Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘குழந்தையின்மை’ Category

>சந்ததிகளை இழக்கும் அழிவுப் பாதையில் மனித இனம்.
ஆண்ணினம் மலடாகிக் கொண்டு போகிறதா?

ஆண்மை என்பது என்ன?

பரந்து விரிந்த தோள்கள், வலுவான புஜங்கள், தடித்த அடர்த்தியான மீசை. உறுதியான உடல். இவ்வாறு பலவற்றைச் சொல்லிக் கொண்டு போகலாம்.

ஆனால் இவை எல்லாவற்றையும் விட உறவின் போது துணையைத் திருப்பதிப்படுத்துவது ஒன்றேதான் ஆண்மை என ஒவ்வொரு ஆணும் எண்ணுகிறான்.

முடியாதபோது இவன் ஆண்மையற்றவன் எனத் துணையும் தூற்றுகிறாள்.  
ஆனால் ஒரு ஆணின் ஆண்மைத் தன்மைக்கு அத்தாட்சியாக இருப்பது அவனது விந்திலுள்ள (Sperm Count) விந்தணுக்களின் எண்ணிக்கையும் ((Seminal fluid) அதன் தரமும்தான்.

விந்திலுள்ள கோடிக்கான விந்தணுக்களில் ஒன்று மட்டுமே ஏனையவைகளுடன் நீச்சல் போட்டியிட்டு முந்திச் சென்று பெண்ணின் சூலகத்திலிருந்து வெளிவரும் முட்டையுடன் இணைந்து கருவை உண்டாக்கும்.

விந்தணுக்கள் தரமானதாகவும் அதிக எண்ணிக்கையிலும் இருந்தால்தான் அவனால் தகப்பன் ஆகக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. மலடன் ஆகாது தப்பி ஆண்மையுள்ளவன் என நிரூபிக்க முடியும்.

‘மலடி மலடி என வையகத்தார் ஏசாமல்..’ என்றொரு திரைப் பாடல் முன்பு பிரபலமாக இருந்தது.

ஆனால் இன்றைய நிலையில் ‘மலடன் மலடன் என வையகத்தார் ஏசாமல்..’ என தங்களது ஆரோக்கியத்தையும் ஆண்மையையும் காத்துக் கொள்ள வேண்டிய நிலையில் ஆண்கள் இருக்கிறார்கள்.

விந்தணுக்களின் வீழ்ச்சி

ஆரோக்கியமான ஆணின் விந்தணுக்களின் எண்ணிக்கையானது ஒரு மில்லிலீட்டர் விந்தில் 40 மில்லியன் இருக்க வேண்டும். பொதுவாக ஆண் உறவின்போது வெளிப்படுத்தும் விந்து 2-6 மில்லிலீட்டர் அளவாக இருக்கும். 1940 களில் இந்த எண்ணிக்கை 100 மில்லியனுக்கு மேல் இருந்தது. ஆயினும் இன்று சராசரியாக 60 மில்லியனாகக் குறைந்து விட்டது.

ஆனால் மிகவும் கவலைப்பட வேண்டிய விசயம் என்னவெனில் இன்றைய இளம் வயது ஆண்களின் விந்தணுக்களின் எண்ணிக்கை மேலும் மேலும் குறைந்து வருவதுதான்.

இன்றுள்ள வாலிபர்களில் 15 முதல் 20 சதவிகிதமானவர்களின்  விந்தணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியனுக்கு குறைவாக இருப்பது நல்ல செய்தியல்ல.

அத்துடன் அவர்கள் உற்பத்தி செய்யும் விந்தணுக்களில் தரமும் தாழ்ந்துவிட்டது.

5 முதல் 15 சதவிகிதமானவை மட்டுமே சாதாரண (Normal) நிலையில் இருக்க மிகுதி யாவும் அசாதாரண (Abnormal) விந்தணுக்களாக இருக்கின்றன.

இது இனவிருத்திக்குப் போதாது.

ஏனைய பாலூட்டிகள்

ஏனைய பாலூட்டி மிருங்கங்களுடன் ஒப்பிடும்போது இயற்கையாகவே மனிதனின் விந்தணு எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது.

உதாரணமாக எருதுகளின் விந்தணுக்களின் எண்ணிக்கை மில்லியன்களாக அன்றி பில்லியன் கணக்கில் இருக்கின்றன.

அத்துடன் மனிதரில் சாதாரண விந்தணு எண்ணிக்கை 5 முதல் 15 சதவிகிதமாக இருக்க எருதுகளிலோ அது 90 சதவிகிதத்திற்கு மேல் இருக்கிறது.

