Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘கைலாசபதி’ Category

ஈழத்தின் பெருமையை தமிழ் கூறும் நல்லுலகு எங்கும் நிலைநிறுத்திய பெருமை பேராசிரியர்.க.கைலாசபதிக்கு உண்டு. கடந்த  5 – 6 தசாப்தங்களுக்கு மேலாக அவரது பெயர் தமிழ் இலக்கிய விமர்சன உலகில் தொடர்ந்து பேசப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அழகியலுக்கு அப்பால் சமூகப் பிரக்ஞையுடைய படைப்புகளுக்கு முக்கியத்துவமும், மார்க்சிய அடிப்படையிலான விமர்சனங்களுக்கு முன்னோடியாகவும் விளங்கியவர் அவர்.

அவர் பற்றியும் அவரது படைப்புகள், எழுதிய நூல்கள் பற்றிய விபரங்கள் தமிழ் விக்கிபீடியாவில் இவ்வாறு கூறப்படுகிறது
க. கைலாசபதி

அவர் மறைந்து 29 ஆண்டுகளுக்குப் பின்னரும் தொடர்ந்து என்றும் நினைக்கப்படுபவராக எம்மிடையே தனது ஆளுமையை நிலைநிறுத்திக் கொண்டு காலத்தோடு இணைந்து நடக்கிறார்.

கடந்த பல வருடங்களாக இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம் கைலாசபதி நினைவுக் குழுவுடன் இணைந்து கைலாசபதி நினைவுப் பேருரைகளை நடாத்தி வருகிறது.

இவ்வாண்டிற்கான நினைவுப் பேருரை எதிர்வரும் மார்கழி 18ம் திகதி 2011 ல் ஞாயிறு ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றத்தின் ஆதரவில் வெள்ளவத்தை தர்மாராம வீதியில் உள்ள பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தில் மாலை 4.30 மணிக்கு நடைபெறும்.

தலைமை:- திரு.எம்.வாமதேவன் (முன்னாள் செயலாளர் தோட்ட வீடமைப்பு உட்கட்டமைப்பு மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சு)

பேருரை:- திரு.ஏ.எஸ்.சந்திரபோஸ் (சிரேஷ்ட விரிவுரையாளர் இலங்கை திறந்த பல்கலைக் கழகம்)

குறித்த நேரத்திற்கு நிகழ்ச்சிகள் ஆரம்பமாகும் எனவும் அனைவரையும் அன்புடன் அழைப்பதாகவும் நிகழ்ச்சி அமைப்பாளர்கள் அறிவித்துள்ளனர்.

சென்ற ஆண்டிற்கான நினைவுப் பேருரை கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி அவர்களால் ஆற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

அதற்கான இணைப்பு

கணவன் மனைவி இருவரும் உழைக்கும் குடும்பத்தில் நன்மைகள் பிரச்சனைகள்.- கைலாசபதி நினைவுப் பேருரையில்

பேராசிரியர் கைலாசபதி பற்றி திரு லெனின் மதிவானம் எழுதிய ‘பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்’என்ற நூல் வெளியீடு பற்றி இணைப்பு

பேராசிரியர் க.கைலாசபதி சமூக மாற்றத்திற்கான இயங்காற்றல்

0.00.0.00.0

Read Full Post »

>

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் என்றும் மறக்க முடியாத தடங்களை விட்டுச் சென்றவர்  பேராசிரியர் கைலாசபதி ஆகும். அவரது நினைவாக, நினைவுப் பேருரைகளை வருடா வருடம் கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  நடாத்தி வருகின்றனர்..

இவ்வருட கைலாசபதி நினைவுப் பேருரையைச் செய்தவர், கொழும்பு பல்கலைக் கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றும் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

பேராசிரியர் சபா ஜெயராசா தலைமை வகித்தார். அவர் தனது தலைமையுரையில் பேராசிரியர் க.கைலாசபதி யாழ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகவும், துணைவேந்தராகவும் கடமையாற்றிய காலத்தில் ஆற்றிய பெரும் பணிகளை நினைவு கூர்ந்தார்.

