Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சஞ்சிகை அறிமுகம்’ Category

பெயர் சொல்லக் கூடிய ஈழத்துத் தமிழ் சஞ்சிகைகளில் இளையதாக இருந்தபோதும் தரமானதாக வெளிவருவது ஜீவநதி என்றே சொல்லலாம். வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகிற சூழ்நிலையிலும் ஆறு ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து வெளியிட்டு வருவது பாராட்டுக்குரியது.

சித்திரை 2014 அதன் 64 வது இதழாகும். வாசிப்பனுபவம் பயனுள்ளதாகவும் இதமளிப்பதாகவும் இருந்தது.

சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் நூல் விமர்சனம் எனப் பலவும் இந்த இதழை அலங்கரித்தாலும் காத்திரமானதாகவும் பயனுள்ளதாகவும் பல புதிய தகவல்களை அறியத்தருவதாகவும் அமைத்திருப்பவை கட்டுரைகள் எனத் துணிந்து சொல்லலாம்.

சிக்மண்ட் பிராய்ட் பற்றிய ஈழத்துக் கவியின் கட்டுரை மிக அருமையாக இருந்தது. ‘உளவியல் பகுப்பாய்வின் தந்தை’ எனப் போற்றப்பட்டவர் அவர். உணர்வு மனம் ஆழ்மனம் என மனித மனத்தைப் பிரித்த அவர் உளவியல் நோய்களுக்கு அடிப்படை பாலியலே என்று நம்பினார். அக் கருத்துக்களில் பல மாற்றங்கள் வந்துவிட்டபோதும் மனத்தை விஞ்ஞான பூர்வமாக ஆய முனைந்த அவரது பங்களிப்பு மிக முக்கியமானது.

ஆனால் இக்கட்டுரையில் ஈழத்துக் கவி அவரது பாலியல் கருத்துகளுக்கு அப்பால் போர் பற்றிய அவதானிப்புகளுக்கே முனைப்பு கொடுத்து எழுதியிருகக்கிறார். மூன்று தசாப்தங்களுக்கு மேலாக போர்ச்சூழலில் அழுந்திய எங்களுக்கு போர் ஏன் என்பது முதல் அதற்கு முற்றுப்புள்ளி வைப்பது எப்படி வரையாக பல புதிய தரிசனங்களைத் தந்திருக்க்pறார்.

கெகிறாவ ஸீலைஹா வின் நெல்சன் மண்டேலா பற்றிய கட்டுரை மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது. மண்டேலா பற்றிய பல கட்டுரைகள் அவரது மறைவை ஒட்டி அண்மையில் வெளிவந்திருந்தபோதும் இவரது கட்டுரை தனித்துவமானது. அவரது சொந்த வாழ்வு. பொதுவாழ்விற்கான அவரது தியாகங்கள், அத்தகைய வாழ்வு காரணமாக இழக்க நேர்ந்த உணர்வுபூர்வமான விடங்கள், மன வைராக்கியம், அவரது சாதனைகள் எனப் பலதரப்படப் பேசுகிறது. இருந்தபோதும் அவருள் மறைந்திருந்த அன்பு நெஞ்சம் பற்றிய குறிப்புகள் நெகிழவைப்பனவையாக இருந்தது.

மஹாத்மா காந்தியின் பின்னர் அன்பு அஹிம்சை சுயநலம் பேணாமை, மன்னித்தல், தன் தவறுகளையும் பகிரங்கமாக ஏற்கவும் மன்னிப்பு கேட்கவும் தயங்காத ஒரே ஒரு தலைவராக இருந்திருக்கிறார்.

இதே கட்டுரையில் ‘விடுதலையை நோக்கிய நீண்ட நடை’ என்ற அவரது சுயசரிதை நூலிலிருந்து மொழி பெயர்க்கப்பட்டிருந்த சில பகுதிகள் தனிமைச் சிறையில் வாடிய அவரது அக உணர்வுகளை வெளிப்படுத்துவனவாக இருந்தது.

இருந்தபோதும் இந்தக் கட்டுரையை அவர் பற்றிய பகுதியை ஒரு இதழிலும், அவரது எழுத்தை மற்றொரு இதழிலுமாக இரு வௌ;வேறு தனித்தனிக் கட்டுரைகளாக வெளியிட்டிருந்தால் கூடிய அவதானிப்பைப் பெற்றிருக்கும் என எண்ணத் தோன்றியது.

ஒரு மருத்துவன் என்ற ரீதியிலும் முதுமையின் வாசற்படியில் நிற்பவன் என்ற ரீதியிலும் முருகபூபதியின் நடைப்பயிற்சிக் கட்டுரையை இரசித்துப்படித்தேன். அவரைப்போலவே சின்னஞ்சிறு வயதில் ரயிலில் சென்று, பெயர் தெரியா ஊரில் இறங்கி இருள் கவ்வும் நேரம் யானை லத்திகளைக் கண்டு பயந்து கொண்டே நீண்டதூரம் நடந்து கதிர்காமத்தை அடைந்தது ஞாபகத்திற்கு வந்தது. செல்லக் கதிர்காமம், கதிரமலை யாவும் அக்காலத்தில் பொடிநடையில்தான் முடிந்தது.

சுவார்ஸமான கட்டுரை. எழுத்தாளனாக மட்டுமின்றி பத்திகையாளாகவும் இருந்தததால் மூன்று பக்கக் கட்டுரையை ஒரே மூச்சில் படிக்க வைக்கும்படியான நடை. ‘மனைவியையும் பேச்சுத் துணைக்கு அழைத்துச் சென்றால் என்ன நடக்கும்’ என்பதை ஒரு வரியில் அழகாகச் சொல்லியிருக்கிறார்.

நீங்களே மீண்டும் படித்துப் பாருங்கள்.

இருந்தபோதும் இன்று மனிதர்களின் ஆயுள் குறைந்துவிட்டது என்ற அவரது கூற்றோடு என்னால் ஒத்துப் போக முடியவில்லை. அன்றைய சராசரி ஆயுள் 50, 60தைத் தாண்ட முடியாதிருந்தது. ஆனால் இன்று சராசரி ஆயுள் 75 தாண்டிவிட்டது.  80, 90 வயதான பலரைச் நித்தமும் காண்கிறோம். சதம் அடித்தவர்களைக் காண்பதென்பது அரிதானது அல்ல என்றாகிவிட்டது.

அ.யேசுராசாவின் கட்டுரை தமிழக புத்தக்திருவிழா பற்றிய அவரது நேரடி அனுபவத்தை புகைப்படங்களுடன் சிறப்பாகச் சொல்கிறது. புத்தகத் திருவிழாவில் ரவி தமிழ்வாணனின் திருவிளையாடலையும் நாசூக்காகச் சொல்லியிருந்தார்.

‘1950 வரையான காலகட்டத்து நவீன தமிழ்க் கவிதை’ என்ற அம்மன்கிளி முருகதாஸ் அவர்களின் தொடர் பாரதியின் பங்களிப்பு பற்றிச் சொல்கிறது. அருமையான உதாரணங்களுடன் கூடிய உபயோகமான படைப்பாக இருந்தது.

‘கம்பனை நகலெடுத்த திரையிசைப் பாடலாசிரியர்கள்’ என்ற இ.சு.முரளீதரனின் கட்டுரை மிகுந்த தேடலுடன் எழுதப்பட்டது. நாங்கள் இரசித்த பல திரைப்பாடல் வரிகளுக்கு, கம்பனின் கற்பனை வளம் மூலமாக இருந்த செய்தி என்னை ஆச்சரியப்பட வைத்தது.

சிறுகதைகள் இரண்டு. மலையகம் சார்ந்தது ஒன்று. யாழ்மண்ணும் வெளிநாடும் கலந்தது மற்றொன்று. மல்லிகை சி.குமாரின் ‘பாலங்கள்’ கதையானது நல்லவர் போல கதையளந்து மலையக தொழிலாளர்களை கொள்ளையடிக்கும் யாழ்ப்பாணத்து முதலாளியின் சாதித் திமிர் பற்றிப் பேசுகிறது. முதாலாளிக்கு எதிராகவும் சாதீயத்திற்கு எதிராகவும் தொழிலாள வர்க்கம் இணைந்து குரல் எழுப்புகிறது.

வி.ஜீவகுமாரனின் ‘நான் அவன் இல்லை’ எதையும் அழுத்தித் தெளிவித்து போதனை செய்யும் கதையல்ல. காதலி இவனை ஏமாற்றி பணக்காரனுக்கு தலைநீட்ட அதைத் தாங்க முடியாது வெளிநாடு சென்று உழைத்த போதும் அவளில் குற்றம் காண முடியாதளவு அவளில் உண்மை அன்பு வைத்தவனின் கதை. மிக அழகாக நெய்யப்பட்டிருக்கிறது. அவனின் உணர்வுகளை மட்டும் சிறு சிறு சம்பவங்களின் நினைவலைகளாகப் பேசுகிறது. நேர்த்தியான படைப்பு.

“..:செத்தவன் பெண்டிலைக் கட்டினாலும் விட்டவன் பெண்டிலைக் கட்டக்கூடாது..” என்ற வசனமானது பெண் வாயிலிருந்து வந்தபோதும் ஆணாதிக்க சிந்தனையின் மறைமுக வெளிப்பாடாக உறுத்துவதைத் தவிர்க்க முடியவில்லை.

கவிதைகள் பல இருந்தபோதும் பெரும்பாலானவை மனதில் சலனத்தை எழுப்பவில்லை. பிணங்களையும், புதைகுழிகளையும், குண்டு வீச்சுகளையும் இன்னும் எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கப் போகிறார்களோ தெரியவில்லை. இருந்தபோதும் சித்ரா சின்னராஜாவின் கவிதையின் கடைசி வரிகள் என்னைப் பல கோணங்களில் சிந்திக் வைத்தன என்பது என்னவோ உண்மைதான். ‘எமது மக்கள் முள்ளிவாய்க்காலில் யாருக்காக இரத்தம் சிந்தினார்கள்’

அரிதாவின் ‘பிரிவு’ கவிதையின் சொல்லாடல் சற்று வித்தியாசமாக பிரிவின் இயல்புத்தன்மை பற்றிப் பேசுகிறது.

கருணாகரனின் கவிதைகள் மூன்று பிரசுரமாகியுள்ளன. அற்புதமாக எழுதப்பட்ட கவிதைகள். அவை எதையும் எமக்குப் போதிக்க முற்படவில்லை. யாரையும் நோகவில்லை. அறம் பாடவில்லை. ஆனால் அற்புதமான சொற்கோர்வைகள், சிறப்பான குறியீடுகள்.

