நண்பர் பா.இரகுவரன் அவர்கள் தான் செய்ய ஆய்வுகளின் பலனாகவும் தான் தாயாரித்து மேடை ஏற்றிய செட்டிய வர்தகன் என்ற நாட்டுக் கூத்த அனுவங்களாலும் வடமராட்சிய நாட்டுக் கூத்துக்கள் என்ற நூலை அண்மையில் வெளியிட்டுள்ளார்.
அந் நூலுக்கு நான் எழுதிய வாழ்த்துரை இது.
வாழ்த்துரை
நாளந்தம் மனதார வாழ்த்திக் கொண்டிருக்கும் நண்பனது நூலுக்கு வாழ்த்துரை வழங்குவது எத்துணை சிரமமானது என்பதை எழுத்தில் வடிக்க முனையும் போதுதான் புரிந்தது. எதை எழுதுவது எதை விடுவது எனத் தடுமாறிக் கொண்டிருக்கிறேன்.
பல்துறை ஆற்றல் மிகு ஆசிரியனாக இன்று கடமை ஆற்றிக் கொண்டிருக்கும் இரகுவரன் முதன் முதலாக அறிமுகமானது எத்தனையாம் வருடத்தில் என்பது நினைவில் இல்லை. ஆயினும் உயர் வகுப்பு மாணவனாக என்பது மட்டும் நிச்சயம். அறிமுகப்படுத்தி வைத்தது நண்பர் குலசிங்கம் அவர்கள். தீவிர இலக்கிய ஈடுபாடுபாடு கொண்ட மாணவன் என்ற அறிமுகத்தோடு.
முதல் அறிமுகத்திலேயே அவரது அமைதியும் துருவி அறிய முனையும் விஞ்ஞான நோக்கும், பரந்த ஆர்வங்களும், நிறைந்த இலட்சியங்களும் அவர் மீது ஈடுபாட்டை ஏற்படுத்தின. ஆசிரிய கலாசாலை மாணவனாக, நாடகத்துறை பட்டதாரியாக, ஆசிரியராக, பலராலும் மதிக்கப்படும் சமூகத் தலைவனாக அவரது வளர்ச்சிக்கு மூன்று தசாப்தங்களாக சாட்சியாக இருக்க முடிந்திருக்கிறது.
‘வடமராட்சியில் கூத்துக் கலை’ எனும் இந்த நூலை எழுதும் இரகுவரன் தனது வாழ்வில் எத்தனை வேறுபட்ட பாத்திரங்களை வகித்திருகிறார், தொடர்ந்தும் வகித்து வருகிறார் என்பதை யோசித்துப் பார்க்கையில் வியப்பாக இருக்கிறது.
ஆற்றல் மிகு விஞ்ஞான ஆசிரியனாக, நூலகப் பொறுப்பாளராக, சிறுகதை ஆசிரியனாக, தேர்ந்தெடுத்து படிக்கும் நல்ல வாசகனாக, கவிஞனாக, நாடக பிரதி எழுத்தாளராக, நாடக நெறியாள்கையாராக, நடிகனாக, சமூக ஆய்வாளனாக, புகைப்படக் கலைஞராக இன்னும் இன்னும் …
எமது சமூகத்தின் பண்பாட்டு பாரம்பரியங்களையும், வரலாற்றையும், வரலாற்று சின்னங்களையும் தேடி அலைந்து கண்டறிவதிலும், ஆராய்வதிலும், அவற்றை ஆவணப்படுத்துவதிலும் இவருக்குள்ள ஈடுபாடு அளப்பரியது.
இதன் பயனாக பல நூல்களையும் கட்டுரைகளையும் ஏற்கனவே எழுதியுள்ளார். ‘பருத்தித்துதறை ஊராம்’, ‘கல்லூரி நாடகங்கள்’, ‘ஊரும் வாழ்வும்’ பண்டைத் தமிழர் நாடகங்கள், சீன யப்பானிய பாரம்பரிய நாடகங்கள் ஆகியன இதுவரை வெளிவந்த நூல்களாகும்.
தனது தாயாரின் அந்தியட்டி மலரை- கல்வெட்டை- ‘பிராமண வீதி சரித்திரம்’ என்ற ஒரு ஆய்வு ஆவணமாக வெளியிட்டமை குறிப்பிடத்தக்கது. மேலும் சில அந்தியேட்டி மலர்களில் பல விடயங்களை ஆவணப்படுத்தியும் வருகிறார்.
உற்றார் உறவினரது புலம்பல்களினாலும், தேவார திருவாசகங்களாலும், வலிந்து நிரப்பப்பட்டு, அந்தியட்டி மண்டப கதிரைகளிலேயே அநாதரவாகக் கைவிடப்படும் கல்வெட்டுகள் நிறைந்த கால கட்டத்தில் இவரது தயாரின் கல்வெட்டானது எதிர்காலச் சந்ததியினரும் தேடிப் பாதுகாக்க வேண்டிய ஆவணமாக அமைந்தமை இவரது ஆழ்ந்த சமூக பற்றின் வெளிப்பாடாகும்.
பேஸ்புக் என்பது ஒரு சமூக வலைத்தளம். பெரும்பாலனவர்கள் அதனை வெறும் பொழுதுபோக்கிற்காகவே பயன்படுத்துகிறார்கள். ஆயினும் இரகுவரன் தனது சமூக உணர்வையும், வரலாற்றை ஆவணப்படுத்தும் ஊடாகக் கருவியாகவும் வெற்றிகரமாகப் பயன்படுத்துகிறார். இது பெருமைக்குரியது.
‘சூரியனும் கறுத்துப் போச்சு’ என்று சிரித்திரனில் இவர் எழுதிய சிறுகதை இரு தசாப்தங்கள் கடந்துவிட்டபோதும் ஞாபகத்தில் நிற்கிறது.
போர் சூழ்ந்து வாழ்வில் இருள் முடிக் கிடந்த 90களில் பருத்தித்துறை நண்பர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதில் இரகுவரனின் அர்ப்பணிப்பு அளப்பரியது. அறிவோர் கூடல் என்ற மாதந்த இலக்கிய செயற்பாடுகளுக்கு நண்பர் குலசிங்கத்துடன் இணைந்து பங்களிப்பு வழங்கியதுடன் நிற்காது தனது கூத்து முயற்சிகள் ஊடாகவும் ஒளியூட்டினார்.
நண்பர் குலசிங்கத்து வீட்டு முற்றதில் கூத்துக் களரி அமைத்து இரவில் விழா நடத்தியதும், யாழ் பல்கலைக்கழக மாணவர்களும் விரிவுரையாளர்களும் தேடி வந்து கலந்து கொண்டு பாராட்டியதும் நேற்று நடந்தது போல பசுமையாக இருக்கிறது.
இரகுவரனது இந்த ஆவணப்படுத்தும் நூலாக்க முயற்சிக்கும் என்றென்றும் போல எனது பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
எம்.கே.முருகானந்தன்.