Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சன்டா நினைவுகள்’ Category

>“எங்கடை வீட்டையும் கிருஸ்மஸ் பப்பா வருவாரா”

நர்சரி வகுப்பிலிருந்து ஓடோடி வந்த மகிழன்
மூச்சிழைக்கக் கேட்டான்.

கண்களில் இனந்தெரியாத எதிர்பார்ப்பு. முகத்தில் ஆர்வம் பிதுங்கி வழிந்து கொண்டிருந்தது.

அவனது ஆசையை நிஜமாக்க வேண்டும் என்று அப்பா நினைத்துக் கொண்டார்.

அவர்கள் இந்துக்கள்.

எங்கடை பிள்ளையார் பரிசுகள் கொண்டு வர மாட்டாரே!

கிருஸ்மஸ் பப்பா பரிசுகள் கொண்டு வருவதை அவன், தனது பாலர் பாடசாலை நண்பர்கள் மூலம் அறிந்திருந்தான்.

இரவானது 8மணி, 9 மணி எனக் காத்திருந்த அவனுக்கு அதற்கு மேலும் முடியவில்லை. தூங்கிவிட்டான்.

காலையில் விழித்தெழுந்ததும் முதல் கேள்வி என்னவாக இருக்கும் என்பது பெற்றோர்களுக்குப் புரிந்திருந்தது.


காலையில் விழித்தெழுந்த அவனது கட்டிலைச் சுற்றி பெரிய பலூன்கள்.

பலூனை விட அவனது கண்கள் பெரிதாகி விரிந்தன. கட்டிலுக்கு அருகில் வேறு ஏதோ ஒரு விளையாட்டுப் பொருள்.

ஆச்சரியம் மிகுந்தது.

மாடிப்படியால் இறங்கும் வழியில் இன்னும் இன்னும் . . . .

குட்டிக் கண்களில் மகிழ்ச்சி முட்டியது.

எவ்வளவு பரிசுகள்! சிறக்கை கட்டி வானத்தில் பறக்காத குறைதான்

ஆனாலும் ‘கிறிஸ்மஸ் பப்பா வரும்போது ஏன் என்னை எழுப்பவில்லை’

இந்தக் கேள்விக்கு பல பொய்களைக் கட்ட நேர்ந்தது.

0.0.0.0.0

சில வருடங்கள் சென்றன. மகிழன் வளர்ந்துவிட்டான். வயது 12 ஆகியிருக்கும்.

உலகம் சற்றுப் பிடிபட ஆரம்பித்துவிட்டது.

இப்பொழுது சன்டாவைத் காணும் கனவு அபிராமிக்குத் தொற்றிவிட்டது.

அவளது கனவுகளுக்கு அண்ணனும் உருவேற்றியிருந்தான்.

‘எப்ப வருவார்? எப்படி இருப்பார். என்ன கொண்டு வருவார்’

எல்லையே இல்லை அவளது கனவுகளுக்கு. தேவதை போல பறந்து கொண்டிருந்தாள் கனவுலகில்.

‘பக்கத்து வீட்டு லக்ஸிக்குக் கிடைக்குமா? எனக்கும் கிடைக்குமா’ என்ற கேள்விகள்.

‘நல்ல பிள்ளையாக இருந்தால் கொண்டு வருவார்’ என்பாள் அம்மா.


‘நான் நல்ல பிள்ளையோ’ சந்தேகம் தலை தூக்கும்.

‘சன்டாவுக்குத்தான் தெரியும்.’ என்று சொன்னால் கொஞ்ச நாட்களுக்கு பிரளி எதுவும் இருக்காது அடங்கிவிடும்.

கிறிஸ்மஸ் இரவு வந்தது. சின்னவள்தானே. தூங்கிவிட்டாள்.

அவளைச் சமாளிக்க வேண்டிய பொறுப்பு மூன்று பேருக்காகியது.

மகிழனும் பெற்றோர்களுடன் சேர்ந்து தங்கைக்கான கிருஸ்மஸ் பப்பாவின் பரிசுப் பொருட்களை ஆங்காங்கே பரப்பி வைத்தார்கள்.

பக்கத்து வீட்டு பல்கணியிலும் மற்றொரு பரிசுப் பொதியைப் போட்டு வைத்தார்கள்.

அவளது விழித்தெழுதலுக்காகக் காத்திருந்தான். பெற்றோர்களுடன்.
விடிந்தது.

இவளது முன் பல்கனியில் சன்டாவின் பரிசுப் பார்சல் காத்திருந்தது.

‘எனக்கும் சன்டா பரிசு தந்திருக்கிறார்’ லக்ஸியின் குரல் அவளது பின் பல்கனியிலிருந்து ஓங்கி ஒலித்தது.

இரண்டு பேருக்குமே சன்டாவின் பரிசுகள்!

நல்ல பிள்ளைகள் ஆதலால் மறைந்திருந்து வைத்துச் சென்றாராம்.

0.0.0.0.0

பல வருடங்கள் சென்றுவிட்டன.

இப்பொழுது கிருஸ்மஸ் பப்பாவிற்காக் காத்திருப்பவர்கள் குழந்தைகள் அல்ல.


அப்பாவும் அம்மாவும்.

தங்களுடன் கிறிஸ்மசைக் கொண்டாடி மகிழ்ச்சியில் ஆழ்த்த யார் இருக்கிறார்கள்?

வெளி நாட்டிலிருந்து பிள்ளைகளைப் பரிசாகக் கூட்டி வருவாரா சன்டா!
காத்திருக்கிறார்கள்!!

சண்டாவால் SMS வாழ்த்தைத்தான் கொண்டுவர முடிந்தது.

Read Full Post »