வாடகைத் தாய்மார்கள்
மருத்துவத்தின் மறுபக்கம்
முப்பதே வயதுடைய அந்த இளம் பெண்ணின் மரணம் எந்தச் சலசலப்புமின்றி பத்தோடு பதினொன்றாக மறக்கப்பட்டுவிட்டது. பத்திரிகைகள் தலைப்புச் செய்தி கொடுக்கவில்லை. தொலைக்காட்சிச் சனல்கள் கண்டு கொள்ளவில்லை. யாரும் அவளது இறப்பைப் பற்றி அக்கறை கொள்ளவில்லை. அவளது உறவினர்கள் கூட கேள்வி எழுப்பாது மௌனம் காத்தனர்.
கள்ள மௌனம் என்பது அதுதானோ?
அகாலமாக இறந்த அந்தப் பிரமிளா பெற்றெடுத்த குழந்தைக்கு உடனடியாகவே அதிஉச்ச மருத்துவ உதவி கொடுக்கப்பட்டது. அது நிறைமாதப் பிள்ளை அல்ல. தாயின் ஆபத்தான உடல் நிலை கருதி 8 மாதத்தில் அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை மூலம் பிறக்க வைக்கப்பட்டிருந்தது.
அமெரிக்கா செல்லப் போகிற குழந்தை அல்லவா? அதிசிறந்த மருத்துவ உதவிகள் கொடுக்கப்பட்டதில் ஆச்சரியமில்லை.
தாய் ஏன் இறந்தாள்?
அஹமதாபாத்தைச் சேர்ந்த பெண்களுக்கான பல்ஸ் மருத்துவமனையின் மருத்துவ அதிகாரியான Dr.Manish Banker இந்த மரணம் பற்றி இவ்வாறு சொன்னதாக அக்கறையுள்ள ஒரு சில பத்திரிகைகள் செய்தி வெளியிட்டன. ‘வழமையான மருத்துவப் பரிசோதனைக்கு வந்த அந்தப் பெண் திடீரென ஏற்பட்ட வலிப்பினால் மயங்கி விழுந்திருந்தாள். உடனடியாக அவளை சிகிச்சைக்கு எடுத்தோம். கடுமையான நிலையில் இருந்ததால் உடனடியாக அவசர சிசேரியன் சத்திரசிகிச்சை செய்தோம்’.
சத்திரசிகிச்சைக்கு ஆளாக்கப்பட்ட பிரமிளா உடனடியாக வேறொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாள். மாற்றப்பட்டதற்குக் காரணம் அத்தகைய ஆபத்தான நோயாளிகளை கையாள்வதற்கான வசதி அங்கு இல்லை என்பதாகவே இருக்கலாம். சடுதியான இருதய நிறுத்ததால் (Cardiac Arrest) கடுமையான நிலையில் இருந்த அவள் சிகிச்சை பயனளிக்காது அங்கு இறந்தாள்.
அந்தத் தாயின் உயிர் துச்சமானதாகவும், குழந்தையின் உயிர் பெறுமதிமிக்கதானதாகவும் ஆனது எதனால்?
வாடகைத் தாய்
காரணம் அவள் ஒரு சாதாரண வாடகைத் தாய். குழந்தையோ அமெரிக்க மில்லியனரின் உயிரியல் சுவடுகளைச் சுமக்கும் மறைமுக பணக்கார வாரிசு.
வாடகைத் தாய்களின் பிரச்சனை இலங்கையில் இருப்பதாகத் தெரியவில்லை.
ஆனால் எமது அயல்நாடான இந்தியாவைப் பொறுத்தவரையில் பெருமளவு இருக்கிறது. சுமார் 25,000 குழந்தைகள் வருடாந்தம் வாடகைத் தாய்மாரால் பெற்றெடுக்கப்படுவதாக மதிக்கப்படுகிறது. வெளியே அதிகம் பேசப்படாத தொழிலாக இருந்தபோதும் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதி மிக்கதாக இருக்கிறது.
இவர்களில் இரு வகைகள் உண்டு.
- கரு முட்டை, விந்து இரண்டுமே வெளியிலிருந்து பெறப்பட்டு, செயற்கையாக இணைய வைக்கப்பட்டு அதனால் பெறப்பட்ட கருமுளையை (நுஅடிசலழ) வாடகைத் தாயின் கருப்பையில் வைத்து வளரச் செய்தல் ஒரு முறை. இங்கு கருப்பையில் வளரும் குழந்தைக்கும் வாடகைத் தாய்க்கும் எந்தவித ஜெனடிக் தொடர்பும் கிடையாது.
- இரண்டாவது முறையில் வாடகைத் தாயின் கரு முட்டையை வாடகைக்கு பெறும் ஆடவனின் விந்துடன் செயற்கையாக இணையச் செய்து பின் இவளது கருப்பையில் வைத்து வளரச் செய்தலாகும். இங்கு அது அவளது குழந்தை என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆத்மார்த்த ரீதியான தொடர்பு இங்கு அவளுக்கும் மிகவும் நெருக்கமானது என்பதில் சந்தேகம் இல்லை.
பணம் கொழிக்கும் தொழில்
தாயின் ஆரோக்கியத்தை விட பணத்தை மட்டும் குறியாகக் கொண்டு இயங்கும் இந்தத் தொழிலானது சட்டங்களில் கைகளில் அகப்படுவது இல்லையென்றே சொல்லாம்.
இதற்குக் காரணம் வலுமிக்க டொலர்களின் பெறுமதிக்கு முன்னால் அபலைப் பெண்களின் தீனமான குரல்கள் அடங்கிப் போகின்றன என்பது மட்டுமல்ல. காலத்தின் தேவைகளுக்கு ஏற்ப புதிய சட்டங்கள் இயற்றப்படாமல் தாமதப்படுத்துவதும் மற்றொரு காரணமாகும். செயற்கைக் கருவூட்டல் கிளினிக்குகள் (IVF) என்ற பெயருக்குள் மறைந்து நின்று செயலாற்றுவதால் வெளிப்படையாகத் தெரிவதில்லை என்பதையும் சுட்டிக் காட்ட வேண்டும்.
- உலகளாவிய ரீதியில் ஆண் பெண் இருபாலாரது மலட்டுத்தன்மையும் அதிகரித்து வருகின்ற நிலையில் தமக்மென ஒரு வாரிசை மாற்று வழிகளில் தேடுபவர்களின் எண்ணிக்கையும் அதிகரிதுள்ளது. தெரியாத ஒரு குழந்தையைத் தத்தெடுப்பதை விட தமது உயிரில் கூறுகளைக் கொண்ட கொண்டிருக்கக் கூடிய குழந்தையை செயற்கை கருவூட்டல் முறையில் பெறுவது விருப்புடையதாக இருக்கிறது. மேற்கூறிய கிளினிக்குகள் அவர்களது தேவையைப் பூர்த்தி செய்ய முனைகின்றன.
- இந்தியாவின் பெரிய நகர்கள் எங்கும் இத்தகைய கிளினிக்குகள் இயங்குகின்றன. இப்பொழுது சிறிய பட்டினங்களிலும் தலை தூக்குகின்றன.
- இங்கு செயற்கையாகக் கருவூட்டப்பட்டு கிடைக்கும் குழந்தைகளில் 50 சதவிகிதத்திற்கு மேலானவை மேலை நாடுகளிலிருந்து வரும் பணக்காரர்களுக்காகவே உற்பத்தியாகின்றன.
- குழந்தையின்மைக்கான சிகிச்சைகளும், வாடகைத் தாய்மாரைப் பிடிப்பதும் இந்தியாவில் மலிவானது என்பதால்தான் இங்கு இத்தொழில் சூடுபிடித்துள்ளது.
- இக் கிளினிக்குகளின் செயற்பாடுகளில் வெளிப்படைத்தன்மை கிடையாது. வாடகைத் தாயோடு செய்யப்படும் ஒப்பந்தங்களில் உள்ள நுணுக்கமான சரத்துகளால் சம்பந்தப்பட்ட மருத்துவர்கள், சட்டத்தரணிகள் மற்றும் வாடகைக்கு அமர்த்திய பெற்றோர்கள் பிரச்சனைகளுக்குள் அகப்படாமல் தப்பிக்க முடிகிறது. பாதிப்புறுவது அப்பாவிப் பெண்களே.
