Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சருமநோய்கள்’ Category

கேள்வி:- நான் கணனியில்  அதிக நேரம் வேலை செய்வதால் கண்ணில் கருவளையம் வருகிறது.

அதற்கான தீர்வு என்ன  ?

எஸ்நிவேதா கிளிநொச்சி

 பதில்:- உங்கள் கேள்வியிலேயே பதில் இருக்கிறது. கணனியில் அதிக நேரம் வேலை செய்வதால் வருகிறது என்கிறீர்கள். எனவே வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதே தீர்வு எனலாம். கணனியில் வேலை செய்வதால் மட்டுமல்ல எந்தவிதமான அதீத வேலையும் மனஅழுத்தமும் கண்ணின் கருவளையங்கள் ஏற்படுவதைத் தீவிரமாக்கும்.

மாறாக போதிய ஓய்வும் பொதுவான நல்ஆரோக்கியமும் அது ஏற்படுதைக் குறைக்கும் என்பது முக்கிய உண்மையாகும்.

உங்களுக்கு மாத்திரமல்ல பலருக்கும் இந்தப் பிரச்சனை இருப்பதை நாம் காண முடிகிறது. உங்கள் வயதை நீங்கள் குறிப்பிடவில்லை. இள வயது முதல் முதுமை வரை பலருக்கு இருக்கிறது

உண்மையைச் சொல்லப் போனால் கண்ணருகே தோன்றும் கருவளையம் ஏன் ஏற்படுகிறது என்பது பற்றிய முற்று முடிவான விஞ்ஞானபூர்வ முடிவுகள் கிடையாது. ஆயினும் இது தோன்றுவதற்கு பல காரணங்கள் இருப்பதை அறிய முடிகிறது.

பரம்பரை அம்சம் ஒரு முக்கிய காரணமாகும். ஒரே கும்பத்தைச் சேர்ந்த பலருக்கு இது ஏற்படுவதைக் காண முடிகிறது.

அத்தகையவர்களுக்கு இளவயதிலேயே இது தோன்றக் கூடும். வயது அதிகரிக்க அதிகரிப்பதுண்டு.
ஒவ்வாமைகள் மற்றும் எக்ஸிமா நோய்களின் தொடர்ச்சியாகவும் இது வருவதுண்டு.
கண்களைச் சுற்றி ஏதாவது காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் அதைத் தொடரந்து கருமை ஏற்படலாம். கண்டல், சிறுநீரக நோய், ஒவ்வாமை வீக்கம் போன்றவற்றை கூறிப்பிடலாம்.
வயதாகும் போது சருமம் தனது நெகிழ்ச்சிதன்மையை இழந்து சுருங்குவதாலும் கருவளையும் போலத் தோற்றமளிக்கும்.
புருவங்களுக்கு கீழே மூக்கு அருகே இருக்கும் கண்ணீர் பை வயதின் காரணமாக சுருங்கும் போதும் கண்ணருகே கருமை தோன்றுவதுண்டு.
இவ்வாறு கண்ணைச் சுற்றிய கருமை ஏற்படுவற்கு பல காரணங்கள் இருப்பதால் காரணத்தை அறிந்து சிகிச்சை செய்வதே பொருத்தமானது.
குளுக்கோமா (கண் பிரசர்) நோய்க்கு பயன்படுத்தும் சில துளிமருந்துகளும் அவ்வாறு கருமை படர்வதற்கு காரணமாகும். அத்தகைய கண் மருந்துகளை உபயோகிக்க ஆரம்பித்து சுமார் 2-3 மாதங்களுக்கு பின்னரே கருமை படர ஆரம்பிக்கும். ஆனால் அதை உபயோகிப்பதை நிறுத்தினால் ஒரு சில மாதங்களுக்குள் சருமம் இழல்பான நிறத்திற்கு வந்துவிடும்.
கருமை படர்ந்த சருமத்தின் நிறத்தை குறைப்பதற்கு பல வகையான களிம்பு மருந்துகள் உள்ளன.  Hydroquinone, Azelaic acid  போன்றவை இலங்கையில் கிடைக்கின்றன. இவற்றை பூசும்போது கடைப்பிடிக்க வேண்டிய முறை மற்றும் பக்கவிளைவுகள் காரணமாக மருத்துவரின் ஆலோசனையுடன் அவரின் கண்காணிப்பின் கீழேயே உபயோகிக்க வேண்டும்.
அல்ரா லைட் பாதுகாப்புள்ள கண்ணாடிகளை உபயோகிப்பது உதவும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

குடும்ப மருத்துவர்

Read Full Post »

“அழகு தேமல் என்று நினைத்து பேசாமல் விட்டிட்டன். நாவூறு பட்டதுபோல இப்ப கூடக் கூடவா வருகிறது'”என்று அம்மா சொன்னாள்.

மாநிறமான அந்தப் பையனின் சொக்கைகளில் பவுடர் அப்பியது போல சில அடையாளங்கள். அம்மா சொன்னது உண்மைதான். அழகான அந்தப் பையனின் முகம் அழகு குலைந்து கிடந்தது.

ஆனால் இந்த அழகென்பதும் அழகு குலைந்தது என்பதும் எமது மன உணர்வுகள்தான்.

அழகு தேமல் Pityriasis alba

இந்த அழகு தேமலை Pityriasis alba என அழைப்பார்கள். தெளிவற்ற ஓரங்களையுடைய தேமல் அடையாளங்களாக இருக்கும். நல்ல வெளிச்சத்தில் உற்றுப் பார்த்தால் நுண்ணிய செதில்கள் போல சற்று சொரப்பாக இருக்கும். சற்று செம்மை படர்ந்த அடையாளங்களாக ஆரம்பிக்கும் இவை பின்னர் வெளிறியவையாக மாறிடும்.

எனவே இவை செம்மை படர்ந்தவையாகவோ, வெள்ளை நிறமாகவோ அல்லது சில வேளைகளில் சரும நிறத்தவையாகவோ இருக்கக் கூடும்.

Tinea Alba

முகத்தில் அதுவும் பெரும்பாலும் கன்னங்களிலேயே இது தோன்றும். இருந்த போதும் தோள் மூட்டு, கைகளின் மேற்பகுதி, கழுத்து போன்ற இடங்களிலும் வரக்கூடும். சில வேளைகளில் நெஞ்சு, முதுகுப் பகுதிகளிலும், தொடைகளிலும் கூட தோனன்றக் கூடும்.

மிகப் பெரிய அளவானவையாக இருப்பதில்லை. 1 முதல் 4 செமீ அளவில்தான் இருக்கும். பொதுவாக 4-5 அடையாளங்கள் இருக்கக் கூடும் என்ற போதும் அவற்றின் எண்ணிக்கை 20 வரை அதிகமாகவும் இருக்கலாம். குளிர் காலத்தை விட வெயில் காலத்தில் கவனத்தை ஈர்க்கும் வண்ணம் தெரியும்.

இது ஏன் தோன்றுகிறது என்பது பற்றி தெளிவற்ற தன்மையே நிலவுகிறது. பொதுவாக இது ஒரு வகை சரும அழற்சி என்றே கருதப்படுகிறது. அதாவது ஒரு வகை எக்ஸிமா எனலாம் என்றபோதும் கடுமை அற்ற வகையானது என்றே சொல்ல வேண்டும்.

இது ஒரு ஆபத்தற்ற நோய். ஒருவரிலிருந்து மற்றவருக்குத் தொற்றுவதில்லை. அத்துடன் காலப்போக்கில் தானகவே குணமடைந்துவிடும். சருமத்தை ஊறுபடுத்தாது கவனமாகப் பேணி வந்தாலே போதுமானது. எந்தவித சிகிச்சையும் தேவைப்படாது.

சொரசொரப்பு அல்லது அரிப்பு தொல்லையாக இருந்தால் மருத்துவர்கள் சருமத்தை மிருதுவாக்கும் கிறீம் வகைகளைச்(Emollient cream)  சிபார்சு செய்யலாம். அல்லது சற்று வீரியம் குறைந்த ஸ்டிரொயிட் (Steroid) வகை கிறீம்களையும் கொடுப்பதுண்டு. ஹைரோகோட்டிசோன் கிறீம் அத்தகையது. சற்று விலை உயர்ந்த Tacrolimus ointment    ஓயின்மென்ட்  உபயோகிப்பதும் உதவக் கூடும்.

