Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘மனித முகங்கள்’ Category

ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர்

எப்படி இருப்பார்கள் உங்கள் வழித்தோன்றல்கள்?

உங்களுக்கு உங்கள் பாட்டனின் முகம் ஞாபகமிருக்கும், ஆனால் கொள்ளுப் பாட்டனது பாட்டியின் முகம் தெரிந்திருக்க நியாயமில்லை.

1

போட்டோ கலை வந்தே 200 வருடங்கள்தான் ஆகிறதே.

அதேபோல மறக்க முடியாமல் பதிந்திருப்பவை பிள்ளைகள் பேரப் பிள்ளைகளின் முகங்களாக இருக்கலாம். ஆனால் நான்கு தலைமுறைக்குப் பின்னர் உங்களது வழித்தோன்றல்களின் முகம் எப்படியிருக்கும் என்பதை நிச்சயம் சொல்ல முடியாது அல்லவா? கற்பனையில்தான் பார்க்க வேண்டும்.

விஞ்ஞானிகள் மகா கற்பனைவாதிகள். ஒரு இலட்சம் வருடங்களுக்குப் பின்னர் மனித முகம் எப்படி இருக்கும் எனக் கற்பனை பண்ணிப் பார்த்து எங்களுக்கும் சொல்லியிருக்கிறார்கள்.

Nickolay Lamm  என்பவர் ஒரு வழியில் விஞ்ஞானி மற்றொரு வழியில் வடிவமைப்பாளர். சில காலத்திற்கு முன்னர் இவர் வடிவமைத்த மனித முகங்கள் மேலைத்தேய ஊடகங்களில் வெளிவந்து பரபரப்பைக் கிளப்பின.

பத்துத் தலை இராவணன், ஆனை முகத்துப் பிள்ளையார், ஆறுமுகத்தான், குதிரை முகத்தாள் கோரமுகக் காளி என எமது முன்னோர்கள் புராதன காலத்திலேயே தங்கள் கைவரிசைகளைத் திறமையாகக் காட்டியிருக்கிறார்கள்.

Australopithecus africanus 2.5 million years ago

நிலவு காயும் இரவில் புற்தரையில் தென்றல் தழுவக் கிடந்தபடி நீலவானில்; விழி மேய்கையிலும், சாய்வு நாற்காலியில் கண் மூடி உடலாறக் கிடந்து கற்பனைக் குதிரையின் வாலை முறுக்கும் செயல்கள் அவை.

ஆனால் Nickolay Lamm  யின் வடிவமைப்புகள் அந்த ரகத்தைச் சேர்ந்தவை அல்ல. Washington University  யைச் சார்ந்த கணனி மரபியில் நிபுணரான Dr.Alan Kwan  அவர்களுடன் கலந்துரையாடி இந்த மாதிரிகளை அமைத்துள்ளார். அவ்வாறு வடிவமைப்பதற்கு முன்னர் மூன்று முக்கிய விடயங்களை கவனத்தில் எடுக்க வேண்டியிருந்தது.

  1. கடந்த காலத்தில் மனிதர்களதும், மனித முன்னோடிகளினதும் உடலும் முகங்களும் தங்கள் சூழலின் சவால்களுக்கு ஏற்ப எவ்வாறு மாற்றமடைந்துள்ளன என்பதை தெளிவாக அறிய வேண்டும். இதற்கு புதைவடிவ மனித எச்சங்களை காலரீதியாக ஆய்வதன் மூலம் கூர்ப்பில் ஏற்பட்ட மாற்றங்களை அறிந்து கொள்ள முடியும். அகழ்வாய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்ட மிகப் பழமையன புதைவடிவ மனித எச்சம் ஆர்டி Ardi (Ardipithecus kadabba)  என்ற பெண்ணினது. இவ் மனித மூதாதைகள் 4.4 மில்லியன் ஆண்டுகளுக்கு முன் எதியோப்பியாவில் வாழ்ந்தவர்களாகும்.
  2. இன்றும் எதிர்காலத்திலும் எமது வளிமண்ணடலத்திலும் பூமியின் ஒளியமைப்பிலும், கதிர்வீச்சுகளாலும் எற்படக் கூடிய சூழல் மாற்றங்கள் எவை என்பதை விஞ்ஞான ரீதியாக ஊகித்து அறிய வேண்டும். அவற்றிக்கு மனிதன் எவ்வாறு முகம் கொடுத்து மாற்றமடைவான் என்பதை கணிக்க வேண்டும்.
  3. மனிதனின் இற்றைவரையான மாற்றங்கள் சுயமாக கூர்ப்பில் நடந்தன. ஆனால் இப்பொழுது மனித அறிவானது மரபணுக்களில் தம் விருப்பிற்கு ஏற்றவாறு மாற்றங்களைச் செய்யுமளவு வளர்ந்துள்ளது. இது எதிர்காலத்தில் மேலும் கூர்மையடைந்து மனித உருக்களில் மாற்றங்களை எற்படுத்தக் கூடியனவாக அமையும். இதையும் அவர்கள் கருத்தில் கொண்டார்கள்.

