கேள்வி 1 :- எனது பத்து வயது மகனுக்கு கடுமையான காய்ச்சல் வந்தபோது மருத்துவரிடம் கொண்டு சென்றோம். 103, 104 என ஏறிக் காய்ந்தது. உடம்பு நோகுது என அனுங்கிக் கொண்டு கிடந்தான். இரத்தம் சோதித்துப் பார்த்து வைரஸ் காய்ச்சல் என்று மருந்துகள் கொடுத்தார். ஒவ்வொரு நாளும் கொண்டு வரச் சொல்லிப் மகனைப் பார்த்தவர் நாலாவது நாள் திரும்பவும் இரத்தம் சோதித்துப் பார்த்துவிட்டு டெங்கு என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கச் சொன்னார். ஆஸ்பத்திரையிலை நல்ல வைத்தியம் செய்தவையள். இப்ப சுகம்;. ஆரம்பத்திலையே டெங்கு என்று சொல்லியிருந்தால் பிரச்சனை இல்லாமல் மாத்தியிருக்கலாம்தானே.
விடை:- சற்று விபரமாகச் சொன்னால்தான் ஏன் அவ்வாறு செய்தார் என்பதற்கான காரணம் புரியும். பொறுமையோடு படியுங்கள்.
டெங்குக் காய்ச்சலும் ஒரு வகை வைரஸ் காய்ச்சல்தான். உண்மையில் எல்லா டெங்குக் காய்ச்சலும் ஆபத்தானவை அல்ல.
50 சதவிகிதமானவர்களில் டெங்குக் காய்ச்சலானது சாதாரண வைரஸ் காய்ச்சல் போல எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறிவிடும். அவ்வாறு சாதாரணமாக மாறும் டெங்குவாக இருக்கும் இடத்து, இது டெங்குவாக இருக்கலாம் என முதல்நாளே மருத்துவர் யாருக்காவது சொன்னால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாக நேரும். தேவையற்ற பரிசோதனைகளைச் செய்வதுடன் சிலர் அவசரப்பட்டு தனியார் மருத்துமனையில் அனுமதித்து வீண் செலவுகள் செய்யவும் நேரும்.
ஆனால் இரத்தப் பெருக்கு டெங்கு சற்று ஆபத்தானது. மூக்கால் இரத்தம் வடிதல், இரத்த வாந்தி போன்ற திகிலூட்டும் அறிகுறிகளுடன் வந்தாலும் பெரும்பாலனவர்கள் உயிர் தப்பிவிடுவார்கள்.
மிகவும் ஆபத்தான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ காய்ச்சலால் மிகக் குறைந்த 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே பாதிக்கப்படுவார்கள். இவர்களை ஆரம்ப நிலையில் கண்டறிந்து மருத்துவமனைகளில் அனுமதித்துப் பாரமரிப்பதற்கே குருதிப் பரிசோதனைகள் அவசியம் ஆகிறது. எனவே காய்ச்சல் வரும் ஒவ்வொருரிலும் அவ்வாறு செய்வது பொருளாதார ரீதியயாகச் சாத்தியமானதல்ல.
முதல் நாளில் (White blood cell count – WBC) என்ற பரிசோதனையையே பெரும்பாலும் செய்வார்கள். குருதியில் உள்ள வெண்குருதிக் கலங்களின் எண்ணிக்கையையின் அளவைக் கொண்டு காயய்ச்சலானது வைரஸ் கிருமியால் ஏற்பட்டதா பக்றீரியா கிருமியால் ஏற்பட்டதா என்பதைக் கண்டறிய முடியும்.
அதனைக் கொண்டு நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் கொடுக்கப்பட வேண்டுமா இல்லையா என்பதை மருத்துவர் தீர்மானிப்பார்.
நோயாளியின் உடல் நிலையில் முன்னேற்றம் இல்லாவிடில் மூன்றாம் அல்லது நான்காம் நாளில் இதே பரிசோதனையை மீண்டும் செய்வார்கள். அதில் வெண்குருதிக் (White cell) கல மற்றும் சிறுதுணிக்கை (Platelet) எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு அது டெங்குவான இருக்குமா என்பதை அறிய முடியும்.
டெங்குதான் என்பதை முற்றுமுழுதாக நிச்சயப்படுத்த காய்ச்சல் ஆரம்பித்த நான்காம் நாளில் (Dengue antibody test) செய்யலாம். இருந்த போதும் சிகிச்சையைப் பொறுத்த வரையில் இது அவசியம் தேவையானது அல்ல.
