Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கொலஸ்டரோல்’ Category

“பாருங்கோ டொக்டர் என்ரை கொலஸ்டலோல் அளவு எவ்வளவு குறைஞ்சு போட்டுதெண்டு. ஆனால் குளிசையின் அளவைக் குறைக்கவோ நிப்பாட்டவோ வேண்டாம் என்று ஸ்பெசலிஸ்ட் சொல்லுறார்” ரிப்போட்டை நீட்டியபடி சொன்னார்.

நான் அவரது கேள்விக்கு நேரடி மறுமொழி சொல்லவில்லை. எதிர்க் கேள்வி கேட்டேன்.

“நீங்கள் ஏன் கொலஸ்டரோல் மருந்து பாவிக்கிறனீங்கள்”

img03

ஒன்றும் தெரியாத அடிமடையன் ஒருவனைப் போல என்னைப் பார்த்துக்கொண்டு “வேறை என்னத்துக்கு இரத்தத்திலை கொலஸ்டரோல் அளவைக் குறைக்கத்தான். இப்ப அளவு குறைஞ்சு போட்டுது மருந்தைக் குறைக்கலாம்தானே.” என்றார்.

‘உங்களுக்கு ஹாட் அட்டக் அல்லது பக்கவாதம் எதிர்காலத்தில் வரவேண்டும் என விரும்பினால் மருந்தை நிப்பாட்டுங்கோ’ என்று முகத்தில் அடிக்குமாற்போலச் சொல்லி அவரது மனத்தை நோகடிக்க விரும்பவில்லை.

மாரடைப்பு பக்கவாத பாதிப்புகள்

அவர் எண்ணுவதுபோல வெளிப்படையான காரணம் குருதிக் கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதுதான் என்ற போதும் அடிப்படைக் காரணம் வேறு ஆகும்.

காரணத்தை விளக்கினேன்.

இன்று மனிதர்களை மரண வாயிலில் தள்ளுவதில் முன் நிற்பவை மாரடைப்பும் பக்க வாதமும் ஆகும். இவை இரண்டும் வருவதற்கு முக்கிய காரணம் இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிந்து அவை அடைபடுவதுதான். இரத்தக் குழாய்களில் கொழுப்பு படிவது கொலஸ்டரோல் அதிகரிப்பதால் ஆகும்.

இருந்தபோதும் மாரடைப்பு பக்கவாதம் ஆகியன வருவதற்கு குருதியில் அதிகரித்த கொலஸ்டரோல் மட்டும் காரணம் அல்ல.

ஒருவரது வயது என்ன என்பது ஒரு முக்கிய காரணமாகும். வயது அதிகரிக்க அதிகரிக்க மேற்கூறிய பாதிப்புகளுக்கான சாத்தியங்கள் அதிகமாகும்.

உலகின் எந்தப பகுதியைச் சார்ந்தவர் என்பது மற்றொரு காரணமாகும். வெள்ளையனா, ஆபிரிக்கனா, ஆசியனா என்பது முக்கியமாகும். இதற்குக் காரணம் உங்களையும் என்னையும் போன்ற ஆசிய நாட்டவர்களுக்கு மாரடைப்பு பக்கவாதம் போன்ற நோய்ப் பாதிப்பு வருவது அதிகமாகும்.

புகைப்பவர்களும் புகைக்காதவர்களை விட இவை வரும் சாத்தியம் மிக அதிகமாகும். இவற்றைத் தவிர நீரிழிவு மற்றும் உயர் இரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு மாரடைப்பு மற்றும் பக்கவாதம் வருவதற்கான சாத்தியம் ஏனையவர்களை விட அதிகமாகும்.

பாதிப்பு வரக் கூடுமா என்பதை  முற்கணித்தல்

மேற்கூறிய காரணிகளை எல்லாம் ஒட்டுமாகக் கணக்கில் எடுத்து ஒருவருக்கு எதிர்காலத்தில் மேற்கூறிய பாதிப்புகள் வருவதற்கான சாத்தியம் எவ்வளவு (ASCVD Risk)  என்பதை முன்னதாகவே கணக்கெடுக்க முடியும். அதற்கு ஏற்பவே கொலஸ்டரோல் மருந்தைக் கொடுக்க வேண்டும் என அமெரிக்காவில் உள்ள மருத்துவக் கழகங்கள் பொதுவான பரிந்துரை செய்துள்ளன.

ginormous

ஆபத்தைக் இலகுவாகக் கணிப்பதற்கான ஒரு கல்கூலேட்டரை உருவாக்கி மருந்துவர்களின் பாவனைக்காக இணையத்தில் கிடைக்க வசதி செய்து தந்துள்ளார்கள். ASCVD Risk calculator  என்பதே அது.

இதில் முக்கிய அம்சம் என்னவென்றால் குருதியில் கொலஸ்டரோலின் அளவு எவ்வளவாக இருக்கிறது என்பதை விட ஒருவருக்கு  மாரடைப்பு பக்கவாதம் மற்றும் காலிலுள்ள குருதிக் கலங்கள் அடைபடாமல் தடுப்பதற்கு மருந்து தேவைப்படுமா என்பதையும் எவ்வளவு மருந்து தேவைப்படும் என்பதையும் கவனத்தில் கொள்கிறார்கள்.

கொலஸ்டரோலுக்கு அதிகம் உபயோகிக்கும் மருந்துகளான ஸ்டரின் வகை மருந்துகள் பற்றிய ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். இவை பாதிப்பை ஏற்படுத்தும் எனப் பலர் தவறாகக் கருதுவதற்கு மாறாக மிகவும் பாதுகாப்பான மருந்துகளாகும் அவை.

Rosuvastatin , Atrovastatin, Simvastatin போன்ற ஸ்டரின் வகை மருந்துகள் ஒருவரது குருதியில் உள்ள கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதற்காகப் பொதுவாகக் கொடுக்கப்பட்டுகிறது. ஆனால் இந்த மருந்துகள் அதற்கு அப்பாலும் செயற்படுகின்றன. ஆவை குருதிக் குழாயில் ஏற்கனவே படிந்துள்ள கொழுப்பையும் (Atheroma) படிப்படியாகக் கரையச் செய்யக் கூடியவையாகும்.

இதைப் பலர் உணர்ந்து கொள்ளாததாலேயே தாங்களாகவே மருந்தின் அளவைக் குறைப்பது அல்லது நிறுத்துவது போன்ற தவற்றைச் செய்கிறார்கள.

ஸ்டரின் வகை மருந்துகளைத் தொடர்ந்து உபயோகித்து வரும்போது இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பு படிப்படியாக் கரைந்து வரும். இதனால் குருதிச் சுற்றோட்டம் சீரடையும்.

“சமுதயா ரீதியில் பார்க்கும்போது லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்ற முடியும். மக்கள் நீண்ட காலத்திற்கு நோயின்றி நலமாக வாழ வைக்க முடியும்”; என மருத்துவ நிபுணர்கள் கருத்துரைக்கிறார்கள்.

307_LDL1

யார் யாருக்கு மருந்து தேவை

பலவகைப்பட்டவர்கள் இதன் மூலம் பயனடைய முடியும்.

40 முதல் 75 வயது வந்தவர்களிடையே மேற்படி கல்கூலேட்டவர்கள் மூலம் கணிக்கும் போது அவர்களுக்கு அடுத்த பத்து வருட காலத்திற்குள் பக்கவாதம் மாரடைப்பு போன்றவை வருவற்கான சாத்தியம் 7.5 அல்லது அதற்கு மேல் எனில் மருந்து அவசியமாகும்.

ஏற்கனவே மாரடைப்பு வந்தவர்கள், அதற்கான பைபாஸ் சத்திரசிகிச்சை அல்லது ஸ்டென்ட் வைக்கப்பட்டவர்களுக்கும் அவசியமாகும். அத்துடன் வழமையான நாளாந்த செயற்பாடுகளின் போது இருதயத்திற்கு குருதி செல்வது போதாத நோய்களான stable or unstable angina, transient ischemic attack  உள்ளவர்களுக்கும் மிக அவசியமாகும்.

