Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குறுநாவல்’ Category

>அகதிகள் பிரச்சனை இப்பொழுது இலங்கையில் மிகத் தீவிரமடைந்துள்ளது. அதன் தாக்கம் உலகளாவிய ரீதியில் உணரப்படுகிறுது. அது பற்றிய மாறுபட்ட கருத்துக்கள் முன் வைக்கப்படுகின்றன. ஆனால் இக்கட்டுரை 2005ம் ஆண்டளவில் வெளியிடப்பட்ட தெணியானின் குறுநாவல் தொகுப்பு பற்றிய கட்டுரையாகும். அது பேசுவதும் அகதிகள் பற்றியே. 2005ல் வெளியான இக்கட்டுரையை இப்பொழுது எனது வலைத்தளத்தில் பதிவிடுகிறேன்.

அகதிகள், இடம் பெயர்தல் போன்ற சொற்களின் அர்த்தத்தைத் தெரியாத ஈழத்துத் தமிழர்கள் எவருமே இருக்க முடியாது. அரசியல், மதம், மொழி போன்ற காரணங்களால் தமது சொந்த நாட்டை விட்டு வெளியேறி வேறு நாடுகளில் தஞ்சம் புகுந்தவர்களையே அகதிகள் என்று அகராதிகள் பொருள் கூறும்.

அகராதிகள் அவ்வாறு கூறியபோதும் எமது நிதர்சன வாழ்வில் அது உணர்த்தும் பொருள் பரந்தது. உணர்வு பூர்வமானது. ஒவ்வொருவரினதும் தனிப்பட்ட அனுபவங்களுக்கு ஏற்ப பல்வேறு அர்த்தங்களைக் கொடுக்கக் கூடியது.

உயிரைக் காக்க, உடுத்த உடுப்போடு வீட்டைவிட்டு ஓடிச் சென்று மரநிழல்களிலும், கோயில், பாடசாலை அல்லது அறிந்தவர் வீடுகளிலும் தலை சாய்க்க இடந் தேடி அலைந்த துயரத்தை தமது வாழ்வில் குறைந்தது ஒருமுறையாவது அனுபவிக்காத வட கிழக்கு வாழ் மக்கள் இருக்க முடியாது.

அகதிகள் என்ற சொல் அவர்களுக்கு கொடுக்கும் அர்த்தம் துன்ப துயரத்தில் தோய்ந்தது. புதிய புதிய அர்த்தங்களுக்கான சாத்தியப்பாடுகளைத் திறந்து விடுவது. அது மாத்திரமின்றி அவர்களது இருப்பையும் தன்மானத்தையும் கேள்விக் குறியாக்குவது. வார்த்தைகளில் புரியவைத்துவிட முடியாத அதன் கனத்த, பரந்த பரிமாணத்தை ஒவ்வொருவரும் தாம் வாழ்வில் பெற்ற அனுபவங்களின் பின்னணியில்தான் காண முடியும். உணர்வுகளின் கூட்டுறவில்தான் புரிய முடியும்.

ஆனால் இவை எல்லாவற்றுக்கும் அப்பாலான, முற்றிலும் வேறுபட்ட இன்னுமொரு பரிமாணம் அகதிகள் என்ற சொல்லுக்கு இருக்கலாம் என்பதை தெணியானின் ‘பரம்பரை அகதிகள்’ என்ற குறுநாவல் எமக்கு உணர்த்துகிறது. அகதி வாழ்வின் அவலத்தை நிதர்சனமாக அனுபவித்த எம் போன்றவர்களுக்குக் கூட அந்த அர்த்தம் அதிர்ச்சியளிப்பதாக இருக்கிறது.

