Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குறும்படம்’ Category

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால் அசைய முடிகின்றது.

ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது

படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் motor neurone disese. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.

கண் மூளை செவிப்புலன் போன்றவை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்கும். இதனால் சுற்றிலும் நடப்பவற்றையும் தனக்கு ஏற்படுகிற உடல் வேதனைகளையும் புரிந்து கொள்வார். உள்ளம் வேதனையில் ஆளும். ஆனால் அதிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபட முடியாது. தன் உறுப்புகளை அசைக்க முடியாத வேதனையும் கவலையும் இயலாமையும் பெருகிவர மனவிரக்தி ஆட்கொள்ளும். இவ் வேதனைகள் ஓரிரு நாட்களுக்கானது அல்ல. பல மாதங்கள் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை மரணம் ஒன்றினால் மட்டுமேயாகும்.

அதுவும் விரைந்து வராது. மரணதேவன் அணைந்து வேதனைகளிலிருந்து விடுதலை கொடுக்க மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

அது வரை நோயாளியும் அவரைப் பராமரிப்பவர்களும் படும் வேதனை சொல்லி மாளாது.

அஞ்சனம் ஒரு குறும் திரைப்படம். கொழும்பு மருத்துவ பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டியில் கலந்து முதற் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தான் சொல்ல வந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக மனதில் பதியும் வண்ணம் தயாரித்துள்ளார்கள். கதை, திரைக் கதை, வசனம் லோகபிரஷாத் பிரேமகுமார். சர்ச்சைக்குரிய விடயத்தை எடுத்தாண்ட துணிவு பாராட்டத்தக்கது. குறைந்த வசனங்களை பொருத்தமான காட்சிகளுடன் வளர்தெடுத்த திறமை நெறியாளர்களான நிசாந்த் சுப்பிரமணியம், பிரணவன் சிவஞானம் ஆகியோராகும்.

அவர்கள் பேச வருகிற விடயம் கருணைக் கொலை பற்றியது. தனது தாயின் வேதனைகளைப் பொறுக்க முடியாத மகன் கருணைக் கொலையை நாடுகிறான். மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். சட்டமும் இதற்கு இடமில்லை என நிராகரித்துவிடுகிறது.

Mercy killing  அல்லது Euthanasia எனப்படும் கருணைக் கொலை என்பது ஏற்புடையதுதானா?

மருத்துத்தால் மீட்க முடியாத, மரணம் நெருங்கி வரும் ஒருவரின் மரணத்தை சற்று முன்னதாக மருத்துவ உதவியுடன் நிகழ்த்துவதாக இதை விளக்குகிறார்கள். ஒரு கொலையைச் சற்று நாகரீகமான வார்த்தைகளில் விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

ஒருவருக்கு மரணத்தை அளிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது மருத்துவர்களால், மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்பட்ட போதும், போதும் நியாயமானதுதானா?.

உயிர் என்பது இயற்கை அளித்த வரம் அது. அதைப் பறிப்பது என்ன நியாhயம். அது நோயாளியின் பூரண சம்மதத்துடன் என்று சொன்னாலும் கூட எவ்வாறு நியாயமாகும். கொலைகளைக் கண்டிக்கிறோம். தற்கொலைகள் செய்யக் கூடாது என்கிறோம்.

அவ்வாறு செய்ய முனைபவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறோம்.

மரணதண்டனையை இல்லாது ஒழிக்க வேண்டும் என முழங்குகிறோம்.
கருணைக் கொலை என்பது மரணம் நெருங்கிவிட்ட ஒருவருக்கு என்கிறார்கள்.

ஆனால் மரணம் ஒருவருக்கு எப்பொழுது நிகழும் என யாராவது அச்சொட்டாக முன் கூட்டியே சொல்ல முடியுமா? சோதிடர்கள் சொல்வதை விட மருத்துவர்கள் கணிப்பது சற்று அறிவுபூர்வமானதாக இருந்தாலும் கூட அதுவும் துல்லியமாக முன்கூற முடியாததே. மிகத் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி எத்தனை பேர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மாறாக, நோய் எதுவுமில்லை என சர்ட்டிபிக்கட் வாங்கிய எத்தனை பேர் மறு நாளே தலையைப் போட்டிருக்கிறார்கள்.

