Feeds:
பதிவுகள்
பின்னூட்டங்கள்

Archive for the ‘சாதாரண ஜீரம்’ Category

மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. யாரைப் பார்த்தாலும் வருத்தம் என்கிறார்கள். திடீரென ஏற்பட்ட சீதோசன மாற்றங்கள் காரணம் என்பதில் ஐயமில்லை. கடலோடு மீனவர்கள் காணமல் போவது மட்டுமின்றி தரையிலும் பலரையும் படுக்கையில் கிடத்துகிறது. ஒரு சிலர் பாடையில் போகவும் நேராமலிருக்க அவதானமாக இருப்போம்.

images215412_crowded-hospital

இந்த காலநிலை மாற்றங்களால் தற்போது கொழு்ம்பு மற்றும் தென்பகுதிகளில் பரவும் நோய்கள் பல வகைப்படும்

 • தினமும் ஒரு சில மாணவர்களாவது பாடசாலையிலிருந்து வாந்தி காய்ச்சலுடன் நேரடியாக வருகிறார்கள். வயதானவர்களையும் விட்டு வைக்கவில்லை.
 •  வேறு சிலர் கடுமையான காய்ச்சலுடன் தடிமன், இருமல் என வருகிறார்கள்.
 •  103-104 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சலுடன் தாங்க முடியாத உடல் வலியுடன் இன்னமும் சிலர் வருகிறார்கள்.

வாந்தி பேதி போன்றது முதலாவது, சாதாரண தடிமன் காய்ச்சலுடன் இன்புளுவன்சா வகையானது இரண்டாவது. மூன்றாவது மிகவும் கலங்க வைக்கும் டெங்கு.

வாந்தி காய்ச்சல் வயிற்றோட்டம்

திடீரென ஏற்படும் வயிற்றுக் குமைச்சலுடன் வாந்தி பலரையும் அல்லலுற வைக்கிறது. ஒரு சில மணி நேரத்திற்குள் பல தடவைகள் வாந்தி எடுத்துவிடுவார்கள். காய்ச்சல் வரும். வயிற்றோட்டமும் தொடரும். கடும் நாற்றத்துடன் வெறும் நீர்போலப் பீச்சியடிக்கும். வேகமாகத் தொற்றும். ஒரே குடும்பத்தில் ஐந்து பேரும் தொடர்ந்து பாதிக்கப்படட்தை காணக் கூடியதாக இருந்தது.

Vomiting child

வயிற்றோட்டமும் வாந்தியும் கடுமையாக இருந்தால் நாக்கு உலரந்து வரட்சியும் தாகமும் ஏற்படும். ஆயினும் வாந்தியும் ஓங்காளமும் நீராகாரம் அருந்துவதை வேண்டாமென வெறுக்க வைக்;கும். இது தொடர்ந்து நீரிழப்பு நிலை ஏற்பட்டால் நாளம் ஊடாக சேலைன் போன்ற திரவங்களை ஏற்றவும் நேரலாம்.

இக் காச்சலில் முக்கியமாக அவதானிக்க வேண்டியது நோயாளியின் உடலில் நீர்த்தன்மை குறைந்து நீரிழப்பு நிலை ஏற்படுவதைத் தடுப்பதும் போசாக்கு நலிவுறாமல் காப்பதும்தான். வெளியேறும் நீரை மீளக் கொடுக்க வேண்டும்.

எனவே வாந்தியை நிறுத்துவது அவசியம். மாத்திரைகளும் வாந்தியுடன் வெளியேறிவிடலாம் என்பதால் மலவாசலூடாக உட்செலுத்தும் மாத்திரைகளை (Suppository) வைப்பதுண்டு. வாந்தி கடுமையாக இல்லாதவிடத்து மாத்திரைகளாகவும் உட்கொள்ளலாம்.