இவை யாவற்றையும் கவனத்தில் எடுக்கையில் சுமார் 1000 முதல் 60,000 ஆண்டுகளில் மனிதர்களின் தோற்ற மாற்றம் பற்றிய கணிப்பீடுகள் விவாதத்திற்குரியன என்பதில் ஐயமில்லை.

ஆனால் விஞ்ஞானிகள் ஏன் ஒரு இலட்சம் வருடங்கள் முதல் 5 இலட்சம் வருடங்களுக்கு பின்னர் மனித இனத்தின் உருவில் ஏற்படக் கூடிய மாற்றங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். 1000, 2000, 10000 எனக் குறுகிய கால மாற்றங்கள் பற்றிய எதிர்வுகளைக் கூறிவில்லை.

20,000 வருடங்களில்

“மனிதன் மாறவில்லை” என கண்ணதாசன் வேறு காரியத்திற்காக கூறியது நினைவில் வருகிறது. ஆம் மனிதன் விரைவில் மாறுவதில்லை. உருவ மாற்றங்களுக்கு நீண்ட காலம் பிடிக்கும்.

உயிரினக் கூர்ப்பில் குறைந்த தரத்திலான நத்தை இனங்களின் சோர்வான வளர்ச்சி வேகத்தோடு ஒப்பிடுகையில் மனித மாற்றங்கள் சோடை போகவில்லைத்தான். இருந்தபோதும் பழைய கற்கால மனிதனுக்கும் இன்றைய புதுயுக மனிதனுக்கும் இடையேயான நீண்ட பயணத்தில் மனித உருவில் பெரிய வேறுபாடுகள் தெரிவதில்லை.

யுகயுகமாக மாற்றங்கள்

உயர் விலங்கினத்தில் ஒன்றானவன் மனிதன். அவனில் ஏற்பட்ட முக்கிய மாற்றமானது நாலு காலில் தவண்டு திரிந்தவன்  ‘நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையுமாக’  இரட்டைக் காலில் நடக்கத் தொடங்கியதுதான். ஆனால் அதற்கு முன்னரே நாலு கால்களையும் நடப்பதற்காகவே உபயோகிப்பதைக் கைவிட்டு, முன்னங் கால்களால் பற்றிப் பிடிக்கப் பழகிக்கொண்டான். அவை கைகள் ஆகின. பின்னர் நிமிர்ந்து நிற்கவும் நடக்கவும் முடிந்தது.

ஒரு வரியில் நான் இதைச் சொல்லிவிட்டாலும் இது ஒரு பாரிய மாற்றம். அதற்கேற்ப அவனது எலும்புத் தொகுதி மாற நேர்ந்தது. இரண்டு கால்களால் மட்டும் திடமாக நடக்க நேர்ந்ததால் உடலின் முழுப் பாரத்தையும் தாங்குமளவிற்கு அடிவயிற்று எலும்பானது (Pelvis) வலுவுள்ளதாக மாறியது. அதே நேரம் நெஞ்சுப் பகுதியானது முற்புறம் தள்ளியிருப்பதைத் துறந்து தட்டையாக மாறியது. அதற்கும் அப்பால் உள்ளுறுப்புகளான இதயம், சுவாசப்பை, ஈரல், குடல், சிறுநீரகம் போன்றவை கிடை அச்சைக் கைவிட்டு நீள்வச அச்சில் (longitudinal axis)    தொங்குவதற்கு ஏற்றவாறு மாற நேர்ந்தது.