“மற்றவர்களை விடுங்கள். துன்பப்படும் நோயாளி தன்னால் இனியும் தாங்க முடியாது, தனக்கு மரணத்தைத் தாருங்கள் என வேண்டும்போது அதைச் செய்வதுதானே நியாயம்” என்று சிலர் சொல்லக் கூடும்.

அவ்வாறு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு சுயநினைவோடு முன் கூட்டியே மருத்துவர்களுக்குக் கொடுத்திருந்தபோதும், அதைப் பயன்படுத்தியர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மிக மிக குறைவே என்கிறார்கள். இவ்வாறு நடப்பது கருணைக் கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்தருக்கும் ஒருசில மேலை நாடுகளிலாகும். இங்கு அவ்வாறு செய்ய முடியாது

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டாலும், நீண்ட நாள் பாதிப்புக்குள்ளாகும் மேற் கூறியது போன்ற நோயாளரை அரச மருத்துவ மனைகளில் வைத்துப் பார்க்கும் வசதி இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டில் வைத்து பராமரிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதற்காகும் மிகுந்த செலவை சமாளிக்கக் கூடிய பொருளாதார வலு பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடையாது.

மிக முக்கிய காரணம் அத்தகைய நோயாளரைப் பாராரிக்கும் மருத்துவத் துறையான (Palliative Care) இங்கு வளரவே இல்லை.

அத்தகைய நோயாளரை அன்போடும் ஆதரவோடும் அணுக வேண்டும். உணவு, நீராகாரம், மலசலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் இன்றி வாழ வழி செய்ய வேண்டும். அவர்கள் வேதனையால் துன்பமுறாது காப்பாற்ற வேண்டும். அவர்கள் உளநலம் கெட்டு மனச்சோர்விற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும்.

“சாகப்போகிறார்தானே வைத்தியம் செய்து என்ன பயன்” என்ற மறைமனநிலை பராமரிப்பவர்கள் மனதிலிருந்து அகல வேண்டும். தம்மால் முடிந்ததை மருத்துவர்களும் அரசும் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். சுற்றியுள்ள சமூகம் கைகொடுக்க முன்வர வேண்டும்.

அதையே மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாகச் செய்து காட்ட வேண்டும்.

அந்திமகால நோயாளரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். இது பற்றிய அனுபவப் பகிர்வின் ஆரம்ப முயற்சியாக இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் எடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளை கொழும்பிலும் காலியிலும் ஏற்கனவே நடாத்தியுள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்திலும் நடாத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எனது ஹாய் நலமா புளக்கில் உள்ளது.

இசை அமைத்திருப்பது கஸ்தூரி சூர்யகுமார் மற்றும் உமேஸ் ஜெயராஜா ஆகியோராகும். மனதைப் பிழிவதாக இருக்கிறது.  முக்கியமான தாய் பாத்திரத்தில் யுகதர்சனி சிவானந்தன் சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்துகிறார். நோயின் வேதனையை வெளிப்படுத்தும் உடல்மொழிகள் சிறப்பாக இருந்தது. மகன் பாத்திரத்தில் மார்ஸ் முத்துத்தம்பி. முகத்தை வெறிப்பாக வைத்திருக்கிறார். உணர்வுகளை சற்று சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். தோற்றம் அண்ணன் தங்கை போல இருக்கிறதே ஒழிய தாய் மகன் போலில்லை.

பாடல்கள் டினேஸ்நாந்த் சுந்தரலிங்கம். ஒளிப்பதிவு நிசாந் சுப்பிரமணயம்.

