இன்று காலை நான் ஒரு கனவு கண்டேன். தொடர்கதை போல நடந்து கொண்டிருந்தது. அது மிகவும் வியப்பூட்டும் கனவாக இருந்தது. நான் கனவுதான் காண்கிறேன் என்பதை உணரக் கூடியதாக இருந்தது.
அதைப் பதிவு செய்து வைக்க வேண்டும் என அக்கணத்தில் நினைத்தேன்.
இப்பொழுது இந்தக் கட்டுரையை சமகாலத்திற்காக எழுத ஆரம்பித்தபோது அது பற்றி எழுதவும் எண்ணினேன். ஆனால் எத்தனை முயன்றும் அது என்ன கனவு என்பது ஞாபகத்தில் வரவேயில்லை.
கனவுகள் அற்புதமானவை. அதில்தான் எத்தனை வகைகள்
விழித்திருக்கும் போது கனவுகனில் மிதப்போம். பகற்கனவு என்று அதனை எள்ளலும் செய்வோம். ஆழ் தூக்கத்தில் கனவுகள் காண்போம். அவற்றைக் கண்டது பற்றிய நினைவு கூட நித்திரைவிட்டு எழும்பியதும் இருக்காது. ஆனால் பல கனவுகள் எங்கள் துக்கத்திற்கும் விழிப்பிற்கும் இடையே ஊசலாடிக் கொண்டிருக்கும்.
உண்மையில் நாங்கள் ஆழ் தூக்கத்தில் மூழ்கியிருக்கும்போது நினைவுடன் இருப்பதில்லை. நடப்பது எதுவும் தெரியாது. மயக்கத்திற்கு அண்மிய நிலை அது. ஆனால் அதிலிருந்து மீண்டு நினைவுலகிற்கு வந்ததும் வாழ்வின் நாளாந்த சவால்களுக்கு முகம் கொடுக்க வேண்டியிருக்கும்.
இரண்டிற்கும் இடைப்பட்ட நிலை ஒன்று இருக்கிறது. நினைவு திரும்பிக் கொண்டிருக்கும் வேளையில், ஆழ்ந்த தூக்கமுமற்ற முழு நினைவுமற்ற நிலை இருக்கிறது. அவ்வேளையில்தான் கனவுகள் காண்கிறோம். அவ்வாறு காணும் கனவுகளின் போதுதான் கனவு காண்பதாக உணர்கிறோம். அதுதான் எனக்கும் நடந்தது.
உண்மையில் இதுதான் எமது நினைவுலகின் மிகவும் மர்மமானதும் வியப்பிற்குரியதும், தெளிவற்றதுமான தருணமாக இருக்கிறது.
உளவியலாளர்களுக்கு இத்தகைய நேரம் ஆய்விற்குரிய முக்கிய கணமாக இருக்கிறது. எமது வாழ்வின் சாயல் அதில் படுவது எவ்வாறு என ஆராய விரும்புகிறார்கள். ஆனால் நினைவிருந்து மறைந்துவிட்ட அவற்றை கனவு காண்டவர்களில் கேட்டு அறிவதும் முடியாதிருக்கிறது. மூளையின் அந்நேர செயற்பாடுகளை கருவிகளின் மூலம் அறிவதன் மூலம் விடை காண முயல்வது மட்டுமே இற்றைவரை சாத்தியமாக இருந்தது.
ஆனால் கனவுலகில் ஆழ்ந்திருக்கும் அவ்வேளையிலேயே அவருடன் தொடர்பு கொள்ளும் ஒரு முற்றிலும் புதுமையான செயன்முறை கண்டறியப்பட்டுள்ளது. இது விஞ்ஞானிகளுக்கு ஆர்வம் ஊட்டுவதாக இருக்கிறது.
ஆனால் கனவில் இருப்பருடன் தொடர்ப்பு கொள்ளவது எவ்வாறு? தட்டி எழுப்பிக் கேள்விகள் கேட்டால் அவரது கனவு கலைந்துவிடும் அல்லவா?
இந்த நிலையில் தெளிவான கனவுகள் (lucid dream) ஆய்வுகளுக்கு உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள். அது என்ன தெளிவான கனவு என்கிறீர்களா?