காலங்காலமாக ஒரு குறிப்பிட்ட நிலத்தில் வாழ்ந்தாலும் “குடியிருப்பதற்கு ஒரு குளி நிலந்தானும் சொந்தமாக இல்லாத’ தாழ்த்தப்பட்ட மக்கள் அனுபவித்த பரிதாபமான வாழ்வு இக் குறுநாவலில் சொல்லப்படுகிறது. கந்தசாமியும் அவனைச் சார்ந்தவர்களும் தங்கள் குடியிருப்பு நிலம் தமக்குச் சொந்தமாக இல்லாததால் உயர்சாதி நில உடைமையாளர்களால் பல முறை குடியெழுப்பப்பட்டு, இடம்பெயரச் செய்து, அகதிகளாக அலைக்கழிக்கபட்ட கண்ணீர்க் கதைதான் பரம்பரை அகதிகள்.

அவர்கள் அந்நிய இராணுவத்தால் விரட்டியடிக்கப்படவில்லை, வேற்று மொழி பேசும் சொந்த தேசத்து இராணுவத்தால் துரத்தியடிக்கப்படவில்லை. தமது சொந்தச் சகோதரர்களால் அகதியாக்கப்படுகிறார்கள். ஒரே மொழியான தமிழ் மொழி பேசுபவர்களால், ஒரே பிரதேசமான வடமராட்சியைத் சார்ந்தவர்களால், ஒரே மதத்தை கடைப்பிடிப்பவர்களால் இந்தக் கொடூரம் இழைக்கப்படுகிறது. அவர்கள் சாதியின் பெயரால் ஒடுக்கப்படுகிறார்கள். அடக்கப்படுகிறார்கள். அடிமைகள் போல் நடாத்தப்படுகிறார்கள், அகதிகளாக விரட்டியடிக்கப்படுகிறார்கள். இது எமது சமூகத்தின் சாபக்கேடு.

வடமராட்சியின் புலோலி பகுதியைச் சார்ந்த அவன், தான் குடியிருந்த ஒவ்வொரு நிலத்திலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டு தும்பளை, கரணவாய், கெருடாவில் என குடியிருக்க நிலம் தேடி அலைகிறான். உடலுரமும் முரட்டுத்தனமும் கொண்ட அவன் நாலெழுத்துப் படித்தவன் கூட. தனது சமூகத்திற்கு எதிரான உயர்சாதிமான்களின் கொடுமைகளால் குமுறி வெடித்து வேசம் கொள்பவன். ஆனால் தனி ஒருவனான அவனால் என்ன செய்ய முடியும்? கொடுரம் நிறைந்த, ஆள் அணி கொண்ட சாதி வெறியர்களை எதிர்த்துப் போராட முடியவில்லை. பணியவும் முடியவில்லை. இருக்க இடம் தேடி அலையத்தான் முடிந்தது.

இக் கதையில் சொல்லப்படுவது ஏதோ ஒரு உதிரிச் சம்பவம் அல்ல. காலங்காலமாக எமது யாழ் மண்ணில் கட்டவிழ்த்து விடப்படுகிற சாதீய ஒடுக்குமுறையின் கொடூர முகம். அதிலும் அதன் ஒரு சிறு அத்தியாயம் தான் இது. ஆனால் இன்றுதான் பதிவாகிறது.

தனது முந்தைய நாவலான ‘கானலில் மான்’ க்கு இவ்வருடத்தைய சாகித்திய பரிசைத் தட்டிக் கொண்ட தெணியானின் புதிய நு¡ல் “சிதைவுகள்’. இந் நு¡லில் இரு குறுநாவல்கள் அடங்குகின்றன. முதல் குறுநாவல் நாம் ஏற்கனவே பேசிய பரம்பரை அகதிகள். இந் நு¡லில் அடங்கும் அடுத்த குறுநாவல் சிதைவுகள். “பரம்பரை அகதிகள்’ ஈழநாடு ஞ்¡யிறு மலரில் 1985 ல் தொடராக வெளிவந்து வாசகர்களின் பாராட்டைப் பெற்றது. இரண்டாவது குறுநாவலான “சிதைவுகள்’ தேசிய கலை இலக்கியப் பேரவையும் சுபமங்களாவும் இணைந்து நடாத்திய ஈழத்துக் குறுநாவல் போட்டியில் பரிசு பெற்றது. பு¢ன் 1998ல் தினகரன் வாரமஞ்சரியில் வெளிவந்து வாசகர்களின் அமோக தரவைப் பெற்றது.