இன்று பல்கலைக்கழகங்களின் தர மேம்பாடு பற்றிப் பேசப்படுகிறது. ஆயினும் பேராசிரியர் கைலாசபதிபணியாற்றிய காலங்களில் யாழ் பல்கலைக்கழகம் உயர்தரத்தில் இருந்தது என்றார். அத்துடன் ராமநாதன் நுண்கலைக் கல்லூரியாக இருந்ததை யாழ் பல்கலைக்கழகத்துடன் இணைத்தது மிகப் பெரிய சேவையாகும். இன்று பலர் B Fine arts பட்டம் பெற்று இருக்கிறார்கள் எனில் அதற்கு அத்திவாரம் இட்டவர் அவரே ஆவர் என்றார்.

தான் அதன் தலமைப் பொறுப்பை ஏற்றிருந்த காலங்களில் இவை தொடர்பான பல்கலைக் கழக ஆவணங்களைப் பார்த்த போது ராமநாதன் நுண்கலைக் கல்லூரியை தரம் உயர்த்துவதற்கு அவர் எடுத்த முயற்சிகள் தெரிய வந்தது என்றார்.

இன்று யாழ்பல்கலைக்கழக நூலகம் தென்கிழக்கு ஆசியாவிலேயே சிறந்த நூலகம் எனப் போற்றப்படுகிறது. இதற்கும் முக்கிய பங்கு வழி வகுத்தவர் அவர்தான்.

முக்கியமாக மாற்றுவழிச் சிந்தனையுள்ள நூல்களை அதற்குக் கொண்டு வந்தார். உளவியல் என்பது தனிமனிதம் பற்றிய விடயமாக இருந்த போது அதற்கு சமூக வலுக் கொடுக்கும் சகத்தியாக மார்க்சிய  உளவியல் வந்தது. மார்க்சிய  உளவியல் தொடர்பான நூல்களை யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு கொண்டுவர வழி வகுத்தார்.

தனிப்பட்ட ரீதியில் தான் பணம் கொடுத்து வாங்கிய நூல்கள் பலவற்றைத் தான் படித்து முடித்த பின்னர் யாழ்பல்கலைக்கழக நூலகத்திற்கு அன்பளிப்பு செய்வது அவரது வழக்கமாக இருந்தது என்றார். மிக வித்தியாசமான முறையில் இயங்கி தமிழில் ஆழ்ந்த பற்றும் அதன் வளர்ச்சியில் பங்காளியாகவும் இருந்து அழியாத சுவடுகளைப் பதித்தவர் பேராசிரியர் கைலாசபதி என விதந்து போற்றினார்.

நினைவுப் பேருரை ஆற்ற வந்த செல்வி பவித்ரா கைலாசபதி பற்றிக் குறிப்பிடும் போது மனித வள அபிவிருத்தி (Human resource development – HRD)துறையில் புலமையாளர் எம் மத்தயில் மிகக் குறைவு. இவர் அத்துறையில் கலாநிதிப் பட்டம் பெற்றவராவார்.கொழும்பு பல்கலைக் கழகத்தில் செல்வாக்குப் பெற்ற விரிவுரையாளராக இருக்கிறார்.

கலாநிதி பவித்ரா கைலாசபதி ‘இலங்கையின் மனித வள அபிவிருத்தி :- இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற பொருளில் நினைவுப் பேருரையை ஆற்றினார்.

இலாப நோக்குள்ள நிறுவனங்கள் மட்டுமின்றி சேவை நிறுவனங்கள், அரச நிறுவனம் போன்ற அனைத்திற்கும் அவற்றின் செயற்பாட்டிற்கு மனித வளம் அவசியம்.