மண்டை ஓடும் மூளையும்

மற்றொரு முக்கிய மாற்றம் மண்டை ஓட்டிலும் மூளையிலும் ஆகும். மனிதன் அறிவாற்றல் வளர்கின்ற வேகத்தைப் பார்க்கும்போது பெரும்பாலனார்கள் இவற்றின் கனஅளவு வேகமாக அதிகரிக்கும் என்றே எண்ணுகிறார்கள். ஆனால் 50,000 ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த ரொடேசிய மற்றும் நெதண்டதால் மனிதர்களது மண்டை ஓட்டின் அளவானது இன்றைய மனிதனின் மண்டை ஓட்டின் அளவை ஒத்ததாககவே இருப்பதை நோக்கும்போது பாரிய மாற்றம் ஏற்படாது என்றே தோன்றுகிறது.

60,000 வருடங்களில்

ஆனால் சுமார் ஒரு கோடி வருடங்களுக்கு முன் வாழ்ந்த phylogenetic சின் மண்டை ஓட்டின் உட்புறக் கன அளவு 900 cc ஆக இருக்க, இன்றைய மனிதனது சுமார் 1450 cc யாகப் பருமன் அடைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே 500,000 வருடங்களில் இது 1750 cc ஆக உயரலாம் என்பது சாத்தியமே.

அவ்வாறு மாறும்போது மண்டை ஒட்டின் வடிவமானது தற்போதுள்ளது போன்ற நீள்வட்ட வடிவிலிருந்து சற்று மாறி கூடியளவு வட்ட வடிவத்தை நோக்கி நகரக் கூடும் என்கிறார்கள். மண்டை ஒட்டின் நீளத்தைவிட அகலம் அதிகரிக்கும் தன்மையை brachycephaly என்பார்கள். இவ்வாறான மாற்றத்தை தெற்கு ஜேர்மனி, பிரித்தானியாவின் சில பகுதிகளிலும் இப்பொழுதே அவதானிக்க முடிவதாக கூறுகிறார்கள்.

Homo heidelbergensis 50000 Years ago

மண்டை ஓட்டில் ஏற்படக் கூடிய மற்றொரு மாற்றமானது பெண்களை மகிழ்வடைச் செய்யக் கூடியது. ‘உங்களை விட நாங்கள் கூர்ப்பில் 500000 வருடங்கள் முன் நிற்கிறோம்’ என ஆண்களைப் பார்த்து பெருமை பேசக் கூடியது.

ஆதிகாலத்தில் மண்டை ஓடானது சற்றுக் கரடு முரடானதாகவும், வளைவுகளில் கூர் முனைப்பானவையாகவும் இருந்தன. ஆனால் கால ஓட்டத்தில் மென்மை கூடியதாகவும் அதிக வழுவழுப்பைத்தன்மை கொண்டதாகவும் மாறிவருகிறது. சாதாரண கண்களுக்கு வெளிப்படையாகத் தெரிவது கண்களுக்கு மேல் புருவப் பகுதியில் உள்ள எலும்பு முனைவரம்பு ஆகும்.

பெண்களில் இந்தப் புருவ வரம்பானது வழவழப்பாவும் வளைவுகள் குறைந்து செங்குத்துத்தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. ஆண்களில் புருவ வளைவுகள் முனைப்பு கொண்டதாக இருக்கிறது. இதைச் சுட்ட கூர்ப்பில் தாங்கள் முன்னோடிகள் எனப் பெண்கள் பெருமை கொள்ளலாம்.

ஆண்களுக்கு அவ் வளைவுகள் மறைய மேலும் 500000 ஆண்டுகள் ஆகலாம்.

இவை விஞ்ஞான ஆய்வுகளும் அதன் நீட்சியான ஊகிப்புகளும் ஆகும்.

முகமாற்றம்

இவற்றின் அடிப்படையில் மனித முகம் எவ்வாறு மாறும்?