இந்த இரண்டு குறுநாவல்களையும் இணைத்து மீரா பதிப்பகத்தினர் ஒரு நு¡லாக வெளியிட்டுள்ளனர். இரண்டாவது குறுநாவலான சிதைவுகள் போர்க் காலமான 1991ல் களம் கொள்கிறது. அரசின் திடீர் அறிவித்தல் காரணமாக இரவோடு இரவாக தமது சொந்த மண்ணை விட்டு வடமராட்சி மக்கள் அகதிகளாக இடம் பெயர்ந்து தென்மராட்சி, வலிகாமம் நோக்கிச் சென்று பட்ட துன்பங்கள் துயரங்களைச் சொல்கிறது. அகதியாகும் பிரச்சனை பற்றி மட்டுமின்றி போர்ச் சூழலின் அவலங்களையும் அதனால் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பம் யாழ், கொழும்பு, வெளிநாடு எனப் பிரிந்து சிதைவதையும், அக் குடும்பம் எதிர் கொள்ளும் அகால மரணங்களையும் மிக அற்புதமாகச் சித்தரிக்கிறது.

இக் கதை அற்புதமாக அமைந்ததற்குக் காரணம் என்ன? இது தெணியானின் அடி மனத்திலிருந்து பீறிடும் சத்தியமான பதிவாக இருப்பதுதான். தானும் தன் உறவினரும் சுற்றத்தாரும் நண்பர்களும் நேரிடையாக அனுபவித்த நிஐமான துன்பங்களின் மறுவார்ப்பு இது. மிகவும் உணர்வு பூர்வமாகச் சொல்கிறார். அவர் சொல்வது வாசகர்களான ஒவ்வொரு தமிழனதும் சொந்த அனுபவமாக இருக்கிறது. எங்கள் அனுபவம் அவரது அனுபவத்துடன் கலவியுறும்போது அற்புதமான உணர்வலைகளை எம்மில் கிளர வைக்கிறது.

இதில் வரும் பாத்திரங்கள் யார்? அப்பா, அம்மா, மூத்தவன், மூத்தவள் நடுவிலான், சின்னவள் இப்படித்தான். எல்லாமே பெயரற்ற பாத்திரங்கள். இவர்கள் யாவரும் எவரோ அல்லர். எம்மவர்கள், எமது குடும்பத்தினர் என்ற உணர்வே ஏற்படுகிறது. இதனால் இது எமது கதை போல உணர்கிறோம். இதனால் நாவலோடு உணர்வு பூர்வமாக ஒன்றிவிட முடிகிறது. பாத்திரங்களுக்கு பெயர் கொடுக்காத உத்தியைப் பயன் படுத்திய தெணியான் வெற்றி பெறுகிறார்.

இன்று முதுமை பற்றி அதிகம் பேசப்படுகிறது. அரசுகள் அக்கறை எடுக்கின்றன. மருத்துவத்தில் Geriatrics ஒரு அலகாக முக்கியத்துவம் பெறுகிறது. தெணியானும் தனது பங்காக இந்நாவலில் முதுமைக்கு இலக்கிய அந்தஸ்து கொடுக்கிறார். இந்த நாவலின் பிரதான பாத்திரம். அப்பா. இளைப்பாறிய அதிபர். முதியவர். அப் பாத்திரம் ஊடாக முதியவர்களின் எண்ணங்கள், உணர்வுகள், செயற்பாடுகள் யாவற்றையும் நுணுக்கமாக அவதானித்து பதிவு செய்துள்ளமை மருத்துவனான எனக்கு ஆச்சரியத்தை ஊட்டியது.