காய்ச்சலுக்கு பரசிற்றமோல் மருந்தை வயதுக்கு ஏற்ப கொடுக்க வேண்டும். பொதுவாக இது வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதால் நுண்ணுயிர் கொல்லி மருந்துகள் (Antibiotics) தேவைப்படாது. ஆயினும் ஒரு சிலரில் பக்றீரியா தொற்றினால் ஏற்பட்டதென மருத்துவர் கருதினால் அதற்கேற்ற அன்ரிபயோடிக் தரக் கூடும்.

மீளநீருட்டும் பானம் பக்கற்றுகளில் பவுடராக ORS- Oral rehydration solutuin) கிடைக்கிறது. இலங்கையில் ஜீவனி என்பது பெயர் போனது. வேறு வர்த்தகப் பெயர்களிலும் கிடைக்கிறது. அவற்றை வாங்கிக் கரைத்துக் குடிப்பது நல்லது. இளநீர், தோடம்பழச் சாறு, எலுமிச்சைப் பழச் சாறு, கஞ்சி போன்றவற்றையும் அருந்தலாம்.

ORS-Pack

தயிர் அல்லது யோகர்ட் சாப்பிடுவது ஒரு விதத்தில் இது மருந்தாகவும் அமையும். ஏனெனில் இவற்றில் Lactobacillus acidophilus  மற்றும்

Bifidobacterium bifidum ஆகிய கிருமிகள் உள்ளன. இவை வயிற்றோட்டத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகளை அழித்து உணவுக் கால்வாயின் இயற்கையான நுண்ணுயிர் சூழலை மீள ஏற்படுத்த உதவும். பொதுவாக வயிற்றோட்டத்தின் போது பால் சிபார்சு செய்யப்படுவதில்லை.

CIC Curd

வாழைப்பழம் நல்ல உணவு. இதற்குக் காரணம் அதிலுள்ள பொட்டாசியச் செறிவும், பெக்டின் மற்றும் இனியுலின் ஆகிய கரையக் கூடிய நார்ப்பொருட்களுமாகும். வயிற்றோட்டத்தின் போது நீர் மட்டுமின்றி பல தாதுப்பொருட்களும் வெளியேறுகின்றன. பொட்டாசியம் உட்பட பல மின் அயனிகள் (electrolytes) வெளியேறுகின்றன.

banana

வாழைப்பழம் சாப்பிடுவதால் இழக்கப்படும் பொட்டாசியம் சத்தை மீளப் பெறலாம். பெக்டின் (pectin) ஆனது கரையக் கூடிய நார்ப்பொருள் ஆதலால் மலத்துடன் வெளியேறும் நீரை உறிஞ்சும். இதனால் மலம் வெறும் நீராக அன்றி சற்று தடிப்பாகவும் சுமுகமாகவும் வெளியேற உதவும்.

இனியுலின் என்பது மற்றொரு கரையக் கூடிய நார்ப்பொருளாகும். அத்துடன் அது ஒரு பிரிபயோடிக் (Prebiotic) ஆகும். அதாவது முன்நிலை நுண்ணுயிர் கொல்லி எனலாம். இதுவும் நோயை ஏற்படுத்தும் கிருமியை மேவி வளர்ந்து உணவுக் கால்வாயில் நல்ல கிருமிகள் வளர உதவுவதன் மூலம் வயிற்றோட்டத்தைக் கட்டுப்படுத்த உதவும்.

அப்பிளிலும் இதே பெக்டின் உள்ளது. ஆயினும் வயிற்றோட்டத்தின் போது முழுமையான பழமாக ஆப்பிளை சாப்பிடும்போது சமிபாடு அடைவதில் சற்று சிரமம் ஏற்படலாம் என்பதால் அவித்துக் கொடுப்பது நல்லது.

