Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘பொய்யறியும் சாதனங்கள்’ Category

பொய்யறியும் சாதனங்களின் மறைமுகங்கள்
பாலியல் குற்றவாளிகள் மறைத்த சங்கதிகளை வெளிவர வைக்குமா?

‘பொய் சொல்லக் கூடாது பாப்பா..’

பாப்பாவாக நாம் கற்றுக் கொண்ட பாடங்கள் வெறும் பாடங்களாக மனதின் ஓரங்களில் ஒழிந்து கிடக்க நிதமும் பொய்மைப் பூக்களை உதிர்த்துக் கொண்டேயிருக்கிறோம். இவற்றில் பல பொய்கள் தீவிரமானவையல்ல. மற்றவர்களுக்கு எந்தவித தீங்குகளையும் செய்யாதவை.

ஆனால் எல்லாப் பொய்களும் அவ்வாறில்லை. மற்றவர்களை ஏமாற்றுவதற்காக சொல்லப்படுபவையும் இதில் அடங்கும். தாம் செய்த குற்றங்களுக்கான தண்டனைகளிலிருந்து தப்புவதற்காhகச் சொல்லப்படுபவை இன்னமும் பல.

இந்தப் பொய்களை மற்றவர்களால் கண்டறிய முடியுமா? அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதுபோல பொய் சொல்பவர்களின் அகத்தின் அழுக்கும் முகத்தில் தெரியவே செய்யும். நுண்ணுணர்வுள்ளவர்; அதைச் சுலபமாக உணர்ந்து அறிந்து கொள்வார்கள்.

morality-of-lying1
ஆனால் மனப் பதிவுகள் ஊடாக அடையப்படும் முடிவுகள் சரியானவை என உறுதியாகச் சொல்லக் கூடியவை அல்லவே.

அவை விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கக் கூடியவையும் அல்ல.
பொய்களை அல்லது பொய் பேசுகிறார்கள் என்பதைக் கண்டறிய விஞ்ஞான ரீதியான பரிசோதனைகள் உள்ளனவா? இருந்தால், சமகாலச் சம்பவங்கள் அவற்றிக்கான தேவையை அதிகரிக்கவே செய்கின்றன.

பாலியல் பலாத்காரங்கள்

5 வயதேயான பச்சிளங் குழந்தைகள் முதல் 70 வயதான பாட்டிகள் மீதான  பாலியல் குற்றங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வருகின்றன. இந்த வருடத்தின் முதல் 6 காலத்திற்குள் மாத்திரம் 900 பாலியல் வல்வுறவுகள் நிகழ்ந்திருப்பதாகவும் அதில் 600 குழந்தைகள் மீதானவை எனவும் இலங்கைப் பொலிஸ் திணைக்களமே அறிவித்திருக்கிறது. அரசியல்வாதிகள், பாடசாலை அதிபர்கள், மதகுருமார்கள், நெருங்கிய உறவினர்கள் எனச் சமூகத்தில் மதிப்புடைய பலரும் கூட இத்தகைய குற்றச்செய்கைகளில் ஈடுபடுவதை ஊடகங்கள் மூலம் அறிகிறோம்.

I-can-t-STOP-IT-stop-child-abuse-31299494-500-440

இவர்களில் பலர் சத்தமின்றித் தப்பிவிடுகிறார்கள். அகப்பட்டவர்கள் குற்றம் சாட்டப்படுகிறார்கள், அவர்களிலும் பலர் போதிய சாட்சியங்கள் இன்றி; விடுதலை ஆகிறார்கள். தண்டிக்கப்பட்டவர்களும் சற்றுக் காலத்தின் பின் விடுதலையாகி சமூகத்தில் இணைகிறார்கள். இவர்கள் மீண்டும் தப்புச் செய்யமாட்டார்கள் என்பது நிச்சயமில்லையே.

பொலிகிராவ் டெஸ்ட்

இந்த விடயத்தில் பொலிகிராவ் டெஸ்ட் polygraph test பற்றி மேலை நாடுகளில் விவாதிக்கப்படுகிறது.

‘பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த பொய்யர்கள்..’ அரசில்வாதிகளாவும் சட்டம் இயற்றுபவர்களாகவும் இருக்கும் எம்மைப் போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இது பற்றிய மூச்சே எழவில்லை. தங்களது கபட வாழ்விற்கு குழிபறிக்க இவர்கள் இடம் தருவார்களா?

polygraph-004
உண்மைகளை வெளிக்கொணர பொலிகிராவ் டெஸ்ட் என்ற இப் பரிசோதனை உதவும் என நம்பப்படுகிறது.