தொழிலில் வெற்றி பெற்றோருக்கு மனிதவளத்தின் முக்கியத்துவம் புரியும். அதனால்தான் முன்னாள் தொழிலதிபரான கென் பாலேந்திராவிடம் உங்கள் நிறுவனத்தின் வெற்றிக்கு காரணம் யார் என்று கேட்டபோது “மூன்று காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம் மக்கள், இரண்டாவது காரணம் மக்கள், மூன்றாவது காரணம் மக்கள்” என்றார். மக்கள் என அவர் குறிப்பிட்டது தனது நிறுவனங்களில் பணிபுரியும் மனித வளத்தையே ஆகும்.

அதே போல மைக்கிரோ சொப்ட் நிறுவன பில் கேட்சிடம் கேட்ட போது அவர் கூறினார் “Greatest asset is the people who out of the building daily after their work” அவர் குறிப்பிட்டது தனது நிறுவன ஊழியர்களான மனித வளத்தையே.

மனிதனானவன் தன் மீது கவனிப்பு இருக்கும் போது அவனது செயலூக்கமும் உற்பத்தி திறனும் அதிகரிக்கிறது. Hawthorne Effect ஆளணி முகாமைத்துவத்தில் கவனிப்புப் பெறுகிறது. மனிதனை இயந்திரமாகக் கணியாது உணர்வுள்ள மனிதனாக மதிக்கும்போது தொழில் திறன் அதிகரிக்கிறது. 


அரசுகளும் வேலை நேரக் கட்டுப்பாடு, ஓய்வு நேரம், மகப் பேற்று லீவு, போன்ற பலவற்றையும் சட்டங்கள் மூலம் அங்கீகரித்துள்ளன. இவை யாவும் மனித வளத்தை சரியான முறையில் முகாமைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளே என்றார்.


தொடர்ந்து பேருரையின் முக்கிய பகுதியான இரு உழைப்பாளி குடும்பம் பற்றிய பகுதி சுவார்சமானது. இன்று குடும்பங்களில் கணவன், மனைவி என இருவர் உழைப்பாளிகளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இருவர் தொழில் செய்ய வேண்டிய நிலைக்கான காரணங்கள் என்ன?

 • பெண் கல்வி விருத்தியடைந்ததால் கல்வி கற்ற பெண்கள் தொழிலுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.
 • இன்றைய வாழ்வுக்கு அதிக பொருளாதாரம் தேவை. இதனால் ஒருவர் உழைப்பது போதாது. இருவரும் உழைக்க வேணடியது அவசியமாயிற்று.

ஆயினும் இதனால் பல புதிய பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க வேண்டியது அவசியமாயிற்று.

