இந்தப் பெண்ணின் முதுகில் கொப்பளங்கள் சிறிய சிறிய கூட்டங்களாக இருக்கின்றன.
மற்றொரு பெண்ணின் முதுகிலும் வயிற்றிலும் தோன்றியவற்றின் படம் இது. அதேபோன்ற கொப்பளங்கள் உள்ளன.
மென்மையான தோலினால் மூடிய கொப்பளங்கள். உள்ளே சிறிதளவு தெளிவான நீர் இருக்கிறது.
கொப்பளிப்பான் நோயில் வரும் கொப்பளங்கள் போலவே இருக்கின்றன. ஆனால் கொப்பளிப்பான் போல உடல் முழுவதும் வீசிப் போடவில்லை.
நடு முதுகில் முள்ளந் தண்டிற்கு அருகில் ஆரம்பித்து வயிறு வரை தொடர்கிறது. வயிற்றின் ஒரு பாதிப் பக்கத்தில் மட்டுமே இருக்கிறது.
நடுவயிற்றைத் தாண்டி மறு பக்கம் போகவே இல்லை. இவருக்கு இடப் பக்கத்தில் மட்டுமே வந்தது.
முகத்தில் இது வந்தால் மிக அவதானமாக இருக்க வேண்டும். ஏனெனில் கண்களுக்குள்ளும் கொப்பளங்கள் போடக் கூடும். அப்படியானால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
இதுவும் ஒருவகைக் கொப்பளிப்பான்தான். இதனை நரம்புக் கொப்பளிப்பான் என்பர். முந்நாணிலிருந்து (Spinal Cord) வெளிவரும் ஏதாவது ஒரு நரம்பின் பாதையில் மட்டுமே கொப்பளங்கள் தோன்றும்.
பொதுவாக கொப்பளங்கள் தோன்ற முன்னரே அந் நரம்பின் பாதையில் காரணம் சொல்ல முடியாத வலி இருக்கும்.
வலியிலிருந்து மீள்வதற்காக பலரும் தமக்குத் தெரிந்த ஓயின்மென்ட், கிறீம், எண்ணெய் பலவற்றையும் தேய்பதுண்டு.
ஓரிரு நாட்களில் கொப்பளங்கள் தோன்றியதும் மருந்து ஒவ்வாமையால் கொப்பளங்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற மயக்கம் அவர்களுக்கு ஏற்படுவதுண்டு.
பொதுவாக முன்பு எப்பொழுதாவது கொப்பளிப்பான் நோய் வந்தவர்களுக்கு மட்டுமே இது வரும். பெரும்பாலும் வயதானவர்களே அதிகம் பீடிக்கப்படுகிறார்கள்.
முன்பு ஏற்பட்ட வெளிப்படையாக நோய் மாறிய பின்னர் நரம்பு மண்டலத்தில் மறைந்திருந்த கிருமிகள் மீளுயிர்ப்பதால் இந்நோய் ஏற்படுவதாகக் கருதப்படுகிறது. அதனால்தான் ஒரு நரம்பின் பாதையில் மட்டும் வருகிறது.
ஆங்கிலத்தில் Shingles என்பர். மருத்துவத்தில் Herpes Zoster என வழங்கப்படுகிறது.
தொற்று நோய். எல்லாக் கொப்பளங்களும் காய்ந்து அயறாகும் வரை நோயூற்றவரிலிருந்து ஏனையவர்களுக்குத் தொற்றும். தொற்றினால் கொப்பளிப்பான் நோய் வருமே ஒழிய நரம்புக் கொப்பளிப்பான் அல்ல.
Acyclovir போன்ற வைரஸ் எதிர் மருந்துகள் உள்ளன. ஆயினும் அவற்றை முதல் 48 மணிநேரத்திற்குள் ஆரம்பித்தால் மட்டுமே பலன் கிடைக்கும். பொதுவாக 14 நாட்களுக்குள் கொப்பளங்கள் மருந்துகள் இல்லாவிடினும் தானாகவே காய்ந்து உலர்ந்து விடும்.
சிலரில் கொப்பளங்கள் நன்கு மாறிய பின்னரும் நோய் வந்த நரம்பின் பாதையில் கடுமையான வலி நீடிக்கக் கூடும். இதனை Postherpatic Neuralgia என்பர். ஒரிரு மாதங்கள் முதல் சில வருடங்கள் வரை அவ் வலி நீடிக்கலாம். அத்தகையவர்களுக்கு நீண்ட நாட்களுக்கு சிகிச்சையைத் தொடர நேரிடும்.
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்