Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘வைரஸ் நோய்’ Category

கெந்துவதுபோல நொண்டிக் கொண்டு வந்தவர் ஷெல் பட்டு ஊனமுற்றவர் அல்ல. பிறப்பில் அங்கப் பழுதுகளும் இல்லை. சீழ் வடியும் புண்ணும் இல்லை. சாதாரண ஒரு ஆணிக் கூடு காலிலிருந்தது.

அதன் வலி கடுமையாக இல்லாதபோதும் காலைத் திடமாக வைத்து நடப்பது முடியாதிருந்தது. ஏனெனில் அது உடலின் கனம் காலில் பொறுக்கும் இடத்தில் ஏற்பட்டிருந்தது.

ஆணிக்கூடு (Plantar warts) என்பது உண்மையில் ஒரு கிருமித்தொற்றுத்தான். ஒரு வகை வைரஸ் தொற்று நோய்.

Human papilloma virus என்ற வைரஸ்சால்  ஏற்படுகிறது. பொதுவாகப் பாதத்தில் உண்டாகிறது. உண்மையில் உடலின் எந்தப் பகுதியிலும் தோன்றக் கூடுமாயினும் பாதத்தில் ஏற்படுவதற்குக் காரணம் அங்கு அழுத்தமும் உராய்வுகளும் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்பதாலேயேயாகும்.

ஆணிக்கூடு என்று சொல்லியபோதும் இது ஆழமாக உடலைத் தாக்குவதில்லை. தோலினுள் மாத்திரமே ஊடுருவி தோற் தடிப்பு
(callus) போல வளர்கிறது.

மிகவும் பரவலாகக் காணப்படுகிற நோயாக இருக்கிறது. நூற்றுக்கு ஐம்பது 50% வீதமானோர் தமது வாழ் நாளில் ஒரு தடவையேனும் இதனால் பாதிக்கப்பட்டிருப்பர். இளம் பருவத்தினரிடையே தோன்றுவது அதிகம்.

அறிகுறிகள்

ஓருவர் நடக்கும்போது தனது அடிப்பாதத்தில் வலி ஏற்படுவதை உணர்ந்து அவ்விடத்தை சுலபமாகப் பார்க்க முடியாதலால், தடவிப் பார்க்கும்போது தோல் தடிப்பாக இருப்பதைக் கொண்டே தமக்கு இது ஏற்பட்டிருப்பதை அதிகமானோர் கண்டறிவார்கள்.

சிலருக்கு முதல் அறிகுறி நாரிவலி அல்லது கால் வலியாக இருப்பது. மருத்துவரிடம் செல்லும்போது அவர் வலிக்கான காரணத்தைத் தேடும்போது ஆணிக்கூடு இருப்பதைக் கண்டறிவதும் உண்டு. நாரிவலிக்கும்

ஆணிக்கூட்டிற்கும் என்ன தொடர்பு என்கிறீர்களா?;

நடக்கும்போது அவ்விடத்தில் வலி ஏற்படுவதைத் தவிர்க்க தாம்மைறியாமலே கால்களை சமனின்றி வைத்து நடப்பதால் வலி தோன்றும்.

இதன் தோற்றங்கள் பலவடிவாக இருப்பதுண்டு.

சொரசொரப்பான தடிப்புகள்,

செதில் போல உதிரும் தடிப்புகள்,

பஞ்சு போன்ற மிருதுவான தடிப்புகள் எனப் பலவகையாகத் தோன்றலாம்.

பெரும்பாலும் அதன் மத்தியில் கருமையான புள்ளி இருப்பதுண்டு. இதற்குக் காரணம் அவ்விடத்தில் உள்ள நுண்ணிய இரத்தக் குழாய்களில் குருதி உறைவதாலேயே ஆகும்.

ஆணிக்கும் இதற்கும் எத்தகைய தொடர்பு இல்லாதபோதும் ஆணிக்கூடு என்ற பெயர் வந்ததற்கு இந்தக் கரும் புள்ளியே காரணமாக இருக்கலாம் என நான் எண்ணுவதுண்டு.

ஆணி குத்தியதால் அவ்விடத்தில் வலி எனச் சொல்லி நோயாளிகள் வருவதுண்டு. ஆணிபோன்ற கருப்பு நிற அடையாளதுடன் கூடு தோன்றிவிட்டது என நோயாளிகள் தவறாக எண்ணியிருப்பார்கள்.

இவை எப்பொழுதும் சொரப்பான தடிப்பாக இருக்க வேண்டும் என்பதில்லை. கருமஞ்சள் அல்லது பழுப்பு நிறத்தில் மிருதுவான மேற் பரப்புடன் தோன்றுவதுமுண்டு.

ஏற்கவே கூறியபோல பாதத்தில் அழுத்தம் அதிகம் ஏற்படுகின்ற குதிக்கால், அல்லது விரல்களுக்கு அண்மையில் உள்ள பகுதிகளில் ஏற்படுவது அதிகம்.

கூடு என்று சொன்னபோதும் இது உருண்டையாக இருப்பதில்லை. தட்டையாகவே இருக்கும். நடக்கும்போது பாதத்தில் ஏற்படும் தொடர்
அழுத்தத்தினால் அவை தேய்ந்து தட்டையாக இருக்கும்.

அருகருகில் உள்ள பல ஆணிக்கூடுகள் இணைந்து கூட்டுக் கூடுகளாக
(Mosaic Warts) மாறுவதும் உண்டு.

மருத்துவம்

இது ஒரு வைரஸ் நோய் என்றோம். இந்த வைரசை அழிப்பதற்கெனப் பிரத்தியேக மருந்துகள் எவையும் இது வரை கிடையாது. எனவே மருந்துகளை உட்கொள்வதால் பிரயோசனம் இல்லை.

இருந்த போதும் உடலில் அந்நோய்க்கு எதிரான நோயெதிர்பு வலுவடையும் போது தானாகவே மறைந்துவிடும்.

ஆயினும் அதற்கு நீண்டகாலம் எடுக்கலாம். அதற்கிடையில் நோயால் ஏற்படும் வலி, நடப்பதில் சிரமம் போன்றவை காரணமாக தற்காலிகமாக சிகிச்சை எடுக்க நேரிடுகிறது.

வீட்டில் வைத்தியம்

  1. சூரியக் கற்களால் தேய்ப்பது, பிளேட்டினால் வெட்டுவது போன்ற நடைமுறைச் சிகிச்சைகளை பலரும் செய்வதுண்டு. அவ்விடத்தை 20 நிமிடங்கள் வரை நீரில் ஊறவிட்ட பின்னர் செய்தால் சருமம்; மெதுமையாகி அகற்றுவதற்கு இலகுவாக இருக்கும். இருந்தபோதும் முற்று முழுமையாக அகற்ற முடியாது. மேற்புறத்திலிருந்து வலியைக் கொடுக்கும் பாகத்தை மட்டுமே அகற்ற முடியும். சில காலத்தின் பின் பார்த்தால் அது மீண்டும் வளர்ந்திருப்பது தெரியும்.
  2. ஆனால் இவ்வாறு சுயமாகச் செய்யும்போது மிக அவதானமாக இருக்க வேண்டும். இரத்தம் கசியுமளவு ஆழமாக வெட்டி அகற்றினால் கிருமிகள் தொற்றுவதற்கான வாய்ப்பு உண்டு. அதனால் சாதாரண தொற்று முதல் ஏற்புநோய் வரை ஏற்படக் சுடிய சாத்தியம் உண்டு என்பதை மறக்க வேண்டாம். நீரிழிவு நோயுள்ளவர்களும் காலில் விறைப்புத்தன்மை உள்ளவர்களும் அறவே செய்யக் கூடாது. சுயசிகிச்சைக்குப் பின்னர் அவ்விடத்தில் வலி, வேதனை, காச்சல் போன்ற ஏதாவது தோன்றினால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும்.
  3. கோர்ன் பிளாஸ்டர், லியுகோபிளாஸ்ட் போன்றவற்றை நீங்கள்

மருந்தகங்களில் மருத்துவரின் சிட்டை இன்னிறியே வாங்கக் கூடியதாக இருக்கிறது.

  • இவற்றைக் ஆணிக்கூட்டின் மீது மட்டும் படக் கூடியதாக கவனமாக ஒட்ட வேண்டும்.
  • இரண்டு அல்லது மூன்று நாட்களுக்கு அவ்விடத்தை நனைக்காமல் வைத்திருந்து பிளாஸ்டரை அகற்ற வேண்டும்.
  • ஆணிக்கூட்டின் மேற்பகுதி இப்பொழுது மெதுமையாகிப் பூத்தது போலிருக்கும்.
  • அதை மெதுமையாக அகற்றியபின் மீண்டும் பலமுறை அவ்வாறு பிளாஸ்டர் ஒட்ட வேண்டும்.

மருத்துவரிடம் சிகிச்சை

மருத்துவர்கள் எடுத்தவுடன் சத்திரசிகிச்சை போன்றவற்றிற்குச் உடனடியாகச் செல்ல மாட்டார்கள். சலிசலிக் அமிலம் போன்றவற்றையே அவர்களும் தரக் கூடும்.

ஆயினும் அவற்றினால் குணமடையாதபோது வேறுசிகிச்சைகளை நாடுவர்.

  • வழமையான சத்திரசிகிச்சை மூலம் அகற்றுவது குறைவு. இதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. முக்கியமானது வெட்டி அகற்றினாலும் மீண்டும் அவ்விடத்தில் தோன்றுவதற்கான சாத்தியம் அதிகம் என்பதாலாகும். வெட்டி அகற்றிய இடத்தில் ஏற்படும் மறுவானது பொதுவாக வலியை ஏற்படுத்தும் என்பது இரண்டாவது காரணமாகும்.
  • திரவ நைதரசனால் உறைய வைத்து அகற்றல். இச்சிகிச்சையின் பின்னர் அது கறுத்து சில நாட்களில் உதிர்ந்துவிடும்.
  • விறைக்க மருந்து ஊசி ஏற்றி அவ்விடத்தை மின்சாரத்தால் எரித்து அகற்றுவார்கள்.

எத்தகைய மருத்துவம் செய்தாலும் பூரண சுகத்தையிட்டு உறுதி கூறமுடியாது. ஏனெனில் இது வைரஸ் கிருமியால் வரும் நோய் என்பதால்தான். தடிமன் காச்சல் எப்படி திடீரென வருகிறதோ அதுபோல திடீரென மீண்டும் தோன்றலாம்.

இருந்தபோதும் 60% சதவிகிதத்திற்கு அதிகமானவர்களுக்கு அது எவ்வாறு வந்ததோ அவ்வாறே திடீரென தானாக மறைந்தும் விடுகின்றன.
எனவே கடுமையான சிகிச்சை முறைகளுக்கு அவசரப்பட வேண்டியதில்லை.

ஏற்கனவே எனது ஹாய் நலமா புளக்கில் வெளியான கட்டுரை

பாதத்தில் ஆணிக் கூடுகள்.Plantar warts

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

0.0.0.0.0.0

Advertisements

Read Full Post »