 • இருவரும் வேலைக்கு செல்வதால் குடும்ப வேலைககளைச் செய்வதற்கு நேரம் குறைந்து விட்டது. 8 மணி நேர வேலை, போக்குவரத்து நேரம், தூக்கம் போக குறைந்தளவு நேரமே வீட்டு வேலைகளுக்கு ஒதுக்க முடிகிறது.
 • அதிலும் குழந்தைகள் உள்ள குடும்பம் எனில் வீட்டு வேலையின் கனம் அதிகரிக்கிறது. பாடசாலைக்கு கூட்டிச் செல்லல், பாடம் சொல்லிக் கொடுத்தல், அவர்களுக்கு துணையாக இருப்பது, அவர்கள் நலனைக் கவனிப்பது எனப் பல
 • இதனால் கணவன் மனைவி ஆகிய இருவரும் வீட்டு வேலைகளில் ஈடுபட வேண்டிய அவசியம் நேருகிறது. ஆயினும் பெரும்பாலான வீட்டு வேலைகள் பெண்கள் தலையிலேயே விழுகிறது.
 • சமையல், துணி துவைத்தல், குழந்தை பராமரிப்பு, வீடு கூட்டுதல்  போன்ற பலவும் அவளின் பணியாக இருக்கிறது. இருவரும் வேலையால் வீடு வந்ததும் கணவன் ரீவீ அல்லது கணனி முன் உட்கார அவளே தேநீர் தயாரிப்பு முதல் அனைத்து வேலைகளிலும் ஈடுபட நேர்கிறது. கணவனுக்கு வீட்டில் சில திருத்த வேலைகள், தண்ணீர் கரண்ட் பில் கட்டுதல், வாகனப் பராமரிப்பு என சிலவே இருக்கின்றன.
 • பாலியல் ரீதியான வேறுபாடு ஏற்படுகிறது. அதிக சுமை பெண் தலையிலேயே.
 • அதனால் கணவன் மனைவி இடையே பிரச்சனைகள் ஏற்படுகின்றன.
 • கலியாணம், மரணச் சடங்கு போன்ற பல சமூகக் கடன்களை நிறைவேற்றுதில் சிரமம் ஏற்படுகிறது.
 • அதிருப்தி நிலை தேன்றுகிறது. 
 • போதைப் பொருள் பாவனை, மன அழுத்தம், மனச் சோர்வு போன்றவற்றிக்கு இட்டுச் செல்கிறது.
 • வேலையில் அதிருப்பதி ஏற்பட்டால் திடீரென வேலைக்குச் செல்லாமை, அடிக்கடி லீவு எடுப்பது போன்ற சிக்கல்கள் தோன்றுகினறன.
 • பாலியல் பாத்திரம் தொடர்பான நம்பிக்கையீனம் ஏற்படலாம்.

கொழும்பு பல்கலைக் கழக Business administration Cource தொடர்பான ஆய்வில் பட்டப் படிப்பிற்கான நிலையில் (under graduate level) பெண்களே அதிகளவில் கற்க வந்தார்கள். ஆனால் பட்ட மேற்படிப்பு (Post Graduate level) என வரும்போது மிகக் குறைந்தளவு பெண்களே தோற்றினார்கள்.

காரணம் வெளிப்படையானது. பெண்கள் வேலைக்குப் போனாலும் தமது தொழிலில் தம்மை மேம்படுத்த கல்வி கற்க முடியாத சூழலே நிலவுகிறது. ஏனெனில் இத்தகைய பட்ட மேற்படிப்புகள் பொதுவாக வார இறுதி நாட்களிலேயே நடைபெறுகின்றன. வீட்டு வேலைகளுக்கு அப்பால் தமது மேற் படிப்பிற்கு பெண்களால் நேரம் ஒதுக்க முடியாது உள்ளது.

பெருந்தோட்ட துறையில் செய்யப்பட்ட மற்றொரு ஆய்வில் குழந்தை பராமரிப்பு நிலையங்கள் உள்ள தோட்டங்களில் பெண்கள் வேலைக்கு வராமல் இருப்பது குறைவு என்பது தெரிய வந்தது. ஏனெனில் குழந்தை பராமரிப்பின் ஒரு பகுதியை அத்தகைய நிலையங்கள் பொறுப்பேற்றதால் அவளால் தனது வேலையில் கூடியளவு ஈடுபட முடிந்தது.

எவ்வாறு உதவலாம்

இருவரும் தொழில் செய்ய நேரும்போது ஏற்படும் சிக்கல்களைத் தவிர்க்க என்ன செய்யலாம்?