இதே நோயால் மூன்று வருடங்களாத் துன்பமுறும் ஒருவரை அண்மையில் பார்த்தேன். ஒரு சிறு படுக்கைப் புண் தானும் வராது அக்கறையோடு குடும்பத்தவர்கள் பராமரிக்கிறார்கள். அவரால் இப்பொழுது பேசவும் முடியாது. ஏதாவது சொல்ல முயன்றால் அர்த்தம் புரியாத ஓசைகள்தான் எழும் சொற்கள் வராது. சைகை காட்டுவதற்கு கைகள் இயங்காது. அவரது முகபாவனைகளை வைத்துத்தான் மனைவி புரிந்து கொள்கிறாள்.

“எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் அவருக்கு சரியான கோபம் வருகிறது” என மனைவி விம்மலோடு சொன்னாள். பேச முடியாத சைகை காட்ட முடியாத அவரின் கோபத்தை அவரது கண்களிலும் முகத்திலும் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அனுபவப்பட்டிருந்தாள். அக்கறைப்படுகிறாள் என்பது மனநிறைவை எனக்குத் தந்தது.

வேறு ஒரு பெண் அவளும் பல வருடங்களாகப் படுக்கை நோயாளிதான். ஆனால் இது வேறு நோய். அவளை அக்கறையோடு பராமரிப்பதற்காக அவளது மகள் தனது அரச உயர் பதவியை உதற்றித்தள்ளிவிட்டு வீட்டோடு இருக்கிறாள்.

எவ்வளவு தியாகங்களைச் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.
அவசர புத்தியும் நிதானமின்மைனயும், வீட்டு வேலைகளுக்கு பழக்கப்பட்டாத தன்மையும் கொண்ட ஆண் என்பதால்தானா அந்த மகன் கருணைக் கொலையை நாடினான் என எனது மனம் யோசித்தது.

குறும்படம் கருணைக் கொலையை சிபார்சு செய்யவில்லை என்பது உண்மையே. அதற்காக வாதாடவில்லை என்ற போதும் அதை ஒரு தேர்வாகவே கொடுத்திருக்கிறார்கள். திரைப்படம் உணர்வு பூர்வமாக கருவைப் பேசுகிறது. அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வு சரியானதுதானா?

அவள் தனக்கு மரணம் வேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் ‘உனக்கு சாக மருந்து தாறன்’ என்று கேட்டிருந்தால் குடித்திருப்பாளா? நிச்சயம் தவிர்த்திருப்பாள்.

இங்கு அவன் செய்தது ஒரு விதத்தில் கொலையாகவே இருக்கிறது. அது மாத்திரமல்ல தான் செய்த கொலைக்கான பழியை சமூகம் மீதே போட்டுவிடுகிறான்.

“நான் ஒரே ஒரு விசயத்தைதானே சமூகத்திடம் கேட்டேன். அதை தர அது மறுத்துவிட்டது” என்கிறான். எவ்வளவு அபத்தமான கேள்வி. இவ்வாறான விடயத்திற்கு அதாவது ஒரு கொலைக்கு, சமூகம் எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்.

படுக்கையில் கிடக்கும் அவளது தோற்றத்தைப் பார்த்தால் அவள் இன்னமும் பல மாதங்கள் அல்லது ஒரிரு வருடங்கள் வாழ முடியும் போலத் தோன்றுகிறது. அவள் சாக வேண்டும் என விரும்புகிறாள் என்ற போர்வையில் அவளது மரணத்தைத்தானே மகன் தீர்மானிக்கிறான்.

இவ்வாறு கருணைக் கொலைக்கான தீர்மானம் எடுக்கும் உரிமையைக் ஒரு தனிநபரிடம் கொடுப்பது ஆபத்தானது துஸ்பிரயோகம் செய்யக் கூடியது என்பதையே இக் குறும் படம் மூலம் நான் கற்றுக்கொண்டேன.