வயது குறைந்தவர்களிலும் நோய் எற்படாமல் தடுப்பதற்கு அவசியமாகும். 21 வயதிற்கு மேற்பட்ட எவருக்கும் கெட்ட கொலஸ்டரோலான LDL ன் அளவு 190 ற்கு மேற்பட்டால் statin மருந்து அவசியமாகும் என புதிய வழிகாட்டல் சொல்கிறது.

40 முதல் 75 வயதான நீரிழிவு நோயுள்ள அனைவருக்கும் Statin மருந்து அவசியம் தேவைப்படும்.

மேற்குறிப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி எதிர்காலத்தில் பாதிப்புகள் ஏற்படக் கூடும் என மருத்துவர்கள் கணிப்பீடு செய்யும் இன்னும் பலருக்கும் இந்த ஸ்டரின் மருந்துகளைக் கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்கிறார்கள்.

கெட்ட கொலஸ்டரோலான LDL ன் அளவை 50% ற்கு அதிகமாகக் குறைக்க வேண்யவர்களுக்கு Rosuvastatin 20- 40mg, Atrovastatin20- 40mg  கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. LDL ன் அளவை 30% முதல் 50% மட்டுமே குறைக்க வேண்யவர்களுக்கு Rosuvastatin 5- 10mg, Atrovastatin 10- 20mg,  Simvastatin 20- 40mg கொடுக்க வேண்டும் எனச் சிபார்சு செய்யப்பட்டிருக்கிறது. LDL ன் அளவை 30% ற்கு மட்டுமே குறைக்க வேண்யவர்களுக்கு Simvastatin 10mg  மட்டுமே போதுமானதாகும்.

ஸ்டரின் மருந்துகளை மேற் கூறிய வழிகாட்டல்களுக்கு ஏற்ப ஆரம்பித்த பின்னர் மூன்று மாத்திற்கு ஒரு முறை 6 மாதத்திற்கு ஒரு முறை எனக் குருதிப் பரிசோதனை செய்து அதற்கு ஏற்ப மருந்துகளின் அளவைக் மாற்ற வேண்டியதில்லை. முதலில் கணித்த மருந்தின் அளவைத் தொடர வேண்டும். அவ்வாறு தொடர்வதால்தான் எதிர்கால ஆபத்துக்களைத் தவிர்க்க முடியும் என்பதை இங்கு வலியுறுத்தி சொல்ல வேண்டியுள்ளது.

குருதியில் கொலஸ்டரோல் அளவு மிக அதிகமாக இருந்தால் இந்த ஸ்டரின் மருந்துகளுடன் கொலஸ்டரோலைக் குறைக்கும் Fibrates,  Niacin போன்ற வேறு பல மருந்துகளையும் மருத்துவர்கள் இதுவரை கொடுத்து வந்துளார்கள். கொலஸ்டரோல் அளவைக் குறைப்பதற்காக அவ்வாறு இரண்டாவது மூன்றாவது மருந்துகளை சேர்ப்பதால் பயனில்லை எனப் புதிய வழிகாட்டல் சொல்கிறது.

ஸ்டரின் மருந்துகள் மட்டும் எதிர்கால ஆபத்துகளைத் தடுக்க முடியுமா?

நிச்சயமாக இல்லை.

நலமான வாழ்க்கை முறை

எமது வாழ்க்கை முறை சரியானதாக இருக்க வேண்டும். நலவியல் ரீதியாக சிறந்த வாழ்க்கை முறை என்பது என்ன? ரீவி அல்லது கணனி முன் பெருமளவு நேரம் இருந்து கொண்டு நொட்டு நொறுக்குத் தீனிகளை கொறிப்பதையே இன்று பெரும்பாலானவர்கள் செய்கிறார்கள். முறையான உடல் உழைப்போ ஆரோக்கியமான உணவுப் பழக்கங்களோ பெரும்பாலனவர்களிடம் இல்லை.

நார்ப்பொருள்  அதிகமுள்ள தானியங்கள் காய்கறிகள் பழவகைகளை அதிகம் உணவில் சேர்க்க வேண்டும். கொழுப்பு வகைகள் மற்றும் பொரித்த உணவுகளைக் குறைக்க வேண்டும். மென்பானங்கள் போன்றவற்றையும் அதிகம் பாவிக்கக் கூடாது.

தினசரி உடற் பயிற்சி செய்ய வேண்டும். அல்லது உடல் உழைப்பில் ஈடுபட வேண்டும். எடையை அதிகரிக்க விடக் கூடாது.

புகைத்தலைத் தவிர்க்க வேண்டும்.

ஆம் ஆரோக்கியமான வாழ்க்கை முறைதான் நோயற்ற நீண்ட வாழ்விற்கான பலமான அத்திவாரமாகும்.

இவ்வளவும் சொல்லி முடித்த பின்னர், பேசிய களை தீர ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்தேன்.

எனது ஹாய் நலமா புளக்கில் (19th March 2015) வெளியான பதிவு

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.00.0

 

Read Full Post »

முட்டையில் இப்ப கொலஸ்டரோல் குறைவாம் உண்மையா? முட்டையும் கொலஸ்டரோல் பிரச்சனையும்

ஆனந்தத் தாண்டவம் ஆடாத குறையாக நுழைந்தார் ஒரு பெரியவர்.

Eggs-MAIN

“நல்ல செய்தி ஒண்டு பேப்பரிலை வந்திருக்கு பாத்தியளோ'” என்று கேட்டார்.

“காலையில் வேலைக்குப் போற அவசரத்திலை தலைப்புச் செய்தியளைப் பார்த்துப் போட்டு ஓடுறதுதான். ஒழுங்காப் பாக்க முடியிறதில்லை. ஏதாவது எஸ்எம்எஸ் தகவல் வந்தால்தான் தெரியும்” என்று சொல்ல வாயெடுத்தும், என்ரை வண்டவாளங்களை அவருக்கு ஏன் சொல்லுவான் என நினைத்து அடக்கிக் கொண்டேன்.’

”ஏன் என்ன விசயம்” என மட்டும் கேட்டேன்.

kids-eating

“இப்பத்தைய முட்டையளிலை கொலஸ்டரோல் குறைவாம். முந்தி நாங்கள் முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும், பொரியல் குழம்பு எண்டும் எவ்வளவு திண்டிருப்பம். கொஞ்சக்காலமா முட்டை கூடாது எண்டு டொக்டர்மார் எங்களைக் குழப்பிப் போட்டினம். இனி வாசிதான், மனிசிக்கும் முட்டை நிறையச் சமை எண்டு சொல்லிப் போட்டன்” என்றார்.

அவர் சொன்னதிலை உண்மையும் உண்டு, ஆராய வேண்டிய விடயங்களும் உண்டு.

முட்டையில் கொலஸ்டரோல்

ஓவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மி கிராம் கொலஸ்டரோல் உண்டு. அமெரிக்க அரசின் ஆதரவிலான ஆய்வு ஒன்றின்படி தற்போதைய முட்டைகளில் முன்னை நாள் முட்டைகளை விட 13 சதவிகிதம் குறைந்தளவே கொலஸ்டரோல் உள்ளது. அதேநேரம் முட்டையில் விட்டமின் டீ யின் அளவ 64 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

Egg Nutrition Facts

இதற்குக் காரணம் கோழி வளரப்பின் போது கோழி உணவாக வழங்கப்பட்ட எலும்புத் துகள்கள் இப்பொழுது கொடுக்கப்படுவதில்லை. அதற்குப் பதிலாக சோளம் கோதுமை கலந்த புரதம் கூடிய கோழித் தீவனமே உபயோகிக்கப்படுகிறது.

முட்டைகளில் கொலஸ்டரோல் அளவு குறைந்து விட்டமின் டீ யின் அளவு அதிகரித்ததால்தான் முட்டை நல்ல உணவு என பத்திரிகைகள் பேசின. விட்டமின் டீ யானது ஒஸ்டியோபொரோசிஸ் போன்ற எலும்புச் சிதைவு நோய்களைத் தடுக்க உதவும் என்பது உண்மைதான்.

குருதியில் கொலஸ்டரோல்

Anatomy-of-an-Egg

முன்னைய காலங்களில் வாரத்திற்கு இரண்டு முட்டைகள் மாத்திரம் உபயோகிக்கும்படி நீரிழிவு, கொலஸ்டரோல், பிரஷர் போன்ற நோயுள்ளவர்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட்டது. ஏற்கவே மேற்கூறிய நோய்களால் பாதிக்கப்பட்டு இருதய நோய்கள் வர வாய்ப்புள்ளவர்களுக்கு முட்டையினால் கொலஸ்ரோல் அதிகரித்தால் ஆபத்து அதிகமாகலாம் என அஞ்சியதே அதற்குக் காரணமாகும்.

அதாவது அந்த நேரத்தில் நாம் உணவில் உட்கொள்ளும் கொலஸ்டரோலே எமது குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான காரணம் என நம்பப்பட்டது.

heart_graph_020508_b

ஆயினும் பின்னர் வந்த ஆய்வுகளின் பிரகாரம் எமது உணவில் உள்ள கொலஸ்டரோலை விட நாம் அதிகளவில் உட்கொள்ளும் எண்ணெய் மற்றும் கொழுப்பு உணவுகளே குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கான பிரதான காரணம் என்பது கண்டறியப்பட்டது. அதிலும் முக்கியமாக நிரம்பிய கொழுப்பு அமிலம் உள்ள உணவுகளே காரணம் என்பது தெரிய வந்தது.

முட்டைகள் உண்ணலாமா?

எனவே “நான் தினமும் முட்டைகள் உண்ணலாமா?” என நீங்கள் கேள்வி கேட்டால் எனது விடை ‘ஆம்’ என்றே இருக்கும்.

ஆனால் “முட்டையை எவ்வாறு உட்கொள்ளப் போகிறீர்கள்” என்பது எனது குறுக்குக் கேள்வியாக இருக்கும்.

EggDone2 (1)

எண்ணெயில் பொரித்த முட்டைகளும், நிறைய வெண்ணெய் போட்டுத் தயாரித்த ஒம்லெட்டும் எனில் ஆகாது எனலாம். பொரிப்பதற்கும் வதக்குவதற்கும் நீங்கள் சேர்க்கும் எண்ணெய்களும், பட்டர், மாஜரீன் போன்றவற்றில் கொழுப்பு அதிகம் உண்டு. அவை உங்கள் கொலஸ்டரோலை அதிகரிக்கும்.

அதற்குப் பதிலாக முட்டையை அவித்துச் சாப்பிடலாம். கறி சமைத்துச் சாப்பிடலாம். எண்ணெயின்றி வறுத்தும் உண்ணலாம்.

eggs-in-shell1

“‘அவ்வாறு கொலஸ்டரோலை அதிகரிக்காது என்றால் வகை தொகையின்றி எவ்வளவு முட்டைகளும் சாப்பிடலாமா?”

சமபல உணவு

எவ்வளவும் சாப்பிடலாமா என்பது பகுத்தறிவு இல்லாதவன் மட்டுமே கேட்கக் கூடிய கேள்வியாகும்.

ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வேண்டுமாயின் போசாக்குள்ள உணவுகளை உண்ண வேண்டும். அந்த உணவானது சமபல அளவுள்ளதாக டியடயnஉநன னநைவ  இருக்க வேண்டும். சமபல உணவில் மாப்பொருள், புரதம், கொழுப்பு, விற்றமின்கள், தாதுப்பொருட்கள் என யாவும் அடங்க வேண்டும். அதனைக் குலைக்காமல் உண்ணலாம்.

egg_protein_chart

முட்டையில் சுமார் 7 கிராம் அளவில் உயர்தரப் புரதம் இருக்கிறது. இதனையொத்த சிறந்த புரதம் பாலில் மட்டுமே இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

முட்டையில் கலோரி மிகக் குறைவு 75 கலோரி மட்டுமே. 5 கிராமளவு கொழுப்பு இவற்றுடன் விற்றமின் ஏ, அயடின், கரோடினொயிட்ஸ் போன்ற போசாக்குகள் உள்ளன. இவற்றுடன் lutein, zeaxanthin போன்றவையும் உண்டு. இவை நோயதிர்புச் சக்தியும் உடையவை.

எனவே நல்ல போசாக்குள்ள உணவு. தினமும் சாப்பிடலாம்

பிரித்தானியாவில் ஒருவர் சராசரியாக வாரத்திற்கு 3 முட்டைகளே உட்கொள்கிறார்களாம். ஆயினும் அவர்களில் கொலஸ்டரோல் பிரச்சனை அதிகமாக இருப்பதற்கு காரணம் கொழுப்புள்ள ஏனைய உணவுகளேயாகும். முக்கியமாக கொழுப்புள்ள இறைச்சி வகைகள், பாலும் பாற் பொருட்களும், அவசர உணவுகளும் நொறுக்குத் தீனிகளும்தான்.

அவர்களைப் பொறுத்தவரையில் சீஸ், பட்டர், ஆடைநீக்காத பால், சொசேஜஸ், கேக், பிஸ்கற், பேஸ்ரி, கொழுப்பு நீக்காத இறைச்சியும் காரணமாகின்றன.

நாங்களும் அவற்றையெல்லாம் இப்பொழுது அமோகமாக உண்ணத் தொடங்கிவிட்டோம். சத்துடன் எங்களுக்கே விசேடமான வடை, முறுக்கு, மிக்ஸர், பகோடா, பற்றிஸ், ரோல்ஸ், சமோசா என அடுக்கிக் கொண்டே போகலாம். நொட்டைத் தீனீ, நொறுக்குத் தீனீ, அவசர உணவு, குப்பை உணவு என எவ்வாறு பெயர் சொன்னாலும் இவை யாவுமே கொழுப்பு அதிகமுள்ள உணவுகள்தான். இவையேதான் இப்பொழுது இங்கு எடை அதிகரிப்பதற்கும், நீரிழிவு பெருகுவதற்கும், மாரடைப்புகள் மலிந்ததற்கும் காரணமாகிவிட்டன.

கொலஸ்டரோல் அதிகரிப்பையும் மாரடைப்பையும் பற்றிய கவலை உங்களுக்கு இருந்தால் நீங்கள் கட்டுப்படுத்த வேண்டியது முட்டையை மட்டும் அல்ல. மேற் கூறிய கொழுப்பு உணவுகளே முக்கியம் என்பதை மறந்து விடாதீர்;கள்.

முட்டையால் வேறு ஆபத்துக்கள்

கொலஸ்டரோலைத் தவிர வேறு முக்கிய ஆபத்தானது முட்டையால் உணவு நஞ்சாதல் ஆகும்.

எவ்வளவும் சாப்பிடலாம் என ஆனந்தத்தோடு வந்தவர் தனது இளமைக் காலத்தில் தனது வீட்டுக் கோழி இட்ட முட்டைகளை சாப்பிட்டிருப்பார். அவற்றில் கிருமி தொற்றுவது குறைவு. இன்று கோழிகள் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. எதாவது கிருமித்தொற்று ஏற்பட்டால் அது பல கோழிகளுக்கும் பரவியிருக்கும். அந்தப் பண்ணையிலிருந்து வரும் முட்டைகளில் கிருமி தொற்றியிருக்கலாம். பொதுவாக salmonella bacteria தொற்று ஏற்படுகிறது.

“முட்டைக் கோப்பி எண்டும், அரை அவியலெண்டும்” அவர் அந்தக் காலத்தில் சாப்பிட்டது இந்தக் காலதிற்கு சரிவராது. கோப்பி அரை அவியல் சூடானது முட்டையில் உள்ள கிருமிகளைக் கொல்வற்குப் போதுமானதல்ல.

எனவே முட்டைக் கோப்பி அரை அவியல் போன்றவை வேண்டாம்.

இறுதியாக

ஒவ்வொரு முட்டையிலும் சுமார் 225 மிகிராம் உள்ளது. ஆனால் நாம் தினசரி 300 மிகிராம் அளவு கொலஸ்டரோலை மட்டுமே உணவில் இருந்து பெற வேண்டும் என அமெரிக்க இருதயச் சங்கம் பல வருடங்களுக்கு முன்னரே அறிவித்துள்ளது. அதில் எந்த மாற்றத்தையும் மீள அறிவித்ததாகத் தகவல் இல்லை. எனவே ஆரோக்கியமான ஒருவர் நாளாந்தம் ஒரு முட்டை சாப்பிடுவதில் தவறில்லை என்றே சொல்லக் கூடியதாக இருக்கிறது.

இருந்தாலும் கொலஸ்டரோல் குருதியில் அதிகமாக உள்ளவர்களும் மாரடைப்பு வந்தவர்களும் அது வருவதற்கான வாய்ப்பு உள்ளவர்களும் தமது கொலஸ்டரோல் அளவுக்கு ஏற்ப மருத்துவ ஆலோசனையுடன் வாரத்திற்கு எத்தனை முட்டை எனத் தீர்மானிப்பது நல்லது.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »

‘எனக்கு கொலஸ்டரோல் அதிகம் என மருத்துவர் சொல்கிறார்’ என்று சொல்லும்போதே அவர் முகத்தில் பெருமிதம் கண்சிமிட்டி மறைந்தது போல எனக்குப் பட்டது. ஆம் சிலருக்கு அது சமூக அந்தஸ்தின் சின்னம் போலாகிவிட்டது. மாரடைப்பு பக்கவாதம் போன்றவை பின்னர் அதன் காரணமாக விளையும்போதுதான் அதன் பாதிப்பு அவர்களுக்குப் புரியும்.

cholesterol

ஆனால் இப்பொழுதெல்லாம் யாரைப் பார்த்தாலும் கொலஸ்டரோல் பிரச்சனை என்கிறார்கள். கோயில் ஐயர் முதல் கசாப்புக் கடைக்காரன் வரை எல்லோரையும் பீடிக்கவே செய்கிறது. சொகுசு வாழ்க்கையும் தவறான உணவு முறைகளுமே முக்கிய காரணம் என்றபோதும் பரம்பரைக் காரணிகளும் இல்லாமலில்லை.

அது சரி! கொலஸ்டரோல் அதிகரித்தால் நோய், சரியான பிரச்சனையாகும், உணவுகட்டுப்பாடு, உடற் பயிற்சி, மருந்துகள் நாளாந்தம் அவசியமாகும்.

அதேபோல கொலஸ்டரோல் குறையும் பிரச்சனையும் இருக்கிறதா? அது நோயா? மருந்துகள் தேவைப்படுமா?

மருந்துகளால் கொலஸ்டரோல் அளவு குறைதல்

‘என்ரை கொலஸ்டரோல் குறைஞ்சு போச்சு மருந்தை நிப்பாட்டிப் போட்டன்’ எனக் கையில் ரிப்போட்டும் முகத்தில் ஆனந்த தாண்டவமுமாக பலர் வருவார்கள். கொலஸ்டரோலுக்கு மருந்து எடுக்கும் நோயாளிகள் அவர்கள். ஆனால் அவ்வாறு நிறுத்துவது தவறு.

lower-cholesterol

கொலஸ்டரோலைக் குறைக்க வேண்டும் என்பதற்காகவே மருந்து தருகிறார்கள். குருதியில் கொலஸ்டரோல் அளவு குறைவதுதான் இருதய மற்றும் குருதிக் குழாய் நோய்களைத் தடுப்பதற்கான வழியாகும்.

மருந்து சாப்பிடுவதால் கொலஸ்டரோல் அளவில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப மருந்தின் அளவைக் குறைப்பதோ கூட்டுவதோ மருத்துவரின் வேலை. எனவே கொலஸ்டரோல் அளவு குருதியில் குறைஞ்சாலும் நீங்களாக நிறுத்த வேண்டாம். மருத்துவரின் எண்ணப்படி நடவுங்கள்.

மருந்து இல்லாமலும் கொலஸ்டரோல் குறைதல்

மருந்து இல்லாமலும் குருதியில் கொலஸ்டரோல் அளவு குறையுமா?

குறையலாம்!.

குருதியில் கொலஸ்டரோல் அளவு மிகவும் குறைவதை Hypolipidemia என்பார்கள். சாதாரண பாசையில் லோ கொலஸ்டரோல்(Low Cholesterol) என்பார்கள்.

Medicines

ஆனால் அடிக்கடி காணப்படும் பிரச்சனை அல்ல என்பதையும் குறிப்பிட வேண்டும்.

இரண்டு வகைகள்

மருந்துகள் இல்லாமலே குருதியில் கொலஸ்டரோல் குறைவது இரண்டு விதங்களிலாகும்.

  1. சிலருக்கு இயல்பாகவே குருதியில் கொலஸ்டரோல் குறைவாக இருக்கும். வேறு நோய்களோ அல்லது மருந்துகளோ காரணமாக இருக்காது. அதற்குக் காரணம் அவரது குடும்பத்தினரிடையே அது பொதுவாக இருப்பதாகும். பரம்பரையில் அவ்வாறிருந்தால் சிகிச்சை எதுவும் தேவைப்படாது.
  2. வேறு பல நோய்கள் காரணமாகவும் சிலரது கொலஸ்டரோல் அளவு குறைவதுண்டு.

காரணங்கள் எவை?

தைரொயிட் சுரப்பி அதீதமாக வேலை செய்தால் (hyperthyroidism) தைரொக்சின் அளவு குருதியில் அதிகரித்திருக்கும். இது கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும். இதற்கு மாறாக தைரொக்சின் அளவு குருதியில் குறைந்திருந்தால் (hypothyroidism) கொலஸ்டரோல் அளவு அதிகரிக்கும்.

Hypolipideamia Causes-001

அதேபோல சில ஈரல் நோய்களும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவைக் குறைக்கும்.

குருதியில் தாதுப்பொருளான மக்னீசியத்தின் அளவு குறைவதாலும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.
பல்வேறு நோய்கள் உடலைத் தாக்கும்போது பசி குறைவதுண்டு.

அந்நிலையில்; அவரால் போதியளவு போசாக்கான உணவுகளை உண்ண முடியாத நிலை ஏற்படும். அதன் காரணமாகவும் இரத்தத்தில் கொலஸ்டரோல் அளவு குறையலாம்.

உதாரணமாகப் புற்றுநோய்கள் அதிலும் முக்கியமாக உணவுக் கால்வாயோடு தொடர்புடைய புற்றுநோய்கள் பசியைக் கடுமையாகக் குறைக்கும். அதேபோல சுவாசப் பையோடு தொடர்புடைய நோய்களும் ஹெப்பரைரிஸ் போன்ற நோய்களும் பசியைக் குறைக்கும்.

பலவிதமான தொற்று நோய்கள் பசியைக் குறைக்குமானாலும் அவை குறுகிய காலம் மட்டுமே நீடிக்கும் என்பதால் கொலஸ்டரோலைக் குறைக்கும் என எதிர்பாரக்க முடியாது. T.B எனப்படும் சயரோக நோயும் பசியை அதிகம் குறைக்கின்ற மற்றொரு நோயாகும்.

பசி குறைவு என்றவுடன் ‘எனக்கும் பசி குறைவுதான்’ என்கிறீர்களா. சாதாரண பசிக் குறைவைச் சொல்லவில்லை. அதீதமான பசிகுறைவு. வழமைபோல உணவு உட்கொள்ள முடியாது எடை குறைந்து உடல் நலியும் நிலையில் அவ்வாறு கொலஸ்டரோல் குறையும்.

இவற்றைத் தவிர மனவிரக்தி, பதகளிப்பு நோய், பக்கவாதம், பிறவி அங்கயீனக் குறைபாடுகள் உள்ளோருக்கும் போசாக்குக் குறைபாட்டால் கொலஸ்டரோல் குறைவதுண்டு.