அதேபோல காய்ச்சல் ஆரம்பித்த முதல் நாளிலிலேயே (Dengue antigen test) செய்யலாம். இருந்தபோதும் இப் பரிசோதனை மூலம் அது எந்தப் பிரச்சனையும் இன்றி தானாகவே மாறும் சாதாரண டெங்குக் காய்ச்சலா அல்லது கடுமையான ‘டெங்கு அதிர்ச்சி நிலை’ என்பதைக் கண்டறிய முடியாது.
Dengue antibody test, Dengue antigen test ஆகியவை விலை கூடிய பரிசோதனைகள். ஓவ்வொன்றும் சுமார் ரூபா 2500 ற்கு மேல் வரும்.
உங்கள் குழந்தைக்கு சாதாரணWBC பரிசோதனையை மட்டும் செய்திருப்பார் என ஊகிக்க முடிகிறது. அதைக் கொண்டு சரியான நேரத்தில் உங்கள் குழந்தையை மருத்து மனையில் அனுமதித்த மருத்துவர் பாராட்டுக்குரியவர்.
கேள்வி:- எனக்கு நித்திரையில் குளறுபடி உண்டு. கனடாவில்; உள்ள வாழ்க்கைச் சூழல் எம் சமுதாயமக்கள் பலருக்கு நள்ளிரவு 12 மணிக்கு முன் நித்திரைக்குச் செல்வதென்பது நடக்கக் கூடிய விடயமல்ல.
பலர் அதிகாலை 5 மணிக்கு எழும்ப வேண்டியவர்களாகவே உள்ளனர். வேலை முடிந்து வந்ததும் 6.30 மணிக்கே நித்திரை போட்டு ஆட்டும், ஆனால் அதைச் சமாளித்து விடடால் அதிகாலை 1- 2 மணிவரை பின் நித்திரை வருவதில்லை.
அதன் பின் உலகில் என்ன, நடக்கிறதெனத் தெரியாது. 7 மணிவரை படுப்பேன். அதன்பின் வேலைக்குச் செல்ல தாராளமாக நேரமுண்டு.
60 வயதான எனக்கு ஒரு வைத்தியராக உங்கள் அறிவுரை என்ன? சிலர் என்னைப் பயமுறுத்துகிறார்கள்.
விடை:- பொதுவாக வளர்ந்தவர்களுக்கு 7 முதல் 8 மணி நேரத் தூக்கம் தேவைப்படும். ஆயினும் இப்பொழுது பெரும்பாலனவர்கள் 6 மணி நேரத் தூக்கத்துடன் நலமாக உள்ளனர். 9 மணி நேரத் தூக்கம் தேவைப்படுபவர்களும் உள்ளனர்.
மறுநாள் வேலையைக் குளப்பமின்றிச் செய்வதற்குத் தேவையான தூக்கம் தேவை. இது ஆளுக்கு ஆள் மாறுபடும். மரணபணுக் காரணிகளும் பரம்பரைக் காரணங்களும் இதைத் தீர்மானிக்கக் கூடும்.
வாழ்க்கை முறைகளுக்கு ஏற்ப தூங்கும் காலத்தையும் மாற்ற வேண்டிய காலத்தில் இருக்கிறோம். 60 – 70களில் மனிதர்களின் சராசரித் தூக்கம் 8 முதல் 9 மணிவரை இருந்தது. இப்பொழுது 7 முதல் 7.5 மணிநேரம் மட்டுமே தூங்குகிறார்கள்.
இருந்தபோதும் பிறந்த சில காலத்திற்கு குழந்தைகள் 20 மணிநேரம் தூங்கக் கூடும் வளரிளம் பருவத்திலும் தூக்கம் சற்று அதிகம்.
ஊங்களைப் பொறுத்த வரையில் 1 மணி முதல் 7 மணி வரை தூங்குகிறீர்கள். மொத்தம் 6 மணிநேரம் தூக்கம் எனலாம். சற்றுக் குறைவுதான். இருந்தாலும் உங்கள் வாழ்க்கை முறையயைப் பாதிக்கவில்லை என்பதால் ஓரளவு போதும் என எண்ணுகிறேன். முடிந்தால் அரை மணி நேரம் முன்னரே தூங்குங்கள். போதுமாக இருக்கும்.