 • கணவன் மனைவி இடையே நெருங்கிய உறவின் மூலம் பல பிரச்சனைகளதைத் தீர்க்கலாம். முக்கியமாக வேலையால், கணவன் மனைவிக்கு ஏற்படக் கூடிய பிரச்சனைகள் பற்றி வெளிப்படையாக அவளிடம் கேட்டறிந்து உதவி செய்யலாம். உதாரணமாக பாத்திரம் கழுவுதல் வீடு கூட்டுதல் போன்று சில பணிகளையாவது தான் செய்து கொடுத்து அவளது வேலைப் பளுவைக் குறைக்க உதவுவது அவசியம்.
 • திருமணப் பொருத்தம் பார்க்கும்போது சாத்திரப் பொருத்தம் தேவையில்லை. கருத்தியல் (Ideology) பொருத்தம் எப்படி என்பதைப் பார்க்க வேண்டும். அவர்களிடம் புரிந்துணர்வு இருக்க வேண்டும். அதாவது குடும்ப வாழ்வில் கணவன் மனைவியின் பங்குகள் பற்றி திறந்த மனப்பான்மை உள்ள கணவன் விரும்பத்தக்கது.
 • பெற்றோரின் உதவி. கணவன் அல்லது மனைவியின் பெற்றோர் கூட இருந்தால் குழந்தை பராமரிப்பு, வீட்டு வேலைகள் ஆகியவற்றில் இருவரும் உழைக்கும் குடும்பத்தின் சுமுகமான நடப்பிற்கு உதவும். ஒரு ஆய்வின்போது இத்தகைய குடும்பங்களில் 75% பெற்றோர் கூட இருப்பது நன்மையளித்ததாகத் தெரிகிறது.
 • குழந்தை பராமரிப்பு நிலையங்கள். இது இருந்தால் பெற்றோர்கள் தமது குழந்தைகளின் பொறுப்பை அங்கு விட்டுவிட்டு நிம்மதியாக தொழில் செய்ய முடியும்.
 • நெகிழ்வு நேரம். குறிப்பிட்ட நேரத்தில் வேலைக்குப் போய் குறிப்பட்ட நேரத்தில் திரும்ப வேண்டும் என இல்லாமல் நெகிழ்வு நேரம் உதவும். உதாரணமாக ஒரு மணி நேரம் தாமதமாகப் போய் மாலையில் ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்வதின் மூலம் உதவலாம்.
 • கூடுதலான நேரம் வேலை செய்பவர்தான் உண்மையான ஊழியர் என்ற எண்ணம் பல மேலதிகாரிகளுக்கு இருக்கிறது.ஆயினும் குறைந்த நேரத்தில் அவ்வேலையை நிறைவு செய்து விட்டு மிகுதி நேரத்தை குடும்பத்துடன் செலவளிக்க உதவலாம். இதன் மூலம் அவர்களின் பணித் திறனை அதிகரிக்கவும் முடியும்.
 • சாதகமான சட்டங்கள். உதாரணமாக maternity leave, Paternity leave, Family leave போன்றவை உதவும்
 • பகுதி நேர வேலை. பெண்களால் முழு நேர வேலைக்குப் போக முடியாத நிலையில் அவர்களுக்கு பகுதி நேர வேலை கொடுப்பதன் மூலம் வேலைக்குப் போகும் மனநிறைவைக் கொடுப்பதுடன் குடும்பத்தைக் கவனிக்கவும் முடியும்.
 •  அவுஸ்திரேலியாவில் பல இவ்விடயத்தில் பல முற்போக்கான நடைமுறைகள் உள்ளன. பிள்ளைகள் பராமரிப்பு நிலையங்கள் ஆரம்பிப்பதற்கு நிதியுதவியை அரசாங்கம் செய்கிறது. ஊக்கப்படுத்துகிறது. அத்துடன் அவற்றின் செயற்பாடுகள் பற்றி கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதனால் அங்கு அதிகளவு பெண்கள் வேலைக்குச் செல்லக் கூடியதாக இருக்கிறது.

இறுதியாக கலாநிதி பவித்ரா கைலாசபதி இந்த நினைவுப்பேருரை பற்றிக் குறிப்பிடும்போது தான் இதில் பேசுவதற்குக் கிடைத்த சந்தர்ப்பத்தையிட்டு மிகவும் மகிழ்ச்சியடைவதாகக் கூறினார்.

