Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குழந்தைகளின் உணவு’ Category

>’இவனுக்கு சாப்பாடு ஒண்டும் உட் செல்லாது… சோடா வேணும் எண்டு அடம் பிடித்துக் குடிப்பான்’ என்று அம்மா சொன்னதைக் கேட்டுப் பெருமையுடன் சிரித்த அந்தப் பிள்ளையின் வாய் முழுக்கச் சொத்தைப் பற்கள்.

இனிப்புச் சோடாக்கள், இனிப்புட்டப்பட்ட பழச்சாறுகள் போன்றவை எந்தக் குழந்தைக்குத்தான் பிடிக்காது. ‘சாப்பாடு போகுதில்லை, இதையாவது குடிக்கட்டும்’ என்றோ, ‘பாவம் சின்னஞ் சிறிசு ஆசைப்படுகிறதைக் கொடுக்கத்தானே வேணும்’ என்றோ கட்டுப்பாடில்லமல் இவற்றைத் தாராளமாகக் கொடுத்தால் ஆரோக்கியம் தான் கெடும்.

அதீத எடை வைப்பதற்கும், பற்கள் சொத்தை ஆவதற்கும் இத்தகைய இனிப்புப் பானங்கள்தான் முக்கிய காரணம் என்பது சொல்லியா தெரிய வேண்டும்.

இன்னுமொரு தாயின் பிரச்சனை முற்றிலும் எதிர்மாறானது. அவளின் குழந்தை குடிப்பது மிகவும் ஆரோக்கியமான பானம்! இவனுக்கும் சாப்பாடு உட் செல்லாதுதான். நிறையப் பால் குடிப்பான். இரண்டரை வயதாகியும் இன்னமும் போத்தலில்தான்.

‘இனி போத்தலில் பால் கொடுக்க வேண்டாம். கோப்பையில் குடிக்கக் வையுங்கள். தினமும் இரண்டு கப் பால் கொடுங்கள்’ என ஆலோசனை வழங்கப்பட்டது. காரணம் போத்தலில் குடிப்பது இலகுவானது. விரைவாக வயிறு நிறைந்துவிடும். எனவே சாப்பிடத் தோன்றாது.

பால் போஷாக்குள்ள பானம்தான். அதிலுள்ள புரதம், கல்சியம், விற்றமின் A&D ஆகிவை குழந்தையின் உடல் வளர்ச்சி, பொதுவான ஆரோக்கியம், திடமான பற்கள், உறுதியான எலும்பு ஆகியவற்றிற்கு உதவும். ஆயினும் ஆறு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு திட உணவும் அவசியம் என்பதை மறந்து விடக் கூடாது. பாலைத் தவிர யோஹட், சீஸ் ஆகியவற்றிலும் பாலிலுள்ள போஷாக்குகள் இருக்கின்றன.

குழந்தைகளுக்கு என்ன கொடுக்கலாம்? மூன்று வேளை உணவிற்கும் பின்னர் பால் கொடுப்பதில் தவறில்லை. இடையில் கொதித்து ஆறிய நீரைக் குடிப்பதற்கு குழந்தையைப் பழக்கப்படுதுங்கள். பழச் சாறுகளும் நல்லது. போத்தலில் அடைக்கப்பட்ட இனிப்பூட்டிய பழச்சாறுகள் அல்ல. உடன் பிழிந்து கரைத்துக் கொடுங்கள். படிப்படியாக பழத்தைச் சாறாக்காமல் முழுமையாக உண்பதற்கும் பழக்கப்படுத்துங்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>’எனக்கு கொலஸ்டரோல் இருக்கு. இவருக்கும் (கணவருக்கு) கொலஸ்டரோல் இருக்கு எண்டபடியால் பிள்ளைக்கும் எண்ணெய்ச் சாப்பாடு குடுக்கிறதே இல்லை’ எனப் பெருமை அடித்துக் கொண்டாள் அந்த இளம் தாய்.

பாவம் அந்தப் பிள்ளை!

அதற்கு நான்கு வயது கூட இருக்காது. ‘பாவம்’ என நான் குறிப்பிட்டது அப் பிள்ளைக்கு வாய்க்கு ருசியான சாப்பாடு கிடைக்காது என்பதற்காக மட்டும் இல்லை. தனது அறியாமையால், வளரும் குழந்தையின் வளர்ச்சிக்கு அவசியமான ஒரு முக்கிய வகை போஷாக்கு உணவைக் கொடுக்காமல் தவிர்க்கிறாரே என்ற ஆதங்கத்தில்தான்.

மனிதர்களின் குருதியில் கொலஸ்டரோல் என்பது திடீரென ஏற்படும் பிரச்சனை அல்ல என்பது உண்மைதான். சிறுவயதிலிருந்தே இது ஆரம்பிக்கத் தொடங்குகிறது. எனவே சிறுவயதிலிருந்தே உணவில் அதீத கொழுப்புப் பண்டங்களைச் சேர்ப்பது நல்லதல்ல என்பதும் உண்மைதானே. அவ்வாறெனில் அந்தத் தாய் செய்ததில் என்ன தவறு என்று உங்களுக்குத் தோன்றலாம்.

மாப்பொருள், புரதம், கொழுப்பு, விட்டமின்கள், கனியங்கள் இவை யாவும் எமது உடலுக்கு அவசியமானவை. அதிலும் முக்கியமாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் அத்தியாவசியமானவை. இப் போஷணைப் பொருட்கள் ஒவ்வொன்றும் சரியான விகிதத்தில் உணவில் கலந்திருக்க வேண்டும். மிகுந்தாலும் தீமை பயக்கும், குறைந்தாலும் ஆகாது. வளர்ந்த ஒருவர் தினசரி உட்கொள்ளும் உணவின் கலோரிப் பெறுமானத்தில் 15 சதவிகிதமளவு எண்ணெய், கொழுப்புப் பொருட்களாக இருக்க வேண்டும்.அதற்கும் மேல் இருப்பதும் நல்லதல்ல.

ஆயினும் இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளைப் பொறுத்தவரையில் எண்ணெய், கொழுப்பு. கொலஸ்டரோல் போன்ற எந்தக் கட்டுப்பாடும் இருக்கக் கூடாது. இரண்டு வயதிற்கு மேல் அவர்களின் உணவின் தினசரிக் கலோரிப் பெறுமானத்தில் 30 சதவிகிதம் கொழுப்பிலிருந்து கிடைக்க வேண்டும்.

இதை வாசித்தவுடன் ‘குழந்தைகளுக்கு டொக்டர் கொழுப்பு உணவு கொடுக்கச் சொல்லியிருக்கிறார்’ என்று சொல்லியபடி கிழங்குப் பொரியல், வடை, மிக்ஸர், பட்டர், சொக்கிளேட் என அள்ளி அள்ளி ஊட்ட வேண்டாம். அவை நல்ல கொழுப்புகள் அல்ல. நீங்கள் கொடுப்பது நல்ல வகையான கொழுப்பாக இருக்க வேண்டியது அவசியம். பால், முட்டை,சோயா பட்டர் போன்றவற்றில் இருக்கும் கொழுப்பு குழந்தைகளுக்கு உகந்தது.

சட்டம் வைத்து, சத்தம் போட்டு, அடி கொடுத்து குழந்தைகளுக்கு ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களைக் கற்றுக் கொடுக்க முடியாது. பெற்றோராகிய நீங்கள்தான் முன்மாதிரியாக நடந்த வழி காட்ட வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »