Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘எக்ஸிமா’ Category

மணிக்கட்டில் இப் பெண்ணுக்கு அரிப்பெடுத்தது. அவ்விடத்தில் சருமம் சற்றுக் கருமை படர்ந்து சொர சொரப்பாகவும் இருந்தது. இதுவும் ஒரு சரும நோய்தான்.

கோயில் நூல் கட்டியவருக்கு மணிக்கட்டில் ஒவ்வாமை அழற்சி

கையில் நூல் கட்டியிருப்பதால் இப் பெண்ணுக்கு ஏற்பட்டிருப்பது (Allergic Contact Dermatitis) தொடர்பு ஒவ்வாமை தோலழட்சி என விஞ்ஞானத் தமிழில் சொல்லலாம். ஒட்டுக் கிரந்தி எனச் சொல்லலாமா தெரியவில்லை.

இது ஏன் ஏற்பட்டது?

  • நூலில் உள்ள இரசாயனங்கள் காரணமாக இருக்கலாம்.
  • அல்லது வீட்டு வேலைகள் செய்யும் போது கைகளை அடிக்கடி நனைப்பதால் நூலில் ஊறியிருக்கும் ஈரலிப்பு,
  • அல்லது அதில் ஒட்டியிருக்கக் கூடிய சோப் காரணமாக இருக்கலாம்.

காரணம் எதுவானாலும் முதற் செய்ய வேண்டியது அந் நூலைக் கழற்ற வேண்டியதுதான்.

தோடு, மூக்குத்தி, காப்பு, மாலை, அரைஞாண் போன்ற ஆபரணங்களுக்கும் அணிகலங்களுக்கும் இவ்வாறு நேரலாம்.

காற்சலங்கையில் உள்ள எலோகத்திற்கு ஒவ்வாமையால்
விரல்களில் செரும்பிலுள்ள ரப்பர் ஒவ்வாமை.

சிமெந்து, தோற் பொருட்கள், ரப்பர் காலணிகள், ரப்பர் கையுறைகள், மருத்துவத்திலும், அழகு சாதனங்களாகவும் பயன்படுத்தும் கிறீம் வகைகள் போன்றவையும் தொடர்பு ஒவ்வாமை தோலழட்சிக்குக் காரணமாவதை அவதானிக்க முடிகிறது.

தோலழற்சி, ஒவ்வாமைத் தோலழற்சி

ஊறு விளைவிக்கக் கூடிய எந்த பொருளுக்கும் எதிரான சருமத்தின் பிரதிபலிப்பாக அழற்சி ஏற்படுகிறது. பெரும்பாலும் அப்பொருள் சருமத்துடன் தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்படும்.

பொக்கற்றிற்குள் திறப்புக் கோர்வை கொண்டு திரிந்தவருக்கு தொடைகளில் அரிப்பு

உதாரணமாக உள்ளாடையின் இலாஸ்டிக் தொடர்புறும் வயிறு மற்றும் பின்புறத்தில் சுற்றிவர ஏற்படலாம். கைக்கடிகாரத்தின் உலோகப் பகுதிகள் தொடர்புறும் மணிக்கட்டுப் பகுதியில் ஏற்படுகிறது.

சருமத்தில் ஏற்படும் அழற்சியை Irritant Dermatitis அந்நியப் பொருற் தொடர்பு தோல் அழற்சி என்பார்கள்.

அதுவே சருமத்திற்கு ஒவ்வாத பொருளால் ஏற்படுவதாக இருந்தால் அதனை தொடர்பு ஒவ்வாமை தோலழற்சி Allergic contact Dermatitis என்பார்கள்.

இரப்பர் சிலிப்பர் அணிந்தவருக்கு அதன் வார் படும் இடங்களில் ஒவ்வாமை அழற்சி

ஒவ்வாத பொருள் சருமத்தில் பட்டவுடன் இது ஏற்படுவதில்லை. பலதடவைகள் தொடர்பு ஏற்படும்போது படிப்படியாக ஒவ்வாமை தோலழற்சி ஏற்படுகிறது.

வழமையாகப் பொட்டும் பெண்ணுக்கு பொட்டிட்டது போலவே நெற்றியில் ஒவ்வாமை அழற்சி

ஆனால் இவ்வாறு எல்லாமே தொடர்புறும் அந்த இடத்திலேயே ஏற்பட வேண்டும் என்பது நியதியல்ல. உதாரணமாக முகத்திற்கு ஒரு லோசனைப் பூசும் போது அல்லது தலை முடிக்கு முடிச்சாயம் (Hair Dye) பூசும்போது முகம் முழுவதும் அல்லது தலை முழுவதும் அவ்வாறு பாதிக்கப்படுவதில்லை. சில இடங்களில் மட்டும் திட்டுத் திட்டாக தோல் அழற்சி ஏற்படுவதையே காண்கிறோம்.

ஒரு முறை இவ்வாறு அழற்சி ஏற்பட்டிருந்து அது குணமாகிவிட்டது என வைத்துக் கொள்வோம். இவ்வாறு தொடர்பினால் நோயை ஏற்படுத்திய பொருள் மீண்டும் தொடர்பு கொள்ளப்பட்டால் அல்லது அதே பொருள் வாயினால் உட்கொள்ளப்பட்டிருந்தால்

  • மீண்டும் அதே இடத்தில் சரும அழற்சி ஏற்படலாம்.
  • அல்லது இன்னும் அதிகமாகவும் பெரிதாகவும் ஏற்படவும் வாய்ப்புண்டு.

