Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குறும் படம்’ Category

ஒரு கை நீண்டு வருகிறது. அருகில் உள்ள மேசையில் இருக்கும் தண்ணீர்க் கோப்பையை எட்ட முயல்கிறது. மிக மெதுவாகவே அக்கரங்களால் அசைய முடிகின்றது.

ஓட்டுனர் இல்லாத மாட்டு வண்டி போல, போகும் திசை தெரியாது அந்த ஒற்றைக் கை தடுமாறுகிறது. கைகளுக்கு இருக்க வேண்டிய திடமும் உறுதியும் இன்றி இயங்கும் அது கோப்பையை நெருங்கிவிட்டது. ஆனால் பற்ற முடியவில்லை. கோப்பை தட்டுப்பட்டு கீழே விழுந்து நீர் சிந்திவிட்டது. மறுகையானது எதுவும் முடியாதவாறு ஏற்கனவே முற்றாகச் செயலிழந்துவிட்டது

படுக்கை நோயாளி. தசைகளின் இயக்கம் குறைந்து வரும் motor neurone disese. நோயிலிந்து முற்றாக அவளை மீட்க சிகிச்;சைகள் எதுவும் உதவாது. நோய் கால ஓட்டத்தில் தீவிரமடைந்து வருவதைத் தடுக்க முடியாது. பொதுவாக உணர்விழப்பு இல்லை. வலிகளை உணர முடிவது பெரும் துன்பம். உதாரணமாக கையில் வலி என்றால் அக் கையை அசைத்து வேறு இடத்தில் வைக்கவோ மற்ற கையால் நீவி விடவோ முடியாது. ஆற்றாமை ஆட்கொள்ளும்.

கண் மூளை செவிப்புலன் போன்றவை மற்றவர்களைப் போல சாதாரணமாக இருக்கும். இதனால் சுற்றிலும் நடப்பவற்றையும் தனக்கு ஏற்படுகிற உடல் வேதனைகளையும் புரிந்து கொள்வார். உள்ளம் வேதனையில் ஆளும். ஆனால் அதிலிருந்து தற்காலிகமாகவேனும் விடுபட முடியாது. தன் உறுப்புகளை அசைக்க முடியாத வேதனையும் கவலையும் இயலாமையும் பெருகிவர மனவிரக்தி ஆட்கொள்ளும். இவ் வேதனைகள் ஓரிரு நாட்களுக்கானது அல்ல. பல மாதங்கள் தொடரும். அவற்றிலிருந்து விடுதலை மரணம் ஒன்றினால் மட்டுமேயாகும்.

அதுவும் விரைந்து வராது. மரணதேவன் அணைந்து வேதனைகளிலிருந்து விடுதலை கொடுக்க மூன்று முதல் ஐந்து வருடங்கள் ஆகலாம்.

அது வரை நோயாளியும் அவரைப் பராமரிப்பவர்களும் படும் வேதனை சொல்லி மாளாது.

அஞ்சனம் ஒரு குறும் திரைப்படம். கொழும்பு மருத்துவ பீட மாணவர்களால் தயாரிக்கப்பட்டு, கொழும்பு பல்கலைக் கழக தமிழ்ச்சங்கம் நடாத்திய போட்டியில் கலந்து முதற் பரிசு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

மிகச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்டுள்ளது என்பதில் ஐயமில்லை. தான் சொல்ல வந்த விடயத்தை அழுத்தம் திருத்தமாக மனதில் பதியும் வண்ணம் தயாரித்துள்ளார்கள். கதை, திரைக் கதை, வசனம் லோகபிரஷாத் பிரேமகுமார். சர்ச்சைக்குரிய விடயத்தை எடுத்தாண்ட துணிவு பாராட்டத்தக்கது. குறைந்த வசனங்களை பொருத்தமான காட்சிகளுடன் வளர்தெடுத்த திறமை நெறியாளர்களான நிசாந்த் சுப்பிரமணியம், பிரணவன் சிவஞானம் ஆகியோராகும்.

அவர்கள் பேச வருகிற விடயம் கருணைக் கொலை பற்றியது. தனது தாயின் வேதனைகளைப் பொறுக்க முடியாத மகன் கருணைக் கொலையை நாடுகிறான். மருத்துவர்கள் கைவிரித்துவிடுகிறார்கள். சட்டமும் இதற்கு இடமில்லை என நிராகரித்துவிடுகிறது.

Mercy killing  அல்லது Euthanasia எனப்படும் கருணைக் கொலை என்பது ஏற்புடையதுதானா?

மருத்துத்தால் மீட்க முடியாத, மரணம் நெருங்கி வரும் ஒருவரின் மரணத்தை சற்று முன்னதாக மருத்துவ உதவியுடன் நிகழ்த்துவதாக இதை விளக்குகிறார்கள். ஒரு கொலையைச் சற்று நாகரீகமான வார்த்தைகளில் விளக்குவதாகவே எனக்குப் படுகிறது.

ஒருவருக்கு மரணத்தை அளிப்பதற்கு மற்றவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. அது மருத்துவர்களால், மருத்துவக் காரணங்களுக்காக செய்யப்பட்ட போதும், போதும் நியாயமானதுதானா?.

உயிர் என்பது இயற்கை அளித்த வரம் அது. அதைப் பறிப்பது என்ன நியாhயம். அது நோயாளியின் பூரண சம்மதத்துடன் என்று சொன்னாலும் கூட எவ்வாறு நியாயமாகும். கொலைகளைக் கண்டிக்கிறோம். தற்கொலைகள் செய்யக் கூடாது என்கிறோம்.

