>
இதுவும் அத்தகையாதுதான். இயற்கையோடு வாழாததால் இழந்தது.
மிகவும் துன்பப்படுத்தும் நோய் அது. எழுந்து நடப்பதா, மசாஸ் பண்ணுவதா, யாரையாவது பிடித்துவிடச் சொல்வதா, அல்லது எதுவும் செய்யாது அசையாமல் படுத்துக்கிடப்பதா எனத் புரியாது திகைக்க வைக்கும்.
![]() |
வலி தாங்க முடியவில்லை. கெண்டை பிடிக்கிறது. |
பலருக்கு நட்டநடு நிசியில் வருவதால் துணைக்கு யாரும் இன்றிப் பயமாகவும் இருக்கும். ஆனால் பார்த்துக் கொண்டிருப்பவருக்கு என்ன இந்தச் சின்ன விசயத்திற்கு இத்தனை ஆர்ப்பாட்டம் செய்கிறார் எனச் சிரிப்பாக இருக்கும்.
ஆம் கிறாம்ஸ் (Cramps) எனப்படும் தசைக் குறட்டல் நோய் ஆபத்தற்றது. குறுகிய நேரம் மட்டுமே நீடித்தாலும் மிகவும் துன்பபப்படுத்துகிற நோயாகவும் இருக்கிறது.
இது ஏன் ஏற்படுகிறது? இதற்கு எந்த மருந்து மிகவும் உதவக் கூடியது போன்ற விடயங்களில் இன்னமும் தெளிவு இல்லை என்றே கூறவேண்டும்.
கடுமையான உடல் உழைப்பு அல்லது உடற் பயிற்சியும் அதனுடன் தொடர்ந்து வரும் நீரிழப்பு நிலையும்தான் காரணம் என்பது பரவலான நம்பிக்கையாகும். கடுமையான நீரிழப்பு ஏற்பட்டிருந்தபோதும், அதனுடன் உடல் உப்புகள் பெருமளவு வெளியேறியபோதும் குறண்டல் வரவில்லை என்கிறது ஒரு ஆய்வு. (Ref:- Med Sci Sports Exerc. 2010 Nov;42(11):2056-63.)
யாருக்கு வருகிறது
எவருக்கும் குறட்டல் நோய் வரக் கூடுமாயினும் சில வகை மனிதர்களை, சில சூழ்நிலையில் அதிகமாகப் பாதிக்கிறது.
- கர்ப்பிணிகள் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு ஆய்வின்போது கர்பமாயிருக்கும் பெண்களில் சுமார் அரைவாசிப் பெண்களுக்கு குறட்டல் பாதிப்பு இருப்பது தெரியவந்தது.
- வயதானவர்களில் 1ஃ3 பேர் பாதிக்கப்படுவதாக அறிய முடிந்தது. இவர்களில் பலர் 10வருடங்களுக்கு மேலாகத் துன்பப்பட்டிருந்தாலும் மருத்துவ உதவியை நாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- பல குழந்தைகளுக்கும் வருவதுண்டு
- இரவில் வரும் குறட்டல் அதிகமாகும்
- கடுமையான வெய்யிலில் உடல் உழைப்பில் அல்லது பயிற்சியில் ஈடுபட்டால் வருவதற்கான சாத்தியம் அதிகம்.
- ஈரல் நோயுள்ளவர்கள், அதீத மது பாவனையாளர்கள், டயலிசிஸ் செய்யப்படும் சிறுநீரக செயலிழப்பு நோயாளிகள் எனப் பல்வேறு தரத்தினரும் பாதிப்படைகிறார்கள்.
குறட்டல் எவ்வாறு ஏற்படுகிறது என்பதற்கு பல விளக்கங்கள் கூறுப்படுகின்றன.
- தெரியாத காரணங்களால் குறிப்பிட்ட பகுதியில் நரம்புகள் தூண்டப்படுவது காரணமாக இருக்கலாம் என எண்ணப்படுகிறது.
- ஏற்கனவே முழுமையாகச் சுருங்கியுள்ள தசை இழையங்கள் திரும்பவும் தூண்டப்படுவதும் மற்றொரு காரணமாம்.
- குறிப்பிட்ட பகுதியிலுள்ள தசை இழையங்களுக்கு போதிய இரத்த ஓட்டம் இல்லாத போதும் நேரலாம். இது மாரடைப்பை ஒத்தது. மாரடைப்பின்போது இருதயத்தின் தசைநார்களுக்கு இரத்தம் செல்வது குறைவதால் அல்லது முற்றாகத் தடைப்படுவதால் மாரடைப்பு நெஞ்சுவலியாக வெளிப்படுகிறது.
- தசைகளுக்கு நீட்டி மடக்குவது போன்ற பயிற்சிகள் குறைவாக இருப்பதாலும் ஏற்படலாம்.
உதாரணமாக முன்பு நிலத்தில் உட்கார்ந்த மனிதன் இப்பொழுது நாற்காலியில் உட்காருகிறான். மலசலம் கழிப்பதற்கு குந்தியிருந்தவன் இப்பொழுது கொமோட்டில் உட்காருகிறான்.
இவற்றினால் அவனது கால் தசைகளுக்கு பயிற்சி அற்றுப் போய்விட்டது இதுவே குறட்டல் ஏற்படுவதற்கான வாய்ப்பை அதிகமாக்கிவிட்டதாகக் கருதுகிறார்கள்.
மருத்துவம்.
ஒரு குறிப்பிட்ட சிகிச்சை அனைவருக்கும் பயன்படும் என்று சொல்ல முடியாது. ஓவ்வொருவருக்கும் அவர்களது நோய்கான காரணம் எதுவென பகுத்தறிந்து செய்ய வேண்டியுள்ளது.
பொதுவாக குயினின் என்ற மருந்து இதனைத் தடுப்பதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.
ஆயினும் உணவு சார்ந்த முறைகளில் இப்பொழுது ஆர்வம் திரும்பியிருக்கிறது. தசைகளின் செயற்பாட்டிற்கும் நரம்புகளின் தூண்டலுக்கும் பல மூலகங்கள் அடிப்படையாக இருப்பதே காரணமாகும். உதாரணமாக Potassium, Magnesium, Sodium and Calcium போன்றவை முக்கிய பங்களிக்கின்றன.
உப்புக் கரைத்துக் கொடுப்பது, இளநீர் அருந்துவது போன்றவை சிபார்சு செய்யப்படுவதற்கு இதுவே காரணம். ஆயினும் இவற்றை மேலதிகமாகக் கொடுப்பதால் கெண்டைப் பிடிப்பைத் தடுக்கலாம் என்பதை ஆய்வுகள் உறுதி செய்யவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதேபோல விட்டமின் சீ, ஈ (Vitamin C, Vitamin E) போன்றவையும் உதவலாம். ஆயினும் இவை பற்றியும் தெளிவான ஆய்வு முடிவுகள் இல்லை.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.