மலட்டுத்தன்மையை நோக்கி

இத்தகைய காரணங்களால் மனிதர்களில் இனவிருத்தி குறைந்து கொண்டு போகிறது. ஏழு தம்பதிகளில் ஒரு தம்பதியினருக்கு குழந்தைப் பேறு கிட்டாது போய்விடுகிறது.

இதில் பெரும்பாலான தம்பதியினரக்கு ஆண்களின் குறைபாடே காரணமாக இருக்கிறது. போதியதும் தரமானதுமான விந்தணுக்குள் இல்லாமைக்கு பல காரணங்கள் சொல்லலாம்.

 • விதைப்பையிலுள்ள நாளங்கள் புடைத்திருப்பது (Varococele) முக்கிய காரணமாகும். இது கால்களில் ஏற்படும் நாளப்புடைப்பு (Varicose Veins) நோயை ஒத்தது.
 • பாலியல் தொகுதியில் உள்ள பிறவிக் குறைபாடுகள்,
 • பாலியல் நோய்த் தொற்றுகள். குpளாமிடியா, கொனரியா, சிபிலிஸ் போன்றவற்றால் விந்தணு பயணம் பண்ணும் குழாயில் தடிப்புகள் ஏற்பட்டு பாதை தடைப்படலாம்.
 • கூகைக்கட்டு (பொன்னுக்கு வீங்கி), புரஸ்ரேட் சுரப்பியில் கிருமித் தொற்று, சலக்குழாயில் தொற்று போன்றவையும் காரணமாகலாம்.
 • ஆண்மைக் குறைபாடு மற்றொரு காரணமாகும். ஆண் ஹோர்மோன் ஆன டெஸ்டஸ்டரோன் குறைபாடு (testosterone Deficiency) முக்கியமானது.
 • வாழ்க்கை முறைகள் காரணமாகின்றன. உதாரணமாக மனஅழுத்தம், போசணைக் குறைபாடு, அதீத எடை, மதுவும் ஏனைய போதைப் பொருட்களும் ஆண் மலட்டுத்தன்மைக்கு இட்டுச் செல்கின்றன.

விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறையக் காரணங்கள்

 1. இறுக்கமான உள்ளாடைகளை தொடர்ந்து அணிதல், நீண்ட நேரம் தொடைகளை நெருக்கியபடி உற்கார்ந்திருத்தல் போன்றவற்றால் விதைப்பையின் வெப்பம் அதிகமாகி விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைகிறது. விதைகள் விதைப்பையுக்குள் இறங்காமை.
 2. தினமும் 4 மணித்தியாலயங்களுக்கு மேல் செல் போனில் பேசுபவர்களின் விந்தணுக்களின் எண்ணிக்கையும் தரமும் குறைவதாகவும் சில ஆய்வுகள் தெரிவிக்கின்நன.
 3. வேலை நெருக்கடி, மன உளைச்சல் போன்ற பல்வேறு காரணங்களால் வாரத்திற்கு 2 -3 தடவைகளாவது உடலறவு வைக்க முடியாது போவது கூட குழந்தையின்மைக்கு ஒரு காரணம்தான்.

இவை எல்லாவற்றிக்கும் மேலாக மற்றொரு காரணம் இப்பொழுது முன்வைக்கப்படுகிறது.
மனிதனின் தவறான வாழ்க்கை முறை என்பதற்கு மேலாக

 • அவனது தாயின் அல்லது 
 • பெற்றோரின் தவறான வாழ்க்கைமுறைதான் காரணமாகலாம் என்கிறார்கள் சில வல்லுணர்கள்.

கருவில் வளரும்போதே மலடாவதற்கான விதை விதைக்கப்படுகிறது என்பதுதான்.

விந்தணு உற்பத்தி

விந்தணுக்ளின் உற்பத்தி Spermatogenesis பதின்ம வயதில்தான் ஆரம்பிக்கிறது. ஆனால் அதற்கான அத்திவாரம் அவன் கருவில் இருக்கும்போதே ஆரம்பித்துவிடுகிறது.

அதாவது விதைகளின் விருத்தியானது கருவாக இருக்கும்போதே ஆரம்பித்து 6 மாதக் குழந்தையாக இருக்கும் போதே முற்றுப் பெறுகிறது.

எனவே இந்தக் காலகட்டத்தில் அதன் விருத்திக்கு ஏதாவது இடையூறு நேர்ந்தால் பின்பு வாழ்நாள் முழுவதும்  அவனது குழந்தை பெறும் ஆற்றல் பாதிப்படையும்.