- எதிர்பாராதவிதமாக வாடகைத் தாய்க்கு கடுமையான நோய் அல்லது பாதிப்பு கர்ப்பத்தின் ஏற்பட்டால் கருவைக் காப்பதற்காக அவளது உயிரைத் தக்க வைத்திருப்பதற்கான சரத்துகளும் அவ் ஒப்பந்தங்களில் அடங்கியிருக்கும். அதாவது தாயைக் காப்பாற்றுவதற்காக அல்ல, கருவை உயிருள்ள குழந்தையாகப் பெற்றெடுக்க வைப்பதற்காக. அவளது உயிரை செயற்கையாக இயந்திரங்களால் தேவைப்படும் காலம் வரை இயங்க வைப்பார்கள்.
- தாயின் உயிருக்கு ஆபத்து எற்பட்டால் அவளது குடும்பத்தினருக்கு பணத்தைக் கொடுத்துவிடுவார்கள். கதை அத்துடன் மூடி வைக்கப்படும். பாவம்! இதுதான் பிரமிளாவின் கதையும் ஆயிற்று
மருத்துவ ரீதியான பாதிப்புகள்
குழந்தையற்றவர்களுக்கு அவர்களது உயிரணுக்களின் கூறுகளை கொண்ட வாரிசுகளை உருவாக்கும் குழந்தை உற்பத்தித் தொழிற்சாலைகள் இவை. வறுமையில் உழலும் இந்தியப் பெண்கள் அதற்காக தமது கருப்பைகளை வாடகைக்குக் கொடுக்கிறார்கள். இந்த மருத்துவச் செயற்பாட்டால் அந்த வாடகைத் தாய்க்கு ஏற்படும் உடல், உள ரீதியான பாதிப்புகள் பேசப்படாமலே போய்விடுகின்றன.
தனது வயிற்றில் வளரும் அந்தக் குழந்தையின் ஒவ்வொரு சிறு துடிப்பையும் அசைவுகளையும் உணர்ந்து, அதனோடு மௌன மொழியில் உணர்வுகளைப் பகிர்ந்து கொண்டு, அதன் வளர்ச்சியில் பத்து மாதங்களாக மகிழ்ந்து நின்ற தாய் சேய் உறவானது ஒரே நிமிடத்தில் அறுத்துப் பிரிக்கப்படுகிறது.
அந்தக் குழந்தைக்கென அவளது உடல் உற்பத்தி செய்யும் முலைப்பாலானது பிரிவின் ஏக்கத்தில் சுரக்கும் அவளது கண்ணீருடன் கலந்து விரயமாகிறது. அவளுக்குப் பரிசாகக் கிடைக்கும் பிரிவாற்றாமை, தனிமையுணர்வு, குற்றவுணர்வு, மனப் பதற்றம், விரக்தி ஆகியற்றுடன் தனது வாழ் நாளைக் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகிறாள். அபாக்கியவதியாகிறாள்.
கரு கலைந்து போகாமல் இருப்பதற்காக அவளுக்கு ஏராளமான ஹோர்மோன் ஊசிகள் தொடர்ச்சியாகப் போடப்படுகின்றன. இவற்றால் அவளது எதிர்கால நலத்திற்கு ஏற்படக் கூடிய பாதிப்புகள் ஏராளம். அவளது மாதவிடாய் சக்கரத்தின் ஒழுங்குமுறை பாதிப்புறுகிறது.
மகப்பேறு பெரும்பாலும் இயற்கையானதாக இருப்பதில்லை. அவளது கருப்பையை வாடகைக்குப் பெறுபவர்களின் கால நேர விருப்பங்களுக்கு ஏற்ப மகப்பேற்று நேரம் தள்ளிப் போட அல்லது முன்னகர்த்தப்படுகிறது.