மது மற்றும் ஏனைய போதைப் பொருட்களும் பொதுவாக உணவில் நாட்டமின்மையைக் கொண்டுவரும். புகைத்தலும் அவ்வாறே செய்கிறது.

அறிகுறிகள்

எந்த அறிகுறிகளையும் வைத்து இவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறதா என ஐயமுற முடியாது. தற்செயலாகவே கண்டறியப்படுகிறது. வழமையான இரத்தப் பரிசோதனைகள் செய்யும்போதே தெரியவரும். அதாவது கொலஸ்டரோல் இருக்கிறதா எனப் பரிசோதனை (Lipid Profile) செய்யும்போது கண்டறியப்படுகிறது.

சிகிச்சை

குறைந்த கொலஸ்டரோலை அதிகரிப்பதற்கென தனியான மருந்து மாத்திரைகளோ சிகிச்சை முறைகளோ கிடையாது. அது ஏன் ஏற்பட்டது என அடிப்படைக் காரணத்தைக் கண்டறிந்து அதைச் சரிசெய்வதே சிகிச்சை முறையாகும்.

இருக்க வேண்டிய அளவு

cholesterol-8

நீங்கள் கொலஸ்டரோலுக்கு மருந்து சாப்பிடுபவராயின் உங்களது கொலஸ்டரோல் அளவுகள் எந்தளவில் இருக்க வேண்டும். கீழே உள்ள பட்டியலைப் பாருங்கள்

  • முழுமையான கொலஸ்டரோல்    200 ற்கு குறைவாக
  •  LDLகொலஸ்டரோல்    130 ற்கு குறைவாக, நீரிழிவு மற்றும் இருதய நோய் வர வாய்ப்பு உள்ளவர்களுக்கு        100 ற்கு குறைவாக
  • HDL கொலஸ்டரோல்   ஆண்களில் 40 பெண்களில் 50 ற்கு மேல்
  • ரைகிளிசரைட் 150 ற்கு குறைவாக
DR.M.K.முருகானந்தன்
M.B.B.S(Cey), D.F.M(SL), F.C.G.P(SL)
குடும்ப வைத்திய நிபுணர்

0.00.0.00.0

Read Full Post »

Resistin என்ற தடுப்பான்
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு புதிய காரணி கண்டு பிடிப்பு

தொற்றுதல் இல்லாமல் மனிதர்களுக்கு அதிகமாக மரணத்தைக் கொண்டு வரும் உயிர்கொல்லிப் பிரச்சனைகளாக இருப்பன மாரடைப்பு, பக்கவாதம், சுவாச நோய்கள், புற்றுநோய்கள் போன்றவையாகும்.

ncd_treeஅவை வருவதற்குக் காரணங்கள் என்ன?

வற்றாத சுனைகளாக என்றும் மனித உடல்களில் ஊற்றெடுத்துக் கொண்டிருக்கும் அடிப்படை மருத்துவச் சிக்கல்கள் சிலதான் காரணமாகின்றன. நீழிழிவு, உயர் இரத்த அழுத்தம், கொலஸ்டரோல் அதீத எடை ஆகியவற்றைச் சொல்லலாம்.

இவற்றில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு காரணங்கள் என்ன?
கொழுப்புச் சாப்பாடுகளும் உடலுழைப்பற்ற வாழ்க்கை முறையும்தான் என எல்லோரும் சொல்கிறார்கள். உண்மைதான். ஆனால் அதற்கு மேலும் ஏதாவது அடிப்படைக் காரணம் உண்டா?

ரெசிஸ்டின் எனும் புதிய காரணி

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு அதிலும் முக்கியமாக கெட்ட கொலஸ்டரோல் எனப்படும் (low-density lipoprotein or LDL) அதிகரிப்பதற்கு எமது உடலுள் கொழுப்புக் கலங்களால் சுரக்கப்படும் ரெசிஸ்டின் (resistin) என்ற புரதம்தான் காரணமாகிறது என கனடிய விஞ்ஞானிகள் சிலர் தமது ஆய்வுகளின் அடிப்படையில் கூறுகிறார்கள்.

ஆனால் ரெசிஸ்டின் என்ற இப் புரதம் இப்பொழுதுதான் புதிதாகக் கண்டுபிடிக்கபட்டதல்ல. 2001ம் ஆண்டு பெனிசில்வேனியா பல்கலைக் கழகத்தைச் சார்ந்த Dr Mitchell A Lazarதலைமையிலான குழுவினரே முதன் முதலாகக் கண்டு பிடித்தனர்.
அப்புரதத்திற்கு ரெசிஸ்டின் என்ற பெயரை ஏன் ஆரம்பத்தில் வைத்தார்கள்?

காரணம் சுவார்ஸமானது.

Resist என்றால் தமிழில் தடை அல்லது எதிர்ப்பு எனப் பொருள்படும். எனவே Resistin என்றால் தடுப்பான் எனச் சொல்லலாம் அல்லவா? சுண்டெலிகளுக்கு இந்த ஊசியை ஏற்றியபோது அவற்றின் உடலில் இன்சுலினிற்கு எதிராக (insulin resistance) இது இயங்கியமை கண்டறியப்பட்டது. அதாவது நீரிழிவைக் கொண்டுவரக் கூடியது என்பதாகும்.

உடலிலுள்ள கொழுப்பு பகுதிகளிலேயே ரெசிஸ்டின் உற்பத்தியாகி நேரடியாக குருதியில் வெளியேறுகிறது. எனவே நாளமில்லாச் சுரப்பு நீர் எனலாம். எலி, சுண்டெலி, மனிதன் ஆகியவற்றில் ரெசிஸ்டினானது அதீத எடையுடன் தொடர்புடையது என்பதை ஆய்வாளர்கள் ஏற்கனவே கண்டுபிடித்துள்ளார்கள்.

எவ்வாறு செயற்படுகிறது

resistinஇந்த ரெசிஸ்டின் எவ்வாறு குருதியில் கொலஸ்டரோல் அளவைக் கூட்டுகிறது என்பது பற்றி அவர்கள் என்ன சொல்கிறார்கள்?
முக்கியமாக ஈரலின் செயற்பாட்டில் ரெசிஸ்டின் இடையூறு செய்கிறதாம்.

  • கெட்ட கொலஸ்ரோலான LDL லை அதிகளவு உற்பத்தி செய்ய ஈரல் கலங்களை இது தூண்டுகிறது.
  • அதே நேரம் கொலஸ்டரோலை உணரும் திறனைக் கொண்ட ஈரல் கரங்களின் செயலாற்றலைக் குறைக்கிறது. இதனால் ஈரலானது கொலஸ்ரோலை உடலிலிருந்து அகற்றுவது குறைவடைகிறது

எனவே இரத்தக் குழாய்களில் LDL கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு இந்த ரெசிஸ்டின் தான் காரணமாகிறது எனலாம்.

cor_atheஇரத்தத்தில் கொலஸ்டரோல் அதிகரித்தால் அது நாளங்களின் உட்பகுதியில் படிவுகளாக (Atherosclerosis) உறையும். இவ்வாறு படிவதால் இரத்தக் குழாய்களின் உட்சுற்றளவு குறுகும். இதனால் உடலின் முக்கிய உறுப்புகளுக்கு தேவையான இரத்தம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும்.

இருதயத்திற்கு இரத்தம் செல்வது குறைந்தால் மாரடைப்பு வரும். மூளையின் பகுதிகளுக்கு செல்வது குறைந்து அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம் எனப்படும்

Stroke வரும். ஓட்டுமொத்தமாகப் பார்க்கும்போது இருதய மற்றும் மூளை நோய்கள் ஏற்படுவதற்கு இவை இணைந்து வழி கோலுகின்றன. கண், சிறுநீரகம் போன்ற ஏனைய பல உறுப்புகளிலும் பாதிப்பு ஏற்படவே செய்யும்.
மருந்துகளின் செயற்பாட்டையும் பாதிக்கிறது

மற்றொரு முக்கிய விடயத்தையும் அவர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள்.