பாலியல் வல்லுறவு, பாலியல் பலாத்காரம் செய்தவர்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்படும் தருணத்தில் அவர்களுக்கு இந்தப் பரிசோதனையை கட்டாயமாக்கச் செய்யப்பட வேண்டும் என்ற ஆலோசனை பிரித்தானிய அரசால் தீவிரமாகப் பரிசீலிக்கப்படுகிறது.

இதன் உதவியுடன் உண்மைகள் வெளிப்பட்டால் குற்றவாளிகள்; மீண்டும் பாலியல் குற்றங்களைச் செய்யும் விகிதம் குறையும், அதன் மூலம் அப்பாவிப் பொதுமக்களுக்கு கூடிய பாதுகாப்பு கிடைக்கும் என நம்புகிறார்கள்.

நம்பிக்கை தரும் ஆய்வுகள்

இதற்கு அடிப்படையாக இருப்பது East and West Midlands  ல் செய்யப்பட்ட ஒரு ஆய்வு ஆகும். பொலிகிராவ் டெஸ்ட் செய்யப்பட்ட குற்றவாளிகள் அவ்வாறு செய்யப்படாதவர்களை விட இரு மடங்கு அதிகமாக மருத்துவ ரீதியாக கணக்கில் எடுக்கக்கூடிய மறைவெளியீடுகளைத் (clinically significant disclosures – CSD ) தந்தார்கள் என அறியப்பட்டது.
அவ்வாறு மறைவெளியீடுகளால் கிடைக்கும் புதிய தகவல்கள் அவர்களை

  • எவ்வாறு நிர்வகிக்க வேண்டும்,
  • சமூகத்தில் அவர்களை கண்காணிப்பது எப்படி?,
  • அவர்களால் எதிர்காலத்தில் வரக்கூடிய ஆபத்துகளை மதிப்பீடு செய்வது,
  • அல்லது அவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகளில் எவ்வாறான மாற்றங்களைச் செய்ய வேண்டும்

போன்ற விடயங்களைத் தீர்மானிப்பதற்கு நிறைய உதவும்.

உதாரணத்திற்கு வேறு பாலியல் குற்றவாளிகளுடன் உள்ள தொடர்புகள், குழந்தைகளை அணுகுவதற்கு அவர்களுக்கு உள்ள வாய்ப்புகள் போன்ற தகவல்கள் புதிய குற்றங்கள் இழைக்கப்படுவதைத் தடுக்க உதவும்.

பொய்யறியும் சாதனமா?

இவ்வாறு மறைத்த தகவல்களை வெளிக்கொணர்வதற்கு பொலிகிராவ்

டெஸ்ட் எவ்வாறு உதவுகிறது?

ஒருவர் பேசிக் கொண்டிருக்கும்போது இவர் பொய் சொல்கிறார் என்பதைத் கண்டுபிடிக்கும் திறன் இப் பரிசோதனைக்கு உள்ளது என்பதைவிட, தான் சொல்லும் பொய்களை இது கண்டறிந்துவிடும் என்ற குற்றவாளியின் நம்பிக்கையே கண்டறியப்படுவதற்குக் காரணமாகிறது.

இருந்தபோதும், பொய்யறியும் சாதனங்கள்; (lie detectors)என்ற பதம் பொலிகிராவ் டெஸ்ட்ற்கு வழங்கப்படுவது தவறு எனலாம்.
அப்படியானால் இப் பரிசோதனை எதைச் செய்கிறது?
உள உடலியல் ரீதியாகத் தூண்டப்படுதல், சருமத்தில் கடத்தப்படுதல், சுவாசம், இரத்த அழுத்தம் போன்ற உடல் உளவியல் குறியீடுகளை (Psychophysiological indices)அளவிடுகிறது. அவ்வளவேதான்.

அப்படியானால் தீர்மானத்திற்கு வருவது எப்படி?