அவ்வாறு செய்ய முனைபவர்களுக்கு தண்டனையும் கொடுக்கிறோம்.

மரணதண்டனையை இல்லாது ஒழிக்க வேண்டும் என முழங்குகிறோம்.
கருணைக் கொலை என்பது மரணம் நெருங்கிவிட்ட ஒருவருக்கு என்கிறார்கள்.

ஆனால் மரணம் ஒருவருக்கு எப்பொழுது நிகழும் என யாராவது அச்சொட்டாக முன் கூட்டியே சொல்ல முடியுமா? சோதிடர்கள் சொல்வதை விட மருத்துவர்கள் கணிப்பது சற்று அறிவுபூர்வமானதாக இருந்தாலும் கூட அதுவும் துல்லியமாக முன்கூற முடியாததே. மிகத் திறமையும் அனுபவமும் மிக்க மருத்துவர்களின் கணிப்புகளையும் தாண்டி எத்தனை பேர் உயிர் வாழ்ந்திருக்கிறார்கள். மாறாக, நோய் எதுவுமில்லை என சர்ட்டிபிக்கட் வாங்கிய எத்தனை பேர் மறு நாளே தலையைப் போட்டிருக்கிறார்கள்.

“மற்றவர்களை விடுங்கள். துன்பப்படும் நோயாளி தன்னால் இனியும் தாங்க முடியாது, தனக்கு மரணத்தைத் தாருங்கள் என வேண்டும்போது அதைச் செய்வதுதானே நியாயம்” என்று சிலர் சொல்லக் கூடும்.

அவ்வாறு செய்வதற்கான அனுமதிப் பத்திரத்தை எழுதிக் கையெழுத்திட்டு சுயநினைவோடு முன் கூட்டியே மருத்துவர்களுக்குக் கொடுத்திருந்தபோதும், அதைப் பயன்படுத்தியர்கள் இல்லை என்றே சொல்லும் அளவிற்கு மிக மிக குறைவே என்கிறார்கள். இவ்வாறு நடப்பது கருணைக் கொலையை சட்டபூர்வமாக அங்கீகரித்தருக்கும் ஒருசில மேலை நாடுகளிலாகும். இங்கு அவ்வாறு செய்ய முடியாது

இலங்கை போன்ற வளர்முக நாடுகளில் மருத்துவம் இலவசமாக வழங்கப்பட்டாலும், நீண்ட நாள் பாதிப்புக்குள்ளாகும் மேற் கூறியது போன்ற நோயாளரை அரச மருத்துவ மனைகளில் வைத்துப் பார்க்கும் வசதி இல்லை. வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள்.

வீட்டில் வைத்து பராமரிப்பது மிகுந்த மன உளைச்சலைத் தரும். அதற்காகும் மிகுந்த செலவை சமாளிக்கக் கூடிய பொருளாதார வலு பெரும்பாலான குடும்பங்களுக்குக் கிடையாது.

மிக முக்கிய காரணம் அத்தகைய நோயாளரைப் பாராரிக்கும் மருத்துவத் துறையான (Palliative Care) இங்கு வளரவே இல்லை.

அத்தகைய நோயாளரை அன்போடும் ஆதரவோடும் அணுக வேண்டும். உணவு, நீராகாரம், மலசலம் கழித்தல் போன்ற பிரச்சனைகள் இன்றி வாழ வழி செய்ய வேண்டும். அவர்கள் வேதனையால் துன்பமுறாது காப்பாற்ற வேண்டும். அவர்கள் உளநலம் கெட்டு மனச்சோர்விற்கு ஆளாகாமல் தடுக்க வேண்டும். மனச்சோர்வு ஏற்பட்டால் அதற்கான சிகிச்சை செய்ய வேண்டும்.

“சாகப்போகிறார்தானே வைத்தியம் செய்து என்ன பயன்” என்ற மறைமனநிலை பராமரிப்பவர்கள் மனதிலிருந்து அகல வேண்டும். தம்மால் முடிந்ததை மருத்துவர்களும் அரசும் மட்டுமின்றி வீட்டில் உள்ளவர்கள் செய்ய வேண்டும். சுற்றியுள்ள சமூகம் கைகொடுக்க முன்வர வேண்டும்.

அதையே மருத்துவர்களும் மருத்துவ மாணவர்களும் மக்களுக்குச் சொல்ல வேண்டும். முன்மாதிரியாகச் செய்து காட்ட வேண்டும்.

அந்திமகால நோயாளரைப் பராமரிப்பது மிகவும் முக்கியமான ஒரு விடயம். இது பற்றிய அனுபவப் பகிர்வின் ஆரம்ப முயற்சியாக இலங்கை குடும்ப மருத்துவர் சங்கம் எடுத்துள்ளது. மருத்துவர்களுக்கு பயிற்சியும் வழங்கியுள்ளது. இதற்கான சான்றிதழ் வழங்கும் பயிற்சிகளை கொழும்பிலும் காலியிலும் ஏற்கனவே நடாத்தியுள்ளது. விரைவில் யாழ்ப்பாணத்திலும் நடாத்த இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இது பற்றி ஏற்கனவே ஒரு பதிவு எனது ஹாய் நலமா புளக்கில் உள்ளது.

இசை அமைத்திருப்பது கஸ்தூரி சூர்யகுமார் மற்றும் உமேஸ் ஜெயராஜா ஆகியோராகும். மனதைப் பிழிவதாக இருக்கிறது.  முக்கியமான தாய் பாத்திரத்தில் யுகதர்சனி சிவானந்தன் சிறப்பாக முகபாவங்களை வெளிப்படுத்துகிறார். நோயின் வேதனையை வெளிப்படுத்தும் உடல்மொழிகள் சிறப்பாக இருந்தது. மகன் பாத்திரத்தில் மார்ஸ் முத்துத்தம்பி. முகத்தை வெறிப்பாக வைத்திருக்கிறார். உணர்வுகளை சற்று சிறப்பாக வெளிப்படுத்தியிருக்கலாம். தோற்றம் அண்ணன் தங்கை போல இருக்கிறதே ஒழிய தாய் மகன் போலில்லை.

பாடல்கள் டினேஸ்நாந்த் சுந்தரலிங்கம். ஒளிப்பதிவு நிசாந் சுப்பிரமணயம்.

இதே நோயால் மூன்று வருடங்களாத் துன்பமுறும் ஒருவரை அண்மையில் பார்த்தேன். ஒரு சிறு படுக்கைப் புண் தானும் வராது அக்கறையோடு குடும்பத்தவர்கள் பராமரிக்கிறார்கள். அவரால் இப்பொழுது பேசவும் முடியாது. ஏதாவது சொல்ல முயன்றால் அர்த்தம் புரியாத ஓசைகள்தான் எழும் சொற்கள் வராது. சைகை காட்டுவதற்கு கைகள் இயங்காது. அவரது முகபாவனைகளை வைத்துத்தான் மனைவி புரிந்து கொள்கிறாள்.

“எவ்வளவு கவனமாகப் பார்த்தாலும் அவருக்கு சரியான கோபம் வருகிறது” என மனைவி விம்மலோடு சொன்னாள். பேச முடியாத சைகை காட்ட முடியாத அவரின் கோபத்தை அவரது கண்களிலும் முகத்திலும் பார்த்துப் புரிந்து கொள்ளும் அளவிற்கு அனுபவப்பட்டிருந்தாள். அக்கறைப்படுகிறாள் என்பது மனநிறைவை எனக்குத் தந்தது.

வேறு ஒரு பெண் அவளும் பல வருடங்களாகப் படுக்கை நோயாளிதான். ஆனால் இது வேறு நோய். அவளை அக்கறையோடு பராமரிப்பதற்காக அவளது மகள் தனது அரச உயர் பதவியை உதற்றித்தள்ளிவிட்டு வீட்டோடு இருக்கிறாள்.

எவ்வளவு தியாகங்களைச் செய்கிறார்கள் இந்தப் பெண்கள்.
அவசர புத்தியும் நிதானமின்மைனயும், வீட்டு வேலைகளுக்கு பழக்கப்பட்டாத தன்மையும் கொண்ட ஆண் என்பதால்தானா அந்த மகன் கருணைக் கொலையை நாடினான் என எனது மனம் யோசித்தது.

குறும்படம் கருணைக் கொலையை சிபார்சு செய்யவில்லை என்பது உண்மையே. அதற்காக வாதாடவில்லை என்ற போதும் அதை ஒரு தேர்வாகவே கொடுத்திருக்கிறார்கள். திரைப்படம் உணர்வு பூர்வமாக கருவைப் பேசுகிறது. அதை நன்றாகச் செய்திருக்கிறார்கள். ஆனால் அந்த தேர்வு சரியானதுதானா?

அவள் தனக்கு மரணம் வேண்டும் என வேண்டுகிறாள். ஆனால் ‘உனக்கு சாக மருந்து தாறன்’ என்று கேட்டிருந்தால் குடித்திருப்பாளா? நிச்சயம் தவிர்த்திருப்பாள்.

இங்கு அவன் செய்தது ஒரு விதத்தில் கொலையாகவே இருக்கிறது. அது மாத்திரமல்ல தான் செய்த கொலைக்கான பழியை சமூகம் மீதே போட்டுவிடுகிறான்.

“நான் ஒரே ஒரு விசயத்தைதானே சமூகத்திடம் கேட்டேன். அதை தர அது மறுத்துவிட்டது” என்கிறான். எவ்வளவு அபத்தமான கேள்வி. இவ்வாறான விடயத்திற்கு அதாவது ஒரு கொலைக்கு, சமூகம் எவ்வாறு ஒப்புக் கொள்ள முடியும்.

படுக்கையில் கிடக்கும் அவளது தோற்றத்தைப் பார்த்தால் அவள் இன்னமும் பல மாதங்கள் அல்லது ஒரிரு வருடங்கள் வாழ முடியும் போலத் தோன்றுகிறது. அவள் சாக வேண்டும் என விரும்புகிறாள் என்ற போர்வையில் அவளது மரணத்தைத்தானே மகன் தீர்மானிக்கிறான்.

இவ்வாறு கருணைக் கொலைக்கான தீர்மானம் எடுக்கும் உரிமையைக் ஒரு தனிநபரிடம் கொடுப்பது ஆபத்தானது துஸ்பிரயோகம் செய்யக் கூடியது என்பதையே இக் குறும் படம் மூலம் நான் கற்றுக்கொண்டேன.

நிறை குறைகள் இரண்டும் இருந்தபோதும் மிகச் சிறப்பான முன் முயற்சி என்பதில் சந்தேகமில்லை. இத் தயாரிப்பில் ஈடுபட்ட அனைவருக்கும் எனது பாராட்டுகள்.

யூ ரியூபில் அஞ்சனம் குறுந் திரைப்படம்  ‘அஞ்சனம்’

0.0.0.0.

அண்மையில் அதன் கதாசிரியர்,தயாரிப்பாளர் லோகபிரஷாத் பிரேமகுமார் மற்றும் தாய் பாத்திரத்தில் நடித்த செல்வி யுகதர்சனி சிவானந்தன் இருவரும் என்னை சந்திக் வந்திருந்தனர்.

பல விடயங்களை அவர்களுடன் கலந்து பேச முடிந்தது.

மருத்துவக் கல்லூரி மாணவனாக இருந்த காலத்தில் இந்து மன்றத்தின் சஞ்சிகை ஆசிரியராகவும் பின் அதன் தலைவராகவும் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடிந்தது.

தமிழ்சங்கம் நடாத்திய கலை விழாவில் மருத்துவ மாணவனாக நான் மேடையில் நடித்ததையும் கவியரங்கில் தலைமை தாங்கியதையும் நினை கூர்ந்து இளமை நினைவுகளில் மகிழ முடிந்தது

அந்தக் காலத்திலேயே இந்து மன்றம் இயங்கிய செய்தி அவர்களுக்கு புதினமாக இருந்தது.
அவர்கள் தங்கள் அனுபவங்களை என்னுடன் பகிர்ந்து கொண்டனர்.

விடை பெறும் போது அவர்கள் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்தனர்.

அஞ்சனம் குறுந் திரைப்படம் பற்றி நான் விமர்சன கட்டுரை எழுதியதை இட்டு ஒரு ஞாபகச் சின்னத்தை பரிசாக அளித்தனர்.

நன்றி எனது நாளைய மருத்துவச் சகாக்களே.

20140118_200536_LLS

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

Read Full Post »

உங்களில் எத்தனை பேர் யாழ்தேவி புகைரதத்தில் கொழும்பு முதல் காங்கேசன்துறை வரை பிரயாணம் செய்திருக்கிறீர்களோ தெரியாது.

பயணித்தவர்களுக்கு அது ஒரு இனிய அனுபவம்.

அதுவும் பதின்ம வயதில் பயணித்திருந்தால் அதன் சந்தோசம் சொல்லி மாளாது.

நண்பர்களுடன் கூடி, அரட்டை அடித்து, புட் போட்டில் தொங்கி, பைலாப் பாட்டுப்பாடி, ஆட்டம் போட்டு….

இன்னும் இன்னும் எவ்வளவோ!

இன்று அவற்றை நினைத்துப் பெரு மூச்சு விடத்தான் முடியும்.

ஆயினும் நம்பிக்கை தளர வேண்டியதில்லை. தொலைந்த பொற்காலம் மீண்டும் வரும்.

அதற்கிடையில் இந்த வீடியோவைப் பார்த்து நினைவுகளை மீட்கலாமே.

இது மீண்டும் நண்பன் வரதன் கொடுத்த இணைப்பு

Read Full Post »

நிழல்யுத்தம்!

எமது வாழ்வின் இன்னுமொரு பரிமாணம்! அஜீவனின் இரு குறும்படங்கள்!

எழுதியவர்: டொக்டர்எம்.கே.முருகானந்தன்

மேற்குலக நாடுகளுக்கு புலம் பெயர்வது. இதுதானே எம்மவர்கள் பலரினதும் கனவாக, இலட்சியமாக எல்லாமாகவே உள்ளது.

ஆம்! இலங்கைத் தமிழ் இளைஞர்கள், யுவதிகள் பெரும்பாலோரினதும் கனவுகளிலும் கற்பனைகளிலும் வலம் வருவது மேற்குலக நாடுகளின் பொருளாதார வசதிகளும், ஆடம்பரமும், படோபடமும் கொண்ட வழமான வாழ்க்கைதான். பெற்றோர்களும் கூட தமது பிள்ளைகளை வெளிநாடுகளுக்கு அனுப்பிவிட்டால் தமது கடமை முடிந்துவிடும் என எண்ணுகிறார்கள். இதன் காரணமாக பல இளம் பெண்கள் தமது கணவன்மாரோடு அல்லது வருங்கால கணவன்மாரோடு இணைந்து கொள்ள பறந்து செல்லுகிறார்கள். பறந்து செல்லும் அவர்கள் எதிர்கால வசந்தங்கள் பற்றிய கனவுகளோடேயே பறந்து செல்கிறார்கள்.

ஆனால் அவர்கள் அங்கு சென்றதும் அவர்களது கனவுகள் மெய்ப்படுகின்றனவா? அல்லது அவை யாவுமே அடித்து நெருக்கப்பட்டு கசப்பான வாழ்வு அவர்களுக்குக் காத்திருக்கிறதா?

இப் பிரச்சினை பற்றிய ஒரு கலைத்துவமான பார்வையை எம் முன் வைக்கிறது அஜீவனின் ~நிழல் யுத்தம் என்ற குறும்படம். ராதிகா இத்தகைய கற்பனைக் கோட்டைகளுடன் ஜேர்மன் மண்ணில் கால் பதித்திருக்கிறாள். அங்கு அவளது கணவன் பகல் இரவு தெரியாத அளவிற்கு வேலை செய்து உழைக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில் இருக்கிறான். வந்த கடனைத் தீர்க்க வேண்டும், பெற்றோர்களை வசதியாக வாழ வைக்க வேண்டும், தங்கைகளின் திருமணங்களை நடத்தப் பணம் அனுப்ப வேண்டும், இவற்றிக்காக மாடாக உழைக்கிறான். எல்லாப் புலம் பெயர்ந்தவர்களின் வாழ்க்கை போலவே அவனது வாழ்வும் இயந்திரமயமாகிவிட்டது.

இயந்திரங்களிடையே இன்னுமொரு இயந்திரம் போல் பாலச்சந்தினை; சிக்கி நாள் முழுவதும் அல்லாடும் காட்சியுடன் படம் ஆரம்பமாகிறது. தனிமை, நீண்ட நேர கடின உழைப்பு, அனுதாபம் காட்டாத கடுமையான மேலதிகாரி என அவன் உடலும் உள்ளமும் சோர்வடைகின்றன. அலுப்போடு வீடு திரும்புகிறான்.

அவளும் வீட்டில் தனிமையில் தவிப்பதும் காட்சிப்படுத்தப்படுகிறது. காலையில் முகம் பார்க்கும் கண்ணாடியைச் சுத்தம் செய்வது முதல் சமையல் வரை நான்கு சுவர்களுக்கு மத்தியில் தனிமையில்தான். மொழி தெரியாத முற்றிலும் அன்னியமான சூழல். நாள் முழுவதும் யாருடனும் பேச முடியாது. பேசுவதென்ன யாரையும் காணக் கூட முடியாத தனிமை. ரேடியோவில் ஒலிபரப்பாகும் பாடல்களைக் கேட்டுக் கொண்டே நாள் முழுவதும் அவள் வீட்டு வேலைகளைச் செய்வதன் மூலம் அவளது தனிமையை எமக்கு உணர்த்துகிறார். ஊருக்கு டெலிபோன் எடுத்து உறவுகளுடன் பேசலாம் என்றால் வெளிநாட்டிற்கு கோல் எடுக்கும் வசதியைக் கூட இரத்துச் செய்துவிட்டான். மன ஆறுதலுக்கான ஒரே வழியைக் கூட அவன் அடைத்துவிட்டான். அவள் உள்ளத்துள் குமுறுகிறாள்.
அவனும் கூட அவளுக்குத் துன்பம் கொடுக்க வேண்டும் என்பதற்காக டெலிபோனை மறிக்கவில்லை. ஏற்கனவே உள்ள உள்ள செலவுகளுக்கு மேலாக அவளினது செலவுகளும் அவளைக் கூப்பிட்டதற்கான கடனும் ஏறிவிட்ட சூழலில் டெலிபோன் காசைக் கூட கட்ட முடியாத நிலையில் வேறுவழியின்றி இதைச் செய்திருக்கிறான்.

தனிமையில் சிறைப்பட்டுக் கிடக்கும் அவள் ~இன்று வெள்ளிக்கிழமை. கோயிலுக்குப் போக வேண்டும் என்கிறாள். கோயிலுக்குப் போவதைவிட இச்சிறையிலிருந்து சற்றேனும் விடுபட வேண்டும் என்பதே அவளது உள்ளக்கிடக்கையாக இருந்திருக்க வேண்டும் என உணர்கிறோம். அவனும் ஓம்படுகிறான். அவள் அழகாக சிரத்தையோடு உடுத்துக் காத்திருக்கிறாள். ஆனால் அவன் வரவில்லை. உடுத்த உடுப்போடு மனம் சோர்ந்து படுக்கையில் சாய்கிறாள்.

இத்தகைய சூழலில் அன்பும் காதலும் கனிய வேண்டிய அந்த இளம் தம்பதிகளிடையே ஒரு நிழல் யுத்தம் ஆரம்பமாகிறது.

இதற்கிடையில் அவள் மனத்தில் ஒரு சந்தேகத் தீயும் பற்றிக் கொள்வதான திருப்பத்தை மிக லாகமாக இயக்குனர் கொண்டு வருகிறார். தற்செயலாக வந்த டெலிபோன் அழைப்பின் மூலம் இவளது கணவன் இரண்டு பஞ்சாபி டிரெஸ்களை இந்தியாவிலிருந்து வந்தவன் மூலம் எடுப்பித்தது அவளுக்குத் தெரியவருகிறது. அவளிடம் கொடுக்கவில்லை, யாருக்குக் கொடுத்தான் என்ற சிந்தனையில் கறி சட்டியோடு கருகுகிறது. உணர்வுகள் இறுகி அவனோடு மோதும்போது ~கள்ளம் பிடிப்படுப் போச்சு என வார்த்தைகள் சாட்டையாக விழுகிறது.

இறுதியில் காரில் போகும் போது கூட வார்த்தைகளால் குதறி எடுக்கிறாள். அந்த நேரத்தில் இன்னொரு வாகனம் குறுக்கே வர ஸ! இன்னுமொரு எதிர்பாராத திருப்பம்.

மிகச் சிறிய படம்தான். 15 நிமிடங்கள் மட்டுமே ஓடுகிறது. அந்தக் குறுகிய நேரத்தை எமக்குப் பயன்படும் விதத்தில் நெறியாண்டு தயாரித்ததில் அஜீவனின் திறமை தெரிகிறது. உரையாடல் ஊடாக கதையை நகர்த்துவதும், சொற்களினனூடாக உணர்வை வெளிப்படுத்துவதும் சிறுகதை, நாவல் போன்ற படைப்புகளுக்குத்தான் பொருந்தும். மாறாக சினிமாவும், குறும்படமும் காட்சி ஊடகங்களாகும். குறுகிய மனத்தைத் தொடும் சட்டங்கள், குறைந்தளவு உரையாடல், காட்சிப்படுத்தல் ஊடாக கதையை நகர்த்தல் போன்ற திரைப்படக் கலையின் சூட்சுமங்களை புரிந்து அஜீவன் தயாரித்திருக்கிறார்.

ராதிகாவின் எதிர்பார்ப்புகள் கருகி அழிவது போலவே அடுப்பில் கறி தீய்ந்து போவதும், அவள் மனம் போலவே கடல் கொந்தளிப்பதும் போன்ற குறியீடுகளைக் குறிப்பிடலாம். நவீன சினிமாவின் போக்குகளை நெறியாளர் உணர்ந்து செயற்பட்டிருப்பது பாராட்டுக்குரியது. ராதிகாவின் நடிப்பு நன்றாக இருக்கிறது. தனிமையும் ஏக்கத்தையும் அவரது முகம் நன்றாக வெளிப்படுத்துகிறது. பாலச்சந்திரனும் தனது பாத்திரத்தை உணர்ந்து ஆர்ப்பாட்டம் காட்டாது நடித்திருக்கிறார்.

இப்படமானது புலம் பெயர்பவர்களது கற்பனைக் கோட்டைகள் தகர்வதை மட்டும் வெறுமனே பேசவில்லை. புரிந்துணர்வின்னைமயானது ஒரு குடும்பத்தின் அமைதியான நீரோட்டத்தையும், குதூகலத்தையும் குலைத்து வரண்ட பாலைவனமாக்கிவிடும் என்பதை பேசாமல் பேசுகிறது. ஒரு நல்ல கலைப்படைப்பு என்பது வரண்ட போதனை அல்ல. படைப்பாளியின் அனுபவம் சுவைஞனின் அனுபவத்துடன் கலக்கும் போது கிளர்ந்தெழும் அற்புத உணர்வாகும். அதை அஜீவனின் படைப்பு எனக்குத் தந்தது.

கோயிலுக்கும் போவதற்கெனக் காத்திருந்த அவளை ஏமாற்றியது வேண்டும் என்று அல்ல. வீடு மாறும் நண்பனுக்கு உதவ வேண்டும் என்பதற்காகவே. தமிழர்கள் அங்கொன்று இங்கொன்று என பிரிந்து வாழும் சூழலில் ஒருவருக்கு ஒருவர் உதவுவது அவசியம் என்று புரிகிறது. இன்று இவன் உதவினால்தான் நாளை அவன் இவனுக்கு உதவுவான். உண்மைதான். அதற்காக அவளைக் காத்திருக்க வைக்க வேண்டுமா? ஒரு தொலைபேசி அழைப்பெடுத்து தான் இன்று வர நேரமாகும். கோயிலுக்கு சற்றுப் பிந்தியோ அல்லது இன்னொரு நாளோ போகலாம் எனத் தகவல் கூறியிருக்கலாம் அல்லவா?

இக் காட்சியின் போது, இப்ப நான் உதவினால் தானே அவன் எங்களது கலியாணத்தின் போது உதவுவான் என பாலச்சந்திரன் ஒரு வசனம் சொல்வது எவ்வளவு அர்த்தம் பொதிந்தது. புலம் பெயர்வானது எமது நித்திய வாழ்க்கை மற்றும் கலாசாரத் தளங்களில் எத்தகைய மாற்றங்களை ஏற்படுத்தி விட்டது என ஏங்க வைத்தது.

அதேபோல அந்தப் பஞ்சாபி உடை பற்றிய பிரச்சனை. எதற்காக வாங்கினீர்கள் என அவனிடம் ஒரு வார்த்தை கேட்டிருக்கலம் அல்லவா? மாறாக சந்தேகப் பிசாசு ஆட்கொள்ள, ‘கள்ளம் பிடிபட்டுப் போச்சு’ என நச்சு வார்த்தைகளைக் கொட்டுகிறாள். இங்கு நெறியாளர் ஆண் பக்கமோ பெண் பக்கமோ சாயவில்லை. வெறுமனே சம்பவங்களை ஒழுங்கு நேர்த்தியாகக் காட்சிப்படுத்துகிறார். நாம்தான் எமது புத்தியைத் தீட்ட வேண்டும், கற்பனைகளைப் பறக்க விட வேண்டும், உணர்வுகளை உரசிப் பார்க்க வேண்டும். அவற்றிலிருந்து செய்தியையோ பாடத்தையோ கற்றுக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு கலைப்படைப்பிற்கும் சீரிய நோக்கும், சமூகப் பார்வையும் இருக்க வேண்டும் என்பது உண்மையே. ஆனால் அதே நேரம் அது பைபிளைப் போலவோ, குரானைப் போலவோ, அல்லது வேதத்தைப் போலவோ நன்னெறிகளைப் போதிக்கும் ஆன்மீக நூல் அல்ல என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். நல்ல கலைப்படைப்பு எதையும் புட்டுப் புட்டு வைப்பதில்லை. பூடகமாக, கலையழகுடன் சொல்லப்பட வேண்டும். அதையே அஜீவன் இப் படத்தில் செய்ய முனைந்திருக்கிறார்.

அந்த வகையில், ராதிகாவைப் போல புலம் பெயர்ந்து சென்றவர்கள் மட்டுமல்ல, புலம் பெயர்ந்து செல்ல இருப்பவர்களும், அத்தகையோரின் உறவினர்களும் பார்க்க வேண்டியப படம் இது. வெறுமனே ரசனைக்காகப் பார்ப்பதற்கான படம் மட்டுமல்ல, உணரவேண்டிய சங்கதிகளும், கற்க வேண்டிய பாடங்கள் பலவும் இதிலுள்ளமை முக்கியமாகப் பதிவு செய்யப்பட வேண்டிய உண்மையாகும்.

சென்ற பெப்ரவரி மாதம் 27ம் திகதி ஞாயிற்றுக்கிழமை இப்படத்தை வெள்ளவத்தை பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு மையத்தில் காணக் கிடைத்தது. விபவி இலக்கிய வட்டம் இதனை ஒழுங்கு செய்திருந்தது. அஜீவனின் இன்னுமொரு திரைப்படமான ‘அழியாத கவிதை’யும் அபர்ணா சென்னின் புகழ் பெற்ற திரைப்படமான ‘மிஸ்டர் அன்ட மிஸஸ் ஜயர்’ படமும் அன்று காட்டப்பட்டன. அஜவனின் குறும்படங்களின் பின் சிறிய கலந்துரையாடலும் இடம் பெற்றமை முக்கிய அம்சமாகும்.

அழியாத கவிதை!

அஜீவனின் மற்ற குறும் படமான அழியாத கவிதை என்னை உணர்வு ரீதியாகப் பாதித்தது. இதுவும் கூட இலங்கையிலிருந்து இங்கிலாந்துக்குப் புலம் பெயர்ந்த ஒருவரின் அனுபவங்கள்தான். புலம் பெயர்ந்து லண்டனில் வசிக்கும் மகனிடம் போய்ச் சேரும் ஒரு முதியவரின் துயரங்களை இது பேசுகிறது. முதியவராக நடிப்பவர் பண்பட்ட நடிகரான ஏ.இரகுநாதன் ஆவார். மிக விறுவிறுப்பாகப் படம் ஆரம்பமாகிறது. எல்லையைக் கடந்து நெடுஞ்சாலையில் வழுகிச் செல்லும் கார் ஒதுக்குப்புறமாக நிற்கிறது. டிரைவரின் சீட்டுக்கு பக்கத்திலிருந்து தயக்கத்துடன் இறங்கியவர் திருடன் போல் அக்கம் பக்கம் நோட்டமிடுகிறார். யாரும் பார்க்கவில்லை எனத் தெரிந்ததும் விரைவாகக் காரின் பின்புறம் சென்று டிக்கியைத் திறக்கிறார். அதற்குள் வாழை இலையைப் போல சுருட்டி மடக்கிக் கிடந்த முதியவர் ஒருவர் பயப் பீதியுடன் தயங்கி வெளியே வந்து கைகால்களை நீட்டி மடக்கி உடலை இயக்க முனைய அவரைக் காருக்குள் இருத்திக் கொண்டு வேகமாகப் பயணிக்கிறார்கள்.

அகதி அந்தஸ்து பெறுவதற்காக திருட்டுத்தனமாக மிகுந்த இன்னல்களுக்குள் பயணமாகும் எம்மவர்களின் துயரக் கதையின் ஒரு துளி அத்தியாயத்தை கலாரீதியாகப் பதிவு செய்திக்கிறார் அஜீவன்.

மனைவியை இழந்த அவர் தாயகத்தில் தனியாக வாழ முடியாது என்ற காரணத்தால்தான் லண்டன் வருகிறார். ஆனால் லண்டன் வாழ்க்கையோ நேரத்தோடு போட்டி போட்டுக் கொண்டு ஓடும் இயந்திர மயம். கணவன் மனைவியோடு பேசுவதற்குக் கூட நேரம் கேட்டுத்தான் ஒதுக்க வேண்டும். கார், வீடு முதல் வீட்டுச் சாமான்கள் வரை கடனில் வாங்கிவிட்டு மாதாமாதம் கடனைக் கட்ட முடியாது திண்டாடும் பொருளாதார நிலையும் கொண்டது. இத்தகைய லண்டன் வாழ்வில் அவர் தேடி வந்த உறவுகள் ஊடான நெருக்கம் சாத்தியமாகுமா?

சிறுசிறு காட்சிகள் மூலம் இவரது கனவுகள் கருகுவதும், ஏமாற்றம் ஆட்கொள்வதும் ஆவணப்படுத்தப்படுகின்றன. நீண்ட நெடும் பயணத்தின் பின் மகனுடைய வீட்டிற்கு வந்து சேர்கிறார். மகனுடன் பேசிக் கொண்டிருக்கையில் குட்டைச் சட்டையுடன் மாடிப்படியில் இறங்கி வரும் மருமகளின் நவநாகரீகத் தோற்றம் இவருக்கு அதிர்ச்சி அளிக்கிறது. மேலும் அதிர்ச்சி ஊட்டுவதுபோல மருமகள் இவரை வரவேற்கவோ, கூட இருந்து குசலம் விசாரிக்கவோ இல்லை. தான் வேலைக்குப் போக நேரமாகிவிட்டதாகவும் பிறகு வந்து பேசுவதாகவும் போகிற போக்கில் சொல்லிக் கொண்டு போகிறா. அவளுக்கு அவளது வேலை அவசரம். நேரத்தையும், பணத்தையும் விட உறவுக்கும், பாசத்திற்கும் விருந்தோம்பல் பண்பிலும் ஊறித் திளைத்த யாழ்ப்பாணப் பாரம்பரியத்தில் வந்த இவருக்கோ பெருத்த ஏமாற்றம். மகனோடு பேசி மகிழ்ந்து, நிம்மதியாக வாழ முடியும் என்ற கனவிற்கு முற்றுப் புள்ளி வைக்கின்றன.