அழுக்குத் தேமல் (Pityriasis versicolr)

அழகு தேமல் பற்றிப் பேசினோம். இனி அழுக்குத் தேமல் பற்றிப் பார்க்கலாமா?

pityriasis versicolor 3

இதுவும் ஏறத்தாள அழகு தேமல் போலவே பார்வைக்கு இருக்கும். இருந்தபோதும் இது தோல் அழற்சி நோயல்ல. கிருமியால் ஏற்படுகிறது. Pityrosporum என்ற ஈஸ்ட் வகைக் கிருமியால்தான் ஏற்படுகிறது.

பெரும்பாலானவர்களின் உடலில் இக் கிருமி இயற்கையாகவே இருக்கிறது. இருந்தபோதும் சிலரது உடலில் மட்டும் அவை பெருகி சரும நோயை ஏற்படுத்துகின்றன.

ஏன் சிலரில் மாத்திரம் பெருகுகிறது என்பதற்கான காரணங்கள் தெளிவாகச் தெரியவில்லை. இருந்தபோதும் கடுமையான வெக்கை, வியர்வை போன்றவை காரணமாக இருக்கலாம்.

அழகு தேமல் பெரும்பாலும் முகத்தில் தோன்றுவதாக இருக்க, இந்த அழுக்குத் தேமலானது நெஞ்சு, கழுத்து மற்றும் மேற் புஜங்களிலேயே பெரும்பாலும் ஏற்படுகிறது. வயிறு, முதுகு, தொடை போன்ற இடங்களுக்கும் சிலரில் இது பரவுவதுண்டு.

அருகருகே இருக்கும் தேமல் புள்ளிகள் ஒன்றுடன் ஒன்று இணைந்து பெரிதாக வருவதுண்டு.

சரும நிறத்திலேயே சற்று வெளிறலாகவும் சொரசொரப்பாகவும் இருப்பதால் அழுக்குப் படர்ந்தது போல தோன்றலாம். எனவேதான் அழுக்குத் தேமல் என்றேன். வெண்மையான தோலுடையவர்களில் பிரவுன் நிறமாகத் தேமல் தூக்கலாகத் தெரியும்.

Ketoconazole அல்லது Selenium சேர்ந்த சம்பூக்களை வெளிப் பூச்சு மருந்தாக உபயோகிக்கலாம். தேமல் உள்ள இடங்களில் மட்டுமின்றி அருகில் உள்ள சருமத்திலும் பூசுவது அவசியம். 5 முதல் 10 நிமிடங்கள் கழிந்த பின்னர் உடலைக் கழுவுங்கள்.

வாரம் ஓரு முறையாக நான்கு வாரங்கள் வரை பாவிக்க நோய் மறைந்து விடும். ஒரு சிலரில் இது சில காலத்தின் பின்னர் மீண்டும் ஏற்படக் கூடும். அவ்வாறெனில் மீண்டும் இந்த சம்பூ வைத்தியத்தை செய்ய வேண்டியிருக்கும்.

பங்கசிற்கு எதிரான (Antifungal- பங்கஸ் கொல்லி) பூச்சு மருந்துகளும் நல்ல பலனைக் கொடுக்கினன்றன. Clotrimazole, Miconazole, Ketoconazole  போன்றவை சில உதாரணங்களாகும். ஓயின்ட்மென்ட் அல்லது கிறீமாக ஆக உபயோகிக்கலாம். பொதுவாக காலை மாலை என இருவேளைகள் பூச வேண்டும். இரு வாரங்கள் வரை தொடர்ந்து உபயோகிக்க நேரிடும்.

உடலில் பல இடங்களில் பரவலாக இருந்தால் அல்லது சம்பூ மற்றும் பூச்சு மருந்துகளுக்கு போதிய பலன் கிட்டாவிட்டால் பங்கஸ் கொல்லி மருந்துகளை மாத்திரைகளாக உட்கொள்ளவும் நேரிலாம்.

வட்டக் கடி(Tinea Corporis)

Tinea Corporis

இதுவும் ஒரு வகை பங்கஸ் தோல் நோய்தான். வட்டக் கடி (Ringworm)  எனவும் சொல்லுவார்கள். பெரும்பாலும் வட்ட வடிவில் இருக்கலாம்.

ஆனால் இதன் முக்கிய குணமானது படர்ந்து செல்வதாகும். முதலில் சிறியதாக இருந்து ஓரங்களில் வெளிப் பரவிச் செல்லும். அவ்வாறு பரந்து செல்லும் போது, முதலில் ஆரம்பித்த நடுப்பகுதி குனமடைந்து விடும். அரிப்பும் பெரும்பாலும் ஓரங்களிலேயே இருக்கும்.

சிகிச்சையைப் பொறுத்த வரையில் மேலே கூறிய அதே பங்கஸ் கொல்லி பூச்சு மருந்துகள் பலன் அளிக்கும்.

Tinea  rubrum என்ற கிருமியினாலேயே இந்த நோய் ஏற்படுகிறது. சருமத்தில் மாத்திரமின்றி நகங்களிலும் முடியிலும், கால் விரல் இருக்குகளிலும் கூட இக் கிருமியால் நோய்கள் ஏற்படுவதுண்டு.

சரும நோய்கள் பல. அவற்றியேயான வித்தியாசங்கள் நுணுக்கமானவை. உங்களால் கண்டு பிடிப்பது சிரமமானது. ஒரு சரும நோய்க்கு தந்த பூச்சு மருந்துகளை அதேபோன்ற நோயாகத்தான் இருக்கிறது என நினைத்து வேறு புதிய சரும நோய்களுக்கு உபயோகிப்பது ஆபத்தில் முடியலாம்.

பலவிதமான பழைய பூச்சு மருந்துகள் பலரிடம் சேர்ந்து கிடப்பதை அவதானித்து இருக்கிறேன். எதை எதற்கு போடுவது எனப் புரியாது திணறிக் கொண்டிருப்பார்கள். சில காலாவதியான மருந்துகளாகவும் இருப்பதுண்டு. மருந்துகளை மாறிப் பூசி துன்பப்பட்டவர்கள் பலர்.

பழைய மருந்துகளை ஒருபோதும் சேமித்து வைக்காதிருக்காதீர்கள். குணமாகியதும் வீசிவிடுங்கள். அதுவே உங்களுக்கு பாதுகாப்பானது.

எனது ஹாய் நலமா புளக்கில் (Dec 22, 2014) வெளியான கட்டுரை

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

 

0.0.0.0.0

Read Full Post »

கொமோட் அரிப்பு (Commode rash)

‘நான் மாட்டன்’ அந்தக் குட்டிப் பையன் வெட்கத்துடன் சொன்னான். மாட்டன் என்று பிடிவாதம் பிடித்த அவனுக்காக அம்மா செய்ய வேண்டியதாயிற்று. கழற்றியதும் அப்பட்டமாகத் தெரிந்தது.

அவன் சிணுங்கிக் கொண்டே நின்றான்.

20131207_083146-001

‘இவன் எப்ப பாத்தாலும் பின் பக்கமாகச் சொறியிறான்.’ என்று தாய் சொன்னபடியால்தான் கால்சட்டையை அகற்றுமாறு சொல்ல நேர்ந்தது. ஆனால் அதற்கு முன்னரே அவனது கைகள் முகம் கழுத்து உடல் அக்குள் காதின் பின்புறம் என அவனது உடல் முழவதையும் அக்கறையோடு பார்த்துவிட்டேன். வேறு இடங்களில் எந்த சரும மாற்றத்தையும் காண முடியவில்லை.

அப்பட்டமாகத் தெரிந்தது வேறு எதுவுமல்ல. நோயுற்ற அவனது தொடைச் சருமம்தான். வெண்மையான அவனது சருமம் பாதிப்புற்று ஆங்காங்கே அலங்கோலமாகக் காட்சியளித்தது. அவனது பிட்டம் (குண்டிப் பகுதி) மற்றும் தொடையின் பின்புறமாக மேற்பகுதியிலும் சருமத்தில் சொரசொரப்பாக அரிப்புக் (Rash) கண்டிருந்தது. ஒரு சில இடங்களில் அது சிறு புண்களாகவும் மாறியிருந்தன.

கொமோட் அரிப்பு (Commode rash) என்று இங்கு மருத்துவர்கள் குறிப்படுவார்கள்.

Toilet seat rash என்று பொதுவாகவும்  toilet seat dermatitis என மருத்துவதிலும் சொல்லுவார்கள். ஐந்து புதிய அத்தகைய நோயாளிகளை இனங் கண்டதாக 2010 ல் வெளியான ஒரு மேலைத்தேய மருத்துவ அறிக்கை கூறியதை படித்தபோது ஆச்சரியமாக இருந்து. இங்கு நான் மட்டுமே பல குழந்தைகளைக் கண்டுள்ளேன்.