நான் இரசித்த வரிகளில் ஒன்று ‘.. நிழலைப் பெய்யும் மரம் ஒருபோதும் உறங்குவதில்லை நிழலில்’.

மற்றொரு கவிதையில் ‘ .. அவள் உறங்கிக் கொண்டிருந்தாள் மாத்திரையினுள்ளே…’ அருமை.

நான் ஏற்கனவே படித்திருந்த நல்ல நாவலான ‘குடிமைகள்’ பற்றி நூல் விமர்சனப் பகுதியில் ஜனப்பிரியன் எழுதியுள்ளார். முற்போக்கு சிந்தனைகள், சாதீயத்திற்கு எதிரான தீர்க்கமான குரல், பெண்களின் மன உலகின் வௌ;வேறு கோலங்கள் போன்றவற்றை தெணியான் எவ்வாறு தனது நாவலில் வெளிப்படுத்தியுள்ளார் என்பதை கட்டுரை ஆசிரியர் எடுத்துக் காட்டுகிறார். தெணியானின் பாத்திரச் சித்தரிப்புகளையும், மொழிநடையையும் சிலாகித்துள்ளார்.

மொத்தத்தில் ஜீவநதியின் இந்த இதழ் சிறப்பாக அமைந்திருக்கிறது.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0

 

Read Full Post »

நிவேதினி மற்றும் பெண்ணிய எழுத்துக்கள்.
‘பெண்ணியம் சார்ந்த தரமான கட்டுரைகள் கிடைக்கவில்லை. இதனால் பெண்ணியம் சம்பந்தமான தரமான சஞ்சிகையை வெளிக் கொணர்வதில் சிரமம் ஏற்படுகிறது’  என்ற கருத்தைப் பார்த்தபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

இணையத்தில் படிக்கும்போது பெண்ணியம் பற்றிப் பேசும் எழுத்துக்கள் பரவலாக இடம்பெறுவதைக் காண்கிறோம். புத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் கூட நிறையவே இடம் பெறுகின்றன.

ஆனால் நிவேதினி ஆசிரியை கூறுவது வேறு விடயம்.

நிவேதினி பெண்ணிய சஞ்சிகை

“நிவேதினிக்கு ஆய்வு நிலைக் கட்டுரைகள் வருவது குறைந்து கொண்டே வருகிறது. இரண்டு மூன்று கட்டுரைகளுடன் ஒரு தரமான சஞ்சிகையை கொண்டு வர முடியாது” என்பது அவரது ஆதங்கம்.

உண்மைதான் பெண்ணியம் பற்றிய பேச்சுக்களும் கருத்துரையாடல்களும் நிறைந்து வழிந்தாலும் அது சம்பந்தமான ஆழமான ஆய்வு நிலைக் கட்டுரைகள் குறைவுதான்.

நிவேதினி என்பது பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தால் வெளியிடப்படும் சஞ்சிகையாகும் பால்நிலைக் கற்கை நெறிச் சஞ்சிகை எனச் சொல்லப்படுகிறது. 2009-2010ம் ஆண்டுக்கான இதழ் அண்மையில் கிடைத்தது. இது இச் சஞ்சிகையின் 13வது இதழாகும்.

கட்டுரைகள் கிடைக்காத நிலையில் அவர்கள் கைக்கொண்ட வழி என்ன? பால்நிலைக் கருப்பொருளை உள்ளடக்கிய கட்டுரைகளை அவர்கள் சேமித்து வைப்பது வழக்கம். உதிரியாகக் கிடந்த நல்ல கட்டுரைகளை ஒன்றாகத் திரட்டி ஆவணப்படுத்தும் தொகுதியாக இம்முறை நிவேதினி இதழ் வெளிவந்துள்ளது.

உண்மைதான் அருமையான பல கட்டுரைகள் இத்தொகுப்பில் இடம் பெறுகின்றன. கட்டுரைகளின் தலைப்பும் ஆசிரியர் விபரமும் வருமாறு

1.    இரண்டு பெண்கவிதைகளின் விழித்துயரம்- தீபச்செல்வன்
2.    பல குரல்கள் ஒரு பதிவு- அம்பை
3.    சுகந்தி சுப்பிரமணியன் பெண்மையின் வழித்தடம் பெண்ணுடலின் ஆரம்பச் சொல்- கடற்கராய்
4.    யாழ் மாவட்டத்தில் பதிவான பால்நிலை அடிப்படையிலான வன்முறைகள் பிரதேச செய்லதிகாரியாக- உதயணி நவரத்தினம்
5.    அம்மனுக்கு மனைவியாகும் சிறுமிகள்- ரவிக்குமார்.
6.    ‘சமூகத்தில் பெண்கள் உதிர்நோக்கும் பிரச்சினைகள்’ நற்பிட்டிமுனை தமிழ்ப் பிரதேசத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சமூகவியல் ஆய்வு- ஜெனிதா மோகன்
7.    இலங்கை தோட்டப் பெண்களும் அயலவர் பெண்கள் குழுக்களும்- லோகாஷினி தங்கையா
8.  Sans Maison- பிரஞ்சு திரைப்படம் பற்றிய ஒரு விமர்சனக் கண்ணோட்டம்- எம்.கே.முருகானந்தன்.
9.    நவீன இலக்கியக் கொள்கைகளை தமிழ் சூழலுக்கு ஏற்ப வடிவமைத்து இலக்கியம் படைக்க வேண்டும்- அகில்
10.    சங்கப் பாடல்களில் பெண்ணின் உடல்- தி.சு.நடராசன்
பெண்ணியம், பால்நிலை பாகுபாடு ஆகியவற்றில் ஈடுபாடுள்ளவர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய இதழ் என்பதில் ஐயமில்லை.
ஆனால் பெண்ணியம், பால்நிலை பாகுபாடு ஆகியவவை பற்றித் தேடி வாசியுங்கள், தீர விவாதியுங்கள். கட்டுரைகளாகப் பதிவு  செய்யுங்கள்.
பிரதம ஆசிரியர்
•    செல்வி திருச்சந்திரன்
ஆசிரியர் குழு
•    தேவகௌரி மகாலிங்கசிவம்
•    மகேஸ் வைரமுத்து
•    சிவமணி பரராஜசிங்கம்
ஆகியோர் ஆகும்.
தொடர்புகளுக்கு:-
Women’s Education and research center
58,Dharmarama road
Wellawatta
Cololmbo 0.6
Sri Lanka

Read Full Post »

>

ஆழமான வாசிப்பிற்கான சஞ்சிகைகளின் வரவு இலங்கைத் தமிழிலில் மிகக் குறைவாக இருக்கிறது. அதுவும் உளவியல் சமூக தளங்களில் மிகக் குறைவு என்றே சொல்ல வேண்டும்.

இந்த வகையில் பார்க்கும்போது ஆறுதல் என்ற உள சமூக இதழின் வரவு மகிழ்ச்சியளிக்கிறது.

இதன் இரண்டாவது வரவு ஜனவரி- மார்ச் இதழாக அண்மையில் கிடைத்தது. இந்த இதழில் கட்டிளம் பருவம் தொடர்பான பல்வேறு ஆக்கங்கள் இடம் பெறுகின்றன.

இதழ் ஆசிரியர் உரையான “உங்களுடன் ..“ காத்திரமாக அமைந்துள்ளது. பொதுப் புத்தி சார்ந்து சிந்திக்காது மாற்று வழியில் எம்மைச் சிந்திக்கத் தூண்டுகிறது.

“இன்று பரவலாக கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகளையே பெரும் சமூகப் பிரச்சினைகளாக நோக்கும் மனப்பாங்கு செல்வாக்குப் பெற்றுள்ளது” என்கிறார்.

ஆனால் கட்டிளமைப் பருவத்தினரது பிரச்சனைகள் என்று கருதுவது சரியானதா. உண்மையாக அவர்கள் பிரச்சனையாக இருக்கிறார்களா அல்லது சமூகம் அவர்களைச் சரியாகப் புரிந்து கொள்ளாதிருந்து பிரிச்சனை என்கிறதா?

“எம்மீது ஆக்கிரமித்துள்ள மோசமான பார்வைகள் புரிதல்கள் பிடியிலிருந்து எம்மை எவ்வாறு விடுவிப்பது? இதுபோன்ற பல வினாக்களுக்கு பதில்கள் அல்லது விளக்கங்கள் தேடிக்கொள்ள வேண்டிய கடப்பாடும் எமக்கு இருக்கிறது. இந்த நோக்கத்திற்காகவே இந்த இதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது”  என்கிறார்.

இந்த இதழில் அடங்கும் கட்டுரைகளாவன

  1. மனநிலை மாற்றங்களும் விளைவுகளும் – தொகுப்பு ஆத்மன்
  2. மனதில் ஒரு சுனாமி – மருத்துவர்.என்.கங்கா
  3. புரிதல்கள் தேவைப்படும் பருவம் – க.சுவர்ணராஜா
  4. நாளைய உலகம் உங்கள் கையில் – மருத்துவர்.எம்.கே.முருகானந்தன்
  5. உணவும் ஆரோக்கியமும் – தொகுப்பு ஆத்மன்
  6. இளையோர்: அடையாளமும் அரசியலும் – அ.றொபின்சன்
  7. இசை தொடர்பான சீர்மியமும் – சபா.ஜெயராசா
  8. காதல் காதல் காதல் – புவிராஜ்
  9. உதிர்வு – நெடுந்தீவு மகேஷ்
  10. மன அழுத்த முகாமைத்துவம் – சு.பரமானந்தம்
  11. சமூகநிலை உளவளச் செயற்பாடு – பேரா.தயா.சோமசுந்தரம்

மருத்துவர்.என்.கங்கா அவர்களது கட்டுரை கட்டிளம் பருவம் பற்றிய விரிவான விளக்கத்தைத் தருகிறது. கட்டிளம் பருவம் என்றால் என்ன? அவர்களது விசித்திர குணங்கள், விடலையரின் ஏக்கங்கள் என்ன? இவ்விடயத்தைப் பெற்றோர்கள் எவ்வாறு அணுக வேண்டும் என விளக்குகிறது.