நாம் பொய் சொல்லும்போது உணர்வு ரீதியாக அதிகம் தூண்டப்படுகிறோம் என நம்பப்படுகிறது. உணர்வு ரீதியாகச் தூண்டப்படும்போது (arousal) வெளிப்படும் அறிகுறிகளை கண்டறியும் ஆற்றல் உள்ள பொலிகிராவ் டெஸ்ட் இயக்குனர்கள், அதனை அடிப்படையாகக் கொண்டு ஒருவர் பொய் சொல்கிறாரா இல்லையா எனத் தீர்மானிக்கிறார்கள்.

எனவே இதுவும் மனப்பதிவில் தங்கியுள்ள தீர்மானம்தான். அதாவது டெஸ்ட் இயக்குனர்களினது.

பல மாறுபாடான நடைமுறைகளைக் கையாள்கிறார்கள். குற்றத்தின் தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தான் கண்டுபிடிக்கப்படலாம் என்ற பயத்தில் அதிகளவு அதிகம் தூண்டப்படுகிறார். ஆனால் அது சம்பந்தமில்லாத பொதுப்படையான கேள்விகளால் பாதிப்படைவது குறைவு. இக் கருத்தை அடிப்படையாகக் கொண்டதாகவே இருக்கிறது.
85% மான குற்றவாளிகளை பொலிகிராவ் டெஸ்ட் சரியாக அடையாளம் காணுவதாக சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன. முதற்பார்வையில் இந்த முடிவுகள் மிகவும் நம்பிக்கையான எண்ணத்தையே ஏற்படுத்தும்.

மறை முடிவுகள்

இப்பரிசோதனையின் மற்றொரு பக்கம் அவநம்பிக்கையளிக்கிறது. 12% முதல் 47% வரையான குற்றமற்றவர்களையும் இப் பரிசோதனையானது பொய்யர்கள் என முடிவுகட்டியது. இது ஏற்றுக் கொள்ளவே முடியாதது. அநீதியானது.
குற்றமற்றவர்கள் தூண்டுதலுக்கு ஆளாகி பொய்யர்கள் என முடிவு கட்டப்பட்டது ஏன்;. இதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். தொடர்புடைய கேள்விகளால் குற்றமற்றவர்கள் சலனமடைவது ஏன்?
•    உதாரணமாக குற்றம் நடந்த தருணத்தில், அவர் வேறு நடவடிக்கைகளுக்காக அவ்விடத்தில் இருந்திருக்கலாம். அது சட்ட ரீதியாக பிரச்சனையற்றது என்ற போதும் அதனால் வெட்கப்பட்டிருக்கலாம்.
•    எதுவித பிரச்சனையும் இல்லாத ஒரு அப்பாவி என்ற போதும் தன்னை இவர்கள் நம்பப் போவதில்லை என்ற பயமும் காரணமாயிருக்கலாம்.
இவற்றிலிருந்து தெரிவது என்ன? தான் பொய் சொல்வதைக் பொலிகிராவ் டெஸ்ட் கண்டுபிடித்துவிடும் என்ற அடிப்படை நம்பிக்கையே அவர்களைச் சலனப்படுத்துகிறது.
இதில் மற்றொரு ஆச்சரியமான விடயம் என்னவென்றால், பரிசோதனைக்கு செய்வதற்கு முதல் அது பற்றிய விடயங்களை விளக்கும் நேரத்திலேயே மறைத்து வைத்த பல உண்மைகள் வெளிவந்தன என்பதேயாகும்.

பொய்யான சாதனம்

சூட்டிகையான ஆய்வாளர் மற்றொரு பரிசோதனையும் செய்தார். பொலிகிராவ் டெஸ்ட்ற்கான மெஷின் போன்ற போலியான உபகரணத்தைப் பொருத்திவிட்டு கேள்விகளைத் தொடுத்தார். மறைத்து வைத்த உண்மைகள் கிடுகிடுவென வெளிவந்தன. உண்மையான மெஷினைத் தொடுத்தவர்களைவிட அதிகமாக உண்மைகளை வெளியிட்டனராம்.

இணையத்தில் இவை பற்றிய தகவல்கள் ஏற்கனவே நிறைய இருக்கின்றன. பாலியல் குற்றவாளிகளுக்கு பொலிகிராவ் டெஸ்ட் கட்டாயமாக்கப்பட்டால் இன்னும் பல தகவல்கள் வெளியாகும். குற்றவாளிகள் இணையத்திற்குள் நுழைந்தால்போதும், இப் பரிசோதனை எத்தகையது, அதன் போதாமைகள் என்ன என்பது போன்றவை வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த டெஸ்ட் பற்றிய பீதி மறைந்துவிடும். துணிவோடு டெஸ்ட்ற்குச் செல்வார்கள். பயமின்றிப் பொய் சொல்லும் துணிவு வந்துவிடும். அகப்பட மாட்டார்கள்.