ஏற்கனவே சொல்லப்பட்டது போலவே நாம் தலை கனத்தவர்களாக இருப்போம். இரு விதங்களில். தலையினதும் மூளையினதும் அளவு 500,000 ஆண்டுகளின் பின் நிச்சயம் அதிகரித்திருக்கும். அதே வேளை அவற்றின் தரத்திலும் செயற்பாட்டு திறனிலும் பெருமளவு முன்னேற்றம் எற்பட்டிருக்கும்

இருந்த போதும் மூளையின் அளவில் அதிகரிப்பு ஏற்படுவதை விட அதன் தரத்திலேயே பெருமளவு மாற்றம் எற்படும் என வேறு பல விஞ்ஞானிகள் கருதுகிறார்கள்.

விழிகள் கார்ட்டுன் படங்களில் வருவதுபோல பெரியதாகவும் முழிப்பாகவும் தெரியும் என்கிறார்கள். சில இலட்ச வருடங்களின் பின் பூமியில் மட்டுமின்றி வேறு கிரகங்களிலும் மனிதன் வாழ நேரிடும். அவற்றில் பலவற்றில் ஒளி குறைவாக இருக்கக் கூடியவை. எனவே குறைந்த ஒளியிலும் கூர்மையாகப் பார்ப்பதற்கு உதவியாக கண்கள் பெரு மாற்றம் அடையும் எனப்படுகிறது.

100,000 வருடங்களில்

பிரபஞ்சத்தில் உலவுவதாலும் வேறு கிரகங்களில் வாழ நேருவதாலும் அதிகளவு UV radiation  னுக்கு எதிர்கால மனிதன் முகம் கொடுக்க நேரிடும் அல்லவா? அதிலிருந்து தம்மைப் பாதுகாத்துக் கொள்வதற்காக சருமத்தின் நிறம் கூடுதலாக கருமையடைவதற்கான சாத்தியங்கள் உண்டு.

அச்சில் வார்த்த குழந்தைகள் போல

“வாற வருஷம் நாங்கள் பெறப்போற பிள்ளைக்கு என்ரை மூக்கும் உன்ரை பல்வரிசையும்தான் இருக்க வேணும் என்று எங்கடை டொக்டறட்டை சொல்லிப் போடு” என்றான் கணவன். 

பிள்ளைக்கு என்ன பெயர் வைக்க வேணும் என்று இப்ப நாங்கள் விவாதிப்பதில்லையா? அதைப் போல எதிர்கால விவாதங்கள் இருக்கலாம்.

எதிர்காலக் குழந்தைகள் அச்சில் வார்த்ததுபோல நேர்த்தியாக இருப்பார்கள். முகத்தின் இரு பக்கங்களுக்கும் இடையே சிறிய வேறுபாடுகளும் இன்றி சரியான சமச்சீரானதாக இருக்கும். இது கூர்ப்பினால் ஏற்படப் போவதல்ல. தங்கள் குழந்தைகளின் முகம் அழகாக இருக்க வேண்டும் என்பதற்காக

அவற்றின் DNA  க்களில் மருத்துவ ரீதியாகக் குறுக்கீடு செய்ய அந்நேரத்தில் முடியும் என்பதால் பிறக்கும் குழந்தைகளின் நிறம் மூக்கின் நீளம் உடல் உயரம் போன்ற யாவற்றையும் பெற்றோர்களே தீர்மானித்து விடுவார்கள்.

எல்லாம் சரி! ஒரு இலட்சம் வருடங்களுக்கு பின் உலகம் இருக்குமா? அணுகுண்டு இயற்கையைச் சூறையாடல் போன்றவற்றை எல்லாம் தாண்டும் வல்லமை அதற்கு உண்டா எனக் கேட்காதீர்கள்.

ஒரு வேளை உலகம் தப்பிப் பிழைத்தாலும் மனிதன் அக்காலத்தில் பூமியில் இருப்பானோ என்பதே சந்தேகம். ஒருவேளை இருந்தாலும் அவன் மனிதனாக இருப்பானோ அல்லது வேறு ஒரு உயிரினமாக மாறியிருப்பானோ என்பதும் நிச்சயமில்லை.

இதை எல்லாம் யோசித்து ஏன் கற்பனைச் சுகங்களை இழக்க வேண்டும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0

Read Full Post »