‘நாங்கள் கேடு கெட்டனாங்கள் ஒன்றையும் சுத்தமாக வைத்திருக்கத் தெரியாது. அதனாலைதான் இஞ்சை அதிகம். அவர்கள் எதிலும் வலு கிளீன்’ என்று சொல்ல வருகிறீர்களா?

அருகே நெருங்கவிடாது பொது மலசல கூடங்கள் நாற்றத்தால் விரட்டியடிப்பதும், ஒதுக்குப் புறமான இடங்களில் மதிலோரம் மூத்திர நாற்றம் மூச்சடக்கச் செய்வதும். காலையில் வீதியோரமாக மலங்கழிக்க வீட்டு நாய்களை அழைத்துச் செல்வதும் தலைநகரத்திலும் சகசமாகக் காணக்கிடைக்கையில் எமது சுகாதரம் பற்றிப் பெருமையாகப் பேச என்ன இருக்கிறது.

இருந்தபோதும் இது சுகாதாரக்கேட்டால் வரும் தொற்று நோயல்ல என்பதையும் குறிப்பிட்டே ஆகவேண்டும். நோயுற்ற ஒருவரிலிருந்து மற்றவருக்கோ அல்லது அழுக்கான பொருள்களிலிருந்து மனிதர்களுக்கோ பரவும் தொற்று நோயல்ல.

சுகாதாரத்தில் அதிக அக்கறை எடுப்பதால் வரும் நேயென்றும் கூறலாம். அது ஏன் என்பதை கட்டுரையைப் படித்துச் செல்லும்போது புரிந்து கொள்ளலாம்.

ஆதிகாலத்தில் இந்த நோய் இருந்ததில்லை. ஏன் எனில் அக்காலத்தில் மனிதர்கள் குந்திருந்தே மல சலம் கழித்தார்கள். பிட்டம் தொடை படுமாறு நாற்காலியில் உட்கார்ந்திருப்பது போல உயர்ந்த மலசல இருக்கைகள் அறிமுகமான பின்னரே இந்த நோயும் வர ஆரம்பித்தது.

wood_toilet_seat_s1

இந்த நோய் பற்றிய முதல் மருத்துவக் குறிப்பு 1927ம் ஆண்டுதான் வெளியானது. அக்காலத்தில் மரத்தாலான இருக்கைகளே இருந்தன். ஈரலிப்பான மர இருக்கைகள்,அதற்கு அடிக்கப்பட்ட வார்னிஸ் பெயின்ட் போன்றைவை காரணமாக இருக்கலாம் என நம்பப்பட்டது.

ஏனெனில் இது ஒருவகை ஒவ்வாமை நோயாகும். வார்னிஸ் போன்றவற்றால் சரும ஒவ்வாவை ஏற்படுவதால் வரும் நோய். ஒட்டுக் கிரந்தி – எக்ஸிமா (Contact Dermatitis) என சொல்லலாம்.

1980 – 1990 வாக்கில் பிளாஸ்டிக்காலான மலசலபீட இருக்கைகள் அறிமுகமாயின. பிளாஸ்டிக்ற்கு ஒவ்வாமை ஏற்படுவது குறைவு என்பதால் இந்த நோயும் அருகிவிடடிருந்தது.

ஆனால் அண்மைக் காலத்தில் மீண்டும் கொமோட் அரிப்பு நோய் வருவற்குக் காரணம் என்ன?

3505108

அவற்றைச் சுத்தம் செய்யப்பயன்படுத்தும் மாசகற்றும் பொருட்கள்தான் (னநவநசபநவெள). அவற்றில் பல கடுமையான இரசாயம் கலந்தவையாக இருக்கின்றன. இவையே சருமத்திற்கு ஊறு விளைவித்து ஒட்டுக் கிரந்தி நோய்க்கு காரணமாகின்றன.

இது பெரியவர்கள் குழந்தைகள் என்ற பேதம் இன்றி எவருக்கும் வரக் கூடியது. சில பெரியவர்களிலும் பார்த்திருக்கிறேன். ஆயினும் குழந்தைகளிலேயே அதிகம் காணப்படுகிறது.

குழந்தைகளின் சருமம் மிக மென்மையாக இருப்பது இவர்களில் அதிகம் வருவதற்குக் காரணமாக இருக்கலாம். குழந்தைகள் பாடசாலைக்குப் போகிறார்கள். அங்கு கழிப்பறைக்குச் செல்வார்கள். பெரும்தொகையான பிள்ளைகள் பயன்படுத்துவதால் அவற்றை சுத்தமாக வைத்திருக்க வேண்டியது நிர்வாகிகளின் கடமை என்பதால் கடுமையான மாசகற்றும் பொருட்களை அதிகளவு உபயோகித்திருப்பார்கள். அதுவே காரணமாயிருக்கலாம்.

அதே போல வீடுகளிலும் எல்லோரும் கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய மாசகற்றும் பொருட்களை; (detergents) உபயோகிக்கிறார்கள். அதில் தவறேதும் இல்லை.

அப்படியானால் தடுப்பது எப்படி?

  1. மரத்தாலான கழிப்பறை இருக்கைகள் இன்னமும் பாவனையில் இருந்தால் அவற்றை அகற்ற வேண்டும். பாதுகாப்பான பிளாஸ்டிக் இருக்கைகளையே உபயோகிக்க வேண்டும்.
  2. கடுமையான மாசகற்றும் இரசாயனங்களை உபயோகிக்கக் கூடாது. எந்த வகையான இரசாயங்களுக்கும் ஒவ்வாவை ஏற்படலாம் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஏன் ஒரு சிலருக்கு சோப் போன்றவற்றிகும் ஏற்படுதுண்டு அல்லவா? மேலை நாடுகளில் செய்த ஆய்வுகளில் அவற்றில் கலந்திருந்த Didecyl dimethyl ammonium chloride and Alkyl dimethyl benzyl ammonium chloride போன்ற பொருட்கள்தான் ஒவ்வாமைக்கு காரணம் என்று கண்டறியப்பட்டது. உதாரணங்களாக Phenol, Formaldehyde ற்றைச் சொல்லலாம்.
  3. இவற்றிக்குப் பதிலாக Sprit, hydrogen peroxideபோன்றவறைச் சுத்தப்படுத்த உபயோகிக்கலாம்.
  4. மாசகற்றும் இரசாயனங்களால் சுத்தப்படுத்திய பின்னர் அவற்றின் தாக்கம் சிறிதளவும் இல்லாதவாறு இருக்கைகளை அதிக நீரால் கழுவ வேண்டும்.
  5. குழந்தைகள் அதில் உட்காரும் போது அந்த இருக்கைகளின் மேல் சுத்தமான பத்திரிகைத் தாளை அல்லது துணித் துண்டைப் போட்டு உட்காரச் சொல்லலாம். ஒவ்வாமை உள்ள பெரியவர்களும் அவ்வறே செய்கின்றன.

சிகிச்சை

சிகிச்சைப் பொறுத்த வரையில் ஒவ்வாமைக்கு எதிரான ஸ்டீரொயிட் வகை கிறீம் வகைகைளை உபயோகித்தால் சுகமாகும்

ஆனால் மீண்டும் மீண்டும் வராமல் தடுக்க வேண்டுமாயின் அத்தகைய இரசாயனங்கள் சருமத்தில் படாதவாறு தவிர்ப்பது அவசியம்.

பாடசாலைகளிலும் பொதுக் கழிப்றைகளிலும் உபயோகிக்கக் கூடிய toilet seat covers  மேலை நாடுகளில் பரவலாகக் கிடைக்கினறன. இங்கும் கிடைக்கும் என்றே நம்புகிறேன். அவற்றை உபயோகிக்கலாம்.

கக்கூஸ் பற்று என்று நம்மவர்கள் சொல்லும் நோயிற்கும் இதற்கும் சம்பந்தம் கிடையாது. அதை மருத்துவத்தில் Tinea cruris  என்பார்கள். அது ஒரு பங்கஸ் தொற்றுநோய். அது பொதுவாக தொடை இடுக்குகில் எற்படும் அரிப்பாகும்.

தொடைகளில் வேறு காரணங்களாலும்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.00

Read Full Post »

கெந்துவதுபோல நொண்டிக் கொண்டு வந்தவர் ஷெல் பட்டு ஊனமுற்றவர் அல்ல. பிறப்பில் அங்கப் பழுதுகளும் இல்லை. சீழ் வடியும் புண்ணும் இல்லை. சாதாரண ஒரு ஆணிக் கூடு காலிலிருந்தது.