ஓரம்போ

இந்த டெஸ்டை ஓரங்கட்டி வெல்வதற்கான வழிமுறைகளும் உண்டு. இப் பரீட்சை எந்த அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதைப் புரிந்த கில்லாடிகள் பரீட்சித்துப் பார்த்து வெற்றி கண்டிருக்கிறார்கள்.

தொடர்புடைய விடயம் பற்றிய கேள்விகளுக்கு விடையளிக்கும்போது தமது உள உடலியல் பிரதிபலிப்புகளை அடக்கி வாசிக்கவும், பொதுப்படையான கேள்விகளுக்கு மிகைப்படுத்தியும் காட்டவும் தமக்குப் பயிற்சியளித்துத் தயார்ப்படுத்தலாம்.
•    தனக்குத்தானே ஏற்படுத்தக் கூடிய உடல் உள வலிகள் மிகைப்படுத்த உதவும்.
•    அதே நேரம் தியானம் யோகாசனம் போன்ற பயிற்சிகள் அமைதிகாக்க உதவலாம்.

ஆன்மீக வழிமுறைகள் என நாம் நம்பும் தியானம் யோகாசனம் போன்றவை குற்றவாளிகள் தங்களைத்தாமே காப்பாற்ற உதவுகிறது என்பது பலருக்கும் ஜீரணிக்க முடியாத உண்மையான போதும், அதுதான் யதார்த்தத்தில் நடக்கிறது. குற்றவாளிகள் பொலீஸ்காரனிடம் நல்ல பெயர் வாங்க அவற்றைச் செய்கிறார்கள். ஆன்மீகவாதிகள்  இறைவனிடம் நல்ல பெயர் வாங்கச் செய்கிறார்கள். அவ்வளவுதான்!

ஆனால் உளஅமைதிக்கும், மனநோய்கள் தீரவும் அவை உதவுகின்றன என்பதையும் இங்கு சுட்டிக் காட்டுவது அவசியமாகிறது.

ஒரு உதாரணம். Floyd என்பவர் பொலிகிராவ் டெஸ்டின் அடிப்படையில் தவறுதலாகக் குற்றவாளியாகக் காணப்பட்டார். இதனால் சினமடைந்த அவர் சிறையில் இருந்த நேரத்தில் தன்னால் முடிந்தளவிற்கு இப்பரிசோதனை பற்றிய தகவல்களை தேடிக் கண்டுபிடித்து, தான் பெற்ற அறிவின் அடிப்படையில் அதை வெல்ல முயன்றார். தன்னோடு இருந்த பல கைதிகளுக்கு அந்த அறிவைக் கொண்டு பயிற்சியளித்தார். வெறும் 15 நிமிடநேர பயிற்சி மட்டுமே கொடுத்தபோதும் 23 பேரால் அப்பரீட்சையில் வெல்ல முடிந்தது. 4 பேரால் மட்டுமே முடியவில்லை.

இத்தகைய அறிவைப் பயன்படுத்தி குற்றவாளிகளும், பாலியல் வன்முறையில் ஈடுபடுவோரும் பரிசோதனையில் தப்பி அப்பாவி முகம் பூண்டு மறைவில் குற்றமிழைக்க முடியும். இதனால்தான் சர்ச்சைகள் கிளம்பியுள்ளன.

‘பொய்களைக் கண்டு பிடிக்கும்’; என நம்பப்படும் இந்தப் பரிசோதனை எதிர்காலத்தில் ‘அகப்படாமல் பொய் சொல்லக் கற்றுக் கொள்ளவும் உதவலாம்’ என்பதையிட்டு கவனம் எடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.

‘பொய் சொல்லப் போறேன். பொய் சொல்லப் போறேன்….’

அவ்வாறு சிரித்துப் பாடி சந்தேகம் எழாதபடி திட்டமிட்டுப் பொய் சொல்பவர்களைக் கண்டு பிடிக்கும் சாதனங்கள் ஏதாவது புதிதாக வரும்வரை காத்திருப்போம்.

எனது ஹாய் நலமா புளக்கில்  (1st February 2013) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0

Read Full Post »