புகைத்தல்

விந்தணுக்கள் குறைவதற்கு வேறு காரணங்களும் உண்டா? புகைத்தல் ஒரு முக்கிய காரணமாகும். அண்மைய ஆய்வுகளில் புகைப்பவர்களது விந்தணு எண்ணிக்கை 15 சதவிகிதத்தால் குறைவடையும் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

ஆயினும் புகைத்தலை நிறுத்தினால் அது மீண்டும் வழமை நிலையை அடையும். ஆயினும் அவனது தாயானவள் கருவுற்றிருக்கம் நேரத்தில் புகைத்திருந்தால் அது 40 சதவிகிதம் குறையும்.

இது முக்கிய கண்டுபிடிப்பு. ஆயினும் விந்தணு குறைந்த எல்லோரது தாய்மார்களும் புகைத்திருப்பார்கள் என்று சொல்ல முடியாது. தந்தை புகைப்பதால் அதன் பாதிப்பு தாயின் ஊடாக கருவிற்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்குமா என்பது பற்றி அந்த ஆய்வு எதுவும் கூறவில்லை. ஆயினும் அதற்கான சாத்தியத்தைக் குறைத்து மதிப்பிட முடியாது.

வேறு காரணங்கள் இருக்கலாமா?

 • உணவு முறை மாற்றங்கள், 
 • உடல் உழைப்பற்ற வாழ்க்கைமுறை,
 • இயற்கையோடு இசையாத வாழ்வு,
 • சூழல் மாசடைதல்,
 • காலநிலை மாற்றங்கள்

என எத்தனையோ விரும்பத்தகாத பல மாற்றங்கள் இன்று மனித குலத்தில் ஏற்பட்டிருக்கின்றன. இவற்றின் தாக்கங்கள் யாவை? இவை போன்றவற்றாலும் ஆண்மைக் குறைபாடு ஏற்பட்டிருக்கலாமா என்பதையிட்டும் ஆய்வுகள் அவசியம்.

பெண்களில்

அதே நேரம் பல பெண்களும் மாதவிடாய்க் கோளாறுகளாலும் அதன் பலனாக கருத்தங்கலில் பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். அதீத எடை, இன்சுயிலின் செயற்பாடு பாதிப்பு, சூலக நோய்கள் போன்றவை இவற்றிக்கு காலாக உள்ளன. இவற்றில் பலவும் தவறான வாழ்க்கை முறைகளின் பயனே.

எது எப்படி இருந்த போதும் மனித குலம் தொடர்ந்து வாழ இனப்பெருக்கம் அவசியம். அதற்கு ஆண்மைக் குறைபாடு அல்லது பெண்களின் நோய்கள் காரணமாக வந்துவிடக் கூடாது.

ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளை கடைப்பிடிப்பதே அதற்கு வழிபோலத் தெரிகிறது.

ஞாயிறு வீரகேசரியில் வெளிவந்த எனது கட்டுரையின் மீள் பிரசுரம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

>ஆசைப்பட்ட அனைவருக்கும் அனைத்துமே கிடைத்துவிடுவதில்லையே!. குழந்தை இல்லாதவர்களுக்கும் இது பொருந்தும். அவர்களின் ஆசை பலிக்காததற்குக் காரணங்கள் பலவாகலாம்.

உலகெங்கும் குழந்தை இல்லாதவர்கள தொகை அதிகரித்துக் கொண்டே போகிறது. இங்கிலாந்தில் ஆறு தம்பதிகளில் ஒருவர் என்ற விகிதத்தில் குழந்தையின்மை இருக்கிறது என்பது கவனிக்கத்தக்கது. இருந்தபோதும் வைத்தியத் துறையின் அளப்பரிய முன்னேற்றம் காரணமாக டெஸ்ட் ரியூப்பில் குழந்தையை உருவாக்கக் கூடிய முறை அறிமுகமானதால் குழந்தை இல்லாதவர்களிடையே பெரும் நம்பிக்கை ஏற்பட்டது. டெஸ்ட் ரியூப் குழந்தை என்பது உண்மையில் ஒரு வகை செயற்கைச் சினையூட்டல் முறையாகும்.

அதாவது உடலுக்கு வெளியே ஆய்வு கூடத்தில் பெண்ணின் முட்டையானது சினையூட்டப்படும். அதனால் உண்டாகும் கருவை பின் கருப்பையில் பதித்து, இயற்கையாக வளரச் செய்வர். செயற்கை என்பது முகமறியா வேறொருவரின் விந்தைக் கொண்டு சினையூட்டல் எனப் பொருள்படாது. கணவனின் விந்தைக் கொண்டே பெரும்பாலும் சினைப்படுத்தப்படுகிறது. அவரின் லிகிதத்தில் விந்தணுக்கள் இல்லாவிட்டாலும் கூட அவரின் விதையிலிருந்தே விந்தணுக்களை வெளியே பிரித்து எடுத்து சினையூட்டப்படும் வைத்திய வசதி இப்பொழுது உண்டு. அதுவும் முடியாத கட்டத்தில் மட்டுமே வேறு ஒருவரின் விந்தைத் தானமாகப் பெறவேண்டிய தேவை ஏற்படலாம்.