அதன் வலி கடுமையாக இல்லாதபோதும் காலைத் திடமாக வைத்து நடப்பது முடியாதிருந்தது. ஏனெனில் அது உடலின் கனம் காலில் பொறுக்கும் இடத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான். ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

Human papilloma virus என்ற வைரஸ்சால்  ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது. உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதாலேயேயாகும்.

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை. தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு
(callus) போல வளர்கிறது.

மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோயாக இருக்கிறது. நூற்றுக்கு ஐம்பது 50% வீதமானோர் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். இளம் பருவத்தினரிடையே தோன்றுவது அதிகம்.

அறிகுறிகள்

ஓருவர் நடக்கும்போது தனது அடிப்பாதத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்து அவ்விடத்தை சுலபமாகப் பார்க்க முடியாதலால், தடவிப் பார்க்கும்போது தோல் தடிப்பாக இருப்பதைக் கொண்டே தமக்கு இது ஏற்பட்டிருப்பதை அதிகமானோர் கண்டறிவார்கள்.

சிலருக்கு முதல் அறிகுறி நாரிவலி அல்லது கால் வலியாக இருப்பது. மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலிக்கான காரணத்தைத் தேடும்போது ஆணிக்கூடு இருப்பதைக் கண்டறிவதும் உண்டு. நாரிவலிக்கும்

ஆணிக்கூட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?;

நடக்கும்போது அவ்விடத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க தாம்மைறியாமலே கால்களை சமனின்றி வைத்து நடப்பதால் வலி தோன்றும்.

இதன் தோற்றங்கள் பலவடிவாக இருப்பதுண்டு.

சொரசொரப்பான தடிப்புகள்,

செதில் போல உதிரும் தடிப்புகள்,

பஞ்சு போன்ற மிருதுவான தடிப்புகள் எனப் பலவகையாகத் தோன்றலாம்.

பெரும்பாலும் அதன் மத்தியில் கருமையான புள்ளி இருப்பதுண்டு. இதற்குக் காரணம் அவ்விடத்தில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களில் குருதி உறைவதாலேயே ஆகும்.

ஆணிக்கும் இதற்கும் எத்தகைய தொடர்பு இல்லாதபோதும் ஆணிக்கூடு என்ற பெயர் வந்ததற்கு இந்தக் கரும் புள்ளியே காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு.

ஆணி குத்தியதால் அவ்விடத்தில் வலி எனச் சொல்லி நோயாளிகள் வருவதுண்டு. ஆணிபோன்ற கருப்பு நிற அடையாளதுடன் கூடு தோன்றிவிட்டது என நோயாளிகள் தவறாக எண்ணியிருப்பார்கள்.

இவை எப்பொழுதும் சொரப்பான தடிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருமஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மிருதுவான மேற் பரப்புடன் தோன்றுவதுமுண்டு.

ஏற்கவே கூறியபோல பாதத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகின்ற குதிக்கால், அல்லது விரல்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் ஏற்படுவது அதிகம்.

கூடு என்று சொன்னபோதும் இது உருண்டையாக இருப்பதில்லை. தட்டையாகவே இருக்கும். நடக்கும்போது பாதத்தில் ஏற்படும் தொடர்
அழுத்தத்தினால் அவை தேய்ந்து தட்டையாக இருக்கும்.

அருகருகில் உள்ள பல ஆணிக்கூடுகள் இணைந்து கூட்டுக் கூடுகளாக
(Mosaic Warts) மாறுவதும் உண்டு.

மருத்துவம்

இது ஒரு வைரஸ் நோய் என்றோம். இந்த வைரசை அழிப்பதற்கெனப் பிரத்தியேக மருந்துகள் எவையும் இது வரை கிடையாது. எனவே மருந்துகளை உட்கொள்வதால் பிரயோசனம் இல்லை.

இருந்த போதும் உடலில் அந்நோய்க்கு எதிரான நோயெதிர்பு வலுவடையும் போது தானாகவே மறைந்துவிடும்.

ஆயினும் அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதற்கிடையில் நோயால் ஏற்படும் வலி, நடப்பதில் சிரமம் போன்றவை காரணமாக தற்காலிகமாக சிகிச்சை எடுக்க நேரிடுகிறது.

வீட்டில் வைத்தியம்

  1. சூரியக் கற்களால் தேய்ப்பது, பிளேட்டினால் வெட்டுவது போன்ற நடைமுறைச் சிகிச்சைகளை பலரும் செய்வதுண்டு. அவ்விடத்தை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்ட பின்னர் செய்தால் சருமம்; மெதுமையாகி அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும். இருந்தபோதும் முற்று முழுமையாக அகற்ற முடியாது. மேற்புறத்திலிருந்து வலியைக் கொடுக்கும் பாகத்தை மட்டுமே அகற்ற முடியும். சில காலத்தின் பின் பார்த்தால் அது மீண்டும் வளர்ந்திருப்பது தெரியும்.
  2. ஆனால் இவ்வாறு சுயமாகச் செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். இரத்தம் கசியுமளவு ஆழமாக வெட்டி அகற்றினால் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் சாதாரண தொற்று முதல் ஏற்புநோய் வரை ஏற்படக் சுடிய சாத்தியம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நீரிழிவு நோயுள்ளவர்களும் காலில் விறைப்புத்தன்மை உள்ளவர்களும் அறவே செய்யக் கூடாது. சுயசிகிச்சைக்குப் பின்னர் அவ்விடத்தில் வலி, வேதனை, காச்சல் போன்ற ஏதாவது தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
  3. கோர்ன் பிளாஸ்டர், லியுகோபிளாஸ்ட் போன்றவற்றை நீங்கள்

மருந்தகங்களில் மருத்துவரின் சிட்டை இன்னிறியே வாங்கக் கூடியதாக இருக்கிறது.

  • இவற்றைக் ஆணிக்கூட்டின் மீது மட்டும் படக் கூடியதாக கவனமாக ஒட்ட வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவ்விடத்தை நனைக்காமல் வைத்திருந்து பிளாஸ்டரை அகற்ற வேண்டும்.
  • ஆணிக்கூட்டின் மேற்பகுதி இப்பொழுது மெதுமையாகிப் பூத்தது போலிருக்கும்.
  • அதை மெதுமையாக அகற்றியபின் மீண்டும் பலமுறை அவ்வாறு பிளாஸ்டர் ஒட்ட வேண்டும்.

மருத்துவரிடம் சிகிச்சை

மருத்துவர்கள் எடுத்தவுடன் சத்திரசிகிச்சை போன்றவற்றிற்குச் உடனடியாகச் செல்ல மாட்டார்கள். சலிசலிக் அமிலம் போன்றவற்றையே அவர்களும் தரக் கூடும்.

ஆயினும் அவற்றினால் குணமடையாதபோது வேறுசிகிச்சைகளை நாடுவர்.

  • வழமையான சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கியமானது வெட்டி அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்தில் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதாலாகும். வெட்டி அகற்றிய இடத்தில் ஏற்படும் மறுவானது பொதுவாக வலியை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது காரணமாகும்.
  • திரவ நைதரசனால் உறைய வைத்து அகற்றல். இச்சிகிச்சையின் பின்னர் அது கறுத்து சில நாட்களில் உதிர்ந்துவிடும்.
  • விறைக்க மருந்து ஊசி ஏற்றி அவ்விடத்தை மின்சாரத்தால் எரித்து அகற்றுவார்கள்.

எத்தகைய மருத்துவம் செய்தாலும் பூரண சுகத்தையிட்டு உறுதி கூறமுடியாது. ஏனெனில் இது வைரஸ் கிருமியால் வரும் நோய் என்பதால்தான். தடிமன் காச்சல் எப்படி திடீரென வருகிறதோ அதுபோல திடீரென மீண்டும் தோன்றலாம்.

இருந்தபோதும் 60% சதவிகிதத்திற்கு அதிகமானவர்களுக்கு அது எவ்வாறு வந்ததோ அவ்வாறே திடீரென தானாக மறைந்தும் விடுகின்றன.
எனவே கடுமையான சிகிச்சை முறைகளுக்கு அவசரப்பட வேண்டியதில்லை.

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

பாதத்தில் ஆணிக் கூடுகள்.Plantar warts

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான்.

கோயில் நூல் கட்டியவருக்கு மணிக்கட்டில் ஒவ்வாமை அழற்சி

கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழட்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.

இது ஏன் ஏற்பட்டது?

  • நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம்.
  • அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு,
  • அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம்.

காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.

தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம்.