மருத்துவர்.எம்.கே.முருகானந்தனது கட்டுரை கட்டிளம் பருவத்தினரை நோக்கி எழுதப்பட்டதாகும். உணவும் போஷாக்கும், போசாக்குக் குறைபாடு, சமபலவலு உணவு, பாலியல் மற்றும் இனவிருத்தி அறிவை வளர்த்துக்கொள்ளல், பாலியல் கல்வி, இளமைப் பருவத்தினர் கிளினிக்குகள், பாலியல் அத்துமீறல்கள், கருச்சிதைவு, உளநலம், போதைப்பொருள் பாவனை, வன்முறையை நிராகரியுங்கள் ஆகிய உபதலைப்புகளில் விளக்கங்களைத் தருகிறது.

பேரா.தயா.சோமசுந்தரம் அவர்களது கட்டுரை மிக முக்கியமானது. கருத்துச் செறிவு கொண்டது. வடகிழக்கு பகுதிகளில் யுத்தச் சூழலில் மாணவர்கள் இடையே செய்யப்பட்ட ஆய்வுகள் அனுபவங்களின் அடிப்படையில் எழுதப்பட்டதாகும். ‘ஆசிரியர்களை உளவளத் துணையாளர்களாகவும், நட்புதவியாளர்களாகவும் பயிற்றுவித்தல்’, ‘ஆசிரியர் உளவள துணையாளர்களின் பொறுப்பும் கடமைகளும்’ பற்றி மிக விரிவாகப் பேசுகிறது.

பேரா.சபா.ஜெயராசாவின்  கட்டுரை இசையின் சமூக அரசியலைப் பேசுவதுடன் அதன் எதிர்மனவெழுச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றலையும் விளக்குகிறது.

‘உதிர்வு’ ஒரு சிறுகதையாக பாடசாலையில் ஏற்படும் சம்பவம் ஊடாக கட்டிளம் பருவ உணர்வுகள் பற்றிய புரிதலை ஏற்படுத்த முனைகிறது.

நீளங் கருதி ஏனைய கட்டுரைகள் பற்றிக் கூறாவிட்டாலும் அவை ஒவ்வொன்றும் கட்டிளம் பருவத்தின் பல்வேறு பரிமாணங்களையும் கருத்தில் கொண்ட சிறந்த கட்டுரைகளாகும்.

திரு.தெ.மதுசூதனன் அவர்களை ஆசிரியராகவும், திரு.சுந்தரம் டிவகலாலா அவர்களை நிருவாக ஆசிரியராகவும் கொண்டு வெளிவரும் இதழ் இது.

பொதுவான வாசிப்புக்கு ஏற்ற வகையில் இலகுவாக எழுதப்பட்டுள்ளதாயினும் பெற்றோர்கள், ஆசிரியர்கள், விரிவுரையாளர்கள்,  சமூகவியலாளர்கள், ஆற்றுகைப்படுத்துவோர் போன்றோருக்கு மிகவும் பயனளிக்கும் என்பதில் சந்தேகமில்லை.

விலை:- ரூபா 100/=

வெளியீடு:-
“ஆறுதல்”
இல.09,முதலாவது ஒழுங்கை
லிங்கநகர், திருகோணமலை
இலங்கை

இணையதளம் :- http://www.aaruthal.org
மின்னஞ்சல் :- aaruthaltrinco@gmail.com
படைப்புகள் அனுப்ப :- 2010aaruthal@gmail.com

Read Full Post »

>

அவ்வழியே பஸ்சில் பிரயாணம் பண்ணும் போது மனசும் கண்களும் குளி்மையில் நிறையும்.

காற்றினில் அசைந்தாடும் பச்சம் பசிய நிற வாழை இலைகள். அவற்றைத் தாங்கி நிற்கும் மஞ்சள் நிறத் தூண்கள் போன்ற வாழை மரங்கள். இவற்றைப் போசிக்கும் செந்நிற மண்.  பசுமையும் குளிர்ச்சியும் நிறைந்த ஊர் அது.

வாழைக் குலைகளைக் கண்டாலும் நினைவுக்கு வருவது அந்த நீர்வேலிக் கிராமம்தான்.

வெளிநாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் இலட்சக்க கணக்கான இலங்கையரில் நீர்வேலி மக்களும் அடங்குவர். கனடாவில் வாழும் இவர்களில் பலர் ஒன்றிணைந்து வருடாவருடம்  ஒவ்வொரு மலரை வெளியிட்டு வருகின்றனர்.

டிசம்பர் 2010 ல் வெளியான இவர்களது ‘வாழையடி வாழை 2010’ நான்காவது மலர் பார்வைக்குக் கிட்டியது. எழுத்தாற்றல் இருந்தும் இலைமறை காயாக இருக்கும் தம்மவர்களது படைப்புகளை வெளிக்கொண்டு வருவதே இந்த மலரின் நோக்கம் என ஆசிரியர் அன்பழகன் தனது முன்னுரையில் கூறுகிறார்.

வாழ்த்துகள் செய்திகள் புகைப்படங்கள் போன்றவற்றிற்கு அப்பால் சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் எனப் பல படைப்பாக்கங்களையும் காணக் கிடைக்கிறது.

அதில் சிரசு போல அமைகிறது நீர்வை கிராமத்திற்கு  தனது முற்போக்கு கொள்கைகளாலும், தனது சிறந்த சிறுகதைப் படைபுகளாலும் பெருமை சேர்த்த நீர்வை பொன்னையன் அவர்களது ‘மூடுதிரை’ என்ற சிறுகதையாகும். விடுதலைப் போராட்ட காலத்தின் ஒரு இருண்ட பக்கத்தை இக்கதை வெளிப்படுத்துகிறது.

மோகன் கார்த்திகா எழுதியது ‘வாழ்வெனும் போரட்டத்தில் நான்’ என்ற படைப்பாகும். நினைவலையா, சிறுகதையா என்ற மயக்கத்தை ஏற்படுத்தினாலும் ஒரு நல்ல படைப்பாகும். எதை இழந்தாலும் முயற்சியையும் தன்னம்பிக்கையையும் இழக்காது இருந்தால் வாழ்வில் குப்பை மேட்டிலிருந்து குன்றின் உச்சிக்கும் செல்ல வழிபிறக்கும் என்பதை வலியுறுத்தும் படைப்பாகும்.

த.சிவபாலு எழுதிய “தொட்டில் பழக்கம் சுடுகாடு வரையும் என்பது மாற்றப்பட முடியாததா?- நாமும் எமது எமது பழக்கவழக்கங்களும் என்ற கட்டுரையும் விதந்து சொல்லக் கூடியது. எம்மை நாமே அறிந்து திட்டமிட்டு, வெற்றிகான சூழ்நிலையை உருவாக்கி முழுமுயற்சியோடு செயற்பட்டு முன்னேறும் வழியைக் காட்டும் நல்ல கட்டுரையாகும்.

ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள மருத்துவக் கட்டுரையொன்றும் மிகவும் பயனுள்ளது. Why is Osteoporosis an important public health issue by Dr.Radhika Natgunarajah. Osteoporosis என்றால் என்ன, அதைக் கண்டறிவது எப்படி? அது வராமல் தடுப்பதற்கான வழிமுறைகள் எனப் பலவற்றையும் சுருக்கமாகத் தருகிறது.

வீட்டை விற்பது எப்படி, சேமிப்புத் திட்டம், விளையாட்டும் நாமும், சொர்க்கத்தில்  நிச்சயிக்கப்படும் திருமணமே… என்ற கட்டுரை என மேலும் பலவும் நிரவிக் கிடக்கின்றன.

தொடர்புகளுக்கு:- editor@neervely.ca
64 Lockheed Crescent, Brampton
Ontario. L7A 3G4, Canada

Read Full Post »

>வாசிப்பு மனிதனை அறிவாளியாக்குகிறது, கலை உணர்வு நோக்கிய மனத்தை வார்த்து எடுக்கிறது. சமூக அக்கறையை வளர்க்கிறது. பண்புள்ளவனாக ஆக்குகிறது என்றெல்லாம் கூறுகிறார்கள்.

ஆனால் இன்று பெரும்பாலனவர்களுக்கு வாசிப்பதில் அக்கறையில்லை.

வேறு பலருக்கு நல்லனவற்றைத் தேர்ந்தெடுத்து படிக்கத் தெரியவில்லை. நல்லன எவை என்பது புரியவும் இல்லை. அவற்றை அறிமுகப்படுத்துவார் யாரும் இல்லை. இதனால்தான் மரவு வழிச் சிந்தனைகளை மீறும் துணிவு இன்றி குண்டுச் சிரட்டைக்குள் குதித்துக் கெக்கலித்து கும்மாளமிட்டு சுய பாராட்டில் சுகம் காண்கிறோம்.

தேடுதலும் வாசிப்பும் அரிதாகிப் போனதால்தான் புத்தாக்கச் சிந்தனையின்றி உயிர்ப்பற்ற படைப்புகளை உற்பவிக்கும் யந்திரங்களாக எமது படைப்பாளிகள் பலர் இயங்குவதை அவதானிக்க முடிகிறது.

இந்த நிலையில் “தமிழில் காத்திரமான சிந்தனைக்கும் படைப்பாக்க உருவாக்கத்திற்கும் களம் அமைக்கும் வகையில் ‘சேமமடு பொத்தக செய்திமடல்’ வெளிவருகிறது. தொடர்ந்து நல்ல வாசிப்புச் செயற்பாட்டில் புதிய போக்கை உருவாக்க இந்த இதழ் விளைகிறது” என அதன் ஆசிரியர் தலையங்கம் கூறுவதுடன் நானும் கருத்து ரீதியாக ஒன்றுபடுகிறேன்.

மீளவும் படிக்க வேண்டும் என்ற ஆவலைத் தூண்டும் ஆசிரியர் தலையங்கம் மிக ஆழமான கருத்தோட்டமும், மொழி லாவண்யமும் கொண்டதாக இருக்கிறது.

எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நூல்களை வெளியிட்டால் மட்டும் போதாது அதற்கு அப்பால் நேரடியாகச் சந்திக்கும் தருணங்களும் தேவை. கூட்டம் கலந்துரையாடல் என்ற மரபார்ந்த முறைகளுக்கு அப்பால் இத்தகைய செய்தி மடல்களும் நிச்சயம் உதவும் என எண்ணத் தோன்றுகிறது. செய்தி மடல் எனக் குறிப்பிட்டிருந்த போதும் அதன் உள்ளடக்கக் கனதியானது பல தற்கால சஞ்சிகைகளை விஞ்சி நிற்கிறது.

சிறப்புக் கட்டுரைகள்

காலனித்துவம் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் அறிவுக் காலனித்துவம் பற்றி?

நுகர்ச்சிவாத முதலாளியத்துடன் தொடர்புடைய கல்விமுறைமையும், நூலாக்கங்களும் உலகெங்கும் பெருக்கெடுக்கும் ஆட்சிநிலை தலைதூக்கியுள்ளது. அறிவை முதலீடாகக் கொண்ட பொருளாதாரம் வளர்கிறது. அறிவு முதலீடாகிறது. இது நல்லதுதான்.

ஆனால் நடப்பது என்ன?

அறிவின் உற்பத்தியும், பங்கீடும், சந்தைப்படுத்தலும் பெரிய முதலாளிய நிறுவனங்களின் கையில். புதிய கண்டுபிடிப்புகள், தனியுரிமைப் பதிவுகளுக்கு உள்ளடங்குகின்றன. இது புதிய காலனித்துவமாக, அறிவுக் காலனித்துவமாக நம்மைச் சுரண்டுகிறது.

இத்தகைய கருத்துகளை சபா.ஜெயராசாவின் கட்டுரையில் காணலாம். ‘அறிவுக் காலனித்துவமும் மாற்று வாசிப்புச் செயற்பாடுகளும்’என்ற தலைப்பில் சிறப்புப் பார்வையாக அமையும் இக் கட்டுரை அவசியம் படிக்க வேண்டியதாகும்.

இதேபோல சிறப்புப் பார்வையாக அமையும் மற்றொரு கட்டுரை பிரபல எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் ‘நானும் வாசிப்பு உலகமும்’ ஆகும். தனது வாசிப்பு அனுபவங்களைச் சுவார்ஸமாகப் பகிர்ந்து கொள்கிறார். “புத்தகம் கண்களால் வாசிக்கப்பட்டாலும், செவியால் நுகரப்படுவதும், நாவால் ருசிக்கப்படுவதும், உணர்ச்சிகளால் தொட்டு உணரப்படுவதுமாக ஒரு மாய விளையாட்டையே நிகழ்த்துகின்றன.” என ஓரிடத்தில் சொல்வது பரவசப்படுத்துகிறது.

மு.பொன்னம்பலம் அவர்களின் ‘வாசிப்பதும் வாசிக்கப்படுவதும்’ வாசிப்பின் முக்கியத்துவத்தை மூன்று முகங்களாகப் பாரக்கிறது. இம் மூன்று கட்டுரைகளும் வாசிப்பு, அறிவு பற்றிய பொதுவான கட்டுரைகளாக இருக்கின்றன.

நூல் அறிமுகக் கட்டுரைகள்

ஆனால் இந்த செய்தி மடலின் முக்கியமாக அடங்கியுள்ளவை பல நல்ல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளாகும்.

போர் சூழலில் பல வருடங்களாக வாழ்ந்த என்னை மிகவும் கவர்ந்த கட்டுரை போர்க்கலை பற்றிய ஒரு சீன நூலாகும். கன்ஃபியூஷிஸ் மற்றும் லாவோட்சே ஆகியோருக்கு சுமார் 100 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த சன் சூ அவர்களது நூலாகும்.

தேசம் என்றால் போர் இன்றியமையாதது என்ற நிலையிருந்த காலத்தில் இராணுவவீரர்களுக்கு பயிற்சி அளித்தவர் அவ்வப்போது எழுதிய தன் அனுபவக் குறிப்புகளை தொகுத்து பின்னர் நூலாக்கப்பட்டதாகும்;. 1772ல் ப்ரெஞ்சு மொழியில் இது மொழிமாற்றம் செய்யப்பட்டது. இப்பொழுது தமிழாக்கம் செய்யதவர் ஆர்.நடராஜன் ஆகும்.

மேலும் பல நூல்கள் பற்றிய அறிமுகக் கட்டுரைகளின் விபரங்களைப் பாருங்கள்.

கல்விக் கோட்பாடுகளும் மாற்றுச் சிந்தனைகளும் – சபா. ஜெயராசா
வார்சாவில் ஒரு கடவுள் தமிழவனின் நாவல் மீதான விமர்சனங்கள்- சிவசு
அரசறிவியல் ஒரு அறிமுகம் – ஏ.சி.ஜோர்ஜ்
யுத்தம் செய்யும் கலை – தமிழில் ஆர்.நடராஜன்
கல்வியும் உளவியலும் – ச.முத்துலிங்கம்
கலைத்திட்ட மாதிரிகைகள் – கி.புண்ணியமூர்த்தி
கதைமொழி – எஸ்.சண்முகம்
வெட்சி – தமிழகத் தலித் ஆக்கங்கள்-  தொகுப்பு நூல்
திரைகடலோடியும் துயரம் தேடு – யோ.திருவள்ளுவர்
மௌனத் தூதன் ஜெர்மன் கவிதைகள் ஓர் அறிமுகம்
அபிவிருத்தியின் சமூகவியல் – கந்தையா சண்முகலிங்கம்
உலகக் கல்வி வரலாறு – சபா. ஜெயராசா

இன்னும் பல சிறப்பான நூல்கள் பற்றிய நல்ல கட்டுரைகளால் இதழ் நிறைந்திருக்கிறது. இவை யாவும் அறிமுகம், புதுவரவு, சேமமடு புதுவரவு, பத்மம் புதுவரவு, களஞ்சியம் போன்ற உபதலைப்புகளின் கீழ் வெளியாகியுள்ளன.

இவை தவிர புதுவரவு என்ற தலைப்பில் பல சுருக்கமான நூல் அறிமுகங்களும் இடம் பெற்றுள்ளது. ஏற்கனவே மூன்று இதழ்கள் வெளிவந்துள்ளன. இது அதன் நாலாவது இதழ். விலை ரூபா 30 எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

வாசிப்புப் பயணம் விரியட்டும்

“சமகாலத்தில் விரிவுபடும் சிந்தனைகள் படைப்பாக்க களங்கள் நோக்கி நாம் உறுதியான ஆத்ம பயணத்தை – வாசிப்புப் பயணத்தை ஆரம்பிக்க வேண்டும். இதற்கான ஆற்றுப்படுத்தலாகவே இந்தச் செய்திமடல் வெளிவருகிறது” என இதழ் ஆசிரியர் கூறுகிறார். இதைப் பயன்படுத்த நாம் முன்வர வேண்டும்.

வாசிப்பு, இலக்கியம், அறிவுத் தேடல் ஆகியவற்றில் ஆர்வமுள்ளவர்கள் தப்பவிட முடியாத இதழ் எனலாம். தெரிந்த சிலர் அதன் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ளவில்லை. பலர் இப்படியான இதழ் வருவதை அறிந்திருக்கவில்லை என்பதும் தெரிகிறது. தெரிந்த சிலருக்கு அதனைப் பெற்றுக் கொள்ளும் வழி தெரியாதுள்ளது.

ஆர்வமுள்ள நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். விபரங்கள் கீழே.

ஆசிரியர் :- தமிழாகரன்,
நிர்வாக ஆசிரியர்:- சதபூ.பத்மசீலன்

தொடர்புகளுக்கு:- 
சேமபடு பொத்தகசாலை
யூ.ஜீ.50 பீப்பிள்ஸ் பார்க்
கொழும்பு 11.
மின்னஞ்சல்:- chemamadu@yahoo.com

தொ.பே:- 011 2472362

எம்.கே.முருகானந்தன்.
0.0.0.0.0.0.0

Read Full Post »

>அண்மையில் ஜீவநதி ஆண்டு மலர் படிக்கக் கிடைத்தது. அருமையான பல கட்டுரைகள், சிறுகதைகள், கவிதைகள் என நிரவிக் கிடந்தது.

அதில் ஸ்ரீரஞ்சனி என்ற ஒரு எழுத்தாளரின் படைப்பான சிறுகதையைப் பற்றி சில கருத்துக்களைக் கூறலாம் என நினைக்கிறேன். மிக வித்தியாசமான சூழலில் அமைந்த கதைதான் ‘உள்ளங்கால் புல் அழுகை’.

இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் வாழும் எமக்கு அந்நியமான ஒரு பிரச்சனை பற்றிப் பேசுகிறது. களம் புதிது, காரியம்; புதிது. ஆனால் அதிலுள்ள அடிப்படைப் பிரச்சனை அனைவருக்கும் பொதுவானது.

ஓரு பெண் குழந்தையின் பார்வையாக சிறுகதை சொல்லப்படுகிறது. சொல்லப்படும் விதத்தைப் பொறுத்த வரையில், நிகழ் காலத்தில் ஆரம்பித்து, கடந்த காலத்தில் நனைவது எமக்கு ஒன்றும் புதினமானது அல்ல. ஆனால் எதிர்காலத்தில் கால் பதித்து நிறைவுறுவது சற்று தாக்கத்திற்குரிய மாற்றமாகத் தென்படுகிறது.

ஒரு குழந்தையின் பண்புகளை, நடவடிக்கைகளை தீர்மானிப்பதில் சமூகத்தின் பங்கு எவ்வளவு ஆழமானது என்பதை முகத்தில் ஓங்கி அறைவது போலச் சொல்லி முடிகிறது. ஆனால் ஆசிரியர் கூற்றாக அல்ல. எமது சிந்தனையை விரிவிப்பதன் மூலம் நாமாக புரிந்து கொள்ள வைப்பதே அதன் சிறப்பு.

குற்றம் செய்த தகப்பனைத் தண்டித்து, நோயுள்ள தாயை பிள்ளைகளிடமிருந்து பிரித்து மருத்துவம் செய்யப்படும்போது, இவை எவற்றிலும் சம்பந்தப்படாத குழந்தை மனிதாபமின்றித் தண்டிப்புக்கு ஆளாவதையே இச் சிறுகதை பேசுகிறது.

புதிர் போல ஆர்ம்பிக்கிறது கதை. “மை நேம் இஸ் ரோசி.வட்ஸ் யுவர் நேம்” குழந்தை பேசாமல் நிற்கிறது.