நிறை குறைகள் இரண்டும் இருந்தபோதும் மிகச் சிறப்பான முன் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

யூ ரியூபில் அஞ்சனம் குறுந் திரைப்படம்  ‘அஞ்சனம்’

0.0.0.0.

அண்மையில் அதன் கதாசிரியர்,தயாரிப்பாளர் லோகபிரஷாத் பிரேமகுமார் மற்றும் தாய் பாத்திரத்தில் நடித்த செல்வி யுகதர்சனி சிவானந்தன் இருவரும் என்னை சந்திக் வந்திருந்தனர்.

பல விடயங்களை அவர்களுடன் கலந்து பேச முடிந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இந்து மன்றத்தின் சஞ்சிகை ஆசிரியராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தமிழ்சங்கம் நடாத்திய கலை விழாவில் மருத்துவ மாணவனாக நான் மேடையில் நடித்ததையும் கவியரங்கில் தலைமை தாங்கியதையும் நினை கூர்ந்து இளமை நினைவுகளில் மகிழ முடிந்தது

அந்தக் காலத்திலேயே இந்து மன்றம் இயங்கிய செய்தி அவர்களுக்கு புதினமாக இருந்தது.
அவர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

விடை பெறும் போது அவர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

அஞ்சனம் குறுந் திரைப்படம் பற்றி நான் விமர்சன கட்டுரை எழுதியதை இட்டு ஒரு ஞாபகச் சின்னத்தை பரிசாக அளித்தனர்.

நன்றி எனது நாளைய மருத்துவச் சகாக்களே.

20140118_200536_LLS

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

>தொலைக்காட்சி எனது தேர்வுக்குரிய பொழுது போக்காக என்றுமே இருந்ததில்லை.
ஆயினும் முன்னொரு காலத்தில் பாலு மகேந்திராவின் கதைநேரம் ஆர்வத்திற்குரியதாக இருந்தது.

இப்பொழுது ஜெயா ரி.வீயில் ஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியை இயன்றவரை தப்பவிடுவதில்லை.
படங்களைத் தேர்ந்தெடுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு மேலாக படம், அதன் பின்னணி பற்றிய சுவார்ஸமான தகவல்களை சுஹாசினி தருவார்.

வேலையை இயன்றவரை நேரத்திற்கு முடித்துக்கொண்டு வந்து மதிய உணவுடன் நிகழ்ச்சியைப் பார்ப்பது பிடிக்கும். வழமையாக தமிழ்ப் படங்களையே பேசி வந்த சுஹாசினி இப்பொழுது இந்திப் படங்கள், உலக சினிமா என்று வலம் வர ஆரம்பித்ததும் இன்னும் அதிகமாகப் பிடிக்கிறது.

அண்மையில் அவர் ஒரு குறும் படத்தையும் அறிமுகப் படுத்தியிருந்தார். அதிலிருந்து சில காட்சிகளையும் காண்பித்தார். மிகுந்த கலைநேர்த்தி உள்ள படம். அதற்கு மேலாக அதன் சமூகப் பார்வை எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அது என்னைக் கவர்ந்ததற்கு ஒரு தனிப்பட்ட காரணமும் இருந்திருக்கலாம். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு
நண்பர் பா.இரகுவரன் முயற்சியால்
‘செட்டி வர்த்தகன்’ என்ற
வட்டக்களரிக் கூத்து
பருத்தித்துறை து.குலசிங்கத்தின்
வீட்டின் பெரிய முற்றத்தில் அரங்கேற்றப்பட்டது.

யாழ் பல்கலைக்கழக சமூகம் உட்பட பல அறிஞர்களும், கலைஞர்களும் கலந்து கொண்டனர். அதனைச் செயற்படுத்திய அறிவோர் கூடலில் நானும் முக்கிய அங்கத்தவராக இருந்தேன்.

சுஹாசினி பேசும் படம் நிகழ்ச்சியில் சில காட்சிகளை மட்டுமே பார்க்க முடிந்தது. முழுக் குறும்படத்தையும் பார்க்க முடியாத நிலை. இங்கு எங்கும் கிடைப்பதாகத் தெரியவில்லை. கவலை ஏற்பட்டது.