அங்கு அடுத்து நடக்கும் ஒவ்வொரு சம்பவங்களும் இவரது எதிர்பார்புகளையும் நம்பிக்கைகளையும் சிதைக்கவே செய்கின்றன. ஊரில் ரேடியோ போடுவது போல உச்ச சத்தத்தில் ~எங்கே நிம்மதி.. பாட்டைப் போட பக்கத்து வீட்டுக்காரன் வந்து குற்றம் சொல்கிறான். தன்னை ஊரிலிருந்து ஊப்பிட்டதற்குப் பட்ட கடனைப் பற்றி மகனும் மருமகளும் விவாதிப்பது இவரது காதில் விழுகிறது, அதற்கு மேலே அவரை வைத்துப் பார்ப்பது தனக்கு கஸ்டம் என மருமகள் மகனிடம் முறையிடுவதும் கேட்டுவிடுகிறது. மகனின் அருகே உடல் ரீதியாகச் சென்று விட்ட போதும் மனோ ரீதியாக ஒருவித தனிமையும் வெறுமையும் ஆட்கொள்கிறது. மனம் சோர்கிறது.

மனைவியை நினைக்கிறார். இத்தகைய அவமதிப்புகளுக்கும் ஏமாற்றங்களுக்கும் ஆளாகாமால் இறந்துவிட்ட அவளைக் கொடுத்து வைத்தவளாகக் காண்கிறார். தன்னைத் தனிமையில் வாடவிட்டுச் சென்ற மனைவியை நினைத்து மனம் சோர்கிறார்.

இந்த நிலையில் அம்மாவை இழந்த நேரத்தில் தனிமை உணர்வில் தவித்த என் அப்பாவின் நினைவு வர இது எங்களின் கதையும் கூட என்ற எண்ணத்தில் உள்ளம் ஆற்றாமையில் ஆழ்ந்தது. ஆக அஜீவனின் இக்குறும் படம் புலம் பெயர் வாழ்கையை மட்டும் சித்தரிக்கவில்லை. அதற்கு மேலே துணையை இழந்து தவிக்கும் ஒவ்வொரு முதியவரினதும் இழப்புத் துயரையும், தனிமை ஏக்கத்தையும் பேசுவதாகவே எண்ணத் தோன்றுகிறது.

ஆயினும் பின்நோக்கிப் பார்க்கும்போது சில குறைகளையும் உணரமுடிகிறது. ரகுநாதனின் தற்போதைய தோற்றப் பொலிவு தாயகத்திலிருந்து இப்பொழுதுதான் வருபவர் போல் தோன்றவில்லை. பெண்கள் போன்ற நீண்ட முடியும் கொழுகொழுப்பான தோற்றமும் போரினால் அலைக்கழிந்து சோர்ந்தவர் போலில்லை. படத்தின் இறுதியில் பூங்காவில் தனிமையிலிருந்து வருந்தும் கட்டம் முற்றாக நாடகப் பாணிப் பேச்சாக இருக்கிறதே அன்றிக் காட்சிப்படுத்தப்படவில்லை.

ரகுநாதனின் பண்பட்ட நடிப்புடன் மகனாகவும் மருமகளாகவும் வருபவர்களின் நடிப்பு சோபிக்கவில்லை. உரையாடல்கள் பல இடங்களில் தெளிவாக இருக்கவில்லை.

இப்படிச் சில குறைகளைச் சொன்னாலும் அவை அத்துணை பாராதூரமானவை அல்ல. இம் முயற்சி மிகவும் பாராட்டத்தக்கது. ஈழத்து இலக்கியத்தில் புலம்பெயர் இலக்கியம் தனியிடத்தை பெற்றுள்ளது. அது போலவே குறும்படத் துறையிலும் தனியிடத்தைப் பெறும் என்ற நம்பிக்கையைத் தருகிறது. தாயகத்தில் இத்தகைய குறும் பட முயற்சிகள் மிகவும் குறைவு. விடுதலைப் புலிகளின் திரைப்படப் பிரிவு பல குறும்படங்களையும் சில திரைப்படங்களையும் தயாரித்து முன்னோடியாகச் செயற்படுகிறார்கள். ஆயினும் தனிப்படவர்களின் பங்களிப்பு மிகவும் குறைவாகவே உள்ளது.

அத்துடன் குறும்படங்கள் சாதாரண மக்களைச் சென்றடைவதும் அரிதாகவே இருக்கிறது. காரணம் இதற்கான ஒரு விநியோக வலைப் பின்னல் இல்லாததே ஆகும். இந் நிலையில் இவ்விரு குறும் திரைப்படங்களையும், இதற்கு இரு மாதங்களுக்கு முன் ஸ்கிரிப்ட் தயாரிப்பான ஏழு குறும் படங்களையும் ஒழுங்கு செய்த விபவி மற்றும் பெண்கள் ஆய்வு மன்ற நிர்வாகத்தினர் பாராட்டுக்குரியவர்கள்.

அதிமானுட கதாநாயகர்களையும், பார்வையாளர்களின் சுயபுத்தியைக் கேலிகுள்ளாக்கும் சண்டை மற்றும் பாடல் காட்சிகளைப் பார்த்து வெறுத்துப்போன எங்களுக்கு, எமது வாழ்வின் இயல்பான, இன்னோரு பரிமாணத்தைக் காட்சிப்படுத்தும் இக் குறும் படங்கள் பெரு விருந்தாக அமைந்தன. மேலும் இத்தகைய குறும்படக் காட்சிகளை ஒழுங்குசெய்வது எமது ரசனையை வளர்ப்பதுடன், புதிய அனுபவங்களையும் சாத்தியமாக்கும்.
kathirmuruga@gmail.com
Tuesday, 12 April 2005
(நன்றி: பதிவுகள்.கோம்)

Read Full Post »