“சோ யு ஆர் நொட் ரெடி ரு ரோக் ரு மீ”

நன்றாக ஆங்கிலம் பேசக் கூடிய தமிழ்க் குழந்தை இது. இவளைப் பராமரிப்பதற்கான இடத்திலுள்ள பெண் அவ்வாறு பேசுகிறாள். அவளைப் பாரத்ததும் தனது ஸ்கூலில் ரீச்சர் வராத நாட்களில் வரும் சப்பிளை ரீச்சர்தான் ஞாபகத்திற்கு வருகிறது. ஏனெனில் இவளது வழமையான ரீச்சரைப்போல அல்லது அம்மா போல பிள்ளையில் அன்பும் கரிசனை உள்ளவர்களாக இல்லை.

சம்பளம் வாங்கிப் பணி புரியும் பெண்தான் ரோசி. அவள் அம்மா போல இருக்க முடியாது. தாயைப் பிரிந்து தனியே புது இடத்திற்கு வந்திருக்கும் குழந்தையின் சோகத்தை, ஏக்கத்தைப் புரிந்து கொள்ளாத வெறும் ஊழியர் அவர். சாப்பிட மாட்டேன் என மறுக்கும் குழந்தைக்கு ஆறுதல் வார்த்தை கூறத் தெரியாதவள்.
“அபர்ணா வில் டேக் கெயர் ஒவ் யூ” எனச் சொல்லித் குழந்தையின் பாலான தன் கடமையை முடித்துக் கொண்டு பைல் லுக்குள் மூழ்கமட்டும் தெரிந்த கடமையுணர்ச்சியுள்ள பெண் அவள்.

ஏன் அவள் பெற்றோரைப் பிரிந்தாள் என்பது நினைவோட்டமாக வருகிறது. வழமையாக தாய் தகப்பனுக்கு இடையேயான முறுகல் அன்று சற்று தீவிரமாகிவிட்டது. தகப்பன் தாயின் தலை முடியைப் பிடித்து அடிக்க அவள் குளற, பக்கத்து வீட்டுக்காரன் பொலீசுக்கு போன் பண்ண பொலீஸ் அவனைப் பிடித்துக் கொண்டு போய்விட்டது. தாயையும் மனநிலை பிறந்தவள் என அழைத்துப் போய்விடுகிறது.

சிறுகுழந்தையான இவளது தங்கையுடன் இவளையும் வீட்டில் வைத்துப் பராமரிக்க முடியாது என்பதால்தான் இவள் காப்பகத்திற்கு வர வேண்டியதாயிற்று. தாய் இல்லை. தந்தையில்லை. கூட விளையாடும் தங்கையும் இல்லை. கடல் மீனைக் கரையில் தூக்கிப் போட்டது போலாயிற்று அக் குழந்தையின் நிலை.

எவ்வளவு சமூக அக்கறை அற்ற மனிதர்களாக மாறிவிட்டது உலகம். தனது அமைதியான வாழ்வில் அடுத்த வீட்டுச் சத்தம் கூட குறுக்கிடக் கூடாது என நினைக்கும் நிலைக்கு வந்துவிட்டது. பாரம்பரிய சமூகமாக இருந்தால் அடுத்த வீட்டுப் பிரச்சனையில் தலையிட்டுத் தீர்த்து வைத்திருக்கும் அல்லது பிரச்சனை வரும்போது ஒத்தாசையாக நின்று உதவியிருக்கும். ஆனால் இவர்களுக்கு பொலீசைக் கூப்பிட்டு பிரச்சனையைப் பெருப்பிக்கவே தெரிகிறது.

குடும்பம் சிதைகிறது. குழந்தைகள் நிர்க்கதியாகின்றனர். ஆனால் யாரையும் குற்றம் சொல்ல முடியாது. ஏனெனில் அவர்கள் சட்டப்படியே நடக்கின்றனர்.

ஆனால் குழந்தையின் மனநிலையைப் பற்றி யாருமே கவலைப்படவில்லை. குழந்தையின் ஏக்கம் தனது அம்மாவுடன், அவளது அன்பில் தோய்ந்து, அரவணைப்பில் கட்டுண்டு மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். தனது முன்னைய வாழ்வுக்குத் திரும்ப வேண்டும் என்பதே. அதற்கு என்ன செய்ய வேணடும் எனச் சிந்திக்கிறது.

அந்தப் பிள்ளை எடுக்கும் முடிவுதான் அதிர்ச்சியாக இருக்கிறது. வன்முறையின் மூலமே தனது தேவையைப் பூர்த்தி செய்ய முடியும், அதன் மூலமே பொற்காலமான பழைய வாழ்வு கிடைக்கும் என எண்ணத் தோன்றுகிறது.

“நான் பிரளி பண்ண வேண்டும், சாமான்களைப் போட்டு உடைக்க வேண்டும். அப்பொழுதுதான் ரோசியால் என்னைச் சமாளிக்க முடியாது போய்விடும். என்னை அம்மாவிடம் கொண்டு போய் விட்டுவிடுவாள்” என அந்தப் பிஞ்சு மனம் சிந்திக்கிறது.

வன்முறை தவிர்த்த சரியான வழியில் குழந்தைகளைச் சிந்திக்க வைக்க எமது சமூகம் சரியான வழி காட்டுமா?

அல்லது பழைய குருடி கதவைத் திறவடி கதைதானா?

நல்ல சிறுகதையைத் தந்த எழுத்தாளர் ஸ்ரீரஞ்சனிக்கும் ஜீவநதி சஞ்சிகைக்கும் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்.

எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0

உள்ளங்கால் புல் அழுகை’ சிறுகதையைப் படிக்க
தேவையான பகுதிமேல் கிளக் பண்ணிப் பெரிதாக்கிப் படிக்கவும்.

  இரண்டாம் பகுதி

 மூன்றாம் பகுதி

நாலாம் பகுதி

ஐந்தாம் பகுதி

நன்றி ஜீவநதி

Read Full Post »

>பெண்களின் குரல் பலதருணங்களில் மௌனமாகவே ஒலிக்கிறது. ஆணாதிக்கத்தால் அமுக்கப்படுகிறது.

பெண்களின் ஆதங்கத்தைப் பலரும் புரிந்து கொள்கிறார்கள் இல்லை. புரிந்து கொள்ளப் பிரியப்படுவதுமில்லை.

குடும்பம், சமூகம், அரசியல், தேசியம் ஏன் மதங்களில் கூட பெண்களின் உணர்வுகளை உதாசீனப்படுத்துகிறார்கள். நையாண்டி பண்ணுகிறார்கள். மதிப்பு அளிக்கப்படுவதில்லை.

ஆனால் என்றும் இவ்வாறு இருந்துவிட முடியாது. கேள்வி எழுப்ப வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. அவர்கள் குரல் இப்பொழுது பல இடங்களிலும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது.

அடங்கிக் கையேந்தும் குரல்களாக அல்ல, உரிமைக்காகக் ஓங்கி ஒலிக்கும் குரல்களாக. தமது ஆளுமைகளை உறுதிப்படுத்தும் வார்த்தைகளாக.. நிவேதினியும் அத்தகைய ஒரு குரல்தான்.



பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் சஞ்சிகையான நிவேதினி இதழ் 12 படிக்கக் கிடைத்தது. அந் நிறுவனத்தினால் 2007ம் அண்டு கார்த்திகை மாதம் 30ம் திகதியும், மார்கழி 1ம் திகதியும் நடாத்தப்பட்ட கருத்துரைகளின் தொகுப்பாக இந்த இதழ் மலர்ந்துள்ளது.

‘தேசியம், மதம், அரசியல் வாழ்வியல் போன்றவற்றில் ஊடுருவி நிற்கும் ஆண் தலைமைத்துவத்தை எதிர் கொள்ளும் பெண் நிலைவாதம்’ என்பதே அந்த கருத்தரங்கின் தொனிப்பொருளாக இருந்தது.

நவீன இலக்கியத்தில் பெண்களின் குரல் எவ்வாறு ஒலிக்கிறது என்பதை கட்டுரை, கவிதை, நாடகம், நாவல் எனத் தனித்தனியாகவும், வேறுசிலர் பொதுப்படையாகவும் இந்நூலில் பார்க்க முயல்வதை காணமுடிகிறது.

போர் ஓய்ந்துவிட்ட சூழலில் இன்று போருக்கு எதிரான குரல்களும், அது பற்றிய வெளிப்படையான விமர்சனங்களும் தமிழ்பேசும் மக்களிடம் இருந்தும் சற்றுத் துணிவுடன் எழுவதைக் காண முடிகிறது.

ஆனால் போர் ஒன்றே தமிழ் மக்களின் இருப்பைத் தக்க வைக்கும், அதன் ஊடாகவே தங்களுக்கு எதிரான அரசியல் ஒடுக்கு முறைகளுக்கு முடிவு காண முடியும் என்று நம்பப்பட்ட சூழலிலும், போருக்கு எதிரான குரல்கள் பெண்களின் கவிதைகளிலிருந்து எழுந்ததை சித்ரலேகா மௌகுரு தனது ஆய்வுக் கட்டுரையில் எடுத்துக் காட்டுகிறார்.



போரினால் விளையும் அர்த்தமற்ற அகால மரணங்கள் போரைக் கொண்டு நடத்துவோருக்கு வெறும் எண்ணிக்கைகள் மட்டுமே. ஆனால் ஒவ்வொரு தனிப்பட்ட நபர்களுக்கும் அவை ஈடுகட்ட முடியாத துயரங்களாகும். அவ்வகையில் மரணத்தின் வலி பெண்கள் பலரின் கவிதைகளில் பேசப்பட்டன. போர் பற்றிய அவர்களது மன உணர்வுகளும், விசாரணையும், விமர்சனங்களும் கவிதையில் எடுத்தாளப்படுவதை கட்டுரையாளர் குறித்துக் காட்டுகிறார்.

சாதாரண பெண்கள் மட்டுமின்றி களப்போராளிகளாக இருக்கும் பெண்களின் கவிதைகளில் கூட மரணம் தரும் வலி மிக வலுவாக வெளிப்படுவதை ஒரு தற்கொலைப் போராளியின் கவிதையிலிருந்து எடுத்துக் காட்டுகிறார்.

சாதாரண மரணவலியை விட வெளியே சொல்ல முடியாத மரணத்தின் வலி கடுமையானது மட்டுமின்றி அபாக்கியமானதும் கூட.