நேற்று இரவு திடீரென அதிர்ஸ்டக் காற்று என் பக்கம் விசியது. இணையத்தில் உலாவிக் கொண்டிருந்த நான் YouTube ல் சென்று தமிழ்க்குறும் படங்கள் எனத் தட்டியதும் கர்ண மோட்சம் முதல் தெரிவாக வந்தது.

இந்திய அரசின் தேசிய விருது முதல், தமிழக அரசின் சிறந்த குறும்பட விருது, கனடாவின் சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் சிறந்த இயக்குனருக்கான விருது என 60க்கு மேற்பட்ட விருதுகள் பெற்ற குறும் படம் இதுவாகும்.

கேரளா சர்வதேச திரைப்பட விழா, ஜெய்ப்பூர் சர்வதேச திரைப்பட விழா ஆகியவற்றிலும் பரிசுகளைப் பெற்றுள்ளது.

கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் வரை இரண்டு பாகங்களாக ஓடுகிறது. லுழரவுரடிந ல்.  பரிசுகள் பெற்ற காரணத்திற்காக  மட்டும் பார்க்க வேண்டிய படம் அல்ல இது .

கோவிந்தன் என்ற ஒரு கூத்துக் கலைஞனினதும் அவனினது 10 வயது மகன் கதிரின் வாழ்வின் ஒரு நாள் நிகழ்வையும் அற்புத காட்சியாகப் படமாக்கியுள்ளார்கள்.

பட்டணத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கூத்து நடத்துவதற்காக வருகிறார் மகனுடன். மகனுக்கு கிரிக்கட் பட் வாங்கும் ஆசை. கூத்து ஆடிப் பெறும் பணத்தில் வாங்கித் தருவதாகச் சொல்லி மகனையும் அழைத்து வந்துள்ளார்.
வந்த இடத்தில் பாடசாலை பூட்டிக் கிடக்கிறது. பாடசாலை இயக்குனர் இறந்துவிட்டதால் பூட்டிக் கிடக்கிறதாம்.

கையில் காசில்லை. பசியில் இருக்கும் மகனுக்கு சாப்பிடக் கொடுக்க முடியவில்லை. ‘ஒன்னரை ரூபாவிற்கு’ ஒரே ஒரு இட்லி வாங்கிக் கொடுத்து விட்டு குடிக்கத் தண்ணீர் கேட்கப் போக கடைக்காரனும் அவமதித்துவிடுகிறான்.

கிட்டத்தட்ட மறைந்தொழிந்து போகும் நிலையில் இருக்கிறது இந்த கூத்துக் கலை. எமது பாரம்பரிய கலை வடிவை இன்று மட்டும் காப்பாற்றி வருகிற அந்தக் கலைஞர்கள் வறுமையில் வாடுகிறார்கள்.

வீதியில் வீசி எறிந்து கிடக்கும் காலி பெப்ஸி டின்னை எடுத்து அதில் மீந்திருக்கும் திரவத்தைக் குடிக்க முயல்வதைக் காட்டுவதன் மூலம் அவர்களின் வறுமையின் தீவிரத்தை சிறப்பாக உணர்த்திவிடுகிறார்.

ஆனால் கூத்துக் கலைஞரோ கொடை வள்ளலாகிய கர்ணன் வேடம் போடுபவர்.

அந்த வேடத்திலேயே படம் முழுவதும் வருகிறார்.

“அஞ்சை பஞ்சைகள்
பஞ்சம் பறந்தோட
தானம் செய்தேன்.
தானம் செய்தேன்…”

பாரெங்கும் கீர்த்தி படைத்தேன்…’ எனப் பாடிக் கொண்டு அறிமுகமாகிறார். அதாவது கர்ணன் பாடுவதாக.