உறவுகளின் நெருக்கமும், நேர அவகாசம் நிறைந்ததுமான கிராமச் சமுதாயத்தில் கூட வெளிவிறாந்தையில் இரு கதிரைகள் போட்டமர்ந்து பேசுவதற்கு யாராவது வருவார்களா காத்திருக்கிறார் அப்பா. அவரூடாக முதுமையின் தனிமையுணவு நாடு, பிரதேசம் மற்றும் கலாசார எல்லைகளைத் தாண்டியது என்பதை உணர்கிறோம். மிக அற்புதமாக சித்தரித்துள்ளார்.

ஈழத் தமிழ்ச் சமுதாயத்தின் மிகத் துன்பமான, இருள் சூழ்ந்த ஒரு காலகட்டத்தின் அற்புதமான பதிவாக சிதைவுகள் குறுநாவல் அமைகிறது.. செய்தித் தணிக்கைகளாலும், இனவாத ஊடகங்களினாலும் வெளி உலகுக்கு மறைக்கப்பட்டு, இன்று சமாதானக் கேளிக்கையால் மறக்கப்படும் ஒரு சமூகத்தின் இருண்ட சோகமான காலகட்டம் தெணியானின் எழுத்தில் காவியமாக உயர்ந்து எழுகிறது.

ஆனால் கடைசி இரு அத்தியாயங்களும் எக்ஸ்பிரஸ் வேகத்தில் ஓடி கதையை நிறைவு செய்ய முனைகின்றனவே அன்றி அனுபவப் பகிர்வாக அமையவில்லை என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும்.

இந்த இரண்டு குறுநாவல்களும் சிறப்பாக இருந்தபோதும் வெவ்வெறு விதத்தில் தனிச் சிறப்புப் பெறுகின்றன. யாராலும் பேசப்படாத ஒரு விடயத்தைப் பேசி, அகதி என்ற சொல்லுக்கே புது அர்த்தம் தேடும் ‘பரம்பரை அகதிகள்’ தனது கதையின் கருவால் உயர்ந்து நிற்கிறது. மறுபுறம் சிதைவுகளானது தமிழ் மக்களது இன்றைய எரியும் பிரச்சனையைப் பேசினாலும் தெணியானின் சித்தரிப்பு நேர்த்தியால் தரமுயர்ந்த இலக்கிய அந்தஸ்தைப் பெறுகிறது.

தெணியான் தனது அறுபது வயதிலும் வளர்ந்து வருகிறார். பல மூத்த எழுத்தாளர்கள் எழுதுவதையே கைவிட்டு ஓய்ந்த நிலையிலும், இன்னும் சிலர் தொடர்ந்து எழுதினாலும் அவர்களது எழுத்தாற்றல் நீர்த்துப் போய் சுவை கெட்டுப் புளித்துப்போன நிலையிலும் இவரோ தனது கலாரீதியான தேடலை விரிவாக்குகிறார். தனது கற்பனைத் திறனை சமூகம் சார்ந்த வெளியில் பறக்கவிடுகிறார். தனது சொல்லும் திறனை தினம் தினம் புதுப்பித்து மெருகேற்றி வருகிறார்.

இந்த இரு குறுநாவல்களையும் ஒன்று சேர்த்துப் படிக்கும்போது இது தெளிவாகத் தெரிகிறது. ஒரு பதினைந்து கால வித்தியாசத்தில் தெணியான் தனது படைப்பாற்றலை உன்னதங்களை நோக்கி எப்படி வளர்த்து வந்துள்ளார் என்பது ஆச்சரியமூட்டுகிறது. அவதானிப்பின் கூர்மை, சித்தரிப்பின் செழுமை, மொழியாற்றல் யாவும் கைகோர்த்து வர இந்நாவலை அற்புதமாகச் செதுக்கியுள்ளார்.