கொலஸ்டரோல் உள்ளவர்களுக்கு பொதுவாக Atrovastatin, Simvastatin, Rosuvastatin போன்ற Statin மருந்துகளையே உலகளாவிய ரீதியில் மருத்துவர்கள் சிபார்சு செய்கிறார்கள். ஆனால் LDL கொலஸ்டரோலைக் குறைப்பதற்கு ஸ்டற்டின் மருந்துகள் அவர்களில் 40%  ஆனவர்களுக்கு பயன்படவில்லை என்கிறார்

McMaster University யின் மருத்துவ துறை சார்ந்த பேராசிரியர்

Dr. Shirya Rashid. இதற்குக் காரணம் அவர்களது குருதியில்  ரெசிஸ்டின் அளவு அதிகமாயிருப்பதை தங்கள் ஆய்வு சுட்டிக் காட்டுவதாக அவர் சொல்கிறார்.

புதிய மருந்துகளை கண்டு பிடிக்க வேண்டும்

சரி அப்படியானால் இந்த ஆய்வுகளின் முடிவானது கொலஸ்டரோல் பிரச்சனையில் மருத்துவர்களையும் நோயாளிகளையும் எங்கு இட்டுச் செல்கிறது.

குருதியில் அதிகரித்த LDL கொலஸ்டரோல் அளவிற்கு இந்த ரெசிஸ்டின் காரணமாகிறது. எனவே இந்த ஆய்வானது புதிய மருந்துகளுக்கான தேடலை ஆரம்பித்திருக்க்pறது. குருதியில் ரெசிஸ்டினைக் குறைப்பதற்கான மருந்துகளை அறிமுகப்படுத்துவதன் மூலம் LDL கொலஸ்டரோலைக் குறைக்கலாம். பக்கவாதம் மாரடைப்பு ஆகியன ஏற்படுதற்கான சாத்தியத்தை அதனால் குறைக்கும் என நம்பலாம்.

indexஇது கனடாவில் செய்யப்பட்ட ஆய்வு. ஆனால் எமக்கும் பொருத்தமானது ஏனெனில் இங்கும் தொற்றா நோய்களால் நாளாந்தம் 350 பேர் இறப்பதாக சுகாதாரத் திணைக்களம் அறிவித்திருக்கிறது. உலகளாவிய ரீதியில் தொற்றா நோய்களால் இறப்பவர் தொகை 36 million அல்லது 63% என WHO 2008 ல் அறிவித்தது.

இருந்தபோதும் இவற்றைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான வாழ்க்கை முறைகளும், சீரான உணவு முறைகளும் உடல் உழைப்பும் அவசியமானவை என்பதற்கே முதலிடம் என்பதையும் குறிப்பிட்டே ஆக வேண்டும்.

rist-factor-doe-hear-disease1புதிய மருந்துகள் எப்போ வரும் எனக் காத்துக் கொண்டிருக்காமல் எமது வாழ்க்கை முறையை நெறிப்படுத்துவோம்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்
எனது ஹாய் நலமா புளக்கில் ஏற்கனவே வெளியான கட்டுரை. இங்கு மீள் பதிவாகிறது

Read Full Post »

>

ஒருவருக்கு கொலஸ்டரோல் இருக்கிறது என்பது தெரிந்ததும் அவர் கேட்கும் முதற் கேள்வி என்ன சாப்பிடலாம் என்பதுதான். உண்மைதான் உணவுமுறைக்கும் கொலஸ்டரோலுக்கும் தொடர்பு இருக்கிறதுதான்.

ஆனால் உணவு மட்டும் காரணம் அல்ல.

உங்களது இரத்தத்தில் உள்ள கொலஸ்டலோலுக்கும் உங்கள் உணவிலுள்ள கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு என்ன?

தங்களது உணவிலுள்ள  கொலஸ்டரோல்தான் தங்கள் இரத்தத்தில் பிரதிபலிக்கிறது எனப் பலரும் தவறாகக் கருதுகிறார்கள். உண்மையில் இரண்டிற்கும் இடையே தொடர்பு மிகக் குறைவே. உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோல் அப்படியே உங்கள் இரத்த கொலஸ்டரோலாக மாறுகிறது என்றில்லை.

ஒருவரது இரத்த கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு அவரது

  • சகலவிதமான உணவு முறைகளும்,
  • பரம்பரைக் காரணங்களும், 
  • வாழ்க்கை முறைகளும் காரணமாகின்றன.

உண்மையில் உங்கள் உணவில் உள்ள கொலஸ்டரோலுக்கும் உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கும் உள்ள தொடர்பு மிகக் குறைவே. தாவர உணவுகளில் கொலஸ்டரோல் அறவே கிடையாது.

ஆனால் நாம் உண்ணும் நிரம்பிய கொழுப்பிலிருந்து (Saturated fatty acids) எமது உடலே கொலஸ்டரோலை உருவாக்கிக் கொள்கிறது.

இதனால்தான் தமது உணவில் மிகச் சிறிய அளவு கூட கொலஸ்டரோலை உட்கொள்ளாத முழுமையான தாவர உணவாளர்களுக்கும் கூட இரத்த கொலஸ்டரோல் பிரச்சினையும், இருதய நோய்களும் வரச் செய்கின்றன.

மறுதலையாகப் பார்க்கும்போது தாய்வான், ஐப்பான், பிரான்ஸ், மெக்ஸிகோ, ஸ்பெயின் போன்ற நாடுகளில் வாழ்பவர்கள் தமது உணவில் அதிகளவு முட்டையையும், வேறு அதிக கொலஸ்டரோல் உணவுகளையும் உட்கொண்டு வந்த போதும் அவர்களுக்கு இருதய நோய்கள் வருவது குறைவாக இருக்கிறது. அதாவது முழுமையான தாவர உணவாளர்களைவிடவும் பாலுணவும் சேர்த்து எடுக்கும் தாவர உணவாளர்களை விடவும் குறைவாக இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

இப்படிக் கூறுவதின் அர்த்தம் “கொலஸ்டரோல் அதிகமுள்ள உணவுகளை வேண்டியளவு உண்ணுங்கள், உங்கள் இரத்த கொலஸ்டரோலுக்கு எதுவும் நடக்காது” என்பதல்ல. உங்கள் இரத்த கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பதற்கு உணவைத் தவிர வேறு பல காரணங்களும் இருக்கின்றன, அவற்றையும் கவனித்தல் அவசியம் என்பதை உணர்த்துவதற்கே ஆகும்.

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (Triglyceride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.
இவற்றின் அதிகரிப்பிற்கு

  • உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75% மும், 
  • உணவு சார்ந்த காரணிகள் 25% ஆகும். 

ஆனால் தனி ஒரு அலகாகப் பார்க்கும்போது ஏனைய எந்த ஒரு அலகும் உணவு சார்ந்த காரணிகளான 25%யை எட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளாவன

1. பரம்பரை 15%
2 அதிகரித்த எடை 12%
3 ஹோர்மோன்களும், நொதியங்களும் 8%
4 உயர் இரத்த அழுத்தம் 8%
5 அதிக மது பாவனை 2%
6 மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8மூ
7 நீரிழிவு 7%
8 உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6%
9 புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6%
10 பால், வயது, மருந்துகள், ஏனைய காரணிகள் 5%

இவற்றில் சில உங்களால் கட்டுப்படுத்தக் கூடியவை. பரம்பரை, பால், வயது, ஹோர்மோன்களும், நொதியங்களும் போன்ற ஏனையவை உங்கள் கட்டுப்பட்டிற்கு அப்பாற்பட்டவை.

கொலஸ்டரோல் பற்றிய எனது ஏனைய பதிவுகள்

கட்டுப்படுத்தக் கூடிய அலகுகளான

  • எடை, 
  • பிரஸர், 
  • மதுபாவனை, 
  • நீரிழிவு, 
  • புகைத்தல், 
  • மனப்பழுவும், 
  • உணர்ச்சி நிலைகள் 

போன்றவற்றை நல்ல நிலையில் பேணுவதுடன் ஆரோக்கியமான உணவை உண்பதும் உங்கள் கொலஸ்டரோலை கட்டுப்படுத்தும். அதனால் மாரடைப்பு பக்கவாதம் போன்றவற்றிலிருந்து காப்பாற்ற உதவும்.

“கொலஸ்டரோல் கட்டுப்படுத்துவது எப்படி“ என்ற  எனது மருத்துவக் கைநூலிலிருந்து.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>

அவருக்கு மிகுந்த அதிர்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருந்தது நான் சொன்னதைக் கேட்டு. ஆனால் நானாக எதுவும் சொல்லவில்லை. அவர் தந்த இரத்தப் பரிசோதனை ரிப்போட்டுகளை வைத்துத்தான் கருத்துச் சொன்னேன்.

“உங்களுக்கு கொலஸ்டரோல் அதிகமாக இருக்கு” இதுதான் நான் சொன்னது.

அவர் ஆச்சரியப்பட்டதிலும் நியாயம் இருக்கிறது.

அவர் தனது உணவு முறைகளில் மிகுந்த அக்கறை உள்ளவர். அத்துடன் ஒரு வெஜிடேரியன். கொழுப்புள்ள உணவுகளைத் தவிர்த்து காய்கறிகளையும் பழங்களையும் அதிகம் சாப்பிடுபவர். தினசரி நடைப்பயிற்சி செய்வதாகவும் சொன்னார்.

“அம்மாவிற்கு கொலஸ்டரோல் இருந்து, ஹார்ட் அட்டக் வந்து இறந்தபடியால் நான் வலு கவனமாக இருந்தனான். இருந்தும் எனக்குக் கொலஸ்டரோல் வந்து விட்டதே” எனக் கவலைப்பட்டார்.

“நீங்கள் இவ்வளவு கவனமாக இருந்தபடியால்தான் உங்களுக்கு 45 வயதுவரை கொலஸ்டரோல் பிரச்சனை வராமல் தப்பியிருக்கிறீர்கள்.” என்றேன் நான்.

உண்மையில் மாரடைப்பிலிருந்தும் தப்பியிருக்கிறார். தனது ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தொடர்ந்தும் கடைப்பிடித்தால் எதிர்காலத்திலும் தப்பிவிடுவார்.

உணவுமுறை மட்டுமே காரணமல்ல

ஒருவரது கொலஸ்டரோல் வகைளில் முக்கியமானது கெட்ட கொலஸ்டரோல் என்று சொல்லப்படும் LDL கொலஸ்டரோலும், ரைகிளிசரைட் (triglygeride) கொலஸ்டரோல் ஆகிய இரண்டுமாகும்.

  • இவை அதிகரிப்பிற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகள் 75 சதவிகிதமாக இருக்கின்றன. 
  • ஆனால் உணவு சார்ந்த காரணிகள் 25 சதவிகிதம் மட்டுமே.
ஏனைய காரணிகள்

குருதியில் கொலஸ்டரோல் அதிகரிப்பதற்கு உணவு தவிர்ந்த ஏனைய காரணிகளின் பங்களிப்பு பின்வருமாறு இருக்கிறது.

  1. பரம்பரை அம்சங்கள் 15 சதவிகிதம்,
  2. அதிகரித்த எடை 12 சதவிகிதம்,
  3. ஹோர்மோன்களும் நொதியங்களும் 8 சதவிகிதம்,
  4. உயர் இரத்த அழுத்தம் 8 சதவிகிதம்,
  5. அதிக மது பாவனை 2 சதவிகிதம்,
  6. மனப்பழுவும், உணர்ச்சி நிலைகள், சமூக பொருளாதார நிலையும் 8 சதவிகிதம்,
  7. நீரிழிவு 7 சதவிகிதம்,
  8. உடலுழைப்பற்ற வாழ்க்கை முறை 6 சதவிகிதம்,
  9. புகைத்தலும், சூழல் மாசுக்களும் 6 சதவிகிதம்,
  10. ஆணா பெண்ணா என்பது, வயது அதிகரிப்பு, சிலவகை மருந்துகள், போன்றஏனைய பல காரணிகள் 5 சதவிகிதம்

எனச் சொல்லப்படுகிறது.

பரம்பரை அம்சத்தின் பங்கு

இவற்றில் மிக உயர்ந்த அளவான 25 சதவிகிதத்தைக் கொண்டிருப்பது உணவுமுறைகளே. எனவே எமது குருதியில் கொலஸ்டரோல் அளவு அதிகரிப்பிற்கு மிக முக்கிய காரணம் தவறான உணவுமுறைகள்தான் என்பதில் ஐயமில்லை.

ஆனால் அதற்கு அடுத்து இருப்பது பரம்பரை அம்சங்களாகும். இது 15 சதவிகிதம் வரை கொலஸ்டரோல் அதிகரிப்பிற்குக் காரணமாக இருக்கிறது.

மேற் கூறிய நோயாளி எவ்வளவு கவனமாக இருந்தும் கொலஸ்டரோல் அதிகரித்ததற்குக் காரணம் அவரது தாயாருக்கும் கொலஸ்டரோல் இருந்ததாகக் கொள்ளலாம்.

கொலஸ்டரோல் அதிகரிப்பிற்கு மாத்திரமின்றி நீரழிவு, பிரஸர், மாரடைப்பு, ஒஸ்டியோபொரோசிஸ், சில வகை புற்றுநோய்கள் போன்ற பல்வேறு நோய்களுக்கும் பரம்பரை அம்சங்கள் காரணமாகின்றன.

ஒருவரது தாய், தகப்பன், சகோதரங்கள் போன்ற நெருங்கிய உறவினர்களில் அவ்வாறான நோய்கள் இருந்தால் இவர்களுக்கும் வருவதற்கான சாத்தியம் அதிகமாகும். 

மருந்துகளை நிறுத்தல்

மற்றொருவருக்கும் கொலஸ்டரோல் இருந்தது. மருந்துகள் சாப்பிட்டார். மூன்று மாதங்களுக்குப் பின்னர் கொலஸ்டரோல் ரிப்போட்டுடன் வந்தார்.

“உங்கள் கொலஸ்டரோல் அளவு சாதாரண நிலைக்கு வந்துவிட்டது” என்றேன்.

முகத்தில் ஆனந்தம் தாண்டவமாடியது. “அப்ப மருந்தை நிப்பாட்டலாம்தானே” எனக் கேட்டார்.

  • “உணவு முறைகளைச் சரியாகக் கடைப்பிடித்துடன், உங்களால் கட்டுப்படுத்தக் கூடிய ஏனைய வாழ்க்கை முறைகளான 
  • தினசரி உடற் பயிற்சி, 
  • நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போலன்றி உடல் உழைப்புடன் கூடிய வாழ்க்கை, 
  • மது புகைத்தல் ஆகியவற்றை நிறுத்தல், 
  • நீரிழிவு பிரஸர் போன்றவற்றைக் கட்டுப்படுத்தல், 
  • மனஅமைதியான வாழ்க்கை முறை 

என வாழ்ந்தால் கொலஸ்டரோல் தானே குறைவதற்கான சாத்தியம் உள்ளது. ஆனால் அது முக்கியமாக ஆரம்ப நிலையில் மாத்திரமே சாத்தியமாகும்.

ஆனால் உங்கள் வயதையோ, நீங்கள் ஆணா பெண்ணா என்பதையோ மாற்ற முடியுமா? அதேபோல உடலிலுள்ள ஹோர்மோன்களையும் நொதியங்களையும் உங்களால் மாற்ற முடியாது.

வேறு நோய்களுக்கான எல்லா மருந்துகளையும் நிறுத்த முடியுமா? அவ்வாறு செய்தால் கொலஸ்டரோலை மருந்துகள் இன்றிக் குறைக்க வாய்ப்பு உள்ளது.” என்ற விளக்கத்தை அளித்தேன்.

“ஒரு ஆணைப் பெண்ணாக மாற்றுவதைத் தவிர வேறு எதையும் செய்யக் கூடிய அதிகாரம் எனக்கு இருக்கிறது.” இவ்வாறு கூறியவர் மறைந்த ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா.

