மருத்துவ குறுந் தகவல்
தூக்கம் அனைவருக்கும் அவசியமானது. பச்சிளம் பாலகர் முதல் பல் விழுந்த தாத்தாக்கள் வரை எல்லோருக்குமே போதுமான தூக்கம் இல்லாவிடத்து பிரச்சனைகள் எழும் அதே போல பள்ளிக்கூடம், விளையாட்டு, ரியூசன், நண்பர்கள் கூட்டு என பொழுது பூராவும் ஓடித் திரியும் பதின்ம வயதினருக்கும் மிக மிக அவசியமாகும்.
போதிய தூக்கம் இல்லாதவிடத்து அவர்களுக்கு ஏற்றடக் கூடிய பாதகங்கள் எவை?
- மனதை ஒரு முகப்படுத்துவது சிரமமாகலாம். இதனால் பாடங்களை செவிமடுப்பது, கற்பது, முக்கிய விடயங்களையும் பாடங்களையும் நினைவில் நிறுத்துவது, சிக்கல்களைத் தீர்ப்பது போன்றவை சிரமமாகலாம்.
- முறையற்றதும் அடாத்தாததுமான செயற்பாடுகளில் அவர்கள் ஈடுபடலாம்.
- ஆரோக்கியமற்ற உணவு முறைகளை கடைப்பிடிப்பதும் அதனால் எடை அதிகரித்து உடல் குண்டாகலாம்.
- அடிக்கடி கோப்பி குடிப்பதில் ஆரம்பித்து புகைத்தல், மதுபானம் போதைப் பழக்கங்கள் என தவறான வழிகளில் செல்வதற்கான சாத்தியங்கள் அதிகம்.
- தூக்கத் தியக்கத்தால் உபகரணங்களை தவறாகக் கையாள்வது, வாகனம் ஓட்டுவதில் பிரச்சனை போன்றவை ஏற்படலாம்.
- முகப்பருக்கள் தோன்றுவது அதிகமாகலாம்.
பதின்ம வயதினருக்கு பொதுவாக 9 மணிநேரத் தூக்கம் வேண்டும் என தூக்கம் தொடர்பான அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆகக் குறைந்தது 8 ½ நேரத் தூக்கமாவது வேண்டும். ஆயினும் பல பிள்ளைகளுக்கு இது கிடைப்பதில்லை.
எமது உடலின் உள்க் கடிகாரம் எனப்படும் circadian rhythms யின்படி குழந்தைகள் பொதுவாக இரவு 8-9 மணிக்கு தூங்கச் செல்வார்கள். ஆயினும் பதின்ம வயதில் தூக்கம் வருவதற்கு இரவு 11 மணி செல்லலாம் என்பதை பெற்றோர்கள் கவனத்தில் எடுக்க வேண்டும். அதன் பின் 8-9 மணி நேர நிம்மதியான தூக்கம் அவர்களுக்குக் கிடைக்கச் வழி செய்யுங்கள்.
11 -12 மணி படி படி என நச்சரித்து மீண்டும் 4 மணிக்கு எழுப்பி ‘காலையில் படித்தால்தான் நினைவிருக்கும’; என்று சொல்லாதீர்கள். மண்டை ஓட்டிற்குள் எதுவும் மிஞ்சாது. பூச்சியம்தான் பரீட்சையில் கிட்டும்.
போதுமான தூக்கத்தைக் கொடுங்கள்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), FCGP (col)
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0