ஒரு எழுத்தாளனின் சிறப்பு என்பது, தான் பெற்ற அனுபவங்களையும், தான் அவதானித்ததும் கேட்டறிந்ததுமான மற்றவர்களது அனுபவங்களையும் எழுத்து வழியாக வாசகர்களுக்கு கைமாற்றுச் செய்யும் ஆற்றலில்தான் தங்கியிருக்கிறது. மொழி வழியாக தனது அனுபங்களை எளிதாக வாசகனுக்குக் கைமாற்றுச் செய்யக் கூடிய எழுத்தாளனே உச்ச நிலை எழுத்தாளனாகப் பரிணமிக்க முடியும். தெணியானும் இதையே எட்ட முயல்கிறார். பல இடங்களில் அவரது வார்த்தைகள் கருத்து ஊடாடலுக்கான வெற்று வார்த்தைகளாக அல்லாது கவிதைகளாக உள்ளத்தோடு பேசுகின்றன. நுண்ணுணர்வைப் பகிர்ந்து கொள்கின்றன. சித்திரங்களாக எமது எண்ணங்களைத் தோகை விரித்து ஆடச் செய்கின்றன. சில உதாரணங்களாக இவற்றைச் சொல்லலாம்.

‘மரமும் கொடுகும் மார்கழி மாதத்துக் கடும் குளிர்-‘

‘அடிப்பதற்கு கை நீட்ட வேண்டுமா? ஓவ்வொரு அசைவிலும் இன்னொருவர் இதயத்தில் ஓங்கி அடிக்கலாம்.’

‘திசைகள் எங்கும் மரணம் சூழ்ந்து நிற்கிறது. மரணத்தை மறித்துத் தப்பி ஓடுவது…’.
இவைபோல் இன்னும் எவ்வளவோ!

இதே போல வடமராட்சி மண்ணின் வாசனையை ‘உணவை ஒறுத்து நடப்பது’, ‘பத்தாள்மைக்காரர்’ போன்ற பல பாரம்பரியச் சொற்களை பொருத்தமறிந்து கையாள்வதன் மூலம் செய்நேர்த்தியுடன் பதிவு செய்கிறார்.

தெணியான் ஒரு நல்ல சிறுகதையாசிரியர். அதே நேரம் இலங்கையின் முக்கிய நாவலாசிரியர்களில் ஒருவரும் கூட. நாவல் என்பது சிறுகதையுடைய நீட்சியாகவோ, நீண்ட கதையாகவோ இருக்கக் கூடாது என்பதை நன்கு புரிந்து கொண்டவர். இதனால்தான் அந்த இரு துறைகளிலும் அவரால் வெற்றி பெற முடிந்தது. இருந்தபோதும் ‘தெணியான் பிரதானமாக ஒரு நாவலாசிரியரே’ என பேராசிரியர் சிவத்தம்பி ஓரிடத்தில் சொல்லியிருக்கிறார். அதுவும் இன்னொரு வகையில் உண்மைதான். ஏனெனில் அவர் தனது படைப்புகளை நாவல் என்ற பிரமாண்ட வடிவத்தின் விஸ்வரூப தரிசனத்தை நோக்கி நகர்த்திக் கொண்டிருக்கிறார். பிரமாண்டம் என்பதை படைப்பின் கன அளவைக் கொண்டோ, பக்கங்களின் நீட்சியைக் கொண்டோ, பாத்திரங்களின் எண்ணிக்கையை வைத்தோ மதிப்பிடவில்லை. மாறாக அதன் உள்ளடக்கத்தையும் கலைப் பெறுமானத்தையும் வைத்துச் சொல்கிறேன்.

தெணியானின் “சிதைவுகள்’ 60 பக்கங்களைக் கூடத் தாண்டாத சிறிய படைப்பு. ஆனால் இந்தக் குறுகிய பக்க அளவுக்குள் வாழ்வின் விசாலத்தையும், அதன் பல்வேறு பரிமாணங்களையும் உள்ளடக்க முனைகிறார். முக்கிய பாத்திரங்கள் மாத்திரமின்றி பக்கத்து வீட்டுக் கடைக்காரத் தம்பி, அம்மாவை ஆஸ்பத்திரிக்கு ஏற்றிச் செல்ல உதவிய வண்டில்காரன், தானும் இடம் பெயர்ந்திருந்த போதும் ஆபத்துக்கு உதவிய வைத்தியர் போன்ற உதிரிப் பாத்திரங்களும் கூட உயிர்த் துடிப்போடு படைக்கப் பட்டிருந்தனர். இதனால் வெறும் கதை சொல்வது என்ற வழமையான பரிமாணத்தைக் கடந்து ஒரு சமூகத்தின் சிதைவை ஆழமாகவும், அகலமாகவும், இந்நாவலில் தா¢சிக்க முடிகிறது.

“நாவல் என்பது வளர்ந்து விரிந்து செல்லும் பவ்வேறு கேள்விகளின் பொ¢ய வடிவம் அல்லது artistic discussion of values(or) philosophic version of life. வரலாற்றையோ நுண்ணுணர்வுகளையோ கணக்கில் எடுக்காமல் வெறும் வாழ்க்கையை சொல்வது நாவலாகி விடுவதில்லை. ….. நாவலென்பது இன்னமும் விரிந்து விரிந்து ஒட்டுமொத்த வாழ்க்கையையே தன்னுள் அடக்கிவிடும் துடிப்போடு பொங்கி வரக்கூடியது.’ என ஜெயமோகன் அண்மையில் ஒரு நேர்காணலில் கூறியதை இவ்விடத்தில் ஞாபகப்படுத்திக் கொள்ளலாம். இன்று இலங்கையில் இத்தகைய ஒரு நாவலைப் படைக்கக் கூடிய ஆற்றல் உள்ள ஓரு சிலரில் தெணியான் முக்கியமானவர் என எண்ணத் தோன்றுகிறது.

அட்டைப் படம் ரமணி. ஒரு மனித உருவம் கூட இல்லாது. ஒரு சமூகத்தின் சிதைவையும், அகதியாகும் அவலத்தையும் அற்புதமாகப் படைத்துள்ளார். வழமையான ரமணியின் அட்டைப்படம் அல்ல. மிகவும் வித்தியாசமானது. எமது கற்பனைத் தேரை பாய்ந்தோட விட்டு, புதிய புதிய பரிமாணங்களைக் கிளறியெடுத்து ரசிக்கக் கூடியது. அவர் தேர்ந்தெடுத்திருக்கும் இருள் சேர்ந்த வர்ணச் சேர்க்கையால் அகதி வாழ்வின் சோகம் எமது மனத்தை அப்பிக் கொள்கிறது.

இந்த இரு குறுநாவல்களையும் தேர்ந்தெடுத்து நு¡லாக்கிய மீரா பதிப்பகத்தின் இரத்தினவேலோன் பாராட்டுக்குரியவர். இது அவர்களது 38வது வெளியீடு. திறனாய்வு, சிறுகதை, திரைப்படச் சுவடி, திரைப்படக் கலை, நலவியல், மனோவியல், அழகியல், நாட்டார் இலக்கியம், விஞ்ஞானம், தலவரலாறு, குழந்தைப் பாடல்கள் என பல்துறை நு¡ல்களை வெளியிட்டு, தணியாத தாகத்துடன் ஈழத்துப் பதிப்பகத்துறையில் புதிய எல்லைகளை எட்ட முயலும் அவர்களது முதல் நாவல் இதுதான். இருள் சூழ்ந்த ஈழத்து வெளியீட்டுத் துறையில் நம்பிக்கையூட்டும் பதிப்பகம். ஆதரவளிப்பது எம் கடமை.

நூலாசிரியர்:-
தெணியான் (கந்தையா நடேசன்),
கலையருவி, கரணவாய் வடக்கு,
வல்வெட்டித்துறை.

வெளியீடு:-
ஆ.இரத்தினவேலோன்,
வெளியீடு: இரத்தினவேலோன், மீரா பதிப்பகம்,
291/6-5/3A,Edward Avenue Colombo 05.
Telephone 94 11 2582539

இலங்கை விலை:-
ரூபா 250/=

கட்டுரையாளர்:-
எம்.கே.முருகானந்தன்.
kathirmuruga@gmail.com

Read Full Post »