சிசேரியன் சத்திரசிகிச்சை மூலமே குழந்தை பெறுவிக்கப்படுகிறது. இது மருத்துவ காரணங்களுக்கானது அல்ல. பணம் கொடுத்தவர்களின் தேவைகளுக்காகவே நடக்கிறது. அவசியமற்ற இத்தகைய சத்திர சிகிச்சை மூலம் அவள் வாழ்நாள் முழுவதும் படப்போகிற உடல் உள பாதிப்புகள் கவனத்தில் எடுக்கப்படுவதே இல்லை.
தவறான நடைமுறைகள்
மருத்துவ ரீதியான வேறு பல தவறான நடத்தைகளுக்கும் இத் தொழிலில் குறைவில்லை.
முக்கியமானது நான்கிற்கு மேற்பட்ட கருமுளைகள் (embrayo) ஒரு தடவையில் அவளது கருப்பைக்குள் வைக்கப்படுகிறது. சில கலைந்தாலும் ஒன்றாவது தப்பும் என்ற காரணத்திற்கான ஏற்பாடு இது. பிற்பாடு தமது தேவைக்களுக்கு ஏற்ப கருக்குறைப்புச் (foetal reduction)செய்யப்படுகிறது. பெரும்பாலான மருத்துவர்களால் ஏற்கப்படாத மருத்துவ நெறிமுறையாக இது இருக்கிறது.
பெண்கள் ஏன் இணங்குகிறார்கள்
பாதிப்புகள் இருந்தபோதும் பல பெண்கள் வாடகைத் தாயாவதற்கு ஏன் தயாராக இருக்கிறார்கள்?
பொருளாதார நிர்ப்பந்தங்கள் தான். நிதம் குத்தென ஏறிச் செல்லும் வாழ்க்கைச் செலவில் தமது நாளாந்த வாழ்வைக் கொண்டிழுப்பதே பெரும்பாடாக இருக்கிறது. தமது பொருளாதாரத்தை தக்க வைப்பதற்கு அவளிடம் இருக்கக் கூடிய ஒரே மூலதனம் அவளது கருப்பை ஒன்றுதான். அதை வாடகைக்கு விடுவதன் மூலம் தனது வீட்டுப் பொருளாதாரத்தைச் சமாளிக்க முடியும். சிலரால் தமது பிள்ளைககளுக்கு நல்ல கல்வி வழங்க முடிந்திருக்கிறது. சிலரால் சிறிய வீடு ஒன்றைத் தங்களுக்கு சொந்தமாகக் கட்டிக் கொள்ளவும் முடிந்திருக்கிறது.
இதனால் ஒரு கருவை வயிற்றில் சுமக்கும்போதே மற்றதை சுமப்பதற்கான ஆயத்தங்களைச் செய்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.
இருந்தபோதும் இவர்கள் யாவரும் தாம் வாடகைத் தாயாக இருப்பதால் ஏற்படப் போகும் பாதிப்புகளையும், தாங்கள் செய்யும் ஒப்பந்தங்களிலுள்ள ஓட்டைகளையும் புரிந்து அப் பணிக்கு செல்பவர்கள் அல்ல. நவயுகத்திற்கான புதிய சட்டங்கள் அவர்களைக் காக்க வேண்டும்.
இவ் ஏழைப் பெண்களின் ஆரோக்கியத்தைவிட பணம் கொழிப்பவர்களுக்கு குழந்தை பெற்று கொடுப்பதால் தமக்குக் கிடைக்கப்போகும் ஆதாயங்களையே நினைக்கும் மருத்துவர்களின் செயற்பாடுகள் அவர்களது தொழில் தர்மத்திற்கு ஏற்றதல்ல. இதற்குக் காரணம் மருத்துவத் தொழில் என்பது சேவை என்பதற்கு அப்பால் பணமீட்டும் தொழிலாக மாறிவிட்டது. எல்லா மருத்துவர்களும் அவ்வாறு இல்லாவிட்டாலும் அத்தகையவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பது கவலையான விடயம்தான்.
எனது ஹாய் நலமா புளக்கில் 9th September 2012 வெளியான கட்டுரை வாடகைத் தாய்மார்கள் மருத்துவத்தின் மறுபக்கம்
டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.
MBBS(Cey), DFM (Col), MCGP (col)
குடும்ப மருத்துவர்