இருந்தபோதும் In Vitro Fertilisation- IVF எனப்படும் டெஸ்ட் ரியூப் குழந்தையானது வேண்டுவோர் எல்லோருக்கும் சுலபமாகக் கிட்டிவிடுவதில்லை. இதற்கும் காரணங்கள் பல.

முதலாவதாக பெண் போதிய அளவு முட்டையைத் தனது சூலகத்திலிருந்து உற்பத்தி செய்வதைத் தூண்டுவதற்கான மருந்துகள் கொடுக்க வேண்டும். இம் மருந்துகள் மிக விலை உயர்ந்தவை. இங்கிலாந்தில் மருந்துகளுக்கு கிட்டத்தட்ட 1500 ஸ்டேர்லிங் பவுண்ட்ஸ் வரை செலவாகும். அத்துடன் தொடர்ந்து 5 வாரங்கள் வரை மருந்து உட்கொள்ள வேண்டி நேரிடும். எனவே பணத்துடன் காலமும் செலவாகும்.

இச்சிகிச்சை முறையின் போது மருந்து கொடுத்த பின் உற்பத்தியாகும் முட்டைகளை அல்ரா சவுண்ட் துணையுடன் வெளியே எடுத்து கணவரின் அல்லது கொடையாளியின் விந்துவவைக் கொண்டு கருவூட்டுவர்.

இப்பொழுது In Vitro Maturation- IVM என்ற புதிய முறையை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த முறை விரைவானது மலிவானது. இந்த முறை மூலம் ஆணும் பெண்ணுமான இரட்டைக் குழந்தைகள் ஒக்டோபர் மாதம் 18ம் திகதி Radcliffe Infirmary in Oxford ல் பிறந்திருக்கினறன.

இது எப்படியான முறை என்று கேட்கிறீர்களா?

கடுமையான விலை கூடிய மருந்துகள் உபயோகிக்கப்படவில்லை. மருந்துகள் உபயோகித்து பெண்ணின் சூலகத்திலிருந்து முட்டைகள் வெளிவர நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டியிருக்கவில்லை.

இது எப்படி என்கிறீர்களா?

வளர்ச்சி பூர்த்தியடையாத முட்டைகளை சூலகத்திலிருந்து எடுத்து மருத்துவ ஆய்வுகூடத்தில் செயற்கை ஊடகத்தில் 24 முதல் 48 மணி நேரம் வரை வளர்ச்சியுறச் செய்தபின் ஆணின் விந்துடன் சினையூட்டி இறுதியாக கருப்பையில் இடுவதுதான் இம்முறையாகும். ஆயினும், தற்பொழுது இம்முறை பொலிசிஸ்டிக் ஓவறி (Polycystic ovaries) என்ற பிரச்சனை உள்ள பெண்களுக்கே செய்யப்படுகிறது. காரணம் என்னவென்றால் அத்தகைய பெண்களின் சூலகத்தில் மாதாந்தம் 16 முட்டைகள் வரை உண்டாகின்றன. ஆனால், ஏனைய சாதாரண பெண்களில் மாதாந்தம் 4 முட்டைகள் வரையே உண்டாகின்றன.

ஆயினும், இம்முறையில் கூடிய அனுபவம் பெற்றதும் ஏனைய பெண்களுக்கும் விஸ்தரிக்க உள்ளார்கள். ஏற்கனவே, 400க்கும் மேற்பட்ட குழந்தைகள் இந்த முறை மூலம் உலகளாவிய ரீதியில் பிறந்துள்ளார்கள் என்பது நம்பிக்கை ஊட்டுகிறது.

செயற்கைச் சினையூட்டல் துறை வேகமாக வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் ஆண் குழந்தையா பெண் குழந்தையா வேண்டும் என்பதையும் நீங்களே தீர்மானிக்கக் கூடியதாக இருக்கும். அதுமட்டுமல்ல குழந்தையின் நிறம், அதன் முடி சுருட்டையாக இருக்க வேண்டுமா வேண்டாமா போன்ற தேர்வுகளும் கூட உங்களுக்கே இருக்கும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »