன்றுதான் என்னிடம் மருந்தெடுக்க
முதல் முதலாக வந்திருந்தார்கள்.


அவவிற்கு நிறையச் சொல்ல வேண்டியிருந்தது.

தன்னைப் பற்றிய முழு விபரமும் தனது மருத்துவருக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்ற அவா.

பிறந்த காலத்திலிருந்து ஆரம்பித்தார்.

பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டதை நான் அவதானித்த போது அவர் தனது கதையில் கன்னிப் பருவத்தில் இருந்தார்.

திடீரெனக் கண் சிமிட்டினார்! நான் சற்றுத் திடுக்கிட்டேன்.


கடைக்கண்ணால் கணவருடன் மௌன மொழி பேசினார்.

கணவனை பார்த்துத்தான் கண்சிமிட்டினார் என்பது புரிவதற்கிடையில் அவர் மற்றொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.

தாங்கள் காதலித்த போது
கடற்கரையில் தான் தடக்கி விழுந்து
காலில் உரசிய போது
அவர் செய்வதறியாது திகைத்து நின்றதும்,
பின் தன் கால்களைப் பற்றியபடி….

தமது காதல் அனுபவத்தில் சுவார்ஸமாகத் திளைக்க ஆரம்பித்தார்.


இந்த வேகத்தில் போனால் கருக்கட்டி. கர்ப்பமாகி, குழந்தை பெற்று, வளர்த்து, அவர்களுக்கு கலியாணம் பேசி…

ஏனைய நோயாளிகளின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற எண்ணம் தலை தூக்க ஒரு காதால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஏனைய விபரங்களைக் கேட்டுக் குறிக்கலாம் என முடிவு செய்தேன்.

பெண்மணியைப் பேசவிட்டுவிட்டு கணவரிடம் மனைவியின் பெயரைக் கேட்டேன்.

மிஸஸ் …. எனத் தனது பெயரைக் கூறியபோது,
முழுப் பெயரைக் கேட்டேன்.

அதாவது மனைவியின் பிறப்புப் பெயரை.

‘இவன் யார் எனது மனைவியின் பெயரைக் கேட்பதற்கு!’ என எண்ணினாரோ?
தலை நரைத்த அவர் சற்று யோசனையின் பின் மனைவியின் பெயரைத் தயக்கத்துடன் சொன்னார்.


கம்பியூட்டரில் பதிந்து கொண்டேன்.

இருவர் கண்களும் கம்பியூட்டரிலும் என்னிலும் ஆழப் பதிந்து மீண்டன.

அடுத்து வயது, விலாசம் என அடுத்தடுத்துக் கேட்டபோது கணவன் மட்டுமின்றி மனைவியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.

ஆச்சரியத்துடன் என் முகத்தைப் பார்த்தனர்.

இருவர் கண்களும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டதாக எனக்குப் பட்டது.

பொலீஸ் பதிவு போல நானும்; விபரம் கேட்கிறேன்,
இதுவும் ஏதோ பாதுகாப்பு விவகாரம் என எண்ணுகிறார்கள் போலும்.

ஆயினும் கருத்து எதுவும் சொல்லாமல்
அடுத்த கேள்விக்குத் தாவினேன்.

அடுத்த கேள்வியையும் கேட்டவுடன்
அவர்கள் முகம் ஆச்சரியத்தின் எல்லையை எட்டியது.

சந்திர பிம்பமென வதனத்தில் சற்று மகிழ்ச்சியும் பரவியது.

‘டொக்டர் அப்படித்தான். நான் சொன்னேன் பார்த்தீர்களா’ என்றாள் மனைவி.

ஆமாம் என்று விடையளிப்பது போலத் தலையை ஆட்டினார் கணவன்.

இப்பொழுது ஆச்சரியத்தில் மூழ்குவது எனது முறையாயிற்று.

அவரது பிறந்த திகதியைத் தானே கேட்டுப் பதிந்தேன்!!

‘நான் என்ன புதுமையாகச் செய்தேன் என இவள் கண்டு பிடித்தாள். அவரும் ஆமோதிக்கிறாரே!’ என வியந்தேன்.

இருந்தபோதும் வெளிப்படையாகக் கேட்க வெட்கம் தடுத்தது.

ரகசியம் வெளிப்பட்டது. அவளின் அடுத்த பேச்சில்.

“டொக்டர் நீங்கள் குறிப்பைப் பார்த்து வைத்தியம் செய்யிறது எங்களுக்கு வலு சந்தோசம்.”

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

நான் நோயாளியின் விபரங்களை அக்கறையாகப் பதிவு செய்வதைக் கவனித்துவிட்டார் அல்லவா?

அக்கறையுள்ள டொக்டர் என நினைக்கிறார்கள்.

பெருமையில் மிதந்தேன்.


பத்து வருடங்களுக்கு மேலாக
ஒவ்வொரு நோயாளியினதும் பெயர் முதற் கொண்டு
அவர்களின் நோய் விபரங்களையும் பதிவு செய்து வருவதால்
நோயாளர் கவனிப்பில்
நானே இலங்கையில் சிறந்தவன்,
முன்னோடி என்றெல்லாம்
நானே என்னை மெச்சிக் கொள்வதுண்டு.

கணனித்துறை நண்பன் கார்த்தியின் உதவி கிட்டியதால் இலங்கையில் அவ்வாறான டேட்டா பேசை முதலில் ஆரம்பித்தவன் நானே.

இன்று கூட கையில் அடங்கக் கூடிய மருத்துவர்களே இங்கு அவ்வாறு செய்கிறார்கள்.

நோயாளிகள் தங்கள் பதிவுகளை தாங்களே பாதுகாக்காத நிலையும் இங்கு உண்டு. ஆனால் ஒரு விரல் சொடுக்கில் அவர்கள் நோய் விபரங்களை எனது கணனியில் கண்டறிய முடியும். பல நோயாளிகள் இதைப் புரிந்து கொள்வதில்லை.

‘முகத்தைப் பார்க்காது மொனிட்டரைப் பார்த்து வைத்தியம் செய்பவர்’
நக்கல் அடிப்பவர்கள் நிறையவே உண்டு.

இவர்களாவது என்னைப் புரிந்து கொண்டார்களே என திருப்தியடைந்தேன்.
அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித்தார். மேலும் பாராட்ட முனைகிறாரா? அக்கறையுடன் கவனித்தேன்.

“அந்தக் காலத்திலை ஓலை பார்த்துத்தான்
பரியாரிகள் வைத்தியம் செய்வினம்….”


“..இப்ப ஆர் அப்படியிருக்கினம்?
நீங்கள் ஒராள்தான்
காலத்திற்கு ஏற்றாற் போல
கொம்பியூட்டரிலை
சாதகக் குறிப்பு பார்த்துச் செய்யிறியள்.”

என்றாள் மனைவி.

இப்படியும் எனது கொம்பியூட்டர் பதிவுக்கு அர்த்தமா? அதிர்ந்தேன்.

அறிவியலுக்கு ஒவ்வாத சாத்திரம், எண்சோதிடம், ஓலை, காண்டம் வாசிப்பு, போன்ற எதிலும் நம்பிக்கையற்ற ஒருவனுக்கு இப்படியும் ஒரு பாராட்டா?

0.0.0.0.0.

Read Full Post »