இத்தகைய கனவின் போது ஒருவர் கனவு காண்கிறார். தான் கனவு காண்பதாகவும் உணர்கிறார். அது மாத்திரமல்ல தாங்கள் ஆழ்ந்திருக்கும் அந்த உலகில் தாம் அடுத்து செய்ய வேண்டியது எது என்பதையும் தீர்மானிக்கக் கூடியதாக இருக்கிறது.
பெரும்பாலானவர்கள் தமது வாழ்வில் ஒரிரு தடவைகளாவது அத்தகைய தெளிவான கனவுகளைக் கண்டிருப்பார்கள். ஆனால் அத்தகைய அனுபவங்கள் பரவலானவை அல்ல என்பதையும் சொல்ல வேண்டும்.
இருந்தபோதும் ஒரு சிலரால் அத்தகைய தெளிவான கனவுகளை தாமாகவே வரவழைக்க முடிகிறது என்று சொல்கிறார்கள். அத்தகைய ஆற்றல் உள்ள நபர்களே கனவுகளின் உள்ளே புகுந்து விளையாடும் ஆய்வுகளுக்கு கை கொடுக்கிறார்கள்.
ஒருவரது நடத்தை அல்லது அனுபவம் பற்றி ஆராய முற்படும் அறிவாற்றல் சார்பான விஞ்ஞானிகள் ஒருவர் ஏற்கனவே விபரித்த அனுபவங்களை சொல்லளவில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். செயற்பாட்டு பரிசோதனைகள் மூலம் உறுதிப்படுத்தி விளங்க முற்படுபர். குறிப்பிட்ட விடயத்தில் அவர்களது செயற்பாடு எவ்வாறானது, எதை எதை நினைவில் கொள்கிறார்கள், எவ்வாறு காரணப்படுத்துகிறார்கள் என்பதை இதன் மூலம் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால் கனவுகள் பற்றிய ஆய்வுகளில் இது மிகவும் கடினமானதாகும்.
ஏனெனில் கண் விழித்து நினைவு திரும்பும் வரை அவர்களால் பெரிதளவில் எதையும் சொல்ல முடியாது. கனவுலகில் அவர்கள் செயற்படும் விதத்தை அவர்களது பங்களிப்புடன் பரிசோதனையாகச் செய்து பார்க்கவும் முடியாது.; பக்கவாத்தின் போது அங்கங்கள் செயலற்றுப் போவது போல தூக்கத்தில் உறுப்புகள் தற்காலிகமாக இயங்க முடியாதிருப்பதே (sleep-induced paralysis) இதற்குக் காரணமாகும்.
அங்கங்களை இயங்க வைப்பதற்கான தகவல்கள் மூளையிலிருந்து வரவேண்டும். மூளையின் கலங்களிலிருந்து முண்நாண் வழியாக தசைத் தொகுதிகளுக்கு தவகல்கள் அனுப்பப்படுகிறது. ஆனால் தூக்கத்தின் போது அவ்வாறு அனுப்பப்படும் சமிக்கைகள் மூளையின் குறிப்பிட்ட பகுதி நரம்புக் கலங்களால் தடுக்கப்படுகின்றன. இதனால்தான் கனவுகளின் போது நாம் எமது அங்கங்களை அசைத்து நாம் செயப்பட முடியாது போகிறது
இவ்வாறு தடுக்கப்படுவது தூக்கத்தின் துரித கண் இயக்க நிலையின் போது ஆகும்.
இந்த இடத்தில் தூக்கம் பற்றி சற்று அறிந்து கொள்வது நல்லது. தூக்கதில் பல நிலைகள் உண்டு. அதில் துரித கண் இயக்க நிலை(Rapid Eye Movement or REM) என்பதும் ஒன்று. இந்ந நிலையில் முளையின் செயற்பாடானது உச்ச நிலையில் இருக்கும். அதாவது நினைவு நிலையின்போது மூளையின் செயற்பாடு எவ்வாறு இருக்குமோ அதை ஒத்ததாக இயங்கிக் கொண்டு இருக்கும். அந்நேரம் தூக்கம் காரணமாக அவர் செயற்படாது கிடப்பார். ஆனால் அவரது கண்கள் மட்டும் தொடர்ச்சியாக அப்பொழுதும் இயங்கிக் கொண்டே இருக்கும்.
ஆனால் மேலே கூறிப்பட்டது போல அங்கங்கள் இயக்கமின்றிக் கிடக்கும். அந்த நேரத்தில் தோன்றும் தெளிவான கனவானது ஓடுவது துள்ளுவது அடிப்பது போன்ற கடுமையான உடல் அசைவுகளுடன் கூடியதாக இருந்தாலும் நிசத்தில் உடலால் அசைய முடியாது. ஆக மிஞ்சியது சிறு நடுக்கம் போல இருக்கலாம். இது ஏன் என்பது பற்றிய காரணம் பின்னர் தெளிவாகும்.
அது அவ்வாறிருக்க, இப்பொழுது கனவின் காரிருள் குகைகளுக்குள் வெளிச்சம் பாய்ச்சும் ஆய்வுகள் பற்றி சற்று பாரப்போம்.
முன்னரே பரஸ்பரம் ஏற்றுக்கொளள்ளப்பட்ட கண்அசைவுககளை சமிக்கைகளாக தெரிவிப்பதன் மூலம் தாங்கள் தெளிவான கனவு காணத் தொடங்குவதை கனவு காண்பவர்கள் ஆய்வாளர்களுக்கு தெரிவிக்க முடியும். அதாவது தனது கண்களை இயல்பான ஒரு குறிப்பிட்ட விதத்தில் கனவு காண்பவர் அசைப்பார். அதனைக் கொண்டு அவர் கனவுலக்கில் இறங்குவதை ஆய்வாளர் புரிந்துகொள்வார். மூளையின் செயற்பாடுகளை கனவின் போது பதிவு செய்யும் கருவிகளை உடனடியாகவே ஆய்வாளர் இயக்குவார்
கண் குழியைச் சுற்றி வைக்கப்பட்ட மின்வாய்கள்(electrodes) மூலம் அவற்றை பதிவு செய்யவும் உறுதி செய்ய அக் கருவிகளால் முடியும். இந்தச் செயன் முறையானது Stephen LaBerge என்ற தூக்கம் பற்றிய ஆய்வுகளைச் செய்பவரால் முதன் முதலில் கண்டறிந்து பயன்படுத்தி சரியானது என உறுதிப்படு;த்தப்படதாகும்.
கனவுலகின் இயல்புகளையும் அவை எவ்வாறு மூளையின் செயற்பாடாக பிரதிபலிக்கிறது என்பதையும் எளிமையானதும் தனித்துவம் வாய்ந்ததுமான இந்த தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி பரிசோதிக்க முடிந்தது.
ஆனால், தெளிவான கனவுகள் காண்பவர்களாக சொல்லப்பட்டு இத்தகைய ஆய்வுகளில் உட்படுத்தப்பட்டவர்கள்; உண்மையில் தூங்கவில்லை கனவு காணவில்லை, வெறுமனே தளர்ந்திருந்தார்கள் என அல்லது அவர்கள் கனவு காண்பதாக ஏமாற்றினார்கள் என ஆரம்ப கட்டங்களில், வேறு அறிஞர்கள் குற்றம் சாட்டினார்கள். மின்வாய்கள் மூலம் மூளையின் செயற்பாட்டை துல்லியமாகக் கண்டறிய முடிந்ததில் இதன் உண்மைத் தன்மை நிரூபணமானது.
அது எத்தகைய உண்மை.
தெளிவான கனவு காணும் தருணத்தின் மூளையின் செயற்பாடானது துரித கண் இயக்க நிலையின் அம்சங்களையே கொண்டிருந்தது என்பது நரம்பியல் உளவியல் நிபுணர்களான Ursula Voss, Martin Dresler செய்த ஆய்வுகளின் மூலம் அறியப்பட்டது.
அது மாத்திரமல்ல தெளிவான கனவுகளின் போதான மூளையின் செயற்பாடானது தனித்துவமானது. அது சாதாரண தூக்கம், ஏனைய கனவுகள், மற்றும் நனவு நிலை ஆகியவற்றின் போதான மூளையின் செயற்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டது என்பதை கண்டறிய முடிந்தது. தமது விருப்பங்களுக்கு ஏற்றவாறு முடிவுகளை விளங்கிக் கொள்ளும் wishful thinking அல்ல இது.
கனவுகள் பற்றிய வேறு சில ஆய்வுகள் சுவாரஸ்சமானவை. முன் ஏற்பாடு செய்யப்பட்ட சில செயல்களை துரித கனவுகள் காணும் வேளையில் செய்வித்து, அதே செயற்பாட்டை விழிப்பு நிலையில் செய்ய வைத்து ஒப்பீடு செய்து பார்த்தனர். உதாரணமாக ஒன்று இரண்டு மூன்று என எண்களை எண்ணும் செயற்பாடானது கனவு நிலையிலும் நினைவு நிலையிலும் ஒரே வேகத்தில் நடைபெறுவதை அறிய முடிந்தது. எண்ணுவது என்பது மனத்தின் செயற்பாடு மட்டுமே அதில் உடலின் செயற்பாடு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் படி ஏறுவது, நடப்பது, எளிமையான உடற் பயிற்சிகளைச் செய்வது போன்ற உடலின் செயற்பாடுகள் கனவு நிலையின் போது நீண்ட நேரம் எடுத்தன.
இதற்குக் காரணம் என்ன? உணர்திறன் சார்ந்த பின்னூட்டு (sensory feedback) வழமைபோல் இல்லாததே என ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்தனர்.
உணர்திறன் சார்ந்த பின்னூட்டு என்றால் என்ன’.
உதாரணம் சொல்லலாம். நாம் நடக்கும்போது அது பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் நாம் கால் வைக்கும் தரையானது வழமையானதா வழுவழுப்பானதா ஏற்ற இறக்கங்கள் நிறைந்ததா, பாதங்களைக் குத்தக் கூடிய கல் முள் போன்றவை உள்ளதா போன்ற பல விடயங்களை எமது பாதங்களின் சருமம் பகுத்துணர்ந்து அதை மூளைக்கு செய்தியாக அனுப்புகிறது. நடக்கும் தரை ஆபத்தனது அல்ல என்ற செய்தி கிடைத்ததும் கால்கள் வேகமாக நடக்கும்.
நினைவு நிலையில் உணர்திறன் சீர்மையுடன் செயற்படுகிறது. ஆனால் கனவு நிலையில் இத்தகைய உணர்திறன் வழமைபோல இல்லாததாலேயே கனவு நிலையில் உடற் செயற்பாடுகள் வேகங் குறைகின்றன. இதனால்தான் தெளிவான கனவு நிலையின் போதும் மனிதர்களால் நினைவு நிலை போல இயங்;க முடிவதில்லை.
அது சரி கனவுகள் பற்றிய ஆய்வுகளால் பயன் என்ன? நினைவுலகின் ஏனைய தளங்களில் சஞ்சரிப்பதற்கு கனவுகள் பற்றிய ஆய்வின் தொழில்நுட்பங்களை பயன்படுத்துதில் New Age movement போன்ற இயக்கத்தினர் ஆர்வம் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஆன்மீக உலகில் நவீன விஞ்ஞான அறிவின் தாக்கம் எவ்வாறு அமையும் என்பது பொறுத்திருந்து பார்க்க வேண்டியதே.
தெளிவான கனவுலகில் நீந்துவதை ஊக்குவிபப்பதற்கு மருந்துகளை உபயோகிக்கும் ஆபத்தான செயலில் இறங்குபவர்களும் இருக்கிறார்கள். பார்க்கின்சன் நோய்க்கு பயன்படுத்தும் சில மருந்துகள் பகற் கனவுகளில் ஆழ்த்தும் பக்கவிளைவு கொண்டதால் அதனை பயன்படுத்த முனைகிறார்கள்.
தூக்கத்தில் உளறுபவர்கள் விடயத்தில் என்ன நடக்கிறது?
அதுவும் பெரும்பாலும் கனவுலகின் செயற்பாடுதான். மேற் கூறிய தெளிவான கனவுகளின் போது வரலாம். ஆனால் மன அழுத்தம், மனச்சோர்வு, நித்திரைக் குறைபாடு போன்ற பிரச்சனைகளிலும்; ஏற்படலாம். கடுமையான காய்ச்சல் மதுப் பாவனையின் பின்னரும் தூக்கத்தில் சிலர் உளறுவார்கள்.
காலைக் கனவு பலிக்கும் என்று நம்புவோர் இன்னமும் பலர் எம்மிடையே இருக்கிறார்கள்.
காலைக் கனவுகள் முற்கூறிய தெளிவான தூக்கத்தில் தோன்றுவதாலாயே நினைவில் நிற்கிறது. ஆனால் அது பலிக்கும் என நம்புவது அர்த்தமற்ற நம்பிக்கையே.
எனது ஹாய் நலமா புளக்கில் (27.09.2014) வெளியான கட்டுரை
எம்.கே.முருகானந்தன்
குடும்ப மருத்துவர்
0.0.0.0.0.0