‘குருசேஷத்திரத்தில் கர்ணன் விழ

ஐயோ மகனே என்று குந்தி

ஓடிச்சென்று அணைத்தாளே

ஐயோ ராசா நான் பாவி

என் பிள்ளை என்று சொல்ல

முடியாத பாவியானேன்…’ (சன்மார்க்கா 1986)

சந்தேக நபர்கள் மட்டுமின்றி உறவுகளும் குறிவைக்கப்படுகையில், தன் மகன் எனக் கூறி கட்டியழுது துயர் ஆற்ற முடியாத நிலையை இக்கவிதை எடுத்துக் கூற,

‘யுத்தங்களை நிறுத்துங்கள்

ஒரு தாயாகவும் பெண்ணாகவம்

இனியும் பொறுக்க முடியவில்லை என்னால்..’

என மல்லிகாவும் (1993)

‘இன்னுமா தாய்நிலம் புதல்வர்களைக் கேட்கிறது’

என ஒளவை (2000) ஓங்கிக் குரல் எழுப்புவதையும், மற்றொரு இடத்தில் மண்ணுக்கான போர் என்ற கருத்தாக்கத்தையே அவர் நிராகரிப்பதையும் சுட்டிக் காட்டுகிறார்.

இவ்வாறு பேசும் ‘போரையும் அரசியல் வன்முறையையும் எதிர்க்கும் பெண் கவிதைக்குரல்’ என்ற சித்திரலேகா மௌனகுருவின் கட்டுரை நல்ல வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது.

‘பெண்நிலைவாதமும் தேசியவாதமும் : ஈழத்துப் பெண் போராளிகளது எழுத்துக்களின் அடிப்படையில் சில புரிதல்கள்’ என்பது செ.யோகராசாவின் ஆய்வுக் கட்டுரையாகும்.



இவர் தனது ஆய்வை கவிதைகளுடன் மட்டுப்படுத்தாது சிறுகதை, நாடகம், நாவல் ஆகியவற்றிற்கும் விஸ்தரிப்பதால் மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.

இவர் தனது ஆய்வின் அவதானிப்பில் பின்வரும் முடிவுகளுக்கு வருகிறார்

1. தமிழ்ப் பெண்களுள் பலர் தமிழின உணர்வு அடிப்படையில் தமிழீழ விடுதலைப் போராட்டதில் – குறிப்பிட்ட இயக்கத்தில் இணைந்துள்ளனர்

2. எனினும் ஒருசாரார் சமூக பெண்நிலை பற்றிய பிரக்ஞை காரணமாகவம் சேர முற்படுகின்றனர்.

3. எவ்வாறாயினும் தாம் பெண்(போராளி) என்ற உணர்வுடன் காணப்படுகின்றனர். இதனால் தமது முக்கியத்துவத்தையும் செயற்பாடுகளையும் மனஉணர்வுகளையும் வெளிப்படுத்த முற்படுகின்றளர்.

4. இன விடுதலையுடன் – தமிழீழம் கிடைப்பதுடன் – பெண்களது பிரச்சனைகள் தீருமென்று திடமாக நம்புகின்றனர்.

சுமார் 17 பக்கங்கள் வரை நீளும் கட்டுரை இது. விஸ்தாரம் மட்டுமின்றி ஆழமும், திறனாய்வளர்களுக்கே உரிய பகுப்பு முறையும் கொண்ட சீரிய கட்டுரை எனலாம்.

இனவிடுதலையுடன் பெண்விடுதலையும் கிட்டுமென அவர்கள் கண்ட கனவுகள் கருகிப் போன இன்றைய நிலையில் அவர்களது உணர்வுகளைப் படிக்கும்போது சற்று மனசு கனக்கவே செய்கிறது.

உதாரணத்திற்கு ஒரு கவிதை

‘… இறுகிய உணர்வுகள்

வரிப்புலிக்குள் புகுந்ததனால்

விடுதலையின் சிறகசைப்பு

நாணமும் பாவமும்

தாகமும் காமமும்

காடேறிகளிடம் காட்டிவிட்டோம்.’

‘காலக்கனவு: ஒரு பெண்ணிய நாடகத்தின் ஆக்கம்’ என்பது பொன்னி அரசு எழுதிய ஒரு சுவையான கட்டுரை. பெண்ணியம் சார்ந்த ஆறு பெண்கள் காலக்கனவு நாடக தயாரிப்பு மற்றும் ஒத்திகைக்காக ஒரு அறையில் சனி – ஞாயிறுகளில் சந்தித்தபோது பெற்ற அனுபவங்களைப் பேசுகிறது.

தேவதாசி வழக்கம், அதற்கான எதிர்ப்பு, உடலுறவுக்காகப் பணி புரியும் பெண்கள், சுயமரியாதைத் திருமணங்கள், தன்னினச் சேர்க்கை, போன்ற பல விடயங்கள் பற்றி அக் குழுவினர்களிடையே எழுந்த கருத்தாடல்கள் சுவையானவை, தெளிவை நோக்கிய பயணங்களாக விரிகின்றன.

‘ஒருவருக்கொருவர் சொல்லுவதைக் கூர்ந்து கேட்பதும், அங்கீகரிப்பதும் மதிப்புடன் வாதிடுவதும் முக்கிய முறையாக இருந்தது.’ என்கிறார்.

இருந்தபோதும் பெண்ணிய நோக்கத்திற்கான தேடுதலே அடிப்படையாக இருந்தததைக் காணக் கூடியதாக இருந்தது.

‘பான்ட் மாட்டிய, கிராப் வெட்டிய நீ தமிழ் பெண் அல்ல… தமிழ் சமூகத்தில் இப்படி இருப்பதில்லை.’ எனக் கலாசார பண்பாட்டு முகமூடி அணிந்து பெண்களின் மீது ‘கலாசார வன்முறையை’ ஏவுபவர்களை எதிர்கொள்வதும், அவர்கள் சவால்களை முறியடிப்பதும் அவர்களது கூடல் நிகழ்வுகளில் அலசப்பட்டிருக்கிறதை அறிகிறோம்.

ஓன்று கூடல் மற்றும் நாடகப் பயிற்சி நிகழ்வுகள் ஊடாக பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை அலசும் வித்தியாசமான, நுகர்வுக்கு இனிய கட்டுரை இது எனலாம்.

இமையத்தின் ‘செடல்’ ஒரு மிக அற்புதமான நாவல். மூன்று ஆண்டுகளுக்கு முன் படித்தாலும் இன்றும் மனத்தில் நேற்றுப் படித்தது போல நிற்கிறது.

பொட்டுக் கட்டும் வழக்கம் பற்றியும், பாரம்பரிய கூத்தாடி நாடக மரபு, சாதீயம் பற்றியும் மிக ஆழமாகவும் விஸ்தாரமாகவும் பேசும் நாவல் இது. ஒரு களஆய்வுக் கட்டுரையில் காணப்படக் கூடிய பரந்து பட்ட தகவல்களை கொடுத்திருந்தபோதும் மிகவும் அற்புதமாகச் சொல்லப்பட்ட நாவல் என்று மட்டுமே இதை எண்ணியிருந்தேன்.

ஆனால் தாழ்த்ப்பட்ட பெண்கள் எதிர் கொள்ளும் ஆணாதிக்கத்தை மிக அழகாக அலசுகிறார் கட்டுரையாளரான ச.ஆனந்தி. ‘பெண்நிலைவாத தலித் பார்வையில் சாதிய ஆணாதிக்கமும் அடையாள அரசியலும்: இமையத்தின் செடல்நாவல் பற்றிய ஒரு வாசிப்பு.’

ஒரு தாழ்தப்பட்ட சாதிப் பெண்ணானவள் அதிகாரம் படைத்த உயர்சாதியினரின் ஆணாதிக்கத்தால் துயருறுவது மட்டுமின்றி, உயர்சாதிப் பெண்களின் கடுமையான அதிகாரப் போக்கையும் எதிர் கொள்ள நேர்கிறது. அதே நேரம் சாதீயம் தாழ்த்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் பொது எதிரியான போதும், பெண்ணானவள் அதற்கு மேலாக தமது சாதிக்குள்ளேயே இறுகி நிற்கும் ஆணாதிக்கத்திற்கும் முகம் கொடுக்க நேர்க்கிறது.

ஆயினும் கல்வியறிவு அற்றவர்களான அவர்கள் பழைய நம்பிக்கைகளையும் பழக்க வழக்கங்களையும் எதிர்க்கேள்வி இன்றி ஏற்றுக் கொள்வதால் தாங்கள் தங்கள் சாதீயக் கலாசாரத்திற்குள் ஒருவர் மீது ஒருவர் வன்முறையை பிரயோகிப்பதையும் ஆனந்தி சுட்டிக் காட்டத் தவறவில்லை.

செறிவான தலித்தியப் படைப்புகள் அதிகம் வெளிவருகின்ற இன்றைய சூழலிலும் தலித் பெண்ணியப் பார்வை படைப்பாக்கம் பெறுவது அரிதாகவே உள்ளது. சமூக அக்கறையும் தேடுதலும் கொண்ட வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நாவல் செடல்.

அதைத் தொடர்ந்து ஆனந்தியின் கட்டுரையையும் படித்தால் முழுமையான தெளிவும் அனுபவமும் கிட்டும்.



பரபரப்பான சர்ச்சைகளில் பேசப்படும் குட்டி ரேவதியின் கட்டுரை ‘தமிழ் உடலரசியலில் மூன்றாம் பரிமாணம்’ என்பதாகும். அவர் பேசும் கூட்டத்தில் நான் கலந்து கொண்டிருந்தேன். அது பற்றிய ஒரு பதிவையும் எனது ‘மறந்து போகாத சில’ வலைப்பதிவிலும் சேர்த்திருந்தேன்.

கட்டுரையாகப் படிக்கவும் சுவையாக இருக்கிறது. சில உடல் உறுப்புகளைக் குறிக்கும் சொற்களை பெண்கள் தமது படைப்புகளில் எழுதும் போது எழுந்த நியாயமற்ற விமர்சனங்களை அவர் காரமாகக் கடிந்தார்.

‘உடல் தினவெடுத்து கவிதை எழுதவதாக’ ஒரு படைப்பாளியும்,

மற்றொருவர் ‘பெண்ணுடல் ஒரு புதிர், அதை எழுத்தில் வெளிப்படுத்துவது பெண்மைக்கு இழுக்கு’ என்றார்.

‘தமிழின் ஒரே சொல் ஆணால் பயன்படுத்தும் போது அவனது அதிகாரப் பிரயோகமாகவும், பெண் அதே சொல்லைப் பயன்படுத்த இயலாதபடி சமூக இறுக்கமாகவும் வெளிப்படுகிறது. ஆக ஆணின் பயன்பாட்டுக்கு மட்டுமே இருக்கும் சொல்லை நமது பயன்பாட்டு மொழிக்குள் கொண்டுவர வேண்டியிருக்கிறது. மேலும் அந்தச் சொல்லுக்கு வேறு சமூக பண்பாட்டு அர்த்தங்களைக் கொடுக்க வேண்டியுள்ளது’

உடலரசியலின் முதல் பரிமாணமாக பெண் தன் உணர்வுகளை வெளிப்படையாகச் சொல்லும் சுதந்திரத்தையும், இரண்டாவது பரிமாணமாக இன்றை பெண்எழுத்தின் வழியாக போலி பிம்பங்கள் தகர்க்கப்படுவதையும், மூன்றாவதாக ‘தற்கால அரசியலுக்கு முரணான தத்துவத்தையும் இயக்கத்தையும் முன்னெடுத்து வருவதைத் தலித் பெண் படைப்பாளிகள் தமது உடலரசியல் வழியாக எதிர்ப்பதாகவும்’ கூறுகிறார்.

அனுசூயா சேனாதிராஜா வின் கட்டுரை ‘பெண்கள் அனுபவிக்கும் அனர்தங்களை எதிர்கொள்ளல்’ என்பதாகும். இது ஒரு துறை சார்ந்த ஆழமான கட்டுரையாகும். ஆனர்த்தங்கள் எவ்வாறானவை, அதனால் ஏற்படும் நலிவுறும் விளைவுகள், பெண்கள் எவ்வாறு அதிகமாகப் பாதிக்கபடுகிறார்கள், அவற்றை நிவர்த்திக்க செய்ய வேண்டியவை போன்றவற்றைப் பேசுகிறது.

‘ஏனைய மருத்துவர்கள் பேசத் தயங்கும் விடயங்களையும் இவர் வெளிப்படையாக தனது பதிவுகளில் எழுதுகிறார்’ என ஒருவர் எனது hainallama.blogspot.com பற்றி எழுதியிருந்தார்.

இது பாராட்டா கிண்டலா புரியவில்லை.

குட்டி ரேவதி கூறியது போல பெண்கள் எழுதும் போது மாத்திரமின்றி, ஆண்கள் அதுவும் மருத்துவர்கள் சில விடயங்களைப் பற்றிப் பேசும்போதே பலரது புருவங்கள் மேலெழுகின்றன. ஏனெனில் போலியான கலாசார மூடிகள் எம்மீது திணிக்கப்பட்டுள்ளன.

அப்படியான ஒரு விடயத்தை செல்வி திருச்சந்திரன் தனது ‘பண்பாட்டிற்கு மறுபக்கங்கள் உண்டு’ என்ற கட்டுரையில் மிகவும் அழகாகக் கையாள்கிறர்.



தனது சிறுவயதில் கண்ட ஒரு சம்பவத்தைச் சொல்லி மிகவும் ஆர்வமூட்டும் வகையில் ஆரம்பிக்கும் இக்கட்டுரை தன்னினச் சேர்க்கை பற்றிப் பேசுகிறது. சரித்திரச் சம்பவங்கள், சிறுகதை. திரைப்படம போன்ற பல உதாரணங்கள் ஊடாக அவரது கருத்து ஆணித்தரமாக வெளிப்படுகிறது.

இறுதியில் ‘இப்படியான ஒரு பூர்வீக வரலாறும் இருக்கும் விடயத்தை நாம் கொச்சைப்படுத்தக் கூடாது.அறிவு பூர்வமாகப் புரிந்து கொள்ள வேண்டும்’ என்கிறார். பெண்ணியத்தில் ஈடுபாடு கொண்டவர்கள் மட்டுமின்றி ஒவ்வொரு பெற்றோரும் கட்டாயம் படிக்க வேண்டிய கட்டுரை இதுவாகும்.

படைப்புலம் ஊடாகக் பெண்ணியப் பார்வையை காணுகின்ற அனுபவத்தை இந்த நூல் தருவதால் குடும்பத்திலும் சமூகத்திலும் தனது வகிபாகத்தை மீள்மதிப்பீடு செய்ய ஒவ்வொரு ஆணும் படிக்க வேண்டிய நூலாகிறது.

செல்வி திருச்சந்திரனை பிரதம ஆசிரியராகவும், தேவகௌரி சுரேந்திரன், மகேஸ் வைரமுத்து, சிவமணி பரராஜசிங்கம் ஆகியோரை ஆசிரியர் குழுவாகவும் கொண்டு நிவேதினி வெளிவருகின்றமை குறிப்படத்தக்கது.

விலை :- ரூபா 250.00

தொடர்புகளுக்கு:-

Women’s Education and research centre

58,Dharmarama Riad

Wellawatta

Colombo 06.

Sri Lanka

கட்டுரையாளர்:-

எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>கவிதைக்கு என்று ஒரு இதழ் இப்பொழுது கிழக்கு இலங்கையிலிருந்த வெளி வருகிறது. எத்தனையோ இலக்கிய இதழ்கள் மலர்ந்து, மணம் வீச ஆரம்பிக்க முன்னரே கருகிவிடுகிற சூழலில் கவிதைக்கு என்றொரு இதழ் தொடங்கி நடந்த தனித் துணிவு வேண்டும்.

துணிவோடு களத்தில் இறங்கியுள்ளார் திரு.எஸ்.ஆர்.தனபாலசிங்கம் திருகோணமலையிலிருந்து. கடந்த இரு வருடங்களில் 11 இதழ்கள். நிச்சயம் ஈழத்து இலக்கியச் சூழலில் இது ஒரு சாதனைதான்.

‘நீங்களும் எழுதலாம்’ இதுதான் இதழின் பெயர். இது இருமாத கவிதை இதழ். பங்குனி சித்திரை இதழ் எனது கையில் உள்ளது. 40 பக்கங்களை உள்ளடக்கியுள்ளது. மிக வித்தியாசமான சைஸ் 3.05 x 8.25 அங்குல அளவு.

இந்த இதழை 27 கவிஞர்களின் புத்தம் புதிய படைப்புகள் அலங்கரிக்கின்றன. பெரும்பாலானவர்கள் புதிய இளைய கவிஞர்கள்.

உண்மையில் புதிய தலைமுறையினரை கவிதைப் படைப்பாக்க முயற்சியில் ஊக்கப்படுத்துவதற்காகவே இந்த இதழ் வெளிவருகிறது. ஆயினும் மூத்த கவிஞர்களான ஜின்னா ஷரிபுத்தீன், வஸீம் அக்ரம், ஷெல்லதாசன் போன்ற பலரின் படைப்புகளும் இடம் பெற்றுள்ளன.

“பேரளவில் நீ தமிழன்
நான் முஸ்லீம்
பேசுமொழி பண்பாடு
கலாசார ஒற்றுமையால்
நான்வேறு நீவேறா
நமக்கள்ளே ஏன் பிறவு!”

“ஒன்றாக உண்டு
ஒன்றாகத் தமிழ் கற்று
ஒன்றாகச் சேர்ந்து
ஓடிவிளை யாடி..”

என்று தொடரும் ஜின்னா ஷரிபுத்தீன் கவிதை மனத்தைத் தொடுகிறது. தமிழ் முஸ்லீம் ஒற்றுமையை, காலத்தின் தேவையை வலியுறுத்துகிறது.

“மாயைகளை விழுங்கியபடி
காற்றும் நட்சத்திரமும்
வானமும் காதலில் நனைந்தன”
என வார்த்தைகளைச் செதுக்குகிறார் வஸீம் அக்ரம்.

நெடுந்தீவு முகிலனின் ‘ஆத்துமாவின் ராகம்’ வயிற்றுப் பசியைத் தணிப்பதற்கான விலை போகும் பெண்ணின் துயரை பாடுகிறது.

சோ.பத்மநாதன் மற்றும் கே.எஸ்.சிவகுமாரன் ஆகியோரின் மொழிபெயர்புக் கவிதைகளும் இடம் பெற்றுள்ளன. மொழிபெயர்க்கப்பட்ட கவிதைகளின் ஆங்கில மூலக் கவிதைகளையும் இணைத்துள்ளது மிகவும் ஆரோக்கியமான விடயம்.

உயிர் எழுத்து இதழில் வெளிவந்த க.சி.அகமுடைநம்பியின் பாரதியின் குழப்பங்கள் முரண்பாடுகள் கட்டுரையின் இரண்டாம் பகுதியும் IBC வானொலியில் ‘நீங்களும் எழுதலாம்’ இதழ் பற்றி ஒலிபரப்பான கட்டுரையும்
இடம் பெற்றுள்ளன.

நூல் அறிமுகம், வாசகர் கடிதம் ஆகியனவும் இடம் பெறுகின்றன.

கவிதைகளை மட்டுமின்றி
“ஆக்கபூர்வமான விமர்சனங்கள்,
கவிதை சம்பந்தமான குறிப்புகள்,
கட்டுரைகள் போன்ற பல்வேறு விடயங்களோடு மொழிபெயர்ப்புக் கவிதைகளும் உங்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன” என்கிறார் இதழ் ஆசிரியர்.

உங்கள் கைவண்ணத்துயும் காட்லாமே!

வாசிப்பதற்கு இதமான சஞ்சிகை.

படைப்புகளை அனுப்பிப் பங்களிப்பதோடு இலக்கிய ஆர்வலர்கள் கட்டாயம் ஆதரவு தர வேண்டியது அவசியம்.

வருட சந்தா ரூபா 200 மட்டுமே.
வெளிநாடு US $ 10 மட்டுமே.

தொடர்புகளுக்கு

‘நீங்களும் எழுதலாம்’
103/1, திருமால் வீதி
திருகோணமலை.
தொலைபேசி :- 0778812912
email :- neenkal@yahoo.com


Read Full Post »

>

நாய்கள்

செத்துக் கிடக்கும்

நடுவீதியில்

வேகமாய்ச் செல்லும்

வெண்ணிற வாகனங்கள்

மோதியடித்திருக்கலாம்

தன்னினத் தனியன்களின்

கோரப்பற்கள்

குத்திக் குதறியிருக்கலாம்

நாற்றம் எடுக்க முன்

தூக்கித் தூரப் புதைக்க
யாரும் மனிதர்கள் வருவார்கள்
வீதியோரச் சிறுவீரர்களின்

கவணிலிருந்த கல்லடிபட்டு

காற்றிற் பறந்த காக்கையொன்று
சேற்றில் வீழ்ந்து செத்துக் கிடக்கும்

காக்கையினம் கூடி கத்திக் கதறும்

தூக்கித் தூரவீச
யாரும் மனிதர்கள் வருவார்கள்.