ஆனால் அவராலும் அவரது வயதையோ, முதுமையையோ, மரணத்தையோ மாற்ற முடியவில்லை. இவற்றுடன் பரம்பரை அம்சங்களையும், குடும்பக் குணாதிசியங்களையும், கொலஸ்டரோலையும் இணைத்துக் கொள்ளலாம்.

தொடர்ந்த இரத்தப் பரிசோதனைகளும் மருத்துவ ஆலோசனையும்

இவை முடியாது என்பதால் கொலஸ்டரோல் மாத்திரைகளைத் தொடர்ந்து உபயோகிக்க வேண்டும். ஆனால் மருத்துவர் ஒரு முறை எழுதித் தந்த மாத்திரைகளை தொடர்ந்து பாவிக்க முடியாது.

மூன்று அல்லது ஆறு மாதங்களுக்கு ஒரு முறை இரத்தப் பரிசோதனை செய்து அதிலுள்ள மாற்றங்களுக்கு எற்ப மருந்துகளின் அளவுகளிலும், வகையிலும் மாற்றங்கள் செய்ய நேரலாம்.

அவ்வாறு காலக்கிரமத்தில் இரத்தப் பரிசோதனைகள் செய்வது கொலஸ்டரோல் குறைந்திருக்கிறதா என்பதைக் கணிக்க மாத்திரமல்ல, தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் உடல் நலத்திற்கு வேறு கேடுகள் இருக்கிறதா என்பதை அறியவும்தான். இதனால் தொடர்ந்து மருந்துகள் உபயோகிப்பதால் வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்படும் சாத்தியமும் இல்லை.

எனவே கொலஸ்டரோல் பிரச்சனைக்கு

  • மருந்துகள் தேவையா இல்லையா, 
  • எந்த மருந்து தேவை, 
  • எவ்வளவு காலத்திற்கு தேவை 

என்பதை தீர்மானிக்கும் பொறுப்பை உங்கள் மருத்துவரிடம் விட்டுவிடுங்கள்.

ஆனால் அவை பற்றிய உங்கள் சந்தேகங்களை மருத்துவரிடம் கேட்கும் உரிமை உங்களுக்கு உள்ளது என்பதை மறந்து விடாதீர்கள். உங்கள் சந்தேகங்களுக்கு விடையளிக்க வேண்டிய கடப்பாடு அவருக்கு உள்ளது.

நிறைவேற்று அதிகாரம் உள்ளவர்களும் மக்களின் உரிமைகளை மதிக்க வேண்டியுள்ளது அல்லவா? அது போலத்தான்.

கொலஸ்டரோல் மற்றும் மாரடைப்பு பற்றிய எனது முன்னைய பதிவுகளுக்கு கீழே கிளிக் செய்யுங்கள்.

‘இருக்கிறம்’ சஞ்சிகையில் வெளியான எனது மருத்துவக் கட்டுரை.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0

Read Full Post »

உள்ளி சாப்பிடுவது நல்லதா?

உள்ளி பற்றிய எனது முதல் ஞாபகம் சிறுவயதிலேயே ஆரம்பமாகிறது. வயிற்றுக் குத்து, வயிற்றுப் பொருமல், அஜீரணம் என எந்த வயிறு சார்ந்த பிரச்சினை என்றாலும் அம்மா உடனடியாக உள்ளிக்குளிசைதான் தருவா.

சர்வரோக நிவாரணி மாதிரி!

எமது ஊரைச் சேர்ந்த வரத கணபதிப்பிள்ளை பரியாரியாரின் உள்ளிக்குளிசை அந்தக் காலத்தில் மிகவும் பிரபல்யம். கொழும்புக்குப் பயணம் போபவர்கள்கூட கைக்காவலாக எடுத்துச் செல்வார்கள்.

அத்துடன், எமது உணவில் பெரும்பாலும் சேர்த்துக் கொள்ளும் பண்டமாகவும் உள்ளி இருந்தது.

பிற்காலத்தில் உள்ளிக்கு பல மருத்துவ பயன்கள் இருப்பதாக விஞ்ஞான ஆய்வுகள் எடுத்துக் கூறின. உள்ளியில் உள்ள Alicine என்ற பொருளுக்கு அழற்சிக்கு எதிரான (Anti-inflammatory) சக்தி இருப்பதாக தெரியவந்தது.

அத்துடன், ஆய்வுகூட பரிசோதனைகளில் (மனித உடலில் அல்ல) அலிசின் என்ற உள்ளியில் உள்ள பொருள் கொலஸ்ட்ரோல் உற்பத்தியை தடுப்பதாகவும் அறியப்பட்டது. வேறுபல மருத்துவப் பயன் கொண்ட இரசாயனப் பொருட்களும் உள்ளியில் இருப்பதாக தெரியவந்தது.

இவற்றின் பயனாக உள்ளியின் பாவனை மேலை நாடுகளிலும் பிரபல்யமானது. கொலஸ்ட்ரோலைக் குறைக்கும், இருதய நோய்களைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில் உள்ளி,பதப்படுத்தப்பட்ட உள்ளி, அதிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட இரசாயனங்கள் ஆகியவற்றின் பாவனை என்றுமில்லாதவாறு அதிகரித்திருந்தது.

ஆயினும், அண்மையில் அமெரிக்காவின் தேசிய சுகாதார நிறுவனத்தின் ஆதரவில் செய்யப்பட்ட உள்ளி பற்றிய ஆய்வு இந்த நம்பிக்கைகளைக் கேள்விக் குறியாக்கியுள்ளது.

சிறிய ஆய்வுதான். 192 பேரைக் கொண்டு ஆறு மாதங்களுக்குச் செய்யப்பட்ட ஆய்வு. ஆயினும், மிகவும் சிறப்பாகத் திட்டமிடப்பட்டு செய்யப்பட்ட ஆய்வு. எந்தவித முன் நம்பிக்கைகளுக்கும் கட்டுப்படாத ஆய்வு.

இந்த ஆய்வின் முடிவானது உள்ளியோ அதன் இரசாயனப் பொருட்களோ குருதியில் கொலஸ்ட்ரோல் அளவைக் குறைப்பதில் எந்தவிதத்திலும் உதவாது என்பதே.

இன்னும் தெளிவாகச் சொன்னால், கெட்ட கொலஸ்ட்ரோல் எனப்படும் LDL இன் அளவைக் குறைப்பதிலோ அல்லது நல்ல கொலஸ்ட்ரோல் எனப்படும் HDL இன் அளவை அதிகரிப்பதிலோ எந்தவிதத்திலும் உதவவில்லை என்பதேயாகும்.

உள்ளி சாப்பிடுபவர்களுக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கும் முடிவு என்பதில் ஐயமில்லை. ஆயினும், உள்ளி சாப்பிடுபவர்கள் அதனை நிறுத்த வேண்டியதில்லை.

ஏனெனில், உள்ளியானது உயர் இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுமா? கொலஸ்டரோல் இரத்தக் குழாய்களில் படிவதைக் குறைக்குமா?
இருதய நோய்களைக் குறைக்குமா?

போன்ற விடயங்களில் இந்த ஆய்வு ஈடுபடவில்லை. எனவே, ஏனைய நல்ல விளைவுகள் பற்றிய ஆய்வு தேவைப்படுகிறது.

சிலவகை மூளைப் புற்று நோய்களுக்கு இது உதவும் என  ஒரு ஆய்வு கூறியது. அது பற்றிப் படிக்க கிளிக் பண்ணுங்கள்

அதுவரை உள்ளியை அதன் சுவைக்காகவும் நல்ல மருத்துவ விளைவுகளைத் தரக் கூடும் என்ற நம்பிக்கையுடனும் தொடர்ந்து சாப்பிடுங்கள். தவறு ஏதும் இல்லை.

உள்ளி பற்றிய அமெரிக்க CDC சொல்வது பற்றி அறியவும்
அதிலிருந்து Roasted Squash with Potatoes & Garlic
சமைக்கும் முறை பற்றி அறியவும்  கிளிக் பண்ணுங்கள்

Read Full Post »