வயிற்றோட்டம் இருந்த போதும் சாப்பிட முடிந்தால் வழமைபோல உண்பது நல்லது. கடுமையான எண்ணெய் கலந்த உணவுகளைத் தவிர்த்து வழமைபோல உண்ணலாம். ‘வயிறோட்டம் வந்தால் சாப்பிடக் கூடாது வயிற்றைக் காயப் போட வேண்டும்’ எனப்படும் பாட்டி வைத்தியங்கள் இன்றைய அறிவியல் யுகத்தில் அர்த்தமற்ற செயலாகும்.

ஒரு சிலரில் எந்தவித மருத்துவமும் இன்றித் தானாகவே குறைந்துவிடுவதும் உண்டு.

இன்புளுவன்சா வகைக் காய்ச்சல் (Influenza like Illness- ILI)

சாதாரண தடிமன் காய்ச்சல் பெருமளவு அண்மையில் காணப்படுகிறது. அது ஆபத்தற்றது.

sf_05sneeze

ஆனால் தடிமன் தும்மல் மூக்கால் வடிவது, இருமல் போன்ற அறிகுறிகளுடன் கடும் காய்ச்சல் வரும் மற்றொரு தொற்றுநோய் காணப்படுகிறது. இது ஒரு வகை சுவாசத் தொகுதி தொற்று நோய். இதன் கடுமையான வடிவம் ஒரு சில உயிர்களை முக்கியமாக கர்ப்பணித் தாய்மாரை பலி கொண்டதாக ஊடகங்களில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

sf_07sick

இன்புளுவன்சா ஏ. பீ வகை கிருமிகளால் (influenza A and B)   பரவிய நோய் மே மாதம் அளவில் ஆரம்பித்து, சில மரணங்கள் காரணமாக மக்கள் மத்தியில் பீதியைக் கிளப்பியது. கடுமையான காச்சலைத் தொடரும் விடாத இருமல் இதன் முக்கிய அறிகுறியாகும். தலைப்பாரம், தொண்டை வலி, உடலுழைவும் இருக்கும். ஓங்காளம், வாந்தி, வயிற்றோட்டம் ஆகியவையும் இருக்கலாம்.

கர்ப்பணிப் பெண்களில் ஆபத்தைக் கொண்டு வந்தது. கர்பணிகளில் மட்டுமின்றி 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள், இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்களில் ஆபத்தானது. ஆயினும் ஏனைய ஆரோக்கியமானவர்களில் மரணம் போன்ற ஆபத்தான விளைவுகளைக் கொண்டு வருவதில்லை. சென்ற வருடம் பரவிய பன்றிக் காய்ச்சலும்  (H1N1) இதே போன்றது, ஆயினும் அது சற்று ஆபத்தானது.

காய்ச்சல் சளி அறிகுறிகளைக் கண்ட உடனேயே மருத்துமனைகளை நோக்கிப் படையெடுக்க வேண்டியதில்லை. நோயின் தீவிரம் அதிகமாக இருந்தால் அல்லது மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரைக் காண்பது அவசியம்.

Doctor holding inhaler mask for kid girl breathing

இருந்தபோதும் மூச்சுத் திணறல், இளைப்பு, நெஞ்சு இறுக்கம்,  தலைச் சுற்று, மயக்கம் போன்ற கடுமையான அறிகுறிகள் இருந்தால் மருத்துவரை உடனே காண வேண்டும்.

இருமும்போதும் தும்மும் போதும் காற்றில் பறக்கும் எச்சில் துகள்கள் மூலமே மற்றவர்களுக்கு பரவும். தும்மும்போதும், இருமும் போதும் கைக்குட்டை அல்லது ரிசூவினால் மூக்கையும் வாயையும் பொத்திக் கொள்ளுவது அவசியம். உபயோகித்த ரிசூவை உடனடியாகவே குப்பை கூடையில் இட்டு அகற்றவும். கைக் குட்டையை துவைக்கவும்.

மூக்குச் சிந்தினால் அதைத் தொட்ட கையை உடனடியாகக் கழுவ வேண்டும். இல்லையேல் அதே கையால் மேசை, கதிரை, கதவுக் கைபிடி போன்ற எதைத்  தொட்டாலும் அதன் மூலம் மற்றவர்களுக்கும் பரவும்.

சனநெருக்கடியுள்ள இடங்களான பஸ், புகையிரதம், வகுப்பறை, தொழில்கூடம், கடைகள் போன்றவற்றில் நடமாடும் போது அவதானமாக இருங்கள். ஏனெனில் நோயுள்ள ஒருவர் தும்மினால் அந்தக் குறுகிய இடத்தில் உள்ள பலருக்கும் நோய் தொற்றலாம்.

பெரும் ஆபத்தற்றது என்ற போதும், அதிக தாக்கத்திற்கு ஆட்படக் கூடியவர்களான கரப்பணிகள், இரு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள், 65 வயதிற்கு மேற்பட்ட வயோதிபர்கள் மற்றும் நோயெதிர்புச் சக்தி குறைந்தவர்கள் அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவர்களை அணுகுவது அவசியம்.

டெங்கு

எந்தக் காய்ச்சல் வந்தாலும் பிள்ளைக்கு டெங்குவாக இருக்குமோ என பயந்தடித்து ஓடி வரும் பெற்றோர் அதிகம். அதில் எந்தத் தவறும் இல்லை.

ஏனெனில் எத்தனையோ பிஞ்சுகளை உதிர வைத்துவிட்ட ஆபத்தான நோய்.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் என்ன எனப் பலரும் கேட்பதுண்டு. ஏனைய காய்சலைப் போன்றதே. 103-105 எனக் கடுமையாக ஏறிக் காயும் காய்ச்சல் பொறுக்க முடியாத உடல் மற்றும் மூட்டு வலிகளுடன் வந்தால் டெங்கு எனச் சந்தேகப்படலாம். பொதுவாக டெங்கு காய்ச்சலுக்கு தடிமன், இருமல் தும்மல் வயிற்றோட்டம் போன்ற வேறு அறிகுறிகள் சேர்ந்திருப்பதில்லை.

Dengue_Fever_symptoms

ஆயினும் இத்தகைய காய்ச்சல்கள் அனைத்தும் டெங்கு இல்லை. முதல் நாளில் டெங்கு அன்ரிஜென் பரிசோதனை செய்தால் அது பொசிட்டிவாக இருக்கும். ஆனால் அதற்கான வசதி எல்லா இடங்களிலும் இருக்காது.

ஒரு வேளை டெங்கு அன்ரிஜென் பொசிட்டிவாக இருந்தால் கூட அது ஆபத்தாக இருக்க வேண்டும் என்றில்லை.

ஏனெனில் டெங்கு காய்சலில் பல வகைகள் உள்ள.

 • டெங்கு கிருமி தொற்றி காய்ச்சல் வருபவர்களில் 50 சதவிகிதமானவர்களுக்கு அது ஏனைய சாதாரண வைரஸ் காய்ச்சல் போல வந்து எந்தவித சிகிச்சைகளும் இன்றி தானாகவே மாறிவிடும்.
 • மிகுதியில் 40 சதவிகிதமானவர்களுக்கு டெங்குக் காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடன் வெளிப்படும்.
 • 10 சதவிகிதமானவர்களுக்கு மட்டுமே டெங்கு குருதிப் பெருக்குக் காய்ச்சல் வருவதாக தரவுகள் கூறுகின்றன.
 • குருதிப் பெருக்குக் காய்ச்சல் வந்த 10 சதவிகிதமானவர்களில் கூட 98 சதவிகிதமானவர்கள் ஆபத்தான கட்டத்தை அடைய மாட்டார்கள்.  குணமாகிவிடுவார்கள்.
 • மிகுதி 2 சதவிகிதமானவர்கள் மட்டுமே மிக ஆபத்தான அதிர்ச்சி நிலையை அடைவர்.

மிகக் குறைவான இந்த 2 சதவிகிதமானவர்களை ஆரம்ப நிலையிலேயே இனங் காண்பதிலும் அவர்களுக்கு மருத்துவ மனையில் வைத்து மிகக் கவனமான முறையில் சிகிச்சை அளிப்பதன் மூலமே ஆபத்தான டெங்கு நோயாளிகளைக் காப்பாற்றவும் இறப்பு விகிதத்தைக் குறைக்கவும் முடியும். ஆயினும் இது மருத்துவர்களாலேயே முடியும்.

வழமைக்கு மாறான கடுமையான காய்ச்சலாக இருந்தால் முதல் நாளே மருத்துவரிடம் காட்டுங்கள். அவர் சில வேளை இரத்தப் பரிசோதனை செய்யக் கூடும். அயினும் மீண்டும் 4ம் நாள் அளவில் மீண்டும் செய்யக் கூடும்.

டெங்குவாக இருக்கும் என்ற சந்தேகம் இருந்தால் பரசிட்டமோல் தவிர வேறு எந்த மருந்தையும் கொடுக்காதீர்கள்.

இப்பொழுது மழை பெய்கிறது. மழை குறையும் போது தேங்கி நிற்கும் நீர்களிலிருந்து நுளம்பு பெருகி டெங்கு வேகமாகப் பரவக் கூடும்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), FCGP (col)

குடும்ப மருத்துவர்

எனது ஹாய நலமா புளக்கில் ஜீலை 2, 2013ல் வெளியான கட்டுரை

0..0..0

Read Full Post »

மழை பெய்தது. இப்பொழுது பனி மூடுகிறது. யாரைப் பார்த்தாலும் மூக்கைச் சிந்திக் கொண்டும் தும்மிக் கொண்டும் திரிகிறார்கள்.

இதற்கு என்ன செய்யலாம்?

bigstock_Common_Cold_4109390

‘சும்மா தடிமனும் மேல் உழைவும்தானே. போர்த்திக் கட்டிக் கொண்டு படு. இரண்டு நாளிலை சுகமாகிவிடும்’ என்பார்கள் அந்தக் காலத்தில் எமது அப்பா அம்மாக்கள்.

சுகமானது.

‘மகனுக்கு தடிமன். காய்ச்சலும் வாற மாதிரிக் கிடக்கு. வாறகிழமை ரெஸ்;ட் வருகுது. நல்ல மருந்தாக் குடுங்கோ.’ இன்றைய அம்மாவின் கோரிக்கை.

மருத்துக்கும் குணமாகியது.

இரண்டிற்கும் குணமாகியது எனில், மருந்தா?, ஆறுதல் எடுப்பதா? எது பொருத்தமான சிகிச்சை என்ற கேள்வி எழுகிறது.

உண்மையில் இரண்டுமே தேவையற்றவை. சாதாரண தடிமனும் அதனோடு வரக்கூடிய சாதாரண காய்ச்சதுமானது வைரஸ் கிருமி தொற்றுவதால் ஏற்படுகிறது. இதனைக் குணமாக்கக் கூடிய அன்ரி வைரஸ் மருந்துகள் எதுவுமே கிடையாது. பலரும் தான்தோன்றித்தனமாக உபயோகிக்கும் அன்ரி பயோரிக் மருந்துகள் இந்த வைரஸ் கிருமிகளை ஒழிக்காது.

Common-cold-remedy_2003-03-26 Mystery disease cousin of common cold .5

இருந்தபோதும் இத்தகைய வைரஸ் தொற்றுக்கள் எத்தகைய மருந்துகளும் இன்றி தாமாகவே குணமாகக் கூடிய சாதாரண நோயாகும்.

தாமாகவே குணமாவதற்குக் காரணம் எமது உடலிலுள்ள நோய் எதிர்ப்புச் சக்திதான். அந்த நோயெதிர்புச் சக்தியை வலுப்படுத்த வேண்டுமானால் உடல் உழைப்பில் ஈடுபடுவது அவசியம். எனவே போர்த்துக் கட்டிக் கொண்டு முடங்கிக் கிடப்பதும் அவசியமல்ல. அதே நேரம் நோயுற்ற போதும் இயன்றளவில் இயங்க வேண்டும். தேவையற்ற மருந்துகள் கூடாது.

மருத்துவ ஆராய்வுகள்

மனதை அடக்கி அமைதிப்படுத்தும் தியானம் போன்ற மன அடக்கப் பயிற்சிகள் உதவும். நடுத்தர அளவிலான உடற் பயிற்சிகளை தொடர்ச்சியாகச் செய்துவருவதும் உடலுக்கு நல்லதைச் செய்கின்றன.

Meditation-Exercise-Help-Fight-Flu-Common-Cold-SS

 • சாதராண காய்ச்சல் நோய்கள் உடலைக் கடுமையாகத் தாக்காது இவையிரண்டும் பாதுகாக்கின்றன.
 • நீண்ட நாள் தொடர்ந்து தொல்லை கொடுக்காது தடுக்கின்றன.
 • வேலைக்குப் போகாது லீவு எடுக்க வேண்டிய நாட்களைக் குறைக்கின்றன

என்று மருத்துவ ஆய்வுகள் எடுத்துச் சொல்கின்றன.

அதன் அர்த்தம் என்ன உடலும் மனமும் ஆரோக்கியத்துடன் இருந்தால் நோய்கள் அடிக்கடி தாக்காது என்பதுடன், நோய்களின் தாக்கம் தீவிரமாக இருக்காது என்பதுதானே?

இது எப்படி நடக்கிறது?

உடல் பயிற்சியும் மன அமைதியும் எமது உடலிலுள்ள நோய்க் கிருமிகளை அழிக்கும் பாதுகாக்கும் கலங்களின் (T Cells) எண்ணிக்கையை அதிகரிக்கின்றன. 50 முதல் 300 சதவிகிதம் வரை அதிகரிக்கின்றனவாம். அதனால் நோய் தடுக்கும் ஆற்றல் வலுப்பெறுகிறது.

master.w.m.us.ExerciseToOutDistancejpg

American Journal of Medicine  ல் வெளிவந்த ஒரு ஆய்வின் பிரகாரம் தினமும் அரைமணி நேர நடைப் பயிற்சியில் ஈடுபட்ட பெண்களுக்கு, எதுவித பயிற்சிகளும் அற்றுச் சோம்பிக் கிடந்த பெண்களiவிட 50சதவிகிதம் குறைவாகவே தடிமன் நோய்த் தொற்றுக்கு ஆளானார்களாம்.

மற்றொரு ஆச்சரியமான முடிவும் இந்த ஆய்வில் காத்திருந்தது. பொதுவாக வயதாகும்போது நோயெதிர்புச் சக்தி குறைவடையும். ஆனால் தொடர்ச்சியாக உடற் பயிற்சியில் ஈடுபட்ட 65 வயதுப் பெண்களில் உள்ள பாதுகாக்கும் கலங்களின் (T-cells) எண்ணிக்கையானது 30வயதுப் பெண்களினது அளவு இருந்ததாம். உடற் பயிற்சியின் அவசியத்தை வலியுறுத்த இது போதுமானது என நினைக்கிறேன்.

நோயுடன் உடற் பயிற்சி செய்யலாமா?