காற்சலங்கையில் உள்ள எலோகத்திற்கு ஒவ்வாமையால்
விரல்களில் செரும்பிலுள்ள ரப்பர் ஒவ்வாமை.

சிமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிறீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழட்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி

ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.

பொக்கற்றிற்குள் திறப்புக் கோர்வை கொண்டு திரிந்தவருக்கு தொடைகளில் அரிப்பு

உதாரணமாக உள்ளாடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருற் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள்.

அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.

இரப்பர் சிலிப்பர் அணிந்தவருக்கு அதன் வார் படும் இடங்களில் ஒவ்வாமை அழற்சி

ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

வழமையாகப் பொட்டும் பெண்ணுக்கு பொட்டிட்டது போலவே நெற்றியில் ஒவ்வாமை அழற்சி

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால்

  • மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம்.
  • அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஹெயர் டை இட்ட பெண்ணிற்கு கழுத்தின் பின்பக்கத்திலும் தலையிலும் அழற்சி

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும்

  • செந்நிறமான சருமத் தடிப்புகள்
  • சருமத்தில் வீக்கங்கள்
  • அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும்
  • சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம்.
  • கொப்பளங்கள் எற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலரந்து அயறு போலப் படையாக படியவும் கூடும்.
  • பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொர்புற்ற அதே அடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சுலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும்.
  • சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

யாருக்கு எப்பொழுது

  • தொழில் உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள்
  • பொழுதுபோக்குகள்
  • பயணங்கள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • ஆபரணங்கள்

பெல்ட்டிலுள்ள உலோகத்தினால் அது படக் கூடிய வயிற்றில் அழற்சி

போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.

செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான ஆன நிக்கல் (Nickel) ஆகும்.

சப்பாத்துத் தோலைப் பதனிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள்.

தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.

ஹெயர் டையால் அதே பெண்ணிற்கு நெற்றியிலும் அழற்சி

சிகிச்சை
  1. ஓவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்பு படாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.
  2. சிலவகை மருந்திட்ட கிறீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன.
  3. கடுமையான நோயெனில் அலஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும்.
  4. எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

இப் புகைப்படங்களை எடுக்கவும் வெளியிடவும் அனுமதியளித்த எனது நோயாளர்களுக்கு நன்றிகள்

சருமநோய் பற்றிய சில முக்கிய பதிவுகள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »

இது எனது மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.

சின்ன விரலுக்கும் நான்காவது விரலுக்கும் இடையில் தோல் சுருங்கி வெண்மை படர்ந்து அழுக்குப் போலக் காணப்படுகிறது. சற்று அரிப்பு இருக்கும். கெட்ட மணமும் வீசக் கூடும்.

சேற்றுப் புண் எனச் சொல்வார்கள்.

ஆங்கிலத்தில் Athletes Foot எனவும், மருத்துவத்தில் Tinea Pedisஎனவும் வழங்கப்படுகிறது.

இது பங்கஸ் கிருமியால் ஏற்படும் நோயாகும்.

  • ஈரலிப்பும் வெப்பமும் கலந்திருக்கும் சூழலில் இது இலகுவாகத் தொற்றி விடும்.
  • அடிக்கடி கால் கழுவுவதால் ஏற்படலாம். நீச்சலில் நீண்ட நேரம் ஈடுபடுதல்,
  • வெப்பமான காலநிலையில் வியர்க்கும்போது நீண்ட நேரம் காலணி அணிந்திருத்தல்,
  • அதிலும் முக்கியமாக வியர்வையை ஊறிஞ்சாத நைலோன் காலணிகளை அணிதல் ஆகியன பங்கஸ் தொற்றுவதற்கான சாத்தியத்தை அதிகரிக்கும்.
  • விரல்களுக்கு இடையேயான இடைவெளிகள் மிக நெருக்கமாக இருப்பதும் காரணமாகலாம்.
  • இதனால் ரூமட்ரொயிட் ஆத்திரைடிஸ், ஒஸ்டியோ ஆத்திரைடிஸ் இருப்பவர்கள் விரல்கள் கோணி இறுக’கமாக இருப்பதால் அதிகம் பாதிப்படைவர்.

Clotrimazole, Imidazole, Miconazole, Econazole, Terbinafine போன்ற கிறீம் வகைகளை உபயோகிப்பதன் மூலம் குணமாக்கலாம்.

மெபைல் கமராவில் எடுத்த மற்றொரு நோயாளியினது காலின் போட்டோ.

அடிக்கடி இத்தொற்று ஏற்படுபவர்கள் கால்கள் நனைந்த பின்னர் ஈரத்தை ஒற்றி உலரவைப்பது அவசியம். இங்கு ஈரத்தைத் துடைப்பதற்கு உபயோகித்த துணியை வெறு இடங்களைத் துடைக்கப் பயன்படுத்த வேண்டாம். இல்லையேல் உடலின் ஏனைய இடங்களிலும் பங்கஸ் தொற்று ஏற்படலாம்.

காலணி அணியும் போது கால்களுக்கடையில் மேற் கூறிய மருந்துகளை பவுடராக போடுவாதன் மூலமும் நோய் தொற்றுவதைக் குறைக்கலாம்.

மூடிய காலணிகளுக்குப் பதில் திறந்த காலணிகளை அணிவதும் உதவலாம்.

இதைக் குணப்படுத்த ஒருவர் தனது கால்களை முக்கியமாகப் பாதங்களை ஈரலிப்பின்றியும் சுத்தமாகவும் வைத்திருப்பது அவசியம்.

செருப்பு சப்பாத்து ஆகியன தோலாலானவையாக இருப்பது நல்லது. ஏனெனில் அவை காற்றோட்டததைத் தடை செய்யமாட்டா.

சண்டலஸ், டெனிஸ் சூ போன்றவற்றை சுடுநீரில் கழுவுவது உதவும்.

சோக்ஸ் அணிபவர்கள் வியர்வையை உறிஞ்சி கால்களை ஈரலிப்பின்றி வைத்திருக்கக் கூடிய பருத்தியிலான சொக்ஸ் அணிய வேண்டும்.

மற்றவர்களின் காலணி, காலுறை போன்றவற்றை ஒருபோதும் அணியக் கூடாது.

மருத்துவ ஆலோசனை இன்றி கண்ட கண்ட சிறீம் மருந்துகளை உபயோகிக்கக் கூடாது. ஸ்டிரோயிட் வகை மருந்துகள் நோயைத் தீவிரமாக்கிவிடும்.

நோயைக் கவனியாது விட்டால் அதில் பக்டீரியா கிருமிகள் தொற்றி இவை மேலே பரவிசெலுலைடிஸ் Cellulitis போன்ற கடுமையான நோய்களைக் கொண்டு வரலாம்.

0.0..0.0.0.

Read Full Post »

நாற்றம் மூக்கைப் பிடுங்கியது. குடலைப் பிரட்டிக் குமட்டிக் கொண்டு வந்தது.

அவரைப் படுக்கையில் விட்டு அவரது வயிற்றைப் பரிசோதிக்க முனைந்த நான் எனது எண்ணத்தை மாற்றினேன்.

‘சொக்சைக் கழற்றுங்கோ’ என்றேன்.

இப்பொழுது என் முன்னுரிமை வேறாயிற்று. பாதத்தில் கண்கள் மேய்ந்தன.

கல்லும் குளியுமான தெருவைப்போல அவரது பாதம் பள்ளமும் திட்டியுமாக அசிங்கமாத் தோற்றமளித்தது.

பிற்றட் கெரெட்டோலைசிஸ் (Pitted keratolysis) என்பது பாதத்தைப் பாதிக்கும் சரும நோயாகும். தோலை அரித்து நாற்றத்தை எழுப்பும் பாத நோய் (Pitted keratolysis)

நோயாளி பரிசோதனை அறைக்குள் நுழையும் முன்னரே இது என்ன நோயென மோப்ப சக்தி குறைவில்லாத மருத்துவரால் நிர்ணயிக்க முடியும்.

அறிகுறிகள்

முக்கிய அறிகுறி நோயுற்ற பகுதியின் பிரத்தியேகமான தோற்றம்தான். ஏற்கனவெ குறிப்பிட்டதுபோல சிறு பள்ளங்களும் திட்டிகளுமாக பூச்சி அரித்த தோல் போலக் காணப்படும்.

முக்கியமாக பாதங்களில் மட்டுமே இருக்கும். பாதம் தரையில் அழுத்தமாக அழுத்தப்படும் பகுதிகளான குதிக்கால், விரல்களுக்கு அண்மையான பகுதிகளில் பெரும்பாலும் காணப்படும். ஆனால் கால் விரல்கள் பொதுவாகப் பாதிக்கப்படுவதில்லை.