தினந்தோறும் என் தூரவழிப் பயணத்தில்
தேகத்துக் களைதீர்க்கும்
தேனீர்கடைத் தொழிலாளி,
ஊரடங்குச் சட்ட நேரத்திலும்
ஓடிவந்தெனக்கு உதவி செய்யும்
உள்ளுர் வாகனச்சாரதி,
என்னிடம் பயின்ற மாணவன்,
திருமணம் செய்துவைத்த அந்தணர்,

இன்னும் யார் யாரோ..
வீதியோரம் வீழ்ந்து கிடப்பர்:
உதிரமோடி உறைந்திருக்கும்
உடல் நாற்றம் எடுக்கும்
நாய்கள் வரும்
காக்கைள் வரும்
நானோ…
வேறெந்த மனிதரோ
அருகிற் செல்லவும்
முடியவில்லை.

ஏனெனில்
அவை மனிதப்பிணங்கள்
அகாலப்பிணங்கள்.

இது இராஜகிருபன் எழுதிய கவிதை.

தலைப்பு:அகாலப்பிணங்கள்.


விளக்கங்கள் எதுவும் தேவையில்லை.
அடங்கி, ஒடுங்கி, பயத்தினுள் உறைந்து
தினம் தினம் செத்து வாழும்
நாதியற்ற மனிதர்களின் நிலை கூற..

ஜீவநதி செப்டம்பர் – ஒக்டோபர் 2008 இதழிலில் இக்கவிதை வெளியாகி இருக்கிறது.

யாழ்மண்ணிலிருந்து வெளியாகும் இலக்கிய ஏடு.
இது 8வது இதழ்.
மாணவர்களான சின்னராஜா விமலன், கலாமணி பரணீதரன் இதழ் ஆசிரியர்கள்

மற்றொரு கவிதை. ரவீந்திரநாத் தாகூர் எழுதியது. (கீதாஞ்சலி – 11)

தேவனை அவனில் காண்பாய்

கதவினைப் பூட்டி உள்ளே
கருமிருட் டதனில் நின்று
சுதந்திர மாக யாரைத்
துதிக்pறாய்? ஜபமா? மாலை
அதனையும் உருட்டு றாயே!
ஆடலும் பாடல் தானும்
அதற்குமேல் மந்திர தந்த்ர
அலுவலும் பார்க்கின் றாயே

ஐயனே அந்த வித்தை
அனைத்தையும் விட்டாலென்ன?
செய்யுமுன் வித்தை யாலே
தெய்வமும் தெரிவ துண்டோ?
பொய்யெனில் கண்ணை யிந்தப்
பொழுதிலே திறந்து பார்நீ
மெய்யென உணரு வாய்உன்
முன்பிலோ கடவுள் இல்லை


மேலும் தொடர்கிறது கவிதை. உழைப்பவனில் இறைவனைக் காண் என்று சொல்கிறது.

பூசை, புனஸ்காரம், ஜபம் எனக்
காலத்தை நேரத்தையும் வீணடிக்காது
உழைப்பவர், துன்பப்படுவோர், ஏழைகளில்
இறைவனைக் காண வேண்டும்
என்ற கருத்தை
எத்தனை பேர் சொல்லிவிட்டார்கள்.

இன்னமும் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டியுள்ளதே.

என்று மடியும் இத்தகைய போலிவேடங்கள்.

சந்திரகாந்தா முருகானந்தனின் ‘குடை’, த.கலாமணியின் ‘புலவி’, சி.;சிவாகரின் ‘மெல்லப் புரியும்’, கயிலையின் ‘ஒரு தாயின் சுயகதை’ ஆகிய சிறுகதைகளும்

பேராசிரியர் மௌகுருவுடனான நேர்காணலும்,

கட்டுரைகள், கவிதைகள், பத்தி எழுத்து என 56 பக்கங்களைக் கொண்ட இதழ் மிகவும் கனதியாக உள்ளது.

‘செங்கோடன்’ எழுதிய பரஞ்சோதி முனிவர் பேசும் சைவத்துள் சாதியம்’ மிக முக்கியமான ஒரு கட்டுரை. இந்து சமயம், சைவசமயம் என்ற போர்வையில் அந்தக் காலம் முதல் சாதியம் வளர்க்கப்பட்தை மிகவும் சிறப்பாக எடுத்துக்காட்டுகிறது.

வாங்கி வாசித்து பாதுகாக்க வேண்டிய இதழ்.

தொடர்புகளுக்கு:-jeevanathy@yahoo.com

எம்.கே.முருகானந்தன்

Read Full Post »

>
டொக்டர்:“ என்னுடைய கிளினிக் நட்டத்தில் போகிறதே … ஒருத்தருக்கும் முகப்பரு வாறதாகத் தெரியல்ல …”
வந்தவர்: “என்ன கிளினிக் வைச்சிருக்கே?”
டொக்டர்:“முகப்பரு கிளினிக்”

ஒருவர்:“ ஏன் அந்த மேனேஜர் எந்த நேரமும் காரமாகவே பேசுராரு”
மற்றவர்: “இனிப்பா பேசினா சர்க்கரை வியாதி வந்திடும் என்ற பயம்”

கணவன் – “தேத்தண்ணிக்கு ஏன் இவ்வளவு பெரிய கரண்டியாலை சீனி போடுறீங்க”
மனைவி – “டாக்டர் சொல்லி இருக்காரு, ஒரு கரண்டிக்கு மேல சீனி போட்டு தேத்தண்ணி குடிக்ககுடா எண்டு அதான் ..”

டாக்டர்: உங்கள் கணவர் ஏன் இறந்து போனார் ..
ஒருத்தி: நீங்கள் காட்டின பில்லை வாங்கிப் பார்த்த பிறகு

டாக்டர்: உனக்கு வந்துள்ள நோய் பரம்பரை வியாதி என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஒரு பெண்: அப்பிடியெண்டா … நீங்கள் தரும் பில்லை பின்னால் உள்ள தாத்தாவிடம் கையளியுங்க ..

ஒருவர்: அமெரிக்காவில் உள்ள ஒஸ்கார் என்ற பூனை நோயாளியின் அருகே படுத்தால் நோயாளி 4 மணித்தியாலயத்தில் இறந்துவிடுவாராம்! செய்தி வந்திருக்கு.
மற்றவர்: அது அமெரிக்காவில். இலங்கை நோயாளிக்கும் பக்கத்திலை காணி உறுதி எழுதுகிறவை படுத்திருந்தால் ஒரு மணித்தியாலயத்திலை நோயாளி அவுட்டாம்.

இவை சுவைத்திரள் இதழ்களில் வெளிவந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட ஒரு சில நகைச்சுவைகள். நான் படித்து ரசித்தவை. நீங்களும் சுவைக்கக் கூடும். சஞ்சிகை முழுவதையும் புன்னகையோடும் சில நேரங்களில் வாய்விட்டுச் சிரித்தும் படிக்கலாம்.

இது நகைச்சுவைக்கான ஏடு. 1993ம் ஆண்டு முதல் வெளிவரும் சஞ்சிகை. இதன் ஆசிரியர் திக்கவயல் சி.தர்மகுலசிங்கம். ஈழத்தின் முதல் நகைச்சுவை இதழான ‘சிரித்திரன்’ முன்மாதிரியாகக் கொண்டு வெளிவருகிறது. சிரித்திரன் ஆசிரியர் சிவஞானசுந்தரத்தில் ஆறா அன்பு கொண்டவர். இச் சஞ்சிகை வெளிவந்த காலத்தில் அதில் நிறைய எழுதியவரும் கூட. அத்துடன் சுந்தருக்கு பக்கபலமாக நின்றவரும் கூட. மிக கஷ்டமான சூழலிலும் திக்கவயல் விடாமுயற்சியுடன் இந்த இதழை நடாத்தி வருகிறார். மிகவும் பாராட்டப்பட வேண்டிய முயற்சி.

‘நாட்டுக் கருடன் பதில்கள்’ என்ற கேள்வி பதில் பகுதி மிகவும் சுவையாக உள்ளது. மகுடியார் பதில்களை நினைவூட்டுகிறது. ‘இலக்கியத்தில் சிரித்திரன் காலம்’ என்ற தொடர் கட்டுரையை ஆசிரியர் எழுதுகிறார். பாலா.சங்குப்பிள்ளையின் சிறுகதை, கா.சிவலிங்கத்தின் ‘தலைச் சித்திரை’ மேடைநாடகம், ‘சத்தியவான சாவித்தரி’ புராணக் கதையானது சிறுவர்களுக்கு ஏற்ப புனையப்பட்டது.

இவை போன்ற பலவும் இந்த இதழை அலங்கரிக்கின்றன. இவற்றுடன் செங்கை ஆழியானின் பிரபல படைப்பான ‘ஆச்சி பயணம் போகிறாள்’ தொடராக வெளிவந்து வாசகர்களை சிரிக்கவும் ஆச்சியோடு பயணப்படவும் வைக்கிறது.

கட்டுரை, சிறுகதை, கவிதை. துணுக்குகள் என 64 பக்கங்களுக்கு சிரித்திரன் சைசில் விரியும் இந்த இதழ் முழுக்க முழுக்க சிரித்து மகிழ்வதற்கே.

சுயபுராணம் என மகுடமிடப்பட்டு சஞ்சிகை பற்றிய தகவல் வழங்கும் பகுதியில் கொடுக்கபட்ட சில தகவல்கள் கூட சுவார்ஸயமாக இருக்கின்றன. உதாரணமாக,

இலட்சியம் : துன்பப்படுவோன் சிரித்து மகிழல்,
சந்தா : ஏற்கப்படமாட்டாது,
சுவைத்திரளில் வெளிவரும் விடயங்களுக்கு முழுப்பொறுப்பு ஆசிரியரே. அவதானமாக எழுதுவது எழுத்தாளர் பொறுப்பு கொப்பியடித்த பக்கங்களுக்கு எமது நன்றிகள்.

என்ன? சுவைத்திரளைச் சுவைக்க ஆவலாக இருக்கிறதா?

தொடர்புகளுக்கு:- சுவைத்திரள், 24/1, பொன் தொழிலாளர் வீதி, மட்டக்களப்பு.
தொலைபேசி:- 0779004811

Read Full Post »

Older Posts »