ஹெயர் டை இட்ட பெண்ணிற்கு கழுத்தின் பின்பக்கத்திலும் தலையிலும் அழற்சி

அறிகுறிகள்

சருமத்தில் பல விதமான மாற்றங்கள் அவ்விடத்தில் ஏற்படும்

  • செந்நிறமான சருமத் தடிப்புகள்
  • சருமத்தில் வீக்கங்கள்
  • அவ்விடத்தில் அரிப்பு கடுமையாக இருக்கும்
  • சருமம் வரண்டு, வெடிப்புகள் ஏற்பட்டு, சிவந்து தீக் காயங்கள் போலவும் தோற்றமளிக்கலாம்.
  • கொப்பளங்கள் எற்பட்டு அதிலிருந்து நீராகக் கசியக் கூடும், அது உலரந்து அயறு போலப் படையாக படியவும் கூடும்.
  • பெரும்பாலும் ஒவ்வாத பொருள் தொர்புற்ற அதே அடத்தில் தோன்றுவதால் நோயை நிர்ணயிக்க சுலபமாக இருக்கும். இல்லையேல் வேறு எக்ஸிமா போல மயங்க வைக்கும்.
  • சில தருணங்களில் வலியும் ஏற்படும்.

யாருக்கு எப்பொழுது

  • தொழில் உதாரணமாக சலவைத் தொழிலாளர், பெயின்ட் அடிப்பவர்கள்
  • பொழுதுபோக்குகள்
  • பயணங்கள்
  • அழகுசாதனப் பொருட்கள்
  • ஆபரணங்கள்

பெல்ட்டிலுள்ள உலோகத்தினால் அது படக் கூடிய வயிற்றில் அழற்சி

போன்றவையே முக்கிய காரணங்களாகின்றன.

செயற்கை ஆபரணங்கள், மார்புக் கச்சை போன்றவற்றில் உள்ள கொழுக்கிகள், கைக்கடிகாரச் சங்கிலி, இடுப்பு பெல்ட்டில் உள்ள பக்கிள் போன்ற பலவற்றிற்கும் ஏற்படுவதற்குக் காரணம் அவற்றில் உள்ள உலோகமான ஆன நிக்கல் (Nickel) ஆகும்.

சப்பாத்துத் தோலைப் பதனிடப் பயன்படுத்தும் இரசாயனமான Potassium dichromate பலருக்கு இத்தகைய ஒவ்வாமை தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

முடிச்சாயத்தில் உள்ள இரசாயனமான Paraphenylenediamine தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

சப்பாத்து பொலிஸ், அழுக்கு அகற்றும் பொருட்கள் ஆகியவற்றில் கலந்திருக்கும் Turpentine பலருக்கு தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.
சோப்பில் உள்ள இரசாயனப் பொருட்களும் தோலழற்சி நோயை ஏற்படுத்துகிறது.

தோலில் பூசும் சில களிம்பு மருந்துகள்.

தோலில் ஏற்படும் கிருமித் தொற்றுகளுக்கு எதிராக உபயோகிக்கப்படும் Neomycin என்ற மருந்து பலருக்கு அவ்விடத்தில் தோல் அழற்சியை ஏற்படுத்தலாம்.

ஹெயர் டையால் அதே பெண்ணிற்கு நெற்றியிலும் அழற்சி

சிகிச்சை
  1. ஓவ்வாத பொருள் என்ன என்பதை இனங் கண்டு அதை தொடர்பு படாமல் ஒதுக்குவதே முறையான சிகிச்சையாகும். உதாரணமாக ஒட்டுப் பொட்டுக் காரணம் என நீங்கள் கண்டறிந்து அதை அணியாது விட்டாலும் தோல்அழற்சி குணமாகி சருமம் தனது வழமையான நிறத்தையும் குணத்தையும் அடைய 2-4 வாரங்கள் எடுக்கலாம். ஆனால் சுகம்தானே என மீண்டும் அணிந்தால் பழையபடி தோலழற்சி ஆரம்பித்துவிடும்.
  2. சிலவகை மருந்திட்ட கிறீம் வகைகளை மருத்துவ ஆலோசனையுடன் பூசிவரக் குணமாகும். பெரும்பாலும் ஸ்டிரோயிட் வகை மருந்துகளே (Steroid) உபயோகிக்கப்படுகின்றன.
  3. கடுமையான நோயெனில் அலஜியைத் தணிக்கும் மருந்துகளை உட்கொள்ள கொடுக்கக் கூடும்.
  4. எவ்வாறாயினும் நோயை ஏற்படுத்தும் கள்ளனைக் கண்டறிந்து தவிர்ப்பதே நிரந்தரத் தீர்வாகும்.

இப் புகைப்படங்களை எடுக்கவும் வெளியிடவும் அனுமதியளித்த எனது நோயாளர்களுக்கு நன்றிகள்

சருமநோய் பற்றிய சில முக்கிய பதிவுகள்

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்

0.0.0.0.0.0.0

Read Full Post »