பாதம் ஈரலிப்பாக இருக்கும்போது இது தெளிவாகத் தெரியும். ஒரு வகை பக்றீரியா (Kytococcus sedentarius) கிருமித் தொற்றினால் இது ஏற்படுகிறது.

பக்றீரியாவால் சுரக்கும் ஒரு நொதியம் சருமத்தில் உள்ள புரதங்களை தாக்கும்போது தோல் கரைந்து சொரசொரப்பாவதுடன் கெட்ட மணமும் வெளியேறுகிறது.

கடுமையாக இருக்கும் துர்நாற்றம் நோயை நிர்ணயிப்பதில் மிகவும் உதவும்.

விரல் இடுக்ககளில் தோன்றும் சேற்றுப் புண் போன்ற பங்கஸ் தொற்று நோய்களில் அரிப்பு ஏற்படும். ஆனால் பிற்றட் கெரெட்டோலைசிஸ் என்ற இந்நோயில் அரிப்பு ஏற்படுவதில்லை. ஆனால் இலேசான வலி சிலவேளை ஏற்படலாம்.

யாரைப் பீடிக்கும்

ஆண் பெண் வேறுபாடின்றி எந்த வயதினரையும் இந்நோய் பீடிக்கக் கூடும்.
ஆயினும் அதீதமாக வியர்ப்பவர்களில் (Hyperhydrosis) தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம்.

சிலருக்கு உள்ளங்கைகளிலும் பாதங்களிலும் வியர்ப்பது அதிகம். இவர்கள் பாதிப்படைவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிகிச்சை முறைகள்

சிகிச்சையின்றி இருந்தால் காலத்திற்கு காலம் குறைவும் கூடுதுமாகப் பல வருடங்களுக்கு நீடிக்கலாம். வியர்வை அதிகமாகும் கோடை காலங்களில் நோயின் தீவிரம் அதிகமாக இருக்கும். நோய் வராமல் தடுப்பதில் தீவிர கவனம் செலுத்துவது அவசியம்

கதகதப்பும் ஈரலிப்பும் இணைந்த சூழல் இந்நோயைக் கொண்டுவரும் பக்றீரியாக் கிருமி பெருகுவதற்கு வாயப்பானது என்பதால் பாதங்களை ஈரலிப்பின்றியும் காற்றோட்டமாகவும் வைத்திருப்பது அவசியமாகும்.
குளிக்கும்போது பாதங்களை கிருமிஎதிர்ப்பு சோப் வகைகளை உபயோகித்து நன்கு உராஞ்சித் தேய்த்து சுத்தப்படுத்த வேண்டும்.

குளித்த பின்னரும் கால்களைக் கழுவிய பின்னரும் பாதங்களிலுள்ள ஈரலிப்பு மறையும் வண்ணம் சுத்தமான துணியினால் துடைக்க வேண்டும். அக்குள் வியர்வையை நீக்கும் ஸ்ப்ரேக்களை உபயோகிப்பதன் மூலம் (Antiperspirant spray) பாதங்களிலும் வியர்வையைக் குறைக்க முடியும்.

வியர்வையை உறிஞ்சக் கூடிய சப்பாத்துக்களை அணிவது நல்லது. தோலினால் செய்யப்பட்டவை அத்தகையவையாகும். ரப்பர், ரெக்சீன் ஆகியவற்றால் செய்யப்பட்வைகளைத் தவிர்ப்பது நல்லது.

இரண்டு சோடி சப்பாத்துக்களை உபயோகிப்பது நல்லது. இன்று உபயோகித்ததை மறுநாள் நன்கு உலர ஒதுக்கி வைத்துவிட்டு வேறொரு காலணியை அணிவது சாலச் சிறந்தது.

பாதங்களுக்கு காற்றறோட்டம் அளிக்கக் கூடிய செருப்புவகைகள் நல்லது. ஆனால் அவையும் தோலினால் செய்யப்பட்டவையாக இருக்க வேண்டும்.

சப்பாத்து அணியும் போது கட்டாயம் சொக்ஸ் அணிய வேண்டும். இவையும் வியர்வையை உறிஞ்சும் வண்ணம் பருத்தியிலானவையாக இருப்பது அவசியம்.

அடிக்கடி மாற்ற வேண்டும். பாடசாலை செல்லும்போது ஒரு மேலதிக சோடி சொக்ஸ் கொண்டு செல்வது உசிதமானது. கிருமியை அழிப்பதற்கு சொக்ஸ்சை சுடு நீரில் (60 C) துவைப்பது நல்லது.

மருந்துகள்

அன்ரிபயரிக் கிறீம் வகைகள் உதவும். ஏரித்திரோமைசின், கிளிட்டாமைசின் கிறீம் போன்றவை நல்ல பலன் கொடுக்கும்.

மாத்திரைகளாக உட்கொள்ளவும் கொடுப்பதுண்டு.

ஆயினும் நோயை மருத்துவர் சரியாக நிர்ணயித்த பின்னரே அவற்றை உபயோகிக்க வேண்டும்.

சருமநோய்கள் பற்றிய எனது சில பதிவுகள்

வரட்சியான சருமம் காரணங்களும் பிரச்சனைகளும்  

உங்கள் வரட்சியான சருமத்தைப் பராமரிப்பது எப்படி? 

ஹாய் நலமா புளக்கில் சென்ற வருடம் வெளி வந்த கட்டுரை

டொக்டர்எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0.0

Read Full Post »

>வரட்சியான சருமம் ஏன் ஏற்படுகிறது, அது மோசமடைவதற்குக் காரணங்கள் என்ன? அதனால் ஏற்படக் கூடிய விளைவுகள் என்ன? இவை போன்ற விடயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

சருமத்தைப் பராமரிப்பதற்கு நீங்கள் செய்ய வேண்டியவை பற்றி இன்று பார்க்கலாம்.

நீங்கள் செய்யக் கூடியது என்ன?

ஏற்கனவே கடுமையாக வரட்சியடைந்த சருமத்தை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவது சிரமமான போதும் உங்கள் சருமத்தை நலமுடன் பாதுகாக்க நிறையவே நீங்கள் செய்யக் கூடியவை பல.
சருமத்தை ஈரலிப்பாக வைத்திருங்கள்.

சருமத்தின் ஈரலிப்பைப் பேணுவதற்கான பல வகை கிறீம்களும், லோசன்களும் இப்பொழுது கிடைக்கின்றன.

இவை மென்படையாக பரவி சருமத்திலிருந்து நீர் வெளியேறுவதைத் தடுக்கின்றன. இவற்றைக் குளித்த உடன் போடுவது நல்லது.

மிகக் கடுமையான தோல் வரட்சியெனில் பேபி ஓயில் போன்ற எண்ணெய் வகைகள் கூடிய பலனளிக்கும். இது கூடிய நேரத்திற்கு உங்கள் சருமத்தை ஈரலிப்பாக வைத்திருக்க உதவும்.

அளவான குளிப்பு

முன்னரே குறிப்பிட்டது போல அதிக நேரம் நீரில் ஊறுவது சருமத்திற்கு கூடாது. எனவே குளிப்பதற்கு அதிக நேரம் எடுக்க வேண்டாம். சாதாரண நீரில் குளிக்கலாம். சுடுநீர் தேவையெனில் கடுமையான சூடுள்ள நீரில் குளிக்க வேண்டாம். நகச் சூடு போதுமானது.

சோப்

  • சருமத்திற்கு ஆதரவளிக்கும் மென்மையான சோப் வகைகளைப் பாவிப்பது நல்லது. 
  • கிருமி நீக்கி (antibacterial) மற்றும் காரமான சோப் வகைகள் அறவே கூடாது. 
  • அதே போல மணம் நீக்கிகளும் (deodorant) நல்லதல்ல. 
  • எண்ணெய் மற்றும் கொழுப்புகளை அதிகம் கொண்ட சோப் வகைகள் நல்லது. Neutrogena, Dove போன்றவை அத்தகையவையாகும்.

ஆனால் அதற்கு மேலாக சோப் அற்ற சுத்தமாக்கிகள் கிடைக்கின்றன. Cetaphil, Dermovive Soap Free wash போன்றவை அத்தகையன.