” உங்கள் எல்லோருக்கும் கைலாசபதி ஒரு நண்பர், தோழர், அல்லது விமர்சகராக இருக்கிறார். ஆனால் அவர் எனக்கு அப்பா. இந்த வகையில் நான் அவரது நினைவுப் பேருரையை செய்யக் கிடைத்த சந்தர்ப்பத்தை மிகவும் பெருமைக்குரிய, மனநிறைவை அளிக்கும் சம்பவமாகக் கருதுகிறேன்”

உள்ளத்தைத் தொடும் இந்தச் சிறுகுறிப்புடன் அவர் தனது உரையை நிறைவு செய்த போது கூட்டத்தில் இருந்த ஒவ்வொருவரும் ஒரு கணம் மன நெகிழ்வுற்றதை உணரக் கூடியதாக இருந்தது.  அவரோடான தம் உறவை மீளநினைந்து உறவின் புத்துயிர்ப்பின் ஈர்ப்பில் இருக்கையிலிருந்து எழ மறந்து நினைவுகளில் ஆழ்ந்தனர்.

Read Full Post »

>தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவு விழாவும் பேராசிரியர் க.கைலாசபதியின் நினைவுச் சொற்பொழிவும் எதிர்வரும் 19.12.2010 ஞாயிறு மாலை 4.30 மணிக்கு மேற்படி பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் நடை பெற இருக்கிறது.

இந்த அரங்கம் 57/1/15, காலி வீதியில் (ரொக்ஸி திரையரங்கிற்கு முன்னால் உள்ள  ஒழுங்கையில்) அமைந்துள்ளது.

தலைமை வகிப்பவர் பேராசிரியர்.சி.தில்லைநாதன் அவர்களாகும்

நினைவுப் பேருரையை நிகழ்த்த இருப்பவர் யாழ் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை சார்ந்த பேரசிரியர் பரமு புஸ்பரட்ணம் அவர்களாகும். “இலங்கையில் தமிழ்மொழியின் தொன்மை” என்ற பொருளில் நினைவுப் பேருரை நிகழ்த்தவுள்ளார்.

பெதுச் செயலாளர் சோ.தேவராஜா “தேசிய கலை இலக்கியப் பேரவையின் 37வது ஆண்டு நிறைவுரை” ஆற்றுவார்.

அதைத் தொடர்ந்த கவிதை அரங்க ஆற்றுகையில்  தலைமைக் கவியாகச் திரு.ச.சுதாகர் அவர்களும் ஏனைய கவிஞர்களும் “புதிதாய் மீள உயிர் கொண்டெழுவோம்” என்ற தலைப்பில் கலந்து கொள்வர்.

Read Full Post »

>பேராசிரியர் க.கைலாசபதி அவர்களது மறைவின் 28வது ஆண்டு இது.

இலங்கை இலக்கிய, விமர்சன, முற்போக்கு அணி ஆகியவற்றில் அழிக்க முடியாத தடங்களை விட்டுச் சென்ற அவரது நினைவாக இது நடை பெற உள்ளது.

இவ்வருட நினைவுப் பேருரையைச் செய்ய இருப்பவர் அவரது மகளான கலாநிதி பவித்ரா கைலாசபதி ஆகும்.

கைலாசபதி நினைவுக் குழு மற்றும் இலங்கை முற்போக்கு கலை இலக்கிய மன்றம்  இந்த விழாவை ஏற்பாடு செய்துள்ளது.

‘இலங்கை மனித வள அபிவிருத்தி: இரு உழைப்பாளிகள் குடும்பம் பற்றிய கண்ணோட்டம்’ என்ற தலைப்பில் இது நடைபெற இருக்கிறது.

காலம்:- டிசம்பர் 12, 2010. ஞாயிறு. மாலை 4.30மணி

இடம்:- பெண்கள் கல்வி ஆய்வு நிறுவன கேட்போர் கூடம்
               58,தர்மாராம வீதி
               கொழும்பு 0.6

Read Full Post »