எஸ்.முரளி மனோகர் கதை எழுதி நெறியாள்கை செய்துள்ளார். சென்னை திரைப்படக் கல்லூரியில் படித்த இவர் தற்போது லிங்குசாமியிடம் உதவி இயக்குனராக பண்யாற்றுவதாக இணையத்தில் படித்தேன்.

கதை, வசனங்களை எழுதியவர் பிரபல எழுத்தாளரான எஸ்.ராமகிருஷ்ணன். எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர்.
நெடுங்குருதி, கதா விலாசம் விரும்பிப் படித்த கட்டுரைத் தொடர்.
உப பாண்டவம் இது பாரதத்தின் இந்திய மனத்தின் தொன்மை நினைவுகளை அந்த மகா காவியத்தின் இடைவெளிகளை நிரப்புவதாக செய்யப்பட்ட நாவல் என சிலாகிக்கப்பட்டது.

முக்கிய பாத்திரமான கூத்துக் கலைஞர் பாத்திரத்தில் நடிப்பவர் கூத்துப் பட்டறையில் பயற்சி பெற்ற ஜார்ஜ் ஆகும். கனமான ஆடைகள்;, முகத்தை மூடி மறைக்கும் வர்ணங்கள். இவை யாவற்றையும் தாண்டி அவரது நடிப்பு அற்புதமாக வெளிப்படுகிறது. நல்ல நடிப்பு.

மனதைத் தொடும் கதை. முடிவு ஒரு விதத்தில் மனதை அலைக்கழிக்கிறது. மற்றொரு விதத்தில் புதிய தலைமுறையில் சிலராவது இதில் ஆர்வம் கொள்வார்கள் என்ற நம்பிக்கையைத் தருகிறது. அருமையான படப்பிடிப்பு. ஒளிப்பதிவு ஜி.சிவராமன். ஒலிப்பதிவு ஜி.தமுத்துராமன்.

படத்தின் இசை அமைப்பாளரால் இரா.பிரபாகர். தமிழ்துறைப் பேராசிரியர்.

“அப்பெல்லாம் ரா ராவா ஜனங்க முழிச்சிருந்து பாப்பாங்க.
இப்பெல்லாம் யார் கூத்து பார்க்கிறாங்க. எல்லாத்தையும் ரீவி பெட்டி முழுங்கிச்சிடு.”

“18 வருடங்களாக குருவிடம் கூத்துக் கற்றது”

“எத்தனையோ பேரு உசுரைக் குடுத்து வளர்த்த கலை”

போன்ற செய்திகளைப் பேச்சொடு பேச்சாக சொல்லிச் செல்வதன் ஊடாக அந்தக் கலையின் கடந்த காலப் பெருமைகளை வெளிப்படுத்துகிறது

கொடுத்துக் கொடுத்தே கை சிவந்த ‘கர்ணன்’. கடையில் வேலை செய்யும் குட்டிப் பெண் இவனின் பரிதாபத்தைப் பார்த்துக் கொடுத்த இட்லியை பிச்சைபோல வாங்கிச் சாப்பிடும்போது மனதைப் பிசைகிறது.

கொடி கட்டிப் பறந்த ஒரு கலை அழிந்து போகவிட்ட சமூகத்தைச் சார்ந்தவர்கள் நாங்கள் என்பதை எண்ணும்போது குற்ற உணர்வு தீயாக எரிக்கிறது.

இன்னும் எத்தனை அரிய பெரிய பொக்கிசங்களை எல்லாம் எதிர்காலத்தில் தொலைத்துவிட்டு கையைப் பிசைந்து நிற்கப் போகிறோம்.

தப்பவிடக் கூடாத குறும் படம்.

குறும்படத்தின் முதல் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

குறும்படத்தின் இரண்டாம் பாகத்தைப் பார்க்க இங்கே கிளிக் பண்ணுங்கள்.

எம்.கே.முருகானந்தன்.

நன்றி:- வீரகேசரி 04.04.2010.

Read Full Post »