ஓவ்வொருத்தருக்கு ஒவ்வொரு வகை ஒத்து வரலாம். அதைக் கொண்டு சுத்தமாக்கிய பின் உங்களது சருமம் மிருதுவாகவும், வழுவழுப்பாகவும் இருப்பதாக உணர்கிறீர்களோ அதுவே நல்லதெனலாம். மூலிகைகள் அடங்கிய சோப் வகைகள் நல்லதெனப் பலரும் எண்ணுகிறார்கள். ஆனால் அவற்றிலும் சோப் இருக்கிறது என்பதை மறக்க வேண்டாம்.

குளித்த அல்லது சுத்தமாக்கிய பின்

  • குளித்து அல்லது சுத்தமாக்கிய பின் உங்கள் சருமத்தை மென்மையான டவலினால் ஒத்தியெடுத்து நீரை அகற்றுங்கள். தடிப்பான டவல்கள் சருமத்திற்கு ஊறு விளைவிக்கலாம். 
  • அதே போல அழுத்தித் தேய்த்து துடைப்பதும் சருமத்திற்கு உவப்பானதல்ல. 
  • துடைத்த பின் உடனடியாகவே ஈரலிப்பூட்டும் கிறீம், ஓயின்மென்ட் அல்லது லோசனைப் பூசுங்கள். இதனால் குளிக்கும் போது உங்கள் சருமத்தின் கலங்கள் பிடித்து வைத்திருக்கும் நிர்த் துளிகள் ஆவியாகி வெளியேறாது தடுக்கலாம்.

‘குளித்த பின் குளிர் பிடிப்பதைத் தடுக்கும்’ என சிலர் ஓடிக்கோலோன் போடுவது வழக்கம். இதில் எதனோலும் மணமூட்டிகளும் உள்ளன. இவையும் சருமத்தை அழற்சியடையச் செய்யக் கூடும். சிலருக்கு அலர்ஜி ஏற்படுவதும் உண்டு. எனவே இவற்றையும் வரட்சியான சருமம் உள்ளவர்களும் அது வருவதற்கான சாத்தியம் உள்ளவர்களும் தவிர்ப்பது நல்லது.

உடைகள்

  • சருமத்திற்கு ஏற்றவை பெரும்பாலும் பருத்தி உடைகளே. அவை உங்கள் சருமத்திற்கான காற்றோட்டத்தைத் தடுப்பதில்லை. நைலோன், கம்பளி போன்றவை சருமத்திற்கு ஏற்றவையல்ல. 
  • உடைகளைக் கழுவும் போது கடுமையான அழுக்கு நீக்கிகள், கடும் வாசனை மற்றும் நிறமூட்டிகள் கொண்ட சோப், சோப் பவுடர் போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இவையும் சருமத்திற்கு எரிச்சலூட்டி வரட்;சியாக்கலாம்.

வரட்சியான சருமத்தடன் அரிப்பும் ஏற்பட்டால் சாதாரண கிறீம் வகைகள் போதுமானதல்ல. ஹைரோகோட்டிசோன் கிறீம் வகைகள் தேவைப்படலாம்.

ஆயினும் மருத்துவ ஆலோசனையுடன் உபயோகிப்பது நல்லது. சருமம் சிவந்திருந்தால், தூக்கத்தையும் கெடுக்கக் கூடிய அரிப்பு இருந்தால், சருமத்தில் கிருமித் தொற்று ஏற்பட்டிருந்தால், அவ்விடங்களில் வலியிருந்தால் அல்லது கடுமையாக தோல் உரிந்து கொண்டிருந்தால் மருத்துவரைக் காண்பது மிகவும் அவசியமாகும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>அம்மம்மா தினமும் தனது கால்களுக்கு நல்லெண்ணய் பூசுவது நினைவில் இருக்கிறது.

“ஏன் பூசுகிறீர்கள்” என்று கேட்டபோது ‘பனிக்குக் கால் தோல் வெடிச்சுப் போகும். எண்ணெய் பூசினால் குளிர்மையாக இருக்கும்’ என்பார்.

அன்று அவ்வாறு கூறியது எவ்வளவு அனுபவ பூர்வமானது என்பது இப்பொழுது புரிகிறது.

இருந்தபோதும் எம்மவர் மத்தியில் தமது சருமத்தைப் பேணுவதின் அவசியம் பற்றி அக்கறை இன்றும் கூட பரவலாக இல்லை.

அழகு சாதனங்களை முகத்தில் பூசுவது மட்டுமே போதுமானது என்பதே பலரின் எண்ணமாக இருக்கிறது. அவை உடனடியாக அழகு படுத்துமே அல்லாமல் சருமத்தை பேணுமா என்பது பற்றிச் சிந்திப்பதில்லை.

சருமம் என்பது முகத்தில் மட்டுமல்ல உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை உள்ளது. அதனைப் பேணுவது அழகுக்காக மட்டுமல்ல எமது உடல் நலத்திற்கும் அவசியமானதாகும்.

எம்மவர்கள் பலர் குளிர் மூடிய மேலைத் தேசங்களில் வாழ்வதால் அவர்களுக்கு Dry Skin பற்றி நிறையவே தெரிந்திருக்கிறது. அவர்கள் தமது உறவுகளுக்கு குளிர்ச்சியூட்டும் களிம்புகளை (moisturizing cream)அனுப்புவதால் இப்பொழுது இங்கும் அவற்றின் பாவனையும் விற்பனையும் சற்று அதிகமாகிறது.

வரட்சியான சருமங்கள் ஒரே விதமானவை அல்ல

சாதாரணமான வரட்சிச் சருமம் என்பது பிரச்சனையான விடயம் அல்ல. தாங்களாகவே சமாளிக்கக் கூடியது.

ஆனால் சற்று மோசமானால் தோல் தடித்து, சுருக்கங்கள் விழுந்து ஓணான் தோல் போல பார்ப்பதற்கு அசிங்கமாகிவிடும். ஆனால் பிறவியிலேயே சுருக்கமான சருமத்துடன் சிலர் இருப்பதுண்டு. இக்தியோசிஸ் (Ichthyosis) என்பார்கள். 

அழகைக் கெடுப்பது மாத்திரமின்றி உளவியல் பாதிப்புகளையும் ஏற்படுத்திவிடுகிறது. மருத்துவரின் ஆலோசனையுடன் இவர்கள் தமது சருமத்தைப் பேண வேண்டியிருக்கும்.

பெரும்பாலானவர்களுக்கு வரட்சியான சருமம் என்பது காலத்திற்குக் காலம் வந்து மறையும் பிரச்சனையாகவே இருப்பதுண்டு.
சிலருக்கு எந்நாளும் தொடர்வதுண்டு.

நீரிழிவு நோயாளர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுவதுண்டு. பனிகாலத்தில் இதன் தாக்கம் அதிகமாக இருக்கும்.

கால்கள், முன்னங்கை, வயிற்றின் பக்கங்கள் பொதுவாக வரட்சியாவது அதிகம்.

வரட்சியான சருமம் உள்ளவர்கள் தமது தோல் சற்று இறுக்கமாக இருப்பதாக உணர்வர். இந்த இறுக்கமானது குளித்த பின் அதிகமாகத் தோற்றும்.

வழமையில் அது தனது ஈரலிப்பையும் மிருதுவான தன்மையையும் இழந்து சற்று சொரசொரப்பாக இருக்கும்.

காலகதியில் நுண்ணிய கோடுகள் விழுவதுடன் பின்னர் சருமத்தில் வெடிப்புகளும் வரலாம். மேலும் அதிகரித்தால் சிவத்து ஆழமாக வெடித்து இரத்தம் கசியவும் கூடும். அக்கறை எடுக்காவிடில் வெடித்த சருமத்தில் கிருமி தொற்றி சீழ் பிடிக்கவும் கூடும்.

ஏன் ஏற்படுகிறது

மிக முக்கிய காரணம் சீதோட்சண நிலைதான். குளிர் காலத்தில் சுற்றாடல் உஷ்ண நிலையும், ஈரலிப்புத் தன்மையும் தாழ்ந்திருக்கையில் சருமம் மிகவும் வரட்சியடைகிறது. ஏற்கனவே இப் பிரச்சனை இருந்தால் மேலும் மோசமடையும்.

சிலருக்கு உலகில் உள்ள அழுக்கு முழுவதும் தங்கள் உடலில் பட்டிருப்பதாக நினைப்பு. நீண்ட நேரம் குளிப்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் ‘கிணறு வற்றப் போகுது’ அல்லது ‘வோட்டர் பில் ஏறுது’ எனச் சொன்னாலும் காதில் விழுத்தாது குளிப்பர்.