 • உடற் பயிற்சியானது நோயெதிர்ப்பச் சக்தியை வலுவாக்குதால் சாதாரண தடிமல் காய்ச்சல் போன்ற நோயுள்ளபோதும் அதைத் தொடர்வது நல்லதென்றே சொல்லலாம்.
 • ஆயினும் கடுமையான உடற் பயிச்சிகளை நோயுற்றிருக்கும்போது செய்வதால் உடல் சோர்வடையக் கூடும். எனவே உடல் என்ன சொல்கிறதோ அதற்குச் செவியாயுங்கள். வலுக் கட்டாயமாக உடல் பயிற்சியில் இறக்காதீர்கள். முடிந்தளவிற்கு செய்யுங்கள். அது போதுமானது.
 • ஆஸ்த்மா நோயுள்ளவர்களுக்கு தடிமன் வரும்போது இருமல், மூச்செடுப்பதில் சிரமம் அல்லது இழுப்பு ஏற்படக் கூடும். அல்லது ஏற்கனவே இருந்தது சற்றுத் தீவிரமடையக் கூடும். அத்தகைய தருணங்களில் நீங்கள் உபயோகிக்கும் உள்ளுறுஞ்சும் மருந்துகளின் (Inhaler) அளவை அதிகரிக்க வேண்டி நேரலாம். அவ்வாறான நிலைமைகளில் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.
 •   மாறாக தடிமனுடன் காய்ச்சலும் சேர்ந்திருந்தால் அதனுடன் உடற் பயிற்சி பொருத்தமாக இருக்காது. ஒரு சில நாட்கள் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் வழமையான உடற் பயிற்சிக்கு திரும்புங்கள்.
 • சாதாரண வேலை செய்பவராயின் என்றால் அதைத் தொடர்வதில் தவறு ஏதும் இல்லை. மாறாக கடுமையான உடல் உழைப்புடன் கூடிய வேலை எனில் ஒருரிநாள் ஓய்வு எடுப்பது நல்லது.

விற்றமின் சீ தடுக்குமா?

விற்றமின் சீ மாத்திரைகளை தொடர்ந்து எடுப்பதால் தடிமன் சளி நோயை தடுக்கலாம் என்ற நம்பிக்கை பலரிடமும் வலுவாக இருக்கிறது. ஆயினும் 2007ம் ஆண்டு பிரித்தானியாவில் குடும்ப மருத்துவ கழகத்திற்காக Dr Hasmukh Joshiதலைமையில் செய்யப்பட்ட ஆய்வில் தினசரி இது உறுதிப்படுத்தவில்லை.

vitamin_d_immune

இருந்தபோதும் நோயிருக்கும்போது எடுத்தால் அதன் கடுமையை ஓரளவு தணிப்பதுடன் அது நீண்டநாள் தொடர்வதையும் தடுக்கும்.

மழையில் நனைவதும் குளிரில் அலைவதும்

மழையில் நனைவதாலும் குளிரில் அலைவதாலும் தடிமன் பிடிக்கும் எனப் பலர் சொல்வார்கள். இது உண்மையா?

The Rain Room Is Unveiled At The Curve Inside The Barbican Centre

தடிமன் என்பது ஒரு தொற்று நோய். வைரஸ் கிருமியால் வருகிறது என ஏற்கனவே பார்த்தோம். எனவே மழை குளிரால் வருமென்பது தவறான கருத்தாகவே இருக்கும். ஆனால் பலருக்கு அவ்வாறு நிகழ்ந்தும் இருக்கிறது.

இதற்குக் காரணம் என்ன?

பலரது நாசித் துவாரத்தில் அக் கிருமி இயல்பாகவே இருக்கக் கூடும். குளிரான சூழலில் நாசியில் உள்ள இரத்தக் குழாய்கள் சுருங்குவதால், உடலின் நோயெதிர்ப்பு ஆற்றல் குறைகிறது. அதனால் ஏற்கனவே இருந்த கிருமிகள் பெருகி நோயை உண்டாக்குகிறது என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

MBBS(Cey), DFM (Col), MCGP (col)

குடும்ப மருத்துவர்

0.0.0.0.0.0.0

Read Full Post »