நீண்ட நேரம் தண்ணீரில் ஊறிக்கொண்டு இருந்தால் தோலுக்குப் பாதுகாப்பு அளித்துக் கொண்டிருக்கும் கொழுப்பு பாதுகாப்புக் கவசம் அகன்றுவிடும். தோல் வரட்சியடையும். அதே போல நீண்ட நேரம் நீச்சலடித்தாலும் நடக்கும்.

எனவே அழுக்கை அகற்றக் குளியுங்கள். அதற்காக எருமை போல தண்ணிரில் ஊற வேண்டாம்.

சோப் போடுவது அவசியம்தான். ஆனால் காரச் சோப்புகளும் கிருமி நீக்கி சோப்புகளும் உங்கள் சருமத்தில் உள்ள எண்ணெய்ப் பிடிப்பையும், நீர்த்தன்மையையும் அகற்றிவிடும். வழமையாக நாம் பாவிக்கும் பல பிரபல சோப்புகளும் இதில் அடங்கும்.

எனவே தோல் வரட்சியுள்ளவர்களுக்கு என சோப் அல்லாத அழுக்கு நீக்கிகள் (Soap free Wash) கிடைக்கின்றன. சற்று விலை அதிகமாயினும் மிகுந்த வரட்சியான சருமம் உள்ளவர்களுக்கு நிறையவே உதவும். பெரும்பாலான சம்பூ வகைகளும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன.

கடும் குளிர் கூடாது என்பது போலவே கடுமையான சூரிய ஒளியும் வெப்பமும் சருமத்தை வரட்சியடையச் செய்கின்றன. அதற்கு மேலாக சூரிய ஒளியில் உள்ள அல்ரா வயலட் கதிர்களாவன (UV Radiation)  மேல் தோலைக் கடந்து உட் தோலையும் பாதிக்கிறது. இதனால் ஆழமான சுருக்கங்கள் மட்டுமின்றி தோல் தொய்வடையவும் செய்கிறது.

சொரசிஸ் (Psoriasis) என்ற தோல் நோயும், தைரொயிட் சுரப்பிக் குறைபாட்டு நோய்களும் (Hypothyroidism) இதற்குக் காரணமாகின்றன.

பின்விளைவுகள்

வரட்சியான தோலானது எக்ஸிமா எனப்படும் தோல் அழற்சிக்கு முக்கிய காரணமாகிறது. அதன் போது தோல் அழற்சியுற்று, சிவந்து வெடிப்புகளும் தோன்றலாம். அரிப்புடன், நீர் கசியவும் கூடும்.

சிறிய சிறிய சீழ் கட்டிகள் (Folliculitis) தோன்றுவதற்கும் இதுவே காரணமாகிறது.

கிருமி தொற்றி அது உட்தோலுக்கும் அதற்குக் கீழ் உள்ள திசுக்களுக்கும் பரவுவது மிகவும் ஆபத்தானது. செலுலைட்டிஸ் (Cellulitis) எனப்படும் இதன் விளைவாக கிருமிகள் இரத்தத்திற்கும் நிணநீர்த் தொகுதிக்கும் பரவி முழு உடலையுமே பாதிக்கலாம்.

அடிக்கடி இவ்வாறு செலுலைட்டிஸ் (Cellelitis) வந்தால் தோலும் அதன் உட்புறமும் பாதிப்புற்று யானைக் கால் போல நிரந்தர வீக்கமாகிவிடுவதும் உண்டு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Read Full Post »

>வைரஸ் வோர்ட்ஸ் என்பன சருமத்தில் தோன்றும் சிறிய சொரசொரப்பான கட்டிகளாகும்.  இவை ஆபத்தற்றவை. புற்று நோயல்லாத கட்டிகளாகும்.

பாலுண்ணி என அழைப்பதும் இதைத்தான். இவை முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு என உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடியவை.

என்றாலும் பெரும்பாலும் கைளிலும் கால்களிலுமே அதிகம் தோன்றுகின்றன.

இவை ஒரு வைரஸ் நோயாகும்.  Human Papilloma Virus -HPV என்ற வைரஸ்சால் ஏற்படுகின்றன. இதில் 80க்கு மேற்பட்ட உபவகைகள் உள்ளன. இந் நோயின் போது எமது சருமத்தின் மேற்பகுதியில் உள்ள கெரட்டின் என்ற புரதத்தை அதிகமாக உற்பவிக்கின்றன. இதுவே வைரஸ் வோர்ட்டின் கடினமானதும் சொரப்பான தன்மைக்குக் கராணமாகும்.

எங்கே தோன்றுகின்றன, அவற்றின் தன்மை என்ன போன்றவற்றைப் பொறுத்து அவற்றின் பெயர் அமையும். பாலுறுப்பை அண்டிய பகுதியில் தோன்றுபவை பாலியல் வோர்ட் (Genital warts) எனப்படும். பாதத்தில் வருபவை பிளான்டர் வோர்ட் (plantar warts -verrucas) எனப்படும்.

ஆனால் அவை பற்றி இன்று பேசவில்லை.

16 வயதுக் குட்டித் தேவதை இவள். நல்ல நிறம், கவர்ச்சியான கண்கள். ஆனால் முகத்தில் ஒரு சோகம் அப்பிக் கிடந்தது. காரணம் அவளது சுட்டு விரலில் உள்ள சொரப்பான தோல் நோயாகும். கரடு முரடான பாறைக் கல்லுப் போல வளர்ந்திருந்தது.

இதுவும் வைரஸ் வோர்ட்தான். ஆனால் மொஸக் வோர்ட் (mosaic wart) எனத் தனிப் பெயர் இருக்கிறது. உண்மையில் இது தனி ஒரு வோர்ட் அல்ல. பல சிறிய நெருக்கமாகவும் அடர்த்தியாகவும் உள்ளன. மேற் பகுதியை மெதுவாகப் பிரித்துப் பார்த்தால் அதனுள் பல சிறிய தனித்தனி வோர்ட்டுகள் இருப்பது தெரியும்.

அவளது உடலில் அதைப் போன்ற ஆனால் சிறிய பல கட்டிகள் உடல் முழுவதும் புதிதாகத் தோன்றின. உற்றுப் பார்த்தீர்களேயானால் அவளது நடுவிரலில் தனியான ஒரு கட்டி இருக்கிறது.  இதுவும் ஒரு  வைரஸ் வோர்ட்தான். இதனை கொமன் வோர்ட் (Common wart) என்பார்கள்.  

மற்றொரு பையனின் சுட்டு விரலில் உட்பகுதியிலும் அத்தகைய ஒரு கட்டி இருக்கிறது. இதுவும் அத்தகைய கொமன் வோர்ட்தான்.
 

இதே போல விரல் நுனியில் நகத்திற்கு அண்மையில் தோன்றுபவற்றை பெரிஅங்கல் வோர்ட் (Periungual warts) என்பார்கள்.

பிள்ளைகளிலேயே அதிகம் காணப்படும். ஆயினும் எந்த வயதிலும் தோன்றலாம்.

சிறிய திட்டி போல இருக்கும். சிலரில் சொரப்பான பல முனைகள் இருக்கலாம். பெரும்பாலும் ஒன்றுக்கு மேல் தோன்றும்.

இவற்றின் நிறம் வெண்மையாகவோ, சாம்பல் பூத்ததாகவோ இருக்கலாம். 0.5 செமி முதல் 3 செமி வரை வளரக் கூடியது.

ஒழுங்கின்றிச் சொரசொரப்பாக இருப்பதால் இது புற்று நோயாக இருக்குமா என்ற சந்தேகத்தை எழுப்பும். ஆனால் புற்று நோயல்ல.

எந்த மருத்துவமும் இன்றித் தானாக 6 மாதங்களில் மாறிவிடும். சிலருக்கு குணமாக இரண்டு வருடங்களுக்கு மேல் எடுக்கலாம்.
ஆயினும் பல வகை மருத்துவ முறைகள் உள்ளன.

சலிசிலிக் அமிலம் மற்றும் லக்றிக் அமிலம் கலந்த களிம்பு மருந்துகள் உதவும்.

மற்றொரு முறை, திரவ நைதரசனைக் கொண்டு அதனை உறைய வைத்து அழிப்பதாகும். இது (Cryotherapy) சொல்லப்படும் மருத்துவமாகும்.

அவ்விடத்தை மரக்கச் செய்து சிறுசத்திர சிகிச்சை மூலம் அகற்றலாம்.
  
வைரஸ் வோர்ட் பற்றிய எனது மற்றொரு பதிவுக்கு கீழே கிளிக் பண்ணுங்கள்

 மோகத்தால் வந்ததா? – வைரஸ் வோர்ட் (Virus Wart) 

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Read Full Post »

Older Posts »